ஒரு சட்டத்திருத்த மசோதாவைக் கொண்டுவருவதற்கு முன் அது குறித்துக் கருத்துக் கேட்பதுதானே ஜனநாயகத்தன்மை. ஆனால், அப்படிச் செய்யாதது கூட்டணிக் கட்சியினர் உட்பட மக்கள் பிரதிநிதிகளை உதாசீனப்படுத்துவதாக எடுத்துக்கொள்ளலாமா?
ஒரு சட்டத்திருத்தம் நாளை முன்மொழியப்படுவதாக இருந்தால் அதுபற்றிய சுருக்கமான குறிப்பினை இன்று மாலை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குகிற பொதுவான நடைமுறை 12மணி நேர வேலைநாள் சட்டத்திருத்த முன்வரைவு விசயத்திலும் கடைபிடிக்கப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பைப் படித்துப் பார்த்துதான் சிபிஐஎம் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி முதலமைச்சரைச் சந்தித்து இந்தச் சட்டத்திருத்தத்தை முன்மொழிய வேண்டாம், பொருளாய்வுக் குழுவுக்கு அனுப்புங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அதற்கு முதலமைச்சரும் ஒப்புக்கொண்டிருக்கிறார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உறுப்பினர் வேல்முருகனும் முதல்வரிடம் கோரியிருக்கிறார். முதல்வர் உறுதியளித்ததற்கு மாறாகச் சட்டத்திருத்தம் முன்மொழியப்பட்டதே கண்டனத்திற்குரியது. முன்மொழியப்பட்டுவிட்ட நிலையில் அந்தத் திருத்தத்தின் மீது விவாதம் தேவை என்று உறுப்பினர்கள் எழுப்பிய கோரிக்கையை நிராகரித்துக் குரல் வாக்கெடுப்பின் (ஏற்போர் ஆம் என்க, மறுப்போர் இல்லை என்க) மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவையில் தனக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக விவாதமே இன்றிச் சட்டங்களையோ திருத்தங்களையோ ஆளுங்கட்சி நிறைவேற்றுவதானது சட்டமன்ற ஜனநாயகத்திற்குப் புறம்பானது. தற்போது அரசு திரும்பப் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி.
“அரசியல் சுதந்திரம் என்பது சட்டமியற்றுவதில் பங்கு கொள்வதற்கும் அரசாங்கத்தை மாற்றுவதற்கும் உருவாக்குவதற்கும் தனிமனிதருக்குள்ள சுதந்திரமாகும். வாழ்வுரிமை, சுதந்திரம், இன்பநாட்ட முயற்சி போன்ற மாற்ற முடியாத உரிமைகளைத் தனிமனிதருக்கு அளிப்பதற்காகவே அரசாங்கம் அமைக்கப்படுகிறது. எவருடைய உரிமைகளைக் காப்பதற்கென்று அரசு அமைக்கப்பட்டிருக்கிறதோ அவர்களிடமிருந்துதான் அரசு அதிகாரம் பெறுகிறது. எனவே, ஆளப்படுவோரின் சம்மதத்தின் பேரிலேயே அரசாங்கத்தின் அதிகார எல்லையும் இருப்பும் இயங்க வேண்டும்…” என்று அண்ணல் அம்பேத்கர் சொல்லியிருப்பதை ஆட்சியாளர்கள் இனி பின்பற்றுவார்கள் என நம்புகிறேன்.
எட்டு மணி நேர வேலைநாள் என்பதில் இருக்கும் அறிவியல் மற்றும் அரசியல் அடிப்படைகளைத் தெரிந்த திமுக அரசே இப்படி பாஜக போல யோசித்திருக்கிறதே?
பாஜகவையும் திமுகவையும் சமன்படுத்திப் பார்க்க முடியாது, கூடாது. அதுவும் இதுவும் எதுவும் சரியில்லை என்று எல்லோரையும் குத்தம் சொல்லிக்கொண்டிருப்பதையே மகத்தான அரசியல் பணி என்று திரிகிறவர்கள் கிளப்பிவிடுகிற இதுபோன்ற வாதங்களை நாம் நிராகரிக்க வேண்டும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற அரசியல் செயல் திட்டமும் அதை அடைவதற்கான வழிமுறைகளும் கொண்டவர்கள் சொந்த மதிப்பீடுகளைக் கைக்கொள்ள வேண்டும். தூய்மைவாதம் பேசி எல்லோரையும் சனாதனிகளாகிய எதிரிகளின் பக்கம் தள்ளிவிடுவது நமது நோக்கங்களுக்கு ஊறு விளைவிப்பதாகும்.
யோகி ஆதித்யநாத் பதவியேற்றதும் ‘20 மணிநேரம் வேலை பார்க்கும் ஊழியர்கள் மட்டுமே என்னுடைய அரசில் பணியாற்றலாம்’ என்று அறிவித்தபோது அதன் நடைமுறைச் சாத்தியம், அறிவியல் தன்மை போன்ற எதுவுமே விவாதத்திற்குள்ளாக்கப்படவில்லை. ஊடகங்கள் அந்த அறிவிப்புக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருப்பதான தோற்றத்தைக் கட்டமைக்க முயன்றன. (பார்க்க: ‘காமிய தேசத்தில் ஒருநாள்’ என்கிற என்னுடைய சிறுகதை). இதே சட்டத்திருத்தத்தை ஒன்றிய அரசும் பாஜக ஆளும் மாநிலங்கள் சிலவும் நிறைவேற்றியபோது அது இடதுசாரி தொழிற்சங்கங்கள் சிலவற்றின் பிரச்சினையாகக் குறுக்கிப் பார்க்கப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் இந்தப் பிரச்சினை பெரும் கொந்தளிப்பை உருவாக்கியதை வரவேற்கத்தகுந்த அரசியல் முதிர்ச்சியாகப் பார்க்க வேண்டும். இந்த முதிர்ச்சி ஏன் அந்த, இந்த விசயத்தில் வெளிப்படவில்லை என்று நொட்டை சொல்லிக்கொண்டிருக்காமல் இதைப் பரவலாக வளர்த்தெடுப்பது அவசியம். (திமுகவின் இணையச் செயல்பாட்டாளர்கள் சிலர் மொன்னை விசுவாசத்தைக் காட்ட செய்த முயற்சிகூட அவ்வளவாக எடுபடவில்லை).
தமிழ்நாட்டில் எதிர்ப்பும் கண்டனமும் கிளம்பியதும் வறட்டுக் கௌரவம் பார்க்காமல் உடனடியாக அமைச்சர்கள் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மே 2ஆம் தேதி நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்காகக் கூட காத்திருக்காமல் பேச்சுவார்த்தை நடந்த அன்றே சட்டத்திருத்தத்தின் மீதான மேல் நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஜனநாயகப் பண்பைக் கடந்த எட்டாண்டுகளில் பாஜக எந்த விசயத்திலாவது வெளிப்படுத்தியுள்ளதா? விமர்சனம் அல்லது மாற்றுக் கருத்துச் சொல்பவர்களை அர்பன் நக்சல், ஆண்டி இந்தியன், தேசவிரோதி, இன்டலக்சுவல் ஜிகாத், அகடமிக் ஜிகாத் என்று அவதூறு செய்து வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, தேசிய பாதுகாப்புப்படை, சிபிஐ போன்ற தன் சட்டப்பூர்வ அடியாள் பட்டாளங்களையும் சட்டவிரோத அடியாள் பட்டாளமான சங்பரிவார கும்பலையும் ஏவி ஆளை நசுக்கும் பாஜக, உலக நாடாளுமன்ற வரலாற்றுக்கு நேர்ந்த களங்கம். நேற்றுவரை அவர்களுக்கு இணக்கமாக இருந்த ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் மீதான ஒடுக்குமுறை புத்தம்புதிய சான்று. விவசாயிகளின் போராட்டத்திற்கு நிதியுதவி செய்ததைக் குற்றமாகக் கருதி, நூற்றாண்டுக்கால பாரம்பரியமுள்ள அஞ்சல் தொழிற்சங்கத்தின் அங்கீகாரத்தை ரத்துசெய்திருக்கிறது. பாஜக அரசுடன் திமுக அரசை எப்படிச் சமன்செய்து ஒப்பிட முடியும்?
ஒருநாளின் மூன்றில் ஒருபகுதியை வேலைக்கு ஒதுக்குகிறோம். அதிலேயே உழைப்புச் சுரண்டல், பாலியல் சுரண்டல் எனப் பல ஒடுக்குமுறைகள் அரங்கேறுகின்றன. இந்நிலையில் ஒருநாளின் இரண்டில் ஒரு பகுதி வேலை என்ற நிலை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் எத்தகைய விளைவுகளை உருவாக்கும்?
விலங்குகள் கூட தமது சக்திக்கு அப்பாற்பட்ட வேலைகளைச் செய்யவைக்கும்போது முரண்டுபிடித்து மறுத்துவிடுவதைப் பார்க்கிறோம். ஆனால், சூரியன் உதிப்பதையோ மறைவதையோ பார்க்க முடியாதபடி தொழிலாளிகள் ஆலைகளுக்குள் அடைத்துவைக்கப்பட்டு அவர்களது ரத்தமும் வியர்வையும் உறிஞ்சப்பட்டன. தொடக்ககால முதலாளித்துவத்தின் இந்தக் கொடூர குணம் இன்றளவும் நீடிக்கிறது. குறைந்தபட்சம் இடையறாத உழைப்பில் ஈடுபடுவதால் இழக்கும் ஆற்றலைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசத்தைக்கூட தொழிலாளிகளுக்கு வழங்க மறுப்பதன் மூலம் அவர்களை மனித நிலையிலிருந்து தாழ்த்தி இயந்திர நிலைக்குள் பொருத்த முனைகிறது முதலாளித்துவம். கடைநிலை ஊழியர் தொட்டுக் கணினித் தொழிற்நுட்ப ஊழியர் வரை இந்தச் சுரண்டலுக்கு ஆளாகின்றனர். இதனால் பணியிடத்திற்கு அப்பால் ஓர் உலகம் இருப்பதையே அறிய முடியாதவர்களாக, அறிந்தும் துய்க்க முடியாதவர்களாக ஆளுமைக் குறுக்கத்திற்கு ஆளாகிறார்கள். அவர்களுக்கான தனிவிருப்பங்கள், குடும்ப வாழ்வு, சமூக ஒன்றுகூடல் போன்றவற்றில் பங்கெடுக்காமலும், அரசை மாற்றுவதிலும் உருவாக்குவதிலும் பங்கெடுக்காமலும் உள்ளொடுங்கியும் ஒருகட்டத்தில் இவற்றில் நாட்டமற்றவர்களாகவும் மாறிப்போவார்கள். கிடைக்கும் சொற்ப நேரத்தில் அசதியைப் போக்கிக்கொள்வதற்கான எளிய வழிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வதே போதுமென்ற நிலை உருவாகும்.
வேலைக்கான ஊதியம் என்பதிலேயே இங்கு பாகுபாடு நிலவுகிறது. கடும் உழைப்பாளி, திறன் உழைப்பாளி என்று பிரிவினை வர்க்கப் படிநிலைகளை உருவாக்குகிறது. இந்நிலையில், 12 மணி நேர வேலை எம்மாதிரியான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும்?
ஒரு தொழில் நிறுவனத்தின் மொத்தத் தொழிலாளர் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் தேவையற்றவர்கள் என்ற நிலை உருவாகும். மூன்று ஷிஃப்டுகளுக்கான தொழிலாளர்களில் எடுத்தயெடுப்பில் ஒரு ஷிஃப்ட் தொழிலாளர்கள் தேவைப்படாதவர்களாக ஆக்கப்படுவார்கள். இவர்களை வெளியே அனுப்ப விருப்ப ஓய்வு என்கிற பெயரில் கட்டாய வெளியேற்றத்தை நிர்வாகங்கள் கைக்கொள்ளும். ஏற்கெனவே உள்ள வேலையின்மையை இது மேலும் அதிகரிக்கச் செய்யும். வேலையின்மை அதிகரிக்கும்போது, உழைப்புச் சந்தையில் தொழிலாளர்கள் மலிவான விலைக்குக் கிடைப்பார்கள். இவர்களைக் காட்டி நிரந்தரத் தொழிலாளார்களின் ஊதியம் உள்ளிட்ட பணப்பயன்கள், உடல்/மனநலம் சார்ந்த உரிமைகள் பறிக்கப்படும். சமூகத்தின் பெரும்பகுதியாகிய உழைக்கும் மக்கள் மனநிறைவற்ற ஒரு வாழ்க்கை முறைக்குள் மேலும் தீவிரமாகத் தள்ளப்படுவார்கள்.
இந்தியாவில் ஏற்கெனவே முறைசாரா தொழில்களிலும், தகவல் தொழிற்நுட்பத்துறையிலும் தொழிலாளர்கள் சற்றேறக்குறைய 12 மணிநேரம் வேலை பார்த்துவருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு எப்போது கிடைக்கும்?
தொழிலாளர் நல விதிகள், பணிப்பாதுகாப்பு, உழைப்புக்கேற்ற ஊதிய மாற்றம், லாபத்தில் பங்கு, கண்ணியமான பணியிடச் சூழல் போன்றவை முன்மாதிரியான முதலாளியாக இருக்க வேண்டிய அரசு நடத்தும் நிறுவனங்களில்கூட முறையாக அமலாவதில்லை. எனில், தனியார் நிறுவனங்களிலோ அல்லது எவ்விதக் கூட்டுபேரச் சக்தியுமற்ற முறைசாரா தொழில்களிலோ இவையெல்லாம் எப்படிக் கிடைக்கும்? நாட்டின் ஒட்டுமொத்தத் தொழிலாளர்களில் அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட தொழில்களில் உள்ளவர்கள் வெறும் 6 சதவீதத்தினர் மட்டுமே. எஞ்சிய 96% தொழிலாளர்கள் முறைசாரா தொழில்களில்தான் உள்ளனர். இவர்களை அணிதிரட்டுவதும், அணிதிரட்டப்படாத நிலையிலேயே கூட கண்ணியத்துடன் வாழ்வதற்கான சட்டப் பாதுகாப்பை உருவாக்குவதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதும் அவசியம். சட்டவிரோதமாக ஒரு துறையிலோ அல்லது நிறுவனத்திலோ 12 மணிநேரம் வேலைநாளாக இருக்கிறதென்றால் அங்கு 8 மணிநேர வேலைநாளை உறுதிசெய்வதுதான் அரசின் பொறுப்பாக இருக்க முடியும். அதல்லாமல், ஒரு சுரண்டலை நியாயப்படுத்தி எல்லோரையும் அந்த விஷச் சூழலுக்குள் தள்ளக்கூடாது.
பார்ப்பனியம், முதலாளியம் என்கிற இரண்டு எதிரிகளையும் எதிர்த்துப் போராட வேண்டுமென்றும், தொழிலாளர்கள் தமது நலன்களைப் பாதுகாக்கும் ஓர் அரசை நிறுவிக்கொள்ளும் அளவுக்கு அரசியலில் ஈடுபாடு கொள்ள வேண்டுமென்றும் அண்ணல் சொல்லிச் சென்ற வரிகளில்தான் இதற்கான தீர்வு இருப்பதாகக் கருதுகிறேன். அடைவதற்கோர் பொன்னுலகம் உண்டு என்று மார்க்ஸ் சொன்னதன் பொருளும் இதுதான். ஆனால், இந்த மேற்கோள்களைக் கொட்டை எழுத்தில் போடுவதாலோ தொண்டை நரம்பு புடைக்க ஆவேசமாக முழங்குவதாலோ எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. கற்பி, போராடு, ஒன்றுசேர் எனும் சொற்களின் உள்ளார்ந்த பொருளை விளங்கிக்கொண்டு செயல்படுவதில்தான் மாற்றத்தை இழுத்துவர முடியும்.
(நீலம் ஆசிரியர் குழுவுடனான உரையாடல்)