பண்பாட்டுப் பிரதிநிதித்துவம் என்பது சமூக – பொருளாதார – அரசியல் அதிகாரத்தின் குறியீடு. சமகால இந்தியச் சமூகத்தில் வாழ்க்கை விதிகளையும் மதிப்புகளையும் அர்த்தப்படுத்துதல்களையும் நிர்வகிக்கும் தத்துவமாக இன்றும் பிராமணியமே இருக்கிறது. இத்தகைய சூழலில், சமகால நுண்கலைகளைக் கைக்கொள்ளும் வாய்ப்பு சில பகுஜன் கலைஞர்களுக்குக் கிடைத்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கவில்லை.
சாதிய படிநிலையை விமர்சிக்கும் வகையில் பௌத்த உருவங்களைப் பயன்படுத்தி வரையப்பட்ட எண்ணெய் ஓவியத்தின் (Foundation of India, 1986) மூலம் நவீன இந்தியக் கலை வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய சவீந்திர சவர்க்கர், சாதிய அனுபவங்களை அழகியலாக வெளிப்படுத்திய முதல் இந்தியக் கலைக்கூட ஓவியர் ஆவார். அண்ணல் அம்பேத்கரின் அரசியல் தத்துவங்களையும் நவ பௌத்தப் பிம்பங்களையும் வரைந்ததன் வழியாக, சவர்க்கர் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தலித் அகநிலையைப் பிரதிபலிக்கும், பிராமணிய – ஆதிக்கச் சக்திகளின் கண்ணோட்டத்தை விமர்சிக்கும் சித்திர மொழியை உருவாக்கியுள்ளார். 1961ஆம் ஆண்டு நாக்பூரில் பிறந்த சவர்க்கர், சித்ரகலா மஹாவித்யாலயாவில் நுண்கலையும், பரோடாவில் உள்ள மஹாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் முதுகலை நுண்கலையும் பயின்றார். லலித் கலா அகாடமியின் கர்ஹி ஸ்டூடியோவில் கிருஷ்ணா ரெட்டியுடனும் சாந்திநிகேதனில் கே.ஜி.சுப்ரமணியனுடனும் 80களிலும் 90களின் தொடக்கத்திலும் பணியாற்றிய சவர்க்கர், இந்தியாவிலும் பிற நாடுகளிலும் தன் படைப்புகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். 1996ஆம் ஆண்டு முதல் 2019 வரை தில்லி கலைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். இடையில் 1999 – 2003 காலகட்டத்தில் மெக்சிகோ அரசு வழங்கிய உதவித்தொகையுடன் அங்கு கல்லூரியில் பயின்றார்.
“சவர்க்கர் பிராமணிய ஒப்பனை நவீனத்துவத்திற்கும் அதன் அழகியல் நியதிகளுக்கும் பெரும் சவாலாக இருக்கிறார். மேலும், தலித்துகளின் சமூக அடையாளங்களைக் குறிக்கும் வகையில் தன் சொந்த உருவகங்களை உருவாக்கினார்” என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒய்.எஸ்.அலோன் தனது கட்டுரையில் (Caste Life Narratives, Visual Representation and Protected Ignorance) தெரிவித்துள்ளார். அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றல் வெளிப்பாடுகள் துறை உதவிப் பேராசிரியர் சந்தோஷ் சதானந்தன், “சவர்க்கரின் ‘முழுமையற்ற, மீள் உடல்கள்’ உடல் – அரசியல் அத்துமீறல்களின் சாத்தியப்பாடுகளைச் சொல்கின்றன என்கிறார் (Tense – Past Continuous: Some critical reflections on the art of Savi Sawarkar).
இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் இருக்கும் இடம், பல இலட்சம் மக்களோடு பாபாசாகேப் பௌத்தம் தழுவிய தீட்சா பூமி அமைந்திருக்கும் இடம் என முரண்பாடான வரலாறுகளைக் கொண்ட நாக்பூரில் பிறந்திருக்கிறீர்கள். இத்தகைய சிக்கல்களுடன் வளர்ந்தது எப்படி இருந்தது?
மிகவும் அரசியல் உணர்வுள்ள அம்பேத்கரிய குடும்பத்திலிருந்து வந்தவன் நான். 1956இல் அம்பேத்கரோடு பௌத்தம் தழுவியோரில் எனது தாத்தா பாட்டியும் அடங்குவர். எனது கொள்ளு தாத்தா துறவி சொக்கமேளாவின் பாடல்களைப் பாடுவது வழக்கம். பாட்டியோ கபீர்பந்த் குடும்பத்தைச் சேர்ந்தவர். ‘மற்றவரின் சிந்தனைகளைப் பிரதிபலிக்காதே, உன் சொந்த உணர்வை நம்பு’ என்று தாத்தா அடிக்கடி கூறுவார். அப்பாதான் எங்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரி. இரயில்வே அதிகாரியான அவர், ‘உங்களுக்கு ஏதாவது கொடுக்க முடியும் என்றால், அது நல்ல கல்வி மட்டும்தான்’ என்பார். அந்த வகையில் மாற்றுச் சிந்தனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் சூழலில்தான் வளர்ந்தேன். இருந்தும் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் சாகா பள்ளிக்குச் சென்றேன். அங்கு சாதியம் தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டது. ஆசிரியர்கள் ஏற்றத்தாழ்வுகளை நுட்பமாகப் பின்பற்றினர். என் பெயர் காரணமாகச் (சவர்க்கர்) சில நேரங்களில் என்னிடம் நல்லபடியாக நடந்துகொண்டனர்.
1960 – 70களில் நுண்கலையைத் தொழிலாகக் கொள்வது என்பது, அதுவும் சிறுநகரங்களில், சாதாரணமானதல்ல. இத்துறையில் எப்படி ஆர்வம் வந்தது?
சிறுவயதிலிருந்தே ஓவியம் வரையும் பழக்கமிருந்தது. பிற குழந்தைகளைப் போல் நானும் ஆசிரியர் வகுப்பெடுத்துக்கொண்டிருக்கும்போது நோட்டுப் புத்தகத்தில் வரைவேன். அந்த அளவிற்கு நுண்கலையில் ஆர்வம் இருந்தது. பத்தாம் வகுப்பு முடித்தபோது, வேறு எதிலும் எனக்கு ஆர்வம் இல்லை என்பதை உணர்ந்தேன். இந்நிலையில், எங்கள் குடும்பம் கரோபா மைதானிலிருந்து அப்பா வீடு வாங்கியிருந்த இரயில்வே காலனிக்கு இடம்பெயர்ந்தோம். அங்கு சித்ரகலா மஹாவித்யாலயாவில் படிக்கும் சிறுவர்களைச் சந்தித்தேன். நுண்கலை படிப்புக் குறித்து விசாரித்தேன். அவர்கள் ஓவியத்துறைக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறதென்று அறிவுறுத்தியதன் பேரில் 1977ஆம் ஆண்டு இளங்கலை நுண்கலை வகுப்பில் சேர்ந்தேன். கட்டணம் அதிகமென்றாலும் பெற்றோரின் ஆதரவு இருந்தது. எனினும் பிற அம்மாக்களைப் போல் என் அம்மாவிற்கும் இப்படிப்புக் குறித்த பயம் இருந்தது.
இளங்கலை படிப்புக்குப் பிறகான ஒரு கோடை விடுமுறையில் தில்லி லலித் கலா அகாடமியின் கர்ஹி ஸ்டூடியோவுக்கு வந்தபோது நுண்கலை மேற்படிப்புக் கற்றுத்தரும் மஹாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம் (பரோடா), சாந்திநிகேதன் ஆகியவை குறித்து அறிந்து உடனடியாக மஹாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்து, அங்கு 1982 முதல் 1984 வரை முதுகலை (அச்சிடுதல்) பயின்றேன். பரோடாவில் நாக்பூரிலிருந்து வேறுபட்ட சூழல் இருந்தது.
என்ன வேறுபாடுகள்?
பரோடா முற்போக்கான நகரம், தனித்துவமான சுதந்திரத்தைக் கொண்டிருந்தது. ஆனால், தற்போது காவிமயமாகிவிட்டது.
இந்த முற்போக்குத்தன்மை சாதி குறித்துப் புரிந்துகொள்ள உதவியதா? கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில்தான், 80களின் நடுப்பகுதியில், கேரளத்தில்…
பரோடாவில் ஒவ்வொருவரும் தங்களை முற்போக்குவாதிகளாக, மதச்சார்பற்றவர்களாக வெளிப்படுத்திக்கொண்டனர். ஆனாலும், அங்கு சாதி இருந்தது. சாதியை விவாதப் பொருளாக்குவதில் அவர்களுக்கு ஈடுபாடு இல்லை. அதையொரு பிரச்சினையாக அவர்கள் கருதவில்லை. அம்பேத்கர் குறித்துப் பேசும்போதெல்லாம் நான் தனிமையை உணர்ந்தேன். சக மாணவர்கள் உள்ளிட்ட அனைவராலும் புறக்கணிக்கப்பட்டேன். அம்பேத்கர் தலித்துகளுக்காக மட்டும்தான் உழைத்தார் என்று அவர்கள் கூறுவதுண்டு. சாதி குறித்த அவர்களின் அறிவு எல்லாம் பொருள்முதல்வாதப் பகுப்பாய்வோடு குறுக்கப்பட்டுள்ளது.
கேரள முற்போக்குத்தன்மை என்பது எங்கள் மாணவப் பருவத்திற்குப் பிறகு உருவானது. கலைக் கூடத்தையும் கலைச் சந்தையையும் நிராகரிக்கிற அளவுக்குத் தீவிர மார்க்ஸியர்களாக அவர்கள் இருந்தனர். அங்கு சாதியப் பிரச்சினையை விட வர்க்கப் பிரச்சினை ஆழமாக இருந்ததைத் தெரிந்துகொண்டேன். ‘நீங்கள் எந்தச் சாதியில் பிறந்தீர்களோ அதே சாதியில் இறக்க வேண்டும்‘ ‘வர்க்கம் ஒழிந்தால் சாதி ஒழிந்துவிடும்‘ என்ற நம்பிக்கை கொண்ட வழமையான மார்க்ஸியர்களாகக் கேரள முற்போக்குவாதிகள் இருந்தனர். லலித் கலா அகாடமியின் விருந்தினர் மாளிகையில் கே.பி.கிருஷ்ணகுமாரை முதன்முதலில் சந்தித்தேன். தங்கள் குழுவில் இணைந்துகொள்ளுமாறு அழைத்தார். என் சமூகம் சார்ந்து எனக்குப் பெரிய பொறுப்பு இருக்கிறது என்றேன். கலை வழியாகச் சொல்வதற்கு எனக்கு நிறைய விஷயங்கள் உள்ளன.
Illustration: Savindra Sawarkar
கலை குறித்துப் பேசும்போது, முதுகலை முடித்தவுடன் தேவதாசிகள் பற்றிய தொடர் ஓவியங்களைக் கொண்டுவந்தீர்கள். அது மிகவும் பாராட்டப்பட்டது. அதன் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்.
1986இல் கர்ஹி மானியம் கிடைத்தது, 1000 – 1500 ரூபாய் என்று நினைக்கிறேன். பம்பாயின் சிவப்பு விளக்குப் பகுதி ஒன்றில் பாலியல் தொழிலாளர்களின் (தேவதாசிகளின்) குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குச் சென்றிருந்தேன். மராத்திக் கவிஞர் நாராயண் சர்வி முதல்வராக இருந்தார். அப்பெண்களின் வேண்டுகோளுக்கிணங்க பள்ளிக்கூட படிவத்தில் தந்தை பெயர் என்ற இடத்தில் தன் சொந்தப் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். அவரைச் சந்தித்த பிறகு என்னுடைய மானியத்தைத் தேவதாசிகள் குறித்த பணி செய்வதற்குப் பயன்படுத்தலாம் என்று முடிவெடுத்தேன்.
தலித் குழந்தைகள் கட்டாயப்படுத்தப்பட்டுத் தேவதாசிகளாக்கப்படும் சவுந்தட்டி எல்லம்மா கோயிலுக்குப் பூசாரி வேடத்தில் சென்றேன். நீண்ட கேசமும் தாடியும் பொருத்தமாய் அமைந்துவிட்டன. பேச்சுத் திறனற்றவர் போல் நடித்ததால், சமஸ்கிருத மந்திரம் சொல்ல வேண்டிய தேவையும் ஏற்படவில்லை. கோயிலைச் சுத்தம் செய்வது, தண்ணீர் பிடிப்பது போன்ற வேலைகளையும் செய்தேன்.
தேர்ந்த நடிகரைப் போல…
ஆம், அப்படித்தான் நடந்துகொண்டேன். ஆறு மாதங்கள் அங்கிருந்தேன். கோயில் அமைந்துள்ள ஆற்றுக்கு மறுகரையில் வாடகைக்கு ஓர் அறையை எடுத்தேன். காலையில் கண்ட நிகழ்வுகளையெல்லாம் மாலையில் அறைக்குச் சென்று வரைந்தேன். சில சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்தன: 60 வயது அர்ச்சகர் 14 வயது சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்தான். ஒருநாள் இரவு 1.30 மணிக்கு என் அறைக் கதவைத் தட்டிய ஒருவர், “உனக்குப் பேசத் தெரியும் என்பது எனக்குத் தெரியும்” என்றார். நான் அங்கிருந்து தப்பிச் செல்ல அவர்தான் உதவினார். அவர் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவரோ என்ற சந்தேகம் இன்றும் எனக்குண்டு.
ஒருவேளை பிடிபட்டிருந்தால் நிச்சயம் என்னைக் கொன்றிருப்பார்கள். ஆற்றங்கரையோரமாகவே சில கிலோமீட்டர்கள் நடந்து ஒருவழியாகப் பனாஜி செல்லும் பேருந்தைப் பிடித்தேன். அங்கு, முதுகலை நண்பன் ஒருவன் வீட்டில் தஞ்சமடைந்தேன். அந்த அனுபவங்கள் என் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின, என் ஓவியப் பயிற்சியின் முக்கியத் திருப்புமுனையாகவும் அமைந்தன. அதற்கு முன்புவரை என் படைப்புகளில் செயற்கைத்தனம் இருக்கும், பின்னரோ தரம் கூடியது.
இந்த ஓவியத் தொடர் உங்கள் நுட்பங்களில் எத்தகைய தாக்கத்தை உருவாக்கியது – குறிப்பாக, கோடுகளின் பயன்பாடு, உருவமைப்புக்கான அணுகுமுறை ஆகியவற்றில்?
பொதுவாக, என்னுடைய சிறந்த படைப்புகள் கோட்டோவியங்களாகத்தான் இருக்கும். தேவதாசி தொடரைப் பொறுத்தவரையில், தென்னிந்தியக் கோயில் கட்டடக்கலையின் கூறுகளைத் தேவதாசியின் உருவத்தோடு இணைத்துள்ளேன். ‘When Was Modernism’ புத்தகத்தில் விமர்சகர் கீதா கபூர் குறிப்பிட்டிருப்பதைப் போல, தலித் அடையாளத்தை உருவாக்கக் கோயில் கட்டடக் கூறுகளைத் தலைகீழாக்கியிருக்கிறேன். உதாரணத்திற்கு, கோயில் வளாகத்திற்குள் தேவதாசிகளுக்கென்று வரையறுக்கப்பட்ட கருப்புத் தளம் ஒன்றுள்ளது. என் படைப்பில் அதைத் தேவதாசியின் கால்களாகச் (பாதங்களாகச்) சித்திரித்திருக்கிறேன். மற்றோர் ஓவியத்தில், எல்லம்மா கோயில் கொடிக்கம்பத்தைத் தேவதாசியின் கிரீடமாக வரைந்திருக்கிறேன். இத்தொடரின் சில ஓவியங்களைப் புதுதில்லியில் உள்ள அமெரிக்கன் மையத்தில் காட்சிப்படுத்தினேன் (1991).
பல ஆண்டுகளாக உங்கள் படைப்புகளில் மீண்டும் மீண்டும் வெளிப்படும் விஷயம், மனுவின் அச்சுறுத்தும் முகம். எதை மனதில் வைத்து அம்முகத்தை வரைந்தீர்கள்?
ஒருமுறை யாரோ ஒருவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் துளசி ராம் இயற்றிய ‘மனு மஹா தக்வா ஹும் ஜானி’ என்ற பாடலைப் பாடுவதைக் கேட்டேன். மனு எப்படிப்பட்டவராக இருந்திருந்தால் இத்தகைய பாடலை இயற்றியிருக்க முடியுமென்று ஆச்சரியப்பட்டேன். பிறகு பாபாசாகேப் சொன்னதை நினைவுகூர்ந்தேன், ‘மனு என்பவர் தனிநபர் அல்ல, அவர் பிராமணியத்தின் தொகுப்பு.’ இப்பாடலைக் கேட்ட பிறகே, முதல் மனு ஓவியத்தை வரைந்தேன். 1996ஆம் ஆண்டு ரபிந்திர பவனில் என்னுடைய ஓவியக் கண்காட்சியின்போது ‘மனுவும் தலித்தும்’ (Manu and Dalit) என்ற ஓவியத்திற்காக ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்னைத் தாக்கினர்.
Illustration: Savindra Sawarkar
உங்கள் தலித் நாயகர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஏற்கெனவே உள்ள வழமைகளுக்கு மாற்றாக அவர்களைச் சித்திரிப்பதற்கான புதிய வழிமுறைகளை நீங்கள் உருவாக்க வேண்டுமா?
தலித் பேசுபொருள்களை முதன்முதலாக வரையத் தொடங்கியபோது, கலைச் சமூகத்தில் என் மக்களை உருவமைப்பதிலும் பிரதிநிதித்துவப்படுத்துவதிலும் முற்றிலும் புதிய பாணியைக் கையாண்டேன். பலரும் என்னை விமர்சித்தனர். ஓர் ஓவியத்தில் ஓம் – ஸ்வஸ்திகா சின்னங்களைப் பயன்படுத்தியிருந்தேன், அது பலரைச் சங்கடப்படுத்தியது. அதனாலேயே பலரும் என்னைக் குழு கண்காட்சிகளுக்கு அழைப்பதில்லை.
ஓவியக் கண்காட்சி சூழலில் நீண்டகாலமாக இயங்கும் தலித் ஓவியர் நீங்கள் மட்டும்தான். இந்நிலையில், நீங்கள் வரைந்திருக்கும் நவபௌத்த – அம்பேத்கரிய அழகியல் மரபுகள் என்னென்ன?
பாட்டியோடு சேர்ந்து தீட்சாபூமியில் விற்கப்படும் நாட்காட்டிகளை வாங்குவேன். அதிலிருக்கும் ஓவியங்களும் சின்னங்களும் – அரச மரம், தம்மச் சக்கரம், புத்தரின் வாழ்க்கைச் சித்திரங்கள், அம்பேத்கர், சாவித்ரிபாய் புலே, ஜோதிபாய் புலே, கபீர் போன்ற தலைவர்களின் படங்கள் – என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. நாகராவ் பத்தன்கர் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவன் நான். ஆதலால், தலித் கலாச்சாரம் எனது படைப்புகளுக்கு மிகப்பெரிய தூண்டுதலாக இருந்திருக்கிறது, இருக்கிறது.
பேஷ்வாக்களின் ஆட்சியில் என் மக்கள் அனுபவித்த துயரங்களைப் பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன். தலித் அனுபவங்களின் குறியீடுகளான சட்டியும் துடைப்பமும் பள்ளிக் காலத்திலிருந்தே என் ஓவியங்களில் இடம்பெறும். தங்கள் எச்சிலைத் துப்ப கழுத்தில் சட்டியைக் கட்டிக்கொள்ள வேண்டும்; தாங்கள் நடந்துவந்த பாதையைச் சுத்தம் செய்ய இடுப்பில் துடைப்பத்தை வைத்திருக்க வேண்டும்; தங்கள் நிழலின் நீளத்தைக் குறைக்க நண்பகலுக்குப் பிறகே அவர்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் போன்ற ஒடுக்குமுறைகளை என் மக்கள் அனுபவித்தனர். ஒளி மற்றும் நிழலின் வெளிப்பாடு; சிவப்பு, கருப்பு போன்ற பௌத்த நிறங்களின் பயன்பாடு; தடித்த கோடுகள் யாவும் நீதி கோரும் எனது கோபத்தை வெளிப்படுத்தும் முறைமையின் ஒருபகுதியாக மாறிவிட்டன.
1991இல் அமெரிக்காவிற்கும் 96இல் மெக்சிக்கோவிற்கும் சென்றிருக்கிறீர்கள். வடஅமெரிக்காவில் உங்களின் அனுபவம் எத்தகையது? அவர்களின் அழகியலும் அரசியலும் உங்களுக்குள் உண்டாக்கிய தாக்கம் என்ன?
91இல் இரு மாதங்கள் அமெரிக்கா செல்வதற்கான மானியம் கிடைத்தது. நிறைய ஆப்ரோ அமெரிக்க ஓவியங்களை, கறுப்பர்களின் ஓவியக் கண்காட்சிகளைப் பார்த்தேன். பாப் பாயிண்ட் ஸ்டூடியோவில் பல கறுப்பினக் கலைஞர்களைச் சந்தித்தேன். மிகுந்த நம்பிக்கையைப் பெற்றேன். ஏனென்றால், இங்கு யாரும் இப்பிரச்சினை குறித்துப் பேசுவதில்லை.
மெக்சிகோ அரசின் உதவித்தொகை பெற்று மெக்சிகோ சென்ற இந்தியக் குழுவில் நான் மட்டுமே தலித். அதில் உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர், அங்குள்ளவர்களிடம் நான் ‘தீண்டப்படாதவன்’ என்றும் எனக்கு வாடகைக்கு அறை தரக் கூடாதென்றும் வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், தீண்டாமையைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படை கட்டமைப்புக் கூட மெக்சிகர்களிடம் இல்லை.
அம்பேத்கர் ‘விசாவுக்காகக் காத்திருந்தேன்’ கட்டுரையில் விவரித்தது போல் இருக்கிறது.
உண்மை. எனக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையைப் பயனுள்ளதாக்கவும், படிப்பில் கவனம் செலுத்தவும் எண்ணி மனைவியையும் குழந்தையையும் இங்கேயே விட்டுவிட்டு சென்றேன். குழுவில் நான் மட்டுமே தேர்ச்சி பெற்று மெக்சிகோ தேசியப் பல்கலைக்கழகத்தில் படித்தேன்.
மூன்றரை ஆண்டு காலகட்டத்தில் ஸ்பானிஷ் உட்பட ஆறு டிப்ளமோ படிப்புகளையும், இரண்டாவது முதுகலைப் படிப்பையும் முடித்தேன். நவபௌத்தக் கற்பனைகள் குறித்து ஆய்வறிக்கை சமர்ப்பித்தேன். மெக்சிகோ சுவரோவியங்கள் என்னை மிகவும் பாதித்தன. அதே பாணியில் மெழுகு, வண்ண நிறமி, எண்ணெய் கலந்த பிசின் ஆகியவற்றைப் பயன்படுத்தி வரையத் தொடங்கினேன். பல்கலைக்கழகமே எனக்கு வேலைவாய்ப்பை வழங்கியது. என் மகளை அங்கு வளர்க்க விருப்பமில்லாததால் இந்தியாவிற்கே திரும்பிவிட்டேன்.
Illustration: Savindra Sawarkar
வரலாற்று ரீதியாகத் தவிர்க்கப்பட்ட தலித் – பகுஜன் – அம்பேத்கரியக் கலைஞர்கள் இறுதியாகத் தங்களுக்கான வாய்ப்புகளைத் தற்போது பெறுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா?
என்னுடைய தலைமுறையோடு ஒப்பிடும்போது, நிச்சயமாக அப்படிச் சொல்லலாம். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் நிகழ்கிறது. ஆனால், இது போதாது. கல்வி நிறுவனங்களில் பாகுபாடாக நடத்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீட்டிற்கே வாய்ப்பில்லையே.
உயர்த்தப்பட்ட சாதியினரின் அடையாளங்களைப் பொதுமைப்படுத்துவதன் மூலம் தலித்துகளை அவர்களின் சொந்த அடையாளத்திற்குள் சுருக்கும் போக்கு நிலவுகிறது. தலித் அல்லது அம்பேத்கரியக் கலைஞராக உங்களை முன்னிறுத்திக்கொள்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்? ஏனெனில், அதுதான் உங்கள் படைப்பு வடிவங்களின் புதுமைக்குக் காரணமாக இருக்கிறது?
அரசியலும் அழகியலும் தனித்தனியானவை அல்ல, ஒன்றோடொன்று பிணைந்திருப்பவை. எல்லாப் பிரச்சினைகளுக்கும் நீங்கள் செவிசாய்க்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், அவற்றை ஓர் உள்தர்க்கம் பிணைத்துக்கொண்டிருக்கிறது. என்னுடைய சொந்தக் கலைச் செயற்பாட்டு முறையில், எனக்கு ஆர்வமுள்ள விஷயங்களை ஆராய்வதற்கு ஏற்ற முறையைத் தேர்ந்தெடுத்ததற்கான சான்றாகத் தேவதாசிகள் தொடரில் நான் பின்பற்றிய இனவரைவியல் முறையைக் கூறுவேன்.
கலையுலகில் பல ஆண்டுகளாக இயங்கிவருகிறேன். இன்றுவரையிலும் எந்தவொரு கலைக் கூடத்தாலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை. காரணம், பார்ப்பனியம். சாதி குறித்த, புறக்கணிப்புக் குறித்த அனுபவங்கள் என் கலைப் பார்வையை வலுப்படுத்தியிருக்கின்றன. அடையாளங்களைப் பொறுத்தவரையில், தலித் என்ற சொல் பரந்த அளவிலான மக்களை உள்ளடக்கியது. அம்பேத்கரியர் என்பது, அம்பேத்கரின் சிந்தனைகளோடு; அவரது சாதி ஒழிப்புக் கருத்துகளோடு; அவரது புரட்சி – எதிர்ப்புரட்சி கோட்பாடுகளோடு; ‘சரியான போராட்டத்துக்கான’ அர்ப்பணிப்புணர்வோடு தங்களைப் பொருத்திக்கொண்ட குறிப்பிட்ட மக்களைக் குறிப்பதாகும். என்னைப் போன்று சரியான அரசியல் விழிப்புணர்வு பின்னணியிலிருந்து வரும்போது, அம்பேத்கரியர் என்று உங்களை அழைத்துக்கொள்வதில் நீங்கள் பெருமைப்படுவீர்கள்.
கமயனி ஷர்மா: தில்லியைச் சேர்ந்த எழுத்தாளர், ஆய்வாளர், வலையொலிக் கலைஞர்.
நன்றி: scroll.in