பால் பாலினம் பாலுறவு பண்பாடு: அபத்தங்களும் புரிதல்களும்

கார்த்திக் ராமச்சந்திரன்

ருபதாம் நூற்றாண்டில் மானுடவியல், சமூகவியல் ஆய்வுகள் உலகெங்கிலும் உள்ள பண்பாடுகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டன. தன்னியல்பாக அந்த ஆய்வுகள் பண்பாடு என்றால் என்ன என்று வரையறுக்க முயன்றன. அதன் விளைவாக இன்றுவரை பண்பாடு பற்றிய நிறைய வரையறைகளை நம்மால் காண இயலும். அதில் முக்கியமானது ‘பண்பாடு தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பது’ என பேரி டோல்கன் அளித்த வரையறை.

சமூக அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்ட ஐரோப்பிய ஆய்வாளர்கள் (எமிலி தர்க்கைம், மார்ஷல் மார்ஸ், மார்லே போண்ட், மிஷல் ஃபூக்கோ, இன்னும் பிற) பண்பாடு பற்றிய தீவிர விவாதத்தின் விளைவாக மெய் (The Body) தொடர்பான ஆய்வுகளில் கவனம் செலுத்தினார்கள். உயிரியல் தன்மை கொண்ட மெய்யைக் காலனித்துவப்படுத்துவதே பண்பாடு. அதாவது, உயிரியல் மெய் (Biological Body) என்பது எல்லா உயிர்களிடமும் உள்ள அடிப்படை தன்மைகளான பசி, இனப்பெருக்கம், கழிவுகளை வெளியேற்றுதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்த உயிரியல் மெய்யைப் பண்பாடு என்ற கருத்தாக்கம் கட்டுப்படுத்தி அதற்குப் புதிய அர்த்தத்தைக் கற்பிக்கிறது. இவ்வாறு பார்க்கையில் பண்பாடு தோன்றுவதற்கு மனித மெய் நிறுவனப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதனால் மனித சமூக வரலாற்றில் முதன்முதலாக நிறுவனத்துவப்பட்ட கருத்தாக்கமாக மெய்யே இருந்திருக்க இயலும்.

பால் (sex):

மனிதப் பண்பாடு உடல் ரீதியான வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஆண், பெண் என வேறுபடுத்தியது. இங்கு பிறப்புறுப்பே பால் அடையாளத்தை நிர்ணயம் செய்யும் காரணியாகிறது. மேலும் உயரம், உடல் திடம் போன்றவையும் காரணிகளாகப் பேணப்படுகின்றன.

2009இல் ஆப்பிரிக்கத் தடகள வீராங்கனை காஸ்டெர் செமன்யா என்பவர் எண்ணூறு மீட்டர் ஓட்டத்தை 1:55:45 என்ற கால இடைவெளியில் ஓடி வெற்றியடைந்தார். இதே நபர் கடந்த போட்டியில் எண்ணூறு மீட்டர் தூரத்தைக் கடக்க 2:08:00 நேரமானதால் சந்தேகமடைந்த சர்வதேச தடகள சம்மேளனம், செமன்யாவை ஹார்மோன் பரிசோதனைக்கு உட்படுத்தியது. அதாவது, அவரின் பெண் தன்மை பற்றிய சோதனை அவரது வெற்றியைப் பறித்தது. இதேபோன்ற பிரச்சினை தமிழக தடகள வீராங்கனை சாந்தி, ஒலிம்பிக் தங்கப் பதக்க வெற்றியாளர் மரியான் ஜோன்ஸ், ரோகர் செமென்ஸ் ஆகியோருக்கும் ஏற்பட்டுள்ளது.

இங்கு பெண்பால் என்று ஒருவரை அடையாளப்படுத்த சர்வதேச தடகள சம்மேளனத்திற்கு உறுப்பு அடிப்படையிலான வாதம் மட்டுமே போதவில்லை. ஒருவரிடம் உள்ள ஆண், பெண் தன்மைகள் டிஎன்ஏ மற்றும் ஸ்டிராய்டு பரிசோதனையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இது அவ்வளவு எளிதானதோ, சரியான சோதனையோ அல்ல. உயிரியலின்படி ஆண், பெண் இருவருக்கும் உடலில் குறிப்பிட்ட அளவிலான டெஸ்ட்ரோஸ்டோன் உற்பத்தியாகிறது. ஒவ்வொரு பரிசோதனை மையமும் இந்த டெஸ்ட்ரோஸ்டோனின் அளவை வெவ்வேறு வகையாக வரையறுத்துள்ளது. அதைக் கண்டறியும் முறையும் விதவிதமான வேறுபாடுகளைக் கொண்டது. குறிப்பிட்ட அளவிலான டெஸ்ட்ரோஸ்டோன் இல்லாத பெண்ணை, ஆண் என்று தீர்ப்பெழுதிவிடுவார்கள். சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு இவ்வாறான விதிமுறைகளின்படியே பெண் தடகள வீரர்களைப் போட்டிக்கு அனுமதிக்கிறது.

ஆண் போட்டியாளர்களை இவ்வாறான சோதனைக்கு உட்படுத்துவது இல்லை. பெண் தடகள வீரர்கள் சராசரியைவிட கூடுதலாகச் செயல்படும்போதெல்லாம் அவர்களின் பெண் தன்மையைக் கேள்விக்குட்படுத்தித் தீர்ப்பெழுதிவிடுவர். உலக அதிவேக தடகள வீரரான உசைன் போல்ட், அவரின் ஆண் தன்மைக்காக ஒருபோதும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில்லை. பெண், ஆணை விட வலுகுறைந்தவர் என்ற கற்பிதமே நவீன அறிவியலைச் செயல்படுத்திக்கொண்டுள்ளது. ஆக, சர்வதேச தடகள சம்மேளனம் கைக்கொண்டுள்ள நவீன அறிவியலின்படி ஒருவர் அல்குல்லைக் கொண்டிருப்பினும் அவர் பெண் அல்ல. இது ஒருவகையான ஆண்மைய நிர்ணயவாதத்தின் விளைவு.

உண்மையில் உறுப்பை அடிப்படையாகக் கொண்டு ஆண் (Male), பெண் (Female), ஊடுபாலினம் (Intersex) என மூன்று வகையாகப் பால் அடையாளத்தை வகைப்படுத்த இயலும். ஆண்பால், பெண்பால் என்பது தத்தம் உறுப்புகளைக் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது. ஊடுபாலினம் என்பது மூன்று வகையாக வகைப்படுத்தப்படுகிறது. ஆண் மற்றும் பெண்ணுறுப்பு இணைந்து காணப்படுவது (Herms), விதைப்பையுடன் காணப்படும் முழுமையடையாத ஆண் உறுப்பு (Merms), சினைப்பையுடன் காணப்படும் முழுமையடையாத பெண்ணுறுப்பு (Ferms). உலகில் மூன்று சதவீதம் குழந்தைகள் ஊடுபாலினமாகப் பிறப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஊடுபால் குழந்தை பிறப்பு மனித குல வரலாற்றில் பன்னெடுங்காலமாக இருந்துள்ளது. இதனைக் குறைபாடாகவே இன்றுவரை சமூகங்கள் கற்பனை செய்துள்ளதன் தொடர்ச்சியாக ஊடுபால் குழந்தைகளின் உறுப்பைச் சிறுவயதிலேயே அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றும் முறையைக் கையாளுகின்றன. இந்நடைமுறை குழந்தையின் பால் நிர்ணய உரிமையில் பெற்றோர்கள் அத்துமீறுவதாகும். இங்கு ஊடுபால் குழந்தைகள் பருவ வயதில் ஆண் அல்லது பெண் பாலாகும் உரிமையை வழங்க வேண்டும், அதுவே நியாயமும்.

பாலினம் (Gender):

பள்ளி, கல்லூரி, வேலைவாய்ப்பு விண்ணப்பப் படிவங்களில் பெயர், வயது என்பதன் தொடர்ச்சியாகப் பாலினத்தைத் தேர்ந்தெடுக்கக் கோருவதைக் காணலாம். உடலியல் கூறுகளைச் சார்ந்து பால் அடையாளம் வகைப்படுத்தப்படுவது போல பாலினத்தைக் கண்ணால் பார்க்கக் கூடிய காரணிகளைக் கொண்டு வகைப்படுத்த இயலாது. இனப்பெருக்க உறுப்பின் அடிப்படையில் பாலினங்களை அடையாளப்படுத்த இயலாது. அதேபோல், பாலினங்களை அறுதியிட்டுக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சொல்வதும் இயலாது. பாலினம் முழுக்க முழுக்க உளவியல் சார்ந்த காரணிகளை அடிப்படையாகக் கொண்டது. பாலினம் நீர்மத்தன்மையைப் (Fluidity) பெற்றது. ஒன்றிலிருந்து மற்றொன்றாக எளிதில் மாறக்கூடியதாக இருக்கும். ஆக, உறுப்பு அடிப்படையிலான பாலின இருமைவாதம் என்பது கற்பிதம்.

பண்பாட்டில் பாலினம், நிகழ்த்தும் தன்மைக் கொண்டதாக உள்ளது. அதாவது, உடை, பழக்கவழக்கம், சிகையலங்காரம், உடல் – முக பாவனைகள், குரல் தன்மை, உணர்வுகளை வெளிப்படுத்துதல் போன்றவற்றைக் கொண்டு ஒவ்வொரு பண்பாடும் பாலினத்தை மெய்யின் மீது நிகழ்த்துவதற்குப் பயிற்றுவிக்கிறது. பாலினம் ஒரு செயல்பாடாக உள்ளது. இங்கு எல்லா மெய்களும் பண்பாட்டால் மறு உற்பத்திக்குள்ளாகிறது என்பதால் இயற்கையான மெய் என்று ஏதுமில்லை என்கிறார் ஜூடித் பட்லர். ஆண்குறி மற்றும் பெண்குறிகளைக் கொண்ட குழந்தைகளுக்கு அதற்கென வரையறுக்கப்பட்ட சமூகப் பழக்க வழக்கங்கள் நிர்பந்தத்தின் அடிப்படையில் கற்பிக்கப்படுகிறது. ஒரு மெய், பண்பாட்டால் வரையறுக்கப்பட்ட பாலின விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படும்போது சமூக ஒழுங்கை மீறியதாகவும் நோய்மை கொண்டதாகவும் வரையறுக்கிறது. பெண் உடை தறிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் ஆண், சமூகத்தால் எவ்வாறாக வரையறுக்கப்படுவார். இவ்வாறான மெய்களைச் சமூக நீக்கம் செய்யவே மனித சமூகம் பழக்கப்பட்டிருந்திருக்கிறது. உண்மையில் அது நோய்க் கூறல்ல; பண்பாட்டின் கற்பிதம்.

மாற்றுப் பாலினச் சமூகம் இன்னும் சற்றே விரிவாகத் தமிழ்ச் சமூகத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆண் பிறப்புறுப்புடன் பிறந்த நபர் மனதளவில் ஒரு பெண்ணாகவே தன்னை அடையாளப்படுத்துகிறார். அவருக்கு ஆண் உறுப்பு உடல்சார் சுமையாகவே இருக்கிறது. மனதளவில் பெண்ணாகவும் உடலளவில் ஆணாகவும் வாழ்வதை விரும்பாதவர்கள் உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாகவே வாழ முயல்கின்றனர். அதேபோல் பெண்ணுறுப்புடன் பிறந்தவர்களும் உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொள்வதும் நடைமுறையில் உள்ளது. பண்பாட்டளவில் இது எவ்வகையான அர்த்தத்தைப் பெற்றுள்ளது. இவ்வாறான நபர்கள் தத்தம் சமூகத்துடனும் குடும்பத்துடனும் இணைந்து வாழவே பிரயத்தனப்படுகின்றனர். இங்கு பாலினம், சமூகப் பண்பாட்டின் ஒழுக்க விதிமுறை – அதிகாரம் சார்ந்த காரணியாக இருப்பதால் மாற்றுப் பாலினத்தவர்களுக்கான சமூக அங்கீகாரம் மற்றும் மையப் பண்பாட்டில் இயல்பென இணைவதற்கான சாத்தியப்பாடுகளுக்காகக் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது.

Illustration: Negizhan

பாலுறவு (Sexuality):

சிக்மண்ட் பிராய்ட், பாலுறவு எவ்வாறு ஆதி சமூகத்தில் முறைப்படுத்தப்பட்டது என்பது பற்றிய கதை ஒன்றைச் சொல்கிறார், “ஆதியில் ஒரு தந்தை இருந்தார். அவரே குழுமத்தின் சர்வ அதிகாரத்தையும் கையில் வைத்திருந்தார். வேட்டைக்குச் செல்லும் ஆண்கள் கைப்பற்றும் உணவுகளும் இவரிடமே வந்துசேர வேண்டும். இவருக்குப் போகத்தான் யாவருக்கும் உணவு. குழுவிலுள்ள பெண்கள் அனைவரும் அவருடைய உடைமைகள். வேறு ஆண்கள் உறவுகொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. பெண்களில் வயது வேறுபாடு இன்றி, தாய் சேய் வேறுபாடு இன்றி உறவுகொள்ளும் சர்வ அதிகாரத்தைத் தந்தை ஒருவரே பெற்றிருந்தார். பாலுறவு கிடைக்கப்பெறாத ஆண்களும், தந்தையின் கொடுங்கோன்மையால் அவதிக்குள்ளாகும் பெண்களும் திட்டம் தீட்டி தந்தையைக் கொன்றுவிடுகின்றனர். கொன்றாலும் உயிர்த்தெழுவார் என்ற அச்சத்தில் அவரின் உடலைக் கூறிட்டுத் தின்று விடுகின்றனர். அப்படியும் தந்தை மீதான பயம் விலகவில்லை. ஏனெனில், தற்போது தந்தை ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பதாக எண்ணினர். அதனால், ஒரு முடிவிற்கு வருகின்றனர். குழுமத்திலுள்ள பெண்களுடன் உறவு கொள்வதில்லை, அதற்கென வரையறைக்குட்பட்ட குழுமங்களுடன் பரிமாற்ற அடிப்படையில் உறவு வைத்துக்கொள்வது என்றும் ஒவ்வொரு வருடமும் தந்தை கொல்லப்பட்ட இடத்தில் அவர் விரும்பும் உணவுகளைப் படையலாக வைத்து வழிபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.”

இந்தக் கதையைப் பாலுறவு ஒழுங்கு, அதிகாரப் பகிர்வு, வழிபாடு, சமூக விலக்கு, திருமண உறவு முறை ஆகியவற்றைப் பற்றி விவாதிக்க சிக்மண்ட் பிராய்ட் பயன்படுத்தினார். அவரைப் பொறுத்தவரை, மனித சமூக உருவாக்கத்தில் குடும்பம், திருமண முறை, சமூகம், சமயம் போன்ற கருத்தாக்கங்களின் வளர்ச்சியில் பாலுறவு செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி ஒரு வரைமுறைக்குக் கொண்டுவந்ததே அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஐரோப்பிய வரலாற்று ஆய்வில் ஈடுபட்ட மிஷல் ஃபூக்கோ, விக்டோரியா காலகட்டத்தில் எவ்வாறு பாலுறவு அரசியல்மயப்பட்டது எனக் குறிப்பிடுகிறார். இந்தக் காலகட்டத்தில் நான்கு பிரதான உத்திகள் பாலுறவு சார்ந்து செயல்படுத்தப்பட்டதாக ஃபூக்கோ வரையறுக்கிறார்.

  1. பெண் உடலை நோய்மையாகக் கற்பனை செய்தல். அதாவது, இக்காலக்கட்டத்தில் பெண்ணுடல் ஆண் உடலோடு ஒப்புமைப்படுத்தப்பட்டு மதிப்பிழக்கச் செய்யப்பட்டது. நோய்கள் பெண்ணுறுப்பிலிருந்து உற்பத்தியாவதாகவும், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பெண்ணுடல் சார்ந்ததாகத் தொடர்புபடுத்தப்பட்டது. பெண்களுக்குக் குழந்தைப் பெற்றெடுத்தலே பிரதான நோக்கமாகக் குறிப்பிடப்பட்டு அதற்கு இடையூறான நோய்க்கூறுகள் மீது தீவிர கவனம் செலுத்தப்பட்டது.
  2. குழந்தைகளுக்குப் பாலியல் சார்ந்த போதனைகள் குடும்பம், பள்ளி, மருத்துவமனை போன்ற நிறுவனங்கள் வழியாகக் கற்பிக்கப்பட்டன. குழந்தைகள் பாலியல் ரீதியாகச் செயல்பட்டதாகவும், அது முற்றிலும் தகாத செயலாகவும் அறிவுறுத்தப்பட்டது. குழந்தைகள் ஒரே நேரத்தில் சீரான பாலியல் தன்மை கொண்டவர்களாகவும், இயல்பாகப் பாலினமற்றவர்களாகவும் கற்பிக்கப்பட்டது.
  3. பாலுறவு என்பது சமூகக் கடமையாகவும் குழும மற்றும் பொருளியல் காரணியாகவும் மாற்றம் பெற்று அரசியல் தன்மை கொண்டதானது, பாலுறவு குடும்பக் கட்டுப்பாடு மற்றும் அரசுத் திட்டங்களில் பிரதான காரணியாக விவாதிக்கப்பட்டது.
  4. பாலுறவு என்பது உயிரியல் – உளவியல் காரணியாக வகைப்படுத்தப்பட்டது. எல்லாவித வியாதிகளும் தீர்வுகாண்பதன் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டன.

இவ்விரு ஆய்வுகளும் பாலுறவு என்ற உயிரியல் பண்பு எவ்வாறு அரசியல்மயப்பட்டிருக்கிறது என்பதையே வெவ்வேறு முறையியல்களின் வாயிலாக விவரிக்கின்றன. நாம் பாலுறவின் உயிரியல் பண்பை மட்டுமே பெற்றிருக்கவில்லை. அதன் மீது குடியேறிய அரசியல் தன்மையையும் இணைத்தே பெற்றிருக்கிறோம். ஆண் பெண் பாலுறவு அதீத அரசியல்மயப்பட்டுச் சமூகங்களிடையே செயலாற்றியுள்ளது.

பாலுறவு என்பது பால் மற்றும் பாலின அடிப்படையிலானதாக இருக்க வேண்டியதில்லை. ஒருவர் தான் விரும்பும் நபரின் சம்மதத்துடன் உறவு கொள்வது என்பதாகவே பாலுறவு வரையறுக்கப்படுகிறது. உயிரியல் ஆண் உடல் கொண்டவர் உயிரியல் பெண் உடல் கொண்டவருடன் மட்டுமே பாலுறவு வைத்துக்கொள்ள இயலும் என்பது உறுப்பு அடிப்படையிலான வாதம். இது இனப்பெருக்கம் என்ற செயலை நோக்கமாகக் கொண்டு பாலுறவை அணுகுகிறது. இங்கு பாலுறவைப் பொறுத்தமட்டில் இனப்பெருக்கம் என்பதை மையப்படுத்தாமல் உணர்வு சம்பந்தப்படுத்தப்படுகிறது. அதாவது, தன்பால் ஈர்ப்பாளர்கள் தங்களுக்கு இடையிலான காதல், ஈர்ப்பு, காமம் ஆகிய காரணிகள் சார்ந்தே உறவு கொள்கின்றனர்.

Allosexual, Allosexism, Androsexual, Asexual, Aromantic, Autosexual, Autoromantic, Bicurious, Bisexual, Biromantic, Closeted, Coming out, Cupiosexual, Demi sexual, Deme Romantic, Fluid, Gay, Gray sexual, Gray Romantic, Gynesexual, Hetrosexual, Lesbian, Libidoist Asexual, Monosexual, Non Libidoist Asexual, Omnisexual, Pansexual, Panromantic, Polysexual, Pomo Sexual, Passing, Sapiosexual, Skoliosexual, Androphilia, Auto Eroticism என வெவ்வேறு பாலுறவுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பாலுறவும் நீர்மத்தன்மையைக் கொண்டது. ஒருவர் வாழ்நாளெல்லாம் ஒரே வகையான பாலுறவிலேயே இருப்பார் என்பதைத் தீர்க்கமாகச் சொல்ல இயலாது. அவர் வாழ்க்கைச் சூழலுக்கேற்ப பாலுறவின் தன்மையில் மாற்றம் ஏற்படும்.

பாலியல் நடத்தை என்பது ஒருபுறம் இயற்கையான உள்ளுணர்விலிருந்து வெளிப்படும் ஆசைகள் எனவும், மறுபுறம் நாம் என்ன செய்ய வேண்டும் அல்லது என்ன செய்யக்கூடாது என்பதை அனுமதிக்கும் அல்லது கட்டுப்படுத்தும் சட்டங்கள் சார்ந்தது எனவும் பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால், அது அவ்வாறானதல்ல என்கிறார் ஃபூக்கோ.

சைவ உணவு பழக்கம் கொண்டவர்கள் அசைவ உணவு பழக்கம் கொண்டவர்களைச் சமயம் பண்பாட்டில் மேலாதிக்கம் செலுத்துவது போல, எதிர்பாலீர்ப்புப் பழக்கம் கொண்டவர்கள் (Heterosexual Behavior) காலமெல்லாம் தன்பால் ஈர்ப்பாளர்கள் மீது சமூகப் பண்பாட்டு அளவிலான மேலாண்மையைச் செலுத்துகின்றனர். பால் ஈர்ப்பு என்பதும் பன்னெடுங்காலமாக மனிதர்களின் பாலுறவு பழக்கமாகவே இருந்திருக்கிறது. ஒற்றைப் பாலுறவு பழக்கம் அரசியல்மயப்பட்டதன் விளைவாக எண்ணிக்கையில் குறைவாக இருந்த உதிரிகளின் பழக்கம் பண்பாட்டில் இழிநிலையிலேயே வைத்துப் பார்க்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாகவே மிஷல் ஃபூக்கோ, “பால்புதுமையினர் மற்றும் மாற்றுப் பாலுறவு சார்ந்த இயக்கமானது இரண்டு வகையான இலக்குகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். ஒன்று, பாலுறவு தேர்வுக்கான சுதந்திரத்தை அடைவது அடிப்படை. இங்கு பாலுறவு தேர்வுக்கான சுதந்திரம் (Freedom of Sexual Choice) என்பது வேறு; பாலுறவு செயலுக்கான சுதந்திரம் (Freedom of Sexual Acts) என்பது வேறு. பாலுறவு செயல் என்பது அதிகாரமுள்ள நபர் வேறொரு நபர் மீது செலுத்தும் பலாத்கார நடவடிக்கை போன்றது. ஆனால், பாலுறவு தேர்வுக்கான சுதந்திரம் என்பது பரஸ்பர அன்பு மற்றும் சம்மதத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும், வன்முறையற்றது. இரண்டாவது, சட்டரீதியான உரிமையை வென்றெடுப்பது எந்த அளவிற்கு முக்கியமானதோ அதேபோல் சமூக உரையாடல்களின் வழியாகப் பாலுறவு சுதந்திரம், பாலுறவு பழக்கவழக்கம், தனிநபர் உறவு பற்றிய விவாதங்களும் அவசியம். சமூகப் பண்பாட்டுச் சட்டகத்தினுள் பாலுறவு சுதந்திரம் செயல்படுவதற்கான வாயில்கள் திறக்கப்பட வேண்டும்” எனக் கருதுகிறார்.

திருமணம்:

ஒவ்வொரு தனிமனிதனும் வாழ்வில் வெவ்வேறு காலகட்டத்தில் சடங்குகளைக் கடந்தாக வேண்டிய நிர்பந்தத்தைப் பண்பாடு கடைப்பிடிக்கிறது. இதனை வாழ்க்கை வட்டச் சடங்குகள் (Life Circle Rituals) என்கிறோம். குழந்தை பிறந்தவுடன் பெயர் சூட்டல், காது குத்துதல், பூப்பெய்தல் சடங்கு, திருமணம், வளைகாப்பு, இறப்புச் சடங்கு என முழுமையான ஒரு வாழ்க்கைக்கான சடங்குகளை பண்பாடு வரையறுத்துள்ளது. இது உலகிலுள்ள எவருக்கும் பொதுவானவை; சமய – வட்டார வேறுபாடு கொண்டவை. இவ்வாறான வாழ்க்கை வட்டச் சடங்குகளைச் சமூகத்தில் தனிநபரின் நிலையைக் காட்டக்கூடியதாகவே மானுடவியலாளர்கள் வரையறுக்கின்றனர்.

பொதுவாக, சமூகப் பண்பாட்டில் திருமணம் மிக முக்கியமான சடங்காகப் பார்க்கப்படுகிறது. மரபான சமூகங்களில் தனிநபருக்கென்று எந்தச் சிறப்பு உரிமையோ அந்தஸ்தோ வழங்கப்படுவது இல்லை. குடும்பமே அதன் அடிப்படையான அலகு. குடும்பமாதலுக்குத் திருமணம் என்ற சடங்கைக் கடந்தாக வேண்டும். அதுவே ஓர் இளைஞனைச் சமூக மனிதனாக்குகிறது. தமிழ்ச் சமூகத்தில் ‘ஆள்’ என்ற கருத்தாக்கம் பற்றி ஆய்வு மேற்கொண்ட வேலண்டைன் டானியல், திருமணமும் வீடு கட்டுவதும் எப்படி ஓர் ஆணை முழுமையான ‘ஆள்’ ஆக்குகிறது என்று விவாதித்திருப்பார். ஆக, மரபான சமூகங்கள் திருமணத்தைப் பிரதான காரணியாகக் கையாளுகின்றன. இங்கு ஆணே மையப்பொருள். மரபான திருமணச் சடங்கு என்பதே பாலின ஏற்றத்தாழ்வுகளை அனுமதிப்பதாகும்.

திருமண உறவு பற்றிய ஆய்வுகள், அகமண முறை, புறமண முறை, ஆண் பலதாரமுறை, பெண் பலதார முறை, ஒருதார முறை, குழுத் திருமண முறை என வெவ்வேறு சமூகங்களிடம் காணப்பட்ட திருமண முறைகளை வகைப்படுத்தியுள்ளது. இவை காலமெல்லாம் அதே தன்மையுடையதாகத் தொடர்ந்திருக்கவில்லை. சமூகப் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப திருமண முறைகளிலும் மாற்றம் ஏற்பட்டது. பல நடைமுறைகள் பண்பாட்டு வளர்ச்சியில் இழிவான செயல்களாகப் பார்க்கப்பட்டு மறைந்தன.

கடந்த சில நூற்றாண்டின் சமூக அரசியல் உந்துதல்களால் பலதார திருமண முறை, கட்டாயத் திருமண முறை, குழந்தைத் திருமண முறை ஆகியவற்றில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. அடிப்படையில் திருமணம் என்பது ஆண், பெண் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் இணைந்து குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமை பெற்ற தன்னாட்சி சமூக அலகு என்பதாக நிலைப்பெற்றுவிட்டது. ஆண் பெண் திருமணம் என்பதே உற்பத்தி சார்ந்தது. அதனால்தான் குழந்தைபேறற்ற திருமண வாழ்வு தோல்வியடைந்ததாகவே பண்பாடு கருதுகிறது.

தற்போது பால்புதுமையினர், மாற்றுப் பாலுறவு சமூகங்களைச் சார்ந்தவர்களில் உரிமைகள் சமூக ஒருங்கிணைவு சார்ந்ததாக இருப்பதால், திருமண உரிமை கோரப்படுகிறது. கடந்த காலங்களில் மனித உற்பத்தியின் அபிரிதமான தேவையின் பொருட்டு ஒற்றைத்தனமான உறவுமுறை மட்டுமே வழக்கமாக்கப்பட்டிருந்திருக்கிறது. இதன் விளைவாக ஏனைய பாலுறவுத் தன்மைகள் விளிம்புக்கு நகர்த்தப்பட்டன. தற்போது மாற்றுப் பாலுறவாளர்கள் திருமண உரிமை கோருவது ஒருவகையான மையம் சார்ந்த ஒருங்கிணைவுக்கான ஏக்கம். ‘மாற்று அரசியல்’, ‘மாற்றுப் பண்பாடு’ என்பவை மையப் பண்பாட்டின் ஓட்டத்தில் தாக்கம் செலுத்தவே முயல்கின்றன. மையப் பண்பாட்டில் புறக்கணிக்கப்பட்ட உதிரிகள்தாம் மாற்றுச் சமூக ஒருங்கிணைவுடன் மீண்டும் மையத்தை நோக்கி உரிமைக்கான குரல் எழுப்புகின்றன. செயல்பாட்டளவில் ‘மாற்று’ என்பவை தனித்தியங்குபவை போல் தோற்றமளிப்பினும் மையப் பண்பாட்டில் மாற்றத்தைக் கோருவதே அதன் இலக்காக உள்ளது.

இங்கு பாலுறவு தேர்வுக்கான சுதந்திரம், மாற்றுப் பாலுறவாளர்களின் திருமண உரிமை ஆகியவற்றை சமூகம் தார்மீக அடிப்படையில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவே, சமூக வளர்ச்சிக்கு உதவும். சட்ட உரிமைகள் என்பதைக் காட்டிலும் பண்பாட்டு உரிமை அடைதல் என்பதே வலிமையான மாற்றத்தை ஏற்படுத்தும். ஐரோப்பியக் கத்தோலிக்கச் சமயம் கடந்த காலங்களில் மாற்றுப் பாலினத்தவர்கள் மீதும் மாற்றுப் பாலுறவாளர்கள் மீதும் பிரயோகித்த கடுமையான வன்முறைகளுக்காக போப் பிரான்சிஸ் 2016ஆம் ஆண்டு மன்னிப்புக் கோரினார். கத்தோலிக்க திருச்சபை தலைவரின் இந்த மன்னிப்புக் கோரல் என்பது ஐரோப்பியச் சமூகம் தனிநபர் உரிமைகளில் கொண்டுள்ள வளர்ச்சியைக் காட்டுகிறது. மேலும், இறுக்கமான நிறுவனச் சமயத்தின் கோட்பாடுகள் சமகால சூழலுக்கு ஏற்ப மாற்றமடைய இயலும் என்பதை நினைவூட்டுகிறது. மரபான பால் இருமைவாத அடிப்படையிலான சமூகப் போக்கு மிகவும் பிற்போக்குத்தனமானதும், சமத்துவச் சமூக அமைத்தலுக்குக்கு எதிரானதுமாகும். சமத்துவம் என்பது சமூக, பொருளாதார, பண்பாடு, பாலின அடிப்படையில் அனைத்து உரிமைகளும் வாய்ப்புகளும் சமூக ஒருங்கிணைவுடன் எல்லாத் தளங்களிலும் எல்லோருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதே. இவ்வாறே நவீன சமூகங்கள் முயற்சிக்கின்றன.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!