பூர்வகுடிகளின் பண்பாட்டு மீட்பர்

இலஞ்சி அ.கண்ணன்

ரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர், பண்பாட்டுத் தளத்தில் பண்டிதருக்கு அடுத்தபடியாக மாபெரும் பௌத்தப் புரட்சியை நிகழ்த்திய பண்பாட்டு மீட்பர், ‘கறுப்பர் நகரத்தின் காலா’, ‘சமத்துவத் தலைவர்’, ‘டைனமிக் லீடர்’ என்று சாதியாலும் பொருளாதாரத்தாலும் புறக்கணிக்கப்பட்டு, திராவிட அரசுகளால் சென்னை மாநகரிலிருந்து விரட்டியடிக்கப்படும் பூர்வகுடி மக்களால் வாஞ்சையோடு அழைக்கப்படக்கூடிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் தமிழகத்தின் தலைநகரில் படுகொலைச் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மூன்று நாட்களாக அவருடைய உடலை அவருக்குச் சொந்தமான இடத்தில் அடக்கம் செய்வதற்கான அனுமதியைக்கூட வழங்காமல் உதாசினப்படுத்தியது. முதல்வரின் தந்தை கலைஞர் கருணாநிதி மரணத்தின்போது மெரினாவில் அடக்கம் செய்வதற்கு இடம் கேட்டு, அன்றைய அதிமுக அரசிடம் தன் குடும்பத்தாருடன் கோரிக்கை வைத்தார். அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவுடன் நீதித்துறையிடம் முறையிட்டார். அவருடைய வலியையும் வேதனையையும் உணர்ந்து ஒட்டுமொத்த தலித் சமூகமும் அப்போது அவருக்குத் துணை நின்றது. ஆனாலும், அதை மறந்துவிட்டார்.

அவர்கள் நன்றி மறந்தவர்கள்தான் என்பதற்கு அண்ணன் ஆம்ஸ்ட்ராங் நிறுவிய ‘தென்னிந்திய புத்த விஹார் பதிப்பகம்’ வெளியிட்ட அன்னை சத்தியவாணி முத்துவின் ‘எனது போராட்டம்’ நூலே சான்று. அறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பின் யார் முதல்வராக வேண்டும் என்ற கேள்வி எழுந்தபோது, நாவலர் நெடுஞ்செழியனுக்குப் பதிலாக கலைஞர் கருணாநிதியைத் தேர்வுசெய்வதற்கு ஆதரவு தெரிவித்து கே.ஏ.மதியழகன் முன்மொழிய அன்னை சத்தியவாணி முத்து வழிமொழிந்தார். அதன் காரணமாகவே கலைஞர் கருணாநிதி கட்சியின் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டு முதல்வரானார். இதற்கு எதிப்புத் தெரிவித்து மதுரை முத்து போன்றோர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். பின்னர் நாவலர் நெடுஞ்செழியன் தனது அமைச்சர் பதவியை ராஜினமா செய்தார் என்பது வரலாறு. பின்னாளில் செய்நன்றி மறந்த கலைஞர் கருணாநிதி, அன்னை சத்தியவாணி முத்துவை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கினார். ஆம்ஸ்ட்ராங் அண்ணனிடம் பேசுகையில் இதை அடிக்கடி நினைவுகூர்ந்து, “அந்த நூலைப் பற்றிய செய்தியை நம் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்ஞ்” என்பார். அந்த அளவிற்கு இங்குள்ள திராவிடச் சூழ்ச்சியாளர்களுடைய அரசியல் நுட்பத்தை உணர்ந்து செயல்பட்டவர்.

இன்றைய சூழலில் தொடர்ந்து தலித் சமூகத்தின் மீது திட்டமிட்டே நிகழ்த்தப்படும் அநீதிகளைத் தட்டிக் கேட்கும் ஒவ்வொருவர் மீதும் திமுகவினரும் அதன் ஆதரவாளர்களும் தங்களது வன்மங்களை எந்தவொரு குற்றவுணர்ச்சியும், குறைந்தபட்ச மனிதாபிமானமும் இன்றிப் பொதுவெளியில் வெளிப்படுத்துகிறபோது, இத்தனை காலமாக எதற்காக திமுகவிற்கு நம்முடைய வாக்கை வீணடித்தோம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

படுகொலைக்குப் பிறகு, ‘அவரே ஒரு ரவுடி’, ‘ஒரு ரவுடி கொல்லப்பட்டிருப்பதை எப்படிச் சட்ட ஒழுங்கு பிரச்சினையாகப் பார்க்க முடியும்’, ‘கட்டப்பஞ்சாயத்துச் செய்பவர்’, ‘பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்’ என அப்படுகொலையை நியாயப்படுத்தும் விதமாக திமுக அனுதாபிகளோடு சேர்ந்துகொண்டு ‘முற்போக்காளர்கள்’ எனக் கருதப்படுபவர்களும் பேசுவது சாதியத்தின் வெளிப்பாடே ஆகும். குறிப்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் 17.07.2024இல் வெளிவந்த ஜூனியர் விகடன் இதழில், “கூலிப்படைகள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதையும், அதில் நிலவும் போட்டிகளால் கொலை வரை செல்வதையும் பார்க்க முடிகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் சாதியோ, அரசியலோ காரணம் அல்ல என்கிறார்கள் காவல்துறையினர். எனவே, கூலிப்படை ஒழிப்பில் காவல்துறை தீவிரமாகச் செயல்பட வேண்டும்.” என்றார். காவல்துறை மீதும், கூட்டணி தர்மத்திற்காக ஆளும் கட்சி மீதும் எந்தவொரு விமர்சனமும் வைக்காமல், அவர்களுடைய வாக்குமூலத்தை உள்ளபடியே ஒப்புக்கொண்டுள்ளார் என்பது தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது. அந்த வகையில் பசுத்தோல் போற்றிய தோழமைகளின் செயற்பாடுகள் கவலையளிக்கிறது. இருந்தபோதிலும் விசாரணை தொடங்குவதற்கு முன் ஆதாரமில்லாமல் கட்டப்பஞ்சாயத்து செய்தவர், ரவுடி, முன்விரோதத்தால் நடந்த படுகொலை என்றெல்லாம் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இம்மாதிரியான ஆதாரமற்ற அவதூறை கடந்த 2009ஆம் ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் வெளியிட்டதற்காக, அவ்விதழின் அன்றைய ஆசிரியர் சுனில் நாயர், பத்திரிகையாளர் செல்வராஜ், வெளியீட்டாளர் நாராயணன் ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடுத்து வெற்றிகண்டவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். அவ்வழக்கில், தற்போதைய பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர், மூத்த வழக்கறிஞர் பி.ஆனந்தன் “எந்தவோர் ஆதாரமும் இல்லாமல் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்த வேண்டும் என்கிற நோக்கத்திலேயே இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது” என வாதிட்டார். இறுதித் தீர்ப்பிலும்கூட நீதிபதி, “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை இழிவுபடுத்த வேண்டும் என்கிற நோக்கத்திலேயே இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது” நிரூபணம் ஆகியுள்ளதாகக் கூறி, மூன்று பேருக்கும் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

ஆதாரமற்ற முறையில், தலித் மக்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் விதமாகப் பொதுவெளியில் தான்தோன்றித்தனமாகப் பேசுவதும்கூட தீண்டாமையின் வெளிப்பாடுதான். இந்நிலையில், இவர்கள்தான் நாளை விடுதலையைப் பெற்றுத் தரப்போகிறவர்கள், இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்தப்போகிறவர்கள் என நம்பினால், நம்மைப் போல பகுத்தறிவற்றவர்கள் வேறு யாருமிருக்க முடியாது. தலித் மக்கள் சுயமாகச் சிந்தித்து விடக்கூடாது, எதிர்த்துக் கேள்விக் கேட்கக் கூடாது என்பதுதான் சாதியச் சமூகத்தின் நோக்கமாக இருக்கிறது. அதற்காகவே அவர்களை ஒருவிதமான பதற்ற மனநிலையிலேயே வைத்திருக்க எண்ணுகிறது. ஆனால், தற்போதைய சூழலில் தலித் மக்கள் தங்களின் தனித்துவத்தை தீவிரமாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் மீண்டும் மீண்டும் அவர்கள் மீது வன்முறையை ஏவிக்கொண்டிருக்கிறார்கள். இதற்காகவே தலித்துகள் ஒன்றிணைய வேண்டிய தேவை எழுகிறது. இதை உணர்ந்து செயல்படும்போது, நிச்சயம் அரசியல் தளத்தில் மாற்றம் நிகழும். அது நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காகவே முற்போக்கு முகமூடி அணிந்தவர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களைப் போன்ற ‘நட்பு சக்திகள்’ மீதும் ஆளும் அரசு மீதும் நம்பிக்கை இல்லாத காரணத்தால்தான் பெகன்ஜி மாயாவதி இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றார். காரணம், அவருடைய கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலைச் செய்யப்பட்டிருக்கிறார். அவரைப் பாதுகாக்கத் தவறிய அரசிடம் அவர் எவ்வாறு நம்பிக்கை வைப்பார். ஆனால், அதைக் கேலி செய்யும் விதமாக திமுகவைச் சேர்ந்த அமைச்சர் துரைமுருகன் வேலூரில் நடந்த கூட்டம் ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையில், “இப்போது சிபிஐ கேட்பது ஃபேஷனாக மாறிவிட்டதுஞ்” என்று பேசியிருக்கிறார். இதுதான் பெரியார் வழியில் அரசியல் செய்வதாகச் சொல்லக்கூடிய திமுகவின் மெய்யான திராவிட மாடலோ என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அரசின் நடவடிக்கை மீது நம்பிக்கை இல்லாததாலும், ஆளுங்கட்சியினரோடு பிற கட்சியினரும் இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக எழும் சந்தேகத்தாலுமே சிபிஐ விசாரணை கோருகிறார்கள்.

‘குட்டி ஸ்காட்லாந்த் யார்டு’ என்று மார்தட்டிக்கொள்ளும் தமிழக காவல்துறை இவ்விசயத்தில் மட்டும் செயல்படாமல் போனது சந்தேகத்தை எழுப்புகிறது. படுகொலை நடந்த இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில்தான் கே-1 செம்பியம் காவல்நிலையம் உள்ளது. மேலும், கொலை நடந்த அன்று (05.07.2024) காலை சுமார் 11:30 மணியளவில் வடசென்னை கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கார்க் கே-1 செம்பியம் காவல்நிலையம், சி-4 அரசு மருத்துவமனை, பெரவள்ளூர் காவல்நிலையம் ஆகிய இடங்களில் பணியாற்றக்கூடிய காவலர்களை வேறு இடங்களுக்குப் பணிக்குச் செல்லுமாறு தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் உண்மை இருக்கும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட காவல் அதிகாரியையும் இக்கொலை வழக்கில் சேர்த்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதோடு அவருக்கு அத்தகைய உத்தரவைப் பிறப்பிக்கச் சொன்னது யார், அவருடைய பின்னணி என்ன என்பன போன்ற தகவல்களும் வெளிவர வேண்டும். அந்தவகையில் அரசிற்கும் அரசின் இயந்திரமாகிய காவல்துறைக்கும் தெரியாமல் இந்த அரசியல் படுகொலை நடந்திருக்கச் சாத்தியமே இல்லை. எனவே, இப்படுகொலையானது கூட்டு அரசியல் சதியால் அரங்கேற்றப்பட்ட படுகொலை என்பதில் சந்தேகமில்லை.

இச்சூழலில், இந்த அரசியல் படுகொலையை மறைப்பதற்காகவே சரணடைந்த குற்றவாளி மீதான காவல்துறையினரின் என்கவுண்டரும் நடந்திருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. இதன் மூலம் காவல்துறையும் அரசும் எதை மறைக்கப் பார்க்கின்றன என்பதும் புலப்படவில்லை. மேலும், கொலை சம்மந்தமான காணொலியைக் காவல்துறையினர் வெளியிட்டிருப்பதன் வாயிலாக, இதற்கு மூளையாகச் செயல்பட்டவர்களைக் காப்பாற்றிவிடுவார்களோ என்கிற அச்சமும் எழாமல் இல்லை. அதனால்கூட திருவேங்கடம் மீதான என்கவுண்டரும் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. காரணம், இக்கொலையின் காரணகர்த்தர்கள் திருவேங்கடத்திடம் மட்டுமே தொடர்புகொண்டிருந்தால், நிச்சயம் இதில் ஈடுப்பட்ட மற்ற குற்றவாளிகளிடமிருந்து நம்பத்தகுந்த மேலதிகமான தகவல்களைப் பெறுவதில் சிரமம் ஏற்படக்கூடும். ஏனெனில், நாளுக்கு நாள் அதிர்ச்சியூட்டும் வகையில் செய்திகள் வருகின்றன. இதற்குப் பின்னால் மிகச்சிக்கலான வலைப்பின்னல் கொண்ட சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதை நம்மால் யூகிக்க முடிகிறது.

இதை இன்னொரு கோணத்திலும் அணுக வேண்டியிருக்கிறது. அதாவது தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் பேராயத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் தலைவராக இருந்தது கிடையாது. அந்த வரலாற்றை முறியடித்து, முதன்முதலாக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலில் நிற்க வைத்து வெற்றிப்பெறச் செய்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். இதுகூட ஆதிக்கத்திற்கு எதிரான சட்டப் போராட்டம்தான். நிச்சயமாக அவ்வெற்றியானது சாதிவெறியர்களின் வெறுப்பிற்கு அவரை ஆளாக்கியிருக்கும். தொடர்ந்து அப்பதவியில் அங்கம் வகித்தவர்களுக்கு இது கௌரவப் பிரச்சினையையும் ஏற்படுத்தியிருக்கக் கூடும். காலங்காலமாகவே தலித்துகள் தங்களுக்குரிய அதிகாரப் பங்கீட்டைக் கேட்கும்போதெல்லாம் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள், உயிரிழப்பைக்கூட சந்தித்திருக்கிறார்கள். இருந்தாலும் அரசியலமைப்புச் சட்டம் வகுத்துக்கொடுத்த அடிப்படை உரிமையைத் தலித்துகள் போராடியே பெற வேண்டும் என்றிருந்த சூழலைச் சிறிது சிறிதாகச் சட்டப்போராட்டத்தின் வழி மாற்றியமைத்த உரிமை மீட்பர் ஆம்ஸ்ட்ராங்.

பொதுவாக, தங்கள் உழைப்பை மட்டுமே நம்பி வாழக்கூடிய பூர்வகுடி மக்கள் மீது பொதுபுத்திக்குள்ள ஒவ்வாமையை அடித்து நொறுக்கியவர் ஆம்ஸ்ட்ராங் என்றால் அது மிகையல்ல. குறிப்பாக, வடசென்னை பகுதியில் தலித் மக்கள் மீது காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட காவல் கொட்டடி சித்திரவதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர். இவருடைய பண்பாட்டு நடவடிக்கைகள் யாவும் அதிகாரத்திடம் கையேந்தி நிற்பதற்குப் பதிலாக அவ்வதிகாரத்தினை நோக்கிக் கேள்வி கேட்பதாக இருந்தது மட்டுமல்லாது,  அதைக் கைப்பற்றுவதாகவும் இருந்தது. தன்னுடைய கட்சித் தொண்டர்கள் தனக்கு மாலை, சால்வை அணிவிப்பதை விரும்பாதவர், எழுதுகோல் (பேனா மாலை) மாலையை அணிவிக்கச் சொல்லி ஆசைப்பட்டார், ஆணையிட்டார்.

அதிகாரத்தை நோக்கிய அவரது செயல்பாடுகளில் மிகவும் கவனிக்கத்தக்கது, பௌத்த தம்மத்தின் முக்கிய கோட்பாடாகிய பஞ்சசீலக் கொள்கையே ஆகும். அவ்வழியிலேயே அவர் அதிகாரத்தை நோக்கிப் பயணப்பட்டார். தம் மக்களையும் பழக்கப்படுத்தினார். புரட்சியாளர் அம்பேத்கர், கன்ஷிராம் போன்ற ஆளுமைகளை முன்னுதாரணமாகக் கொண்டே தன்னுடைய அரசியல் செயற்பாடுகளை அமைத்துக்கொண்டார். தன்னுடைய இளம் வயதிலேயே, யாரிடமும் வேலைக்காக கையேந்தி நிற்கக்கூடாது என்று தொழில் முனைவோராகத் திகழ்ந்தார். ‘டாக்டர் பீம்ராவ் தலித் அசோசியேஷன்’ என்கிற அமைப்பைத் தேற்றுவித்துச் சமூகப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக உள்ளாட்சித் தேர்தலில் டி.பி.சத்திரம் பகுதியின் 99ஆவது வார்டு கவுன்சிலராகச் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து, மாநிலத் தலைவராகவும் உயர்ந்தார். அவ்வழியே தான் சார்ந்திருக்கும் மக்களையும் அரசியல்மயப்படுத்தி, அதிகாரத்தை நோக்கிய பயணத்தில் இணைத்துக்கொண்டார்.

Illustration: Venkat

இதற்கெல்லாம் அடித்தளம் அமைத்துக்கொடுத்தவர் பூவையார் என்கிற பூவை மூர்த்தி. அன்றைக்குச் சென்னையின் அடையாளமாகவும் பூர்வகுடி சென்னைவாழ் மக்களின் காவல் அரணாகவும் இருந்தவர் அவர். கறுப்பர் நகர மக்களின் உழைப்பையும் நிலத்தையும் சுரண்டிய மேட்டுக்குடிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர். தலித் மக்களுக்குத் தன்மானத்தையும் பகுத்தறிவையும் ஊட்டி, அதிகாரத்திடம் மண்டியிடாமல் எதிர்த்து நின்று களமாடக்கூடிய தைரியத்தைக் கொடுத்தவர். அங்கிருந்துதான் வன்முறையைக் கையாளாமலும், அதிகாரத்திடம் மண்டியிடாமலும், அவ்வதிகாரத்தை எளிய மக்களின் நலனுக்காகப் பயன்படுத்துவதைக் கற்றுக்கொள்கிறார் ஆம்ஸ்ட்ராங். அதைச் சாத்தியப்படுத்தவே புரட்சியாளர் அம்பேத்கரின் நூல்களை ஆழ்ந்து வாசித்து, பண்பாட்டுப் புரட்சிக்கான வழிமுறையைக் கண்டடைகிறார். அதற்கு அடிப்படைக் கல்வி முக்கியம் என்பதை உணர்ந்து செயலாற்றினார்.

மேலும், தலித் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான வேலைகளையும் செய்தார். அப்பகுதியில் உள்ள மற்ற சாதி இந்து தொழில்முனைவோருக்கு இணையாக தலித் சமூகத்தினரையும் வலம்வரச் செய்தார். இதனால் ஆதிக்கச் சாதியினரின் வெறுப்பிற்கும் ஆளானார். ஆனாலும், இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தன்னுடைய வேலையை எந்தவொரு சமரசமும் இன்றிச் செய்துவந்திருக்கிறார் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். கூடவே, பௌத்தப் பிரச்சாரங்களையும், இளைஞர்களுக்குச் சமூக, அரசியல் கல்வி பற்றிய விழிப்புணர்வையும் மேற்கொள்கிறார்.

பண்டிதர் அயோத்திதாசர், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோரைத் தொடர்ந்து பௌத்தப் பண்பாட்டிற்குப் புத்துயிர் கொடுத்தவர் சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். தான் வாழும் பகுதியான சென்னை, பெரம்பூரில் தன்னுடைய சொந்த முயற்சியில் நான்கு அடுக்குகளைக் கொண்ட ‘தென்னிந்திய புத்த விஹாரை’ 2018ஆம் ஆண்டு ஜனவரி 15இல் திறந்துவைத்து, தமிழகத்தில் பௌத்த பண்பாட்டை மீளுருவாக்கம் செய்தவர். அதன்மூலம் தலித் மக்களை இந்து மதத் தீண்டாமையிலிருந்து விடுவித்த பெருமைக்குரியவர்.

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட சாதிய மோதலின்போது தலித் மாணவர்களின் சமத்துவப் போராட்டத்திற்கு அரணாக நின்றார். இதன் விளைவாக 23 சட்டக் கல்லூரி மாணவர்கள் மாநிலத்தின் வெவ்வேறு சட்டக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். வழக்கின் இறுதியில் குற்றம் சுமத்தப்பட்ட இருதரப்பு மாணவர்களுக்கும் தண்டம் விதிக்கப்பட்டது. இருபத்து மூன்று லட்சத்திற்கும் மேலான அத்தொகையை எதிர்த்தரப்பு மாணவர்களுக்காகவும் சேர்த்துச் செலுத்தினார். அதோடு மட்டுல்லாது அப்பிரச்சினையில் சம்மந்தப்பட்ட 23 மாணவர்கள் வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டபோது, அவர்களுடைய கல்விக்கான ஒட்டுமொத்த செலவினையும் ஏற்றுக்கொண்டார்.

மேலவளவு படுகொலையின்போது பாதிக்கப்பட்ட தரப்பினர் பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டிருந்த சூழலில், தியாகச் செம்மல் கக்கன் அவர்களது பேரன் சரசுக்குமார், தமிழ்த் தேசியப் போராளி தோழர் ராஜாராமனோடு பயணப்பட்டக் காலத்தில் அவர்மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் நடத்தி, அவர் ஜாமீனில் வெளியே வருவதற்கான பல உதவிகளைச் செய்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். அதன் காரணமாகவே சரசுக்குமார் தன்னுடைய மகனுக்கு ஆம்ஸ்ட்ராங் எனப் பெயர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றிவந்த தூய்மைப் பணியாளர்களின் முன்தேதியிட்ட ஊதிய உயர்வு சம்மந்தமான போராட்டத்தில் கலந்துகொண்டு, முன்தேதியிட்ட நிலுவைத் தொகையான 40 கோடியைச் சம்மந்தப்பட்டவர்களுக்குக் கிடைக்க வழிவகை செய்தவர். தமிழகமெங்கும் உள்ளாட்சித் தேர்தல்களில் தலைவர்கள் பதவிக்கு மட்டுமே இடஓதுக்கீடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், துணைத்தலைவர் பதவிகளுக்கு அவ்விதிமுறை கடைபிடிக்கப்படுவதில்லை. இப்படிப்பட்ட சமூக அநீதியை எதிர்த்து தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சத்தியசந்திரன் மூலமாக, இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் பெயரில் வழக்கு தொடுத்து, அவ்வழக்கிற்கான செலவு முழுவதையும் ஏற்றார். இன்றும் அவ்வழக்கு நிலுவையில் உள்ளது. தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்ற சூழலில் அவ்வழக்கில் வெற்றி கிடைத்தால், அவ்வெற்றி அண்ணன் ஆம்ஸ்ட்ராங்கையே சாரும்.

தருமபுரி நத்தம் கலவர வழக்கு சம்மந்தமாக வாதாடிய வழக்கறிஞர் குழுவிற்கு இரண்டரை லட்சம் ரூபாய் நிதியுதவி கொடுத்தவர். தமிழகத்தையே உலுக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கை முதலில் காவல்துறை திட்டமிட்டே சந்தேகத்திற்குரிய மரணம் என்றே பதிவு செய்தது. அதை மாற்றுவதற்கு உழைத்திட்ட அத்துனை வழக்கறிஞர்களின் போக்குவரத்துச் செலவு உட்பட, ஏனைய செலவுகள் முழுவதையும் ஏற்றுக்கொண்டார். பின்னால், அவ்வழக்கில் வெற்றிப்பெற்று குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைப்பதற்கும் காரணமானவர்.

அதேபோல 2018ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆராயி, அவரது இளைய மகள், மகன் சமையன் ஆகிய மூவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது கொலைவெறி தாக்குதலை அரங்கேற்றிவிட்டுத் தப்பியோடினர் கொலையாளிகள். மூவரும் இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில், சமையன் மட்டும் இறந்துவிடுகிறார். இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் காவல்துறையினர் சுணக்கம் காட்டிய நிலையில், காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாகச் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் குழுவை அனுப்பிக் குற்றவாளியைக் கைது செய்வதற்கு உறுதுணையாக இருந்தார் சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்.

ஓசூர், நந்தீஸ் – சுவாதி ஆணவக் கொலையின்போது, களத்திற்கே சென்று தன்னுடைய கண்டனக் குரலைத் தெரிவித்தார். அவ்வழக்கின் உண்மைத் தன்மையைக் கண்டறியவும் காவல்துறையின் விசாரணை துரிதமாக நடைபெறவும் அன்றைய கர்நாடக மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் என்பவரைச் சந்தித்து கொலையாளிகளைக் கைது செய்வதற்கு அழுத்தம் கொடுத்தார். அதன்பேரிலேயே கர்நாடக காவல்துறை அவ்வழக்கில் சம்மந்தப்பட்டவர்களைக் கைது செய்தது.

2016ஆம் ஆண்டு மார்ச் 13 அன்று பொள்ளாச்சி பேருந்துநிலையத்தில் பட்டப்பகலில் உடுமலைபேட்டை சங்கர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். அவரது இணையரான கௌசல்யா வெட்டுக்காயங்களோடு உயிர் தப்பினார். அவ்வழக்கில் நேர்மையுடனும் மன உறுதியுடனும் செயலாற்றியதற்காக கௌசல்யாவுக்குப் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் நினைவுப் பரிசோடு, இரண்டு இலட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கியவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங்.

புரட்சியாளர் அம்பேத்கர் முன்மொழிந்த முழு விடுதலைக்கான வழியில் சமரசமின்றிப் பயணப்பட்டவர். தன் மக்களையும் அவ்வழியில் அழைத்துச் சென்றவர். தன்னுடைய திருமணத்தை மிகப் பிரமாண்டமாகப் பௌத்த முறையில் நடத்தியவர். ஒவ்வோர் ஆண்டும் புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் தழுவிய தீக்சாபூமிக்குத் தன்னுடைய சொந்தச் செலவில் ஆயிரக்கணக்கான மக்களை அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டு செயல்பட்டார். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சட்டம் பயில்வதற்குக் காரணமாகத் திகழ்ந்தவர். சாதியாலும் பொருளாதாரத்தாலும் ஒடுக்கப்பட்டவர்களுக்குச் சாதி மதப் பேதமின்றித் தொண்டு செய்வதைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாகக் கொண்டு செயல்பட்டிருக்கிறார் என்பதை அவரால் பயனடைந்தவர்கள் வாயிலாக அறிய முடிகிறது.

 இத்தகைய சமூக மாற்றத்திற்கான மாபெரும் புரட்சியைத் தொடர்ந்து எந்தவொரு சமரசமும் எதிர்பார்ப்பும் இன்றிச் செய்துவந்ததன் விளைவாகக்கூட இந்த அரசியல் படுகொலை நடந்திருக்கலாம். தொடர்ந்து தலித் மக்களைப் பௌத்த விழாக்களுக்கு அழைத்துச் சென்றவர். பௌத்த நிகழ்ச்சிகளைத் தன்னுடைய சொந்தச் செலவில் வெகு விமரிசையாக நடத்திக்காட்டியவர். அதோடல்லாமல் சென்னையின் அடையாளமாகவும் திகழ்ந்தவர். இது நிச்சயமாக சனாதனத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு வெறுப்பைத் தூண்டியிருக்கும். இவ்வாறு, திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட அரசியல் படுகொலையைத் திசைத் திருப்பும் நோக்கில் தமிழகக் காவல்துறையும் ஊடகத்துறையும் செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதோடு, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தபோதும் “அப்படியான எச்சரிக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை” என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் குறிப்பிட்டதும், தற்போது அவரைத் தமிழக அரசு பணியிடை மாற்றம் செய்ததும் என முன்னர் குறிப்பிட்ட சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாகவே அரசினுடைய ஒட்டுமொத்த நடவடிக்கைகளும், ஆஸ்ம்ஸ்ட்ராங் அண்ணனின் படுகொலைக்குப் பின்பான மூன்று தினங்களாக அமைந்திருந்தன என்பதைக் களத்தில் இருந்து கவனித்ததன் அடிப்படையில் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

இதனடிப்படையில் திமுக அரசு தலித் விரோத அரசு என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டுதான் இருக்கிறது. கடந்த மாதம் நெல்லையில் நடந்த தலித்தியச் செயற்பாட்டாளர் தீபக் ராஜாவின் சாதியப் படுகொலையும் அதனைத் தொடர்ந்து சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலையும் இதைத்தான் உணர்த்துகின்றன. நாம்தான் அதை உணர மறுக்கிறோம். மேலும், தலித் மக்களுடைய பிரச்சினையின்போது மட்டுமே அதைத் தீர்த்துவைக்க தலித் சமூகத்தைச் சேர்ந்த காவல்துறை உயரதிகாரியை நியமிப்பது என்பது அரசினுடைய சாதிய மனநிலையின் வெளிப்பாடுதானே.

அதை மெய்ப்பிக்கும் வகையிலேயே இராஜீவ் காந்தி அரசு மருத்துவமையில் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட காவலர்களின் ஒருதலைபட்சமான போக்கும் அமைந்திருந்தது. குறிப்பாக, பல காவலர்கள் தங்களின் சீருடைகளில் பதிக்கப்பட்டிருக்கும் பெயரை நீக்கிய நிலையில்தான் பணியில் இருந்தனர். இதற்கிடையில் இரண்டாவது நாளான 06.07.24 அன்று மருத்துவமனையின் முன் அமைதியான முறையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது அராஜகப் போக்கினைக் கையாண்டார்கள். தலித் மக்களின் உரிமைக்கான (வன்முறையற்ற) போராட்டங்களின்போது காவல்துறை தங்களது காக்கி உடைக்கு மாறாக, சாதி உடையை அணிந்துகொள்கிறார்கள். இது தொடர்கதையாகவே நீடித்துக்கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. இத்தகைய செயல்பாடுகள் தலித் மக்கள் மீதான காவல்துறையின் தீண்டாமைப் போக்கினையே காட்டுகிறது. ‘பெரியார் மண்’ என்று சொல்லிக்கொள்கிற தமிழகத்தில் தலித் மக்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை உரிமையைக்கூட நிலைநாட்ட முடியவில்லை என்பதை அறிய முடிகிறது.

நம்மால் அரியணையில் அமர்ந்திருப்பவர்கள், நம்மைத் தொடர்ந்து புறக்கணிக்கிறபோது நாமும் ஏன் அவர்களைப் புறக்கணிக்கக் கூடாது என்கிற மாற்றுச் சிந்தனையைக் கொண்டு செயல்பட்டவர் சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். அவருடைய தந்தை தீவிர பெரியார் பற்றாளராக இருந்திருக்கிறார். ஆனால், அவர் ‘திராவிடத்தால் நாம் வாழ்ந்தோம் என்பதைவிட வீழ்ந்தோம்’ என்பதுதான் வரலாறு என்பதைத் தன் தொண்டர்களுக்கு அடிக்கடி நினைவூட்டியபடியே இருந்திருக்கிறார் என்பதை அவரின் மேடைப் பேச்சுகளின் வாயிலாக அறிய முடிகிறது.

 ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், ஐந்து நாட்கள் கழித்தே முதல்வர் துக்கம் விசாரிக்கச் சென்றார். இது அரசியல் அநாகரிகம். தலித் மக்களின் மீது சாதிய வன்கொடுமைகளும், ஆணவப்படுகொலைகளும் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டிருக்கிற சூழலில், அதைத் தடுப்பதற்கான எந்தவொரு வழிமுறைகளையும் மேற்கொள்ளாத அரசுகளைப் பார்த்துக் கேள்வி கேட்கிற உரிமை இந்தியக் குடியுரிமைப் பெற்ற ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. ஆனால், அதற்குரிய பதிலைக்கூட சொல்ல வக்கில்லாதவர்கள் அம்மக்கள் மீதும் அவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் மீதும் தேவையில்லாத சாயத்தைப் பூசுவதை என்னென்று சொல்வது? இதற்குப் பெயர்தான் திராவிட மாடல் என்றால், நாங்கள் ஏன் அந்தத் திராவிட மாடலை இனிவருங்காலங்களில் புறக்கணிக்கக்கூடாது என்ற கேள்வியைப் பாதிப்பிற்குள்ளாகும் மக்கள் கேட்கத்தான் செய்வார்கள். அதற்கு ஆட்சியாளர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!