தென்னகத்து சாவித்ரிபாய் பூலே: அன்னை வீரம்மாள் (1924 – 2006) – இலஞ்சி அ.கண்ணன்

ந்தியச் சாதியச் சமூகத்தில் பட்டியல் இனத்துப் பெண்கள் மட்டுமல்லாது பார்ப்பன வீட்டுப் பெண்களும் கூட கல்வியறிவு பெற்றுவிடக் கூடாது என்கிற சனாதனச் சூழல் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் பட்டியலினப் பெண்கள் கல்வி கற்பதென்பது சாதாரண விஷயமா! அத்தகைய சூழலில்தான் அன்னை சாவித்ரிபாய் பூலே தனக்கு ஏற்பட்ட அவமானங்களையும் தாங்கிக் கொண்டு நாட்டின் வளர்ச்சிக்குப் பெண்கல்வி மிக முக்கியம் என்பதையறிந்து, பெண்களுக்குக் கல்வியறிவைப் புகட்டியதோடு இந்தியாவின் முதல் பெண்ணாசிரியர் என்கிற புகழையும் பெற்றார். உண்மையில், இவரின் பிறந்த நாளன்றுதான் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சனாதனச் சூழ்ச்சியின் காரணமாக இவ்வரலாறு இருட்டடிப்புச் செய்யப்பட்டிருக்கிறது. இத்தகைய பெருமைக்குரியவரைப் போலவே தென்னகத்திலும் ஒருவர் உண்டென்றால் அது ‘அன்னை வீரம்மாள்‘ தான். அந்தளவிற்கு பெண்கல்வி மீது அதிக கவனம் செலுத்திவந்ததோடு மட்டுமல்லாமல், தான் குடியிருந்த வாடகை வீட்டிலேயே பெண்கள் கல்வி கற்க வசதியும் செய்துகொடுத்து, தன்னுடைய விடாமுயற்சியின் பலனாக நாளடைவில் பெண்கள் பள்ளியையும் ஆரம்பித்தார். 82 வயது வரைக்கும் விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காகவே பாடுபட்டவர், தன் உயிர் உடலைவிட்டு பிரிந்த பிறகும் அது மக்களுக்குப் பயன்படும் வகையில் இருக்க வேண்டுமென எண்ணித் தன் உடல் பாகங்களைத் தானம் செய்யும்படி உயில் எழுதி வைத்தார்.

வீராயி என்ற அன்னை வீரம்மாள் 1924ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி திருச்சியில் வேம்பு – பெரியக்காள் தம்பதியருக்கு ஏழாவது குழந்தையாகப் பிறந்தார். பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் சொன்னது போல ‘ஜப்பானில் சாமுராய் வர்க்கம் தன்னுடைய நாட்டின் மீது அன்பு கொண்டிருந்ததைப் போல நம்முடைய பிராமண வர்க்கம் கொண்டிருக்கவில்லை. சமத்துவத்தின் அடிப்படையில் நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்காக, ஒரு காலத்தில் சாமுராய்கள் கொண்டிருந்த சிறப்புச் சலுகைகளையும் உரிமைகளையும் கைவிட்டார்கள். நம்முடைய பிராமண வர்க்கம் அம்மாதிரியான தியாகத்தை எப்போதாவது செய்வார்கள் என்பதற்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. பிராமணர் அல்லாதோர் வர்க்கமும் அப்படிச் செய்யும் என்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை.’

இப்படிப்பட்ட சூழலில்தான் பட்டியலின அறிவுஜீவிகள், அடித்தட்டு மக்களின் பரிபூரண வளர்ச்சியிலும் முழு விடுதலையிலும்தான் நாட்டினுடைய ஒட்டுமொத்த வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது என்பதை அறிந்து புறக்கணிக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காகவே தங்களுடைய அறிவையும் வாழ்வையும் அர்ப்பணித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் அன்னை வீரம்மாளும் ஒருவர். ஆரம்பகாலக் கல்வியைத் தன்னுடைய வீட்டருகே உள்ள ஆரம்பப் பள்ளியில் படித்துவிட்டு, ஆறாம் வகுப்பில் சேர்வதற்காகத் திருப்பராய்த்துரையில் உள்ள திருச்செந்துறை நடுநிலைப்பள்ளிக்குச் சென்று அப்பள்ளியில் பட்டியலினக் குழந்தைகளைச் சேர்ப்பார்களா இல்லையா என்கிற தகவலைக் கிராம முன்சீப்பிடம் கேட்க, அவரோ இது பிராமணக் குழந்தைகளும் சாதி இந்துக் குழந்தைகளும் மட்டுமே படிக்கக் கூடிய பள்ளி. மேலும், இதுவரை ஒரு பட்டியலினத்துக் குழந்தையைக் கூட இப்பள்ளியில் நாங்கள் சேர்த்துக்கொண்டது கிடையாது. இப்போது உங்கள் பெண்ணைச் சேர்த்துக்கொள்கிறோம். ஆயினும் தனியாகத்தான் உட்கார வைப்பார்கள்; மற்ற பிள்ளைகள் கல்லால் அடித்து விரட்டினாலும் விரட்டுவார்கள்; அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது என்கிறார். இத்தனையையும் கேட்ட ஓர் தந்தை எப்படித் தன் குழந்தையை அந்தப் பள்ளியில் சேர்ப்பார்.

இருப்பினும் வீராயிக்கோ தொடர்ந்து படிக்க வேண்டுமென்கிற ஆர்வம். வீராயி நன்றாகப் படிக்கக் கூடியவர் என்பதால் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ‘ஜீயபுரம்‘ அரசு நடுநிலைப் பள்ளியில் சேர்த்துவிடும்படி ஆரம்பப் பள்ளி ஆசிரியர் மரியபிரகாசம் ஆலோசனை கூற, “ஒரு சிறுபெண் இவ்வளவு தூரம் நடந்துபோய்ப் படிக்க வேண்டாம், பேசாமல் வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்லுங்கள்” என்று வீராயினுடைய அண்ணியும் முட்டுக்கட்டை விதிக்க, அத்தனை தடைகளையும் தாண்டி ஜீயபுரம் நடுநிலைப் பள்ளியில் படித்தார்.

அவரது ஆர்வத்தைக் கண்ட அப்பள்ளி தலைமையாசிரியர், ரிக்கார்டு சீட்டை வாங்கிப் பார்த்து வீராயி என்கிற பெயரை ‘வீரம்மாள்‘ என்று மாற்றினார். இதுதான் வீராயி ‘வீரம்மாள்’ ஆன கதை. வீரம்மாளாக ஆனாலும் சனாதன தர்மம் வகுத்திருந்த நால்வர்ணத்தின் படியும் வீரம்மாளின் மூதாதையர்கள் அந்தச் சனாதன தர்மத்தைக் காலங்காலமாக எதிர்த்து வந்ததனாலேயும் வீரம்மாள் தீண்டத்தகாதப் பிரிவைச் சேர்ந்தவராகிறார். இதனால் ஜீயபுரம் பள்ளியில் அரங்கேறிய சாதியக் கொடுமைகளில் இருந்து அவர் தப்பவில்லை. அவர் மட்டும் வகுப்பறையில் தனியாக அமர வைக்கப்படுகிறார்.

இப்படிப்பட்டச் சூழலில்தான் அன்னை வீரம்மாள் கல்வியே ஆயுதம் என்றெண்ணித் தனக்கேற்பட்ட அவமானங்களைத் தாங்கிக் கொண்டு, தான் கற்கப் போகிற கல்வி, கல்வி மறுக்கப்பட்ட தன்னுடைய சமூகத்திற்குப் பயன்பட வேண்டுமென்கிற எண்ணத்தில் தொடர்ந்து படிப்பில் தன்னுடைய கவனத்தைச் செலுத்தி, ஏழாம் வகுப்பு வரை ஜீயபுரம் நடுநிலைப்பள்ளியில் படித்துவிட்டு, மேற்படிப்பைக் குளித்தலை அரசு உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்தார். அந்தக் காலத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற காரணத்தினால் எட்டாம் வகுப்புப் படிக்கிறபோது அன்னை வீரம்மாளுக்குத் திருமண நிச்சயதாம்பூலம் நடைபெறுகிறது, மூன்று வருடங்கள் கழித்துத்தான் திருமணம் என்கிற ஒப்பந்தத்தின் அடிப்படையில். இதற்கிடையில் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்று திருச்சியில் உள்ள ஹோலி கிராஸ் உயர்நிலைப் பள்ளி PUC படிப்பில் (11ஆம் வகுப்பு) தன்னுடைய தகுதியை நிரூபிக்க ஆயத்தமானார்.

இந்நிலையில்தான், மூன்றாண்டுகளுக்கு முன்னதாக நிச்சயித்த சிலோன்கார மாப்பிள்ளையோடு திருமணமும் முடிந்தது. அதன் பின்னர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தவர், கூடவே குடும்பப் பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டு வீட்டிலுள்ள குழந்தைகள் அனைவரையும் படிக்க வைக்க இரவு பகல் பாராமல் அயராது உழைக்க ஆரம்பித்தார். தன்னுடைய ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடித்த பின்பு 1945 மே மாதம் 10ஆம் நாள் பெண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார்.

 

வானொலி நிலையத்திலிருந்து வேலைக்கான அழைப்பு

ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலையத்தில், ‘யுத்தத்தில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் ரேடியோவில் பேசியிருந்தபடியால், அதே வானொலி நிலையத்திலிருந்து வேலையில் சேரும்படி அழைப்பு வருகிறது. அப்போதுதான் பிரசவமாகியிருந்ததாலும் குடும்பச் சூழல் காரணமாகவும் மூன்று மாதம் கழித்துப் பணியில் சேர்வதாகச் சொல்லிவிட்டார்.

 

ஆதிதிராவிட நலத் தொடக்கப்பள்ளி தொடங்குதல்

ஆசிரியராகி தன் சமூகத்துப் பெண்களுக்கு எப்படியாவது கல்வியறிவைப் புகட்டிட வேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்தவர், தன் கணவரின் சொந்த ஊராகிய அல்லூரில் ஆரம்பப் பள்ளிக்கூடம் இல்லாததாலும் பட்டியலினக் குழந்தைகள் வெகுதொலைவு சென்று படிக்க வேண்டியிருந்ததாலும் நிறைய குழந்தைகளின் கல்வி தடைபடுகிறது எனும் நிலைக் கண்டு வேதனையுற்றார். இந்நிலையை மாற்றத் தீவிர முயற்சி எடுத்து 1943இல் அவ்வூரிலேயே ஆதிதிராவிட நலத் தொடக்கப்பள்ளி ஒன்றை நிறுவினார். இப்பள்ளியானது இன்றும் நடைபெற்று வருகிறது என்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது.

 

நிலையக் கலைஞராகப் பொறுப்பேற்றல்

திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திலிருந்து வேலைக்கான அழைப்பு வந்தபடியே இருந்ததால், தான் விரும்பிய ஆசிரியர் பணியை விட்டுவிட்டு 1945இல் திருச்சி வானொலி நிலையத்தில் ‘நிலைய கலைஞராக’ பணியில் சேர்ந்தார். அங்கும் சாதியக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டதை நினைத்து வேதனை அடைந்தாலும் மனம் தளராமல் ‘Staff Artiste / Drama Voice’ பணியில் திறம்படச் செயல்பட்டு ஈரோடு, கோயம்புத்தூர், சென்னை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் பேசும் மொழி நடையிலேயே பேசி அநேக நாடகங்களில் நடித்துத் தன்னுடைய திறமையை நிலைநாட்டினார்.

 

ஆப்பக்கார அங்காயியாக அன்னை வீரம்மாள்

அன்றைய நாட்களில் கிராமப் பகுதிகளில் வருடக்கணக்கில் தொடர்ந்து ஒளிபரப்பாகிவந்த ‘ஆப்பக்கார அங்காயி’ என்ற நிகழ்ச்சியில் ஆப்பக்கார அங்காயியாக நடித்த வீரம்மாள், மேடை நாடகங்களில் பிரசித்தி பெற்ற டி.கே. சகோதரர்கள், சினிமா நட்சத்திரங்களான ஜெமினி கணேசன், சோ.ராமசாமி, மேஜர் சுந்தரராஜன், மனோரம்மா ஆகியோருடனும் பல ரேடியோ நாடகங்களில் அம்மாவாக நடிக்கலானார். இப்படிப் பல்வேறு பாத்திரங்களை ஏற்றுச் சுமார் 5000 நாடகங்களில் நடித்திருக்கிறார். இவை யாவும் அவரது தனித்திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம் மட்டுமல்ல; சாதியின் காரணமாகப் புறக்கணிக்கப்பட்டதின் வைராக்கியமும்தான்.

 

டாக்டர் அம்பேத்கரைச் சந்தித்து வாழ்த்துப் பெறுதல்

1946இல் மதுரை எட்வர்டு மன்றத்தில் ‘பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு’ சார்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொள்வதற்காகத் தொடர் வண்டியில் வந்த பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரைத் திருச்சி சந்திப்பில் தன் கணவர், சமூக சேவகர் V.வீராச்சாமி ஆகியோருடன் சென்று நேரில் பார்த்து, அந்த மாமேதையின் பாதங்களைத் தொட்டு வணங்கியதோடு தனது 7 மாதப் பெண் குழந்தையைப் புரட்சியாளரின் கரங்களில் ஏந்தச் செய்து வாழ்த்து பெற்றார்.

 

இல்லற வாழ்வைத் துறத்தல்

திருமணமான ஓரிரு மாதங்களிலேயே தன்னுடைய கணவருக்கு வேறொரு பெண்ணிடம் பழக்கம் இருக்கிறது என்பதைத் தன்னுடைய மாமனாரின் மூலமாக அறிந்த பின்னும், அவரை மனமாற்றம் செய்துவிடலாம் என்றெண்ணி தன்னம்பிக்கையோடு இருந்தபோது, அவரது கணவர் மீண்டும் வேறொரு பெண்ணோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இதனிடையே கணவரின் அறிவுறுத்தலின் பேரில் இரண்டாவது பிரசவத்திற்காக ஒன்றரை மாதம் விடுப்பு எடுத்துத் தன்னுடைய தாய் வீட்டிற்குப் போனார். அங்கு 1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய கணவர் தன்னையும் குழந்தையையும் காண வருவார் என்றெண்ணிய வீரம்மாளைக் காண வராமல் நிராகரித்தார் அவரது கணவர். இதனால் மனமுடைந்து தனது 24ஆவது அகவையில் கணவன் உயிரோடு இருந்தும் தனது இல்லற வாழ்வைத் துறந்தார்.

 

நாகம்மையார் மாணவிகள் விடுதி

வானொலி நிலையக் கலைஞர் வேலையில் ஈடுபட்டுக்கொண்டே ஓய்வு நேரத்தில் பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காகக் கிராமம் கிராமமாகச் சென்று சமூக சேவை செய்ய வேண்டுமென்றும், மற்ற சமுதாய ஏழைப் பெண் குழந்தைகள் நலனுக்காகவும் பாடுபட வேண்டுமென்றும் மனதில் உறுதி கொண்டவர் பெண்ணடிமை ஒழிய வேண்டும் என்ற எண்ணத்தில் பாடுபட்டுக்கொண்டிருந்த ஈ.வெ.ரா. பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டார். பெண் குழந்தைகள் ஐந்து வயதுக்கு மேல் படிப்பைத் தொடர முடியாத நிலையைக் கண்டு மனம் வருந்தி, பெண் குழந்தைகள் தங்கிப் படிக்கத்தக்கதோர் விடுதியைத் தொடங்க வேண்டுமென எண்ணித் தந்தைப் பெரியாரின் மீதுள்ள பற்றின் காரணமாக அவரது மனைவி பெயரிலே ‘நாகம்மையார் மாணவிகள் விடுதி‘ யைத் தொடங்கினார். பல கிராமங்களில் உள்ள ஊர்த் தலைவர்கள் கிராமப் பொது நிதியிலிருந்து விடுதிக்காக உதவி புரிந்தனர். மேலும் அவரது வீட்டிலே ஐந்து ஏழைப்பெண்கள் தங்கி உயர்நிலைப் பள்ளியில் பயின்றும் வந்துள்ளனர். இதைக் கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அன்னை வீரம்மாளை அழைத்து, “ஆதிதிராவிட பெண் குழந்தைகளுக்காக மாணவிகள் விடுதி ஒன்றை அரசாங்கத்தின் செலவில் ஆரம்பிக்கப் போகிறோம். அதில் நீங்களும் ஆலோசனைக் கமிட்டி உறுப்பினராக இருங்கள்” என்று கூறியதால் மகிழ்ச்சியடைந்தவர், வெகு தூரத்திலுள்ள கிராமங்களிலிருந்து ஏழை மாணவிகளை அழைத்து வந்து, அரசு மாணவிகள் விடுதியில் சேர்த்துவிடுவதில் கூடுதல் ஆர்வம் கொண்டு செயல்படத் தொடங்கினார்.

அச்சமயம் இந்திய வானொலி நிலையத்தில் அறிவிப்பாளராக உத்தியோகம் பார்த்துவந்த சமூக சேவகர் வே.வீராச்சாமி அவரது உத்தியோகத்தை ராஜினாமா செய்த விட்டு முழு நேர சமூக சேவையில் ஈடுபடலானார். அப்போது தொண்டு என்கிற சமூகப் பத்திரிகையைத் தொடங்கினார். அதில் துணை ஆசிரியராக இருந்த றி.கருணாகரனோடு இணைந்து அட்டவணைப் படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக விழிப்பூட்டும் வகையில் நிறைய எழுதியும் இருக்கிறார். மாதமிருமுறை என 15 ஆண்டுகள் வெளிவந்த இந்தப் பத்திரிகைக்கு, ‘இல்லற வாழ்க்கையில் கணவனின் கடமைகள், மனைவியின் கடமைகள்’, ‘குழந்தை வளர்ப்பு’, ‘தாழ்த்தப்பட்ட பெண்களின் முன்னேற்றம்’, ‘அறியாமை மூட நம்பிக்கைகள்’, ‘பெண் உரிமை’, ‘பெண் கல்வி’, ‘பெண் சக்தி’ போன்ற தலைப்புகளில் கட்டுரைகளை எழுதிக் கொடுத்திருக்கிறார் அன்னை வீரம்மாள்.

பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட அன்னை வீரம்மாள், பெரியார் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற ‘கம்யூனல் ஜி.ஓ’ மாநாட்டில் பெண்கள் தொண்டர் படைத் தலைவியாகப் பெரியாரால் நியமிக்கப்பட்டார்.

 

தமிழ்நாடு ஷெட்யூல்டு வகுப்புப் பெண்கள் நலச் சங்கம் தொடங்குதல்

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் படிப்பறிவுள்ள ’ஷெட்யூல்டு வகுப்புப் பெண்களின்’ விலாசங்களைக் கண்டுபிடித்துக் கடிதம் எழுதி வரவழைத்து, திக்கற்ற குழந்தைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள் மற்றும் ஏழை எளிய பெண்கள் யாவரும் பயனடையும் வகையில் 1954ஆம் ஆண்டு “தமிழ்நாடு ஷெட்யூல்டு வகுப்புப் பெண்கள் நலச் சங்கம்” என்கிற அமைப்பை ஏற்படுத்தினார்.

1954ஆம் ஆண்டு மே 9ஆம் நாள் நீலாம்பாள் தலைமையில் உறையூர் வார்னர்ஸ் பங்களாவாகிய ருக்மணி கருணாகரன் இல்லத்தில் சங்க அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. பல மாவட்டங்களிலிருந்தும் பெண்கள் திரளாக வந்து கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது இந்தச் சங்கம் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தது அல்ல, சங்கத்தின் உறுப்பினர்கள் ஒரு ரூபாய் ஆண்டுச் சந்தா செலுத்தி, இரவுப் பள்ளி அமைத்து, முதியோர் கல்வி வகுப்புகள் தொடங்கிப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவது, மக்களிடையே சமூகக் கல்விப் பற்றி பிரச்சாரம் செய்வது என்பன போன்ற பல தீர்மானங்களை அக்கூட்டத்தில் நிறைவேற்றினார். சங்கத்தின் முதல் தலைவராக தனம் சிவஞானமும் செயலாளராக திருமதி V.வீரம்மாளும் பொருளாளராக S.முத்துமணியும் நியமிக்கப்பட்டுத் தொடர்ந்து செயல்பட்டனர்.

அன்னை வீரம்மாளின் பெருமுயற்சியால் அப்போதைய திருச்சி மாவட்ட கலெக்டர் திரு.ஆர்.எஸ். மலையப்பன் தலைமையிலும் தமிழ்நாடு மாநில முதலமைச்சர் திரு.கே.காமராசர் முன்னிலையிலும் ‘தமிழ்நாடு செட்யூல்டு வகுப்புப் பெண்கள் நலச் சங்க’த்தின் துவக்க விழா வெகுசிறப்பாக நடைபெற்றிருக்கிறது. மேலும் இவ்விழாவில் அப்போதைய மத்திய அரசின் உதவி சுகாதார அமைச்சர் திருமதி.மரகதம் சந்திரசேகர் குத்துவிளக்கு ஏற்றி, சங்கத்தின் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்துத் துவக்க உரையாற்றினார். அன்று ஒரு திண்ணையில் வாடகை வீட்டில் தொடங்கப்பட்ட சங்கம் காலப்போக்கில் 4 லு ஏக்கர் பரப்பளவில் 19 சமூக நல ஸ்தாபனங்களையும் உள்ளடக்கி விரிவடையத் தொடங்கியது.

பின்னர் இச்சங்கம் 1956ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் நாள் சாதி, மத, இன வேறுபாடின்றி, அனைத்து ஏழை, எளிய மக்கள், பெண்கள், குழந்தைகள் நலனுக்காகப் பாடுபடுவது என முடிவு செய்து, பதிவு அலுவலகத்தில் ’சொசைட்டி சட்டத்திட்டத்தின் படி’ முறையாகப் பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக அனைத்துச் சமூகப் பெண்களும் பயனடைந்தனர்.

1958ஆம் ஆண்டு திருச்சியில் ‘பெண்கள் பாதுகாப்பு இல்லம்’ ஒன்றைத் தொடங்கி தவறான வழிகளில் செல்லும் பெண்கள், சாலையில் விருப்பம் போல் திரியும் பெண்கள் ஆகியோரை அரவணைத்து மேற்படி இல்லத்தில் சில ஆண்டுகள் தங்க வைத்து, அறிவுரை கூறி, மனம் திருந்திய பிறகு விடுதலைச் செய்யப்பட்டனர். இத்தகைய பாதுகாப்பு இல்லத்தை அன்றைய திருச்சி மாவட்ட கலெக்டர் ஆர்.எஸ்.மலையப்பன் தலைமையில் அன்றைய தமிழ்நாடு மாநில முதலமைச்சர் திரு.பக்தவத்சலம் திறந்து வைத்தார்.

 

இலவசப் பாலர் பள்ளி திறத்தல்

மிகவும் பிற்போக்கான நிலையில் கல்வியறிவு பெறாமல் சுற்றித்திரிந்த குழந்தைகளுக்கு அறிவைப் புகட்ட வேண்டும் என்ற எண்ணத்தில், தான் குடியிருந்த வாடகை வீட்டிலேயே 1956ஆம் ஆண்டு ஓர் இலவச பாலர் பள்ளியைத் தொடங்கினார். அப்பள்ளியில் குழந்தைகள் ஆர்வமுடன் வந்து படிப்பதற்காக அவர்களுக்குச் சுண்டல், பிஸ்கட், பொட்டுக் கடலை போன்ற தின்பண்டங்களைக் கொடுத்து அதன் மூலம் குழந்தைகளின் ஆர்வத்தை அதிகரித்துக் குழந்தைகளுக்குத் தேவையான புத்தகம், சிலேட், பென்சில் போன்றவற்றை வாங்கிக் கொடுத்து அவர்களைப் பராமரித்தும் வந்தார். இந்தப் பாலர் பள்ளியில் கௌரவ ஆசிரியராகவும் ஆயாவாகவும் 16 ஆண்டுகாலம் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால், அந்தப் பகுதில் உள்ள மக்களும் குழந்தைகளும் வீரம்மாள் தொடங்கிய அந்தப் பள்ளியை “வீரம்மா ஸ்கூல், வீரம்மா ஸ்கூல்” என்றழைத்தனர்.

 

பெண்கள் குழந்தைகளுக்கான அவ்வை நூல் நிலையம்

1956 ஜனவரி 26ஆம் நாள் ‘அவ்வை நூல் நிலையம்‘ எனும் பெண்கள், குழந்தைகளுக்கான இலவச நூல் நிலையத்தைச் சங்கத்தின் சார்பில் தொடங்கினார். இந்த நூலகத்திற்கு அன்பளிப்பாகப் புத்தகங்கள் கேட்டு, எழுத்தாளர்களுக்கும் நூல் பதிப்பாளர்களுக்கும் சளைக்காமல் தொடர்ந்து கடிதம் எழுதி, அதன்மூலம் பல நூல்களைப் பெற்றிருக்கிறார். மேலும் சங்கத்தின் சார்பில் அன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளி, புலவர் து.தேவராசன் தொடக்கப் பள்ளி, இரவு பள்ளி (முதியோர் கல்வி வகுப்பு), குழந்தைகள் பொழுதுபோக்கு மன்றம், கைக்குத்தல் அரிசி மையம், இலவசக் குழந்தைகள் காப்பகம் (6 யூனிட் – 150 குழந்தைகள்), குடும்ப நலப்பணி மையம், கரவை மாடு வழங்கும் யூனிட், ஏழை குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கும் மையம், சிறிய மருத்துவமனை, பணிபுரியும் பெண்கள் விடுதி, இலவச முதியோர் இல்லம், அம்பர் சர்க்கா யூனிட், அகர் பத்தி யூனிட், உடல் ஊனமுற்ற குழந்தைகள் இல்லம் ஆகியவை ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன. ஆனால், இதில் ஆரம்பக் காலத்தில் தொடங்கிய முதியோர் கல்வி வகுப்பு, கைக்குத்தல் அரிசி, கல்சக்தி மையம், குழந்தைகள் பொழுதுபோக்கு மன்றம், கரவை மாடு வழங்கும் யூனிட் ஆகியவைகள் மட்டும் பொருளாதார நெருக்கடியால் தொடர்ந்து செயல்படாமல் நிறுத்தப்பட்டன. மற்றவை யாவும் தொடர்ந்து இயங்கின. இதுபோகப் பெண்களுக்குத் தையல் தட்டச்சுப் பயிற்சி நிலையங்களையும் தோற்றுவித்துப் பயிற்சியும் அளித்திருக்கிறார்.

தமிழ்நாடு ஷெடியூல்டு வகுப்புப் பெண்கள் நலச்சங்கம்‘ சிறப்பாக நடைபெற்று வந்தாலும் ஒரு கட்டத்தில் இச்சங்கம் அனைத்துச் சமுதாயப் பெண்களுக்கும் சாதிப் பாகுபாடின்றி உதவி புரிந்துவந்ததால் ‘ஷெடியூல்டு’ என்ற வார்த்தையை மட்டும் நீக்கிவிட்டு 1970இல் கொஞ்சம் படித்துள்ள எல்லாப் பெண்களையும் உறுப்பினராகச் சேர்த்து ‘தமிழ்நாடு பெண்கள் நலச் சங்கம்‘ என்கிற பெயரில் மீண்டும் பதிவு செய்யப்பட்டுத் தொடர்ந்து செயல்பட்டு வந்தது.

 

தந்தை பெரியாரோடு முரண்பாடு கொள்ளுதல்

16 ஆண்டு காலம் பெரியார் பாசறையில் வளர்ந்தவர். தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, கலப்புத் திருமணங்கள் பற்றி ஞாயிற்றுக் கிழமைகளில் பகல் முழுதும் பெரியார் மாளிகையில் தங்கி பெரியாரிடம் பல கேள்விகள் கேட்டுத் தன்னுடைய பகுத்தறிவை மேலும் செம்மைப் படுத்தி இருக்கின்றார். மேலும் அடிமட்டத்தில் இருக்கக்கூடிய ஷெட்யூல்டு வகுப்பினருக்கு அரச உத்தியோகங்களில் 16% சலுகை கொடுத்ததற்கு “அரிசனங்களுக்குத்தான் இப்ப நல்ல காலம், அவங்களுக்குத்தான் இப்ப காலமாகப் போச்சு….” (1954ஆம் ஆண்டுகளில்) என்று பெரியார் பொதுக்கூட்டங்களில் பேசியதைச் சுட்டிக்காட்டி, “நீங்களே இவ்வாறு பேசலாமா ஐயா” என்ற கேள்வியை எழுப்பினார். இதற்குப் பெரியார் சொன்ன விளக்கம் அன்னை வீரம்மாளுக்குத் திருப்தியளிக்கவில்லை.

இதோடு மட்டுமல்லாது, “சாதி ஒழிய நிறைய கலப்புத் திருமணங்கள் நடக்க நீங்கள் தீவிர முயற்சி எடுக்கக் கூடாதா? ஷெட்யூல்டு வகுப்பில் நிறைய படித்த, உத்தியோகத்தில் இருக்கும் ஆண்களுக்குத் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களாவது பெண் கொடுக்க முன்வந்தால் அப்படிப்பட்ட கலப்புத் திருமணங்களில், திராவிட கழக வளர்ச்சி நிதிக்காகப் பணம் வாங்காமல் நான் கலந்துகொண்டு தலைமை வகித்து நடத்திச் சிறப்புச் செய்வேன் என்று பத்திரிகையில் ஒரு அறிக்கை விடக் கூடாதா” என்கிற கேள்வியையும் தந்தை பெரியாரிடத்தில் கேட்க, அக்கேள்விக்கும் பெரியாரின் பதில் திருப்தியளிக்காத காரணத்தால் பெரியாரோடு முரண் கொண்டார்.

 

அன்னை ஆசிரமம் ஆரம்பித்தல்

பெற்றோர் இல்லாத திக்கற்ற பெண் குழந்தைகளுக்கான ஒரு இல்லம் ஆரம்பித்து அக்குழந்தைகளை அன்புடன் பராமரித்துப் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அன்னை ஆசிரமம் என்ற ஒன்றை ஆரம்பித்தார். தாய், தகப்பன் இருவருமே இல்லாத பெண் குழந்தைகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்களின் குழந்தைகள் என சுமார் 25 பேரைத் தேர்ந்தெடுத்து 1976 ஜுன் 2இல் ‘அன்னை ஆசிரமம்’ தொடங்கினார். அதற்கு மத்திய, மாநில அரசுகளின் எந்தவோர் உதவியும் கிடைக்கப் பெறாததால் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதில் பொருளாதார ரீதியாக மன உளைச்சலுக்கு ஆளானார்.

பின்னர் 1978ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு மத்திய அரசு மானிய உதவி வழங்கியிருக்கிறது. சங்கத்தின் வெள்ளி விழா கொண்டாடுவதற்கு முன்பு மேலும் 25 குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து ஆசிரமமும் விரிவுபடுத்தப்பட்டது. மொத்தம் 150 குழந்தைகள் ஆசிரமத்தில் தங்கிப் பயன்பெற்றுவந்துள்ளனர்.

 

அன்னை ஆசிரமம் பிரஸ் தொடங்குதல்

திக்கற்ற குழந்தைகள் இல்லத்தை 4 வாடகை வீடுகளில் நடத்திக்கொண்டே அதில் பயின்ற 25 ஏழைப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதற்காக, அச்சகம் மற்றும் புக் பைண்டிங் தொடங்கலாம் எனத் திட்டமிட்டு அதற்குரிய இயந்திரங்கள் அனைத்தையும் வாங்குவதற்காக மத்திய சமூக நல வாரியத்தின் உதவியை நாடினார். அதற்கு மத்திய அரசும் மானியம் வழங்கி உதவி புரிந்தது. புதிதாகக் கட்டிய வெள்ளிவிழா கட்டடத்திற்கு “Gopaldas Jewellers Block” என்று பெயர் சூட்டி, அக்கட்டடத்திலேயே ‘அன்னை ஆசிரமம் அச்சகத்தை’ ஆரம்பித்தார். மேற்கண்ட பணிகள் யாவும் திருச்சி வானொலி நிலையத்தில் 40 ஆண்டுகாலப் பணியில் இருந்துகொண்டே செய்தவை. பின்னர் 1984இல் திருச்சி வானொலி நிலையத்திலிருந்து ஓய்வு பெற்றார். பட்டியலினத்தவர் முன்னேற்றத்திற்காகத் தமிழ்நாடு முழுவதும் அரும்பாடுபட்டுவந்த அகில இந்திய அம்பேத்கர் மிஷன், 1980இல் அன்னை வீரம்மாளின் 55ஆவது பிறந்தநாளை யட்டி ‘நற்பணி நாயகி அன்னை வீரம்மாள்’ என்கிற பட்டத்தையும் வெள்ளிப் பதக்கத்தையும் வழங்கி கௌரவித்தது.

 

அன்னை மகளிர் பள்ளி தொடங்குதல்

அன்னை ஆசிரமத்தில் கல்வி பெற்ற திக்கற்ற பெண் குழந்தைகள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனால் எப்பாடுபட்டாவது ஆசிரமத்திற்கு அருகிலேயே ஓர் அன்னை மகளிர் உயர்நிலைப் பள்ளியை ஆரம்பிக்க வேண்டுமென்று எண்ணி 1984இல் ஜூன் மாதம் முதல் வாரத்தில் ‘அன்னை மகளிர் பள்ளி’யைத் தொடங்கினார். அப்பள்ளிக்கு அரசு அனுமதியும் கிடைத்து. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை. பின்னர் 1990 – 1991ஆம் கல்வி ஆண்டில் அப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக அரசு அங்கீகாரமும் கிடைத்துத் தரம் உயர்ந்தது.

 

நீதிமன்ற தலைவராக நியமிக்கப்படுதல்

அன்னை வீரம்மாளின் சமூகச் சேவைகளைப் பாராட்டி, அன்றைய தமிழக அரசு ‘திருச்சி ஜூனைல் நீதிமன்றத்தில் முதல் வகுப்பு மாஜிஸ்ட்ரேட்டராகவும், நீதிமன்ற தலைவராகவும் நியமித்துக் கௌரவித்ததும் நினைவுக்கூரத் தக்கது. மேலும் பல்வேறு அமைப்புகளில் ஆலோசனைக்குழு உறுப்பினர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் அரசும், அரசு சாரா நிறுவனங்களும் நியமித்துக் கௌரவித்தன.

 

தேடி வந்த விருதுகள்

தன்நலன் மறந்து பொதுநலன் கருதியே செயல்பட்டதால், 1983இல் அகில இந்தியத் தொழில் வர்த்தக சம்மேளம் ‘Outstanding Woman Social Worker’ என்று பெருமைப்படுத்தி பதினோறாயிரம் ரொக்கப்பணமும் வழங்கி கௌரவித்தது. மேலும், 1993 மார்ச் 03 அன்று குழந்தைகள் நலச் சேவைக்காகத் தேசிய விருதுடன் முப்பதாயிரம் ரூபாய் பணமுடிப்பாக மத்திய அரசு வழங்கியது. அதே ஆண்டில் ‘வாஷேஷரன் தேவி பாட்டியா’ நினைவு விருதுடன் 25,000 ஆயிரம் ரூபாய் பணமுடிப்பும் வழங்கி கௌரவித்தது.

 

மது ஒழிப்புப் போராட்டத்தில் பங்கு பெறுதல்

1990ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சியில் மலிவு விலையில் மது விற்பனை செய்ய அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து அன்னை வீரம்மாள், தமிழ்நாடு பெண்கள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் சங்கத்தினர் உள்பட ஆயிரக்கணக்கான பெண்களோடு திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்திற்கு அருகிலுள்ள ‘மெயின்கார்டு கேட்’ மெயின் ரோட்டில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அன்றைய ஆளும் கட்சியினரின் கொலை மிரட்டலுக்கும் ஆளாகினர். இருந்தபோதும் அந்தச் சில்வண்டுகளின் அச்சுறுத்தல்களுக்குச் சிறிதும் அஞ்சாமல், 1990 மே 14 அன்று காலையில் பேரணி முடித்து, மாலையில் மாநாடு நடைபெறுவதாக இருந்ததால் அதில் தன்னுடைய கவனத்தைச் செலுத்தினார். அன்றைய பொழுதில் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சுமார் 5000 பெண்கள் வந்திருந்தனர். அன்னை வீரம்மாள் தலைமையில் சர்வோதய தலைவி பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் மாநாட்டைத் துவக்கி வைத்தார். அம்மாநாட்டில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அன்றைய திமுக அரசு பல்வேறு இடையூறுகள் செய்து தடை விதித்திருந்தாலும் அம்மாநாட்டைச் சிறப்பாக நடத்தி முடித்துக் காட்டினார் அன்னை வீரம்மாள். இத்தகைய நெஞ்சுறுதி கொண்டதனாலேயும் பெண் கல்விக்காக இறுதிவரை விடாது போராடி பற்பல சாதனைகளைப் புரிந்துள்ளதனாலும் இவரை நாம் தென்னகத்துச் ‘சாவித்ரிபாய் பூலே’ என்றழைப்பது ஒன்றும் மிகையாகாது. இத்தகு பெருமைகளுக்குரிய அன்னை வீரம்மாள் தன்னுடைய 82ஆம் அகவையில் (24 செப்டம்பர் 2006ஆம் ஆண்டு) இன்னுயிர் நீர்த்தார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!