பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு.ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதி மாலை அவரது இல்லத்தின் வாசலிலேயே கொடூரமாகக் கொல்லப்பட்ட நிகழ்வு தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு நீங்கா வடு. சாதி இந்து குடும்பங்களில் அரசியல் வாரிசுகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால், ஒரேயொரு தலித் தலைவர் கூட தனது குடும்பப் பாரம்பரியம் அல்லது பெருமைகளில் இருந்து உருவானவராக இருக்க முடிவதில்லை. அரசியல் பின்னணி கொண்ட குடும்பங்களாக இருந்தால் கூட தனிப்பட்ட ஆளுமை, உழைப்பு இல்லாமல் இங்கு தலித்துகளில் தலைவர்கள் உருவாக முடிவதில்லை.
ஆம்ஸ்ட்ராங் எனும் அரசியல் ஆளுமை வீழ்த்தப்பட்ட இந்த நேரத்தில் நாம் அதைத்தான் நினைவுகூர வேண்டியிருக்கிறது. அவரது படுகொலை ஒரு தனிமனிதனின் மறைவோ அல்லது ஒரு குடும்பத்தினரின் இழப்போ அல்ல, நூறாண்டுகளுக்கும் மேல் இங்கு போராடி, தொடர்ந்து தன்னை உயிர்ப்பித்துக்கொள்கிற கோட்பாட்டின் மீது நடத்தப்பட்ட யுத்தம். போர்க் குணத்தோடு சதைகளாலும் நரம்புகளாலும் பின்னப்பட்ட ஒரு வரலாற்றுச் சங்கிலியைத் அறுத்தெறிந்துவிட்டோம் என சாதி இந்து அதிகாரம் அவ்வப்போது இளைப்பாறுவதைப் போல, ஆம்ஸ்ட்ராங் மரணத்திலும் சற்று ஆசுவாசப்பட்டிருக்கிறது.
இந்திய சமூக – அரசியல் வரலாற்றில், ஓர் அரசியல் இயக்கமோ தனிநபரோ குறிப்பிட்ட காலத்தில் செல்வாக்கு பெற்றிருப்பதும், பின்பு வீழ்வதும், மீண்டு எழுவதும் இயல்பு. அவை பெரும்பாலும் தனிமனிதரின் ஆற்றல் சம்மந்தப்பட்டது. ஆனால், ஒவ்வொரு தலித்தின் வீழ்ச்சிக்குப் பின்பும் துரோகமும் வஞ்சகமும் மட்டுமே காரணமாக இருக்கிறது. சாதி இந்து சமூகத்தின் பொதுவான மதிப்பீட்டிலிருந்து இதை நிறுவ வேண்டியதில்லை. தேசியத் தலைவர்கள் தொடங்கி வட்டாரத் தலைவர்கள் வரை அதிகாரத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழும்போது வீழ்த்தப்படுகிறார்கள். ‘பொது’ என்றறியப்படுகிற அதிகாரத்திற்கு மாற்றாகத் தலித்துகள் தலைதூக்கும்போது கண்ணுக்குப் புலப்படாத சக்திகள் திரண்டுவந்து அவ்வெழுச்சியை வீழ்த்த எண்ணுகிறது. அந்தச் சக்திகளிடையே ஆயிரம் முரண் இருந்தாலும் ஒரேபோல சிந்திக்கக்கூடியவர்களாக, செயல்படக்கூடியவர்களாக மாறி தலித்துகளை வீழ்த்த ஒன்றிணைகிறார்கள். எந்தப் புள்ளியில் இது நிகழ்கிறது என்பதில்தான் தலித்துகளின் அதிகார எல்லையை வரையறுக்கும் சாதியச் சமூகத்தின் சூட்சமும் இருக்கிறது.
திரு.ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பிணவறையைச் சேருவதற்கு முன்பே அவர் பழிக்குப் பழியாகக் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டார் என்று நிறுவத் தொடங்கிவிட்டது அதிகார வர்க்கம். சமூகவலைதளம், ஊடகம், அரசியல் என சாதி இந்து அதிகாரம் நிரம்பிக் கிடக்கும் இந்தப் பெரும்பான்மைக்கு மத்தியில் அறத்தை நம்பும் ஜனநாயகவாதிகளும் தலித்துகளும் இந்த வாதத்தை எதிர்த்துச் சமர் செய்ததின் விளைவாய், இதுவரை பதினேழுக்கும் மேற்பட்டோரைக் கைது செய்திருக்கிறது காவல்துறை. இந்த விசாரணையின் இறுதியில் கொலையாளிகளை ஏவிவிட்டது ஒற்றை நபரா, ஒற்றை நோக்கமா, உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்படுவார்களா என்பது கேள்விக்குறி! இப்படுகொலையில் ஈடுபட்ட சிலரை நீதிக்கு முன் நிறுத்தக்கூடும். ஆனால், கொலை நிகழ்த்தப்பட்ட நோக்கத்தை நாம் எந்தக் குற்றவாளி கூண்டிலும் ஏற்ற முடியாது என்பதே நிதர்சனம்.
சமூகமெங்கும் பரவிக் கிடக்கும் சாதியின் தோற்றத்தை அம்பலமாக்க வேண்டுமானால் பொதுச் சமூகம் நிர்ணயித்திருக்கிற எல்லைக்கோடுகளைத் தலித்துகள் கடந்தாக வேண்டும். ஒரு தலித் தன் வாழ்நாள் முழுக்கச் சாதியின் தோற்றத்தைக் காணாமலேயே இறந்து போயிருப்பாரேயானால் அவர் சாதியற்ற சமூகத்தில் வாழ்ந்ததாகவோ, எங்கும் தூய நல்லுள்ளங்கள் நிரம்ப வாழ்ந்திருக்கிறார் என்றோ பொருளல்ல. அவர் பொதுச் சமூகம் கிழித்த எந்தக் கோட்டையும் தாண்டாமல் வாழ்ந்து மரித்திருக்கிறார் என்றே பொருள். அதைக் கடக்கும்போது மட்டுமே ஒருவரால் சாதியின் கோரத்தைக் கண்டுணர முடியும். அப்படியோர் எல்லையைக் கடக்கும் போரில்தான் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீழ்த்தப்பட்டிருக்கிறார். தலித் அரசியல் பயணத்தில் இத்தகைய இழப்பினால் முடங்கிவிடாமல் அதை ஆற்றலாக வென்றெடுக்க வேண்டிய தேவை நமக்கிருக்கிறது. தலித்துகள் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான உரிமையை வென்றெடுப்பதே இதற்குத் தீர்வு.
ஒரு தலித் தலைமையை யாரும் உருவாக்க முடியாது, வேறொருவரைக் கைநீட்டி இனி இவர்தான் உங்கள் தலைவர் என அடையாளம் காட்டவும் முடியாது. அது தன்னெழுச்சியாக மக்களின் உளவியல் உத்வேகத்திலிருந்து அடையாளம் கொள்ளப்படுகிறது. அப்படி உருவானவொரு தலைவர் இன்று இல்லாமல் போயிருக்கிறார். இதை அத்தனை சாதாரணமாக நாம் கடந்து போய் விடக்கூடாது. இத்தகைய படிப்பினைகளிலிருந்து நம் தத்துவத்தை உரமேற்றிக்கொள்ள வேண்டும்.
இலட்சக்கணக்கான புத்தர் தலைகள் வெட்டப்பட்டு இம்மண்ணில் வீழ்த்தப்பட்டிருக்கின்றன. ஆனால், புத்தரின் தத்துவத்தை அவர்களால் வீழ்த்த முடிந்ததில்லை. வெட்டப்பட்ட ஒவ்வொரு தலையும் முளைத்தெழுந்து மீண்டும் வரலாற்றோடு பின்னிப் பிணைந்துகொள்ளட்டும். தலித்துகளும் தலித் அரசியலும் திரு.ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தால் நெஞ்சிலேந்த வேண்டியது ஒன்றே ஒன்றுதான், புறக்கணிப்புக்கு உள்ளானதைப் போலவோ அழிந்தே போனதாகவோ சித்திரித்தாலும், தலித்துகளும் தலித் அரசியலும் மட்டுமே இம்மண்ணின் மையம்.
ஜெய் பீம்.