இந்திய இலக்கிய வகைமைகளில் தன்வரலாறுகளுக்குத் தனி இடமுண்டு. தனது வாழ்வைத் தானே எழுதிப் பார்ப்பதன் வழியாகச் சொல்லப்படும் விஷயங்கள், எழுதியவருக்கு நிறைவைத் தரும் என்பது பொதுவாகச் சொல்லப்பட்டாலும் சமூகத்தின் இயங்கியலில் அவை பண்பாட்டு மறு உற்பத்திக்கான கச்சாப்பொருளாக இருந்துவந்திருக்கின்றன. தன்வரலாறுகள் எழுதப்படுவதன் நோக்கமும் அதுதான். ஆனால், இந்தக் கோணத்தில் தன்வரலாறுகளை அணுகியது வரலாற்றில் மிகக்குறைவு. வெள்ளையின ஆதிக்கத்திற்கு எதிராகவும் உலகப் போர்களினால் ஏற்பட்ட பாதிப்பாலும் கிளர்ந்தெழுந்த கறுப்பர்களின் அரசியல் பிரதிநிதிகள் எழுதிய தன்வரலாறுகள் 1950களில் சர்வதேசக் கவனம் பெற்றன. மனித உரிமையைப் பேசும் அமைப்புகள் உருவானதற்கும் ஐ.நா மனித உரிமைக் கண்காணிப்பை மேற்கொள்வதற்கும் கூட கறுப்பர்களின் தன்வரலாறுகள் காரணமாக இருந்தன. இந்தியாவில் 1960களிலிருந்து தலித் தன்வரலாறுகள் எழுதப்பட்டிருந்தபோதிலும் தலித் பேந்தர்ஸ் உருவான பின்னரே ஏராளமான தன்வரலாறுகள் எழுதப்பட்டன. தலித் பேந்தர்ஸின் ஒருகாலத்திய வேலைத் திட்டமாகவும் கூட தன்வரலாற்றை எழுதுவது இருந்தது.
இந்தியச் சூழலில் தன்வரலாற்றைப் புனைவின் வடிவில் வெளிப்படுத்துவது சரியா என்னும் கேள்விக்காக மெனக்கெட்ட இலக்கியச் சகலகலா விற்பன்னர்கள், தன்வரலாறுகளைச் சமூகவியல் பார்வையில் பார்க்கத் தவறினர். அந்தப் பார்வைப் பிழையை யதார்த்தமானது என நம்பத் தயாராக இல்லாத மராத்திய தலித் அறிவுஜீவிகள், 1970களில் தன்வரலாற்றை எழுதத் தொடங்கினார்கள். அதில் சாதி இந்துக்களினுடைய தன்வரலாறுகளில் இருந்த வருணாசிரம ஆதரவு நிலைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியதோடு, தலித் பண்பாட்டை அதுவரை சொல்லாத கோணத்தில் சொன்னார்கள். இதற்கு ‘ஜூதான்’, ‘பலூட்டா’ முதலிய தலித் தன்வரலாறுகளைச் சான்றாகக் கொள்ளலாம்.
தமிழில் இரட்டைமலை சீனிவாசனின் ‘ஜீவிய சரித்திர சுருக்கம்’ வெளியான 1939இல் இருந்து தலித் தன்வரலாற்று எழுத்துமுறைமையின் தொடக்கத்தைப் பார்க்க முடியும். அதற்குப் பிறகு சத்தியவாணி முத்து, வீ.வே.முருகேச பாகவதர் ஆகியோர் தங்கள் வரலாற்றைப் புனைவுத் தொனியின்றி எழுதினார்கள். இத்தகைய தன்வரலாறுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட எடுத்துரைப்பில் 1990களுக்குப் பிறகு புனைவுத் தொனியில் தலித் தன்வரலாறுகள் எழுதப்பட்டன.
இந்தியாவில் தலித் தன்வரலாறுகள்
இந்தியாவில் கடந்த நூறு ஆண்டுகளில் தலித்துகள் குறித்து சாதி இந்துக்களின் புரிதல் மாறியிருப்பதற்குத் தலித் தன்வரலாறுகள் ஆகச் சிறந்த பங்களிப்பை வழங்கியிருக்கின்றன. தலித்துகள் தமது பண்பாடு தனித்துவமானது, நால்வருணத்திற்குள் அடங்காத வாழ்வியல் முறைகளைக் கொண்டது என்று திரும்பத் திரும்பப் பேசியது சாதி இந்துக்களை ஒருகட்டத்தில் கொதிப்படைய வைத்தது. இந்துச் சமூகம் என்னும் சாதியத் தொகுப்பில் உடைப்பு ஏற்பட்டுவிடுமோ என்று அவர்கள் பயந்தனர். தலித் தன்வரலாற்றில் அதிகக் கதைத்தன்மை உண்டு என்றதொரு புதிய கதையை உலவவிட்டனர். அதையெல்லாம் ஊடறுத்துத் தலித் தன்வரலாறுகள் மகாராஷ்டிராவில் நிறைய வெளிவந்தன. பிற மாநிலங்களிலும் வெளிவந்துள்ளன.
1978இல் தயா பவார் எழுதிய ‘பலூட்டா’ தலித் சமூகத்தின் பெருமையைப் பேசியது. முதல் தலித் தன்வரலாறாகச் சொல்லப்படும் இதில், வருண அமைப்புக்குள் அடங்காதது தலித் சமூகம் என்னும் கருத்துடைய பவார், எதிர்கால அரசியல் பேச கடந்தகால வரலாற்று அறிவு அவசியம் என்பதை வலியுறுத்தினார். தெரு, நகரம் மட்டும்தான் சாதியில் சிக்கி அழுகிக்கொண்டிருக்கிறது. உலகம் சாதியற்றுத் தூய்மையாக இருக்கிறது என்பதை விவரித்திருக்கும் விதத்தில் ‘பலூட்டா’ குறிப்பிடத்தக்கதாகும். இதில் உலகம் என்பது இந்தியா மட்டுமல்ல என்பதை எள்ளலுடன் விவரித்த பவாரின் எழுத்து சாதிய இழிவைத் துறந்திட வலியுறுத்தியும் இடப்பெயர்வை ஆதரிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.
1984இல் சரண்குமார் லிம்பாலே வெளியிட்ட நூல் ‘அக்ர்மசி’ (புறச்சாதி), ‘அனார்யா’ என்று தமிழில் வெளியானது. இதை 2003இல் சந்தோஷ் பூம்கார் ‘The Outcaste’ என்னும் பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். ‘அக்ர்மசி’யில் சரண்குமார் லிம்பாலே தான் கடந்துவந்த பாதை, எதிர்கொண்ட பாகுபாடு, சமத்துவமின்மை, அடையாளமின்மை ஆகியவற்றைச் சமரசமற்ற மொழியில் வெளிப்படுத்தினார். தனது அம்மாவும் பாட்டியும் தலித்துகள் என்பதற்காகவும் தலித் பெண்கள் என்பதற்காகவும் கூடுதலான சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளானார்கள் என்கிறார். சாதிஇந்துப் பெண்களும் கூட சுரண்டலுக்குள்ளாகி இருப்பதைக் கவனப்படுத்தினார். இந்தியச் சமூகத்தில் ஆண்கள் உலகிலிருந்து பெண்கள் உலகம் முற்றிலும் வேறுபட்டிருப்பதையும் சூழ்ச்சிகளால் நிறைந்திருப்பதையும் விவரித்தார். மறுமணம் விஷயத்தில் இந்தியப் பெண்கள் சபிக்கப்பட்டவர்கள் எனச் சொல்லும் லிம்பாலே, சாதிஇந்து தன்னுடைய அதிகாரத்தை மறுஉற்பத்தி செய்துகொள்வதற்காகவே தலித்துகள் மீதான கொடுமைகள் தொடர்கின்றன என்றார். அவர் குடியிருந்த ‘மஹர்வாடா’ பகுதியில் டன் கணக்கில் கொட்டிக் கிடக்கும் குப்பைகளின் அளவை ஒரு சாதிஇந்துவின் சாதிய மனநிலையின் அளவாகச் சித்திரித்தார். ஊதியக் குறைவான வேலையின் வழியாகத் தலித்துகள் கொடுமைக்கு உள்ளாவதை விவரிக்கும் லிம்பாலே, தன் மீது சாதிஇந்துக்கள் சுமத்தும் இழிவை நியாயப்படுத்திக்கொண்டிருக்கிற புராண, இதிகாசங்களைக் கண்டித்தார். கைவிலங்குகளை உடைக்காமல் விடுதலை பெற முடியாது என்பதில் நம்பிக்கை கொண்ட அவர், அதையே தனது தன்வரலாற்றில் எழுதினார்.
பேபித்தாய் காம்ப்ளே பலசரக்குக் கடையில் வேலை பார்த்தவர். பொட்டலம் மடிக்க வைத்திருந்த செய்தித்தாள்களை வாசித்துப் பழகி அதன் விளைவாகத் தன்னுடைய வரலாற்றை ‘ஜீனா அமுச்சா’ என்ற பெயரில் மராத்தியில் எழுதினார். 1986இல் வெளியானது. ‘ஜீனா அமுச்சா’ என்றால் ‘வாழ்க்கை நம்முடையது’ என்று பொருள், ஆங்கிலத்தில் ‘The Prisons We Broke’ என்று வெளியானது. பௌத்தம் சார்ந்து தன் வாழ்வை அமைத்துக்கொண்ட பேபி காம்ப்ளே, மராத்தியின் புரட்சிகரமான பெண் எழுத்தாளராக அறியப்பட்டவர். சாதிய விடுதலைக்குப் பௌத்தமே தீர்வு என்று வாய்ப்புக் கிடைக்கும் இடமெல்லாம் பேசியும் எழுதியும்வந்தார்.
நரேந்திர ஜாதவ் ‘எங்கள் தந்தை மற்றும் நாங்கள்’ (Aamchabaap Aan Amhi) என்று 1993இல் தனது தன்வரலாற்றின் முதல் தொகுதியை வெளியிட்டார். இன்றுவரை 215 பதிப்புகள் வந்திருக்கின்றன. இந்தியாவில் குறுகிய காலத்தில் அதிகப் பதிப்புகளைக் கண்ட நூல்களில் இதுவும் ஒன்று. இரண்டாம் தொகுதி ‘புறச்சாதி’ (Outcaste) என்னும் பெயரில் 2002ஆம் ஆண்டிலும், மூன்றாம் தொகுதியான ‘தீண்டப்படாதவர்கள்’ (Untouchables ) 2005ஆம் ஆண்டிலும் வெளியானது. தனது தந்தையின் நாட்குறிப்பையும் தனது குடும்பம் பற்றிய கதைகளையும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இவரது தன்வரலாறு சமத்துவம், நீதிக்காக ஒரு குடும்பம் இந்தியச் சாதியமைப்பை எதிர்த்துப் போராடிய வரலாற்றைப் பேசியது.
நரேந்திர ஜாதவ் இந்திய ரிசர்வ் வங்கியின் மூத்த பொருளியல் அறிஞர், புனே பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தார், மாநிலங்களவை உறுப்பினர், முன்னாள் திட்டக்குழு உறுப்பினர், ஆப்கானிஸ்தான் தலைமை வங்கியின் ஆலோசகர் என்று பல பொறுப்புகளை வகித்தவர். சாதிஇந்துக்களால் விரிக்கப்பட்ட வலைகளை அறுத்தெறிந்து முன்னேறியவர்.
ஊர்மிளா பவாரின் ‘அய்டன்’, மாயா பண்டிட் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் The Way of My Life : A Dalit Women’s Memoirs (2008) என்னும் பெயரில் வெளியானது. தனது தாய் மற்றும் தனது அனுபவங்களோடு தலித் பெண்ணின் வரையறுக்கப்பட்ட வாழ்வெளிகள் பற்றியும் அதில் துரோகங்கள் பின்னப்பட்டிருக்கும் முறைகள் பற்றியும் அவர் விவரித்திருந்த விதம் ‘அய்டன்’ பரவலாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தது.
1994இல் மராத்தியில் கிஷோர் சாந்தாபாய் காலே ‘கோல்ஹத்யாசா போர்’ (கோலாத்தியின் மகன்) என்ற தலைப்பில் தன்வரலாற்றை எழுதினார். இதைச் சந்தியா பண்டே ‘Against All Odds’ என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இசையுடன் ஆடிப்பாடும் நாடோடிச் சமூகத்தில் பிறந்தவர். பின்னாளில் இந்த நூலைத் தடை செய்ய வேண்டுமென்று அவரது சமூகமே குரல் எழுப்பும் அளவுக்கு அந்நூல் சாதியின் கோரத்தைச் சித்திரித்திருந்தது.
மராத்திய எழுத்தாளரும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவருமான ஓம் பிரகாஷ் வால்மீகி, ‘ஜூதான்’ என்கிற பெயரில் தன் வரலாற்றை எழுதினார். இந்நூல் இந்தியத் தலித் இலக்கியத்தின் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. 2003இல் வெ.கோவிந்தசாமி மொழிபெயர்ப்பில் விடியல் பதிப்பகம் ‘ஜூதான் எச்சில்’ என்ற பெயரில் தமிழில் வெளியிட்டது. யார்க் பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியர் அருண் பிரபா முகர்ஜி இந்நூலை இந்தியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இந்துச் சமூக மாற்றத்தை வலியுறுத்தும் போக்கு இந்நூலில் கோட்பாட்டு விவரிப்பு போல இடம்பெற்றிருக்கிறது.
இலட்சுமண் கெய்க்வாட் எழுதிய ‘உச்சாலியா’ (1987) நாடோடிச் சமூகத்தின் அவலங்களைப் பேசிய வகையில் கவனம் பெற்றது. இந்நூல் வந்த பிறகு நாடோடிச் சமூகம் குறித்த சாதிஇந்துக்களின் பார்வை மாறியது. இந்திய நாடோடிச் சமூகத்தின் கலங்கமற்ற வாழ்வியல் முறைமையைப் பேசிச் சர்வதேசக் கவனம் பெற்ற இந்நூல், சாகித்ய அகாதெமி உட்பட பல விருதுகளைப் பெற்றது. பல பல்கலைக்கழகங்களில் பாடநூலாக அமைந்தது. இலட்சுமண் கெய்க்வாட் இந்திய இலக்கியத்தின் முகமாக சர்வதேச அரங்கில் கவனம் பெறுவதற்கு ‘உச்சாலியா’வும் காரணம். இந்தியாவின் நான்கு பிரதமர்களைச் சந்தித்து நாடோடி / பழங்குடிகளைப் பற்றிப் பேசுவதற்கு ‘உச்சாலியா’தான் காரணம் என்று இலட்சுமண் கெய்க்வாட்டே சொல்கிற அளவுக்கு அந்நூல் தலித் தன்வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது. ‘உச்சாலியா’ என்றால் ‘பழிக்கப்பட்டவன்’ என்று பொருள்.
வங்காள எழுத்தாளரும் சமூக ஆர்வலரும் அரசியல் வாதியுமான மனோரஞ்சன் பயபாரி, ‘என் சந்தால் வாழ்க்கையை விசாரித்தல் – ஒரு தலித்தின் சுயசரிதை’ என்னும் பொருண்மையில் தன் வரலாற்றை எழுதியுள்ளார். மேற்கு வங்காளத்தில் இருந்தபடி வங்க மொழியில் எழுதிக்கொண்டிருந்த தலித் இலக்கியத்தின் ஆரம்பகால எழுத்தாளர்களில் ஒருவர். முறையான கல்வியைப் பெறாத அவர் புனைகதை அல்லாத கட்டுரைகளைத் தவிர, பத்துக்கும் அதிகமான நாவல்களும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியுள்ளார்.
மனோரஞ்சன் பயபாரி சமத்துவமற்ற சமூகத்தில் மக்கள் ஒவ்வொருவரும் வகிக்கும் தவிர்க்க முடியாத பாத்திரங்களைச் சுட்டிக்காட்டி மேற்கு வங்கம் மற்றும் தண்டகாரண்யா அகதிகள் முகாம்களில் சிறுவயதில் அவருக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான வாழ்க்கையைப் பற்றி அந்நூலில் பேசி
யிருக்கிறார். பட்டினியிலிருந்து தப்பிக்க வேலையைத் தேடும் இளைஞனின் வாழ்வாக விரிந்திருக்கிறது இந்நூல். 1970களில் நக்சலைட் இயக்கத்தோடு தொடர்பில் இருந்தமைக்காகக் கைதானார். 24 வயதில் சிறையில் அவருக்கு எழுத்துகள் கற்பிக்கப்பட்டபோது அவரது உலகம் விரிந்தது. அது அவரை நக்சலைட்டில் இருந்து விடுவித்தது. விடுதலை பெற்ற பிறகு ரிக்ஷா ஓட்டியாக வாழ்ந்தார். இந்தப் பின்புலத்தில்தான் தனது தன்வரலாற்றை எழுதி, தான் கண்ட புதிய உலகத்தை மற்றவர்களுக்குப் புலப்படுத்தினார்.
கன்னடத்தில் சித்தலிங்கையா ‘ஊரு கேரி’ என்று 1997இல் தனது வரலாற்றை எழுதினார். இதனுடைய இரண்டு, மூன்றாம் தொகுதிகள் முறையே 2006, 2014ஆம் ஆண்டுகளில் வெளியாயின. தலித்துகளின் வெற்றிகளையும் மகிழ்ச்சிகளையும் விவரித்தன. தலித்துகளின் வாழ்க்கை சாதி இந்துக்கள் பார்த்துப் பரிதாபப்படுகின்ற வாழ்க்கை முறையல்ல. மாறாக, பொறாமைப்படும்படியான வாழ்க்கை முறை என்று பேசினார் சித்தலிங்கையா. தலித்துகளின் ஆற்றல் எத்தகையது என்று விவரிக்கும் அவர், அதை அழகாக வாசிப்பாளருக்குக் கடத்தி விடுகிறார். தலித்துகளின் விடுதலைக்கு ஒற்றுமையும் போராட்டமும் அவசியமானது எனக் கூறும் அவர், தலித்துகள் சுயசார்புடையவர்களாக மாற வேண்டும். அதுதான் அவர்களை விடுதலை நோக்கி அழைத்துச் செல்லும் என்கிறார். தலித் வாழ்வையும் சாதி இந்துவின் மனநிலையையும் ஒருங்கே விவரிக்கும் இடங்களில் விரவிக் கிடக்கும் பகடிகள் நூலைச் சிறப்பாக்கி இருக்கின்றன.
அரவிந்த மாளகத்தி எழுதியது ‘கவர்ன்மென்ட் பிராமணன்’ (1994). தலித்துகள் சூழ்நிலைக் கைதிகளாக வைக்கப்பட்டு அவர்களின் உழைப்பு குறைந்த கூலிக்குச் சுரண்டப்படுவதையும், கூலி இல்லாமலேயே கூட பல இடங்களில் தலித்துகளின் உழைப்பு வன்முறையால் அபகரிக்கப்படுவதையும் தனது அனுபவங்கள், தான் பார்த்த சம்பவங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்நூலில் விவரித்திருக்கிறார். தும்பாடி ராமைய்யாவின் ‘மானேகரா’ (2015) சமத்துவமின்மை, அநீதி, அடக்குமுறை, கொடுமை ஆகியவற்றை எதிர்கொண்டு முன்னேறிய ஓர் இளைஞனின் வாழ்வைப் பேசியது. கிருஷ்ணமூர்த்தி சந்தர் இதை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். கோவிந்தராஜுவின் ‘மனவில்லாதவர மத்யே’வும் கன்னடத்தில் குறிப்பிடத்தக்க தலித் தன்வரலாறாகும்.
மலையாளத்தில் கவியூர் முரளியின் ‘முனிசோம்கா’ முக்கியமான தலித் தன்வரலாறாகும். நாட்டுப்புற ஆய்வாளரான முரளி தனது அனுபவங்கள், சாதி குறித்த பார்வைகள், தீண்டாமை வடிவங்கொள்ளும் விதங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்நூலை எழுதியிருக்கிறார்.
தமிழில் தலித் தன்வரலாறு
1990களுக்குப் பிறகு பாமாவின் ‘கருக்கு’ (1992), விடிவெள்ளியின் ‘கலக்கல்’ (1994) ஆகியன வெளியாயின. ராஜ்கௌதமனின் ‘சிலுவைராஜ் சரித்திரம்’ (2002), ‘காலச்சுமை’ (2003), கே.ஏ.குணசேகரனின் ‘வடு’ ஆகியன அடுத்தடுத்து வெளியாயின. பாமா, விடிவெள்ளி, ராஜ்கௌதமன் மூவரும் கிறித்தவப் பின்னணியில் வளர்ந்தவர்கள். அதனால் அவர்களின் வரலாற்றில் கிறித்தவம் தவிர்க்க முடியாமல் இடம்பெற்றது. இந்தியாவிற்கு வெளியே இருந்து சாதிக்கு அப்பாற்பட்டதாக வந்த கிறித்தவத்தை வருண அமைப்புச் சமூகம் தின்று செரித்த வரலாற்றையும் இணைத்துப் பேசுவதாக அவர்களின் தன்வரலாறு அமைந்தது. அப்படித்தான் எழுதவும் முடியும். பின்னாளில் அவர்கள் கிறித்தவத்தின் மீது எதிர்மறையான கருத்துகளை வெளிப்படுத்தினாலும் ‘இயேசு’ என்னும் அடையாளத்தின் மீதான நேர்மறையான சிந்தனைகளை விட்டுவிடவில்லை. மதம் மாறினாலும் விட்டுவிடாத சாதியின் வலுக்கரங்களைப் பற்றியும் கிறித்தவத்தின் பக்குவப் போதாமைகள் பற்றியும் அவர்கள் தன்வரலாற்றில் எழுதினார்கள். தூய்மையானதாகச் சொல்லப்படும் கிறித்தவத் துறவறம் சாதியவாதிகளால் அபகரிக்கப்பட்டு இந்தியச் சமூகத்திற்கு ஏற்றதாக மாற்றப்பட்ட வரலாற்றைத் தன்வரலாற்றோடு இணைத்துப் பேசுவனவாக ‘கருக்கு’ம் ‘கலக்க’லும் அமைந்தன.
ராஜ்கௌதமனின் ‘சிலுவைராஜ் சரித்திரம்’ கிறித்தவக் கல்வி நிறுவனங்களில் படிப்பதிலும் பணிவாய்ப்பு பெறுவதிலும் தலித்துகள் எதிர்கொள்ளும் சிக்கலை அம்பலப்படுத்தியது. அரசுப்பணி வாய்க்கப்பெற்ற பிறகு பணிக்களத்தில் நிலவிய சாதிய ஒடுக்குமுறைகள், புறக்கணிப்புகள் ஆகியவற்றை இயல்பாகவும் பகடியாகவும் கடந்து தம்மைத் தவிர்க்க முடியாத அறிவுஜீவியாகத் தகவமைத்துக்கொண்ட வரலாற்றை ‘காலச்சுமை’ பேசியது. கே.ஏ.குணசேகரனின் ‘வடு’, கல்வியின் மூலம் ஒரு தலித் தன்னை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பதைச் சம்பவக் கோவையின் வழி எடுத்துரைத்தது.
பெ.சென்றாயப் பெருமாளின் ‘ஓர் ஆட்டக்கலைஞனின் பயணம்’ 2019இல் வெளியானது. அவர் சாவு வீடுகளில் நிகழ்த்தப்படும் மட்டை ஆட்டத்தில் பெண் வேடமிட்டு ஆடிய கலைஞர். அவரது தந்தை, சகோதரர்கள், முன்னோர்களும் கூட ஆட்டக் கலைஞர்கள்தாம். மதுரை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய ‘சூலப்புரம்’ சொந்த ஊர். வரலாற்றுத் துறையில் ராஜாராணி ஆட்டம் தொடர்பான ஆய்வைச் செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். அவரது ஆய்வின் ஒரு பகுதியையும் தன் வரலாற்றையும் உள்ளடக்கியதாக இந்நூல் வெளிவந்திருக்கிறது.
சாதிஇந்துக்களால் பல்வேறு வடிவங்களில் சுரண்டலுக்கு உள்ளாகிவரும் ஒரு சமூகத்தின் கலைஞர்கள் மட்டை ஆட்டத்தில் தம்மை ராஜா, ராணியாக வேடமிட்டுக்கொள்வதை ஒருவிதமான உளவியல் சமப்படுத்தலாகவே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள் சாதிஇந்துக்களின் சாவு வீடுகளில் ஆடும்போது வரையறைக்குள் நின்று சுதந்திரமாகப் பேசலாம், பாடலாம், மதுவருந்தலாம், உண்ணலாம். ராஜாவாகவும் ராணியாகவும் காட்டிக்கொள்ளலாம். இயல்பான வாழ்வில் அப்படி எதையும் காட்டிக்கொள்ள முடியாது.
சாதிஇந்துக்களின் தடைகளால் நேரும் சோர்வுகளை வென்று படிப்பது தலித்துகளுக்குச் சவாலான காரியம்.
கலைத்தொழில் செய்யும் தலித்துகளின் வாழ்வெளிகள் திட்டமிட்டே சுருக்கப்பட்டிகின்றன. போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட முடியாமலும் தொழிலில் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெறாமலும் தட்டையாக வாழ்ந்து மடிந்துபோன கலைஞர்களிடம் அடுத்த தலைமுறைகள் பெற்றுக்கொள்வதற்கு ஒன்றுமில்லை. தொழிலிலிருந்து விடுபடுதலும் இடம்பெயர்தலுமே சாதிய விடுதலையில் முக்கியமானவை எனக் கூறும் சென்றாயப்பெருமாள், அதைச் செய்தும் காட்டினார். இந்நூல் வெளியானபோது கலைஞர்களின் தொழில் வெளியேற்றம் குறித்த அங்கலாய்ப்பு முற்போக்காளர்களிடமிருந்தே வந்தது. அவர்களின் ‘முற்போக்கு’ கேள்விக்குள்ளாக்கப்பட்டதும் வழக்கம்போல மௌனமானார்கள். அவர்கள் தமது மௌனத்தைக் கைவிட்டு பெண் வேடம் புனைந்து மட்டையாட்டம் ஆடி பாரம்பரியத்தைக் காப்பாற்றுவதில் நமக்கொன்றும் ஆட்சேபனை இல்லை.
‘புலிப்பால் – நாவினால் சுட்ட வடு’ (2022) எழுதிய கலியபெருமாள் ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியர். திருவாரூரில் வசித்துவரும் அவர் தலித்திய வரலாற்று ஆய்வுகளில் குறிப்பிடத் தகுந்த பங்களிப்பினைச் செய்துவருகிறார். ‘புலிப்பால் – நாவினால் சுட்ட வடு’ தலித் தன்வரலாறாகவும் தான் வாழ்ந்த காலத்தின் சமூக வரலாறாகவும் அமைந்திருக்கிறது. ஒன்றுபட்ட பழைய தஞ்சை கிராமங்களின் நிலை, திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம், காங்கிரஸ் கட்சியின் பண்ணையார்கள், வேளாண் கூலி மக்களின் அன்றாட வாழ்வில் நிலத்தின் வகிபாகம் ஆகியவற்றை விவரிக்கிறது. சமூக அமைப்பின் எல்லாத் தளங்களிலும் தலித் புறக்கணிக்க முடியாத சக்தியாக மாறினால் மட்டுமே சாதிய விடுதலை பெற முடியும் என்கிறார் கலியபெருமாள். படிக்கிறபோது இருந்த பாகுபாடுகளைப் பாகுபாடு எனத் தெரியாமலேயே வாழ்ந்து கடந்த கலியபெருமாள், தனது வளரிளம் பருவத்தில் பாகுபாட்டின் நோக்கத்தை அறிந்தபோது அது பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
சனாதனம்தான் தலித்துகளின் எதிரி. சனாதனம் சொல்லும் புனிதம், கடவுள், சாஸ்திரங்கள், வருணம் ஆகியவைதான் அழிக்கப்பட வேண்டியன. இந்தியாவில் வலியுறுத்தப்படும் அறம் சனாதனத்திற்குப் பலனளிப்பதே அன்றி அனைவருக்குமான அறம் அல்ல. அனைவருக்கும் பொதுவானது என்று எதுவுமில்லை. சாதியைக் காப்பாற்றுவதற்குத் ‘தனித்தனிகள்’தான் ஏற்றவை. இரட்டைக் குவளை, இரட்டைத் தண்ணீர்த் தொட்டி, இரட்டைக் கோயில், இரட்டைச் சுடுகாடு என்கிற அமைப்புகள் இயல்பானதல்ல. சனாதனத்தின் விருப்பத்தின் பேரில் உருவாக்கப்பட்டவை.
தனித்தனியான பண்பாடுகள் கொண்ட சமூக அமைப்பில் தனக்கான அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கு ஏராளமான கதைகள் உருவாக்கப்பட்டன. அந்தக் கதைகள் சமூகத்தின் இரண்டு பக்கங்களை விவரித்தன. ஒரு பக்கம் புனிதமாகவும் இன்னொரு பக்கம் இழிவாகவும் சித்திரிக்கப்பட்டன. கதைகளை உருவாக்கியவர்கள் புனிதத்தின் பக்கத்தில் தம்மை வைத்துக்கொண்டனர். இன்னொரு பக்கத்தில் ‘இழிவு’ என்கிற கருத்தாக்கத்தை உருவாக்கித் தம்மோடு முரண்பட்டவர்களை நிறுத்தினர். சனாதனத்தைப் பாதுகாப்பதில் ஆண்களைவிட பெண்களே முனைப்பாக இருக்கிறார்கள் என்பதைத் தனது அனுபவத்தின் வாயிலாக விவரித்திருக்கிறார் கலியபெருமாள்.
கழிவிரக்கம், புலம்பல் இன்றிச் சுறுசுறுப்பான மொழியில் அமைந்திருக்கிறது திருக்குமரன் கணேசனின் ‘கறி விருந்தும் கவுளி வெற்றிலையும் – சாதியினால் சுட்ட வடு’. இயல்பாகவே நெருங்கிப் பழகும் இரண்டு சிறுவர்களுள் ஒருவனாக இருக்கும் சாதிஇந்துச் சிறுவன், வயது கூடக்கூடத் தன்னைச் சாதிக்குள் நிலை நிறுத்திக்கொள்ளும் வழமை, சாதி ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்குக் கடத்தப்படும் நுட்பம் ஆகியனவற்றைப் புலப்படுத்துவதாக இந்நூல் அமைந்திருக்கிறது.
‘நாடகக் காதல்’, ‘தலித்துகளின் ‘உயர்வு’ நாங்கள் போட்ட பிச்சை’, ‘அறிவு, அழகு, வீரம் ஆகியவற்றுக்கும் தலித்துகளுக்கும் தொடர்பில்லை’ என்று தமிழ்நாட்டின் சாதியவாதிகளும் திராவிடக் கட்சியினரும் பேசிக்கொண்டிருக்கும் சமகாலச் சூழலில் அவர்களுக்கான பதில்களை அவர்களிடமிருந்தே எடுத்துக் கொடுத்து அவர்களின் புரிதல் போதாமையை உணர்த்துவதே இந்நூலின் தனித்துவம் எனலாம்.
ஜூலியஸ் எழுதிய ‘ஊருக்கு ஒரு குடி’ 2023 மார்ச்சில் வெளியானது. தலித் – தலித் பெண் என்னும் நிலையைத் தாண்டி தலித் குடியிருப்புகளுக்கு அழுக்கெடுக்கும் வண்ணார் சமூகத்தின் இருப்பைச் சித்திரித்திருக்கிறது. கிறித்தவத்தின் மீது சாதியமயமாகிப் போன விமர்சனங்கள் இருந்தாலும், இந்தியச் சாதிய அமைப்பில் அது நிகழ்த்தியிருக்கும் உடைப்புகளில் சில ஆக்கப்பூர்வமானவை. தலித்துகளுக்குக் கல்வி, வேலைவாய்ப்புகளை வழங்குதல், வருணாசிரம நம்பிக்கைகளிலிருந்து வெளியேற்றுதல் ஆகியன கிறித்தவத்தால் இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள். கல்வியையும் மருத்துவத்தையும் முதன்முதலாக சனநாயகப்படுத்தியது கிறித்தவம்தான். கிறித்தவத்தின் வழி தாம் எப்படியெல்லாம் விழிப்புணர்வு பெற்றோம் என்பதிலிருந்து இழிவுகளிலிருந்து வெளியேறுவதுவரை அனைத்துத் தரப்பு நியாயங்களையும் பேசியிருக்கிறார் ஜூலியஸ். கிறித்தவத்தில் இருக்கும் மேன்மையாக்க வழிகளைப் பயன்கொண்டு அதன்வழி தான் எட்டிப் பிடித்த வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கும் இந்நூலை, கிறித்தவத்தின் மீது இதுவரை சாதியம் குறித்து வைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டுக்கான மறுப்பாகவும் கருத வாய்ப்புள்ளது.
தன் முன் விரிக்கப்பட்ட வலைகளில் சிக்காமல் உயர்ந்து, எட்ட நின்று தமது வாழ்வெளியைக் கொண்டாடும் தலித் ஆளுமைகள், தங்களின் தன்வரலாற்று எழுத்தின் வழியாகத் துரோகங்கள் சூழ்ந்த சாதிய உலகைச் சக தலித்துகளுக்கு அம்பலப்படுத்தும் வேலையைக் காத்திரமாகச் செய்திருக்கின்றனர். தலித் தன்வரலாறுகள் சாதிஇந்துக்களிடம் சுய பரிசோதனையை நிகழ்த்தியிருக்கின்றன. ஓர்மையுள்ள சாதிஇந்துக்களைத் தலித்துகளின் நியாயங்களுக்காக யோசிக்க வைத்ததிலும் தலித் தன்வரலாறுகளுக்குப் பங்குண்டு. தொடக்கக் காலத்தில் தலித்துகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பதிவுசெய்வதன் வழி சாதிஇந்துக்களைக் குற்றவுணர்வுக்கு உள்ளாக்க முடியும், மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்ற நிலைப்பாடு இருந்தது. ஆனால், அது எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தவில்லை. அதனால் அண்மைக்கால தலித் தன்வரலாறுகள் தலித் வாழ்க்கை முறை குறித்து சாதிஇந்துக்கள் சொல்லிவந்த கதைகளை மறுத்து உண்மையை உரைக்கின்றனவாக எழுதப்படுகின்றன. இந்த நுவல்பொருள் மாற்றம் தலித் தன்வரலாற்று நாவல்களின் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்தது.
உலகம் முழுதும் ஒரே நேரத்தில் மனித உரிமைகள் குறித்த விவாதங்களை உருவாக்கிய கறுப்பர்களின் தன்வரலாறுகள் போல தலித் தன்வரலாறுகளும் விவாதங்களை உருவாக்கியிருக்கின்றன. கறுப்பர்களின் தன்வரலாறுகள் ஏற்படுத்திய தாக்கங்களுடன் தலித் தன்வரலாற்றை ஒப்பிடுவது பொருத்தமானதல்ல என்றபோதும் கறுப்பர்களின் தன்வரலாறுகளிலிருந்து பெற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கின்றன. அவற்றையும் கவனத்திற்கொண்டு தலித்துகளின் வாழ்வியல் கழிவிரக்கம் கோருபவை என்னும் பொதுப்புத்தியை மறுதலிக்கும் கூறுகளோடு தனித்துவமும் சனநாயகத் தன்மையுமுடைய எதார்த்த வாழ்வியலைப் பேசுவதாகத் தலித் தன்வரலாறுகள் நிறைய எழுதப்பட வேண்டும். அது மீண்டும் ஓர் உரையாடலை உருவாக்கும். அந்த உரையாடல் சரியான பாதையில் கொண்டு செல்லப்படுமானால் எதிர்கால அரசியலில் தலித்துகளின் கை ஓங்கியிருக்கும்.
[armelse]
இந்திய இலக்கிய வகைமைகளில் தன்வரலாறுகளுக்குத் தனி இடமுண்டு. தனது வாழ்வைத் தானே எழுதிப் பார்ப்பதன் வழியாகச் சொல்லப்படும் விஷயங்கள், எழுதியவருக்கு நிறைவைத் தரும் என்பது பொதுவாகச் சொல்லப்பட்டாலும் சமூகத்தின் இயங்கியலில் அவை பண்பாட்டு மறு உற்பத்திக்கான கச்சாப்பொருளாக இருந்துவந்திருக்கின்றன. தன்வரலாறுகள் எழுதப்படுவதன் நோக்கமும் அதுதான். ஆனால், இந்தக் கோணத்தில் தன்வரலாறுகளை அணுகியது வரலாற்றில் மிகக்குறைவு. வெள்ளையின ஆதிக்கத்திற்கு எதிராகவும் உலகப் போர்களினால் ஏற்பட்ட பாதிப்பாலும் கிளர்ந்தெழுந்த கறுப்பர்களின் அரசியல் பிரதிநிதிகள் எழுதிய தன்வரலாறுகள் 1950களில் சர்வதேசக் கவனம் பெற்றன. மனித உரிமையைப் பேசும் அமைப்புகள் உருவானதற்கும் ஐ.நா மனித உரிமைக் கண்காணிப்பை மேற்கொள்வதற்கும் கூட கறுப்பர்களின் தன்வரலாறுகள் காரணமாக இருந்தன. இந்தியாவில் 1960களிலிருந்து தலித் தன்வரலாறுகள் எழுதப்பட்டிருந்தபோதிலும் தலித் பேந்தர்ஸ் உருவான பின்னரே ஏராளமான தன்வரலாறுகள் எழுதப்பட்டன. தலித் பேந்தர்ஸின் ஒருகாலத்திய வேலைத் திட்டமாகவும் கூட தன்வரலாற்றை எழுதுவது இருந்தது.
இந்தியச் சூழலில் தன்வரலாற்றைப் புனைவின் வடிவில் வெளிப்படுத்துவது சரியா என்னும் கேள்விக்காக மெனக்கெட்ட இலக்கியச் சகலகலா விற்பன்னர்கள், தன்வரலாறுகளைச் சமூகவியல் பார்வையில் பார்க்கத் தவறினர். அந்தப் பார்வைப் பிழையை யதார்த்தமானது என நம்பத் தயாராக இல்லாத மராத்திய தலித் அறிவுஜீவிகள், 1970களில் தன்வரலாற்றை எழுதத் தொடங்கினார்கள். அதில் சாதி இந்துக்களினுடைய தன்வரலாறுகளில் இருந்த வருணாசிரம ஆதரவு நிலைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியதோடு, தலித் பண்பாட்டை அதுவரை சொல்லாத கோணத்தில் சொன்னார்கள். இதற்கு ‘ஜூதான்’, ‘பலூட்டா’ முதலிய தலித் தன்வரலாறுகளைச் சான்றாகக் கொள்ளலாம்.
தமிழில் இரட்டைமலை சீனிவாசனின் ‘ஜீவிய சரித்திர சுருக்கம்’ வெளியான 1939இல் இருந்து தலித் தன்வரலாற்று எழுத்துமுறைமையின் தொடக்கத்தைப் பார்க்க முடியும். அதற்குப் பிறகு சத்தியவாணி முத்து, வீ.வே.முருகேச பாகவதர் ஆகியோர் தங்கள் வரலாற்றைப் புனைவுத் தொனியின்றி எழுதினார்கள். இத்தகைய தன்வரலாறுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட எடுத்துரைப்பில் 1990களுக்குப் பிறகு புனைவுத் தொனியில் தலித் தன்வரலாறுகள் எழுதப்பட்டன.