தலித் தன்வரலாற்று நூல்கள்

சுப்பிரமணி இரமேஷ்

லித்தியச் சிந்தனை தீவிரமடைந்த பிறகு ஒடுக்கப்பட்டவர்கள் தங்களது துயரங்களையும் வலிகளையும் தன்வரலாறுகளாக எழுதத் தொடங்கினர். இதுவும் முதன்முதலில் மராட்டியில்தான் நிகழ்ந்தது. தங்கள் அனுபவங்களைப் புனைவுத் தன்மைகள் இல்லாமல் எழுதுவது அவர்களுக்கு எளிதாக இருந்தது. அந்நூல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழி வாசிப்பவர்களுக்கு மிக நெருக்கமானதாக இருந்தது. ஒடுக்கப்பட்டவர்களது துயரங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு வடிகாலாகவும் இந்தத் தன்வரலாற்று நூல்கள் இருந்தன. இதனைத் தொடர்ந்து தலித்துகள் எழுதிய புனைவுகளில்கூட தன்வரலாற்றுக் கூறுகள் அதிக அளவில் காணப்பட்டன.

மராட்டிய தலித் தன்வரலாற்று நூல்கள்

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சில மராட்டியத் தன்வரலாறுகள் குறித்து தெரிந்துகொள்வது அவசியம். ஏனெனில், இம்மொழிபெயர்ப்புகள் தமிழில் எழுதப்பட்ட தலித் தன்வரலாறுகளாகவே இன்றும் தமிழ் இலக்கியத்தில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்தியச் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமான தலித் மக்களின் வாழ்வியலை எளிமையாகச் சுட்டிக்காட்டிச் செல்லும் தயா பவாரின் தன்வரலாற்று நூலான ‘பலூட்டா’ அவ்வகையில் முக்கியமானது. இந்நூல் மராத்தி மொழியின் முதல் தலித் தன்வரலாறாகக் கருதப்படுகிறது. மும்பையில் வாழும் குடிசைப் பகுதி மக்களை, அவர்களின் வாழ்க்கை முறையைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. ஊர்மிளா பவார் எழுதியுள்ள ‘முடையும் வாழ்வு’ என்ற தன்வரலாறும் குறிப்பிடத்தக்கது. இவர் முக்கியமான தலித் பெண் எழுத்தாளராவார். டாக்டர் அம்பேத்கரின் கோரிக்கையை ஏற்றுப் பௌத்த மதத்திற்கு மாறியவர்.

லட்சுமண் மானே எழுதியுள்ள ‘உபாரா’, தலித் தன்வரலாற்று நூல்களில் தனித்துவமானது. வாழ்தல் எனும் எளிய தேவைக்காக மலை, ஆறு, சிற்றூர் என சுற்றியலையும் நாடோடிப் பழங்குடிகளைப் பற்றிய அவலங்களை இந்நூல் முக்கியத்துவப்படுத்திப் பேசுகிறது. ‘உபாரா’ மராத்திய மொழியில் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல். இந்நூலுக்குப் பிறகு கவனிக்கத்தக்க எழுத்தாளரானார். லட்சுமண் கெய்க்வாட்டின் சுயசரிதைத் தன்மையிலான நாவல் ‘உச்சாலியா.’, மராத்தி இலக்கியத்தில் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. இந்நாவல் அவருக்குச் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. ‘உச்சாலியா’விற்கு மகாராஷ்டிர கௌரவ புரஸ்கார் விருதும் சாகித்திய அகாதெமி விருதும் வழங்கப்பட்டது. ‘உச்சாலியா’ என்ற மராத்திச் சொல்லுக்குப் ‘பழிக்கப்பட்டவன்’ என்று பொருள்.

‘புலியின் நிழலில்’ என்ற தன்வரலாற்று நூலை எழுதியவர் நாம்தேவ் நிம்கடே. இவரது பெற்றோர் அடிமை வேலை செய்தவர்கள். இவர், தீண்டாதார் சாதியில் பிறந்த காரணத்தால் பள்ளி வராந்தாவில் நின்றபடியே ஜன்னல் வழியாகப் பாடங்களைக் கற்றிருக்கிறார். அமெரிக்காவிலுள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் மண்ணியல் குறித்து ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார். அம்பேத்கருக்குப் பிறகு அமெரிக்கப் பல்கலைக்கழகமொன்றில் பட்டம் பெற்ற முதல் தலித் என்ற பெருமை இவருக்குண்டு. வாழ்நாள் முழுவதும் அம்பேத்கரின் கொள்கையைப் பின்பற்றிவந்த இவர், தனது வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை அப்படியே இந்நூலில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். வஸந்த் மூன் எழுதியுள்ள ‘ஒரு தலித்திடமிருந்து’ என்ற தன்வரலாறு, மகர்களைப் பற்றிய நிறைவான பதிவுகள் அடங்கிய முக்கியமான நூலாகும். அம்மக்களின் இருப்பு, இயலாமை, புறக்கணிப்புகள், போராட்டங்கள் என அனைத்தையும்  விவரிக்கிறது. இவர், மகாராஷ்டிர அரசால் வெளியிடப்பட்ட அண்ணல் அம்பேத்கரின் நூல்களுக்குத் தொகுப்பாசிரியராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாந்தாபாய் காம்ப்ளேவின் ‘மஜ்ய ஜன்மச்சி சித்தர்கதா’ (Majya Janmachi Chittarkatha) என்ற தன்வரலாற்று நூலும் முக்கியமாகக் கருதப்படுகிறது. இது தலித் பெண் எழுத்தாளரின் முதல் சுயசரிதை நூலாகக் குறிப்பிடப்படுகிறது. பாபுராவ் பாகுல் எழுதிய சுயசரிதைத் தன்மையிலான ‘நான் என் சாதியை மறைத்தபோது’ (When I Concealed My Caste) என்ற சிறுகதைத் தொகுப்பும் மராத்திய இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஓம்பிரகாஷ் வால்மீகி எழுதிய ‘ஜூதான்: எச்சில்’ (Joothan -A Dalit’s Life’) என்ற தன்வரலாற்று நூலும் முக்கியமானது. இவர் உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்தவர். இந்தியில் எழுதியிருக்கிறார்.

கன்னடத் தலித் தன்வரலாற்று நூல்கள்

மராத்தியைத் தொடர்ந்து கன்னடத்தில் எழுதப்பட்ட தலித் தன்வரலாற்று நூல்களும் முக்கியமானவை. தமிழுக்கு மிக நெருக்கமானவை. ‘ஊரும் சேரியும்’ என்ற சித்தலிங்கையாவின் தன்வரலாற்று நூல் 1996ஆம் ஆண்டு பாவண்ணன் மொழிபெயர்ப்பில் தமிழுக்கு அறிமுகமானது. வழமையான தன்வரலாறுகள் போலன்றி, தன் நினைவில் தேங்கிய அனுபவங்களின் தொகுப்பாக இதனை எழுதியிருக்கிறார். வாழ்க்கையின் துயரத்தைக்கூட இவரால் நகைச்சுவையுடன் பகிர்ந்துகொள்ள முடிந்திருக்கிறது. அதனூடே அவரது வாழ்க்கையின் பயணத்தையும் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. தலித் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத படைப்பு ‘ஊரும் சேரியும்.’ இதன் தொடர்ச்சியாக ‘வாழ்வின் தடங்கள்’ என்ற இரண்டாம் பகுதியும் வெளியாகியுள்ளது. எப்போதோ நடந்தவற்றை நேற்று நடந்ததுபோன்று எழுதுவதுதான் சித்தலிங்கையாவின் சிறப்பு. வாழ்க்கைக் குறித்த கசப்புணர்வை வெறுப்பில்லாமல் இவரது நூல்கள் வெளிப்படுத்துகின்றன. சித்தலிங்கையாவின் நினைவு அடுக்குகளை ஒன்றாக இணைத்துப் பார்க்கும்போது ஒரு காலகட்டத்தின் சமூக வரலாறு, அதில் ஒடுக்கப்பட்டவர்களுக்கான இடம் ஆகியவற்றைத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.

அரவிந்த மாளகத்தியின் தன்வரலாற்று நூல் ‘கவர்மெண்ட் பிராமணன்.’ ஆதிக்கச் சாதிகளின் சாதிய மனோபாவத்தைத் தன் அனுபவங்களின் வழியாக எழுதியிருக்கிறார். காலங்காலமாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு இயல்பாக எழக்கூடிய பல்வேறு கேள்விகளை அரவிந்த மாளகத்தி இந்நூலில் முன்வைக்கிறார். இவர் முன்வைக்கும் கேள்விகளிலிருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது; ஏனெனில், இவரது கோபங்கள் நியாயமானவை. தலித்துகள் தங்களைத் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதும் வரைதான் உயர்சாதி என ஒன்று இருக்க முடியும் என்ற கருத்தை வெவ்வேறு நிகழ்வுகளினூடாக அரவிந்த மாளகத்தி இந்நூலில் குறிப்பிடுகிறார். இந்துமதம் பின்பற்றும் பண்பாடு, நம்பிக்கைகள், சடங்குகள் ஆகியன தலித்துகளுக்கு எதிரானவையாக உள்ளன என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார். ‘என்ன செய்வீங்க’ என்ற தலித் தன்வரலாற்று நாவல் இறையடியான் மொழிபெயர்ப்பில் வெளியாகியிருக்கிறது. இதனை எழுதியவர் து.சரஸ்வதி.

தலித்துகளால் எழுதப்பட்டுள்ள தன்வரலாற்று நூல்கள் பிற தன்வரலாற்று நூல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. ஒடுக்கப்பட்டவர்களின் வலியை உண்மையுடன் பதிவு செய்திருப்பவை. இந்நூல்களும் புனைவுக்குரிய இலக்கியத் தகுதியைப் பெற்றிருப்பது முக்கியமானது. இவ்வகையான நூல்களின் வழியாகத்தான் மனிதர்களுக்குள் பதுங்கியிருக்கும் ஆதிக்க மனோபாவத்தையும் அவர்களுக்கிடையிலான சமூக ஏற்றத்தாழ்வுகளையும் நேரடிச் சாட்சியங்களுடன் புரிந்துகொள்ள முடியும். சாதியின் அகச்செயல்பாடுகளையும் தலித் தன்வரலாற்று நூல்கள் மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளன.

தமிழில் தலித் தன்வரலாற்று நூல்கள்

தன்வரலாற்று நூல்களுக்கு ஒரு தனித்துவத்தை உருவாக்கியது தலித் இலக்கியம்தான். காலந்தோறும் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்ட ஆதிக்கச் சாதி மனநிலையைத் தலித்திய தன்வரலாற்று நூல்கள் மிகத்துல்லியமாக அடையாளம் காட்டின. தலித்திய அரசியல் முன்னோடிகளில் முக்கியமானவராகக் கருதப்படும் இரட்டைமலை சீனிவாசன் (1860-1945). ‘ஜீவிய சரித்திர சுருக்கம்’ (1939) என்றபெயரில் சிறிய நூலொன்றை வெளியிட்டுள்ளார். இந்த நூலின் மூலமாக அவரது இளமைக்காலம் குறித்தும் அவருடைய அரசியல்,  சமூகப்பணிகள் குறித்தும் அறிந்துகொள்ள முடிகிறது. விரிவான நூலாக இல்லையென்றாலும் தலித் தன்வரலாற்று நூல்களின் வரிசையில் இந்நூலுக்கு முக்கிய இடமுண்டு.

ஒடுக்கப்பட்ட மக்கள் பொதுச் சாலைகள், பொதுக்கிணறுகள், பொதுக் கட்டடங்கள், பொது இடங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பவர்களுக்கு நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று 1927ஆம் ஆண்டில் அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்குப் பெரும் முயற்சி எடுத்தவர் இரட்டைமலை சீனிவாசன். நாக்கு அளவிலேயே சாதி இந்துக்கள் தீண்டாமை குறித்துப் பேசுகின்றனர்; மனதளவில் அவர்கள் தயாராக இல்லை என்ற வருத்தத்தையும் பதிவு செய்திருக்கிறார். அவ்வகையில் தலித் தன்வரலாற்று நூல்களில் இந்நூல் முக்கியமான தொடக்கமாகக் கருதப்படுகிறது.

தமிழகத்தின் முதல் தலித் பெண் அமைச்சர்; திராவிடக் கட்சிகளின் முதல் பெண் மத்திய அமைச்சர் உள்ளிட்ட சிறப்புகளுக்கெல்லாம் உரியவர் சத்தியவாணி முத்து. இவர் ‘எனது போராட்டம்’ என்றொரு தன்வரலாற்று நூலை எழுதியுள்ளார். ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தேவைப்படுவது உரிமையே தவிர, சலுகையல்ல’ என்று தீவிரமாகக் குரல் கொடுத்தவர். சுயமரியாதைக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்; மேடைகள்தோறும் இதனைப் பிரச்சாரமாக முன்னெடுத்தார். தி.மு.க.வின் தொடக்கக்கால தலைவர்களில் இவருக்கு முக்கிய இடமுண்டு. அறிஞர் அண்ணா தலைமையிலான அமைச்சரவையில் அரிசன நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். சென்னையில் டாக்டர் அம்பேத்கர் பெயரில் கல்லூரி அமைய இவர் எடுத்த முயற்சியே காரணம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக அன்றைய முதல்வராக இருந்த மு.கருணாநிதியை எதிர்த்துக் கேள்வியெழுப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இவரது நூல் வழியாக அரசியலில் சாதி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இயலும்.

மராட்டி, கன்னடத்துக்கு அடுத்து தமிழில் எழுதப்பட்டுள்ள தன்வரலாற்றுத் தன்மையிலான புனைவுகள் கூடுதல் முக்கியத்துவம் பெற்றன. பாமாவின் ‘கருக்கு’, ‘சங்கதி’ ஆகிய நாவல்கள் அவரது வாழ்க்கைப் பின்னணியிலிருந்து எழுதப்பட்ட உண்மைக்கு நிகரான புனைவாகும். பாமா வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இந்நாவல்கள் பார்க்கப்பட்டன. தலித்துகள்மீது நிகழ்த்திய தீண்டாமைக் கொடுமைகளின் நேரடிச் சாட்சியமாக இவரது புனைவுகள் இருக்கின்றன. பிற்காலத்தில் இவரெழுதிய புனைவுகளில் தன்வரலாற்றுத் தன்மை மிகக் குறைவாகவே பதிவாகியிருந்தது. ஆனால், இவரது தொடக்கக்கால நாவல்கள், பாமா என்ற தலித் பெண் எதிர்கொண்ட சாதிய வன்மங்களின் தொகுப்பாக இருந்தது. 1992இல் இந்நாவல் வெளிவந்தபோது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. நாவல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. பாமா, தன் இளமைக்காலத்தில் கண்ட சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் முரண்களையும் ஒரு குழந்தையின் மனநிலையோடு அவரது மொழியிலேயே வெளிப்படையாக எழுதினார். இந்தத் தன்மைதான் இப்புனைவின் பெரும் பலமாகக் கருதப்பட்டது.

‘கருக்கு’ நாவலைத் தொடர்ந்து பாமா எழுதிய ‘சங்கதி’ (1994) என்ற நாவலும் ஆதிக்கச் சாதியினரால் தலித் மக்கள் எதிர்கொண்ட சாதியக் கொடுமைகளைப் பேசியது. மேலத்தெரு, கீழத்தெரு என்கிற இரு இடங்களைக் குறியீடுகளாக்கி இந்நாவல் தலித் அரசியலையும் தலித் அழகியலையும் முன்னெடுத்தது. மேலும், ஆதிக்க வர்க்கத்தினர் தலித் பெண்கள்மீது நிகழ்த்திய பாலியல் மீறல்களும் இந்நாவலினூடாகக் கவனப்படுத்தப்பட்டன. பொதுவெளியில் ஆதிக்கச் சாதிப் பெண்களுக்கும் தலித் பெண்களுக்கும் உள்ள இருப்புக் குறித்தும் இந்நாவல் உரையாடுகிறது. தலித் சமூகத்தைச் சார்ந்த ஆண்கள், தம் பெண்களை நடத்தும் விதம் பற்றிய விமர்சனத்தையும் பாமா இந்நாவலில் சேர்த்தே பேசினார். ‘தலித் பெண்ணியம்’ குறித்த கருத்தாடலைப் பாமா தொடர்ச்சியாகத் தம் புனைவுகளின் வழியாக உரையாடிவருகிறார். அந்த வகையில் பாமாவின் எழுத்துகள் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கின்றன. தலித் தன்வரலாறு, தலித் பெண்ணியம் ஆகிய இரு வகைமைகளில் பாமாவின் புனைவுகளை அணுகலாம்.

பாமாவைத் தொடர்ந்து ‘சிலுவைராஜ் சரித்திரம்’ (2002), ‘காலச்சுமை’ (2003) ஆகிய இரு தலித் தன்வரலாற்று நாவல்களை ராஜ் கௌதமன் எழுதியிருக்கிறார். சிறுவயது முதல் சிலுவைராஜ் என்ற சிறுவன் இச்சமூகத்தில் எதிர்கொண்ட கசப்புகளையும் வெறுப்புணர்வுகளையும் நகைச்சுவை உணர்வுடன் எழுதியிருக்கிறார். யதார்த்தமும் புனைவுத்தன்மையும் கலந்த நடையில் இந்நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. சிலுவைராஜ் என்ற சிறுவனை ராஜ் கௌதமன் என்ற எழுத்தாளர் விலகிநின்று பார்த்திருக்கிறார். அதனால்தான் அங்கதத் தன்மையுடன் எழுத முடிந்திருக்கிறது. பாமாவின் புனைவுகளிலிருந்து ராஜ் கௌதமனின் புனைவுகள் வேறுபடும் இடமும் இதுதான். ஒட்டுமொத்தமாகச் சிலுவைராஜின் அலைக்கழிப்புகளாகவே புனைவு விரிகிறது. ஆனால், சிலுவைராஜ் சரித்திரம் என்பது ராஜ் கௌதமனின் சரித்திரம்தான். இதன் இரண்டாம் பாகம்தான் ‘காலச்சுமை.’ இவ்விரண்டு நாவல்களின் தொடர்ச்சியாக ராஜ் கௌதமன் எழுதியுள்ள ‘லண்டனில் சிலுவைராஜ்’ என்ற பயணநூலும் குறிப்பிடத்தக்கது. சாதிய வன்மத்தை மெல்லிய பகடியுடன் வெளிப்படுத்தியதில் இவர் நூல்களுக்கு முக்கிய இடமுண்டு.

புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றிய கே.ஏ.குணசேகரன் (1955-2016) ‘வடு’ (2005) என்ற தன்வரலாற்று நூலொன்றை எழுதியுள்ளார். ‘தலித் சுயசரிதை’ என்ற தன்மையுடன் தமிழில் எழுதப்பட்ட முதல் நூலாக ‘வடு’ கருதப்படுகிறது. தன் முதுகலைப் படிப்புவரையான காலகட்டத்தில் நிகழ்ந்த சாதிய ஒடுக்குதல்களையும் அக்கால சமூகச் சூழல்களையும் இணைத்து இந்நூலில் எழுதியிருக்கிறார். நகரங்களைவிட கிராமங்களில்தான் தீண்டாமையின் கொடூரங்கள் மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதைப் பல்வேறு அனுபவங்களின் வழியாகத் தொகுத்துக் கூறியிருக்கிறார். இந்து, இஸ்லாம், கிறித்தவம் ஆகிய மதங்களின் வழியாகவும் சாதியம் குறித்து இந்நூலில் உரையாடுகிறார். அவ்வகையில், ஒடுக்கப்படவர்களிடம் வேறுபாடு காட்டாத இஸ்லாம் மதம் குறித்த பதிவுகள் முக்கியமானவை. அதேநேரத்தில் இஸ்லாம் மதத்தில் கடைப்பிடிக்கப்படும் பெண்கள் மீதான ஒடுக்குதல்களையும் தவறாமல் குறிப்பிட்டிருக்கிறார். முஸ்லிம் பெண்களுக்குத் திரைப்படம் பார்க்க அனுமதியில்லை. அவர்கள், திரைப்படம் பார்த்தவர்களிடம் கதைகேட்டுத் தங்கள் திரைப்பட ஆர்வத்தைத் பூர்த்திச் செய்துகொள்கின்றனர்; அதற்காகச் சிறுவர்களிடம் காசு கொடுத்துத் திரைப்படங்களுக்கு அனுப்பியும் வைக்கின்றனர். கே.ஏ.குணசேகரன் இதனை விமர்சனமாக முன்வைக்கவில்லை. காலங்காலமாக நடந்துவரும் வழமையான நடைமுறைகளாகவே பார்த்திருக்கிறார்.

தனது ஊரைவிட்டுப் பிற ஊர்களுக்குச் செல்லும்போதும் சாதி நிழலைப்போலப் பின்தொடர்கிறது. ‘நீங்க என்ன ஆளுங்க?’ என்ற கேள்விக்குப் பல நேரங்களில் பதில் சொல்ல முடிவதில்லை. சாதி குறித்த எவ்விதப் புரிதலும் இல்லாத சிறுவர்களிடம்கூட இச்சமூகம் சாதியைத் தேடுகிறது. மனிதர்களைச் சாதியால் கண்டுணர்தல் என்ற மோசமான மனநிலை மிகச் சாதாரணமாக ஆதிக்கச் சாதியினரிடம் இருப்பதைக் கண்டு மாணவப் பருவத்திலேயே கே.ஏ.குணசேகரன் அதிர்ச்சியடைகிறார். சாதி இந்துக்கள் தலித்துகளை வீட்டில் மட்டுமல்ல, தெருவில்கூட அனுமதிப்பதில்லை; அந்தவகையில் கிறித்தவ மதம் நெகிழ்வுத் தன்மையுடன் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

இரட்டைமலை சீனிவாசனின் ‘ஜீவிய சரித்திர சுருக்கம்’ வெளியானதற்கும் கே.ஏ.குணசேகரனின் ‘வடு’ வெளியானதற்கும் இடையில் அறுபத்தாறு ஆண்டுகால இடைவெளி உள்ளது. இரு நூல்களிலும் இடம்பெற்றுள்ள சாதி சார்ந்த வன்முறைகளில் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை. சாதி பற்றிய கருத்தியலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

கிணற்றில் விழுந்துவிட்ட முஸ்லிம் குழந்தையைக் காப்பாற்றிய நிகழ்வையும் கே.ஏ.குணசேகரன் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். அச்சமூகத்தினர் திரண்டுவந்து இவருக்கு நன்றி தெரிவிக்கின்றனர். இவர் படிப்பதற்கு உதவியும் செய்கின்றனர். இந்து மதமும் இஸ்லாம் மதமும் தலித்துகளை இருவேறு தன்மைகளில் அணுகியதை நூலின் பல இடங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறார். கே.ஏ.குணசேகரனின் மைத்துனர் ஒரு மருத்துவர். அவர் ஆதிக்கச் சாதியினரைத் தொடலாம். உயிரைக் காப்பாற்றலாம். மதுரையில் அவர் ‘டாக்டர் தம்பி’; ஊரில் ‘டேய் முனியாண்டி.’ இந்த இரட்டை மனநிலையைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை. வானொலியில் கே.ஏ.குணசேகரனின் பாடல்கள் ஒலிபரப்பாகின்றன. ‘இளையான்குடி குணசேகரன்’ என்று இவர் பெயரைக் குறிப்பிடுகின்றனர். ஊர்க்காரர்கள் தம் ஊருக்குப் பெருமை வர வேண்டும் என்று ‘மாரத்தை குணசேகரன்’ என்று சொல்லச் சொல்கிறார்கள். கல்விதான் ஒடுக்கப்பட்டவர்களைத் தீண்டாமையிலிருந்து காப்பாற்றும் என்பதற்கு இவரது வாழ்வும் ஓர் உதாரணம். இவர் எம்.ஏ., தமிழ் படித்தது வரையிலான காலகட்டத்தை மட்டும்தான் இந்நூலில் எழுதியிருக்கிறார். பணிபுரிந்த இடங்களில் சாதி எவ்வாறு செயல்பட்டது என்பதை எழுதியிருந்தால் அதன் நவீன வடிவத்தைத் தெரிந்துகொண்டிருக்கலாம்.

சாதியைக் கண்டுபிடிக்க இச்சமூகம் பல வழிகளைக் கண்டுபிடித்துள்ளது. அதில் முதன்மையானது நிறம். நிறத்தைத் தொடர்ந்து பெயரையும் வசிப்பிடத்தையும் வைத்துச் சாதியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வார்கள். பேச்சு வழக்கைக் கொண்டு சாதியை அறிய முயல்பவர்கள் உண்டு. ஏனெனில், மொழி நிலத்துடன் தொடர்புடையது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் தஞ்சை பெரிய கோயிலுக்குள் செல்ல நேர்ந்த பதற்றமான தருணத்தை கே.ஏ.குணசேகரன் குறிப்பிட்டுள்ளார். நம்மை உள்ளே விடமாட்டார்கள் என்ற எண்ணம் அவருக்கே ஆழமாக இருக்கிறது. பள்ளிகளைப் போன்று கோயிலும் அனைவருக்குமானது. ஆனால், கோயிலும் தலித்துகளுக்கு அந்நியமாகவே இருக்கிறது.

கே.ஏ.குணசேகரனின் ‘வடு’ நூலைத் தொடர்ந்து, தலித் தன்வரலாற்று நூலில் குறிப்பிடத்தக்க புதியவரவு, திருக்குமரன் கணேசன் எழுதிய ‘கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்’ (2022) நூல். சாதியும் தீண்டாமையின் வடிவங்களும் இக்காலத்தில் எப்படி உருமாறியிருக்கின்றன என்பதை இந்நூலைக் கொண்டு புரிந்துகொள்ள முடியும். சாதி என்றால் என்னவென்றே புரியாத இளம் வயதில் ஏற்பட்ட சாதிய வடுக்களைத் தற்போது நினைவுகூர்ந்திருக்கிறார். திருக்குமரனுக்கு இளம் வயதில் நேர்ந்த இழிவுகளுக்கெல்லாம் சாதி வெவ்வேறு வழிகளில் காரணமாக இருந்திருக்கிறது. தவிர, இது உயர்சாதிக்காரரின் வீடு; இதற்குள் நாம் நுழையக்கூடாது என்ற மனத் தடையை இயல்பாகவே ஒவ்வொரு தலித்துகளுக்குள்ளும் இச்சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. ஏதோவொரு காரணத்திற்காக அதனை மீறும்போது உருவாகக்கூடிய பதற்றங்களைத் தலித் இலக்கியங்களும் தன்வரலாற்று நூல்களும் மிகக் குறைவாகவே பதிவு செய்திருக்கின்றன. திருக்குமரன், ஆரம்பப் பள்ளி நாட்களில் ஐயர் வீட்டிற்குள் நுழைய நேர்ந்த நிகழ்வு அத்தகையதொரு நிகழ்வுதான். இளம் வயதில் சாதி பார்த்துப் பழகாத நண்பர்கள், வளர்ந்தவுடன் சாதிய வலைப்பின்னலுக்குள் சிக்கிக்கொள்வதை இந்நூலின் வழியாக நிறுவி இருக்கிறார்.

அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்துவதினூடாகத் தலித்துகளையே இழிவுபடுத்துவதாகக் கருதிக்கொள்ளும் ஆதிக்க மனநிலையுள்ள சில ஆசிரியர்களின் செயல்பாடுகளையும் திருக்குமரன் விமர்சனம் செய்துள்ளார். கே.ஏ.குணசேகரன் எழுத்திலிருந்து திருக்குமரன் இந்த இடத்தில்தான் வேறுபடுகிறார். சாதி சார்ந்த ஒடுக்குதலின்மீது தன் கடுமையான எதிர்வினையையும் திருக்குமரன் பதிவு செய்கிறார். தீண்டாமையின் வடிவங்கள் இன்று மாறியிருக்கின்றன. புற வடிவத்திலிருந்து அக வடிவத்தை நோக்கி நகர்ந்திருக்கின்றன. சாதியை மறைத்துக்கொண்டு வாழ்ந்தாலும் அதனைக் கண்டுபிடிப்பதிலேயே ஆதிக்கச்சாதியினர் குறியாக இருக்கின்றனர். தன் சாதி இழிவுக்கு உள்ளாகும்போதெல்லாம் நண்பர்களாக இருந்தாலும் திருக்குமரன் எதிர்வினையாற்றுகிறார். இந்தச் சாதிய மனநிலை இன்று உருவானதல்ல; சமூகம் அவர்களை அப்படிப் பழக்கப்படுத்தியிருக்கிறது என்ற புரிதலுடனேயே ஒவ்வொரு சம்பவத்தையும் கடந்து சென்றிருக்கிறார். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தலித்துகள்மீது வன்மத்தை வெளிப்படுத்த உயர்சாதியினர் தயாராகவே இருக்கின்றனர். ஆனால், தலித்துகளின் இன்றைய எழுச்சி அதற்குத் தடையாக இருக்கிறது என்ற கருத்தையும் முன்வைக்கிறார்.

கல்வி உதவித்தொகை என்ற சொல்லே இன்று சாதிமயப்பட்டிருக்கிறது. இச்சொல் ஒடுக்கப்பட்டவர்களையே குறிப்பதான தோற்றம் இன்று இயல்பாகவே உருவாகிவிட்டது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த மாணவர்களுக்கும் அரசு கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால், Scholarship என்ற சொல் தலித்துகளுக்கானது. தலித்துகளை இழிவுபடுத்துவதற்கான சொல்லாகக் கல்வி நிறுவனங்கள் இச்சொல்லைப் பயன்படுத்துகின்றன. அதனாலே பல மாணவர்கள் தங்கள் சாதியை மறைத்துக்கொள்ளவே விரும்புகின்றனர். சாதியக் கொடுமைகள் குறித்த எந்தப் புரிதலும் இல்லாத ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மாணவர்கள், தலித்துகளுக்குக் கொடுக்கப்படும் உதவித்தொகைகளைக் கண்டு வெளிப்படையாகவே முணுமுணுக்கின்றனர். கே.ஏ.குணசேகரனும் திருக்குமரனும் அரசு வழங்கும் கல்வி உதவித்தொகையினூடாக வெளிப்படுத்தப்படும் சாதி வன்மம் குறித்து ஒரே தன்மையில் எழுதியுள்ளனர்.

அரசியல்வாதிகள் தலித்துகளை எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை மிகத் தெளிவாக திருக்குமரன் எழுதியிருக்கிறார். 1967இல் முதன்முதலில் அமைந்த தி.மு.க. ஆட்சியில் அரிசன நலத்துறை தொடங்கப்பட்டது. அதன் அமைச்சர் பொறுப்பு சத்தியவாணி முத்துவுக்கு முதன்முதலாக வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர் நலத்துறை என்பது தலித்துகளுக்கான அமைச்சரவை இடஒதுக்கீடாகவே திராவிடக் கட்சிகள் கருதுகின்றன. இன்றுவரை கள யதார்த்தம் அப்படித்தான் இருக்கிறது. கட்சிக்காக எதனையும் துணிந்து செய்யக்கூடிய அடியாளாகவே தன் தந்தையைத் திமுக கருதியதாக திருக்குமரன் எழுதியிருக்கிறார். சமத்துவம் பேசும் கட்சிகளுக்குள்ளேயே சாதி தீவிரமாகச் செயல்படுகிறது. வாக்குவங்கி அரசியலுக்காகவே அரசியல் கட்சிகள் தலித்துகளைப் பயன்படுத்திக்கொள்கின்றன என்பதை மறுக்க முடியாது. தன் அப்பா ஊராட்சி மன்றத் தலைவராகிவிடக் கூடாது என்பதில் ஆதிக்கச் சாதியினர் திட்டமிட்டுச் செயல்பட்டதை திருக்குமரன் தரவுகளுடன் குறிப்பிடுகிறார்.

தலித்துகள் வயதில் மூத்தவர்களாக இருந்தாலும் ஆதிக்கச் சாதியினர் பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள். அது, சாதி அவர்களுக்குக் கொடுத்திருக்கிற அதிகாரம். ஆதிக்கச் சாதியினரை ‘யே… பழனி’ என்று அழைத்தத் தன் பெரியப்பாவை ஆட்களை வைத்து அடித்த நிகழ்வைத் திருக்குமரன் எழுதியிருக்கிறார். ‘என்ன பேரச் சொல்லிக் கூப்டுற அளவுக்கு ஒனக்கு திமுறு மசுறாடா’ என்று கூறிக்கொண்டே, மூர்ச்சையாகும் அளவுக்கு அவரை அடித்துவிடுகின்றனர். கே.ஏ.குணசேகரனும் இதுபோன்ற ஒரு நிகழ்வை எழுதியிருக்கிறார். ‘ஏன்டா, எங்க மரத்துல இருக்கிற பூவையும் பிஞ்சையும் இப்படி இலையோட அத்துப் போடுற?’ என்று கேட்ட கே.ஏ.குணசேகரனும் ஆதிக்கச் சாதியினரால் மிரட்டப்படுகிறார். அவர் தாத்தா காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறார். ‘யாரைப் பாத்து, டேய்னு கூப்புடுவ’ என்ற சாதி ஆணவத்தை வெளிப்படுத்துகின்றனர். அடி உதையிலிருந்து அவர் தாத்தா காப்பாற்றுகிறார். இரு நிகழ்வுகளுக்கும் இடையில் மறைந்திருப்பது ஆதிக்கச் சாதி மனோபாவம். உயர்சாதியினர் எதிரில் தெரியாமல்கூட உட்கார்ந்துவிடக் கூடாது. அவர்கள் வாய்க்கால் வரப்புகளில் நடந்துவரும்போது எட்டடி தள்ளிநின்று வழிவிட வேண்டும். காலம் மாறினாலும் சாதிய ஒடுக்குதல்கள் இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்குத் தலித் தன்வரலாற்று நூல்களே சான்று.

தலித் தன்வரலாற்று நூல்கள் நிறைய எழுதப்பட வேண்டும். அப்போதுதான் மனித சமூகம் எவ்வளவு முரண்பாடுகளுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். தலித் தன்வரலாற்று நூல்கள்தாம் சாதியையும் அதன் வன்மத்தையும் வெளிப்படையாகப் பேசுகின்றன.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!