சென்ற வருடம் தமிழில் பெரும் வெற்றி பெற்ற படங்களுள் ‘விக்ரம்’மும் ஒன்று. அதுவரையிலும் மூன்றே திரைப்படங்களை உருவாக்கி, அடுத்ததாக கமல்ஹாசன் போன்றொரு நடிகரை ஒப்புக்கொள்ளச் செய்து, அதை வெற்றிப் படமாகவும் மாற்றி, இவையனைத்திற்கும் முத்தாய்ப்பாகப் பார்வையாளர்களை ஒன்றுக்கு மேற்பட்ட முறை காணச் சொல்லித் தூண்டுவது ஓர் இயக்குநருக்குச் சாதாரண விஷயமல்ல. இயல்பாகவே இது தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாமல், இந்தியத் திரையுலகத்தின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது. தற்போது லோகேஷ் கனகராஜ் இந்தியத் திரைத்துறையின் முன்னணி இளம் இயக்குநர்களுள் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக விஜய் மீண்டும் லோகேஷுடன் இணைந்தார். அடுத்து ரஜினிகாந்த்தை இயக்கும் செய்தியையும் அதன் அறிவிப்புப் போஸ்டர்களையும் இணையத்தில் கண்டிருப்போம். இவற்றையெல்லாம் பார்க்கும்போது லோகேஷ் கனகராஜ் தனது திரைப்பட வாழ்க்கையில் ஓர் உயரிய இடத்தில் இருக்கிறார் என்று நிச்சயமாகக் கூறலாம். அவரது படங்களில் தென்படும் கூறுகள் குறித்துப் பேச இதைவிடச் சிறந்த வாய்ப்பு வேறு இருக்க முடியாது.
தமிழ்த் திரையுலகத்துக்குள் நுழைந்தது முதலே தன்னையோர் ஆக்ஷன் பட இயக்குநராகவே பகிரங்கமாக அறிவித்துக்கொண்டவர் லோகேஷ் கனகராஜ். 1980/90களில் அமெரிக்காவிலும் ஹாங்க் காங்கிலும் உருவாக்கப்பட்ட ஆக்ஷன் படங்களே தனக்கு ஆதர்சமானவை என்று அவர் பலமுறை கூறியிருக்கிறார். இதுவே அவரது படங்களில் இடம்பெறும் பெரும்பாலான சண்டைக் காட்சிகள், ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் சாதனங்களின் குறைவான பயன்பாட்டில், வெறும் உடல்களை மட்டுமே மையப்படுத்துபவையாக விளங்கக் காரணமாக இருக்கலாம். உடல்களை வைத்து மேற்கொள்ளப்படும் இந்தச் சண்டைக் காட்சிகள் பார்வையாளர்களுக்கொரு பிரத்யேக புத்துணர்ச்சியை வழங்கக் கூடியவை. அதே சமயம் அவை எந்தவோர் ஆழமுமின்றி அமைவதை லோகேஷ் கனகராஜ் விரும்புவதில்லை. இந்தச் சண்டைக் காட்சிகள் யாவும் தகுந்த முற்காட்சிகளுடன் அது நிகழ்த்தப்படும் நபர்களின் உள உணர்வு சார்ந்திருப்பதை உறுதி செய்யும் வகையில் இவை வடிவமைக்கப்படுகின்றன. இந்த வன்முறைக்கான நியாயங்களுள் பிரதான அம்சமாக லோகேஷ் கனகராஜ் கருதுவது போதை வஸ்துக்கள் – கொக்கைன்.
என்னதான் லோகேஷ் கனகராஜ் கூறுவது போல தமிழ்ச் சமூகம் கொக்கைன் பயன்பாட்டால் புறையோடிப் போயிருக்கும் சமூகமல்ல என்றாலும், போதை வஸ்துக்களின் பயன்பாடு அவரது சில திரையாக்கல் முறைகளுக்கு அர்த்தம் சேர்ப்பதாய் உள்ளன. குறிப்பாக LCUவை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இடம்பெறும் அனைத்து வில்லன் கதாபாத்திரங்களின் குணங்களும் இந்தப் போதை வஸ்துக்களின் இலாப வணிகம் மற்றும் நுகர்வைச் சுற்றியிருப்பதைக் காணலாம். வில்லன் கதாபாத்திரங்களின் இந்த இராட்சச குணத்திற்கு நியாயம் சேர்க்க லோகேஷ் கனகராஜ் தெரிவு செய்திருக்கும் போதை வஸ்து கொக்கைன். ‘லியோ’வில் புதிதாக ஒரு போதைப் பொருளை அறிமுகம் செய்துவைத்திருக்கிறார்.
அமெரிக்காவிற்குப் பிறகு அதீத அளவில் கொக்கைன் வணிகத்திலும் பயன்பாட்டிலும் ஈடுபடும் பகுதிகளாக சீனாவும் ஹாங்க் காங்குமே விளங்குகின்றன. 2023ஆம் ஆண்டுக்கான கொக்கைன் பயன்பாடு குறித்த உலகளாவிய அறிக்கையைச் சர்வதேசப் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் குற்றவியல் நிறுவனம் (‘Global Report on Cocaine 2023’ by UNODC) வெளியிட்டது. கொக்கைன் பெரும்பாலும் பொழுதுபோக்கிற்காக இந்தியாவில் நுகரப்படுவதில்லை என்றும், அது மேற்கிலிருந்து வரும் கொக்கைனைத் தென்கிழக்கு நாடுகளுக்கும் ஆஸ்திரேலிய கண்டத்திற்கும் கைமாற்றிவிடும் இடைநிலை நாடாக விளங்குவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. இந்தக் குறைவான பயன்பாட்டளவைக் கணக்கிலெடுத்துக்கொண்டாலும், பஞ்சாப், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களே கொக்கைன் பயன்பாட்டிற்கு அதிக வாய்ப்பு இருக்கும் இந்திய பகுதிகளாக அவ்வறிக்கை அடையாளம் காண்கிறது.
சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் கொக்கைன் வணிகமும் சுழற்சியும் எதிர்கால இந்தியா / தமிழ்நாட்டை எதிர்நோக்கியிருக்கும் சிக்கலாக இருக்க வாய்ப்புள்ளதே தவிர அது சமகால பிரச்சினை அல்ல. அப்படிக் கூறுவதால் இந்தியா / தமிழ்நாட்டில் எந்தவிதப் போதைப் பொருள் பிரச்சினையும் இல்லை என்று அர்த்தமல்ல. நம் சமூகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய போதைப் பொருள், கஞ்சா. இதை முற்றிலும் தவிர்த்துவிட்டு, லோகஷ் கனகராஜ் தனது படங்களில் காட்டுகின்ற கொக்கைன் புறையோடிப் போயிருக்கும் தமிழ்ச் சமூகத்தினையும் அதைச் சுற்றி அவர் உருவாக்கியிருப்பதாகச் சொல்லும் கேங்ஸ்டரிசத்தையும் நாம் சந்தேகத்தோடே பார்க்க வேண்டும். ஒருவேளை எதிர்காலத்தில் கொக்கைன் பயன்பாடு தற்காலத்தில் இருப்பதைவிட பல்மடங்கு அதிகரித்துவிட்டால் என்ன செய்வது என்ற அதீத பயம் இயக்குநரை இவ்வாறு யோசிக்கச் செய்கிறதோ என்னவோ. ஆனால், மேலே குறிப்பிட்டிருப்பது போல, நடப்புச் சூழலின் ஆவணங்கள் இதற்கு முற்றிலும் மாறானவொரு பார்வையையே நமக்கு வழங்குகிறது. எதிர்காலம் எப்படியோ, கொக்கைன் இன்று தமிழ்நாடு எதிர்கொள்ளும் அதிமுக்கியப் பிரச்சினை இல்லவே இல்லை.
பிறகு, எதனால் லோகேஷ் கனகராஜ் தனது படங்கள் அனைத்திலும் கொக்கைனையும் இதர பெயரறியாத போதைப் பொருட்களையும் குறித்து இவ்வளவு விலாவரியாகப் பேச வேண்டும்? பார்வையாளர்கள் மத்தியில் இந்தத் திரைப்படங்களுக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கக் காரணமென்ன?
லோகேஷ் கனகராஜின் எண்ணற்ற நேர்காணல்களைக் காணும்போது அவர் திரும்பத் திரும்பக் கூறுவது ஆக்ஷன் திரைப்படங்களின் மீது அவருக்கிருக்கும் ஆர்வமும் அத்தகைய திரைப்பட வகைமையின் கூறுகளுக்கு முழு நியாயம் சேர்க்கும் வகையிலொரு திரைப்படத்தை உருவாக்குவது குறித்தும்தான். இதற்காக அவர் கைக்கொள்ளும் யுக்திகளுள் ஒன்றுதான் பெரும் உழைப்பைக் கோரும் அசகாய சண்டைக் காட்சிகள்.
Illustration: Negizhan
இத்திரைப்படங்களின் வில்லன்கள் மேற்கொள்ளும் வன்முறை பெரும்பாலும் அவர்களின் அதீத கொக்கைன் பயன்பாட்டினால் உதிப்பது. ஒரு நாயகனுக்கு இருப்பது போன்ற குடும்பப் பிணைப்புகளெல்லாம் இவர்களுக்கு இருப்பதில்லை. இந்த வில்லன்கள் கொக்கைன் பீடிப்பினால் தமக்குள்ளிருக்கும் இருள் முகங்களை எந்தச் சமூகச் சட்டத்திட்டங்களுக்கும் அடிபணியாமல் வெளியில் காட்டத் தயங்காதவர்கள். வில்லன்களின் இந்தக் குணாதிசியம் அவர்கள் மேற்கொள்ளும் வன்முறைக்குப் பயங்கொள்ளக் கூடியவொரு பரிமாணத்தை வழங்கிவிடுகிறது. அதற்கு மனிதநேயமோ நாகரிகமோ துளியும் கிடையாது.
இப்படங்களின் நாயகர்களும் கிட்டத்தட்ட இதே விதமான வன்முறைகளில் ஈடுபடுகிறவர்கள்தாம் என்றாலும், இந்த இரண்டு துருவங்களுக்கும் இடையிலிருக்கும் வேறுபாடு: ஒருமுனையில் இவை ஒரு சுயமோகியுடைய இருள் உணர்ச்சிகளின் வெளிப்பாடு என்றால், மறுமுனையில் அது ஒருவன் தனது குடும்ப உறவுகளைப் பற்றிக்கொள்ள எடுக்கப்படும் முயற்சிகளாக இருக்கின்றன. இதுவே நாயகர்களின் வன்முறையை நியாயம் என்றும் வில்லனின் வன்முறையைக் கெடுதியென்றும் பிரித்துணர வகை செய்கிறது.
முன்பு கூறியது போல, கொக்கைன் என்பது தமிழ்நாட்டில் இதுகாறும் அத்தனை பெரிய சிக்கலாக இல்லாதபோதிலும், கொக்கைன் உண்டு செய்யும் சமூக – அரசியல் – உளவியல் பாதிப்புகளுக்குச் செல்ல துளியும் மனமில்லாமல், வில்லனின் வன்முறை முகத்தைக் காண்பிக்க மட்டுமே அதை லோகேஷ் பயன்படுத்துகிறார். இந்த வில்லன்கள் யாரும் அரசாங்க நிறுவனத்தைச் சேர்ந்தவர்களாக இல்லாமல், தமிழ்ச் சமூகத்துக்குச் சற்று அந்நியமானவொரு போதை வஸ்துவின் கேங்ஸ்டர்களாக இருப்பதாலேயே லோகேஷ் கனகராஜ் உருவாக்கும் ஆக்ஷன் படங்கள் வெகுமக்களின் யதார்த்த அரசியலோடு பொருந்தும் வாய்ப்பை இழந்துவிடுகின்றன.
லோகேஷ் கனகராஜ் காண்பிக்கும் நிலப்பகுதிகள் உண்மையிலேயே இந்தியாவைச் சேர்ந்த நகரங்கள்தானா? ‘கைதி’யில் கதை சென்னையில் நிகழாமல் திருச்சியில் நிகழ்வதாகக் காண்பிக்கப்பட்டிருக்கும். இதில் எந்தவொரு நம்பத்தகுந்த முகாந்திரமும் இல்லையென்றாலும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இப்படங்கள் சுவாரசியமாகவும் மயிர்க்கூச்செரியவும் வைக்கிறதென்றால் அதற்கு ஒரு காரணம் மட்டுமே இருக்க முடியும். லோகேஷ் கனகராஜ் காண்பிக்கும் அளவிற்கு கொக்கைன் புறையோடிப் போன நிலப்பரப்பு அமெரிக்கா மட்டுமே. அவரது திரையாக்கல் முறை அமெரிக்க ஆக்ஷன் படங்களை மையப்படுத்தியுள்ளது என்று அவரே ஒப்புக்கொண்டதாகக் கட்டுரையின் முந்தைய பகுதியில் கூறியிருந்தோம். அவ்வாறு, திரையாக்கல் முறையிலும் அமெரிக்க ஆக்ஷன் படங்களைத் தழுவியும், அவர் காண்பிக்கும் கொக்கைன் சமூகங்கள் நிஜமல்ல, அவை பெரும்பாலும் அமெரிக்க நிலையை இந்திய / தமிழ் கடைநிலை மக்களைக் கொண்டு நிரப்பப்பட்டப் புனைவுச் சமூகங்கள் என்று கூற இடமுண்டு. தற்போது லோகேஷ் கனகராஜின் லிசிஹி என்ற மார்வல் அம்சம் நிலைப்பெற்றுவருவது இவ்விடத்திலிருந்து காணும்போது நமக்கு எவ்வித ஆச்சரியத்தையும் வழங்காது.
இவ்வாறு அமெரிக்க முன்னுதாரணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும்போது, அதிலும் கதாநாயகனை முதன்மையான வீரனாகக் காண்பிக்க முனையும் அவர், அதனை வெற்றிகரமாக நிகழ்த்த தனது வில்லன் கதாபாத்திரங்களை மிகவும் கொடூரமானவர்களாகவும் கட்டுக்கடங்காதவர்களாகவும் காண்பிக்க முயல்வதை நாம் காணலாம். இந்த ஆக்ரோஷமான வில்லன் சித்தரிப்பு ஏதோவோர் இடத்தில் நாயகனைக் காட்டிலும் வில்லன்களின் பக்கம் இளைஞர்களை அதிகம் ஈர்க்கும் சூழலை உருவாக்கிவிடுகிறது. ‘கைதி’ திரைப்படத்தின் அர்ஜுன் தாஸ் கதாபாத்திரம், ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் விஜய் சேதுபதி, ‘விக்ரம்’ திரைப்படத்தின் சூர்யா ஆகியவை ரசிகர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் அனைவரும் அறிந்ததுதான். இவற்றைக் கண்டு மெய்சிலிர்க்கும் ரசிகர்களுக்குக் கொக்கைனை உள்ளிழுத்துக்கொண்ட பிறகு தாம் நடந்துகொள்ள வேண்டிய விதங்கள் யாது என்பதைச் சொல்லித் தரும் வலுவான ஐடியல்களாக அவர்களுக்கு இந்தக் கதாபாத்திரங்கள் விளங்குகின்றன. ஒருவேளை நாம் முன்வைத்த எதிர்காலத் தமிழ்நாட்டில் கொக்கைன் புழக்கம் அதிகமாகும் பட்சத்தில், அது குறித்த அனைத்துவிதமான அறிவையும் இந்தக் கதாபாத்திரங்களின் உதவியோடே பார்வையாளர்கள் முன்கூட்டியே அறிந்துவிடலாம். சிக்கல் இதைவிட ஒரு படி ஆழமானது. லோகேஷின் வில்லன்கள் போதைப் பொருள் பயன்பாட்டைச் சுயபெருமையாகவும் ‘கெத்து’ஆகவும் பார்வையாளர்களுக்குக் கடத்துவதுதான் உண்மையிலேயே அபாயகரமானது.
குறிப்பாக, என்னதான் லோகேஷ் கனகராஜிடமிருந்து மையநீரோட்ட சினிமா பல வெற்றிப் படங்களைப் பெற்றுக்கொண்டாலும், அதைப் பார்வையாளர்கள் உள்வாங்கும் இடத்தில் அவர்கள் தெளிந்த சில உளப்பாங்குகளைக் கொண்டிருக்க வேண்டியது இன்றியமையாதது. லோகேஷின் உலகங்கள் நிஜமல்ல. புனைவு / அபுனைவு என்ற ரீதியில் கூட இதை முன்வைக்கவில்லை. யதார்த்தத்துக்கும் இப்படங்கள் நிகழும் சூழல்களுக்கும் இடையில் எந்தவித ஒற்றுமையும் இல்லாத நிஜத்தை ஏற்றுக்கொள்ளும் இயங்கியலைக் கொண்டே இப்படங்கள் அர்த்தங்கொள்ளப்பட வேண்டும் என்பதே நிதர்சனம். இதுவரை நிகழாதவோர் அம்சத்தை அது உண்மையில் நிகழ்வதாக ஒரு திரைப்படம் மீண்டும் மீண்டும் பதிவு செய்யும்போது, அந்தத் துர்பாக்கிய நிலை ஒருவேளை நிஜமாகும் சூழலில், பார்வையாளர்களுக்கு அது எந்த அதிர்ச்சியையோ பொறுப்புணர்ச்சியையோ ஏற்படுத்தவே செய்யாது.