நிலம்: அடையாளமும் அப்புறப்படுத்துதலும்

ம.கண்ணம்மாள்

ங்கு வழக்கிலுள்ள பேச்சுகளை, வாய்மொழி வழக்காறுகள், வாய்மொழியற்ற வழக்காறுகள் எனப் பகுக்கலாம்.

வாய்மொழியாகக் கூறுப்படுவது வாய்மொழி வழக்காறுகள். இது,

1.நாட்டார் பாடல்கள்

2.கதைக்கூறல்

3.பழமொழி, விடுகதை

என்பவற்றில் அடங்கும்.

இதில், கண்ணால் காண்பதும், பிறர் சொல்லக் கேட்பதுமாக ஒரு செய்தி பரவும். இதனுள், கண்ணால் கண்டவரின் கூற்று வாய்மொழியாகச் சொல்லப்படும்போது, அதற்கான ஆவணப்படுத்தலென்பது இல்லாமற் போய்விடுகிறது. தான் கண்ட, கேட்ட ஒரு செய்தியை மற்றவருக்குத் தெரிவிக்கும்போது அதைக் கதைக்கூறல் அல்லது தகவல்பரிமாற்றம் எனலாம். இதில் ‘சைகை’ முதலிடம் பெறும். இதுபோல, வாய்மொழி பேச்சில் வெறும் பேச்சாகவே இல்லாமல் தான் உணர்ந்த, உணரவிருக்கின்ற அனைத்தையும் எழுத்தின் வழி ஆவணப்படுத்தியதாகக் கவிஞர் வினையனின் ‘எச்சிக்கொள்ளி’ தொகுப்பினை உணர முடிகிறது.

இதற்கு, நிலப்பரப்பும் முக்கியமானதாயிற்று. மொழி என்பதே நிலத்துடன் அடையாளப்படுத்தப்படுவதுதான். அகம், புறம் என்பதையும் உடல், நிலத்துடன் பொருத்திப் பார்க்கலாம். அகம் – உடல், நிலம் – புறம் எனப் பகுக்கலாம். நிலம் வழியாகத்தான் ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறை, மனித உடல்களின் கட்டமைப்புகள், முறைமைகள், மாற்றங்கள் சிந்தனை போன்றவற்றை அறியமுடிகிறது. மற்றும், பொது அறிமுகம், நினைவுகள் இது போல்வனவெல்லாம் திணைப் பாகுபாட்டில் மொழி கொண்டுள்ளது.

ஒரு மொழியின் துல்லியமான இலக்கு என்பது மனித உடலை நிலத்துடன் பிணைப்பது மட்டுமே. அதோடு இல்லாமல், இவ்வுடல்  நிலம், பொழுதோடு இயைந்தது.

“முதல் எனப்படுவது நிலம் பொழுதிரண்டின்
இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே”

(தொல்-அகத்-நூ-4)

மனித உடலை அடையாளப்படுத்துவதும், முக்காலத்திற்குள் நிறுத்துவதும், பின்பு மனித உடல்களின் வழியிலான அத்தனை பயணங்களிலும் நினைவு கொண்டிருப்பதும் நிலம் மட்டுமே.

தன் நிலத்தின் தானுணர்ந்த தன் மீது நிகழ்த்தப்பட்டதே சொற்கோவைகளாக ‘எச்சிக்கொள்ளியாக’ நிற்கிறது கவிஞர் வினையனால்.

இப்படியாகப் பார்க்கப்படும் இந்த வாழ்க்கையானது யதார்த்தவாதத்தை அடிப்படையாகக் கொண்ட எழுத்து வகையாக, “எரியும் என் மேல் கங்குகளாய் மின்னுகிறது காலம்” என வினையனால் சொல்லப்படுகிறது.

தோழர் ஜமாலன் குறிப்பிடுவது போல, “உணர்வு (feeling) ஓர் உடலுக்குள் ஏற்படும் புலனெழுச்சி, அதாவது சென்சேஷன் (sensation). உணர்ச்சி (emotion) முன்னரே நடந்த அனுபவத்தால், ஏற்கெனவே ஏற்பட்ட தனது சூழலில் அனுபவங்களில் பெயரிடப்பட்ட ஒன்று. அதாவது ஓர் சமூக உடலின் தனிப்பட்ட வரலாற்றுடன் தொடர்புடையது உணர்ச்சி, மொழி மற்றும் அனுபவத்துடன் உறவு கொண்டது” (‘பிரதியில் கிளைக்கும் பிம்பங்கள்’, 2018).

இங்கு, எல்லாமே ஏதோவொரு உறவுகளோடு தொடர்புடையது, வாழ்க்கையினை அர்த்தப்படுத்துதலும் கூட எனலாம். ஒரு வலைக்குள் சிக்கியது போலவும் கூட சில நேரங்களில் நிகழ்ந்துவிடுகிறது.

வரலாற்றில் மனிதத்தன்மைக்கும், வாழ்வின் இயக்கத்துக்குமான இருப்பு உறவுகள். தின வாழ்விற்கான ஓர் அடையாளம் உறவுகள். இதில், குடும்பம் என்பதும் அடங்கும். குடும்பம் என்பது ஒரு நிறுவனம். இதற்குள், ஏகப்பட்ட உடல்கள் ஆட்சி செய்கின்றன. ஏற்றம், இறக்கம், கேள்வி கேட்டல், பதிலளித்தல் இப்படியாக உள்ள சூழலில்,

“சோகை யாலிழுத்துக் கட்டிய
கருப்பங் கழியோடும்
இஞ்சி மஞ்சள் கொத்தோடும்
பொங்க வருச வக்கெ
பொறந்தவன் வருவானென்று
ஏழாம் பிள்ளைக்குப்
பால் கொடுத்துத் தேற்றி
உறக்கத்திலாழ்த்தினாள்”

என்ற வரிகளில், இரு விதமான பொருள் பார்க்கலாம்.

ஓர் உடல் பிள்ளை பெற்றுக்கொண்டே இருப்பது, அதுவும் ஏழு பிள்ளைகள். அந்தக் குடும்பத்தில் உணவு சமைத்தலுக்கான சூழல் இல்லாதது. இங்கு ஏன் ஓர் உடல் ஏழு பிள்ளைகள் பெற்றுக்கொள்ளத் துணிகிறது? அக்குடும்பத்தின் வாழ்வாதாரம் என்னவாக இருக்கிறது?

கோடித்துணி யெடுப்பவன்
வந்திருக்கிறான்
சோத்தை ஆக்கு
குழம்பை வையென
உத்திரத்துப் பல்லியொன்று
வெறுந் நாயே கதவத் தொற
நாதாங்கிய நல்லாப் போடென்கிறது

தன்னுடன் பிறந்த / உறவு முறை செய்ய விதிக்கப்பட்டவன் வரும் சூழலில், அவ்வீட்டில் சமைக்க எதுவுமில்லாத நிலையில் உத்திரத்துப் பல்லி ஏளனம் செய்வது போல ஒலி எழுப்பி “கதவுதொற நாதாங்கிய நல்லாப் போடென்கிறது.” இது வாய்மொழியாகப் பரவும் பழமொழியாக வினையனால் சுட்டப்பட்டடுள்ளது.

மற்றொரு கவிதையில், “பெருமைக்குப் பிள்ளை பெற்று” என நீளுகிறது.

“தலையை நீட்டி – அள்ளிக்
கட்டிக் கொண்டது தான் யென்ன
நாளுங் கிழமையதுவுமா
உசுர்நெல மறைக்கக் கூட
துண்டுத்துணிக்கு வக்கில்ல”

என்ற வரிகளில், ஒரு பெண்ணுடல் தலையை நீட்டிவிட்டால் போதுமா, அவ்வுடலுக்கான தேவைகளை யார் தருவது? உசுர்நெல மறைக்கக்கூட துணியில்லாத அவலம் இச்சமூகத்திலிருக்கிறது. ஆனால், பெருமைக்குப் பிள்ளைப் பெற்று வாழ வேண்டும். அதனால்தான் ‘கட்டுத்தறி கவிபாடும் கட்டிலுமா’ எனக் கேள்வி கேட்கப்படுகிறது கவிதையில்.

அடுத்து, தினவாழ்வின் அடையாளங்களில் ஒரு பெண்ணுடல் தனக்கானவற்றை எப்படிப் பெற்றுக்கொள்கிறது என்பது மிக முக்கியமாக இருக்கிறது. அவ்வுடல் தனக்கான உழைப்பை முடித்த பிறகு ஓய்வெடுக்கிறதா? விருப்பமின்றிப் புணரப்படுகிறதா, இல்லையென்றால் அச்சுறுத்தப்படுகிறதா?

எதுவாக இருந்தாலும்,

  1. படுக்கக்கூட இடம் இல்லை
  2. அதீதமான அச்சம்

இதுதான் கிடைக்கிறது.

“உப்பணியில் தண்ணிகாட்டி
உறும நேரமுன்னு
கருவ நிழலில் முந்தானை விரித்தாள்
அலம்படித்த ஆடும் மாடும்
ஆல மரத்தடியில் ….
கொத்துக் கொத்தாய் மேல் விழுந்த
கருவாக்காய்களுக்குப் பதறி
உதறி எழுந்தாள்
நெளிந்து மறைந்தது
பெருஞ் சாரையொன்று”

பெண் உடல் உழைப்பைக் கொடுத்துக் கண்ணயரும் நேரத்தில் சாரைகள் செல்லக்கூடிய இடம்தான் கிடைக்கிறது. ‘பெண்’ என்ற உடலின் பொறுப்பிற்கு உறுதிப்படுத்தப்பட்ட எதையும் சமூகம் முன்வைக்கவில்லை. யதார்த்தத்தில் ‘பெண் உடல்கள்’ எதைக் கொண்டு அடையாளப்படுத்தப்படுகின்றன?

அகம் x புறம் எனப் பிரித்து உடல் உற்பத்திக்காகக் காதல், காமம் எனக் குறிப்பிடப்படுகிறது. இது ஆண், பெண்ணின் இருத்தலும் கூட எனக் கொள்ளலாம்.

ஒரு பெண் உடல் ஓய்வெடுப்பதாக இருந்தாலும், அல்லது விரும்பிய ஆண் உடலோடு இணைய விரும்புவதாக இருந்தாலும் சரியான இடம் அதுவன்று. மறைக்கப்பட்ட மனவெளிதான் அது. இங்கு சம்பவங்கள்தான் திரும்பத் திரும்பப் பார்க்கப்படுகிறது.

இச்சமூகத்தில் திருமண முறைகள், உடலை அப்புறப்படுத்துதல் என்ற மனநிலையிலேயே அமைந்துள்ளன. சரிப்படுத்துதல், ஒப்பந்தம், பொறுப்புக்கழித்தல், குடும்பம் என்ற நிறுவனத்தின் செயல்பாடு – இதைப் போல்வன நடைபெற திருமணச் சடங்கு வைக்கப்படுகிறது. விருப்பத்தின் பேரல்லாத திருமணங்களே அதிகம் நடைமுறையில் உள்ளன. பொதுவாக, திருமண முறை ஏன் உருவானது என்பதும் யோசிக்கக் கூடியதுதான். இதை இரு உறவுகள் கலத்தல் என்றும் சொல்லலாம். நிறைய உடல்கள் குழுவாக மாறி புதுப்புது உறவுகளைத் தருவித்துக்கொள்ளுதல். இது பரிமாறிக்கொள்ளுதலின் அடிப்படைதான். அவரவர் உடல் அவரவர்க்கானது. இதனை மானுடவியலில், ‘பரிசுப் பொருள் பரிமாற்றம்’ என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால், இதில் திருமணம் என்ற பெயரில் முறையற்ற ஒன்றைச் சமூகம் நடத்திக்காட்டுவதை,

“மங்கை நல்லாளுக்கு வயிசு பதினாறு
ஆம்பள மாப்பிளைக்கு,
நெஞ்சு முடி வெள்ளிக்கம்பி
தலை மசுறோ தப்புச்செடி
———————————–
———————————–
உங்கள் ஆதிக்கப் புத்தியில்”

இங்கு திருமணம் ஆதிக்கப் புத்தியின் பேரச்சமாகத்தான் பார்க்கப்படுகிறது. இதனைப் பற்றி தோழர் ஜமாலன், “இங்கு எழும் முக்கியமான கேள்வி ஏன் திருமணமுறை உருவானது? அது மனித குலத்திற்கு என்ன தேவையை நிறைவு செய்கிறது? குடும்பத்தை உருவாக்குவது மட்டுமே அதன் பணியா?” என்ற கேள்விகளை முன்வைக்கிறார். (‘நவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்’, 2010).

அடுத்து, இதைத் தாண்டி இன்னும் ஆழமாக, மூன்று நிலைகளில் கவிஞர் வினையனின் கவிதை வரிகளைப் பொருத்திப் பார்க்க முடிகிறது.

1.சாதிய அடுக்கமைப்பு

2.சமூக வாழ்க்கைத் தரம்

3.புனைகதை பிம்பங்கள்

என்ற நிலைகளில் ஊடாடிக்கொண்டே மனித உடல்களைச்சாகடித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஏதோவொரு இடத்தில், தினந்தோறும் ஆணவக் கொலைகள் நடந்துகொண்டுதானுள்ளன.

“ரோந்துக்காரணைப் போல்
பாதை போகிற இடமெங்கிலும்
பார்த்தாயிற்று
உறும நேரத்தில் வயசுக்கு வந்த
பொட்டப் புள்ளையை அனுப்பாதேயென்றதற்கு
—————-
வடக்குவெளி இலுப்பைத் தோப்பு
தெற்கே மரக்காயங் கொல்லை
கீழ்ப்பகுதி அவுரித் தொட்டியென
எங்கு தேடியும் அகப்படவில்லை
காலனிக்காரன் தொரசாமி மொவனோடு
கண்டதாய்ச் சொன்னது தான் தாமதம்
கள்ளுக் கலயத்தில் விழுந்த கொளவி போல் மிதந்தாள்”

இந்தக் கவிதை, தனிமனித உடலின் கதையைப் பேசுவது போலுள்ளது. இச்சமூகம் ஒரு பெண்ணுடலை எவ்வளவு எளிதாக அப்புறப்படுத்துகிறது எனக் கேள்வி எழுகிறது. ஆனால், ஊரில் ‘நாச்சியார் குளத்தில் எல்லை மினி கிட்டு வந்து தண்ணியில அமுக்கிருச்சென ஊரிப் பேச்சாயிற்று’. இவ்விடத்தில் ஒரு கேள்வி எழுகிறது. இருக்கிறது.

‘தெய்வங்களும் சமூக மரபுகளும்’ நூலில் பேரா.தொ.ப., “இச்சிறு தெய்வக் கோயில்கள் பொதுவாக ஊர் மந்தை, ஊரின் எல்லை, குளக்கரை, கண்மாய்க்கரை, களத்துமேடு, வயற்புறம், அழிந்த கோட்டைகளின் வாசற்பகுதி அமைந்த இடம் நெடுஞ்சாலை ஓரம் முதலிய இடங்களில் அமைந்திருக்கும். அந்த இடங்கள் அனைத்தும் காவலுக்குரிய இடங்கள் ஆகும். எனவே, பெரும்பாலான சிறு தெய்வங்கள் காவல் தெய்வங்களாக அமைவனவே” எனச் சுட்டுவதை உணர முடிகிறது.

இக்கவிதையில் எல்லை மினிங்கற இடத்தைத் தந்தது யார்?

இச்சமூகத்தில் எவ்வித எதிர்ப்புணர்வையும் வெளிப்படுத்தாமல் ஒரு பெண்ணுடல் சாகடிக்கப்படும் நிலை காலங்காலமாக இருக்கிறது. சமூகத்தில் எங்கிருந்து இத்தகைய போக்கை எங்கனம் களைவது? ஆணவக்கொலை என்பது கதைகளாக, செய்தியாக மட்டுமே பார்க்கப்படுகிறது. வாழ்வு சிதைக்கப்பட்ட ஓர் உடலாக யாரும் பார்க்கவில்லை என்பதுதான் இக்கவிதை வரிகள் உணர்த்துவது.

இங்கு, உடல்களின் அகவெளி எப்படியும் பார்க்கப்படலாமென்ற நிலைப்பாடு உள்ளது. தனது இடத்தை நிர்ணயித்தல் என்பதில்தான் உயிரிகளின் இருப்பு இருக்கிறது.

“எல்லா உயிர்க்கும் இன்பமென்பது
தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்”

(தொல்-பொருளியல்-நூ-219).

எனப் பார்க்க முடிகிறது. ஆனால், சமூக அமைப்பில் ஓர் உடல் தனக்கான இடத்தைப் பெற அவ்வளவு போராட வேண்டியுள்ளது.

“மலர்த்தூவி மாலையிட்டு
மூணாம் நாளில் பால் காய்ச்சு
உயரப் பொருத்தம்
நிறப் பொருத்தம்
இருட்டிலென்ன கூராய்வு
சிரித்து வை
கசங்கி அழு
கீறல் பொறு
புத்திர பாக்கியம் சுபம்
உடன்பாடுதானில்லை குள்ளப்பயலோடென்று”

என்று கவிதை சொல்வதில், சம்மதமில்லாத திருமணத்தில் ஒரு பெண்ணுடல் வஞ்சிக்கப்படுவதுதான் விஷயம். வெறும் மலர்த் தூவலும், பால் காய்ச்சலும், பிள்ளைப் பெறுதலும் மட்டுமே திருமணமா? நிறப்பொருத்தம் அவசியமில்லை. ஆனால், மற்றதெல்லாம் தேவையானது. மன உடன்பாட்டோடு இரு உடல்கள் தயாராவது இங்கு மறைக்கப்படுகிறது. எந்தக் கூராய்வும் இருட்டிலில்லை. புணர்தல் மட்டுமே தேவை என்பது நிலைப்பாடாகிறது.

இதையும் தாண்டிப் பார்த்தோமென்றால் எங்கெங்கோ உழைப்புக்காகப் பயணிக்கும் பெண்கள் ஏதோவோர் ஆதிக்கத்தால் வயிற்றுப்பாட்டிற்காக உடலைத் தந்து கரு சுமக்கும் அவலமும் அன்றாடம் நிகழ்வதுதான்.

“வறுமைக்குப் பொழப்புக்குப் போனால்
கொடுமையைக் கொண்டு வந்திருக்கிறான்
யார் தலையில் கட்டி
எப்படியோட்டுவது குறைக் காலத்தை
சொல்லென்றாகிவிட்டது
மான அவமானம் பார்த்திருந்தால்
யார் தான் வாழமுடியுமிங்கு
முழுப்பிள்ளையைப் பெத்திடலாம்
அரைப்பிள்ளையைக் கலைப்பதற்கு”

இது மாதிரியான, நிகழ்வினைச் ‘சிறைப்படும் வேட்கையுடல்கள்’ என்கிறார் ஜமாலன். (‘உடலரசியல்’, 2020).

இதில், மொழி, நிலம், சமூகம் உள்ளிட்ட எல்லாமும் அடக்கம். ஒரு பெண் வறுமையை நினைத்துப்போனால், உடலை ஒடுக்கவும் ஆதிக்கம் செய்யவும் சமூகம் வழி வகுத்திருக்கிறது. பாலியல் என்பது இங்கு சுரண்டப்படும் மர்மம். அடிப்படைப் புரிதல் இல்லாத உடல்களின் வன்புணர்வும், அதற்குப் பின்னாலான வயிற்றுச் சுமையும், அதனையொட்டிச் சமூகம் பேசும் அவலமும் எங்கோ ஓரிடத்தில் தினமும் நடந்துகொண்டேயுள்ளது. இப்படியான, மேலாதிக்க வன்முறையினை வினையன் கவிதையில் எதிர்கொள்கின்றார்.

இவையன்றி, சாமானியர்களின் வாழ்வில் ‘தினப்பாடுகள்’ என்பதைச் சந்திக்கின்றனர். இந்தியச் சமூக அமைப்பில் மூன்று வகையான ஆதிக்கம் உள்ளது.

1.அரசியல் ஆதிக்கம்

2.பொருளியல் ஆதிக்கம்

3.பண்பாட்டு ஆதிக்கம்

பொருளியல் ஆதிக்கத்தில் உழைக்கும் மக்கள் தினமும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். புராதனச் சமுதாயம், அடிமைச் சமுதாயம், நிலவுடைமைச் சமுதாயம், முதலாளித்துவச் சமுதாயம் போன்றவை இருக்கக் கூடிய சூழலில் விளிம்புநிலை உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் பின்தங்கியுள்ளது. உடைமையாளர்களுக்கும் சாமானியர்களுக்கும் நிகழும் சூழல் முடிவில்லாதது. பொருளாதாரம் ஒவ்வோர் உடலோடும் இணைந்தது. அது, எந்த அளவிற்குத் தனித் தேவையைத் துய்த்துக்கொள்கிறது என்பதுதான் இங்கு கேள்வியாகிறது. ஆதிக்க மேலாண்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வு, பண்பாட்டு அடையாளங்கள் பொதிந்த இச்சமூகம் சாதாரணவர்களின் பொருளாதார முரணைக் களைய முன்வரவில்லை.

இது, “குறைந்த அளவு உணவு, குறைந்த அளவு உடை, குறைந்த அளவு கல்வி பெற்று வாழும் மக்கள் பிரிவினர் பொருளியலில் முன்னேறத் தடையாக உள்ளதென”

(‘அடித்தளமக்கள் வரலாறு’, 2016) என்று குறிப்பிடப்படுகின்றது.

ஓர் உயிர் இன்னோர் உயிரினைப் பற்றி இணைந்திருப்பது போலதான் இது. கீழ்க்கண்ட வரிகள் இக்கூற்றிற்குப் பொருந்தும்.

“அம்மா
கட்டத் தவறிய மாதக்கடன்
மகளுக்கு வந்த
மழைநாளின் காய்ச்சல்
சீசனுக்கு வரும்
தொடர் கழிச்சல்”

போன்ற எதற்கும் தரவுக்குப் போகாமல் இறுகப் பிணைந்திருக்கும் செல்லாத்தி எனும் வெள்ளாட்டைக் காணும்போது, ஓர் உயிரின் மீதுள்ள அன்பும் பற்றும் வெளிப்படுகிறது. வெறும் பேச்சளவில் மட்டுமல்லாது, வாழ்க்கையில் நடைபெறும் அனுபவ நிகழ்வுக் கதைகளாக ‘வெள்ளாடு’ காட்சித் தருகிறது. நமக்கான உண்மைக் கதையாகவும் பொருத்திப் பார்க்க முடிகின்றது.

இந்தத் தினப்பாடுகளில், ஒடுங்கிப்போன மார்பெலும்புக்கூட்டோடு மரணம் நெருங்கும்வரை தவிப்பதும், ஏதோவொன்றை மிச்சம் வைத்துவிட்டதாய், உற்றவர்கள் எங்கே வலிக்கிறது எனக் கேட்கும் எல்லாவற்றிற்கும் ‘ம்’ எனப் பதிலுரைத்து, உயிர்விட்டு மறுநாட்பொழுதைச் சமரசமாய் மாற்றித்தரும் ஒரு சாமானியரின் வாழ்வுச் சுவை, வாழ்கின்ற காலமனைத்திலும் ‘ம்’ என்ற சமரசச் சொல்லாகவே முடிந்து போயிருக்கிறது. ‘ஏதோவொன்றை மிச்சம் வைத்துவிட்டதாய், எரிந்து அணைந்திருக்கும் மரண வீட்டின் விடியற்காலை’ – நமக்கெல்லாம் உணர்த்துவதென்ன என்பது மட்டும் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஆளும்வர்க்கமும் ஆதிக்கச் சாதியினரும் எப்போதும் வன்முறையைப் பயன்படுத்தியே தன் மேலாண்மையால் நிலைநிறுத்தம் சமூகமிது. நாட்டின் உயர்நிலையான காவல், நிர்வாகம், அரசு அலுவலகம் போன்ற எல்லாமே மேட்டிமைச் சூழலில் இருக்கும்போது, வினையனுக்கு,

“எரியும் பிணவாடை
முதுகெலும்புகளின் பேரிரைச்சலாகக் கேட்கின்றது”

சமூகத்தில், சாமானியர்கள் அடித்தளத்திலிருந்தே காணாமல் போய்விட்டார்கள். இதெல்லாம் சாதாரணமாகக் கடந்து போக முடிகிறது. கற்கனையான, வெறும் பேச்சொலிகள் மட்டும் அவ்வப்போது கூவிக்கிடக்கும். பின்பு, அடங்கிக் போய்விடும். அதனாலேயே,

“உன் ஈயத்தட்டில்
ஆண்டைகளின் நிலத்தில் மாடாய் உழுத
சேரிக்குடியானவனின் வியர்வை
உப்புக்கரிக்கிறதா ஈஸ்வரா?
‘காவி’ யத் தலைவன் செல்லாதென அறிவித்தால்
என் செய்வாய் அம்பலத்தா?”

எனக் கேட்கிறார். இதுவன்றி, இடுகாட்டில் சடலம் நரம்பிழுத்து எழும்போது மூட்டில் தட்டி அடக்குவாய். அது உயிரற்றப் பிணம். நாங்கள் இந்நாட்டில் உயிருள்ள பிணமாக அடக்கப்படுகிறோம்; தட்டி வைக்கப்படுகிறோம். உயிருள்ள உடல்கள் எவ்விதமான தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ளாமல் வாழத் தலைப்பட்டுள்ளது. சமூகத்தில் சாமானியர்களை ஏச்சுப்பேச்சுகளால் வதந்தி பேசும் ஒரு கூட்டமும் வாழ்கின்றனர். வாய்மொழி வழக்காற்றில் ‘வதந்தி’ என்பது ஒரு கூறு. இது போல்வன மனித சமுதாயத்தின் பண்பாட்டு வகைமைகளாக, சமூகத்தின் தேடல்களாக, மக்கள் கூட்டத்தின் தொகுப்பாகக் கொள்ளப்படுகிறது.

இதனை, “ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் வாழும் மக்கள் சமூகத்தில் பண்பாட்டைப் பற்றிய விளக்கமாக அமைதல்” என்ற செய்தி உணர்த்துகிறது. (‘விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள்’, 2015).

‘எச்சிக்கொள்ளி’யில் இது, “இல்லாத சவுக்கையிலும் / காய்க்காத முந்திரித் தோப்பிலும் / கண்டதாய்ச் சொல்லும் ஊர் / வேலைக்குப் போகவில்லை என்றால்தான் என்ன?” எனக் கேட்பதிலும்,

“கூப்பனரிசியைப் பொங்கித்தின்னு
உசுரு வளர்க்கலாம்
ஏச்சுப் பேச்சு வாங்குவதற்கு”

எனச் சொல்வதிலுமாக அமைகிறது. பொதுவாக, வினையனின் எழுத்துகள் பெண்களை மையப்படுத்தும் எழுத்துகள். பெண்கள் பேசும் பாங்கிலேயே மிகையாகத் தன் மொழியைக் கொண்டுள்ளார்.

“எச்சிக்கொள்ளி என்றான பின் எழவுக்கு வந்தவளா தாலியறுப்பாள் / பொட்டப்புள்ள வைக்கும் நெருப்பில் கட்டை வேகாமலா போகும்” எனக் கேட்கும் இடங்கள் வீரியமானவை. சாதியச் சாடலுக்கு நந்தன் கதையைச் “சாம்பலைக் காட்டினாள் பாருங்கடி” எனக் கூறுமிடமும் சமூகச் சாடல்தான். ஆண் வேடமிட்ட காளியாகச் ‘சுந்தரகாளி’யும் எள்ளலாகக் கேள்வி கேட்டு மருள வைப்பது. அதுபோல, இத்தொகுப்பில் வாய்மொழி வழக்காறு நிறைய இடங்களில் வருகிறது.

நாட்டார் வழக்காறுகளும், கலைச்சொற்களும் விரவிக் கிடக்கும் இக்கவிதைகளில், கலப்பரிசி, உப்பணி, தொம்பன்கூடு, சுந்தரகாளி, வாழ்முனி, காவாளை, கஞ்சங்கோரை, ஏழுகன்னிக்கோயில் போன்ற சில கலைச் சொற்களைச் சான்று பகரலாம்.

நிறைவாக இந்நூலில்,

1.பேச்சு வழக்கிலுள்ள மொழிநடை

2.வட்டார வழக்கு, பழமொழி, கலைச்சொற்கள்

3.சமூகச் சாடல்கள்

4.எச்சிக்கொள்ளியில் பெண்மையப்படுத்துதல்

போல்வனவற்றை ஆய்வுச் சூழலுக்கு உட்படுத்தலாம் என்பதும் சாலப்பொருந்தும்.

 

பார்வை நூல்கள் :

  1. ‘தொல்காப்பியம் பொருளதிகாரம்’ – இளம்பூரணர் (உரை) 1953, திருநெல்வேலி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
  2. ஜமாலன், ‘பிரதியில் கிளைக்கும் பிம்பங்கள்’, 2018, விடியல் பதிப்பகம், சென்னை.
  3. ஜமாலன், ‘உடலரசியல்’, 2020, காலக்குறி பதிப்பகம், சென்னை.
  4. தொ.பரமசிவன், ‘தெய்வங்களும் சமூக மரபுகளும்’, 2022, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், நாகர்கோவில்.
  5. ஆ.சிவசுப்பிரமணியன், ‘அடித்தள மக்கள் வரலாறு’, 2016, நியூ செஞ்சுக் புக் ஹவுஸ், சென்னை.
  6. ஆ.தனஞ்செயன், ‘விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள்’, 2015, நியூ செஞ்சரி புக் ஹவுஸ், சென்னை.
  7. ஜமாலன், ‘நவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்’, 1984, பாரதி புத்தகாலயம், சென்னை.

(27.05.2023 அன்று நீலம் பதிப்பகம் ஒருங்கிணைத்த ‘எச்சிக்கொள்ளி’ நூல் திறனாய்வில் நிகழ்வில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்.)

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger