2007ஆம் ஆண்டு ஞான.ராஜசேகரன் இயக்கத்தில் வெளியான ‘பெரியார்’ படத்தில் மணியம்மை, கி.வீரமணி உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு அவர்களின் சாயலில் நடிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பர், அவற்றுக்குரிய முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு காட்சி, தாதா ரெட்டைமலை சீனிவாசன் அவர்கள் பெரியாரைச் சந்திப்பார். அப்போது, “ரெட்டமலை, முதல்ல நம்ம வேலையைச் சேரியில் இருந்துதான் ஆரம்பிக்கணும்” என்பார் பெரியார். தாதா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் கம்பீரத் தோற்றத்திற்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாத ஒரு நபர், வெறுமனே கோட் சூட் அணிந்துகொண்டு பெரியாருடன் நடந்து செல்வார். மேலும், தாதா ரெட்டைமலை சீனிவாசன் பெரியாரைவிட கிட்டத்தட்ட இருபது வயது மூத்தவர். படத்திலோ தாதா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களை பெரியாரின் இளம் தொண்டனைப் போல காட்சிப்படுத்தியிருப்பார்கள். இதை, ஒரு தலைவரை இழிவு செய்ய வேண்டும் என்று இயக்குநர் திட்டமிட்டுப் புனைந்ததாகக் கூட கொள்ள வேண்டியதில்லை. ரெட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தால் போதும் என்கிற அலட்சியம்தான் இதில் தெரிகிறது. இதைத்தான் நாம் கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது. இந்த அலட்சியம் எங்கிருந்து வருகிறது?
கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசு நான்கு பேருக்கு மணிமண்டபமும், மூன்று பேருக்குத் திருவுருவச் சிலையும் திறந்து வைத்திருக்கிறது. அது குறித்த விளம்பரத்தில் தாதா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் பெயரைத் தவிர மற்றவர்களின் பெயர்கள் பேரரசர், சர் உள்ளிட்ட பட்டங்களோடு குறிப்பிடப்பட்டிருந்தன. இராவ் பகதூர் ரெட்டைமலை சீனிவாசன் என்று குறிப்பிட வேண்டிய இடத்தில் வெறும் ரெட்டைமலை சீனிவாசன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது; திறக்கப்பட்ட மணிமண்டபத்திலும் அவ்வாறே பொறிக்கப்பட்டிருக்கிறது. சமூக வலைதளத்தில் பெரும்பாலான தலித் செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி, இத்தலையங்கத்தை எழுதிக்கொண்டிருக்கும் நேரம் வரை அவை மாற்றப்படவில்லை. ஒருவேளை அந்த விமர்சனம் கருத்தில் கொள்ளப்பட்டு இராவ்பகதூர் என்பது சேர்க்கப்படலாம், விஷயம் அதுவல்ல. நாம் மேலே குறிப்பிட்டது போல மற்ற தலைவர்கள் விஷயத்தில் இருக்கும் கவனமும் பொறுப்பும் இன்னும் சொல்லப்போனால் பயமும் ஏன் தலித்துகள் விஷயத்தில் இல்லையென்பதுதான் இங்கே கேள்வி. மூன்று தலைவர்களின் பெயர்கள் பட்டத்தோடு குறிப்பிடப்பட்டிருக்கும் சூழலில், இவருக்கு ஏதாவது பட்டம் இருந்திருக்குமா என்கிற கேள்வி அரசியல் நீக்கம் பெற்றவர்களுக்குக் கூட நியாயமாகத் தோன்ற வேண்டியது.
திராவிட இயக்க அரசியல் சிலைகளை நிறுவுவது, பட்டங்களோடு தலைவர்களைக் குறிப்பிடுவது உள்ளிட்டவற்றில் கை தேர்ந்தது. பெரியார், அண்ணா, கலைஞர் என்று எந்தத் தலைவரைக் குறிப்பிடும்போதும் அவர்களின் பெயரை மட்டும் சொல்லி அழைக்காது. அப்படி அழைப்பது மரியாதை குறைவாகக் கருதப்படும் யதார்த்தமும் இங்குள்ளது. கலைஞருக்குப் பின் மு.க.ஸ்டாலின்தான் தலைவராக உருவெடுப்பார் என்று அவதானித்துவிட்ட நெடுங்காலத்திற்கு முன்னரே ஸ்டாலினைத் தளபதி என்றழைக்கும் கலாச்சாரம் உருவாகிவிட்டது. தற்போது திமுக தலைமையின் அடுத்தத் தலைவராக உருவெடுத்துவரும் உதயநிதியை, வயதில் சின்னவராக இருந்தாலும் பெயரைக் குறிப்பிட முடியாது என்பதற்காகவே, சின்னவர் என்றழைக்கிறது சமகால அரசியல்.
ஒருவரை எப்படிக் குறிப்பிட வேண்டும் என்பதில் இத்தனை கவனத்தோடு இருக்கும் திராவிடக் கலாச்சாரத்தில், தமிழ்நாட்டின் முன்னோடித் தலைவர்களில் மிக முக்கியமானவரான இராவ் பகதூர் தாதா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் பெயரை மட்டுமே குறிப்பிட்டு, மற்ற தலைவர்களுக்குப் பட்டங்களோடு குறிப்பிட்டிருப்பதின் பின்னணியாக, சாதிய ரீதியான அலட்சியத்தைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்?
தேர்தல் அரசியல் களத்தில் ஒவ்வொரு குழுவினரையும் திருப்திபடுத்துவதற்காக அடையாளச் சின்னங்கள், சிலைகள், மணிமண்டபங்கள் திறப்பது வாடிக்கை. அதில், சாதி ரீதியாக மட்டுமே இயங்கியவர்களுக்கு வேறு காரணம் சொல்லிக் கொடுக்கப்பட்ட மரியாதையும் உதாரணங்களாக இருக்கின்றன. அந்த வரிசையில், பட்டியலின ஆளுமையாகத் திகழ்ந்த இராவ் பகதூர் சீனிவாசன் அவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பது நம் நோக்கமல்ல. பெரியாருக்கு முன்பும் அவரது சமகாலத்திலும் இந்தியா என்கிற ஒரு நாடு அமைய, கூடுமானவரை அதன் சிக்கல்களைக் களைந்து, சமூகநீதி அடிப்படையில் சமூகத்தைக் கட்டமைத்திட வேண்டும் என்று போராடியவர்களில் இராவ் பகதூர் ரெட்டைமலை சீனிவாசன் அவர்களது பங்களிப்பு அளப்பரியது. பிறப்பால் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதற்கு அப்பாற்பட்டு அவருக்கான அங்கீகாரமும் மரியாதையும் இயல்பிலேயே கிடைக்க வேண்டும்.
1924ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 25 அன்று தாதா ரெட்டைமலை சீனிவாசன் அவர்கள் சட்ட மேலவையில் ஒரு தீர்மானம் கொண்டுவந்தார்: பொதுப் பாதைகள், கிணறு, குளம், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றை எவரும் பயன்படுத்த தடையில்லை. அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரால் அரசாணையாக (G.O.2660) அரசிதழில் வெளியிடப்பட்டது. தாதா ரெட்டைமலை சீனிவாசன் கொண்டுவந்த இத்தீர்மானத்தை ஆபிரகாம் லிங்கனின் விடுதலைப் பிரகடனத்துடன் ஒப்பிடக்கூடியது என்று Caste Pride நூலாசிரியர் மனோஜ் மிட்டா குறிப்பிடுகிறார்.
மேலும், இந்திய அரசியல் வரலாற்றின் சிற்பியாக விளங்கும் பாபாசாகேப் அம்பேத்கர் உள்ளிட்டவர்களோடு முக்கியமான காலத்தில் தொண்டாற்றிய தலைவரின் முக்கியத்துவம் குறித்து முற்போக்கானது, தனித்துவமானது என்று புகழப்படும் மாநிலத்தில், அதற்கெனத் தனியாக ஒரு தலையங்கத்தைத் தீட்டி கவனப்படுத்த வேண்டியிருப்பது வருத்தத்துக்குரியது. அறிவுப்பூர்வமான வரலாறு என்பது வெறும் சின்னங்களாலும் சிலைகளாலும் உருவாவது அல்ல. அதே வேளையில், இத்தகைய பிம்ப நிறுவுதலில் இருக்கும் அரசியல் பாரபட்சங்களைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பும் நமக்கிருக்கிறது.