மனிதகுல வரலாற்றில் ஓர் இனத்தின் மீதான போர் துப்பாக்கிகளாலும் குண்டுகளாலும் மட்டுமே தொடுக்கப்பட்டதில்லை. அந்த இனத்தின் பண்பாட்டு – கலாச்சாரங்களுக்கு இழிவு கற்பிப்பதின் மூலம் உளவியல் ரீதியாகவும் தொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியச் சமூகத்தில் அது சாதி என்கிற வடிவத்தில் இருக்கிறது.
இந்திய தலித் மக்கள் மீது அரசியல் ரீதியான கரிசனம் இருப்பவர்கள் கூட சமூக ரீதியாக விளிம்பில் இருப்பவர்கள் முன்னேற வேண்டும் என்கிற அளவிலேலேய தலித்துகளை அணுகுகிறார்கள். அடிப்படையான அவர்களது நோக்கத்தின் மீது நமக்கு விமர்சனமில்லை. அதேவேளையில் தலித்துகளுக்கு நீண்ட நெடிய வரலாறும் பண்பாடும் இருக்கிறதென்பதை நினைவூட்டவும், அதை நிகழ்த்திக் காட்ட வேண்டிய அவசியமும் இருக்கிறது.
இந்திய மக்களின் அன்றாட வாழ்வில் இருக்கும் அனைத்தும் பல்லாண்டு கால வழக்கங்கள், அவை வேர் போல இறுகப் படர்ந்திருக்கிறது. அதுவே பண்பாட்டு அரசியல். கடந்த இருநூறு ஆண்டுகளாக எழுதப்பட்ட வரலாறு, நவீன சமூக மாற்றம், உற்பத்தியான அறிவியல் சாதனங்கள் என அனைத்திலும் இதுவரை சொல்லப்பட்ட வரலாறே மீண்டும் மீண்டும் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது. இவற்றிற்கு இயல்பாகக் கிடைக்கும் அங்கீகாரத்தை எதிர்த்து ஆயிரம் மடங்கு ஆற்றலோடு நாம் செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது. இந்த அடித்தளத்தை மாற்றத் துணியாமல், அதன் மேல்மட்டத்திலிருந்து எழுப்பப்படும் எந்த அரசியலும் தற்காலிகமானது என்பதே காலம் நமக்குக் கொடுத்திருக்கும் படிப்பினை.
இத்தகைய சூழலில்தான் வானம் கலைத் திருவிழாவை நான்காண்டுகளாக நீலம் பண்பாட்டு மையம் நடத்திவருகிறது. மக்களிசையை அடிப்படையாகக் கொண்டு இதுபோன்ற நிகழ்வுகள் தமிழக அரசியல் வரலாற்றில் நடந்திருந்தாலும், தலித் கலை இலக்கிய வடிவத்தை மையப்படுத்தி, அதற்கெனத் தீர்மானிக்கப்பட்ட வடிவத்தை மீறி, கலை இலக்கியச் செயல்பாடுகளில் செறிவான வரலாற்றைக் கொண்டவர்கள் தலித்துகள் என்கிற பிரகடனத்தோடு நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்பதில்தான் நீலம் பண்பாட்டு மையத்தின் தனித்துவமும் தேவையும் இருக்கிறதெனக் கருதுகிறோம்.
2018இல் மூன்றுநாள் நிகழ்வாக பிரமாண்டமாகத் தொடங்கப்பட்ட வானம் நிகழ்வில் இந்தியா முழுவதிலுமிருந்து கலைஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். பெருந்தொற்று காரணமாக இடையில் இரண்டாண்டுகள் தடைபட்டிருப்பினும் 2022, 2023 ஆண்டுகளைத் தொடர்ந்து இது நான்காவது ஆண்டு நிகழ்வு.
நிகழ்த்துக்கலை, சினிமா, இசை, ஓவியம், இலக்கியம் ஆகிய கலை வடிவங்களில் பொதிந்திருக்கும் தலித் அழகியலைக் காட்சிப்படுத்துவது, முன்னோடிகளை அங்கீகரிப்பது, புதியவர்களை அடையாளம் காட்டுவது உள்ளிட்ட நோக்கங்களோடு செயல்படும் நீலம் பண்பாட்டு மையத்தின் இறுதி நிகழ்வாக இருநாள் தலித் இலக்கியக் கூடுகை நடைபெற்றது. ஐம்பதிற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். தலித் உரையாடல்கள் என்பது ஒரு காலத்தின் நியாயம் என்கிற அளவில் மட்டுமே புரிந்துகொள்கிற சூழலில் இந்தத் தலித் இலக்கியக் கூடுகை இலக்கியத்தின் அடுத்தகட்ட பாய்ச்சலையும், தலித் இலக்கிய வரலாற்றையும் ஒருசேர விவாதித்திருக்கிறது. தலித் மக்களின் சொல்லப்படாத வரலாற்றை ஆவணரீதியாக தொகுத்திருக்கிறது. இந்த ஆவணங்கள் எதிர்வரும் புனைவுகளின் கருப் பொருளாக மாறும் என்கிற நோக்கில் புனைவுக்கும் அபுனைவுக்கும் ஒரு பாலமாக இலக்கியக் கூடுகையின் அமர்வுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
கடந்த மூன்று வருடங்களாகத் தலித் இலக்கிய ஆளுமை ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு ‘வேர்ச்சொல் தலித் இலக்கிய விருது’ அறிவிக்கப்பட்டுவருகிறது. அதன்படி இந்த ஆண்டு எழுத்தாளர் பாமா அவர்களுக்கு விருது அளிக்கப்பட்டது. அவரது எழுத்துகள் உண்டாக்கிய தாக்கத்தையும் அவரது பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் ‘பாமா – தமிழ் இலக்கியத்தின் திசைவழி’ என்ற நூலும் வெளியிடப்பட்டது; பாமா குறித்த ஆவணப்படமும் திரையிடப்பட்டது. இலக்கிய உலகில் பாமாவின் வாழ்நாள் சாதனையைப் பாராட்டி வேர்ச்சொல் இலக்கிய விருதாக ஒரு லட்ச ரூபாய் பரிசும் அளிக்கப்பட்டது.
ஓர் எழுத்தாளரை விருதுடன் அங்கீகரிப்பது அந்தத் தனிநபருக்கானது மட்டுமே அல்ல. அது ஏதோ ஒருவகையில் வரலாற்றை மீளுருவாக்கம் செய்யவும் எதிர்கால படைப்பாளிகளை உருவாக்கச் செய்யப்படும் ஏற்பாடும் கூட. அதன்படி எழுத்தாளர் பாமா அவர்களுக்கு அரங்கம் நிரம்பிய ஆரவாரத்தோடும் பாராட்டுகளோடும் வழங்கப்பட்ட வேர்ச்சொல் தலித் இலக்கிய விருது இன்னும் பல பாமாக்களை உருவாக்கும் என்கிற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது.
தலித் என்கிற வகைமையின் கீழ் செய்யப்படும் எந்த முயற்சியும் விமர்சிக்கப்படும் சூழல் எல்லா காலத்திலும் இருக்கிறது. அவை பெரும்பாலும் தலித் இலக்கியம், தலித் பண்பாடு, தலித் அரசியலின் தனித்துவத்தைக் கேள்வி கேட்டபடி இருக்கிறது. பொது உரையாடலைத் தொந்தரவுக்குள்ளாக்கும் தனித்துவமான அம்சங்களைக் கொண்ட தலித் ஓர்மை என்பது திரட்சிக்கானது மட்டுமே அல்ல, அல்லது தலித் விழுமியங்கள் மட்டுமே மற்றவையை விட உயர்வானது என நிறுவவும் அல்ல. பொது என்கிற பட்டியலுக்குள் அடைத்து, கணக்குக்காக அங்கீகரிப்பது மட்டுமே அல்ல. தலித் அரசியலும் தலித் பண்பாடும்தான் இந்திய வரலாற்றின் மையம். அதுவே நாகரிக இந்தியச் சமூகத்தின் திசைவழி.
இத்தகைய விழுமியங்களைக் கொண்டிருப்பதாலேயே அவற்றை வீழ்த்த காலந்தோறும் பரிணமித்துக்கொண்டே இருக்கிறது அதற்கெதிரான அரசியல். இந்த அரசியல் தலித் மக்களிடையே நாளடைவில் தன் இருப்பு, தன் பண்பாடு குறித்த ஐயங்களை உருவாக்குகிறது. உளவியல் ரீதியாக இதை எதிர்கொள்ள தலித் பண்பாடு குறித்து மிக விரிவான உரையாடல்களை நடத்த வேண்டி இருக்கிறது. இதைச் செய்து காட்டுவதையே நீலம் பண்பாட்டு மையம் தமது முக்கிய குறிக்கோளாகக் கருதுகிறது. நீலம் முன்னெடுப்புகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்துவரும் தோழமைகளோடு நீலம் பண்பாட்டு மையம் இதைத் தொடர்ந்து செய்யும்.
ஜெய் பீம்.