செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ஜல்லடியான்பேட்டை, சாய் கணேஷ் நகரில் வசித்துவரக்கூடிய பிற்படுத்தப்பட்ட யாதவர் வகுப்பைச் சேர்ந்த துரைக்குமார் – சரளா ஆகியோரின் மகளான ஷர்மிளாவும் சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் பள்ளிக்கரணை, டாக்டர் அம்பேத்கர் குறுக்கு வீதியில் வசித்துவரக்கூடிய ஆதிதிராவிட பறையர் வகுப்பைச் சேர்ந்த கோபி – சித்ரா ஆகியோரின் மகனான பிரவீனும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்துவந்திருக்கின்றனர். நாளடைவில் இவர்களின் காதல் ஷர்மிளாவின் பெற்றோருக்குத் தெரியவர, அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். கூடவே ஷர்மிளாவுக்குச் சொந்தச் சாதியில் மணமுடித்து வைப்பதற்கான ஏற்பாட்டையும் செய்யத்தொடங்கியிருக்கின்றனர். இதனால், ஷர்மிளா வீட்டைவிட்டு வெளியேறி 14.10.2023 அன்று பிரவீனுடன் சென்றுவிடுகிறார். இதையறிந்த ஷர்மிளாவின் தந்தையும் சகோதரர்களும், பிரவீனின் பூட்டியிருந்த வீட்டிற்குள் பின்வாசல் கதவினை எட்டி உதைத்துக்கொண்டு நுழைந்திருக்கின்றனர். ஷர்மிளாவும் பிரவீனும் அங்கு இல்லாத ஏமாற்றத்தினால் பிரவீன் பெற்றோரிடம் “உன் மகன் எங்கிருந்தாலும் அவனை 36 இடங்களில் வெட்டிப் படுகொலை செய்வோம்” எனக் கொலைமிரட்டல் விடுத்ததோடு, 20.10.2023 அன்று பள்ளிக்கரணை காவலர்கள் முன்னிலையிலேயே “கண்டிப்பாக இருவரையும் வெட்டிப் படுகொலை செய்வோம்” என்று கூறியிருக்கின்றனர். சொன்னபடியே பிரவீனைப் படுகொலை செய்திருக்கின்றனர். இத்தகைய அப்பட்டமான சாதிவெறி படுகொலையை அரங்கேற்றிய பின்னர், “இதற்கும் எங்களுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை, இது முன்விரோதத்தால் நடந்த படுகொலை” என்கின்றனர் ஷர்மிளாவின் பெற்றோர்கள். பள்ளிக்கரணை காவலர்களும் இவர்களுக்கு உடந்தையாகவே செயல்படுகின்றனர். குறிப்பாக, பத்திரிகையாளர் சந்திப்பின்போது பள்ளிக்கரணை காவலர்கள் சொன்னதாக ஷர்மிளாவின் தாய் குறிப்பிட்டதையும் கவனிக்க வேண்டும். அதாவது “அவனைக் கொலை பண்றதுக்கு ஆள் ரெடியாக இருக்கு. உன்னோட பொண்ணு இன்னும் இரண்டு மாதத்தில் தாலி அறுத்து வீட்டுக்கு வருவாள்” என்று சாதி மறுப்புத் திருமணம் செய்த தம்பதியினருக்கு உரிய பாதுகாப்பைக் கொடுக்காமல், சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய காவலர்களே அலட்சியத்தன்மையோடு நடந்துகொண்டதன் விளைவே இந்தச் சாதியப் படுகொலை.
“இன்றைக்குச் சாதி அதிகாரம் என்பது பண்பாட்டு மேலாதிக்கமாகவும், அரசியல் அதிகாரம் சார்ந்ததாகவும் இருக்கிற நிலையில் தமிழகத்தின் வட்டார ரீதியிலான பெரும்பான்மை இடைநிலைச் சாதிகளே மிகவும் துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் இக்கொலைகளில் இறங்குகின்றன” என்கிறார் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் (‘ஆணவக்கொலைகளின் காலம்’). இக்கூற்றிற்கிணங்கவே நடப்பரசியல் சூழலும் நிலவுகிறது. மேலும், ஆட்சி மாற்றம் மட்டுமே போதாது; சாதியை மையமாக வைத்து ஆட்சிப் புரிகின்ற ஆட்சியாளர்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். இம்மாதிரியான குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்களுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்கிற எண்ணம் எந்த அரசுக்கும் இல்லை. இதன் காரணமாகவே சாதியவாதிகளும் இத்தகைய சதித் திட்டத்தை எந்தவொரு பயமுமில்லாமல் தொடர்ந்து அரங்கேற்றுகின்றனர்.
கடந்த 19.10.2023 அன்று ‘பெரியார் சுயமரியாதைத் திருமண’ நிலைய அலுவலகத்தில், இசை இன்பன் என்பவரின் முன்னிலையில் பிரவீனும் ஷர்மிளாவும் சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்கின்றனர். அதன்பிறகு 20.10.2023 அன்று பள்ளிக்கரணை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்ததன்பேரில் இருதரப்பினரும் காவல் நிலையத்திற்குச் சென்றனர். காவலர்கள் முன்னிலையிலேயே ஷர்மிளாவின் மூத்த சகோதரர் “கண்டிப்பாக இருவரையும் வெட்டிப் படுகொலை செய்தே தீருவோம்” என்றிருக்கிறார். பின்னர் ஷர்மிளா “என் வாழ்க்கையை நானே தேர்வுசெய்துகொண்டேன். ஆதலால், இனி எனக்கும் எனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுக்கும் எவ்வித உறவுமில்லை” என எழுதிக் கொடுத்துவிடுகிறார். அதைப் போலவே அவருடைய பெற்றோரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு இருதரப்பினரையும் காவல்துறையினர் அனுப்பிவைக்கின்றனர். அப்போதும், ஷர்மிளாவின் தந்தை பிரவீனின் தாயாரைப் பார்த்து, “கண்டிப்பாக அவர்கள் இருவரையும் கொலை செய்துவிடுவோம்” என்றிருக்கிறார். இதனால் ஷர்மிளா மறுகணமே காவல்நிலையத்தில் ‘எனது உயிருக்கும் எனது கணவரின் உயிருக்கும் பாதுகாப்பில்லை. எனவே, எங்களுக்குத் தகுத்த பாதுகாப்பினை வழங்கவேண்டும் என்று’ புகார் மனு எழுதிக்கொடுத்திருக்கிறார். ஆனால், காவல்துறையினர் அதை வாங்க மறுத்து, சமாதானம் செய்து அனுப்பிவைத்திருக்கின்றனர். அன்றே இவர்களைக் கொலை செய்வதற்கு ஷர்மிளாவின் தந்தை ஆட்களைத் தயார்செய்து வைத்திருந்த தகவல் தெரியவே, காவல்துறை அன்று மட்டும் காதல் தம்பதியினருக்கு உரிய பாதுகாப்புக் கொடுத்து அனுப்பிவைத்திருக்கிறது. பிறகு, இங்கிருந்தால் உயிருக்கு ஆபத்து எனக் கருதியவர்கள் இரண்டு மாதங்கள் வெளியூரில் அடைக்கலமாயினர்.
பின்னர் ஷர்மிளாவைத் தன்னுடைய வீட்டிற்கே அழைத்துவருகிறார் பிரவீன். ஷர்மிளாவும் தனது படிப்பைத் தொடர்வதற்காக கணவரின் வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்றுவந்திருக்கிறார். இதையறிந்த ஷர்மிளாவின் தந்தையும் சகோதரர்களும் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு ஷர்மிளாவைப் பின்தொடர்வதும் முறைத்துப் பார்ப்பதுமாகவே இருந்திருக்கின்றனர். ஷர்மிளாவின் இளைய சகோதரரோ சில புதிய நண்பர்களோடு இரண்டு மூன்று முறை பிரவீனின் வீட்டருகே நோட்டமிட்டிருக்கிறார். இதை ஷர்மிளாவே நேரில் பார்த்ததாகவும் தெரிவிக்கிறார்.
இதற்கிடையில்தான் ஸ்ரீராம் என்பவர் பிரவீனிடம் அறிமுகமாகி இயல்பாகப் பழக ஆரம்பிக்கிறார். அதன்பேரில் ஸ்ரீராம், பிரவீன் வீட்டிற்கு அடிக்கடி வந்துசெல்லத் தொடங்குகிறார்; இங்கு நிலவும் சூழலையும் அவ்வப்போது ஷர்மிளாவின் சகோதரர்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார். அவர்களும் கொலை செய்வதற்கான நாளைத் திட்டமிட்டபடியே வந்திருக்கின்றனர். இவர்களின் சதித் திட்டத்தை எவ்வாறு தமிழக உளவுப்பிரிவு காவல்துறையினர் கோட்டைவிட்டனர் என்பது புரியாப் புதிராகவே இருக்கிறது. ராம்குமார் போன்ற நிரபராதிகளை அடையாளங்கண்டு சாகடிக்கத் தெரிந்தவர்களுக்கு, உண்மையான சாதியக் குற்றவாளிகளின் சதித் திட்டத்தை அறிந்துகொள்வது சிரமம்தான்போல!
ஏற்கெனவே பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் 20.10.2023 அன்று ஷர்மிளா எழுத்துப்பூர்வமாக கொடுத்த மனு மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படியொரு செயல் நடந்திருக்காது. மாறாக, சாதி மறுப்புத் திருமணம் செய்த தம்பதியினருக்கு உரிய பாதுகாப்பினை வழங்காமல் அலட்சியப்படுத்தியதன் விளைவுதான் பிரவீனின் சாதியப் படுகொலை.
சாதியின் பெயரால் தொடர்ந்து படுகொலைகள் செய்யப்படும் நிலையில், சாதி மறுப்புத் திருமணம் செய்துள்ள தம்பதியர்களுக்குக் காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றங்கள் வலியுறுத்தினாலும் அதை ஒருபொருட்டாகவே அரசும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையும் கருதுவதில்லை. அதுவும், பாதிக்கப்பட்ட தரப்பினர் தலித்துகளாக இருந்தால் சொல்லவே வேண்டாம்! கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான ஒன்பது வழிகாட்டுதல்கள் வழங்கியதை இவ்விடத்தில் நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். அதாவது, பாதுகாப்புக்கு வரும் காதலர்களுக்குச் சிறப்பு செல் அமைத்து, அவர்களது புகார்களைப் பெற்று, உடனே ‘முதல் தகவல் அறிக்கை’ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது எனக் கூறி பாதுகாப்புக் கேட்ட காதல் தம்பதியினருக்குப் பாதுகாப்பு வழங்க மறுத்த பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மட்டுமல்லாது உச்சநீதிமன்ற உத்தரவையும்கூட உதாசீனப்படுத்தியிருக்கிறார். இதனால் மறைமுகமாகவோ, நேரடியாகவோ காவல்துறையினரே இக்கொலைக்கும் காரணமாக இருந்திருப்பார்களோ என சந்தேகிக்கத் தோன்றுகிறது. காரணம், தொடர்ந்து தலித்துகளுக்கெதிரான அவர்களின் செயல்பாடுகள்.
இதையொட்டி வேறொரு தகவலையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 27.02.24 அன்று நீலம் பண்பாட்டு மையம் சார்பாக கள ஆய்வுக்காக வழக்கறிஞர் குழுவோடு பள்ளிக்கரணை, டாக்டர் அம்பேத்கர் வீதியிலுள்ள பிரவீனின் வீட்டிற்குச் சென்றபோது, தேசிய எஸ்சி ஆணையத் தலைவரும் வருகைப் புரிந்திருந்தார். அவரோடு காவல்துறை உயரதிகாரிகளும் இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாகிய கிறிஸ்டின் ஜோயலும் (காவல் உதவி ஆணையர்) இருந்தார். அப்போது தேசிய எஸ்சி ஆணையத் தலைவரிடம் பிரவீனின் தாயார், “ஷர்மிளாவின் தந்தை மற்றும் சகோதரர்கள் பூட்டப்பட்டிருந்த எங்கள் வீட்டின் பின்வாசல் கதவினை எட்டி உதைத்துக்கொண்டு அத்துமீறியதோடு அல்லாமல் என் மகனையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். ஆகவே, அவர்களையும் கைது செய்ய வேண்டும்” என்று கூறினார். உடனே விசாரணை அதிகாரி, “இது முன்விரோதத்தினால் நடந்த கொலை. ஆதலால், ஷர்மிளாவின் தந்தையை வழக்கில் சேர்க்கவில்லை” என்றார். அதற்குத் தேசிய எஸ்சி ஆணையத் தலைவர், “வீட்டிற்குள் வந்து கொலை மிரட்டல் விடுத்துச் சென்றிருக்கின்றனர். அப்படியிருக்கையில் ஏன் அவர்களுக்கு உள்நோக்கம் இருக்கக்கூடாது. அதோடு எனது தந்தைக்கும் என் கணவரின் படுகொலையில் பங்கிருக்கிறது என பாதிக்கப்பட்ட பெண்ணே கூறுகையில் ஏன் அவர்களையும் வழக்கில் சேர்க்கக்கூடாது. அவரின் தந்தைக்கு நிச்சயமாக அப்படியோர் எண்ணம் இருந்திருக்கவே செய்யும்” என்றார். அதற்குக் காவல்துறையினரிடம் கள்ள மௌனமே பதிலாக இருந்தது. மேலும், பிரவீனின் தாயார் “ஷர்மிளாவின் சகோதரரும் அவரது தந்தையும் எங்கள் வீட்டிற்குள்ளே நேரடியாக வந்து எனது மகனை 36 இடங்களில் வெட்டிக் கொலை செய்வேன் என்றார். இன்று அவ்வாறே செய்துவிட்டார்” என்று பதிவுசெய்கையில், விசாரணை அதிகாரியாகிய கிறிஸ்டின் ஜோயல், “அவங்க பிள்ளைய தூக்கிட்டு வந்தா, அவங்க வீட்டுக்குள்ள வரத்தான் செய்வாங்க” என்றார். உடனே தேசிய எஸ்சி ஆணையத் தலைவர் அதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். இத்தகைய குணம் கொண்டவர் எவ்வாறு இவ்வழக்கினைச் சரியான முறையில் கொண்டுசெல்வார் என்பது சந்தேகத்திற்குரியது.
இக்கொலையின் முதன்மைக் குற்றவாளிகள் ஷர்மிளாவின் தந்தையும் சகோதரர்களும்தான் என்பது தெள்ளத்தெளிவாகிறது. பிரவீன் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள ஸ்ரீராம் மூலம் இக்கொலையை அரங்கேற்றியிருக்கின்றனர். இந்த ஸ்ரீராம்தான் 24.02.24 அன்று முழுவதும் பிரவீனை வாட்ஸ்அப் கால் மூலம் அழைத்துக்கொண்டே இருந்திருக்கிறார். ஆனால், பகல் முழுதும் பிரவீன் அவரது அழைப்பை நிராகரித்திருக்கிறார். இரவில் தனது மனைவிக்கு உணவும் பேட்டரியும் வாங்குவதற்காக சுமார் 8:30 மணியளவில், அன்று முழுவதும் தன்னோடு இருந்த மற்றொரு நண்பரான சூர்யாவோடு, தனது இருசக்கர வாகனத்தில் செல்கிறார். வாங்கிய பொருள்களோடு பாதிதூரம் வந்திருந்த நிலையில், அப்போதும் அழைத்துக்கொண்டே இருந்திருக்கிறார் ஸ்ரீராம். தொடர்ந்து அழைக்கிறானே எனக் கருதி, அவரோடு பேசுகிறார். “பக்கத்தில் உள்ள ஜாலி பே பாரில் (Jolly Bay Bar) இருக்கிறேன். நீயும் வா” என்கிறார் ஸ்ரீராம். நண்பன்தானே என்று தன்னோடு வந்திருந்த சூர்யாவையும் அழைத்துச் செல்கிறார்.
illustration : judybowman
அங்கு ஷர்மிளாவின் சகோதரர்களோடு வேறு சிலரும் பிரவீனின் வருகைக்காக பாரின் நுழைவாயிலில் பயங்கரமான ஆயுதங்களோடு காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்ததைப் போல சுமார் 8:45 மணியளவில் பிரவீன் சூர்யாவோடு அங்கு வருகிறார். மறுகணமே பிரவீனைக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்கின்றனர். பிரவீனோடு வந்த சூர்யாதான், பிரவீனின் கைப்பேசியிலிருந்து பிரவீனின் பெரியப்பா மகனிடம் தகவலைச் சொல்கிறார். இந்த சூர்யாவும் கடந்த சில மாதங்களாகத்தான் பிரவீனோடு நட்புறவில் இருந்திருக்கிறார். காவல்துறை அவரை விசாரித்துவிட்டு, இக்கொலையில் அவருக்குச் சம்மந்தமில்லை எனக் கருதி விடுவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கொலையை அரங்கேற்றிய ஷர்மிளாவின் தந்தை மீதும் அவரது மற்றொரு சகோதரர் மீதும் இதுவரையிலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை.
24.02.2024 அன்று பிரவீன் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து அவரது உடலைப் பிரேத பரிசோதனை செய்யும் வரைக்கும் பள்ளிக்கரணை காவலதிகாரிகள் பிரவீனின் மனைவி மற்றும் பெற்றோரைத் தொடர்ந்து அவசரப்படுத்தியே வந்திருக்கிறார்கள். இரவு 9 மணிக்குப் பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு பிரவீன் மனைவியையும் அவரது பெற்றோரையும் அழைத்துச் சென்ற பள்ளிக்கரணை காவலர்கள், மறுநாள் காலை சுமார் 11 மணிவரைக்கும் காவல்நிலையத்தில் வைத்திருந்ததோடு, பிரவீன் மனைவி ஷர்மிளாவிடம் “நீ கையெழுத்துப் போடாவிட்டால் உன் புருஷனின் உடல் அழுகிப் புழுவாகிடும்” என்று மிரட்டியும் இருக்கிறார்கள். அதன் விளைவாகவே ஷர்மிளா கையொப்பமிட்டிருக்கிறார். எதற்காகப் பாதிக்கப்பட்ட தரப்பினரை இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 11 மணி வரை காவல்நிலையத்தில் வைத்திருக்க வேண்டும். இச்செயல் வினோதமாக இருக்கிறது. இத்தகைய அடாவடித்தனம், தலித்துகள் மீது காவல்துறையினருக்கு இருக்கிற சாதிய வன்மத்தையே காட்டுகிறது.
காவல்துறை எப்போதும் சாதியவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதால், எதார்த்தமாக நிகழும் நிகழ்வின் மீது ‘அது நாடகத் தன்மையிலானது’ என்கிற பொய்யுரையைக் கட்டமைத்து, சமூகத்தில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி அதன்மூலம் இளைஞர்களிடம் சாதி வெறியைத் தூண்டிக்கொண்டிருக்கும் சாதியச் சங்கங்களுக்கும் சாதியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அச்சம் ஏற்படுவதில்லை. “நம் சாதிப் பெண்ணை மாற்றுச் சாதிக்காரன் மணமுடித்தால் அவனை வெட்டுங்கள்” என சாதி வெறியர்கள் பொது மேடையில் பேசி சாதி வெறியைத் தூண்டுவதால், சாதியின் மானம் என்ற பெயரில் பெற்றப் பிள்ளை என்றுகூட பாராமல் வெட்டிப்படுகொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் பெற்றோர்கள்.
‘இந்திய மக்களிடையே அந்நிய கலப்பு’ எனும் நூலின் ஆசிரியரின் கூற்றினை ‘இந்தியாவில் சாதிகள்’ நூலில் புரட்சியாளர் அம்பேத்கர் மேற்கோள் காட்டியிருப்பதின் அவசியத்தை நாம் உற்று நோக்க வேண்டும்: “அந்நியக் கலப்பு இல்லாத சாதியோ, வகுப்போ இந்தியாவில் எதுவுமில்லை”. அதாவது, இந்திய இனத்தைப் பொறுத்தவரைக்கும் தங்கள் இரத்தத்தாலும் கலாச்சாரத்தாலும் இரண்டறக் கலந்ததற்குப் பின்னே சாதி தோன்றியிருக்க வேண்டும் என்பதுதான் புரட்சியாளர் அம்பேத்கர் மேற்கோள் காட்டிய கூற்றிற்கான பொருள். உண்மை இப்படி இருக்க, இங்குள்ள ஒவ்வொரு சாதியினரும் தங்களுடைய சாதியானது தூய்மையானது, இரத்தக் கலப்பே இல்லாதது எனக் கூறிக்கொண்டு தங்களைத் தாங்களே ஆண்டபரம்பரை என நிறுவுவதற்கு வரலாற்று ஆதாரங்களைத் தேடிக்கொண்டிருப்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல்.
புரட்சியாளர் அம்பேத்கர், ‘இந்தியாவில் சாதிகள்’ நூலில் சாதிமுறையின் தோற்றுவாய்க்கும் அது நீடித்திருப்பதற்குமான காரணங்களில் மிக முக்கியமானதாக ‘அகமண முறை’யைக் குறிப்பிடுகிறார். அகமண முறை என்பது ஒரே சாதிக்குள் மணமுடிப்பது; இரத்தக் கலப்பு ஏற்படுவதைத் தடுப்பது. இந்த இரத்தக் கலப்பைத் தடுப்பதற்காகவே சாதியப் படுகொலைகள் அரங்கேற்றப்படுகின்றன. இதுதான் சனாதனவாதிகளின் குறிக்கோள். சாதி மறுப்புத் திருமணத்தால் இரத்தக் கலப்பு அதிகமாகிவிடும். அது சாதியக் கட்டமைப்பை உடைத்துவிடும் என்கிற அச்சம் சாதியவாதிகளுக்கு இருக்கிறது. அதன் காரணமாகவே இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு வெளிப்படையாகவே சவால் விடக்கூடிய வகையில் சாதியவாதிகளின் செயல்பாடுகள் இருப்பதையும் கவனிக்க வேண்டும்.
சாதிய இறுக்கம் நிறைந்துள்ள மண்ணாகக் காணப்படும் கொங்கு மண்டலத்தில் உள்ள சாதி அமைப்புகளின் செயல்பாட்டை உற்று நோக்கினால் இதற்கான உண்மைப் புரியும். ‘சாதிக் கட்டுப்பாட்டை மீறுகிறவர்கள் படுகொலை செய்யப்படுவார்கள்’ என்று நேரடியாக எச்சரிக்கிறார்கள், அப்படிச் செய்துமிருக்கிறார்கள். ஏன், அத்தகைய சாதியப் படுகொலையை விசாரித்த விசாரணை அதிகாரிகூட மர்மமான முறையில் இறந்திருக்கிறார். அதேவேளை, இந்தச் சாதிய அபிமானிகள் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை ஏமாற்றி, அவர்களைச் சொல்லொண்ணாக் கொடுமைகளுக்கு ஆளாக்கிய நாடகக் காதல் கும்பலின் குற்றங்களுக்கு மறந்தும் கூட எதிர்வினை ஆற்ற மாட்டார்கள்; தங்களது ஐம்புலன்களையும் பொத்திக்கொள்வார்கள். ஏனெனில், அக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாவரும் ஆதிக்கச் சாதியினர்.
பொதுவாக முற்போக்குப் பேசக்கூடிய திராவிடக் கட்சியினர் சாதி கடந்த திருமணத்திற்கு எதிரான மேற்கண்ட சாதி அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றியது கிடையாது. அதற்கு முதன்மையான காரணம் வாக்கு வங்கி அரசியல். இத்தகையவர்கள் பொதுவெளியில் மதவாதத்திற்கு எதிராக மேடைதோறும் பேசுவார்கள், சனாதன ஒழிப்பைப் பற்றியும் பேசுவார்கள். ஆனால், மறந்தும்கூட சாதி வெறிக்கு எதிராகவும், சாதி மறுப்புத் திருமணத்திற்கு ஆதரவாகவும் பேச மாட்டார்கள். ஏனெனில், இங்குள்ள சாதியவாதிகளைப் பகைத்துக்கொண்டு ஒருபோதும் அரசியல் செய்ய முடியாது என்கிற அச்சம்.
முற்போக்கு பேசும் இடதுசாரிகள், திராவிட இயக்கத்தினர், தமிழ்த் தேசிய அமைப்புகள் யாவரும் சாதி மறுப்புத் திருமணத்தை ஆதரித்துப் பொதுவெளியில் பேசுவதற்கு அச்சம் கொள்கிறார்கள். ஆதலால்தான், ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச்சட்டத்தை இயற்ற வேண்டும் என்கிற சனநாயக சக்திகளின் பேச்சிற்கு இவர்கள் செவி சாய்ப்பதில்லை. இத்தகைய கள்ள மௌனம் பரிசோதிக்கத்தக்கது. ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம், “சாதிய முறையைச் சமூக நீதி, வட்டாரப் பெருமை என்று மறைமுகமாக வளர்த்துவரும் நம்மிடம் இப்போது சாதி வெளிப்படையாகக் கொக்கரிக்கிறது. அரசியல் அதிகாரத்திற்குச் சாதி மூலதனமாக இருக்கும் பட்சத்தில் அவற்றில் மாற்றம் ஏற்படுவதைப் பதற்றத்தோடு இந்தச் சாதி அமைப்புகள் எதிர்கொள்கின்றன. அதனாலேயே சாதியக் கட்டுமானத்தில் முதல் உடைவை ஏற்படுத்தும் இரத்தக் கலப்பை மறுத்து ஓங்கி குரல் எழுப்புகின்றன” என்று பதிவு செய்திருப்பதை (‘ஆணவக்கொலைகளின் காலம்’) இங்கு ஒப்பிடுவது பொருத்தமானதாகும். நடப்பரசியல் சூழலும் இவ்வாறு இருப்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். பொதுவாக, சாதியக் கொலைகளில் அதிகம் பாதிக்கப்படுவது தலித்துகள்தாம். மாற்றுச் சாதியினரும் பாதிக்கப்படுகிறார்கள், இல்லை என்று சொல்வதற்கில்லை. ஆனால், அவர்கள் மீது அரங்கேற்றப்படுவதை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
தமிழகச் சூழலில் சாதி எதிர்ப்பைப் பிரதானமாகக் கொண்டுள்ள பெரியாரிய இயக்கங்கள் கூட, பெரியாரின் இறப்பிற்குப் பின் அவரது கொள்கைகளைச் செயலிழக்கச் செய்துவிட்டார்கள். அப்படியே செயல்பட்டாலும் அந்த இயக்கங்களில் உள்ள தலித்துகளை மட்டுமே இதற்காகக் குரல் கொடுக்க வைக்கிறார்கள். தமிழகச் சூழலைப் பொறுத்தவரை சாதியக் கொலைகளுக்கு எதிராகத் ‘தனிச்சட்டம்’ இயற்ற வேண்டும் என்கிற கோரிக்கையைத் தலித்திய அமைப்புகளும் இயக்கங்களும் தொடர்ந்து முன்வைத்துவந்தாலும் அதற்கான பிரதிபலன் இன்றுவரையிலும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆனால், இராஜஸ்தான் மாநில அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்காக ‘தனிச்சட்டத்தை’ இயற்றியுள்ளது. அச்சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காகத் தற்போதுவரைக்கும் கிடப்பில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில் சமூக நீதி பேசும் அரசு, பெரியார் மண்ணில் இச்சட்டத்தை இயற்றி உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவந்தால், இந்தியாவிலேயே ஆணவப் படுகொலைகளுக்கு என்றே தனிச் சட்டத்தை இயற்றிய முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழும்.
‘சமூகத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் சாதியக் கொலைகளைத் தடுப்பதற்காகவும், அதனால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும், அக்குற்றத்தில் ஈடுபடுகிறவர்களைத் தண்டிப்பதற்காகவும் சிறப்புச் சட்டம் ஒன்றை நாடாளுமன்றம் இயற்ற வேண்டும்’ என கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உச்சநீதிமன்ற அமர்வு வழங்கிய ‘ஆறுமுகம் சேர்வை’ தீர்ப்பு சிறப்பு வாய்ந்ததாகும்.
அதில், ‘தடுப்பு நடவடிக்கை; நிவாரண நடவடிக்கை; தண்டனை நடவடிக்கை என மூன்று நடவடிக்கைகளைக் கடைபிடிக்குமாறு’ உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது. மேலும், ‘ஆணவக்கொலை சம்மந்தமான குற்றங்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகளை மாநில அரசுகள் உடனடியாகக் கண்டறிய வேண்டும்; அதுகுறித்து அப்பகுதிகளிலுள்ள காவல்துறையினரை விழிப்போடு இருக்குமாறும் அறிவுறுத்த வேண்டும்; அந்தப் பகுதிகளில் எங்காவது சாதிப் பஞ்சாயத்து / கூட்டம் கூடுவதாகச் செய்தி கிடைத்தால் அதை உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்; செய்தி கிடைத்ததும் டிஎஸ்பி மட்டத்தில் உள்ள அதிகாரி அந்தப் பகுதிக்குச் சென்று சாதிப் பஞ்சாயத்து / கூட்டம் கூடக்கூடாது என மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்; அதையும் மீறி சாதிப் பஞ்சாயத்து நடந்தால் அங்கேயே டிஎஸ்பி இருந்து பஞ்சாயத்தின் நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்ய வேண்டும்; அந்தக் கூட்டம் சட்டவிரோதமான முடிவுகளை எடுப்பதற்காகத்தான் கூடுகிறது என டிஎஸ்பி சந்தேகித்தால் அதைத் தடுப்பதற்கு சிஆர்பிசி 144 பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கலாம், பிரிவு 151இன் கீழ் கைதும் செய்யலாம்; சாதியக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளோடு இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி சாதிப் பஞ்சாயத்து / கூட்டம் கூட்டப்பட்டால் ஐபிசி பிரிவுகள் 141, 143, 503, 506 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்; அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் தம்பதியினரைப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும்; ஒவ்வொரு மாவட்டத்திலும் அத்தகைய தம்பதியினர் பாதுகாப்போடு இருப்பதற்கேற்ற பாதுகாப்பு இல்லங்களைத் தொடங்குவது குறித்து மாநில அரசுகள் சிந்திக்க வேண்டும்; கலப்பு மணம் செய்துகொள்ள விரும்புவோர் சட்டப்படியான வயதை எட்டியவர்களாக இருந்தால் அந்தத் திருமணம் நடைபெறுவதற்கான பாதுகாப்பைக் காவல்துறை தர வேண்டும்; தங்களது திருமணத்தைக் கௌரவத்தின் பெயரால் சாதியினரோ, குடும்பத்தினரோ, மற்ற எவருமோ எதிர்ப்பதாகப் புகார் தெரிவிக்கப்பட்டால் அதை டிஎஸ்பி விசாரித்து எஸ்.பி.க்கு அறிக்கை அளிக்க வேண்டும்; அந்த அறிக்கையின் அடிப்படையில் எஸ்.பி. முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய ஆணையிட வேண்டும்.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளைக் காவல்துறையைச் சேர்ந்தவர்களோ மாவட்ட அதிகாரிகளோ பின்பற்றத் தவறினால் அதை வேண்டுமென்றே செய்த தவறாகக் கருதி அவர்கள்மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் தண்டனை வழங்கப்பட வேண்டும்; ஆறுமுகம் சேர்வை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் சாதியக் குற்றங்களைத் தடுக்கத் தவறும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; கலப்புமணத் தம்பதிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக வரும் புகார்களைப் பெறவும் விசாரிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்.பி., மாவட்ட சமூகநல அதிகாரி, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி ஆகியோர் அடங்கிய சிறப்புப் பிரிவு ஒன்றை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்; இந்தச் சிறப்புப் பிரிவுகளில் 24 மணி நேர ஹெல்ப்லைன் வசதி இருக்க வேண்டும்; ஆணவக் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் அதற்கென உருவாக்கப்படும் விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டுத் தண்டனை அளிக்கப்பட வேண்டும்.’
இவ்வாறு கூறியிருக்கும் உச்சநீதிமன்றம், இந்த உத்தரவு இனிமேல் பதியப்படும் வழக்குகளுக்கு மட்டுமின்றி ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளுக்கும் பொருந்தும் எனத் தெளிவுபடுத்தியிருக்கிறது. இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு வாரங்களுக்குள் அனைத்து மாநில அரசுகளும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. சாதியக் கொலைகளுக்கென்று தனிச் சட்டம் இயற்ற திராணி இல்லாத மத்திய, மாநில அரசுகள், இவற்றையாவது நடைமுறைப்படுத்த முன்வந்தாலே இம்மாதிரியான குற்றங்கள் தொடர்ந்து அரங்கேறுவதை ஓரளவிற்குத் தடுக்க முடியும்.