அயோத்திதாசர் : சாதியைப் பௌத்தத்தின் வழியாகக் கடத்தல்

ஸ்டாலின் ராஜாங்கம்

ஞான.அலாய்சியஸ் தொகுப்பில் அயோத்திதாசர் சிந்தனைகள் நூல்களாக வெளியானபோது (1999), குமுதம் இதழில் ஒரு இலக்கியக் கேலி எழுதப்பட்டிருந்தது. “அயோத்திதாசர் சிந்தனைகள் படித்தாயிற்றா? என்று கேட்பதுதான் இலக்கிய உலகில் இப்போதைய ட்ரண்ட்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதே விசயத்தை இன்றைக்கு வேறு மாதிரி கூறலாம். தமிழ்ச் சமூக வலைதள வெளியில் அயோத்திதாசரைச் ‘சீண்டுவது’தான் இப்போதைய ட்ரண்ட் என்று கூறுமளவிற்கு அவரைப் பற்றிய ஆவேச வாசிப்புகள் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, அவரின் பெளத்தம் என்னும் நிலைப்பாடு மனம் போனவாறு வாசிக்கப்படுகிறது. உண்மையில் அயோத்திதாசரின்  பெளத்தம் என்பது என்ன? அது ஒருபடித்தானதா? மாற்றங்கள் இருந்திருக்கின்றனவா? மொத்தத்தில் அந்நிலைப்பாட்டை எவ்வாறு புரிந்துகொள்வது என்கிற கேள்விகளை அயோத்திதாசர் குறித்த இதுவரையிலான நூல்களில் இடம்பெறாத தமிழன் இதழிலிருந்து முதல்முறையாக மீட்டெடுக்கப்பட்ட சான்றுகளைக் கொண்டு இக்கட்டுரை விவரிக்க முற்படுகிறது. 

 

கருத்தியலா? நடைமுறையா?

அயோத்திதாசர் சமூக விடுதலை பயணத்தின் ஊடாகப் பெளத்தத்தை அடைந்தார் என்பது நாமறிந்ததே. 1898ஆம் ஆண்டு இலங்கை சென்று பௌத்த தீட்சை ஏற்றுத் திரும்பிய அவர் சென்னை ராயப்பேட்டையில் தென்னிந்திய சாக்கைய பெளத்த சங்கம் என்ற பெயரில் தலைமைச் சங்கத்தை நிறுவினார். பின்னர் அதன் கிளைகளும் விரைவாக உருவாயின. காலனிய  இந்தியாவில் சீர்திருத்த வாதங்கள் மாற்று மதங்கள் வடிவிலும் வெளிப்பட்டுவந்த காலமது. இச்சூழலில்தான் அயோத்திதாசரும் செயல்படத் தொடங்கினார். அயோத்திதாசரின் பௌத்தம் எத்தகையது என்பதை ஆய்வாளர்கள் இதுவரை பேசியுள்ளனர். அவர் பல்வேறு தொடர்புகளைப் பெற்றிருந்தபோதிலும் பலவற்றையும் உள்ளிழுத்துக் கலந்து கட்டி உருவாகியதாக அவருடைய பௌத்தம் அமைந்திருந்தது. அது பெரும்பான்மையும் தமிழ்ப் பகுதி சார்ந்ததாகவும் இருந்தது. குறளையும், அவ்வை பாடல்களையும், தமிழ் இலக்கணங்களையும், மக்கள் வழக்காறுகளையும் நீக்கிவிட்டால் அவரின் பௌத்தம் இல்லை என்கிற அளவிற்கு உள்ளூரைச் சார்ந்திருந்தார். கருத்தியல் அடிப்படையில் மட்டுமல்லாது பௌத்தம் என்பதைச் செயல்பாடு சார்ந்தும் விரைவுப்படுத்தினார். பெளத்தத்தை அழிந்ததாகக் கூறாமல் வாழும் மதமாகக் கூறிய அவர், அவற்றை நடைமுறையில் புலப்படும்படியாக மீட்டெடுக்க முற்பட்டார். கருத்தியல் ரீதியாகப் ‘பௌத்தராக வாழ்தல்’, ‘பௌத்தத் தன்மையை உணர்தல்’ என்பதை வலியுறுத்திவந்தார் என்று கூறுவதன் பொருள் அவர் கருத்தியல் தளத்தில் மட்டும் செயல்பட்டார் என்ற பொருளாகிவிடாது.

மனித தலைகளை எண்ணி அவர்களின் அடையாளங்களைக் கணக்கெடுத்த காலனியத்தின் அரசியல் சூழலில் ஒவ்வொருவரின் / ஒவ்வொரு குழுவின் அடையாளமும் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. குறிப்பாக, ஒடுக்கப்பட்டோரின் இடத்தை எவ்விடத்தில் பொருத்துவது என்பது தொடர்பான விவாதங்களும் நடந்தன. அவர்களின் பெயர், மதம், தொழில் என்ன என்பவற்றை அறுதியிட வேண்டியிருந்தது. இவ்வாறு குறிப்பிடும் அடையாளங்கள் சமூகத்திலும் அரசியலிலும் நிலைத்து நெடிய விளைவைத் தரவல்லவை என்கிற முறையில் அவற்றைத் திட்டமிடவும், விவாதிக்கவும் வேண்டியிருந்தது. இக்கால முன்னோடிகள் இவ்வாறுதான் முக்கியமானவர்கள் ஆகிறார்கள். இக்காலத்தில் விவாதித்து உருவான அரசியலே இருபதாம் நூற்றாண்டில் முழுமையாகவோ பகுதியாகவோ நிலவின.

இத்தகைய இன்றியமையாத காலகட்டத்தில் செயல்பட்ட அயோத்திதாசர், ஒடுக்கப்பட்டோருக்கான அடையாளமாகப் பெளத்தத்தை முன்மொழிந்ததோடு செயல்பாட்டு ரீதியாகவும் நிறுவ திட்டமிட்டார். உருவாகிவரும் புதிய அரசியல் சூழலில் ஒடுக்கப்பட்டோர் எங்கு வைக்கப்பட்டனர், எவ்வாறு அர்த்தப்படுத்தப்பட்டனர் என்பவற்றைத் தேடிப் பார்க்கும்போது அயோத்திதாசரின் இடையீடு முக்கியமானதாகத் தட்டுப்படுகிறது. அடையாளங்களைக் கண்டு நிலைப்படுத்தும் குடிமதிப்புக் கணக்கெடுப்புத் தொடங்கப்பட்ட காலத்திலேயே அயோத்திதாசர் விண்ணப்பம் செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிக்கோலஸ் டர்க்ஸ் எழுதிய Cast of mind நூலிலுள்ள காலனிய ஆட்சியின் மக்கள்தொகை கணக்கெடுப்பு, நவீன இந்தியாவின் அதிகார மையத்தில் சாதியை எவ்வாறு இன்றியமையாததாக்கின என்பதைப் படிக்கும்போதுதான் இத்தகைய தலையீடுகளின் முக்கியத்துவம் புரியும். குடிமதிப்புக் கணக்கெடுப்பில் பஞ்சமர்களை இந்துக்களாகக் கூறாமல் ‘ஒரிஜினல் தமிள்ஸ்’ என்று பதிவிடுமாறு கோரினார் என்று தெரிகிறது. அவருக்குத் தமிழ் என்கிற யோசனை எங்கிருந்து வந்தது? அவற்றை அவர் எவ்வாறு புரிந்திருந்தார்? சாதியைக் குறிப்பிட வேண்டிய இடத்தில் மொழி அடையாளம் மாற்றாக ஆனது எவ்வாறு? என்றெல்லாம் இவற்றை ஆராய வேண்டியிருக்கிறது. ஏனெனில், இது அயோத்திதாசரின் ஆரம்பகாலம். ஆனால், இந்தியாவின் மற்ற பகுதிகளோடு ஒப்பிடும்போது அயோத்திதாசரின் இம்முயற்சி தனித்துவமாகத் தெரிகிறது. இவ்வாறு நுணுக்கமாகக் கவனித்து எதிர்வினையாற்றிய அவர் அடுத்தடுத்த குடிமதிப்புக் கணக்கெடுப்பின்போதும் அக்கறை கொண்டிருந்திருப்பார். ஆனால், நமக்கு அதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை.

அயோத்திதாசர் பெளத்தம் திரும்பிய ஆண்டுக்கு (1898) அடுத்துவந்த 1901ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்போது என்ன செய்தார் என்பதற்கான சான்று கிடைக்கவில்லை. ஆனால், 1907ஆம் ஆண்டு முதல் தமிழன் இதழ் வெளியாகி வந்ததால் 1911ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது அவரின் செயற்பாடுகள் என்னவாக இருந்தன என்பவற்றை அறியமுடிகிறது. பெளத்தம் என்பதை நவீன வடிவமான அரசு ஆவணங்களிலும் பதிந்து தனித்த சமூகமாக நிறுவிட பாடுபட்டார் என்பதை அறியமுடிகிறது. அயோத்திதாசரின் பேசப்படாத பகுதி இது. அதனை இனிக் காணலாம்.

 

II

ராயப்பேட்டை தலைமைப் பெளத்த சங்கத்தின் கீழிருந்த கிளைகள் 1911ஆம் ஆண்டின் குடிமதிப்புக் கணக்கெடுப்பில் எவ்வாறு பங்கேற்க வேண்டுமென 1910 டிசம்பர் மாதம் முதலே தமிழனில் அறிவிப்புகளை வெளியிட ஆரம்பித்தார். 1911 ஏப்ரல் மாதம் வரையிலும் குடிமதிப்புக் கணக்கெடுப்பில் பெளத்தர்களின் பங்கெடுப்புப் பற்றிய அறிக்கைகள், கடிதங்கள், அரசாங்கத் தகவல்கள், சிறு குறிப்புகள் என்று தொடர்ந்து வெளியிட்டுவந்திருக்கிறார். அவை யாவும் பத்திராதிபர் அயோத்திதாசர் எழுதியவை. அவற்றில் ஒரு அறிவிப்பு கட்டுரை வடிவில் தொடர்ந்து வெளியிடப்பட்டுவந்தது. ‘சென்சஸும் இந்திய பெளத்தர்களும்’ என்பது அதன் தலைப்பு. அதில் பெளத்தர்கள் குடிமதிப்பு விண்ணப்பங்களில் சாதி என்று கேட்கப்படும் இடத்தில் சாதியைக் குறிப்பிடக்கூடாது என்றும் மதம் என்ற இடத்தில் மட்டும் பெளத்தர் என்றும் அதிலும் இந்திய பௌத்தர் என்றும் குறிப்பிட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். அதாவது “பௌத்தர்களென்னுங் கூட்டத்தோருக்கு எத்தேசத்திலும் சாதியாசாரங் கிடையாது. அதையநுசரித்தே நமது கருணை தங்கிய ராஜாங்கத்தோருக்கு விண்ணப்பம் அனுப்பி இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் வெவ்வேறு கலம்பிரித்து வைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டோம். அவ்வகையாகவே பௌத்தர்களுக்கு வேறு கலம் பிடித்து விட்டார்கள்” என்று கூறிய அயோத்திதாசர், “இந்தியதேசப் பௌத்தர்கள் எத்திக்கிலிருந்தபோதிலும் சகலரும் இந்திய தேசப் பௌத்தர்களேயாதலின் இந்திய தேசப் பௌத்தர்களுக்குள் எத்திக்கிலுள்ள பௌத்தர்களாயினும் இக்குடி மதிப்பெடுக்கும் சென்செஸ் காலத்தில் நீங்கள் உங்களை இந்திய பௌத்தர்களென்றே கூறல் வேண்டும். இல்லையென மிரட்டி ஏதேனும் சாதியைக் கேட்பார்களாயின் பௌத்தர்களுக்குச் சாதியில்லை என்று துணிந்து கூறுங்கள். வேண்டுமென்னும் கெட்ட எண்ணத்தால் நீங்கள் முன்பென்ன சாதி என்று வற்புறுத்திக் கேட்பார்களாயின் அவ்வகையான கேள்விகளுக்கு நாங்கள் உத்தரவு கொடுக்க மாட்டோம், நாங்கள் இந்திய தேசப் பௌத்தர்களென்றே யாவரும் ஏகோபித்துக் கூறுங்கள். இதுவே… சென்னை சாக்கைய பௌத்த சங்கத்தார் அறிக்கை” என்றார். இது தொடர்பாக அரசாங்கத்திற்கு விண்ணப்பித்து உத்தரவு ஒன்றையும் அயோத்திதாசர் பெற்றிருந்தார். 14.12.1910ஆம் தேதியிட்ட தமிழன் இதழில் இந்த உத்தரவினை

‘பெளத்தர்களும் சென்சஸும்’ என்ற தலைப்பில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டார்.

அக்குறிப்பாவன: சென்னை சாக்கைய பௌத்த சங்கப் பொதுக் காரியதரிசி அயோத்திதாஸ பண்டிதரவர்கள் (பௌத்தர்கள் விஷயமாக) சென்னை கவர்மெண்ட்டாருக்குச் செய்த விண்ணப்பத்திற்கு அவர் பெற்ற மறுமொழி வருமாறு:

“பௌத்தர்கள் இந்துக்களோடு பாவிக்கப்பட மாட்டார்கள். அவர்களது தொகை சாம்பிராஜ்ய அட்டவணையில் (Imperial Tables) வேறாகக் காண்பிக்கப்படும்”

இதனை ஏற்றுச் செயல்பட்ட சங்கக் கிளைகளின் நிலவரம் இதழுக்கு எழுதி அனுப்பப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. கோலார் தங்கவயல் சங்கத்தினர் அங்கிருந்த சென்சஸ் ஆணையருக்கு விடுத்த கோரிக்கையும் தமிழன் இதழில் (25.01.1911) வெளியிடப்பட்டிருந்தது. அதில் “ஐயா ராஜாங்கத்தோருக்கு நாங்கள் விண்ணப்பம் அனுப்பி, அவர்கள் எங்களுக்குக் கொடுத்துள்ள உத்ரவின் காப்பியைத் தங்கள் சமூகம் அனுப்பி இருக்கிறோம், பார்வையிட்டுக் கொள்ளவும்.

….பௌத்தர்களைச் சாதி பேதமில்லாது வேறாகப் பிரித்து ஸென்சஸில் குறிப்பிக்கச் செய்வாரென்று நம்புகிறோம். பௌத்தர்களுக்குச் சாதிப்பெயர் குறிப்பிப்பதாயின் சென்சஸ் ஹெட் ஆபீசுக்கெழுதித் திருத்தும்படி நேரிடும்” என்று சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம்.

 

14.12.1910 தேதியிட்ட தமிழன் இதழில் வந்த உத்தரவு

 

 

தமிழனும் பெளத்தனும்:

அயோத்திதாசரின் மிக மிக முக்கிய நிலைப்பாடு இது. அவர் தமிழ், தமிழன் என்று சொல்லிக்கொண்டாலும் சாதியை மறுக்குமிடத்தில் பெளத்தத்தை வைத்து அதனை இந்திய அளவிலானதாக விரிக்கிறார். அதாவது அவரிடம் தொழிற்பட்டது மற்றொரு சாதியாக மாறும் கோரிக்கையல்ல. மாறாக, சாதிக்குப் பதிலாக மதத்தை அல்லது மெய்யியலை வைக்கிறார். ஒரு குறிப்பிட்ட மெய்யியலைப் பின்பற்றுகிறவர் சாதியைத் தாண்டி – மொழியைத் தாண்டி இருக்க முடியும். அவ்விடத்தில் அவர் நம்பும் மெய்யியலே (சமயம்) அவரின் அடையாளமாகிறது. அயோத்திதாசர் தொடர்ந்து வலியுறுத்திவந்த பூர்வ பௌத்தம் என்ற நிலைப்பாடு மற்றொன்றாகப் பரிணமிப்பதை இங்கே பார்க்கலாம். “இந்திய பெளத்தாள்” என்று சொல்கிறபோது ஒற்றை சாதி என்பதிலிருந்து இயல்பாகவே விலகிவிடுவதைப் பார்க்கிறோம். மேலும், குறிப்பிட்ட மெய்யியலை / கருத்தியலை ஏற்று யாரெல்லாம் உள்ளே வருகிறார்களோ அவர்கள் அம்மெய்யியலைக் கொண்ட மதத்தவர் ஆகிறாரே தவிர சாதியாக ஆவதில்லை. இந்த விதத்தில் அவருடைய மதம் பற்றிய பார்வை சாதி கடந்து மற்றவர்களை உட்கொணர்வதற்கான நிலைப்பாடாக இருந்தது எனலாம். அவர் மற்ற காலங்களில் தேவையை ஒட்டி பகுதி சார்ந்த சாதிகளைப் பேசியிருப்பினும் குடிமதிப்பு என்னும் அரசியல் அடையாளம் என்று வந்தபோது இத்தகைய நிலைப்பாட்டையே எடுத்தார். இதனால்தான் அவர் குடிமதிப்புக் காலத்தைக் “குல சிறப்பின் காலமெனக்” குறிப்பிட்டார்.

அயோத்திதாசரிடம் எதிரில் இருப்போர் சார்ந்து மாறிவந்த நிலைப்பாடுகளும் இருக்கின்றன. இதனை அவரைக் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்போர் மட்டுமல்ல, அரைகுறையாகப் புரிந்துகொண்டு ஆதரிப்போரும் புரிந்துகொள்ள வேண்டும்.

 

பூர்வமும் சாதிபேதமின்மையும்:

தமிழக தலித்துகளிடையே சாதித் தொடர்மொழிகள் பற்றி விவாதிக்கும்போது அவற்றை நிறுவ அயோத்திதாசரின் பெயர் பரவலாகக் கையாளப்படுகிறது. ஆதிதிராவிடர் என்ற பிரயோகத்தை அயோத்திதாசர் கையாண்டதில்லை. சாதிபேதமற்ற திராவிடர் என்ற தொடரையே கையாள்கிறார். ஆதி என்கிறபோது முதலில் தோன்றியவர் என்ற பொருளில் சொல்லப்படுகிறது. இப்பிரயோகத்திற்கான தேவையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், பூர்வ பௌத்தர் என்பதிலுள்ள பூர்வம் என்பது காலத்தை மட்டுமல்லாது அக்காலகட்டத்தில் நிலவிய நடைமுறைக்கு அழுத்தம் தருகிறது. இதனைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அவர் பயன்படுத்திய மற்றொரு பிரயோகத்தையும் நினைவுபடுத்திக்கொள்வது நல்லது. அதாவது, பூர்வத்தில் இருந்தவர்களாகச் சாதிபேதமற்ற திராவிடர்களைக் குறிப்பிட்டார். இதன்படி அவர் பயன்படுத்திய பூர்வம் என்பது சாதிபேதமில்லாத காலத்தைக் குறிக்கிறது. சாதி பேதமில்லாத காலம் பெளத்தத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. எனவே, பூர்வ பௌத்த நிலையை உணர்வதென்பது சாதிபேதமின்மையை உணர்வதாகிறது. அவருடைய கற்பித சமூகம் என்பது சாதிபேதமின்மைதான். வசதி வாய்ப்புகள் கொண்ட சமூகமாக மாறுவது கிடையாது. இந்தப் பூர்வம் என்கிற சிந்தனை உலகின் மரபு மற்றும் நவீனம் என எல்லாத் தளத்திலும் உண்டு. மார்க்சியம் சமநிலை நிலவிய பொதுவுடைமைச் சமூகமாகப் பூர்வ சமூகத்தையே சொல்லியது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது. கடைசியில் பூர்வம் என்பதைச் சாதியாக இல்லாமல் மதம் என்கிற விரிந்த அர்த்தத்தில் அவர் சேர்த்ததைப் பார்க்கிறோம். அதாவது “சில தீட்சைப்பெற்றுப் பெளத்தர்களானவர்கள் இந்துக்கள் சேர்த்துக்கொள்ளும் சாதித்தொடர் மொழிகளையும், இந்துக்கள் இணைந்துகொள்ளும்… அடையாளங்களையும் சேர்க்கப்படாது” என்றார்.

‘பௌத்தர்களும் சென்ஸஸும்’ என்ற தலைப்பிலான அறிவிப்புத் தொடர்ந்து வெளியாகிவந்த நிலையில், சில வாரங்கள் கழித்து அறிவிப்பு முடியுமிடத்தில் ஒரு அட்டவணையும் சேர்த்து வெளியிடப்பட்டது. குடிமதிப்புக் கணக்கெடுப்பின் விண்ணப்ப மாதிரி படிவமே அது. ‘மாதிரி ஷெட்யூல்’ என்ற பெயரில் அது வெளியாகியிருந்தது. விண்ணப்பத்தில் எந்தெந்தக் கலத்தில் என்னென்ன கேட்கப்பட்டிருக்கும், அவற்றில் எவ்வாறு எழுத வேண்டும் என்று அவற்றில் எழுதப்பட்டிருந்தது. அதன்படி ‘4வது கலத்தில் பெளத்தாளென்றும், 8ஆவது கலத்தில் இந்திய பெளத்தாளென்றும் வரையும்படி செய்யவும்’ என்று குறிப்பிட்டார் அயோத்திதாசர். இந்தமாதிரி ஷெட்யூல் சில வாரங்கள்வரை தமிழனில் வெளியானது. ஒவ்வொரு கிளையிலும் சென்சஸில் அமையும் பெளத்தர்களின் எண்ணிக்கையையும் இதழில் வெளியிட்டுவந்தார்.

 

22 பிப்ரவரி 1911 (தமிழன் இதழ்)

 

இதோடு நின்றுவிடாத அயோத்திதாசர், இது தொடர்பாக வெளியாகிவந்த அரசாங்க அறிவிப்புகள், இதழ்கள் மற்றும் பாதிரியார் குறிப்புகள் ஆகியவற்றை வெளியிட்டு அவற்றின் மீது தம் பார்வை கோணத்தையும் வெளிப்படுத்திவந்தார். குறிப்பாக, ரெவரெண்ட் சி.எப்.ஆண்ட்ரூ கருத்தையும் சென்னை மாகாண சென்சஸ் கமிஷனர் கேய்டி கருத்தையும் மறுத்து எழுதியதை இங்கு குறிப்பிடலாம். அயோத்திதாசருக்கு ஒடுக்கப்பட்டோரிடையே இருந்த பிற குழுக்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. சாதிப் பெயரை அகற்றி பெளத்தர்கள் என்னும் கலத்தில் சேரக் கோரிய பூலோகவியாசன் இதழைப் பாராட்டி அயோத்திதாசர் எழுதியிருக்கிறார் (தமிழன் இதழ் – 18.01.1911). அதேபோல இந்தியாவின் பிற பகுதி சென்சஸ் அனுபவங்களையும் வெளியிட்டுவந்தார். குறிப்பாக ‘கீழ் வங்காளத்திலுள்ள நாம சூத்திரர்களென்ற வகுப்பார் ஸென்சஸ் எடுக்கப்படும்போது அவர்களைச் சண்டாளர்களெனக் குறிப்பிக்கப்பட மாட்டாதெனத் தெரிகிறது. அவர்களைச் சண்டாளர்களென எழுதக்கூடாதென உத்திரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது” என்பதை எழுதினார். (தமிழன் இதழ் – 15.03.1911).

 

சாதியாக இல்லாமல் மதமாக:

பறையர் வகுப்பாரின் கீழிறக்கத்திற்கும் இழிவாகக் கூறப்படுவதற்கும்  எதிராக எழுதிவந்தவர் அயோத்திதாசர். அதனாலேயே அவரைச் சாதிவெறியர் என்கிற அளவுக்குக் குறுக்கிப் புரிந்துகொள்வோர் இங்குண்டு. ஆனால், அவர்களின் மீட்சியைச் சாதியாக – சாதி பெயரில் மாற்றி மீட்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. மாறாக, குறிப்பிட்ட மெய்யியலை உட்கொண்ட மத அடையாளத்திற்குள் கொண்டுபோய் விளக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்சஸின்போது இந்திய பெளத்த சமூகத்தோடு இணைத்துப் பார்ப்பதாக அது மாறியது.  இத்தளத்தில் அவர் தொடர்ச்சியோடும் ஓர்மையோடும் செயல்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!