பூர்வகுடிகளின் வாய்வழி வரலாறு

எஸ்.உதயபாலா

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்திலுள்ள கீரனூரில்தான் இந்தக் கோயில் உள்ளது. இருநூறுக்கும் மேலான குடும்பங்கள் இந்தப் பாப்பாத்தி அம்மனைக் குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். இக்குடும்பங்களில் பெரும்பான்மையான மக்கள் கீரனூரிலேதான் வாழ்கின்றனர். சில குடும்பங்கள்  மானூர், தாராபுரம்,  ஆயக்குடி,  கோத்தகிரி எனக் குடிபெயர்ந்தும் வாழ்ந்துவருகிறார்கள்.

இங்கே குடிகொண்டுள்ளதாகக் கூறப்படும் பாப்பாத்தி அம்மன் கீரனூரின் கிழக்காக உள்ள முல்லை நில நீர்ச்சுனையில் வீற்றிருந்த பாறை இடுக்கில்தான் அமர்ந்து தெய்வமானதாகவும் முன்னோர்கள் வாய்வழி வரலாறாகச் சொல்லியிருக்கிறார்கள்.

‘‘நாரை பறக்காத நாற்பத்தெட்டுப் பெருமடைக் கண்மாய்” எனப் புகழப்படுகின்ற தற்போதைய ராமநாதபுர மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் பூர்வகுடியாய் வாழ்ந்துவந்த சாம்பான் இன மக்கள் விவசாயத்தை முக்கியத் தொழிலாகச் செய்துவந்தார்கள்.

காலநிலை மாற்றத்திற்கேற்ப, அரசாட்சிகளின் முடிவிற்கேற்ப அவர்களின் வாழ்வியலில் பெரும்பான்மையான மாற்றம் பல கண்டிருந்தாலும்கூட விவசாயத்தை மட்டும் முதன்மைத் தொழிலாகப் பல தலைமுறைக்கும் கடத்தியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தலைமுறைகள் தற்போதைய சூழலில் தமிழகம் முழுக்கப் பரவி வாழ்ந்தாலும்கூட, பெரும்பாலும் நிலத்தின் உரிமையாளர்களாக இல்லை என்பது வருத்தமான செய்தி.

விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகள் வறண்ட நிலங்களாக இருந்தபோதிலும்கூட அங்கு வாழ்ந்த பூர்வகுடிகள் நீர் மேலாண்மையில் அறிவுப்பூர்வமாகச் செயல்பட்டு,  சிறப்பான கட்டமைப்புகளை ஏற்படுத்தியதன் மூலம் அந்தப் பகுதி வேளாண்மை  செய்ய ஏற்றதோடு மட்டுமல்லாமல் வளம் கொழிக்கும் இடமாகவும் மாறியது.

அரசாட்சிகளின் அடிப்படையில் பூர்வகுடிகளின் நிலம் கைமாறியது, சொந்த நிலத்திலேயே அடிமைகளாகவும், கூலிகளாகவும் வேலை செய்யப் பணிக்கப்பட்டார்கள். சில பகுதிகளில் சொல்லொண்ணாத் துயரத்திற்கும் ஆளாக்கினார்கள்.

இப்படித்தான் சிறுசேரியில் சாம்பான் இன பூர்வகுடி ஒன்று வேளாண் தொழிலை முதன்மையாகக் கொண்டு வாழ்ந்துவந்தது. அவர்களிடமிருந்தும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வந்தேறிகளின் வசமாக்கப்பட்டிருக்கிறது. அப்போதும் வேளாண் தொழிலைக் கைவிடாத சாம்பான் குடிகள் விவசாயக் கூலிகளாகத் தன் உழைப்பைத் தொடர்ந்து வந்தார்கள்.

அப்போதைய சாம்பான் குடிகளுக்கு நிலத்தின் மதிப்பு பற்றிய தெளிவெல்லாம் இருந்திருப்பதாகத் துளியும் யோசிக்க முடியவில்லை.  ஆனால், நாம்தான் உழவு செய்கிறோம், விதைக்கிறோம், உயிர்களனைத்தின் பசி போக்குகிறோம் என்ற ஆத்ம திருப்தி மட்டுமே போதுமானதாக இருந்திருக்கும்.

சிறுசேரியின் சாம்பான் இனக் குழுத் தலைவனான கருப்பனின் உழைப்பில் விளைந்த ஒரு பெரும் நிலத்தினைப் பணி நிமித்தமாக வந்த ஒரு பார்ப்பனர் வளைத்துப்போடுகிறார். அவருக்கு நிலத்தின் குணம் தெரியாது, மணம் தெரியாது, அதன் பொழுதுகளைப் பற்றித் தெரியாது. இவையெல்லாம் தெரிந்தும் நிலத்தின் மதிப்பு பற்றித் தெரியாத சாம்பான் குடியை வஞ்சகம் செய்கிறார்கள். கருப்பனின் கண்ணாளித்தனத்தையும், உழைப்பையும் தனதாக்கி அவனை மட்டும் தீண்டத்தகாதவனாகவே வைக்க நினைக்கிறார் அந்தப் பார்ப்பனர்.

அத்தகைய சூழலில் தாம் உயிர் பிழைத்தால் போதுமெனக் கடினமான வேலையையும் செய்யலாம் என்ற நிலைக்குப் பூர்வகுடிகள் தள்ளப்படுகின்றனர்.  வறுமைக்குள்ளாகி ஒருவேளை நல்ல உணவிற்கே அல்லல் பட்டுக்கொண்டிருந்த கருப்பனின் குடும்பம் சாதிய தீண்டாமையோடு மென்மேலும் துன்பத்திற்குள்ளானது.

அம்மாதிரியான சூழலில்தான் பார்ப்பன பண்ணையொருவர் பூர்வகுடிகளிடமிருந்து பறித்துத் தமதாக்கிக்கொண்ட நிலத்தில் கருப்பன் எனும்  பூர்வக்குடியை வைத்தே விதை விதைத்து வயிறு பெருக்க எண்ணுகிறார். பண்ணையின் ஏவுதலுக்குத் தன் குடும்பத்துடன் விதைக்கச் சென்ற கருப்பனுக்குத் திடீரென ஒரு யோசனை உண்டாகிறது. அது தவறு என மனம் சுட்டினாலும், பசி அந்த யோசனையைக் கலைத்துவிடுகிறது.

விடிந்தும் விடியாததுமாக எழுந்த கருப்பன் பண்ணையாரின் வீட்டை நோக்கி ஓடி “அய்யா மோசம் போயிட்டோம்..! வெதச்ச தெவசத்தையெல்லாம் பாழாப் போன கொக்கு வந்து ஒலப்பிடுச்சு!” என தான் செய்த தவறினை மறைக்கப் பொய் சொன்னான். இது பொய்யெனத் தெரிந்தால் உயிரை எடுக்குமளவுக்குத் தீண்டாமையும் அடக்குமுறையும் இருந்த காலமது.

உழைப்பினை உயிர் உருகும் வரை ஈந்தாலும் கருப்பன் குடும்பத்தாரின் வயிறுகள் எரிந்துகொண்டேதான் இருந்தன. அவ்வளவு பஞ்சமான காலகட்டமாக இருந்தது. இருப்பிடத்தை மாற்றி வேறு சீமைகளுக்குக் குடி நகர்ந்துவிடுவோமா  என்ற எண்ணம் கருப்பனுக்கு அவ்வப்போது தோன்றிக்கொண்டேதான் இருந்தது. ஆனால், பூர்வ மண்ணைவிட்டுப் போய்விடக் கூடாது, செத்தாலும் இந்த மண்ணிலே குலைப் பட்டினியாய்ச் சாவோம் என்றுதான் கருப்பன் சார்ந்த குடிகள் வாழ்ந்து வந்தனர்.

 

காதல் வாழ்கை என்பது அப்போது சர்வசாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால், மாற்றுச் சாதித் திருமணம் என்பதைக் கனவிலும் கூட எட்ட முடியாத நிலையில்தான் இருந்தது. குறிப்பாக,  மனு வகைப்படுத்திய சூத்திர சாதிக்குள் அடக்கம் பெற்றதே அனைத்துத் தமிழ்க் குடிகளும். ஆகவே, அப்போது பார்ப்பனர்கள் மிகுந்த செல்வாக்கும், அதிகாரமும் பெற்றவர்களாக இருந்தார்கள். மன்னராட்சி சிதைந்து ஆங்கிலேய ஆட்சிவரையிலும்கூட பார்ப்பனர்களின் அதிகார ஆதிக்கம் இரட்டிப்பாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

கருப்பனின் மகன் சின்ன கருப்பனும் காதல் வயதை எட்டினான். தனது குடி இளைஞர்களிடமிருந்து வேறுபட்டவனாகவும், மிகுந்த திறமைசாலியாகவும் வளர்ந்திருந்தான். கன்னியின் கடைக் கண் பார்வை பட்ட பிறகு பித்துப் பிடித்தவனாகத்தான் அலைந்து திரிந்தான்.

சின்ன கருப்பனின் காதல் ஆலென வளர்ந்தது. கண்ணுக்குத் தெரியாத விதை வானுயர  வளர்ந்தால் அனைவருக்கும் சந்தேகமின்றி வெட்ட வெளிச்சமாவதுதானே இயல்பு.

சில வருடங்களுக்கு முன்பு, பண்ணையாரின் மாடு நோய்வாய்ப்பட்டு இறந்துபோக, அதைப் புதைக்கச் சொல்லி பெரிய ஐயர் கட்டளை இடுகிறார். அந்தப் பணியில் பெரிய கருப்பனே முடுக்கிவிடப்படுகிறான்.

சில நாட்கள் கழித்துப் பெரிய கருப்பனின் உழைப்பில் வஞ்சம் கொண்ட இனத்தான் ஒருவன் “ஏனுங்க சாமி விசயம் தெரியுமா!” என அச்சத்தை பண்ணையிடம் உண்டு பண்ண…

“அபிஸ்டு… ஏதுவா இருந்தாலும் அஞ்சடி தள்ளி நில்லும் ஓய்..!” என சினந்தார்.

“அது ஒன்னிமில்லைங்க சாமி… அந்த கருப்ப இருக்கான்ல கருப்பன்…”

“ம்ம்ம் விசயத்த சொல்லுமய்யா..!” என ஐயர் வாயைக் கோணலாக இழுக்க…

“போன வாரம்… சாமியோட… பசு மாடு… செத்திட்டதா… சொன்னாங்க..!” என வஞ்சகனின் தூண்டுதல் பேச்சில் ஐயரை இழுக்க…

“நேரிடையா விசயத்த சொல்லுமோய்..!” என அதட்டினார் ஐயர்.

“மாட்டுக்கறி திங்கிறதுக்காகவே அந்த கருப்பன் கூட்டம் மாட்டுக்கு விசத்த வச்சிட்டான் சாமி! ” கொக்கியைப் போட வேறு எந்த யோசனையுமின்றி கருப்பனின் சீட்டைக் கிழித்தார் ஐயர்.

உருப்படியா இருந்த பண்ணையத் தொழிலும் போச்சுன்னு கிடந்த பெரிய கருப்பனுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக இருந்தது. சின்ன கருப்பனின் காதல் விவகாரம்.

“ஏன்டா பறப் பையன எப்படிடா பாப்பாத்தி விரும்புவா?”

“ஒரே விசித்திரமாவுல இருக்கு..!”

“எதையோ காட்டி மயக்கிட்டான் போல!”

“மிரட்டி கிரட்டி மடக்கிட்டானோ!”

“சின்ன கருப்பன திதி கொடுக்காம விடமாட்டானுங்க..!” எனக் காழ்ப்புணர்ச்சியான கருத்துகளோடு சின்னக் கருப்பனின் மேல் வன்மத்தைக் கொட்டிக்கொண்டிருந்தனர் சேரி முழுவதும்.

இங்க இருந்தா வாழவே விட மாட்டானுங்கன்னு பாப்பாத்தியக் கூட்டிட்டுச் சிறு சேரியவிட்டே ஓடி மாயமானான் சின்னக் கருப்பன். ராமநாதபுரத்தை விட்டே ஓடினான். இறுதியாக விசாரித்து அறிந்து கீரனூரைச் சென்றடைய வேண்டும் எனவும் எண்ணப்பட்டான்.

இப்படிச் சிவகங்கைச் சீமையைவிட்டு கீரனூர் சீமை வந்தபோது பாப்பாத்தியோடு ஒரு பெண் குழந்தையையும் பெற்றிருந்தான் சின்னக் கருப்பன். அவர்கள் இருவரையும்  கீரனூரில் கிழக்குப் பகுதியான முல்லை நிலத்தின் நீர்ச்சுனையிலுள்ள ஒரு பாறை இடுக்கில்தான் தங்கவைத்துவிட்டு, ஊர்ப் பக்கம் சென்று உறவுக்காரர்களின் உதவியோடு வருவதாகச் சொல்லிவிட்டு, ஆழம் மிகுந்த  சுனையின் ஓடையை நீந்திக் கடந்தான் சின்னக் கருப்பன்.

கீரனூரை அடைந்த சின்னக் கருப்பன், சில தலைமுறைக்கு முன்பான தொடர்போடு இங்கே வாழ்ந்த தம் இனத்தாரிடம் உறவு மகிழ்ந்ததோடு மட்டுமல்லாது தான் ஒரு பாப்பான் பொண்ணைத் திருமணஞ் செய்து கூட்டி வந்ததையும் அவர்களிடம் சொன்னான். “மாப்புள நீங்க கவலைய விடுங்க… உங்களையும் உங்க பொண்டு புள்ளைங்களையும் நாங்க பார்த்துக்கிறோம்!” என சின்னக் கருப்பனுக்கு ஆறுதல் சொல்லி உடன் வந்தனர்.

திரும்ப சுனையின் பாறை இடுக்கிற்கு பாப்பாத்தியையும் தன் மகளையும் பரிசலில் அழைத்துப் போக வந்த சின்னக் கருப்பனனுக்குக் காணும் காட்சியோ ரத்தக் கண்ணீரைத்தான் வரவழைத்தது. ஆம், பாப்பாத்தியும், அவளுடைய குழந்தையும் கொலையுண்டு ரத்த வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தார்கள்.

பாப்பாத்தியின் நீங்கா நினைவில் வாடிய சின்னக் கருப்பன் அவளையே தன் தெய்வமாக வணங்கத் துவங்கினான். காலம் கடந்தது, அவன் சிறுசேரிக்கும் திரும்பும் எண்ணம் இல்லாமல் கீரனூரே கதியெனக் கிடந்தான்.

அவ்வப்போது கீரனூரைச் சேர்ந்த தம் உறவுமுறைகளிடம் சிறுசேரியில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளையெல்லாம் பகிர்ந்து மகிழ்வான். அப்படியாக ஐயரிடம் விதை நெல்லைத் திருடிய பிறகு..! அந்தத் தவறை மறைக்க முற்பட்ட தம் தந்தை சுண்ணாம்பு தண்ணீரை வயல் முழுக்கத் தெளித்துவிட்டு, ஐயரிடம் போய் “விதைச்ச நெல்லையெல்லாம் கொக்கு ஒலப்பி நாசமாக்கிச்சு”ன்னு நம்ப வச்சதும், விதை நெல்லக் கொடுத்த ஐயரு… “தெனமும் இனி விவசாய வேலையோட கொக்கு ஓட்டற வேலையும் செய்யணும்!”ன்னு உத்தரவுப் போட்டதைச் சொன்னதுக்குப் பிறகு கீரனூரில் பெரும்பாலானோர் “கொக்கோட்டி” எனத்தான் கிண்டலாக அழைப்பார்கள்.

நாட்கள் நகர சின்னக் கருப்பனின் நல்ல எண்ணத்தையும், கடும் உழைப்பையும் அறிந்துகொண்ட உருமனாங் குடி சாம்பானாக இருந்த கன்னியப்பன், தன் மூத்த பொண்ணை கருப்பனுக்குத் திருமணம் கட்டிவைத்து, அதோடு நிலத்தையும் தானமாகக் கொடுத்து அவனைக் கீரனூரின் முதல் கொக்கோட்டி குடி என அடையாளப்படுத்தினார். “எல்லாம் அந்தப் பாப்பாத்தியால் கிடைத்த வாழ்”வென அன்றுமுதல் கருப்பனைப் பின்தொடர்ந்த வாரிசுகளும் தம் குல தெய்வமாகப் பாப்பாத்தியையே வணங்கி வருகிறார்கள்.

இந்தக் குடிகள் அண்ணன் தம்பி, கும்பு, எனத் திரிந்து இப்போது பங்காளிகள் என்ற வகைமையுள் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

Subscribe
Notify of
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Duraipandiyan
1 year ago

கதைஓட்டம் சிறப்பு.ஆனால் சமூகத்தில் சிறப்பை எழுதுங்கள்.உயர்வை போற்றுங்கள்.இன்றைய தலைமுறை வாழ்த்தும்.நன்றி . துரைப்பாண்டியன். ஆசிரியர். மதுரை.

முனைவர் மா மாணிக்கம்
1 year ago

தனது கால் தடத்தை தானே அழித்துக்கொண்டு செல்ல வேண்டும்.எச்சில் துப்ப கழுத்தில் கலயம். #மனுதர்ம ஆட்சியின் போது #தலித் மக்களுக்கு எங்கெல்லாம்
எதற்கெல்லாம் #தடைகள் இருந்தது??

1.பொதுக்கிணற்றில் நீர் எடுக்க தடை
2.சுடுகாட்டில் தம் பிணம் எரிக்கத் தடை
3.குளங்களில் குளிக்க தடை
4.தெருக்களை பயன்படுத்த தடை
5.மேற்சட்டை, வேட்டி, சால்வை அணிய தடை
6.மீசைவிடத்தடை
7.தாவணி, தங்க ஆபரணங்கள் போடத்தடை
8.செருப்பு அணிய தடை
9.குடுமி, கடுக்கண் போட தடை
10.ரயிலில் பயணிக்க தடை
11.பேருந்துகளில் இருக்க தடை
12.பாடசாலையில் படிக்க தடை
13. கோவிலில் தடை
14. பொது நிறுவனங்களில் உட்புக தடை
15. மருத்துவ வசதி தடை
16. வேற்று உழைப்பு வழிமுறை தடை.

1.சதுர வடிவ வீடு கட்ட தடை
2.ஜன்னல் வைக்க தடை
3.திண்ணை கட்ட தடை
4.வாசக்கால் கதவுக்கு தடை
5.தென்னையோலை வேயத்தடை
6.கிணறு தோண்டிக்கொள்ள தடை
7.ஆடு மாடு வளர்க்க தடை
8.மா,பலா,வாழை வளர்க்க தடை
9.முகம் பார்க்க கண்ணாடி வைத்துக்கொள்ள தடை
10.சொந்த ஏர் கலப்பை,சாலுக்கு தடை
1.அம்மி,ஆட்டுக்கல்,’யந்திரம்’ வைத்துக்கொள்ள தடை
2.தேங்காய் நார் கயிறு பயன்படுத்த தடை
3.வீடுகட்ட செங்கல், கருங்கல் உபயோகிக்க தடை
4.உலோக பாத்திரங்கள் வைத்துக்கொள்ள தடை
(Only மண் பாத்திரம்)
5.மம்பட்டி,கடப்பாரை சொந்தமாக வைத்துக்கொள்ள தடைனு ஏராளமான தடைகள்..

அடிமையா இருந்தே சாவணும்..!

இப்படி பல தடைகள்..

இவையெல்லாம் இந்த மண்ணில் பல சமூகங்கள் அனுபவிக்க காரணமே இங்கிருந்த மனுதர்ம ஆட்சி முறைகளும் பழக்கவழக்க சட்டங்களும் தான்!

இத்தனை தடைகளையும் ஒரு சமூகம் சாதியின் பெயரால் 2000 ஆண்டுகளாக அனுபவித்த கொடுமை உலகில் எங்கேணும் உண்டா??

70 ஆண்டுகால அரசியலைமைப்பை இவர்களால் சகித்துக் கொள்ள இயலாத போது
2000 ஆண்டுகால மனுதர்ம கொடுங்கோல் ஆட்சி முறைகளை எப்படி ஒடுக்கப்பட்ட மக்களால் ஏற்றுக்கொள்ள இயலும்??

சொந்த மண்ணில் வாழ்ந்த மக்களுக்கு அரசு இடம் ஒதுக்கி வீடு கொடுக்கும் நிலைக்கு தள்ளியது இந்த மனுதர்ம ஆட்சி முறையால் தான்…

இது 2685 செய்யுட்களாகவும், 3 பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது. இந்நூலை முதலில் கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பார் 1794ல் சமசுகிருதத்தில் இருந்து கிரிநாத் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். – சகோதரர் ஜெயபால் சென்னை

Last edited 1 year ago by முனைவர் மா மாணிக்கம்

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!