‘மனுதர்மம் என்பது வெறும் கடந்தகால விஷயமாக என்றும் இருந்ததில்லை. இன்றுதான் இயற்றப்பட்டது போன்று அது காட்சியளித்துவருகிறது. எதிர்காலத்திலும் தனது செல்வாக்கை நிலைநாட்ட அது விரும்புகிறது. இந்தச் செல்வாக்கு குறிப்பிட்ட காலம் மட்டும் நிலவுமா அல்லது என்றென்றைக்குமாக நீடித்து நிலைத்து நிற்குமா என்பதுதான் இங்கு கேள்வி.’
– பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்
மணிப்பூர் கலவரங்கள் நாடெங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மூன்று மாதங்களாக நீளும் வன்முறைகள் குறித்து இப்போதாவது பேசுகிறார்களே என்று ஆறுதலடையக் கூட முடியவில்லை. காரணம், பேசப்பட வேண்டிய விஷயங்கள் இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை, வரப் போவதுமில்லை. பொதுவாகவே வடகிழக்கு மாநிலங்கள் பிரச்சினைக்குரியதாகவே பார்க்கப்படும். மாவோயிஸ்டுகள், ஆயுதப் போராளிகள், துப்பாக்கிச் சூடு, ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் என வடகிழக்கு மாநிலங்கள் பரபரப்பாகவே இருக்கும். இருப்பினும் நாம் அவர்கள் குறித்து இவ்வளவு அக்கறை காட்டியதில்லை; அந்நியர்களாகவே பார்த்துவந்தோம். அவர்களும் தங்களை இந்தியர்களாகக் கருதிக்கொள்வதில்லை என்று சொல்லப்படுவதுண்டு அப்பகுதிகளில் பழங்குடி மக்கள் அதிகமென்பதால், அவர்கள் இன்னும் இனக்குழு மனப்பான்மையில் இருப்பதும் காரணமாக இருக்கலாம். அரசு தங்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை என்று அவர்கள் கருதுவதாலேயே அங்கு ஆயுதப் போராளிகள் அதிகம் என்ற பார்வையும் உண்டு. பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பிறகு இந்நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. வடகிழக்கு மாநிலங்களில் பாஜக தனிக் கவனம் செலுத்துவதற்கு இரண்டு காரணங்கள்: மதம், கனிம வளம்.
மணிப்பூரில் மக்கள்தொகையிலும் அதிகாரத்திலும் பெரும்பான்மையாக உள்ள மெய்தி பிரிவினர் தங்களைப் பழங்குடி பிரிவில் இணைக்க வேண்டுமென்று 2012ஆம் ஆண்டு முதலே கோரிக்கை விடுத்துவருகின்றனர். இந்திய விடுதலைக்கு முன்பு பழங்குடி பிரிவில் இருந்ததாகவும் விடுதலைக்குப் பின்பு இந்தியாவோடு இணைந்த பிறகு பழங்குடி அங்கீகாரத்தை இழந்துவிட்டோம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே பட்டியல் சாதி பிரிவிலும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும் மெய்திக்கள் இருக்கும் நிலையில், பழங்குடி அங்கீகாரமும் கிடைக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்தமாக எங்கள் உரிமைகள் பறிபோய்விடும் என்று குக்கி, நாகா பிரிவினர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விரிவான கட்டுரைகளும் உரையாடல்களும் நிறைய வந்துவிட்டன. ஆனால், இதில் இன்னும் வெளிச்சத்திற்கு வராத பகுதி பாஜகவின் கார்ப்பரேட் ஆதரவு நிலைப்பாடுதான். கல்வி, வேலைவாய்ப்பில் செயற்படும் இடஒதுக்கீட்டு முறையைக் கேலிக்குள்ளாக்கும் வகையில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்ற வகைமையை உருவாக்கிப் பத்து சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டது போலவே, பட்டியல் – பழங்குடி உரிமைகளை விமர்சனத்திற்குள்ளாக்கவே மெய்திக்களுக்குப் பழங்குடி அங்கீகாரம் தரத் துடிக்கிறது பாஜக. இதன் மூலம் இடஒதுக்கீட்டையே நீர்த்துப்போகச் செய்து மீண்டும் சதுர்வருணத்தைச் செயற்படுத்துவதே அவர்களின் திட்டம். மறுபக்கம், காடுகளில் வசிக்கும் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதென்பது கார்ப்பரேட் சூழ்ச்சி. வடகிழக்குக் காடுகள் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளே அப்பகுதிகளில் ஆயுதப் போராட்டங்கள் உருவானதற்குக் காரணம். இந்தக் கோணத்திலும் மணிப்பூர் பிரச்சினையை அணுகியிருக்க வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தல் அண்மித்திருக்கும் சூழலில் பிரதமர் மோடி இக்கலவரங்கள் குறித்து வாய் திறப்பார் என்று நம்பவில்லை. தேர்தல் நெருங்க நெருங்க இக்கலவரங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இவை வெறும் இனப்பிரச்சினையாக மட்டும் பார்க்கப்படாது. குக்கி இனத்தவர்கள் பெரும்பாலும் கிறித்தவர்கள். மேலும், அண்டை நாடுகளிலிருந்து அகதிகளாக வருபவர்களோடு இணைத்து குக்கிகளை அந்நியர்களாக, வந்தேறிகளாகப் பார்க்கப்படும் போக்கும் நிலவுகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்தும் கிறித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் காணப்படுகிறது. இவை யாவும் தேர்தல் பிரச்சாரத்தில் கணக்கில் கொள்ளப்படும். மெய்திக்களும் மதம் மாறாமல் கிறித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது சாத்தியமில்லையென்றாலும் பிரச்சாரத்தில் அத்தகைய தர்க்கங்கள் தேவைப்படாது. பிரதமர் மோடி ‘இந்துக்களின் அவல நிலை’ குறித்து உணர்ச்சிகரமாக உரையாற்றுவார். அடுத்தடுத்து நடக்கக் கூடிய பிரச்சினைகளில் இன்னும் ஒருவாரத்தில் மணிப்பூரை மறந்துவிடும் மக்கள் பாஜகவின் வலையில் எளிதில் வீழ்வர், ஊடகங்களின் துணையோடு. பாதுகாக்கப்பட்ட காடுகள் தொடர்பான சட்டங்களை, இந்திய வனச் சட்டம் 1927 உட்பட, தவறாகப் பயன்படுத்தி நிலங்களை ஆக்கிரமிப்பதும் அங்கு வாழும் மக்களை அப்புறப்படுத்துவதும் வடகிழக்குப் பகுதிகளில் கணிசமாக நடக்கிறது. எதிர்க்கட்சியினரும் தங்கள் பிரச்சாரத்தில் மத அடிப்படைவாதம், சர்வாதிகாரம், சிறுபான்மை ஆதரவு என்றுதான் பிரசங்கிப்பார்களே ஒழிய, அரசின் நில ஆக்கிரமிப்பு, வருணாசிரம சட்டத் திணிப்பு, கார்ப்பரேட் சூழ்ச்சி ஆகியவை குறித்துப் பேச மாட்டார்கள்.
நாம் இருபத்தோராம் நூற்றாண்டில் வாழ்கிறோம். அரசு என்ற நிறுவனத்தின் இயங்கியல் குறித்துத் தத்துவ அறிஞர்களும் அரசியல் ஆர்வலர்களும் நமக்குப் போதுமான விளக்கங்களைத் தந்துள்ளனர். அதன் அடிப்படையில், ஒவ்வொரு நாளும் தலைப்புச் செய்திகள் மாறுவதன் பின்னணியில் அரசின் பங்களிப்புப் பற்றி நாம் அறியாமலில்லை. இங்கு அரசின் ‘சாமர்த்தியம்’ என்னவென்றால், மக்களின் அடிப்படை உரிமைகளை, வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் குற்றங்களை மறைக்கும் வகையில் வேறு சில குற்றங்களை நோக்கி நம்மைத் திசை திருப்பிவிடுவதுதான். மணிப்பூர் பிரச்சினை, புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு இல்லை, மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம், நபிகள் நாயகம் குறித்த அவதூறுக்கு மன்னிப்புக் கேட்டது, சந்திரசேகர ஆசாத் மீதான தாக்குதல், காந்தியைச் சுட்டது கோட்சே அல்ல என்று பாடத்திட்டதில் பொய்த் தகவல் என இவையெல்லாம் இந்த ஆண்டின் உதாரணங்கள். இவையல்லாமல் ஆண்டுதோறும் நிகழும் சிறுபான்மை சமூகத்தினர் மீதான கும்பல் கொலைகள், சாதியப் படுகொலைகள் ஆகியவையும் ஆளும் அரசு வெளிப்படையாகச் செய்த குற்றங்கள்.
இதன் மூலம் திரை மறைவில் பல அநீதியான திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பொது சிவில் சட்டம் பற்றிய உரையாடல்கள் தொடங்கிவிட்டன. மதமாற்றத் தடைச் சட்டமும் விவாதத்திற்குள்ளாகும். ஒருவேளை வரும் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி வென்றாலும், பத்தாண்டுகளாகப் பாஜக மக்கள் மனங்களில் விதைத்துவிட்ட வெறுப்புக் கலாச்சாரத்தை அழிப்பது சிரமம், பல ஆண்டுகளாகும். நாம் எதையும் ஆழமான உரையாடலுக்கு உட்படுத்துவதில்லை. பிரச்சினையின் மேலோட்டமான அம்சங்களையே பேசுகிறோம். நீட் தேர்வு போராட்டங்களை மறந்துவிட்டோம். அரசுப் பள்ளி மாணவர் நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருப்பதைப் பாராட்டத் தொடங்கிவிட்டோம். இனி முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நெக்ஸ்ட் தேர்வுக்கும் தயாராகிவிடுவோம். அப்படியே பொறியியல், கலை – அறிவியல் படிப்புகளுக்கான நுழைவு தேர்வுகளுக்கும். புதிய கல்விக் கொள்கை வெவ்வேறு வடிவங்களில், பெயர்களில் நுழைந்துகொண்டிருக்கிறது.
ஆட்சிக்கு வரும் முன்பு மக்கள் முக்கியம், வந்த பிறகு நிலம் முக்கியம். விவசாய – பஞ்சமி நில ஆக்கிரமிப்பு, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, காடுகள் ஆக்கிரமிப்பு என நில அரசியலின் வலைப்பின்னல் நம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது. இதுகுறித்து ஆளும் அரசோ, அரசின் ஊதுகுழல் ஊடகங்களோ பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இங்கு நிலவும் சாதி – மத – பொருளாதாரப் பாகுபாடுகளைப் பார்ப்பனியமும் நவ தாராளவாத முதலாளித்துவமும் சரியாகப் புரிந்துகொண்டுள்ளன. அரசு, சாதி, முதலாளித்துவம் ஆகியவை காலத்திற்கேற்ப நவீனமடைந்தாலும் அவை மக்கள் / நிலம் மீது கொண்டுள்ள அதிகாரத்தின் தன்மை மாறவில்லை.