வேருக்குத் திரும்புவோம்

வேங்கைவயல் வன்செயல் குறித்து நடந்துவரும் விசாரணைகள் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பழியைச் சுமத்தும் நடவடிக்கையை அறிவியல்பூர்வமாக நிகழ்த்திப் பார்க்கிறது சிபிசிஐடி. டிஎன்ஏ பரிசோதனை பற்றி யெல்லாம் பள்ளிக்கூட குழந்தைகளுக்கே ஓரளவு தெரிந்திருக்கும் சூழலில், சிபிசிஐடி செய்துவரும் வேலைகள் பெரும் அபத்தமாகவே இருக்கிறது. தலைமுடி, நகம், எச்சில் என உடலின் ஓர் அங்கமாக இருப்பவற்றிலிருந்து எடுக்கப்படும் விவரங்களுக்கும் உடல் வெளியேற்றும் கழிவிலிருந்து பெறப்படும் விவரங்களுக்கும் பாரிய வேறுபாடு இருக்கும் என்பது இவர்களுக்குத் தெரியாமலிருப்பது வியப்பாக இருக்கிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களையும் பரிசோதனைக்கு அழைத்திருப்பதை என்னவென்று சொல்வது. மேலும், நீர்த்தொட்டி மீது கவனம் செலுத்திய அதிகாரிகள், குழாய்களிலும் கசடுகள் இருக்கும் என்று யோசிக்காதது அவர்களின் மக்கள் நலன் கொள்கையைக் காட்டுகிறது. இம்மாதிரியான செயற்பாடுகளை அரசு இயந்திரத்தின் அலட்சியமாகத் தான் புரிந்துகொள்ள வேண்டும்.

இவர்தான் குற்றவாளியென்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்த பிறகும், அவர்மீது  எந்த நடவடிக்கையும் எடுக்காமல் டிஎன்ஏ பரிசோதனை என்று களத்தில் இறங்கியிருப்பது அம்மக்களின் குரலைப் புறக்கணிக்கும் செயலே. காவல் நிலைய வன்முறையைக் கண்டித்து சம்பந்தப்பட்ட அதிகாரியை உடனடியாக இடைநீக்கம் செய்யும் அரசு, தொழிற்சங்கங்களின் எதிர்ப்புகளுக்கு இணங்க 12 மணி நேர வேலை மசோதாவைத் திரும்பப் பெறும் அரசு, கோயிலுக்குள் நுழைந்த பட்டியலின இளைஞரைச் சாதி ரீதியாகத் திட்டிய தன் கட்சி உறுப்பினரை உடனடியாக இடைநீக்கம் செய்த அரசு, நான்கு மாதங்களாக நீதி கேட்கும் வேங்கைவயல் மக்களுக்கு மட்டும் பாராமுகமாக இருப்பது ஏன்? இவ்வன்செயல் நடந்த அதே நேரத்தில், இதைத் திசை திருப்பும் வேலையாக, அதே ஊரில் உள்ள கோயிலுக்குள் சாதி இந்துக்களின் எதிர்ப்பையும் மீறி பட்டியலின மக்களை மாவட்ட ஆட்சியர் அழைத்துச் செல்லும் செய்தி பரவலாகப் பேசப்பட்டது.

கடந்த ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்தபோது, ஊடகங்கள் தமது உட்சபட்ச நேர்மையோடு செயல்பட்டன; அனல் பறக்கும் விவாதங்களை நடத்தின. ஆனால், தற்போதைய ஆட்சியில் வேங்கைவயல் வன்செயல் குறித்து இவர்களின் செய்திகள் என்ன மாதிரியாக இருந்தது என்பது நாமறிந்ததே. துப்பாக்கிச் சூடும் இதுவும் ஒன்றா என்ற கேள்வி எழலாம். எல்லாமே மனித உயிர்கள்தாம். இரண்டிலுமே அரசின் மெத்தனமே பிரதான காரணி. கடந்த ஆட்சியைவிட தற்போதைய ஆட்சியில்தான் சாதிய வன்முறைகள் அதிகம் நடக்கின்றன எனும்போது இதைச் சமூகநீதி ஆட்சி என்றோ சமூகநீதி மண் என்றோ எவ்வாறு மார்தட்டிக்கொள்வது?

இத்தகைய வன்செயல்களில் அரசுகளின் நிலைப்பாடு என்பது, ‘தனக்கேதும் நேர்ந்துவிடக் கூடாது’ என்பதாகத்தான் இருக்கிறது. சாதி இந்துக்களைப் பகைத்துக்கொள்ள விரும்பாத அரசுகள், தெடர்ந்து பட்டியலின மக்களையே பலியாடாக்குகின்றன. வேங்கைவயல் போன்று சாதி இந்துக்கள் பயன்படுத்தும் நீர்த்தொட்டியிலோ அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் நீர்த்தொட்டியிலோ இத்தகைய சம்பவம் நடந்திருந்தால் கண்டிப்பாக டிஎன்ஏ பரிசோதனை செய்துகொண்டிருக்க மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி. எனில், இங்கு பாதிக்கப்படுவது யார் என்பதுதான் பிரச்சினை. சமூக – மத – இன – மொழி – பால் சிறுபான்மையினர் மீது எத்தகைய அதிகாரத்தையும் செலுத்தலாம், என்ன நடந்தாலும் நமக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள் என்றே சமூகநீதிக் கட்சிகள் நினைத்துக்கொண்டிருக்கின்றன.

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் உட்பட பல பள்ளிகளைப் பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கும் செயலுக்கும் கடும் எதிர்ப்பு இருக்கிறது. பல அமைப்புகள் அரசுக்கு அமைச்சர்களுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இதற்கு ஆதரவாகவும் சில இருக்கின்றன. அவையும் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை இந்த அரசுகள் முழுமையாகப் பயன்படுத்துவதில்லை, அப்படியான சூழலில் பள்ளிக் கல்வித்துறையோடு இணைத்தால் ஓரளவுக்காவது நன்மைகள் கிடைக்குமென்ற கோணத்தில் எழுந்தவையே. ஆதரவோ, எதிர்ப்போ அவை அரசின் அலட்சியத்தையே பிரதிபலிக்கின்றன. ஆனாலும் அரசு இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 12 மணி நேர வேலை மசோதா மீதான எதிர்ப்புக்கு உடனடியாகச் செயல்பட்ட அரசு, இவ்விஷயத்தில் அமைதி காப்பது, மீண்டும் பாதிக்கப்படுவது யார் என்பதே பிரதான காரணி என்பதை உறுதிசெய்கிறது.

சாதிய வன்செயல்கள், வன்முறைகள், படுகொலைகள் என எது நடந்தாலும் அரசும் ‘பொதுச்’ சமூகமும் அதை எளிதில் கடந்துவிடுகின்றன. ‘தாம் பாதிக்கப்படாத வரையில் எதுவும் வெறும் செய்திதான்’ என்ற மனநிலை இதற்குக் காரணமல்ல. ‘இவர்கள் பாதிக்கப்படுவது ஒன்றும் புதிதில்லையே’ என்ற மனநிலைதான் இதற்குக் காரணம். அதையும் மீறி சில நெருக்கடியான நிலை ஏற்படும்போது மட்டும் அரசு சிலரைக் கைது செய்து, அடுத்துவரும் தலைவர்களின் பிறந்தநாள்களில் விடுதலை செய்துவிடுகிறது. அரசு இப்படிச் செய்வதும் புதிதில்லையே என்று ‘பொதுச்’ சமூகமும் கடந்துவிடுகிறது.

வேங்கைவயல் வன்செயலோ பிற சாதிய வன்முறைகளோ அரசினது ஊடகங்களினது பார்வை என்பது குற்றவாளியைத் தண்டிப்பது அல்லது பிரச்சினையைச் சுமுகமாக்குவது என்பதாகத்தான் இருக்கிறது. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல் குறித்து யாரும் சிந்திப்பதில்லை. இப்படியான வன்செயல்களை எதிர்கொள்வது, மீண்டு வருவது, மறக்க நினைப்பது எதுவுமே எளிதல்ல. கைதான சில நாட்களிலேயே, அதிகபட்சம் சில மாதங்களிலேயே குற்றவாளி விடுதலையாகிவிடுவார். சிறை என்பதும் இங்கு சீர்திருத்தும் அறச்சாலை அல்ல. வெளிவரும் அவரது செயற்பாடுகள் என்னவாக இருக்கும் என்று நினைத்து ஒடுங்குவதும் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையைச் சிதைத்துவிடும். சுமுகமாகச் செல்வதென்பது அவர்களது அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு பணிந்துபோவதுதான்.

இதற்கெல்லாம் நமது ஒற்றுமையின்மையும் எதிர்ப்பின்மையுமே காரணமென்று ‘பொது’ அறிவுஜீவிகளால் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு வன்முறையின்போதும் நம் மக்கள் எதிர்க்கவே செய்கின்றனர். பல உள்ளூர் அமைப்புகளும் முதன்மை அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தவே செய்கின்றனர். ஆனாலும் சிற்சில நன்மைகளே நிகழ்கின்றன. ஊடகங்களின் சதியும் இதில் அடக்கம். நம் மக்களின் எதிர்ப்பை, அறிக்கைகளை, போராட்டங்களை ஊடகங்கள் கவனப்படுத்துவதில்லை. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை ‘மெரினா புரட்சி’ என விதந்தோதிய ஊடகங்கள் நம் மக்களின் போராட்டங்களைச் சாலை மறியல், கலவரம் என்பதாகவே காட்சிப்படுத்துகின்றன. ‘பொது’ அறிவு ஜீவிகளும் தங்களுக்குத் தெரிந்த கோட்பாட்டு வியாக்கியானங்களைச் சொல்லி உட்சாதி முரண்களைத் தூண்டிவிடுவதையே கடமையாகச் செய்துவருகின்றனர். நமக்கிருக்கும் பல பிரச்சினைக்களுக்கிடையில் இவற்றுக்கு வினையாற்றுவதும் கூடுதல் சுமையாகிறது.

அண்ணல் அம்பேத்கர் சொன்னதற்கேற்ப ‘கற்பி, புரட்சி / கலகம் செய், ஒன்றுசேர்’  என்றும் ‘கற்பி, ஒன்றுசேர், புரட்சி / கலகம் செய்’ என்றும் இரு வகைகளிலும் செயலாற்றிவருகிறோம். அதிகாரத்தைக் கைப்பற்றும் விதத்தில் ஆட்சியர், கட்சித் தலைவர், சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர், குடியரசுத் தலைவர் எனப் பல உயரங்களை அடைந்திருக்கிறோம். பட்டியலின முதலாளித்துவம் (Dalit Capitalism) என்ற வகையிலும் முன்னேறியிருக்கிறோம். ஆனாலும் சமூக அளவில் நம் நிலை இன்னும் கேள்விக் குரியதாகவே இருக்கிறது. இங்குதான் நம் அடையாளம் குறித்து நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. நாம் சுமந்துகொண்டிருக்கும் அடையாளம் நம் மீது திணிக்கப்பட்டிருக்கும் அடையாளம் அல்லது திணிக்கப்பட்ட அடையாளத்திற்கு எதிராக உருவான அடையாளம். நாம் நமக்காக உருவாக்கிக் கொண்ட அடையாளம் என்று ஏதாவது இருக்குமென்றால் அது ஒன்றே ஒன்றுதான். பண்டிதரும் அண்ணலும் மீட்டெடுத்துத் தந்த அடையாளமே அது.

பூர்வபௌத்தர் என்பதுதான் நம் அடையாளம். நமக்கான வரலாறும் இதனடிப்படையில் உருவானதுதான். நம் மீது திணிக்கப்பட்ட அடையாளத்தை உதறிவிட்டு நமக்கான அடையாளத்தை ஏற்கும்போது நாம் கவனத்திற்குள்ளாகிறோம். நமக்கான நீண்ட அறிவு மரபு, சமூக மரபு, நில மரபு ஆகியவை உறுதிபடும் பட்சத்தில் நம் போராட்டங்கள் போதிய தாக்கத்தை ஏற்படுத்தும். நாமே நமக்கான வரலாறை, இலக்கியத்தை, வாழ்வியலைக் கட்டமைத்துக்கொள்ளும் பட்சத்தில் இனி நம்மை நிராகரிக்கவோ, எளிதாகக் கடந்து செல்லவோ அவர்களால் முடியாது. நம் மண்ணில் தோண்டுகிற இடங்களிலெல்லாம் புத்தர் சிலைகள் கிடைக்கும் இவ்வேளையில் பூர்வ பௌத்தர் என்ற அடையாளத்தை ஏற்பது நமக்கான விடுதலை சமூகத்தைச் சாத்தியப்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். நம் வேர் இந்த மண்தான். ஆனால் இந்திய தேசமல்ல, இந்திரர் தேசம்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!