“கிழங்கு விளையும் ஆழம்
நமக்குத் தெரியும்.
நமது பன்றிகள் கூட
அந்த அளவே அறியும்!
அதற்கும் கீழே எதுவோ உள்ளது,
அதன்மேல்தான் பகைவர்க்குக் காமம்;
இந்தக் கரிசல் பூமி
வெளியே கற்களாகத் தெரிந்தாலும்
உள்ளே
பொன்னாலானது போலும்;
தானியங்களைத் தூவி
தானியங்களை எடுக்கும்
நம் பழங்குடிப் பண்பு
எதிரிகளுக்குக் கிடையாது;
அவர்கள்,
வெடிமருந்தைப் புதைத்து
நிலத்தைப் பிளந்து பார்க்கத் துடிப்பவர்கள்;
கல்லுக்குக் கீழே களி
களிக்குக் கீழே பாறை
பாறைக்குக் கீழே மணல்
மணலுக்குக் கீழே உவர்
உவருக்குக் கீழே நீர்
நீருக்கும் கீழே கனிமம்
என்ற கூறாய்வை
நிலத்தின் மீது செய்து பார்ப்பவர்கள்;
பகைவரின் கண்ணை உறுத்துகிறது
பரந்து விரிந்த நம் கரிசல்.
எங்கோ…
அதிகாரத்தை வளைத்துக்
காலடிக்குள் போட்டு
அதன் மீது ஏறி அமர்ந்திருக்கும்
முதலாளி ஒருவனுக்காக
இங்கே…
நம்மோடு பொருதுகிறான்
கூலிக்கு மாரடிக்கும் அடியாள்;
கழுதைப்புலியின் கோரைப்பற்கள்
கடித்துத் துப்பும்
எலும்புத்துண்டுகளை உண்பதற்கு
இந்தச் செந்நாய்கள் அலைகின்றன;
கொள்ளைக் கூட்டத் தலைவனுக்குச்
சிப்பாயாக இருப்பவன்
திருடத் தெரியாமல் இருந்தால் எப்படி!
நமது எதிரி
ஊரை அடித்து
உலையில் போடத் தெரிந்தவன்,
அவன்
நமது நிலத்தை விழுங்கி
முதலையிடம் கக்கிவிடுவதற்கு முயல்கிறான்,
அதற்காகத்தான்
இந்தப் பூச்சாண்டி வேலைகள் காட்டுகிறான்”
முது மறவோன் சொல்லை
மூக்கன் ஆமோதித்தான்
உடும்பன் வழிமொழிந்தான்
ஊர் செவிமடுத்தது.
கூதிர் காலத்தில்
பொது மன்றலில்
யாமத்திற்கு முன்பொழுதில்
இனக்குழு உரையாடலில்
திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது
முடிவொன்று எட்டப்பட்டது,
அதிகாரத்தைக் கைமாற்றத்
தேவையான கருவி நிலம்,
ஒருபோதும் அதனை
இழக்கக் கூடாது,
மொழிக்குப் பிறகு நிலமே
இனத்தை அழியாமல் காக்கும்,
நமது இனம் அழியாது
அழிய விடக்கூடாது.
உயிர் கொன்றேனும்
உயிர் கொடுத்தேனும்
இனம் காப்போம் என்ற
சூளுரை மொழியப்பட்டது.
m
“நீ
மேலே உழுதுகொள்
விதைத்துக்கொள்
அறுத்துக்கொள்
நான்
ஆழத்தில் உள்ளதைக்
கொஞ்சம் அள்ளிக்கொள்கிறேன்
எனக்கானதை எடுத்து முடித்ததும்
தூர்த்துத் தருகிறேன்
கரிசலில் முன்போல் காட்டுயிர் துரத்து
வேட்டுவம் பாடு;
நிலம் உனது
மண் எனது
ஒப்பந்தத்தில் கையொப்பமிடு
அன்பான பழங்குடியே”
எளிய மனிதர்களை
ஏமாற்றும் மொழியை
முகவர்கள் சந்திப்பில்
கற்பித்தான் முதலாளி.
m
“வணிகத்தில்
சொல்லென்பது ஒரு முதலீடு,
லாபம் அதிகம் தரும் சொற்களை
முதல் போட வேண்டும்
போலவே,
போட்டதற்கு மேல்
எடுக்கத் தெரியவும் வேண்டும்;
அண்டிப் பிழைப்பவனுக்கு ஒரு சொல்
உழைத்துப் பிழைப்பவனுக்கு ஒரு சொல்
பகட்டை விரும்புபவனுக்கு ஒரு சொல்
பகுத்து வாழ்பவனுக்கு ஒரு சொல்
ஆசைக்குப் பலியாகுபவனுக்கு ஒரு சொல்
அன்புக்கு இடம் கொடுப்பவனுக்கு ஒரு சொல்
உயர்குடியென்று நினைப்பவனுக்கு ஒரு சொல்
ஒடுக்கப்பட்டோம் என்று உரைப்பவனுக்கு ஒரு சொல்
நிலம் இருப்பவனுக்கு ஒரு சொல்
நிலம் இழந்தவனுக்கு ஒரு சொல்
புரட்சிப் பேசுபவனுக்கு ஒரு சொல்
புரட்டில் புரள்பவனுக்கு ஒரு சொல்
எதிர்ப்பவனுக்கு ஒரு சொல்
இணங்குபவனுக்கு ஒரு சொல்
அடிப்பவனுக்கு ஒரு சொல்
அடங்குபவனுக்கு ஒரு சொல்
பேசத் தெரிந்தவனுக்கு ஒரு சொல்
பிழைப்புவாதிக்கு ஒரு சொல்
முகத்துக்கு நேராக எதிர்ப்பவனுக்கு ஒரு சொல்
முதுகுக்குப் பின்னே குத்துபவனுக்கு ஒரு சொல்
வளைந்து கொடுப்பவனுக்கு ஒரு சொல்
நிமிர்ந்து நடப்பவனுக்கு ஒரு சொல்
கூட்டத்தில் இருந்தாலும் நடுங்கும்
கோழைக்கு ஒரு சொல்
தனியாக நின்றாலும் திமிரும்
வீரனுக்கு ஒரு சொல்
விரலைக் காட்டினாலே
அஞ்சுபவனுக்கு ஒரு சொல்
துப்பாக்கியை நீட்டினாலும்
மிஞ்சுபவனுக்கு ஒரு சொல்
தனக்காக வாழ்பவனுக்கு ஒரு சொல்
மக்களுக்காக வாழ்பவனுக்கு ஒரு சொல்
எலும்புத்துண்டுக்கு அலைபவனுக்கு ஒரு சொல்
எதற்கும் பணியாத தலைவனுக்கு ஒரு சொல்
ஒரு சொல்லில்
ஊரைக் கூட்டுபவனுக்கு ஒரு சொல்
ஒரு ரூபாய்க்கு
ஊரை விற்பவனுக்கு ஒரு சொல்
நமக்கு நாயாக இருப்பவனுக்கு ஒரு சொல்
நம்மை நாயாக நினைப்பவனுக்கு ஒரு சொல்;
சொல்லென்பது முதலீடு மட்டுமல்ல,
அதுவோர் உத்தி
அதுவொரு தந்திரம்
அதுவொரு கருவி
அதுவொரு நம்பிக்கை
எங்கே
யாருக்கு
எதற்காகப்
பயன்படுத்துகிறோம் என்பதில்
அதன் பொருள் மாறும்.”
முதலாளித்துவத்தின் உரைக்கு
முகவர் கூட்டம்
தலையாட்டியது.
“நான் ஏன்
முதலாளியாக இருக்கிறேன் என்று
உங்களுக்குப் புரிந்திருக்கும்”
என்ற கடைசி வாக்கியம்
அவர்கள் காதில்
பின்வருமாறு விழுந்தது:
“நான் ஏன்
முதலையாக இருக்கிறேன் என்று
உங்களுக்குப் புரிந்திருக்கும்”
m
மூன்று பெரும்பொழுதுகள் போயின
காட்டு மரங்கள் பூத்தன
நிலமெங்கும் கானலடித்தது
சகதி நாற்றம்
மீன்களின் உடம்புக்குள் புகுந்தது
மூங்கில் சருகுகளுக்குள்
உடும்புகள் புரண்டன
ஓடையின் மறு கரைக்குத்
தப்பித்து ஓடியது முயல்
ஈச்சங் கிழங்கின் ருசி
நாக்கில் குடிசைப் போட்டது
வேட்டை நாய்களின் குரல்
எல்லைத் தாண்டி ஒலித்தது
புளியம் பூக்களை
அடுக்களையில் சேகரித்தனர்
உப்புக் கண்டத்துக்கும்
சுட்டக் கருவாட்டுக்கும்
கஞ்சிப்பானை ஊறியது
நீர் தெளித்து
வாசலைத் தணித்து
நிலவெரியும் இரவுகளில்
கோரைப்பாயில் உட்கார்ந்து
சொலவம் கூறினர், கதைகள் பேசினர்;
மூக்கனின் தோள்களில் இருந்து
செருக்களத் தினவு இறங்கி
வேட்டுவப் பாடலுக்கு
மொழி சமைத்தது;
கழல்தொடி உடும்பன்
பொருநனாகியிருந்தான்;
பாணர் வகையறா
நொதுமலர் வரவேற்றது;
ஊர்க்காரிகளின் காதல்
பனம்பழத்தைப்போல் நாறியது;
எள்ளுப்பூ நாசியில்
மூக்குத்திப்பூ சூடினர்,
கள்ளிப் பழத்தால்
தொய்யில் எழுதினர்;
கூர்த் தீட்டிய கருவிகள்
பரணிலேயே கிடந்தன,
மறவர்களின் போர்க்குணம்
அகப்பாடல்களால் பூங்குணமாகிக்கொண்டிருந்தது
புதிய பறைகள் செய்தனர்
புதிய இசையைக் கற்றனர்
பதுங்கிய பகை
வரும்போது வரட்டும் என
இயற்கை,
வழங்கிய வாழ்க்கையை
வாழ்ந்தனர், மகிழ்ந்தனர்.
(முற்றும்)