அனாமிகா கவிதைகள்

ஷூக்கள்

செருப்புகள் வாங்க வக்கில்லாத காலத்தில்
ஷூக்களைக் கனவு கண்டேன்
ஷூக்கள் அணிந்த கால்களின் பின்னால்
நாய்போல் முகர்ந்து ஓடினேன்
காலத்தின் மேல் என் கால்கள் நின்றபாடில்லை
புழுதி படிய அலைந்து திரிந்தன
முப்பது வயது மூப்பின்மேல்
மூச்சு வாங்கி நின்ற பொழுது
முதல் ஷூக்களைச் சொந்தக் காசில் வாங்கினேன்
அவதியவதியாய் அணிந்துகொண்டு
பூமியை
அதன் ஆழத்தை
அதிர அதிர நடனமாடிக் களித்தேன்
இதோ
என் ஷூக்கள்
நான் வாங்கிய ஷூக்கள்
என் கால்களை அழகாக்கியிருக்கின்றன
நடக்கிறேன்
குதிக்கிறேன்
ஓடுகிறேன்
மகிழ்ச்சியை என்னால் தாங்க முடியவில்லை
பொய் ஷூக்களை அணிந்து
ஆயிரக்கணக்கான இரவுகளை வீணடித்திருக்கிறேன்
என்னால் உண்மையாக நம்பவே முடியவில்லை
நான் இப்போது அணிந்திருக்கும்
இந்த ஷூக்களுக்காக
முப்பது ஆண்டுகள் செலவழித்திருக்கிறேன்
இந்தப் பெரிய எண்கள்தான்
என்னைச் சோர்வடையச் செய்திருக்கின்றன
மற்றபடி
என் ஷூக்களைக் கட்டிப் பிடித்து
அப்படியே உறங்கிப்போனது
உங்களுக்கு ஒரே தமாஷாக இருக்கும்.

m

கர்ப்ப வயல்

அம்மாவின் வயிறு
கர்ப்பப்பை அகற்றப்பட்ட ஒரு காலிகுடம்
அதில் நீந்திய காலத்தில்
எனக்கொரு நல் இதயம் உண்டாயிருந்தது
மூளை அப்போதுதான்
அம்மாவின் மொழியைக் கற்கத் தொடங்கியிருந்தது
நான் அவளின் அல்குல்வழி வெறியேறுவதற்கு முன்பு
தவழவோ நடக்கவோ பழகியிருக்கவில்லை
கண் திறக்காத எனக்குக்
கனவுகள் இருந்ததாக ஞாபகம் இல்லை
சுத்தமான உயிர்
அற்புதமாய் அணங்கியது
அம்மாவுக்குப் பிடித்திருந்திருக்கும்
தொப்புள்கொடி வழி
நான் விரல் கொண்டு அவளை விளித்தேன்
அவள் என்னைக் கர்ப்பத்திலேயே அணைத்துக்கொண்டாள்.

m

Illustration : Aitch

 

அவ்வளவு பெரிய வெளி

கதவு பாதி திறந்திருந்தது
படிகள் ஒவ்வொன்றாய்
கீழே இறங்கிக்கொண்டிருந்தன
முன் அறையில்
குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள்
வாசல் பக்கம் நாய் பலமாகக் குரைத்தது
தெருக்கள் புழுதியோடு கிடந்தன
சாலையில் கனரக வாகனங்கள்
புகையை ஊதிக்கொண்டு வேகமாகச் செல்கின்றன
மண்ணுக்குள் பழைய உடல்கள்
வாழ்வு கழிந்து கிடக்கின்றன
அதற்கும் கீழ் எதுவென்று புலப்படாத
கனத்த இருள் சூழ்ந்திருக்கிறது
வெளிச்சத்தைச் சுமந்துகொண்டு சென்ற
ஒரு மின்மினிபூச்சியைப்
பின்தொடர்ந்துசென்றேன்
இறுதியில் அண்டத்தை அடைந்தது
அவ்வளவு பெரிய வெளியை
நான் இதற்கு முன் பார்த்ததேயில்லை

m

புள்ளியினங்கள்

எனக்கு முன் ஏதொன்றோ தோன்றி மறைகிறது
துருப்பிடித்த மூளைகொண்டு ஆராய்கிறேன்
நான்தான் தோன்றுகிறேனா அல்லது
நான்தான் மறைகிறேனா
ஒன்றும் பிடிபடவில்லை
மர்மமாக இருக்கிறது
யாரும் அறியக்கூடாத இரகசியம் ஒன்று
இந்தப் பூமியில் இருக்கிறதா
பாழடைந்த சிந்தனையில்
ஏதும் உதிக்கவில்லை
ஒரு தீக்குச்சியைப் பற்ற வைத்து
ஊதி அணைத்தேன்
இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில்
என்ன மிச்சமிருக்கப் போகிறது
காற்றெங்கும் அணைந்த மணம்போல்
அண்டத்திலிருந்து உதிர்ந்த
ஏதொன்றோ வரைய முற்படுகிறேன்
முதல் புள்ளியில் தொடங்கும் கோடு
பிறகு எப்போதும் எதற்காகவும்
நிறுத்தியதேயில்லை
கோடிக்கணக்கான புள்ளிகளின் மேல்
அதனுரு பிரமாண்டமாய் வளரத் தொடங்கியிருந்தது
சோர்வுற்றுக் கடைசி நிறுத்தக் குறியின்போது
என்னை அசைத்துப் பார்த்தன
இந்தப் புள்ளியினங்கள்
பிறகு
எனக்குள் ஒரு புழுவைப்போல்
ஊர்ந்து போயின

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!