வேட்டை நாயின்
கண்களில் ஆடும் தழலை
வெறித்துக்கொண்டிருந்தான் கரியன்;
திரும்பத் திரும்ப
அவனுடைய மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன
இரண்டு குதிரைகள்;
சருகுகளில் தெறித்திருந்த
உறைந்த குருதியில்
செந்நாய்கள் நாக்கைப் புரட்டும் காட்சியும்,
கொல்லப்பட்டவனின் மண்டையோட்டில்
உறங்கும் வண்டைப்போல் தெரியும்
கருந்துளையும்,
காட்டின் எல்லைப்பகுதியில்
அழுந்தப் பதிந்திருந்த
குளம்படிகளின் வெப்பமும்
கரியனின் நிலைத்த விழிகளை
இமைக்க விடாமல் செய்திருந்தன.
♥
பொந்துகளில் அமர்ந்தபடி
ஊரைக் கண்ணுற்ற ஆந்தைகள்
ஒவ்வொன்றாக வெளியேறிக்
குடியிருப்புகளின் நாற்புறமும் அமர்ந்தபோது
வேட்டை நாயின் உடம்பு சிலிர்த்தது;
அதன் கண்கள் உக்கிரம் கொண்டன;
காதுகள் விடைத்து விரிந்தன;
கூகைகளின் இருப்பு
நாயின் பதற்றத்தை அதிகரித்ததை
உணர்ந்த கரியன்
தீயில் வெடிக்கும் விறகுகளிலிருந்து
பறக்கும் கங்குகளின் ஊடாகத்
தம் கூட்டத்தைக் கண்டான்.
வேட்டைத்தடி நொறுங்குமளவுக்கு
இறுகப் பற்றியிருந்த மறவோன்
அதனைத் தரையில் ஓங்கிக் குத்தினார்;
பெயர்ந்த மண் துகள்கள் எகிறிப் பறந்தன;
பற்கள் நறநறக்க அவர் உறுமினார்;
அவருக்கு முன்பிருந்த பெருங்கல் மீது
வரையப்பட்டிருந்த சித்திரத்தில்
மோதிக்கொண்டிருந்த எருதுகள்
ஆவேசம் மூண்டு; மூர்க்கமேறி
கொம்புகளைச் சிலுப்பின.
“செருக்களம் நமக்குப் புதிதன்று;
காற்றோடும் நீரோடும் தீயோடும்
போராடி வென்றவர்கள் நாம்;
கழுதைப்புலிகள் வழிமறிக்கும் பாதையில்
உணவு சேகரிக்க
நம் கிழத்திகள் அன்றாடம் போய் வருகின்றனர்;
ஓநாய்கள் கூட்டமாகத் தங்கும்
குகைகளின் சுவர்களில்
குலக்குறியின் பெயரெழுதும்
வேட்டுவர்கள் நாம்;
தனக்குத் தானே பேறு பார்த்துக்கொள்ளும்
நம் தாய்வழிச் சமூகத்தின்
தொப்புள் கொடியை அறுக்க
எந்தக் கொம்பனும் பிறக்கவில்லை;
இந்தக் காட்டிலும்
அது சார்ந்த சமவெளியிலும்
நூறு இனக்குழுக்கள் இருந்தாலும்
அனைத்தும் ஒரு திணையின் குடிகள்;
புலியின் வழித்தடமும்
உடும்பின் வழித்தடமும்
வேறு வேறாக இருந்தாலும்
இந்த உயிர்களின் புகலிடம் காடுதான்;
சகப் பழங்குடியின் மரணம்
நம் காட்டுக்கு விடப்பட்டிருக்கும்
எச்சரிக்கை;
கழுத்துப்பட்டை போடப்பட்ட
நீண்ட உடலமைப்புடைய நாய்கள்
குரைத்துச் சுற்றும் நிலப்பகுதியில்
புதிய குடியிருப்புகள் முளைத்துள்ளன;
அங்கே
இரவு முழுக்க அணையாத
பெரிய பந்தங்கள் எரிகின்றன;
தரையை உதைக்கும் குதிரைகளின் காலடிகள்
நம் காடு வரை
அதிர்வை உருவாக்குகின்றன;
எருமைகளைவிட மூர்க்கமாகக் கத்தும்
கறுப்பு எந்திரங்களின் புகை
காற்றில் கலந்திருப்பதைக் காண்;
குடிகளே கேளுங்கள்!
காலாதிக் காலனை
உசுப்பும் பறையை முழங்குவோம்;
நமது வெறியாட்டுக் கேட்டு
எதிரியின் மூத்திரப்பை உடையட்டும்;
♥
பண்டுவனும் கணியனும்
அமைதியாய் வீற்றிருக்க,
பாணர்களின் தமிழ்
நரம்பை முறுக்கேற்றியது;
நெருப்பின் கொழுந்தை
எண்ணெய் ஊற்றி
மலரச் செய்தனர் பெண்டிர்;
முதுமகளின் கண்கள்
நட்சத்திரங்களை உற்றுநோக்கின;
மேகங்கள் இல்லாத வான்
மிதக்கும் கடல்போல் தெரிந்தது;
சகுனம் கேட்க விடைத்த
அவளுடைய காதுகள்
வளரும் நிலவொளியில்
ஒரு பூவரசம் பூவைப்போல் அசைந்தன;
காளையரின் குதிகால் மிதிக்கு
வேர்கள் மருண்டன;
பாறைகளில் படர்ந்திருந்த கொடிகள் அறுந்தன;
வேட்டை நாய்களின் தொடைகள்
இறுகின;
கரியன் எழுந்து கூட்டம் புகுந்தான்.
(தொடரும்…)