சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர், புலவர் ஆறுமுகனார் தமிழாசிரியராய்த் தன் வாழ்வைத் துவங்குவதற்கு முன் கல்வியை இடையில் நிறுத்திவிட்டு, தேசம் காக்கத் துப்பாக்கி ஏந்திப் போரிட்டுச் சிறை சென்றவர். நாட்டுக்காகப் பல தியாகங்களையும் சித்தரவதைகளையும் அனுபவித்தவர். நாடு சுதந்திரமடைந்த பின்னர் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சம்மேளனம் அமைப்பில் (கிமிஷிசிதி) பேராசிரியர் என்.சிவராஜ் தலைமையில் நடுத்திட்டு கூத்தரசன், குப்புசாமி, ராஜாங்கம், சிவசுப்ரமணியன், சடகோபன், எல்.இளையபெருமாள், கே.பி.எஸ்.மணி ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர். தமிழாசிரியர் என்பதால் திமுகவின் மீது பற்றுகொண்டு, தன் ஆசிரியர் பணியைத் துறந்து 1956இன் பிற்பகுதியில் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். திமுக முதன்முதலில் தேர்தல் பாதைக்குப் திரும்பியபோது சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிட்டார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் திருவேட்களம் எனும் கிராமத்தில் 1918ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் நாள் கூத்தன் – குட்டியம்மாள் இணையருக்கு ஆறாவது மகவாகப் பிறந்தார். ஆரம்பக் கல்வியைச் சொந்தக் கிராமத்திலேயே பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு நாட்டின் விடுதலைக்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தார். பின்னர், அங்கு பிரிட்டிஷ் இராணுவத்துக்கு எதிராகச் செயல்பட்டதால் கைதுசெய்யப்பட்டுப் பர்மாவில் உள்ள ரங்கூன் நகரில் சிறைவைக்கப்பட்டார். சிறைச்சாலையில் பிரிட்டிஷ் இராணுவத்தால் கொடூரமாக நடத்தப்பட்டார். ஏப்ரல் திங்கள் 1946இல் சிறையிலிருந்து விடுதலையாகிச் சொந்த ஊரான திருவேட்களம் திரும்பினார். அதன்பிறகு பாதியில் விட்டுச் சென்ற புலவர் படிப்பை முடித்த பிறகு சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தரால் பட்டியல் சமூக மாணவர்களுக்காகத் தொடங்கி நடத்தப்பட்ட நந்தனார் பள்ளியில் ஆசிரியராகச் சிலகாலம் பணிபுரிந்தார்.
தேர்தல்
1957ஆம் ஆண்டு ஆசிரியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு அதே ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இரட்டை உறுப்பினர் தொகுதி என்பதால் காங்கிரஸ் சார்பில் எல்.இளையபெருமாள் அவர்களும் திமுக சார்பில் புலவர் ஆறுமுகமும் போட்டியிட்டனர். பொது வேட்பாளர்களாக காங்கிரஸ் சார்பில் வாசிகம் பிள்ளையும் திமுக சார்பில் தண்டபாணி படையாட்சியும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் காங்கிரஸின் வாசிகம் பிள்ளை வெற்றிபெற்றார்.
1959ஆம் ஆண்டு சுவாமி சகஜானந்தர் மறைந்ததை ஒட்டி நடைபெற்ற சிதம்பரம் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக ஆறுமுகம் நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் சார்பில் பெடரேஷன் அமைப்பிலிருந்து வெளியேறிய சிவசுப்ரமணியனின் மனு சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. அதனால் டம்மி வேட்பாளராக இருந்த ஆடுர் அரசன் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்தத் தேர்தலில் ஆடுர் அரசன் அவர்களிடம் தனது வெற்றிவாய்ப்பைப் புலவர் இழந்தார். 1962இல் தமிழகச் சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது, சிதம்பரம் தொகுதியில் புலவர் ஆறுமுகத்தை வேட்பாளராக மீண்டும் அறிவித்தது திராவிட முன்னேற்றக் கழகம். அவரால் வெற்றிபெற இயலவில்லை. காரணம், காங்கிரஸார் மீது மக்களுக்குப் பெருமதிப்பு இருந்தது.
இது தேர்தலிலும் எதிரொலித்தது. மேலும், காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாகக் கம்யூனிஸ்டு கட்சி இரண்டாம் இடம் வகித்ததும் ஒரு முக்கியக் காரணமாகும். அப்போது திமுக வளர்ந்துவந்த இயக்கம் என்பதாலும் தன்னுடைய வெற்றிவாய்ப்பை இழந்தார். இந்நிலையில், 1967இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திமுக பெரும் வெற்றிபெற்றது. அந்தத் தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கட்சி கூறியதால்தான் போட்டியிடாமல் விலகிநின்று கட்சிப் பணியாற்றினார். மூன்று தேர்தல் செலவீனங்களால் தன்னுடைய பெரும்பகுதி சொத்தை இழந்திருந்தார். திமுக ஆட்சிக்குவந்த இரண்டாமாண்டில் அண்ணாதுரை மறைவும் அதற்குப் பின் நடந்த தலைமை மாற்றம் போன்றவையால் திமுகவின் இயல்பும் மாறிப்போனதால் புதிய அணிகளின் அலையில் புலவர் அலைக்கழிக்கப்பட்டார் என்றாலும் கட்சிமீது கொண்டிருந்த பற்றால் திமுகவின் செயல்பாட்டில் பங்களித்ததுடன் தன் இறுதிமூச்சுவரை திராவிட இயக்கத் தொண்டனாகவே இருந்துகொண்டு பட்டியலின மக்களின் விடுதலைக்காகச் செயலாற்றினார்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then