அரசாள ஆயத்தமாவோம்

இலஞ்சி அ.கண்ணன்

“தலித்துகள் இன்றைய நிலவரம் குறித்துப் பேச நேரும்போது தவிர்க்க இயலாதபடி கடந்த காலம் குறித்துப் பேசாமல் இருக்க முடியாது. தோண்டியெடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டியதிருக்கிறது மூடி மறைக்கப்பட்ட குற்றச் செயல்களை அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது.” (ராஜ் கௌதமன், ‘தலித் பண்பாடு’, பக். 05 – 06).

2012ஆம் ஆண்டு ‘நிர்பயா தீர்ப்பு’ சம்பந்தமாகப் பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் (இன்றைய X தளத்தில்) தளத்தில் “நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது, பெண்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானது” என்று குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டது குறித்துப் பதிவிட்டிருந்தார். ஆனால், ஏழு ஆண்டுகளுக்குப் பின்னரே நிர்பயாவுக்கும் நீதி கிடைத்தது. அதுவும் தாமதமான நீதிதான். ஆயினும் ஓராண்டுக்குள் அவ்வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு அதாவது, 2013 செப்டம்பர் 13 அன்று டெல்லி உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்ததும் குறிப்பிடத்தக்கது.

2016இல் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களால் நிகழ்த்தப்பட்டதுதான் நந்தினி படுகொலை. இதில் சம்பந்தப்பட்ட முக்கியக் குற்றவாளிகள் யார் என்பது தெரிந்தும் கூட வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்வதற்குச் சில மாதங்கள் தேவைப்பட்டன காவல்துறைக்கு. 29.12.2016 அன்று நந்தினி கடத்தப்படுகிறார். பின்னர் 14.01.2017 அன்று சடலமாக மீட்கப்படுகிறார். இதற்கிடையில் கடத்தப்பட்ட தனது மகளைப் பற்றி இரும்பிளிக்குறிச்சி காவல் நிலையத்தில் அவரது தாயார் புகார் செய்தார். காவல்துறையினரோ ‘கடத்தப்பட்டார்’ என்று புகார் கொடுக்கக் கூடாது, ‘காணவில்லை’ எனப் புகார் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி, அவ்வாறே எழுதி வாங்கி 03/2017 என்ற குற்ற எண்ணில் வழக்குப் பதிவு செய்தனர். ஆனாலும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. தலித்திய அமைப்புகள் ஒன்றுசேர்ந்து கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்த பிறகே காவல்துறையினர் குற்றவாளிகளைக் கைது செய்தனர். ஒரு தலித் பெண் பாதிக்கப்படும்போது குற்றவாளிகளைக் கைது செய்வதற்கே இவ்வளவு போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய சூழலில், அவர்களுக்கான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்ஙனம் உருவாகும்.

கடந்த 02.10.2023 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் பட்டப்பகலில் சந்தியா என்ற தலித் பெண் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஒட்டுமொத்த சமூகமும் கள்ள மௌனம் காப்பது மட்டுமல்லாது அரசும் அவ்வாறே இருப்பதுதான் தமிழ்நாட்டில் தலித்துகளின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறது. இந்தப் படுகொலைக்கு மாதர் சங்கமோ, நீதிமன்றமோ, அரசியல் கட்சிகளோ குரல் கொடுக்கவில்லை. கொலைக்கு முக்கியக் காரணம், ஒருதலை காதல். அதாவது, கொலை செய்யப்பட்ட பெண்ணை, அவளது விருப்பமின்றிப் பின்தொடர்ந்திருக்கிறான் கொலைகாரன். திருநெல்வேலி மாவட்டம், திருப்பணி கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலி மாரியப்பன் என்பவரின் மூன்றாவது மகள் சந்தியா. மூன்று பெண் குழந்தைகளில் ஒருவருக்கு மட்டுமே திருமணமான நிலையில், சந்தியாவும் அவரது மற்றொரு சகோதரியும் திருநெல்வேலி டவுன் பகுதியில் உள்ள அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் பணியாற்றிவந்துள்ளனர்.

அக்கடைக்கு அருகிலுள்ள கடையில் வேலை பார்த்தவன்தான், மூலைக்கரைப்பட்டி தோப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன். அருகருகே பணிபுரியக்கூடிய சூழலில் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஏற்படுவது இயல்பு. அதுபோலவே சந்தியாவுக்கும் கொலையாளியான ராஜேஷ் கண்ணனுக்கும் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. இந்த அறிமுகமானது நாளடைவில் சந்தியா மீதான தன் காதலை வெளிப்படுத்தக்கூடிய அளவிற்குச் சென்ற நிலையில், சந்தியா அதை நிராகரித்திருக்கிறார். அதேவேளையில் தான் பணிபுரியும் கடை உரிமையாளருக்கும் தனது சகோதரிக்கும் இத்தகவலைத் தெரிவிக்கிறார். இதையடுத்து, ராஜேஷ் கண்ணனை அவர் பணிபுரியும் கடை உரிமையாளர் கண்டித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்து சந்தியாவைக் கொலை செய்யத் திட்டமிட்டு, பட்டப்பகலில் சக ஊழியர்கள், சந்தியாவின் அக்கா ஆகியோர் கண்முன்னே சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்திருக்கிறான்.

திருநெல்வேலி மாநகரத்தின் மிக முக்கியப் பகுதியாகவும் மக்கள் நெருக்கடி மிகுந்துள்ள பகுதியாகவும் இருக்கக்கூடிய நெல்லையப்பர் கோயில் அருகே அரங்கேற்றப்பட்டிருக்கிறது இப்படுகொலை. சுவாதி, நிர்பயா படுகொலைகளுக்குப் போராடிய பொதுச்சமூகம் இன்று தங்களது ஐம்புலன்களையும் அடக்கிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. வர்ணாசிரம தர்மத்தைக் கட்டிக் காத்துக்கொண்டிருக்கிற இடைநிலைச் சாதியினர்தான் மௌனமாக இருக்கிறார்கள் என்றால், அரசும் அதே மனநிலையில் இருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது; சமூகநீதியைப் பேசுகிற திராவிட மாடல் ஆட்சியிலும் தலித் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத ஓர் அசாதாரண சூழல் நீடித்துக்கொண்டிருக்கிறது. முதல்வரும் இதுபற்றிப் பேசுவதாகத் தெரியவில்லை. இம்மாதிரியான நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறுவதற்கு முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கக்கூடிய காவல்துறையின் அலட்சியப் போக்கும், தலித்துகள் மீது அவர்களுக்கு இருக்கக்கூடிய ஒவ்வாமையுமே மிக முக்கியக் காரணம். தென் மாவட்டங்களில் தலைவிரித்தாடும் சாதிவெறியை ஆளுகிற அரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று கூறுவதா அல்லது அரசும் அதை ஆதரிக்கிறது எனக் கூறுவதா என்பதுதான் புலப்படவில்லை.

கடந்த சில மாதங்களில் திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டுமல்லாது தமிழ்நாட்டில் சாதிவெறியர்களால் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் ஏராளம். அதில் வெளியுலகிற்குத் தெரிந்த சில நிகழ்வுகள் பின்வருமாறு:

  1. கடந்த 09.08.2023 அன்று நாங்குநேரியில் சாதி வெறியூட்டப்பட்ட மாணவர்களால், சக மாணவர் சின்னத்துரை மீதும் அவரது தங்கை மீதும் அரங்கேற்றப்பட்ட சாதிய கொலை வெறி தாக்குதல்.
  2. கடந்த 23.09.2023 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தொகுதி, பின்னமங்கலம் கிராமத்தில், விநாயகர் சிலையுடன் புரட்சியாளர் அம்பேத்கரின் உருவப்படத்தை எடுத்துச் சென்றதற்காக, அப்பகுதியில் உள்ள சாதி இந்து சமூகத்திலுள்ள சில சமூக விரோதிகளால் எட்டு தலித் இளைஞர்கள் இரும்புக் கம்பி, கற்கள் போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிகழ்வு.
  3. அக்டோபர் 30ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், ஆட்சிமடம் அருகே தலித் இளைஞரை வழிமறித்து, அவரது சாதியைக் கேட்டு, அவர் தலித் என்று சொன்ன மறுகணமே கற்களால் கொடூரமாகத் தாக்கிய நிகழ்வு.
  4. திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர், மணிமூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்த மனோஜ் குமார், மாரியப்பன் என்கிற இரு இளைஞர்கள், அக்டோபர் 30ஆம் தேதி அன்று தங்களது பணி முடித்து ஆற்றுக்குக் குளிப்பதற்காகச் சென்ற இடத்தில், கஞ்சா போதையிலும் மது போதையிலும் இருந்த சாதி வெறியர்கள் அவர்களைத் தாக்கி, நிர்வாணப்படுத்தி, சிறுநீர் கழித்த சம்பவம். (தலித்தியச் செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் கொடுத்த நெருக்கடியால் இதில் ஈடுபட்ட தேவர் சாதியைச் சேர்ந்த சாதி வெறியர்கள் ஆறு பேரும் 09.11.23 அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.)
  5. தென்காசி மாவட்டம், நன்னாகரத்தைச் சேர்ந்த காவலர் தினேஷ் குமார், 01.11.2023 அன்று அப்பகுதியில் அவருக்குச் சொந்தமான வயலுக்குச் சென்றபோது மது போதையில் இருந்த தேவர் சாதியினர் ஆறு பேர், “நீ போலீஸ்ன்னா பெரிய இவனா, பள்ளப் பயல்களுக்கு அவ்வளவு திமிரா, தென்காசியிலே தேவமாரு வச்சதுதான் சட்டம்” என்று சாதியைச் சொல்லி ஆபாசமாகத் திட்டி, பீர் பாட்டிலால் தாக்கியிருக்கின்றனர். அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். (இதில் சாதிவெறியோடு தாக்கியவர்கள் மீது சாதாரண பிரிவுகளில் மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.)
  6. கடந்த 02.11.2023 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், சோக்கடி கிராம தலித் மக்கள் மீதும் அவர்களின் உடைமைகள் மீதும் கவுண்டர் சாதியைச் சேர்ந்தவர்கள் கூட்டாக நிகழ்த்திய சாதிவெறி தாக்குதல். (இதில் பாதிக்கப்பட்டவர்களையே கைது செய்தது காவல்துறை.)
  7. கடந்த 05.11.2023 அன்று புதுக்கோட்டை மாவட்டம், கொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஷ்ணு (16) என்கிற மாணவன், தன்னோடு பள்ளியில் பயிலும் மாணவி ஒருவரிடம் பேசியதற்காக, சாதி வெறி பிடித்த மாணவர்களால் தொடர் சாதி ரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதால் மனமுடைந்து தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வு.
  8. தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மருதபுரம், அருணாசலம் எனும் கிராமங்களில் நிலவும் சாதிய ஆதிக்கத்தை எதிர்த்துக் கேட்டதற்காகவும் சாதியவாதிகளின் அடக்குமுறைக்கு எதிராக அப்பகுதி மக்களை விழிப்புணர்வடையச் செய்ததற்காகவும் ரெட்டியார்பட்டி ஆதிதிராவிடர் விடுதியில் சமையலராகப் பணி செய்துவரும் அன்பழகன் மீது 08.11.23 அன்று அப்பகுதியில் உள்ள தேவர் சாதியினரால் கொலை வெறித் தாக்குதல் அரங்கேற்றப்பட்டு, தலையிலும் உடலிலும் வெட்டுக் காயங்களோடு தப்பி அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது.
  9. புதுக்கோட்டை மாவட்டம், ஆயப்பட்டி, அண்ணா நகரைச் சேர்ந்த பிரகாஷ் 13.11.23 அன்று தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது, மோலுடையான்பட்டி நான்கு ரோடருகே கீழ்தொண்டைமான் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த சமூக விரோதிகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றுவருகிறார்.
  10. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்குட்பட்ட மணக்கரை கிராமத்தில் வசிக்கும் விவசாயி மணி என்பவர், மறவர் சமூகத்தைச் சேர்ந்த சமூக விரோதிகளால் 13.11.23 அன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.
  11. 11.2023 அன்று இரவு 8:30 மணியளவில் மதுரை மாவட்டம், பெருங்குடியில் மதுபோதையில் சாதிவெறி பிடித்த சமூகவிரோதிகள் அங்குள்ள சங்கையா தெருவிற்குள் நுழைந்து, கலையரங்க மேடையில் அமர்ந்திருந்தவர்களிடம் “கண்ணன் எங்கடா” என்று கேட்டுள்ளனர், அதற்குத் தெரியாது எனப் பதிலளித்தவுடன் “ஏன்டா பறப்பயலுகளா, அவ்வளவு திமிரா” எனச் சாதிப் பெயரைச் சொல்லித் தரக்குறைவாகப் பேசியதோடல்லாமல், மறைத்து வைத்திருந்த கத்தி, வாள் போன்ற ஆயுதங்களால் அவ்விளைஞர்கள் நான்கு பேரைக் கொடூரமாகத் தாக்கினார். அவ்வழியே வந்த முதியவரையும் அவரது ஆறுவயது பேரனையும் வெட்டியுள்ளனர். இதில் காயம்பட்டவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இன்னும் வெளிச்சத்திற்கு வராத நிகழ்வுகள் ஏராளம். இதை, தலித் மக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்படுகிற சாதிய தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த முடியாத அரசின் கையாலாகாத்தனம் என்றுதான் கூற வேண்டும்.

2016ஆம் ஆண்டு, நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் சுவாதி என்கிற பெண் கொல்லப்பட்ட நிகழ்வுக்குக் கொந்தளித்தவர்கள், இன்று சந்தியா படுகொலை செய்யப்பட்டதற்கு மௌனமாக இருக்கிறார்கள் என்றால், அதற்கு ஒரே காரணம் சாதிதான். சுவாதி கொலையில் குற்றவாளியாக்கப்பட்ட ராம்குமாரைக் கைது செய்வதற்கு ஒட்டுமொத்த அரசும் காவல்துறையும் நீதித்துறையும் எம்மாதிரியான நடவடிக்கைகளை முன்னெடுத்தன என்பதற்கு, அன்றைக்கு 24 மணி நேரமும் தொலைக்காட்சிகளில் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட நிகழ்வுகளே சாட்சி. பின்னர், குற்றவாளியாகக் கருதி கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் வைத்துப் படுகொலையும் செய்யப்பட்டார். அந்த அளவுக்கு அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டது. கொலை செய்ததாகக் கருதப்பட்ட ராம்குமார் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதுதான் இதற்கும் காரணம். அந்த வகையில் ராம்குமாரின் அரசப் படுகொலையும் சுவாதியின் படுகொலையும் இன்றுவரையிலும் மர்மமாகவே இருக்கிறது.

illustration :   Jesus Sotes

சுவாதியின் கொலைக்காக நாளிதழில் வந்த செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. மேலும், 2012இல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த டெல்லி மாணவி நிர்பயாவின் நினைவாக ‘நிர்பீக்‘ என்ற துப்பாக்கியை மத்திய அரசு சில நிபந்தனைகளுடன் 2014இல் பெண்களுக்கு வழங்கியது. தமிழ்நாடு அரசும் தமிழக பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, அம்மாதிரியான துப்பாக்கியை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்புச் சங்கம் அறிக்கை விடுத்தது.

அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், “2013இல் ‘பெண்களுக்கு உரிய பாதுகாப்புச் சட்டம்‘ என 13 அம்ச சட்டத் திட்டங்கள் கொண்ட ஓர் அறிவிப்பை ஜெயலலிதா வெளியிட்டார். அது செயல்படுகிறதா எனத் தெரியவில்லை. சென்னை மாநகரம் கொலை நகரமாக மாறிவருகிறது. வீட்டில் இருக்கும் பெண்களும் அச்சப்படுகிறார்கள்” என்று அறிக்கை விடுத்தார். சுவாதி வீட்டிற்கும் நேரில் சென்று ஆறுதல் கூறினார். இதற்கிடையில் சுவாதி படுகொலையான நாளிலிருந்து தங்களது நித்திரையை இழந்த நீதிமான்கள் அதாவது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் அடங்கிய அமர்வு, ‘போலீசார் மத்தியில் ஒருங்கிணைந்த நடவடிக்கை இல்லை என்றால், நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளும்‘ என்றது.

இவை யாவும் கொலை நடந்து மூன்று நாட்களுக்குள் மேற்கொண்ட நடவடிக்கைகள். இது பாராட்டத்தக்க விஷயம்தான். இதுபோல் பாதிக்கப்படக்கூடிய அத்தனை பெண்களுக்கும் இம்மாதிரியான துரித நடவடிக்கையை இவர்கள் மேற்கொண்டார்களா என்பதையும் கேள்விக்குட்படுத்த வேண்டும். குறிப்பாக, தலித் பெண்கள் பாதிக்கப்படும்போது இவர்களின் நடவடிக்கை எத்தகையது என்பதைக் கவனிக்க வேண்டும். நந்தினி, சந்தியா படுகொலைகளைக் கவனித்தால், நீதிமன்றம் மட்டுமல்ல ஆளுகிற அரசும் கூட தலித்துகள் பாதிக்கப்படும்போது மட்டும் தங்களது ஐம்புலன்களையும் அடக்கிக்கொள்கிறது என்பது புலப்படும். ஆனால், தேர்தல் நெருங்குகின்றபோது மட்டும் இந்த அரசுகள் யாவும் வெட்கமே இல்லாமல் அவர்களை அண்டிப் பிழைக்க நினைக்கின்றன. இதற்காகவே புரட்சியாளர் அம்பேத்கர், “பொய்யான பசப்பு வார்த்தைகள் மூலமும், பொய்யான வாக்குறுதிகள் மூலமும் பொய்யான பிரச்சாரத்தின் மூலமும் நம் மக்களைச் சிக்க வைக்கும் மற்ற அரசியல் கட்சிகளின் இடைத்தரகர்கள் உள்ளனர். நம் மக்கள் அறியாமையில் உழல்கின்றனர். நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் காலத்தின் நெருக்கடியான தன்மையை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. தங்களின் அரசியல் இலட்சியங்களை அடைவதற்கு நமது ஸ்தாபனத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் உணரவில்லை. நம் கையில் போதிய துணை வளங்கள் இல்லை என்பது துயரத்திற்குரியதாகும். நம்மிடம் பணம் இல்லை; பத்திரிகைகள் இல்லை. மிக இரக்கமற்ற கொடுங்கோன்மைக்கும் அடக்குமுறைக்கும் தினந்தினம் நம் மக்கள் உட்படுத்தப்படுகிறார்கள்; இவை பத்திரிகைகளில் வெளிவருவதேயில்லை. சமூக, அரசியல் பிரச்சினைகள் பற்றிய நமது கருத்துகள் வெளிவராதபடி, திட்டமிட்ட சதி மூலம், பத்திரிகைகள் முழு முனைப்புடன் இருட்டடிப்புச் செய்கின்றன. நமது மக்களுக்கு உதவியளிப்பதற்கு, விளக்கிப் பிரச்சாரம் செய்து அவர்களை ஸ்தாபன ரீதியாகத் திரட்டுவதற்குத் தேவையான ஓர் அமைப்புத் தொடர்ந்து செயலாற்றுவதற்கான நிதி நம்மிடம் இல்லை” என்கிறார் (டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுதி – 02, பக்-163). இந்நிலை இன்றுவரையிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. பொருளாதார ரீதியாகத் தன்னை உயர்த்திக்கொண்ட தலித்துகள் கூட தாங்கள் கடந்துவந்த பாதைகளை மறந்துவிடுகிறார்கள். இதன் காரணமாக ஒட்டுமொத்த தலித் மக்களையும் ஓட்டு வங்கிகளாக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் அரசியல்வாதிகள். இந்திய அரசியலமைப்புச் சட்டம் தலித்துகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்வதற்காக வகுத்த சில அடிப்படை உரிமைகள் கூட முழுமையாக அவர்களின் நலன்களுக்காகப் பயன்படுத்தப்படவில்லை.

மனித உரிமைகள், குடியுரிமைகள் ஆகியவற்றை அனைத்து இந்தியர்களுக்கும் வழங்கி, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று அறிவிக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏற்று 73 ஆண்டுகள் ஆகியும்கூட தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள், தீண்டாமைக் கொடுமைகள் குறையவில்லை. கொடூரமான முறையில் அரங்கேற்றப்படும் தீண்டாமைக் கொடுமைகளைக் கூட மிகச் சாதாரணமான குற்றப்பிரிவுகளின் கீழ்தான் காவல்துறையினர் பதிவு செய்கிறார்கள். பொதுவாக தீண்டாமை குற்றங்கள், சாதிய வன்கொடுமைகள் நடக்கும்போது, குடியுரிமை பாதுகாப்புச் சட்டம் – 1995, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் – 1989 ஆகிய இரண்டு சட்டங்களின் கீழும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் அடிப்படை உரிமையை நிலைநாட்டுவதற்காகவும் நீதியைப் பெறுவதற்காகவும் மிகப்பெரும் போராட்டங்களை நடத்திய பிறகே வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வதைக் காவல்துறையினர் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு வழக்குப் பதிவு செய்த பின்னரும் கூட குற்றவாளிகளுக்கே ஆதரவாகச் செயல்படுகின்றனர். இன்றுவரையிலும் இதுதான் தலித் மக்களின் நிலை.

இச்சூழலில் தலித்துகள் மீது அரங்கேற்றப்படும் வன்கொடுமைகளையும் படுகொலைகளையும் கண்டித்துத் தங்களது எதிர்வினையையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்துவதற்குத் தலித் தலைவர்களே தயங்குகின்றனர். இத்தகைய செயல்கள் சாதியத்திற்கு எதிராகப் போராடி, சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது, 20.03.2018 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அ.கு.கோயல், யுயு லலித் தலைமையிலான குழு பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் சில மாற்றங்களை அறிவித்தது. காரணம், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு. இம்மாற்றத்தினால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்துவிடுவார்கள் என்பதால், தலித் தலைவர்களும் அமைப்புகளும் நாடு முழுவதும் ஓரணியில் திரண்டு போராட்டங்களை நடத்தினர். அவ்வாறு நடைபெற்ற போராட்டங்களில் குறிப்பாக, அன்றைக்கு பாஜக ஆண்ட மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம், இராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

மேற்கண்ட நிகழ்வுகளுக்கு எதிர்வினையாகவும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போக வைக்கும் தீர்ப்பைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தி, 24.04.2018 அன்று தலித்தியக் கூட்டமைப்பின் சார்பில் ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணி நடத்தப்பட்டது. இதில் வி.சி.க, பகுஜன் சமாஜ் கட்சி, புரட்சி பாரதம், இந்தியக் குடியரசுக் கட்சி, ஆதித்தமிழர் மக்கள் கட்சி, தமிழக முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் நீலம் பண்பாட்டு மையம் போன்ற அமைப்புகளும் ஒன்றுதிரண்டனர். பின்னர், மேற்கண்ட நீதிபதிகளின் சட்டத்திருத்தம் மாற்றி அமைக்கப்பட்டது. காரணம், தலித் அமைப்புகளிடமிருந்த ஒற்றுமையே. அதன் பின்னர் எத்தனையோ வன்கொடுமை நிகழ்வுகள் நடந்த வண்ணமாகவே இருக்கின்றன. ஆனால், அதற்கெல்லாம் இவர்கள் ஒன்றுபட்டு இதுவரைக்கும் எந்தவொரு போராட்டத்தையோ, ஆர்ப்பாட்டத்தையோ நடத்தவில்லை. மாறாக, தொண்ணூறுகளில் தலித்தியப் போராளிகளும் அமைப்புகளும் சாதி வெறிக்கு எதிராக ஓர் அணியில் திரண்டு ஒற்றுமையாகக் கரம் கோத்து, தங்களை நம்பியிருக்கும் மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருந்ததைப் போல, மீண்டும் தலித்தியத் தலைவர்கள் மட்டுமல்லாது உதியாகப் பிரிந்துகிடக்கும் தலித் மக்களும் ஒன்றிணைந்து கரம் கோக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இதை உணர்ந்து செயல்பட்டால் இனிவருகின்ற காலம் நமக்கானது. நமக்கான நீதியை நமக்கெதிராகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களிடமிருந்து எதிர்பார்த்துக் காத்திருப்பது நம்மை மீண்டும் கையறு நிலைக்கே கொண்டு செல்லும். எனவே, இனியும் நாம் கைப்பாவையாக இருந்து செயல்படாமல், அமைப்பாய்த் திரண்டு நமக்கான அரசை நாமே கட்டமைத்து, அரசாள ஆயத்தமாவோம்.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger