பல நூறு தலையங்கங்கள் கண்ட தமிழ்நாடு

வேங்கைவயல் நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்து ஒரு வருடம் நிறைவடைகிறது. விமர்சனங்களை எதிர்கொள்ள சிபிசிஐடி விசாரணை, உண்மை அறியும் பரிசோதனை, டிஎன்ஏ பரிசோதனை என அவ்வப்போது தென்படும் செய்திகளைத் தாண்டி, தமிழகத்தில் கோரமான முறையில் தொடர்ந்து அரங்கேறிவரும் சாதிவெறி தாக்குதல்களைத் தடுப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் அரசு எடுத்ததாகத் தெரியவில்லை. மேல்பாதி கோயில் நுழைவு சம்பந்தமாக நீதிமன்றம் விதித்த உத்தரவைக்கூட தமிழக அரசு உதாசினப்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். வேங்கைவயல் வன்கொடுமை நிகழ்ந்து ஒரு வருடம் ஆகிறது என்பது மேற்கோள் காட்டுவதற்கான ஒரு குறியீடே தவிர, அது மட்டுமே தமிழகத்தின் சாதியப் பிரச்சினையில்லை. சிறுவர்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறை, கொலை, தற்கொலைக்குத் தூண்டுதல் என கடந்த மூன்று மாதத்தில் மட்டும் குறிப்பிடத்தக்க 11 சாதியத் தாக்குதல்கள் அரங்கேறியிருக்கின்றன. அரசின் இந்த அலட்சியப் போக்கை விமர்சித்து வெகுஜன இதழில் ஏதேனும் செய்திகள் வந்தால் வேக வேகமாக அரசு சார்பு அறிவுஜீவிகளால் எழுத வைக்கப்படும் மறுப்பின் வேகத்தில் கால் பங்களவு கூட இத்தகைய சாதியக் கொடூரங்களைக் கண்டிப்பதிலோ, தக்க நடவடிக்கை எடுப்பதிலோ இவர்கள் அக்கறை செலுத்துவதில்லை. சமூகநீதி தத்துவங்களில் மேல்கட்டுமானத்தில் இருக்கும் கருத்துகளுக்கும், சமூக விளிம்பின் யதார்த்தத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது ஏன் நிகழ்கிறது, எங்கிருந்து இது வெளிப்படுகிறது, இதைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் என்ன என்பவை இங்கு யாருக்கும் புலப்படாத ஒன்றல்ல. தமிழக அரசியல் சூழலில் அதிகாரத்தில் இருக்கும் இடைநிலைச் சாதிகள் தங்களது சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள காவு கொடுக்கப்பட்ட சமூகங்களாகத் தலித்துகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றனர். இவற்றை எதிர்த்து எழும் தலித் குரல்களிலிருந்து சில குரல்களுக்கான பிரதிநிதித்துவத்தைக் கொடுப்பதன் மூலம் மட்டுமே இத்தகைய விமர்சனங்களை எதிர்கொண்டுவிட முடியும் என்று நம்புகிறார்கள் ஆட்சியாளர்கள்.

கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமே சுமார் நூற்றியைம்பது ஆண்டுகளுக்கும் மேலான நெடிய அரசியல் வரலாறு கொண்ட தலித்துகளின் போராட்ட வரலாற்றில் நாம் பெரும் பின்னடைவைச் சந்தித்துவருகிறோம். நவீன காலத்திற்குத் தகுந்தாற்போல உரையாடல்களை மாற்றி, கோரிக்கைகளையும் எதிர்காலத்தையும் வேறு விதமாகத் திட்டமிட வேண்டிய காலத்தில், தலித்துகள் இன்னமும் அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்த அடிப்படைகளைப் பெறுவதற்கே போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த அளவுகோலின்படி, தமிழ்ச் சமூகம் மேம்பட்ட சமூகம் என்று எவ்வாறு சொல்ல முடியும்? ஒருபுறம் அடையாள அங்கீகாரங்கள், மற்றொரு புறம் சமூக – அரசியல் – பொருளாதார அதிகாரங்களை வழங்குவதில் உள்ள பெரிய அளவிலான பாகுபாடுகளால்  உருவாகும் முரண்பாடுகளைத்தான் நாம் சமூகத்தளத்தில் சந்தித்துவருகிறோம். அரசியல் இலாபத்திற்காக இவற்றைக் கண்டும் காணாமல் விடுவது, இடைநிலைச் சாதியினரின் கோபத்திற்கு ஆளாகிவிடக் கூடாது என்கிற கவனம், இதனால் உருவாகும் விளைவுகளை எதிர்கொள்ளப் போகிறவர்கள் நாம் அல்ல என்கிற அலட்சியம் உள்ளிட்ட காரணங்களே இப்பிரச்சினைகளைச் சமூக யதார்த்தமாக ஆள்பவர்களாலும் ஆண்டவர்களாலும் கடந்து செல்ல முடிகிறது.

ஆள்பவர்கள் எதிலாவது தவறிழைத்துவிட மாட்டார்களா என்று காத்திருந்து அரசியல் செய்வது தேர்தல் அரசியலைப் பொருத்தமட்டும் அறம். ஆனால், அப்பிரச்சினைகளின் காரணகாரியம் சாதியாக இருக்கும் பட்சத்தில் எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அதிலிருந்து நழுவும் போக்கே தமிழக அரசியல் சூழலாகத்  தொடர்கிறது. அரசியல் செய்வதற்காகக் கூட சாதியப் பிரச்சினைகள் கருப்பொருளாக இருப்பதில்லை.

பாபாசாகேப் அம்பேத்கரை மையப்படுத்திய அரசியல் எழுச்சி உருவாவதற்கு முன்பிருந்தே இவை தொடர் விவாதமாகத் தலித் தரப்பினரால் முன்வைக்கப்பட்டுவருகிறது. அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பிறகு எண்ணிலடங்கா தலித் ஆய்வுகள், இதழ்கள், கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. அதில் பல நூறு தலையங்கங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. கடந்த 11 மாதங்களில் சாதியப் பிரச்சினைகளைக் கவனப்படுத்தி மட்டுமே நீலம் இதழ் தலையங்கங்களைத் தீட்டியுள்ளது. சாதியப் பிரச்சினைகளை மையப்படுத்தித் துவங்கிய ஆண்டு, அதே சாதியப் பிரச்சினைகளை மையப்படுத்தியே நிறைவு செய்கிறது. சமூக – அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டியிருக்கிற தலித் அரசியல் பயணத்தில் முட்டுக்கட்டையாக இருப்பது சாதி மட்டுமல்ல, அதைப் பயன்படுத்திக்கொள்ளும் சமகால அரசியலுக்கும் அதில் பெரும்பங்கு இருக்கிறது. வரலாற்றின் இடைவெளிகளில் இருக்கும் வெற்றிடங்களைக் கொண்டு சாதியத்தை நியாயப்படுத்தாமல், கோட்பாட்டுக் குறைபாடுகளால் உருவாகும் குரூர சாதியப்போக்கை அதன் தன்மையறிந்து சீர் செய்ய வேண்டும். நம்மைச் சோர்வடையச் செய்வதை ஆட்சியாளர்கள் ஓர் உத்தியாகப் பின்பற்றினாலும் தலித் சமூகத்தின் கடைகோடி மனிதனின் சுயமரியாதையும் மாண்பும் காக்கப்படும் வரை சோர்ந்து போகாத குரல்களும் இருந்துகொண்டே இருக்கும். ஏனெனில், இந்திய வரலாற்றில் தலித்துகள் இதுவரைப் பெற்றவை அனைத்தும் அவர்களது போராட்டத்தினால் மட்டுமே சாத்தியமானவை.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!