உலக வரலாற்றில் கடந்த நூறு வருடங்களாக நாம் கடந்துவந்த மாற்றங்கள் அளவிட முடியாதது. மரபார்ந்த முறைகளிலிருந்து மாறி உடனடியாகத் தகவமைத்துக்கொள்ள முடியாதபடி ஏராளமான மாற்றங்கள், அதிலிருந்து உருவான சிக்கல்கள் அநேகம். புதிய தொழில்கள், கண்டுபிடிப்புகள், உற்பத்தி சாதனங்கள் என உருமாறிக்கொண்டே இருக்கும் சமூக அமைப்பின் சிக்கல்களை நெறிப்படுத்துவதற்கான வழிமுறைகள், சட்டங்கள் உள்ளிட்டவற்றைச் சந்தித்துக் கொண்டே அதற்கான தீர்வுகளை நோக்கி நகர்கிற முதல் தலைமுறையும் நாம்தான். அவ்வப்போது நாம் சந்திக்கும் சிக்கல்களுக்கு விடை கண்டு நடைமுறைப்படுத்துவதற்குள் உலகம் அடுத்தகட்டத்திற்கு நகர்ந்துவிடுகிறது. அதன்படி ஏராளமான முடிவில்லா பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் காப்புரிமை.
ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் படைப்பும் காப்புரிமை சட்டத்திற்கு உட்பட்டவையாக மாறியிருக்கின்றன. அதில் இசை மற்றும் கலைப் படைப்புகளுக்கான காப்புரிமை என்பது இன்றுவரை தீரா சிக்கலாகவே இருக்கிறது, உலகம் முழுக்க நீதிமன்றங்கள் ஏரளமான வழக்குகளையும் சந்திக்கின்றன. இதில் சம்மந்தப்பட்டவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு, புகார், அவர்கள் கோரும் இழப்பீடு என அனைத்தும் நீதித்துறை சம்மந்தப்பட்டது. வெகுஜன உரையாடலில் புரிந்துகொள்ளக்கூடியதாக அவை இன்னும் உருப்பெறவில்லை. இச்சூழலில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேல் இசைஞானி இளையராஜா நீதிமன்றத்தில் காப்புரிமை சார்ந்து போராடிவருகிறார். அவர் தனது திரையிசை பயணத்தைத் தொடங்கிய 1976இலிருந்து இந்த 48 வருடங்களில் காப்புரிமை, ஒப்பந்தம், அதன் நடைமுறை என நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தனது படைப்புகளை முன்வைத்து இங்கே நடந்த வணிகத்தில் பயனடையாதவராக இளையராஜா இருந்திருக்கிறார், கிட்டத்தட்ட அநேக கலைஞர்களுக்கும் இதுவே நிலை என்பதை நம்மால் அறுதியிட்டுச் சொல்ல முடியும். இதை மிகத் தாமதமாகப் புரிந்துகொண்டே இளையாராஜா நீதிமன்றத்தை நாடினார்.
சமூகவலைதளமானது சுதந்திர ஊடகமாகச் செயல்பட்டுவந்தாலும், ஒரு கருத்தின் உண்மைத்தன்மை குறித்த எந்த அக்கறையுமின்றித் தீர்மானிக்கப்பட்ட கருத்துருவாக்கத்தை உருவாக்கும் போக்கும் அதனூடாக நடக்கிறது. இளையராஜா காப்புரிமை விவகாரத்திலும் அதுவே நடந்துவருகிறது. இத்தகையை சூழலில்தான் இதைப் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.
காப்புரிமை சட்டம் 1957 என்பதை 2012க்கு முன் – பின் என இரண்டாகப் பிரிக்காலாம். இச்சட்டத்தில் மூன்று விஷயங்கள் முக்கியமானவை. ஆக்கம், ஆசிரியர், அதன் உரிமையாளர். கீழ்க்கண்ட ஆக்கங்களுக்குக் காப்புரிமை உள்ளது எனச் சட்டம் சொல்கிறது.
- இலக்கியம், நாடகம், இசை
- புகைப்படம், ஓவியம்
- திரைப்படம்
- ஒலிப்பதிவு
- கணினி நிரல், தரவுத்தளம்
- கணினியால் உருவாக்கப்பட்ட இலக்கிய, நாடக, இசை ஆக்கம், புகைப்படம், ஓவியம்
இவற்றில் திரைப்படமும் ஒலிப்பதிவும் சற்று வேறுபட்டது. ஒலிப்பதிவு என்பது இசைக் கோவையை ஒலியாகப் பதிவு செய்வது. அதில் பெரும்பாலும் பாடல் வரிகள் சேர்ந்தே இருக்கிறது. திரைப்படப் பாடல்களே இசை என்று கருதப்படும் இந்திய நாட்டில் ஒலிப்பதிவு என்பது இசையையும் பாடல்களையும் உள்ளடக்கியது. இந்தப் புள்ளி முக்கியமானது. இப்படி ஒலிப்பதிவு செய்யப்படுவதே கேசட்டிலும் சிடியிலும் விற்கப்படுகிறது, வானொலியில் ஒலிபரப்பப்படுகிறது. தற்போது ஸ்பாட்டிஃபை போன்ற செயலிகளில் பதிவேற்றப்படுகிறது.
இலக்கியம், நாடகம், இசைக்கோவை, புகைப்படம், ஓவியம், கணினியியல் உருவாக்கப்படுபவை போன்றவற்றுக்கு அதை உருவாக்குபவர்தான் உரிமையாளர். திரைப்படம், ஒலிப்பதிவுகளைப் பொறுத்தவரை முதலீடு செய்பவரே உரிமையாளர். இந்த ஆக்கங்களுக்கான காப்புரிமையின் முதல் உரிமையாளரும் இவரே. இவர்கள் தன் ஆக்கங்கள் மீதான காப்புரிமையைப் பிறருக்கு விற்க முடியும். தயாரிப்பாளர் இந்த உரிமையைப் பெரும்பாலும் பிரமிட், சோனி, எக்கோ போன்ற இசை நிறுவனங்களுக்கு விற்று விடுகிறார். ஒலிப்பதிவைத் தவிர்த்துப் பிற பயன்பாடுகளுக்கு இசையமைப்பாளரும் பாடலாசிரியரும்தான் உரிமையாளர்கள். உதாரணமாக, மேடைக் கச்சேரிகளுக்கு இசையமைப்பாளர், பாடலாசிரியர் ஆகியோரிடம் அனுமதி கேட்டு அதற்கான உரிமைத்தொகையைக் கொடுத்த பின்புதான் பயன்படுத்த முடியும். ஆனால், நடைமுறையில் அதை யாரும் செய்வதில்லை. 2012 வரை இதுதான் நிலை.
திரைப்படங்களின் மற்ற விடயங்களைத் தவிர்த்துப் பாடல் என்கிற வடிவம்தான் வானொலி, தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட தளங்களில் பயன்படுத்தப்படுகிறது, பொது இடங்களிலும் ஒலி / ஒளிபரப்புச் செய்யப்படுகிறது. இதனால் தங்களுக்கு எந்தப் பலனும் இல்லை என இசையமைப்பாளர்களும் பாடலாசிரியர்களுக்கும் கருதியதால் அதற்காகத் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தனர். இவற்றைக் கவனத்தில்கொண்ட இந்திய நாடாளுமன்றம் 2012இல் காப்புரிமை சட்டத்தைத் திருத்தியது.
அதன்படி, திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் இசை மற்றும் பாடல் வடிவத்திற்குக் கிடைக்கும் ராயல்டியை தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் ஆகியவர்களோடு சமமாகப் பங்கிட்டுக்கொள்வதோடு, சினிமா அல்லாத பிற பயன்பாடுகளின் காப்புரிமையை வாரிசுகள் அல்லது காப்புரிமை சொசைட்டி தவிர வேறு யாருக்கும் கொடுக்கவோ, அந்த உரிமையை விட்டுக் கொடுக்கவோ முடியாது என்கிற நிபந்தனை சேர்க்கப்பட்டது. இது ஒரு குழப்பமான சட்டத்திருத்தம். சில ஆண்டுகளாக இத்திருத்தத்தை லேபிள் கம்பெனிகள் நடைமுறைப்படுத்தக் கோரி வழக்குகள் தொடுக்கப்பட்டன. மாறாக, இச்சட்டத் திருத்தம் எந்தப் புது உரிமையையும் உருவாக்கவில்லை. இசைக் கோவை மற்றும் பாடல் ஆக்கங்களின் உரிமை எப்போதும் போல் இசையமைப்பாளர், பாடலாசிரியர் ஆகியோரிடம் இருக்கிறது. ஒலிப்பதிவு என்பது தனி உரிமை; அது இன்னமும் தயாரிப்பாளர்களிடமே இருக்கிறது; புதிய திருத்தத்தால் அவை இசையமைப்பாளர்களுக்கு மாற்றப்படவில்லை என்பது தயாரிப்பாளர்கள் மற்றும் இசை நிறுவனங்களின் வாதமாக இருக்கிறது.
2013 – 2014இல் இளையராஜா வழக்கு தொடர்ந்தபோது சென்னை உயர்நீதிமன்றம் குழப்பமான தீர்ப்பை அளித்தது. ஒலிப்பதிவில் அவருக்கு உரிமை இல்லை. ஆனால், அவருடைய ஆக்கங்கள்மீது தார்மீக உரிமை இருக்கிறது. அதன் மூலம் அவர் தம் உரிமைகளை நிலைநாட்டலாம் என்றது. அந்தத் தீர்ப்புதான் தற்போது மேல்முறையீட்டில் இருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த ஒரு வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் 2012ஆம் ஆண்டு சட்டத்திருத்தத்தின்படி இசையமைப்பாளர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் புதிய உரிமைகளை வழங்கியிருக்கிறது எனக் குறிப்பிட்டு, அவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பில் நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையை அது கவனத்தில் எடுத்துக்கொண்டது. கடந்த வாரம் வேறொரு வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்றமும் இதே முடிவுக்கு வந்தது.
இளையராஜா மீதான மேல்முறையீட்டுத் தீர்ப்பு என்னவாக இருந்தாலும் இந்த வழக்குகள் நிச்சயம் உச்சநீதிமன்றம் செல்லும். ஏனெனில், 2012ஆம் ஆண்டு சட்டத்திருத்தத்தில் குழப்பம் இருப்பதால் அதன் சாதகப் பாதகங்கள் இருதரப்பினருக்கும் பொருந்தும். ‘விக்ரம்’, ‘கூலி’ ஆகிய படங்களின் மூலம் உருவான சிக்கல் முற்றிலும் மாறுபட்டது. அதில் பயன்படுத்தப்பட்டது ஏற்கெனவே ஒலிப்பதிவு செய்யப்பட்ட நேரடியான பாடல்கள் அல்ல. அது இளையராஜாவின் இசைக் கோவையிலிருந்து எடுத்து வேறோர் இசையமைப்பாளரால் மீளுருவாக்கம் செய்யப்பட்டது. அதற்கான உரிமை எப்போதும் இளையராஜாவையே சேரும்.
ஒரு கலை படைப்பு எங்கே, எப்போது, எந்தத் தளத்தில் பயன்படுத்தப்பட்டாலும் அதற்கான உரிமம் யாரைச் சேரும் உள்ளிட்ட பல விவகாரங்கள் நடைமுறையில் இன்னமும் சிக்கல்களாகவே இருக்கின்றன. ஒலிப்பதிவு செய்யப்பட்டு விற்பனைக்காகத் தயாரிப்பாளரிடம் கொடுக்கப்படும் பாடல் வடிவங்களுக்கும் அந்த இசையை உருவாக்கிய இசையமைப்பாளருக்கு இருக்கும் தார்மீக உரிமைக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.
இளையராஜா தொடுத்திருக்கும் வழக்கு இதையெல்லாம் கட்டுடைக்கும் என்பதே இதில் உள்ள ஆரோக்கியமான விஷயம். பெருகிவரும் நவீன சாதனங்களின் பயன்பாட்டிற்கேற்ப இதுகுறித்து இன்னும் தெளிவு பிறப்பதற்கு இவ்வழக்கு பயன்படும். ஏற்கெனவே விற்றுவிட்ட ஒன்றுக்கு இளையராஜா ராயல்டி கேட்பதைப் போன்றதான தோற்றத்தைப் பொறுப்பற்ற சமூக – சுயாதீன ஊடகங்களும் பரப்புரை செய்துவருகிறது.
நூற்றாண்டு தமிழ் சினிமா வரலாற்றில் திரையிசை பாடல்களுக்கான இலக்கணத்தை மாற்றியமைத்து நவீன திரையிசையின் பிதாமகனாக இளையராஜா திகழ்வதைப் போல, இந்தியக் காப்புரிமை சார்ந்த குழப்பங்களுக்கும் அவரது இந்த முயற்சியால் பெரிய தெளிவு கிடைக்கப் போகிறது என்பதே இதிலுள்ள ஆரோக்கியமான விடயம். இதையொட்டி வழங்கப்படவிருக்கும் தீர்ப்பு, எதிர்கால காப்புரிமை சார்ந்த வழக்குகளுக்கான முன்னுதாரணமாக இருக்கப்போவதும் உறுதி. இந்த வழக்கு இளையராஜா என்கிற தனிமனிதருக்கானது அல்ல, ஒவ்வொரு இந்திய இசைக் கலைஞருக்குமானது.