எல்லா அசிங்கங்களையும் புனிதமெனக் கருதும்
ஒரு கவிஞன் இருந்தான்
எல்லா அசிங்கங்களையும் புனிதமாக்கிவிடும் அந்த மந்திரச்செயல்தான்
அசலான கவிஞனுக்குரியதெனப் போகுமிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தான்
நல்லவேளையாக அவனுடைய ஆதரவாளர்களுக்கு
அந்த மொழியில் அவனைத் தவிர்த்து வேறு சில கவிஞர்கள் இருப்பது தெரியாது
அவனுடைய கைகளைத் தழுவிக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்
எல்லா மதவாதிகளும் இப்படித்தானே
தங்களது சமயப் பிரச்சாரத்தைத் தொடங்கினார்கள்
அவன் சொன்ன காதலிகளைச் சென்று பார்த்தேன்
இரப்பவர்களுக்குக் கொஞ்சம் தண்ணீர் தருவதற்குக் கூட
ஏதோ தவத்தைக் கலைத்துக்கொண்டு எழுந்துவர வேண்டியதிருப்பது போல
எரிச்சலடைபவராக இருந்தார்கள்
நான் நினைத்தேன்
எல்லாப் புனிதங்களையும் நெருங்கிப் பார்க்கும்போது
இப்படி ஊசிப்போய்தான் இருக்கும் போல
புனிதங்களுக்கும் அசிங்கங்களுக்கும் இடையில் ஊடாடுவது
இரண்டில் ஏதாவதொன்றாக இருப்பதைவிட
மோசமான விளையாட்டுத்தான்
அசிங்கத்தை அசிங்கமெனப் பகிரங்கப்படுத்தும் ஒருவனின் கூடாரத்தில்
எந்தப் புகாருமில்லாமல் அவன் மட்டும் தனியாக
சோப்புக்குமிழ்களை ஊதிக்கொண்டிருக்கிறான்.
pc : john D.klingel