https://www.propertywala.com/P7438414

பட்டா இங்கே, நிலம் எங்கே? – கெ.கௌதம்சுரேஷ்

(திருத்தணி இராஜாநகரப் பட்டியலின மக்களின் பேரவலம்)

ந்திய அரசமைப்புச் சட்டம் ARTICLE- 21 வாழ்வுரிமைப் பற்றிக் கூறுகிறது. அதே சட்டத்தின் ARTICLE – 19(1) E ஒரு குடிமகன் இந்தியாவின் எப்பகுதியிலும் குடியேறும் உரிமை குறித்துக் கூறுகிறது. ஆனால், பட்டியலின மக்களின் குடியிருப்பு குறித்து எந்த ஆண்ட, ஆளுகிற மத்திய – மாநில ஆட்சியாளர்களும் கவலைப்பட்டதாக வரலாறு இல்லை. உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை மனிதனின் அடிப்படைத் தேவையாகும். இந்திய அரசமைப்புச் சட்டமும் இதனை உறுதிப்படுத்தி உள்ளது. இதில் உணவு, உடை ஆகியவற்றை மட்டுமே தனிநபரால் பூர்த்தி செய்துகொள்ள இயலும். வாழ்விடத்தை ஒருவரிடமிருந்து பெறும் நிலையில்தான் இருப்பர். வாழ்விடத்தால் மட்டுமே ஒரு மனிதன் பாதுகாப்பு உணர்வுடனும் மனநிறைவுடனும் வாழ முடியும். ஒருவரின் வாழ்விடம்தான் அவனுடைய சமூக உறவுகளுக்கு அடித்தளமாக அமைகிறது; அவன் மாண்புடனும் வாழ வழிவகுக்கிறது. அந்த வாழ்விடமே கேள்விக்குறி எனில், கற்கால நிலையில்தான் மனித வாழ்வு இருக்கும். அரசமைப்புச் சட்டத்தால் உறுதிப்படுத்தப்பட்ட வாழ்விடத்தைச் சாதியச் சமூகம் அங்கீகரிக்கவில்லை என்பதற்கான சாட்சிதான் இராஜா நகர் தலித் மக்களின் பேரவலம்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த ஆர்கே பேட்டை இராஜா நகரம் கிராமத்தைச் சேர்ந்த தலித் மக்களுக்குக் கடந்த 16.08.1994 அன்று 61 பேருக்கும், 05.09.2002  அன்று 39 பேருக்கும் என சுமார் 100 பேருக்கு சர்வே எண்: 107/1, 109/8 கொண்ட இடத்தினை ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக இலவச வீட்டுமனைப் பட்டாவாக வழங்கப்பட்டது. ஆனால், இந்த நிலத்தை அரசு முறையாக அடையாளம் கண்டு அளந்து கொடுக்கவில்லை. இதனால், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இம்மக்கள் சம்பந்தப்பட்ட இடத்தை அளந்து கொடுக்க வேண்டிப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளனர்.

அரசால் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டாவை அளந்து கொடுப்பதில் முட்டுக்கட்டையாக அப்பகுதியிலுள்ள சாதிய இந்துக்கள் செயல்பட்டுவருகின்றனர். காரணம், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் தலித் மக்கள் குடியேறுவதை இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்பதே. இதனாலேயே என்றைக்கு இந்த இடத்தை அரசு தலித் மக்களுக்காக ஒதுக்கியதோ அன்றிலிருந்து அம்மக்கள் மீது சாதிய இந்துக்கள் நாளுக்கு நாள் வன்கொடுமைகளை அரங்கேற்றி வந்தனர். இவர்கள் வசிக்கும் பகுதியைத் தாண்டித்தான் தலித் மக்கள் தாங்கள் வாழும் பகுதிக்குச் செல்ல வேண்டிய சூழல் இருப்பதால் தொடர்ச்சியாகத் தாக்குதலுக்கு ஆளாக்கப் பட்டனர்.

மேலும், பெரும்பான்மையாக அதாவது 1,200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் சாதி இந்துக்கள் வாழ்ந்து வந்தனர். தலித் மக்களோ வெறும் 60 குடியிருப்புகளில் மட்டுமே வாழ்ந்துவந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும்பான்மையாக இருந்த சாதி இந்துக்கள், தலித் மக்களைத் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வளைக்க முயல்கின்றனர். ஆனால், அது அவர்களால் முடியவில்லை.

தலித் மக்கள் தங்களின் நீதிக்கான பயணத்தை ஆர்.கே. பேட்டை வட்டாட்சியர் தொடங்கி குடியரசுத் தலைவர் வரை சென்றனர். ஆனாலும் பலனில்லை. ஆகையால்,  இப்பயணம் இன்றுவரையும் தொடர் கதையாகத்தான் இருக்கிறது. எத்தனை மனுக்கள், ஆர்ப்பாட்டங்கள், தேர்தல் புறக்கணிப்பு, வழக்குகள் என இம்மக்கள் செய்யாத போராட்டங்களே இல்லை. இன்றுவரையிலும் இம்மக்களின் உரிமையை நிலைநாட்ட எந்தவொரு ஆண்ட, ஆளுகின்ற அரசுகளோ முன்வரவில்லை என்பது வெட்கக்கேடானது.

1994ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் இந்த வீட்டுமனைப் பட்டா தலித் மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், தான் சார்ந்த சமூக மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தலித் மக்கள் அங்கு குடியேறுவதைத் தடுக்கும் விதமாகவே அன்றைக்குச் சட்டமன்ற உறுப்பினராக இருந்த P.M.நரசிம்மனுடைய செயல்கள் இருந்தன.

ஆனால், எத்தனை தடை வந்தாலும் எமக்கான அநீதிகளை எதிர்த்துக் களமாடுவோம், எந்த விதத்திலும் நாங்கள் தடைகளைக் கண்டு பின்வாங்க மாட்டோம் என்கிற நெஞ்சுரத்தோடு பாபாசாகேப் அம்பேத்கரின் கூற்றுப்படி “உங்களின் இரக்கமோ, கருணையோ எங்களுக்கு வேண்டாம்; எங்களுடைய உரிமைகளைத்தான் நாங்கள் கேட்கிறோம்” என்னும் அடிப்படையில் நீதிக்கான தேடலில் தொடர்ச்சியாகப் பட்டியலின மக்கள் ஈடுபட்டதன் விளைவாக, அரசியல்வாதிகளையோ அதிகாரிகளையோ நம்பி நாம் வீண்போகக் கூடாது என்கிற காரணத்தால் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து நீதிக்காக அவர்கள் கடைசியாகப் புகுந்த இடம் மாநில மனிதவுரிமை ஆணையம். அங்கு தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் மனித உரிமை மீறல்களையும் முறையாக விளக்கி வழக்கினைப் பதிவுசெய்தனர். இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மனிதவுரிமை ஆணையம்,  02.03.2021 அன்று தனது தீர்ப்பை வழங்கியது. அதில் மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி துரை.ஜெயசந்திரன் பாதிக்கப்பட்ட இராஜா நகர் மக்களுக்கு 100 வீட்டு மனைப் பட்டாக்களை உடனடியாகச் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் தலைமையில் மூன்றுமாத காலத்திற்குள்ளாக அளந்து கொடுக்க வேண்டுமென்றும், அது மட்டுமன்றி இத்தனை ஆண்டுகள் காலம் தாழ்த்திய அரசு பாதிக்கப்பட்ட தலித் மக்கள் 100 பேருக்கும் 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு அளிக்கவும் ஆணை பிறப்பித்தது.

இருந்தபோதிலும் காலம் தாழ்த்தி கடந்த மே மாதம் ஆணையைச் செயல்படுத்தும் விதமாகத் திருத்தணி கோட்டாட்சியர் சத்யா தலைமையில் போலீஸ் பாதுகாப்போடு சம்பந்தப்பட்ட இலவச வீட்டுமனையை அளந்து கொடுக்கும் செயலில் அரசு இறங்கியது. அப்போதும் கூட அப்பகுதியிலுள்ள சாதி இந்துக்கள் பிரச்சினையில் ஈடுபட்டு, இந்த இடத்தை அளந்து கொடுக்கக் கூடாது என வன்முறை செய்தனர். இருப்பினும் காவல்துறை உதவியோடு சம்பந்தப்பட்ட இடத்தை அளந்து, அளவுகல் போடப்பட்டது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத சாதி இந்துக்கள் தொடர்ச்சியாகத் தலித் மக்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்த வண்ணம் இருந்தனர்.

கடந்த ஜூலை 30ஆம் தேதி இரவோடு இரவாக மின்சாரத்தைத் துண்டித்து, அரசு அளந்து கொடுத்த இடத்தில் உள்ள அளவு கற்களைப் பிடுங்கி எறிந்தனர். இச்சம்பவத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் ஈடுப்பட்டனர். இதனால், இப்பகுதியில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதனையறிந்து காவல்துறையினர், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் எனப் பலர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தபோது, ஆர்.கே. பேட்டையிலிருந்து பள்ளிப்பட்டுக்குச் செல்லும் பிரதான சாலைகளின் இருபுறமும் புளிய மரத்தையும் பனைமரத்தையும் வெட்டிச் சாய்த்து போக்குவரத்தைத் தடை செய்தனர் வன்முறையாளர்கள். அதுமட்டுமன்றி காவல்துறையினர் மீதும் வட்டாட்சியர் மீதும் வருவாய்த்துறை அலுவலர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இதில் பல காவல்துறையினரும் அதிகாரிகளும் காயமடைந்தனர். இதனால், மிகப்பெரிய வன்முறையே இராஜா நகரில் வெடித்தது.

கலவரத்தில் ஈடுபட்ட வன்முறையாளர்களைக் கைது செய்ய காவல்துறை முற்பட்டபோது, தற்போது ஆளுங்கட்சி எம்எல்ஏ வன்முறையாளர்கள் யாரையும் கைது செய்யவிடாமல் தன் சுயசாதிப் பற்றின் காரணமாக வன்முறையாளர்களை அழைத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  சமாதானப் பேச்சுவார்த்தையை நிகழ்த்தினார். இதனைக் கண்டித்து வன்முறையாளர்களின் தாக்குதலுக்கு உள்ளான வருவாய்த்துறை அதிகாரிகள் அனைவரும் ஒன்றுகூடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தில் கலவரம் செய்தவர்களைக் கைது செய்யாமல் அவர்களை அழைத்து ஏன் சமாதானம் செய்கிறீர்கள்? யாரைக் காப்பற்ற இந்த அரசு எனக் கூறி திருவள்ளூர் மாவட்ட ஒட்டுமொத்த வருவாய்த் துறை அலுவலர்களும் போராட்டத்தில் இறங்கினர். இவ்வளவு பிரச்சினைகள் நடந்த பின்பும் கூட, இம்மக்களுக்கான அநீதிகள் அரங்கேறிய வண்ணமே இருக்கின்றன. ஆனால், இந்தப் பிரச்சினை குறித்துத் தமிழ்நாட்டு ஊடகங்கள் பேசவில்லை என்பது வெட்கக்கேடானது.

சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட இம்மக்களின் உரிமைகள்  சாதிவெறியர்களால் பறிக்கப்படுகின்றன. பட்டியலின மக்களின் ஓட்டுக்கள் இனிக்கும்; ஆனால், உரிமைகளோ கசக்கும் என்னும் நிலையில் ஆட்சியாளர்கள் உள்ளனர். மனிதநேயமற்ற அரசும் அதன் அதிகாரிகளும் மக்களுக்கான நீதியை நிலை நாட்டவில்லை. பட்டியலின மக்கள் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் புறக்கணிக்கப்படும் இவ்வேளையில், உடைமை என்பது கேள்விக்குறிதான். அதுவும் நிலம் சார்ந்த உரிமையைப் பொறுத்தவரையில் பூர்வகுடி மக்கள் பன்னெடுங்காலமாக வஞ்சிக்கப்பட்டிருக்கின்றனர். நிலம் என்பது எங்களின் அடிப்படை உரிமை, அதனை உயிரைக் கொடுத்தேனும் மீட்போம் என்ற தீராத தாகத்துடன் இன்றுவரை இராஜாநகரத்துப் பூர்வகுடி பட்டியலின மக்கள் களத்தில் இருக்கின்றனர். தற்போது ஆளுகிற அரசாவது இம்மக்களின் வாழ்விற்கு விடியலைத் தருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!