மாமன்னன் நந்தன்

ஸ்டாலின் ராஜாங்கம்

‘தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் நந்தன் என்னும் அரசன் ஆண்டான். தன் எல்லைக்கு உட்பட்ட நாட்டில் நல்லதோர் ஆட்சியை நடத்திவந்த அவன் மீது பக்கத்து நாட்டு அரசர்கள் கொண்ட பகையினால் கொல்லப்பட்டான். அதன் பிறகு நெடுங்காலம் வரையிலும் அவன் ஆட்சி பற்றியும் அவன் கொல்லப்பட்டது பற்றியும் மக்களிடையே பேச்சிருந்தது. அவனைப் பற்றிய இத்தகவல் ஒரு நினைவாக மாறி தனித்தும், அவனைப் போன்ற அரசர்கள் மீது ஏற்றப்பட்டும் வழங்கப்படுகிறது.’

இது நந்தன் என்னும் மன்னன் பற்றிய தகவல். எந்தக் காலகட்டத்தில், எப்பகுதியில் ஆண்டார் என்பது குறிப்பாக இல்லையெனினும் நந்தனை மன்னனாகக் கூறும் வாய்மொழி வழக்காறு தமிழ்நாட்டின் கிழக்கு மாவட்டங்களில் பரவலாக இருந்துள்ளது.

இதே கதை சற்று மாறிய வடிவங்களில் தென்னிந்தியாவின் வேறு பகுதிகளிலும் நிலவியிருக்கின்றன. சில இடங்களில் காலப்போக்கில் மறைந்துள்ளன, சில இடங்களில் இன்றைக்கும் நினைவுகூரப்படுகின்றன. தமிழ்ப் பகுதிக்கு 2000 ஆண்டுகளுக்கும் மேலான ‘வரலாறு’ இருக்கிறது என்றாலும் இதுவரை எழுதப்பட்டிருப்பவை முறைப்படியானதல்ல. தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளையும் உள்ளடக்கிய வரிசைக்கிரமமான சான்றுகள் கிடைக்கவில்லை. ஆதாரங்களில் இடம்பெற்றிருப்பதாலேயே வரலாற்று மதிப்பு பெற்றுவிட்டவர்களைப் போல, ஆதாரங்களுக்குள் வர வாய்ப்பு இல்லாததால் வரலாற்றில் இடம்பெறாமல் போனவர்களும் உண்டு. அரசர்கள் வரலாற்றுக்கே இதுதான் நிலை என்றால், மக்களின் வாழ்க்கை முறையை அறிந்துகொள்வதற்கு எந்த வழியுமில்லை. தமிழ்நாட்டு வரலாற்றில் அந்தந்தக் காலச் சூழலுக்கேற்ப அரசர்கள் இருந்திருக்கின்றனர். சிலருக்கே ஓரளவிலான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. அவர்களிலும் அநேகமானோர் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்தையவர்கள். இருந்தார்களோ, இல்லையோ இலக்கியப் பிரதிகளில் குறிப்பிடப்பட்டிருப்பதாலேயே வரலாற்று மதிப்பு பெற்றவர்களும் உண்டு. அதிலும் செவ்வியல் பிரதிகளில் இடம்பெற்றவர்களுக்கே இந்த மதிப்பு கிடைத்திருக்கின்றன. வழக்காற்றுத் தன்மையும், தெய்வீகக் கூறுகளும் பெருகிய பிற்கால சிற்றிலக்கியங்களில் இடம்பெற்றவர்களுக்குப் போதிய இடமளிக்கப்படுவதில்லை. இந்நிலையில் வாய்மொழி வழக்காறுகளில் மட்டுமே நினைவுகூரப்படும் அரசர்களும், அவர்களுக்கான தருணங்களும் உண்டு. அவர்களுக்கு வரலாற்றுப் பொருத்தம் தேடப்படுவதில்லை. பலவேளைகளில் அரசர்கள், அவர்களின் வெற்றி – தோல்வி ஆகியவற்றை நேரடியாகச் சொல்வதாகவும் சிலவேளைகளில் வரலாற்றின் வெவ்வேறு அர்த்தங்களைப் பிரதிபலிக்கும் உருவகமாகவும் வழக்காறுகள் இருக்கின்றன. இனி நந்தன் என்னும் மன்னனைப் பற்றிய வாய்மொழி தகவல்களுக்குள் செல்வோம்.

காலனிய காலத்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரியாக இருந்த காலின் மெக்கன்சி (1754 – 1821), முதலில் தனிப்பட்ட ஆர்வத்தாலும், பின்னர் தன் பணியின் பொருட்டும் தென்னிந்தியாவின் வழக்காறுகள், கல்வெட்டுகள் போன்றவற்றைச் சேகரித்தார். மிஷனரிகளும் காலனிய கால அறிஞர்களும் முன்னெடுத்த இந்தியா / தென்னிந்தியா பற்றிய தொடக்ககால வரலாறு எழுதும் முயற்சிக்கு இந்தச் சேகரிப்புகள் முக்கியச் சான்றாவணங்களாகத் திகழ்ந்தன. இன்றளவிலும் கூட இவரின் சேகரிப்பு வரலாற்று ஆதாரங்களாகக் கொள்ளப்படுகின்றன. காலின் மெக்கன்சி இப்பணியில் உள்ளூர்ப் புலவர்களையும் தகவலாளிகளையும் மொழிபெயர்ப்பாளர்களையும் துணை கொண்டார்.

அத்தகைய உள்ளூர் அறிஞர்களுள் ஒருவர் வேதநாயக சாஸ்திரியார் (1774 – 1864). தஞ்சையைச் சேர்ந்த இவர், இரண்டாம் சரபோஜியின் அவையில் பிரதான புலவர். நிறைய பாடல்களைப் பாடியவர். மெக்கன்ஸிக்கான சேகரிப்புப் பணியில் தஞ்சை வட்டார மக்களிடையே நிலவிய கதைகளை வேதநாயக சாஸ்திரி சேகரித்தார். அவற்றில் பறையர் உள்ளிட்ட பல்வேறு சமூகக் குழுக்களின் நினைவுகளும் நம்பிக்கைகளும் அடங்கும். பறையர் வகுப்பார் தங்களுடைய முந்தைய நிலை பற்றிச் சொல்லிய செய்திகள் குறிப்பிடத்தக்கவை.

பறையர் வம்சாவளியைச் சேர்ந்த நந்தன் என்னும் சோழப் பகுதியை ஆண்ட மன்னன், திருமணம் செய்துகொள்வதற்காக வெள்ளாளர் சாதியினரிடம் சென்று பெண் கேட்டான். அதனை விரும்பாத வெள்ளாளர்கள் நந்தனை விட்டுவைத்தால் வற்புறுத்தல் தொடரலாம் எனக் கருதி, அவனையும் அவன் வகுப்பினரையும் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள். அதேவேளையில் அவன் மன்னன் என்பதால் நேரடியாக மோத விரும்பாமல் ஒரு தந்திரம் செய்தார்கள்.

முதலில் நந்தனின் விருப்பத்தை மறுக்காமல் ஏற்ற வெள்ளாளர்கள், இரு சாதியாரும் ஓரிடத்தில் ஒன்றாகக் கூடி திருமண ஒப்பந்தம் செய்யலாம் என்றும், அதற்காக நந்தன் தன் வகுப்பினர் யாவரையும் அழைத்து வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். நந்தனும் குறித்த நாளில் புறப்பட்டான். இதற்குள் முன்கூட்டியே திட்டமிட்ட தந்திரத்தின்படி கம்மாளர்களின் தொழிற்நுட்பத்தின் துணையோடு பொறிப்பந்தல் ஒன்றை ஏற்பாடு செய்து வைத்திருந்தார்கள். தன் குழுவினரோடு வந்த நந்தனைப் பொறிப்பந்தலின் கீழ் அமர வைத்தார்கள். எதிரே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் வெள்ளாளர்கள் அமர்ந்தார்கள். திட்டமிட்டபடி நந்தன் அமர்ந்திருந்த பந்தலைத் தாங்கியிருந்த தூண்களைக் கம்மாளர்கள் தட்டிவிட்டனர். பந்தல் அப்படியே கீழே விழுந்து நந்தனும் அவன் குழுவினரும் அகப்பட்டு மடிந்தனர். ஓரிருவர் தப்பி ஓட முயன்றபோது சுற்றி நின்ற வெள்ளாளர்கள் அவர்களையும் உள்ளே தள்ளிக் கொன்றனர். இதுவே பறையர் வகுப்பாரிடம் சேகரித்த வழக்காறாக ‘வலங்கை சரித்திரம்’ என்னும் நூலில் கூறியிருக்கிறார் வேதநாயக சாஸ்திரியார். (இடங்கை வலங்கையர் வரலாறு, எஸ்.சௌந்தர பாண்டியன் (ப.ஆ), தமிழ்நாடு கீழ்த்திசை சுவடிகள் நூலகம், சென்னை, 1995) சாஸ்திரியாரின் இந்நூல் முற்றுப்பெறாததால் பறையர் வகுப்பாரின் பிற வழக்காறுகளைத் தெரிந்துகொள்ள முடியவில்லை.

இதற்கு எந்தச் சான்றுகளையும் அம்மக்கள் தந்திருக்க முடியாது. நவீன வரலாற்றுத்துறை இதனைக் கதை, வழக்காறு என்கிற பெயர்களில் பார்க்கும். ஆனால், இந்த வாய்மொழி தகவல்களைப் பகிர்ந்துகொண்ட மக்களுக்கு அது வரலாறு. ஏனெனில், மக்களைப் பொறுத்தவரையில் ‘கதை’ என்பதற்கும் ‘வரலாறு’ என்பதற்கும் வித்தியாசமில்லை. ஆனால், வேதநாயக சாஸ்திரியார் கதைக்கும் வரலாறுக்கும் இடையே ஊடாடியிருக்கிறார். கதையின் சில பகுதிகளை வரலாறாகவே கருதி விவாதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓரிடத்தில் நந்தனைச் சோழ அரச வரிசையில் வந்தவனாகக் கருதும் அவர், மற்றோரிடத்தில் சோழநாட்டில் அதிக எண்ணிக்கையில் இருந்த பறையர்கள் ஒருகாலத்தில் எழுச்சியடைந்து நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்தபோது அரசாண்டவனே நந்தன் என்றும் கூறுகிறார். இதன்படி நந்தனை மன்னனாகக் கூறும் தகவல் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வலுவாக இருந்ததை அறிகிறோம்.

illustrations :  Ravi palette

II

இவ்விடத்தில் மற்றொரு வழக்காறையும் அறியலாம். இதுவும் தஞ்சை வட்டாரத்தைச் சேர்ந்ததே. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகிலுள்ள ஆண்டாள் கோயில் என்னும் ஊரில் மனுநீதிச் சோழன் நாடகம் ஏறத்தாழ 150 ஆண்டுகளாக நடத்தப்பட்டுவருகிறது. இடையில் நின்றுபோன நாடகம் 1970களில் மீட்கப்பட்டிருக்கிறது. சித்ரா பௌர்ணமியை அடுத்த ஐந்து நாட்கள் வரை இது ஆடப்படுகிறது. மனுநீதிச் சோழன் கதையைக் கூறும் நாடக மரபு இது மட்டுமே. பெரும்பாலும் கள்ளர், உடையார், பத்தர், இசை வேளாளர் பங்கேற்கும் இந்நாடகத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைப் பகுதி வருகிறது.

நாடகத்தின் நான்காம் நாள் ‘வெட்டியான் பாட்டு’ என்ற பகுதி இடம்பெறுகிறது. சோழர் மகன் வீதிவிடங்கனின் தேர்ச்சக்கரத்தில் விழுந்து இறந்த கன்றை எடுக்க வெட்டியான் வருவதாக நாடகம் அமைகிறது. இந்த வெட்டியான் பாத்திரம் தோட்டி, சாம்புவன், சாம்பான், பறையன் என்றெல்லாம் வழங்கப்படுகிறது. இந்தத் தகவல்களையெல்லாம் இந்த நாடகத்தை நேரில் கண்ட சுந்தர் காளி தம் கட்டுரை ஒன்றில் விரிவாக விவரிக்கிறார் (‘அரசன் முதல் அடிமை வரை: வெட்டியான் பாட்டை முன்வைத்துச் சில குறிப்புகள்’, வல்லினம் இதழ், ஜூன் – ஆகஸ்டு 2007).

இறந்த கன்றை எடுக்க வரும்போது வெட்டியான் தன் வரலாற்றைப் பாடுவதாக ஒரு பகுதி வருகிறது. நாடகத்தின் மையக் கதையிலிருந்து சற்று விலகி வெட்டியான் வரலாறுக்குச் சென்று திரும்புகிறது கதை. தன்னைச் சாதியால் கீழானவனாகக் கருதுவோருக்குத் தன்னுடைய வரலாற்றை எடுத்துக் கூறுவதன் மூலம் பதிலளிப்பதாக அப்பாடல்கள் அமைந்திருக்கின்றன. சாதி பாராட்டும் ஆண்டைக்குப் பதிலளிப்பதாக வரும் இப்பாடல்களில் சாதியமைப்பின் குளறுபடிகளும், தந்திரங்களும், பொய்களும் சாடப்படுகின்றன. தங்களுக்கு மதிப்பான ஒரு காலமிருந்தது, தற்காலத்தில்தான் இந்தக் கீழான நிலைக்குத் தள்ளப்பட்டோம் என்று அப்பாடல்கள் வழி சொல்கிறார் வெட்டியான். பிராமணர், பறையர் என்னும் இரு தரப்பினரை எதிர்மறைகளாக வைத்து கி.பி.15ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு பிறந்த சாதி பேதம் சாடும் கதையாடலின் சாயலை இந்த வெட்டியான் பாட்டிலும் காண்கிறோம். பாடலில் குறிப்பிடப்படும் ஆண்டை பிராமணர். அவரை நோக்கி வெட்டியான் தன் வரலாறைக் கூறுவது போலவே இப்பாடல் அமைந்துள்ளது.

“யென்னையினி பறயனென்று தள்ளி வைத்தாய், யென்பிறப்பை சபைதனிலே சொல்வே னாண்டே” என்று தன்னுடைய வரலாறைச் சொல்லத் தொடங்கும் வெட்டியான் அந்த வரிசையில் நந்தனை மன்னனாகக் குறிப்பிடுகிறார். தங்கள் குலத்தில் நந்தன் என்னும் மன்னன் இருந்தான் என்கிறார். அதாவது,

பட்டீஸ்வரத்திற்கு மேற்கே – அடுத்த
     பாபநாசத்திற்குக் கிழக்கே
திருவலஞ்சுழிக்குத் தெற்கே – பார்த்தால்
     தெரியுதே என்கோட்டை

தொண்டைமான் கோட்டைக்குள்ளே – என் ஆண்டைமாரே
     தோல்காசு போட்டு விளங்கி
நந்தன்சீமை ஆண்டானென்று – உங்களுடைய
     நாப்பாட்டன் சொன்னதில்லையோ?

என்று பாடுகிறார்.

நந்தன் என்னும் மன்னன் பறையர் குலத்தில் இருந்தான் என்ற நினைவு பறையர் வகுப்பினர் மத்தியில் மட்டுமல்லாது பிறர் நடத்துகிற – காணுகிற நாடகத்திலும் சொல்லப்படுகிறது. அந்த வரலாறு நாடகத்தில் (நாடகமாக) அங்கீகரிக்கப்படுகிறது. பொதுவாக, இத்தகைய கதையாடல்களில் பறையர்கள் கீழான நிலையில் இருப்போராகக் காட்டப்பட்டாலும் அதனை அவர்கள் ஒத்துக்கொள்வதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தங்கள் வரலாறைச் சொல்ல முற்படுகிறார்கள். அந்த வரலாற்றில் தாங்கள் ஒருகாலத்தில் மேலான நிலையில் இருந்தோம் என்பதைச் சொல்லிவிடுபவர்களாக இருக்கிறார்கள். தங்களின் இன்றைய கீழான நிலை இயல்பானவையல்ல என்ற அதிருப்தியை வெளிப்படுத்தியபடியே இருக்கிறார்கள். தந்திரத்தினாலேயே இந்த நிலையை அடைந்தோம் என்று புரியவைக்க முற்படுகிறார்கள். வெட்டியான் பாட்டு முழுவதும் அப்படித்தான் இருக்கிறது.

இன்னும் சில ஊர்களில் நாடகத்தைப் பார்க்கிற பார்வையாளர்கள் பகுதியில் தனித்து அமர வேண்டியவர்களாக இம்மக்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், நாடகக் கதைகளுக்குள் அவர்கள் உயர்ந்தவர்களாக இருந்தார்கள் என்கிற பகுதியை எல்லாச் சாதியினரும் சேர்ந்தே பார்க்கிறார்கள். இதைப் பற்றிக் கூறவரும் சுந்தர் காளி “இது ஒருவகையில் அமைப்பே அனுமதிக்கும் மீறலாகும் (Authorized transgression)” என்கிறார். அமைப்பு இந்த மீறலை ஏன் அனுமதிக்க வேண்டும்? தங்களை ஒதுக்கி வைத்திருப்பதற்கு எதிராக அவர்களுடைய அதிருப்தி இருக்கும். அவை தங்களுக்கு எதிராக வெடித்துவிடக் கூடாது என்று கருதும் ஆதிக்க வகுப்பினர், அவற்றைத் தங்களுக்குப் பாதகம் இல்லாத வகையில் வெளிப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை அளிப்பார்கள். அதில் ஒன்றுதான் கலை இலக்கிய வெளிப்பாட்டுத் தளம். அதன்படிதான் இந்த நாடகத்தில் அவர்களை அவர்களே உயர்த்திக் கூறிக்கொள்ளும் பகுதி அனுமதிக்கப்படுகிறது என்பதே ‘அமைப்பே அனுமதிக்கும் மீறல்’ என்பதற்கான விளக்கம். அதேவேளையில் இதை இன்னும் விரிவாக்கியும் பார்க்கலாம்.

அதாவது, இம்மக்கள் நிகழ்கால இழிவுகளை மட்டும் சொல்லித் தங்கள் சாடலை முன்வைக்கவில்லை. அதற்கு மாற்றாகக் கடந்த காலத்தை நினைவுகூர்கிறார்கள். அவற்றில் இந்த இழிவுகள் கூறப்படவில்லை. மதிப்பான நிலையையே கூறுகிறார்கள். இதன் மூலம் அவர்களின் வரலாற்றை மட்டுமல்ல வரலாற்று மாற்றத்தையும் சேர்த்தே தெரிந்துகொள்கிறோம். இந்த மரபான கதையாடல் சாதியமைப்பு பற்றிய ஒரு வரைவை முன்வைக்கிறது. இன்றைய சாதியமைப்பு இதேபோன்று இருந்ததல்ல. தந்திரங்களாலும் பொய்களாலும் புனையப்பட்டவை. ஒரு தலைகீழ் மாற்றமே இன்றைய சாதியமைப்பு என்று சொல்லப்பட்டிருக்கிறது. தாங்கள் நிகழ்காலத்தில் இழிவுபடுத்தப்படுவதை மட்டும் கூறி நியாயம் கோரவில்லை, நிவாரணத்தை ஒடுக்குவோரிடமிருந்து கேட்கவில்லை. மாறாக, வரலாற்று ரீதியாகத் தனக்கு நியாயமிருக்கிறது என்று கூறுகிறது. ‘நந்தன் சீமை ஆண்டான் என்று உங்களுடைய (நாப்) பாட்டன் சொன்னதில்லையோ’ என்று வெட்டியான் கேட்பதில் இருப்பது ஒரு வரலாற்றுக் கதையாடல்.

இதன்படி பார்த்தால், இந்த மீறலை மேலிருப்போர் அனுமதிக்கவில்லை. மாறாக, கடந்த கால தொடர்ச்சியிலிருந்து வருவது என்பதால் இந்தப் பாடல் அனுமதிக்கப்படுகிறது. மரபாக இருந்துவருவது என்பதால் பாடலிலிருக்கும் தீவிரம் கண்டுகொள்ளப்படாமல் விடப்படுகிறது. ஆனாலும், தற்காலத்தில் சாதிகளின் அதிகாரம் காரணமாக மரபிலிருக்கும் தீவிரம் கண்டுகொள்ளப்பட்டுக் கைவிடப்படுவதைப் பார்க்கிறோம். சுந்தர் காளி குறிப்பிடுவதுபோல வெட்டியான் பாட்டே கூட, அதன் அமைப்பைப் பார்க்கும்போது தனியானதொரு பனுவலாக வழங்கிவந்து பிற்பாடு நாடகத்துடன் இணைக்கப்பட்டது போல் தோன்றுகிறது. நவீன காலத்தில் அதுபோன்று வரலாற்றுக்கு உரிமை கோரும் பாடல்கள் கைவிடப்படுகின்றன. எது எப்படியோ, நந்தன் மன்னன் என்பது மக்கள் நினைவில் புதைந்து கிடக்கிற வரலாறு என்பதை உணர்கிறோம். ஏறத்தாழ 150 ஆண்டுகளாக நடத்தப்பட்டுவருகிறதென்றால் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியை இதன் காலகட்டமாகக் கூறலாம். இது வேதநாயக சாஸ்திரியார் வழக்காறுகளைத் தொகுத்த காலத்திற்கு நெருக்கமானதாக இருக்கிறது.

III

அடுத்ததாக என்னுடைய கள ஆய்வு அனுபவம் ஒன்றைப் பார்க்கலாம்.

2017ஆம் ஆண்டு ‘தலைகீழாக்கத்தை நேர் செய்தல்’ என்னும் தலைப்பில் என்னுடைய கட்டுரையொன்று இந்து தமிழ் திசை நாளேட்டில் வெளியாகியிருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எல்லாவற்றையும் நாங்கள்தான் செய்தோம் என்று கூறிக்கொள்ளும் கட்சிகளின் அளவுக்கு மிஞ்சிய உரிமைக்கோரலை எதிர்கொள்வது கட்டுரையின் நோக்கம். இவ்வாறு கூறிக்கொள்ளும் கட்சிகளின் அடித்தளமாகவும் ஆரம்பமாகவும் ஒடுக்கப்பட்ட மக்களே இருந்தனர் என்ற வரலாறைச் சுட்டிக்காட்டிய அக்கட்டுரை, அந்த வரலாறைத் தலைகீழாக்கிவிட்டுத் தாங்களே வழிகாட்டினோம் என்று கூறிவருகின்றனர் என்று வருந்தியிருந்தது. இந்தச் செய்தியைச் சொல்வதற்கான உருவகமாக நந்தனார் கதையைக் காட்டியிருந்தேன். அதாவது, நந்தன் என்ற மன்னனின் கதையைத் தலைகீழாக்கி நந்தனார் என்னும் பக்தரின் கதையாகப் பின்னிவிட்டதை ஒத்ததே இந்த அரசியல் தலைகீழாக்கமும் என்று அக்கட்டுரை கூறியிருந்தது. தஞ்சை வட்டாரக் கூத்து மரபில் நந்தனை மன்னனாகக் காட்டுவதை ஆய்வாளர் சுந்தர் காளி கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன்.

கட்டுரை வெளியான நாளின் நண்பகல் வேளை. வகுப்புக்குக் கிளம்பிக்கொண்டிருந்தபோது அலைபேசி அழைப்பொன்று வந்தது. ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினார். இந்து அலுவலகத்தில் தொடர்பு எண் வாங்கியதாகச் சொல்லிய அவர் “உங்கள் கட்டுரையில் நந்தனை மன்னனாகச் சொல்லியிருந்தீர்கள். அது உண்மைதான். நான் கும்பகோணம் பட்டீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவன். அங்கு நந்தன் பெயரில் ஓர் ஊர் இருக்கிறது. நந்தன் மன்னனாக இருந்தவன் என்ற தகவலை அங்கே கேட்டிருக்கிறேன்” என்றார். பெயரைக் கேட்டுக்கொண்டு வகுப்புக்குச் சென்றுவிட்டேன்.

இதழில் கட்டுரைகள் வரும்போது இதுபோன்ற அழைப்புகள் வருவது வழக்கம். எல்லோருடைய எண்களையும் பதிவு செய்துகொள்ள முடிவதில்லை. அவ்வாறு அன்று தொடர்புகொண்ட நண்பரின் எண்ணைப் பதிவு செய்துவைக்க மறந்திருந்தேன். கும்பகோணம் பக்கம் போகும்போது அவர் சொல்லிய இடம் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்ததோடு சரி.

கோடை விடுமுறையில் கும்பகோணம் சென்றிருந்தேன். தாராசுரம் கோயிலின் பௌத்தத் தொடர்பு பற்றிப் படித்திருந்ததால் அதைப் பார்க்க வேண்டும் என்பது என் திட்டமாக இருந்தது. மதியவேளை என்பதால் நடை சாத்தியிருந்தது. பக்கத்திலிருக்கும் கோயில்களுக்காவது போய் வரலாம் என்று திட்டமிட்டோம். காட்டுமன்னார்குடியிலிருந்து நண்பர் அருள் முத்துக்குமரன் வந்திருந்தார். விசாரித்தபோது பட்டீஸ்வரம் பக்கத்தில்தான் இருக்கிறது என்றார் ஒருவர். அப்போதுதான் முன்பு இந்து நாளிதழ் வாசகர் சொன்ன தகவல் நினைவில் வந்தது. பட்டீஸ்வரத்தில் நிறைய கோயில்கள் இருந்தன. முன்பு அங்கு புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டதைப் பற்றி ஆய்வாளர் பா.ஜம்புலிங்கம் எழுதியிருந்த கட்டுரையை அவருடைய வலைப்பக்கத்திற்குச் சென்று படித்துக்கொண்டேன்.

நண்பகல் நேரம் என்றாலும் சுற்றி முடித்திருந்தோம். நந்தன் கோட்டை என்று கேட்டுப் பார்த்தோம். யாருக்கும் தெரியவில்லை. அப்படியோர் இடமே இல்லை என்றும் சொன்னார்கள். பட்டீஸ்வரத்திலிருந்து திரும்பத் தொடங்கியிருந்தோம். கடைசியாகக் கேட்போம் என்று 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவரிடம் கேட்டோம். அவர் நந்தமேடுதான் இருக்கிறது என்றார். ஊரின் கடைசிக்குச் செல்ல வேண்டும் என்று கூறிவிட்டுப் போய்க்கொண்டேயிருந்தார். செல்லும் வழியில் நந்தமேடு என்ற பெயர் பலகையைப் பார்த்ததும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.

அந்த இடத்தை அடைந்தபோது ஆட்கள் நடமாட்டம் இல்லை. மேற்கிலிருந்து கிழக்கே செல்லும் ஓர் ஆறு, தண்ணீர் கிடையாது. ஆற்றின் வடகரையின் மேல் சற்றுத் தள்ளி வரிசையாக வீடுகள் அமைந்திருந்தன. சில ஆண்டுகளுக்குள் கட்டப்பட்ட வீடுகளாக அவை தெரிந்தன. வள்ளுவர் நகர் என்று பெயர்ப்பலகை வைத்திருந்தார்கள். யாரிடம் என்ன கேட்பது என்று தெரியாததால் அங்கிருந்த அரச மரத்தின் கீழ் அமர்ந்தோம். ஆங்காங்கே உடைந்து கிடந்த கற்சிலைகளையும் பானை ஓடுகளையும் எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தோம். கொஞ்ச நேரத்தில் அந்த வீடுகள் ஒன்றிலிருந்து வெளியே வந்த ஒரு பெரியவரிடம் மெல்லப் பேச்சு கொடுத்தார் அருள்.

“ஆமாம். இங்க நந்தன் என்ற ராஜா அந்தக் காலத்தில் வாழ்ந்திருக்கான். அவன் பறையன். சோழ ராஜாவுக்கு வரி கொடுத்துவந்தான். அதில் நிஜ காசுகளைப் போல தோல் காசுகளைக் கொடுத்துவந்திருக்கிறான். ஒருநாள் அந்தக் காசுகளை வசூலித்துப் போனபோது மழையில் நனைந்துவிட்டன. எனவே, சாபத்தால் மண் மாரி பொழிந்து நந்தன் அரண்மனை அழிந்தது. நந்தனும் அவன் உறவினர்களும் இறந்தார்கள். பிறகு அந்த இடமே மண் மேடிட்டுப் போனது. சில வருடங்களுக்கு முன்பு வரையிலும்கூட இந்த இடம் மேடாகத்தான் இருந்தது. இப்போதுதான் இந்த இடத்தை நிரவி மனைப்பட்டா தந்தார்கள். நாங்கள் குடியேறிய பிறகுதான் வள்ளுவர் நகர் என்று பெயர் வைத்துக்கொண்டோம்“ என்று சற்று விவரமாகவே சொன்னார் கலியபெருமாள் என்ற அந்தப் பெரியவர்.

“பறையர் சாதியினரைத் தவிர வேறு யாரும் இங்கு இல்லையா” என்று கேட்டோம். “இங்கிருக்கும் நாங்கள் எல்லாம் படையாட்சிங்க” என்றார். “ஏனில்லை” என்று கேட்டதற்குச் “சாபத்திற்கு அஞ்சி நந்தன் காலத்திலேயே வெளியேறிவிட்டார்கள். இப்போதும் இங்கு வர மாட்டார்கள்” என்றார். எந்தக் காலத்தில் நடந்தது என்று கேட்டதற்கு, அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. பழைய காலத்தில் என்று மட்டுமே அவரால் சொல்ல முடிந்தது.

நந்தன் என்றொரு மன்னன் இருந்தான் என்று பிறர் எழுதியதைப் படித்திருந்தாலும், எங்கோ ஒரு கிராமத்தில் வாழும் யாரோ ஒரு பெரியவரின் வாயால் அதனைக் கேட்டபோது ஆச்சரியப்படாமலிருக்க முடியவில்லை. நாம் எழுத்தில் படித்தும், திரும்ப எழுதியும் – பேசியும் வந்த தகவலை வரலாறாக நம்பிக்கொண்டிருக்கும் மக்களைச் சந்திப்பது புதிய அனுபவமாக இருந்தது. அதிலும் பறையர் வகுப்பினர் அல்லாத ஒருவர் அதனை வரலாறாகக் கருதிக் கூறியது அரசியல் ரீதியாகவும் முக்கியமானதாகத் தோன்றியது.

நந்தன் மன்னனாக இருந்தான் என்று இம்மூன்று சான்றுகளும் ஒருங்கே கூறுகின்றன. ஆனால் அவன் ஆண்ட, மாண்ட இடம் பற்றி ஏதும் சொல்லப்பட்டிருக்கிறதா? வேதநாயக சாஸ்திரியார் பட்டீஸ்வரத்திற்கும் கும்பகோணத்திற்கும் நடுவே நந்தன் அரண்மனையின் எச்சமாக ஒரு கட்டடம் இருப்பதாகவும், அதை நந்தன் மாளிகை என்று மக்கள் அழைப்பதாகவும் குறிப்பிடுகிறார். அடுத்ததாக, மனுநீதிச் சோழன் நாடகத்தின் வெட்டியான் பாட்டு, நந்தனை மன்னனாகக் கூறும்போது பட்டீஸ்வரத்திற்கு மேற்கே, பாபநாசத்திற்குக் கிழக்கே, திருவலஞ்சுழிக்குத் தெற்கே, நந்தன் கோட்டை இருந்ததாகவும் – தொண்டைமான் கோட்டை எனப்பட்ட கோட்டைக்குள் நந்தன் இருந்து அரசாண்டான் என்றும் – அவன் தோல் காசுகளை வெளியிட்டான் என்றும் கூறுகிறது. இதன்படி இரண்டு பிரதிகளும் ஒரே இடத்தைக் கூறுவதைப் பார்க்கிறோம். இப்பிரதிகள் உருவான காலத்தில் நந்தன் பற்றிய நினைவும் தொடர்புடைய அடையாளங்களும் இருந்திருக்கின்றன. அதற்கான சான்றைத் தற்கால கள ஆய்விலும் அறிய முடிந்தது. பிரதிகளின் காலத்திற்கும் கள ஆய்வுக்கும் இடைப்பட்ட காலம் 150 – 200 ஆண்டுகள் இருக்கலாம். இந்தக் கால இடைவெளிகளில் பிரதிகளில் சொல்லப்படும் அடையாளங்கள் மாறியிருக்கலாம். ஆனால், சிற்சில அடையாளங்களும் கதையும் பெயரும் இப்போதும் இருந்தன.

இதில் அவ்விடத்தைக் குறிக்கும் ‘நந்தமேடு’ என்ற பெயர் முக்கியமான ஒன்று. நாம் நத்தமேடு என்ற பெயரை அறிந்திருப்போம். தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் பரவலாக நத்தமேடு என்ற பெயர் இருக்கிறது. ஆனால், இங்கிருப்பது நந்தமேடு. வேறெங்கும் இல்லாமல் இங்கு மட்டும் நந்தமேடு இருக்கிறது. நந்தனே இருந்த இடம் என்று நம்பப்படுவதால் இப்பெயர் இருக்கிறது போலும். நந்தமேடு என்ற பெயர் நீண்ட காலமாகவே வழங்கப்பட்டுவருகிறது என்பதற்கும் சான்று இருக்கிறது. வெட்டியான் பாட்டு பற்றிக் குறிப்பிடும்போது “நந்தன் மேடு என்று இன்றும் அப்பகுதியில் ஓர் இடம் இருப்பதை வசனப்பகுதியில் வெட்டியான் சுட்டிக்காட்டினான்” என்று சுந்தர் காளி கூறுவது குறிப்பிடத்தக்கது. அந்த இடம்தான் இது. மேலே இரண்டு பகுதிகளிலும் குறிப்பிடப்பட்ட நந்தன் ஆண்ட – மாண்ட இடம் கள ஆய்வில் கண்ட பட்டீஸ்வரம் நந்தமேடு என்பது தெளிவாகிறது.

 

இதே செய்தியை எதிர்பாராத இடத்திலிருந்து கிடைக்கும் சான்றிலிருந்தும் பார்க்கலாம்.

தமிழ்நாட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராளிகளில் முதன்மையானவர் ரெட்டைமலை சீனிவாசன் (1859 – 1945). அவர் பறையர் வகுப்பினர் மேம்பாட்டுக்காக 1892ஆம் ஆண்டு சென்னையில் பறையர் மகாஜன சபையை ஆரம்பித்தார். தொடர்ந்து 1893ஆம் ஆண்டு பறையன் என்னும் பத்திரிகையையும் தொடங்கினார். அதற்கு முன்பாக, தமிழகத்தின் சில பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துவந்ததாகத் தான் எழுதிய ‘ஜீவிய சரித்திர சுருக்கம்’ நூலில் (ஸ்டாலின் ராஜாங்கம் (ப.ஆ) காலச்சுவடு, நாகர்கோவில், 2017) குறிப்பிடுகிறார். அந்தப் பயணம் பறையர் வகுப்பாரின் வரலாறைத் தேடிச்சென்று அறிந்துகொள்வதாக அமைந்தது. சிதம்பரம், கும்பகோணம், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய ஊர்களுக்குப் பயணம் செய்ததாகக் குறிப்பிடுகிறார். அந்த ஊர்களில் அவர் தேடிச்சென்ற இடங்கள் யாவும் இவ்வகுப்பார் பண்பாட்டு ரீதியாக உரிமைகள் பெற்றிருந்த மடம், கோயில் போன்றவையாக இருந்தன. ‘ஜீவிய சரித்திர சுருக்கம்’ நூலில் நந்தனை மன்னன் என்று குறிப்பிட்டு எழுதவில்லையே தவிர, அவ்வுண்மையை அறிந்திருந்தார் என்பதை அவர் கூறும் பிற தகவல்கள் உணர்த்துகின்றன. மேற்கண்ட சான்றுகளில் கூறப்பட்ட அடையாளங்களோடு இணைத்து நந்தனை அவர் குறிப்பிடுகிறார். அதாவது தான் “தெற்கு நோக்கி ரெயில் மார்க்கமாகவும் பெரும்பாலும் நடந்தும் கும்பகோணத்தில் பாழாக்கப்பட்ட நந்தன் கோட்டை மதில், தோல்காசு நந்தன், கலம்பகம் பாடிய நந்தன், கம்மாளர் கட்டியிருந்த காந்தகோட்டையானது சாம்பவ ராஜகுமாரியால் அளிக்கப்பட்டது…” போன்ற இடங்களைக் கண்டதாகக் குறிப்பிடுகிறார். இதில் கும்பகோணத்தில் பாழாக்கப்பட்ட நந்தன் கோட்டை மதில் என்பதும், தோல்காசு நந்தன் என்பதும் ஒருவரின் கதையாகவே சொல்லப்படுகிறது. இதன்படி மேலே மூன்று சான்றுகளிலும் கூறப்பட்ட பட்டீஸ்வரம் நந்த மேட்டையே ரெட்டமலை சீனிவாசனும் கூறுகிறார் என்பது உறுதிபடுகிறது.

பார்க்கப் போவதை எழுதியவர், பார்த்ததைப் பற்றி எழுதவில்லை. ஆனால், அவரால் அறியப்படும் அளவுக்கு நந்தன் கோட்டை என்ற தகவல் பிரபலமாக இருந்திருக்கிறது, பார்க்கும் நிலையிலும் இருந்திருக்கிறது என்பதை மட்டும் இப்போதைக்குப் புரிந்துகொள்ளலாம். தற்காலத்திலேயே அவ்விடம் மாற்றம் பெற்றிருக்கிறது. ரெட்டைமலை சீனிவாசன் அவர்களுடைய முன்னோர்களின் பூர்வீகம் தஞ்சைப் பகுதி என்ற முறையிலும் இத்தகவலை அவர் முன்பே அறிந்திருக்கவும் கூடும். மொத்தத்தில் கோட்டை கண்டதாகக் கூறுவது 19ஆம் நூற்றாண்டின் இறுதியில்.

(தொடரும்)

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger