தமிழ்நாட்டு ஒடுக்கப்பட்டோர் அரசியல் வரலாற்றில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கென்று தனியிடம் உண்டு. இம்மானுவேல் சேகரன் வாழ்ந்து கொல்லப்பட்ட ஊர் அது. அதனையொட்டி நடந்த வன்முறையே முதுகுளத்தூர் கலவரம் (1957) என்றறியப்படுகிறது. தென் தமிழகத்தில் சாதி வன்முறைகள் எழும்போதெல்லாம் இந்தப் பகுதியில் பதற்றம் தொற்றிக்கொள்ளும். முத்துராமலிங்கத்தேவர் பிறந்த பசும்பொன்னும் பரமக்குடிக்கு அருகிலேயே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2011ஆம் ஆண்டு இம்மானுவேல் சேகரன் அஞ்சலி நாளின்போது (செப்டம்பர் 11) காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டினால் ஆறு பேர் கொல்லப்பட்டதும் பரமக்குடியில் தான். இந்தப் பரமக்குடியை மையமாகக் கொண்டு 1980களின் இறுதி முதல் இயங்கிவந்த இயக்கம் தியாகி இம்மானுவேல் பேரவை (TIP). இதனுடைய பொதுச் செயலாளராயிருந்து இயக்கத்தை நடத்திவந்த பூ.சந்திரபோஸ் உடல்நலம் குன்றியிருந்த நிலையில், கடந்த ஜனவரி 21ஆம் தேதி பரமக்குடியில் காலமானார்.
தலித் அரசியல் அரங்கில் கூடுதலாக அறியப்பட்டிருக்க வேண்டிய சந்திரபோஸும் அவர் இயக்கமும் உரிய அளவில் அறியப்படவில்லை. உரிமை கோருவதற்காகவே அரசியல் ‘செயல்பாடுகளைக்’ கட்டமைத்துக்கொள்ளும் இக்கால அரசியலைப் பார்க்கும்போது, அத்தகைய உரிமை கோரல் பற்றி யோசித்தும் பார்த்திராதவர்கள் இருந்தார்கள் என்பது இன்றைக்குப் பலருக்கும் வியப்பைத் தரலாம். ஆனால், அத்தகையவராக வாழ்ந்து மறைந்திருக்கிறார் சந்திரபோஸ். அவரையும் தொட்டே இன்றைய இடத்திற்கு வந்திருக்கிறது சமகால தலித் அரசியல் அடையாளம் என்றால் அது மிகையல்ல.
1950களின் மத்தியில் இன்றைய சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள மொச்சியேந்தல் என்கிற கிராமத்தில் சந்திரபோஸ் பிறந்தார். ஊரில் பள்ளிக்கல்வியை முடித்து மதுரைக் கல்லூரியில் புதுமுக வகுப்புவரைப் படித்தவர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்காலிக மின் கணக்கீட்டாளராகப் பணிபுரிந்து பணி நிரந்தர உத்தரவு வழங்கப்பட்ட பின் அப்பணியைக் கைவிட்டார். பிறகு கிராம நிர்வாக அலுவலர் பணிக்குத் தேர்ச்சி பெற்று அரசுப் பணிக்கான உத்தரவு கிடைத்தும் அப்பணியைத் தவிர்த்துவிட்டார். அவர் பிறந்த கிராமங்களில் நடந்த சாதிய மோதலையொட்டி அங்கு நடந்த இடதுசாரி அமைப்பின் தொடர்பு மூலம் அரசியலுக்கு அறிமுகமானார்.
இந்திய மக்கள் முன்னணி என்னும் மார்க்சிய லெனினிய அமைப்பில் இணைந்து, அதன் வெகுஜன அமைப்பான தாழ்த்தப்பட்டோர் உரிமைச் சங்கத்தின் முழுநேர ஊழியராகப் பணியாற்றி, அதிலிருந்து வெளியேறிப் பரமக்குடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலவிய சாதி ஆதிக்கத்திற்கு எதிராக வட்டாரச் சங்கம் கட்டினார். பிறகுதான் தியாகி இம்மானுவேல் பேரவையை ஆரம்பித்தார்.
முதலில் தென் தமிழக அளவிலும் பிறகு வட்டார அளவிலும் செயல்பட்ட இயக்கம் இம்மானுவேல் பேரவை. வட்டார அளவிலான இயக்கமாக இருந்தபோதிலும் தமிழகம் தழுவிய பார்வையைக் கொண்டிருந்தது. உள்ளூர் அளவில் இந்த இயக்கம் நடத்திய போராட்டங்கள் தமிழ்நாட்டுச் சாதி ஒழிப்பு வரலாற்றில் குறிப்பிடத்தக்கவை.
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் 1980களுக்கு முக்கிய இடமுண்டு. திராவிட அரசியலானது முற்றிலும் திமுக, அதிமுக என்கிற இரண்டு அரசியல் கட்சிகளுக்கான அதிகார மோதலுக்குள் சுருங்கியது. அவ்விடத்தில் தீவிர இடதுசாரி அரசியல் நம்பிக்கையைத் தந்தது. பின்னர் அவற்றிலிருந்து தலித்துகள் வெளியேற வேண்டி வந்தது என்பது வேறு விஷயம்.
1980களுக்குப் பிறகு உருவான தலித் இயக்கங்களுக்கென்று தனித்த குணங்களுண்டு. வட தமிழகத்தை மையமாக வைத்துச் செயல்பட்ட அம்பேத்கரிய இயக்கங்களிலிருந்து இக்கால தலித் இயக்கங்கள் குறிப்பிடத்தக்க அளவில் வேறுபாடுகளைக் கொண்டிருந்தன. முதன்மையாக இக்கால அமைப்புகள் பெரும்பாலும் கிராமப் பின்புலம் கொண்டவையாக இருந்தன. இவர்கள் அம்பேத்கரிய அரசியலிலிருந்து உந்துதலைப் பெற்றதைவிடவும் இடதுசாரி அரசியலிலிருந்து தாக்கம் பெற்றிருந்தனர் எனலாம். மார்க்சியம், அதன் வழியிலான தேசிய இன அரசியல் பார்வைகளை இவை பெற்றிருந்தன. அதே வேளையில் உள்ளூர் அமைப்புகள் என்ற முறையில் கள அளவில் சாதிய எதார்த்தத்தோடும் இந்த அமைப்புகள் நெருங்கியிருந்தன. அம்பேத்கரியப் பார்வையின் தாக்கம் இல்லாவிட்டாலும் இடதுசாரிய வடிவத்திலிருந்து சாதியே பிரதான முரண்பாடு என்ற அரசியலை முன்னெடுத்துச் சென்றனர். மேலும் இந்த அமைப்புகள் ஒடுக்கப்பட்டோர் தலைமையையும் கொண்டிருந்தன.
1970களின் இறுதியில் விழுப்புரம் கலவரமும் உஞ்சனைப் படுகொலையும் தமிழகத்தை உலுக்கியிருந்தன. வெண்மணிப் படுகொலையை ஒட்டி உருவாகாத ‘சாதியே பிரதான முரண்பாடும்’ என்ற பார்வை, இப்படுகொலைகளுக்குப் பிறகு மெல்ல மெல்ல மேலெழுந்தது.
சிவகங்கையைத் தலைமையிடமாகக் கொண்ட மாவட்டத்திற்குப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்டியபோது உருவாகியிருந்த எதிர்ப்பு, விடுதலை இறையியல் கருத்தாக்கத்தின் வழியாகக் கிறித்தவ என்ஜிஓக்களின் வருகை போன்றவற்றையும் இக்காலகட்டத்தோடு இணைத்துப் பார்க்கலாம்.
தேவேந்திரர்கள் மத்தியில் செயற்பட்டிருந்தாலும் இம்மானுவேல் சேகரன் தனி இயக்கம் எதையும் தோற்றுவிக்கவில்லை. இந்நிலையில், தேவேந்திரர்கள் மத்தியில் நவீன அரசியல் இயக்கமாக விளங்கிய முதல் அமைப்பு என்று தியாகி இம்மானுவேல் பேரவையைக் கூறலாம். தேவர் பேரவை உருவாக்கப்பட்ட காலகட்டத்தில்தான் தியாகி இம்மானுவேல் பேரவை தொடங்கப்பட்டது என்பது இப்பேரவை உள்ளூர் முரணோடு இணைந்திருக்க வேண்டியிருந்ததைக் காட்டுகிறது. உழைக்கும் மக்கள் யாவரும் ஒரே நிலையினர் என்ற நிலைப்பாட்டை அரசியல் ரீதியாகக் கொண்டிருந்த இயக்கம், உள்ளூர் முரண்பாட்டின் அடையாளமான இம்மானுவேல் பெயரை அமைப்பிற்குச் சூட்டிக்கொண்டமையைக் கள எதார்த்தம் சார்ந்த எதிர்வினை அரசியல் எனலாம்.
ஒரு சாதிக் குழுவின் அடையாளமாக அறியப்பட்டிருந்த இம்மானுவேல் சேகரன் பெயரை, சமத்துவத்திற்காகப் போராடியவர் என்று நவீன அரசியல் அர்த்தம் தந்து பரவலாக்கியது இந்த அமைப்புதான். 1957ஆம் ஆண்டு கொல்லப்பட்ட இம்மானுவேல் சேகரன் ஏறக்குறைய 1980களின் இறுதியில்தான் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டார். மதுரையிலிருந்து செயற்படத் தொடங்கியிருந்த தலித் கிறித்தவ இயக்கங்கள், ஜான் பாண்டியனின் வருகை, இம்மானுவேல் பேரவை ஆகிய மூன்றுக்கும் இதில் இடமுண்டு. ஆரம்ப காலகட்டங்களில் எமனேஸ்வரம், ஏழூர் கிராமம் வட்டாரச் சங்கம் மூலமாகவும், அதன் தொடர்ச்சியாகத் தியாகி இம்மானுவேல் பேரவையின் மூலமாகவும் மக்களைத் திரட்டி கறுப்பு, உடை அணிந்து சாதி ஒழிப்புக் கருத்தாக்க முழக்கங்களுடன் சென்று வீரவணக்கம் செலுத்தியது. இதற்கு சந்திரபோஸின் அரசியல் பார்வையே காரணம். சொந்தச் சமூகம் என்றாலும் இம்மானுவேல் சேகரனின் போராட்ட வரையறையைக் கணக்கில் கொண்டு அவரைத் தியாகி என்றே வரையறுத்தமை அவருக்குள் செயற்பட்ட இடதுசாரி கருத்தியல் தாக்கத்தையே காட்டியது. ஓர் அஞ்சலி நிகழ்ச்சியாகத் தொடங்கப்பட்ட இம்மானுவேல் நிகழ்வு, மெல்ல மெல்ல குருபூஜையாக மாற்றப்பட்டபோது அதை வீரவணக்க அஞ்சலியாகவே தக்க வைத்தார் சந்திரபோஸ். எனினும் அது குருபூஜையாக மாறியது என்பது வேறு விசயம்.
இம்மானுவேல் பேரவையின் தலைமை இடமாக முதலில் விருதுநகர் கொள்ளப்பட்டது. 1992ஆம் ஆண்டு இளையான்குடி அருகில் உள்ள நாகநாதபுரத்தில் பெரும் கலவரம் நடந்தது. அதைத் தொடர்ந்து இழிதொழில் மறுப்பு நடந்தது. இவற்றில் தீரத்துடன் போராடி வழக்குகளையும் சந்தித்தார் சந்திரபோஸ். பிறகு உஞ்சனைப் படுகொலையில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட 85 பேரை நீதிமன்றம் விடுதலை செய்ததைக் கண்டித்து தேவக்கோட்டையில் பெரிய பேரணியை நடத்தினார். தியாகி இம்மானுவேல் பேரவை விருதுநகரில் மூன்று நாட்கள் அளவில் 40,000 பேரைக் கூட்டி நடத்திய மாநாட்டின் (1993) மூலம் அரசியல் அரங்கில் பெரிய கவனத்தைப் பெற்றது. ஆனால், அதனை அவர் ‘ஆப்பர்சுனிட்டி’யாக்கிக் கொண்டாரில்லை.
பிற சாதி ஒழிப்பு இயக்கங்களுடன் சேர்ந்து சாதி வெறி எதிர்ப்புக் கூட்டமைப்பு, ஆதித்தமிழர் விடுதலை முன்னணி, தமிழக தாழ்த்தப்பட்டோர் விடுதலை முன்னணி, சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி, சாதி ஆதிக்க எதிர்ப்பு முன்னணி போன்ற கூட்டமைப்புகளில் ஈடுபட்டு தமிழகமெங்கும் பிரச்சாரத்தில் பங்கு கொண்டார். தியாகி இம்மானுவேல் பேரவையின் பணியென்பது பெரும்பாலும் சந்திரபோஸின் எண்ணமாகவும் செயலாகவும்தான் இருந்தது. பொதுவுடமை இயக்கத்தில் தான் கற்றுக்கொண்ட அரசியல் கோட்பாடுகளையே தியாகி இம்மானுவேல் பேரவையின் கோட்பாடுகளாக அவர் வைத்திருந்தார். அம்பேத்கரியம், பெரியாரியம், தமிழ்த் தேசியம் போன்ற கருத்தாக்கங்களை உள்ளடக்கி அவர் செயல்பட்டு வந்தார். அடிப்படையில் அவர் பிரச்சாரகர். மக்களை ஒன்றுதிரட்டுவது மூலம் மாற்றம் என்பதை இடதுசாரி தொடர்பிலிருந்து பெற்றிருந்த அவர் அதனாலேயே மிகச் சிறந்த பேச்சாளராக விளங்கினார். பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்து அமைப்புகளைக் கட்டி எழுப்பியது இவ்வாறுதான். வன்முறைக்குச் செல்லாமல் முரண்பட்டுக்கொண்டிருக்கக் கூடிய மக்கள் குழுக்களை அணிதிரட்டக் கூடிய அரசியல் மேல் நம்பிக்கை கொண்டிருந்தார்.
தேர்தல் புறக்கணிப்பு, உட்சாதிகளைக் கடத்தல், தமிழ்த் தேசிய அரசியல் ஏற்பு போன்ற வழிமுறைகளை அமைப்பு கருத்தளவில் வலியுறுத்திவந்தது.
தேர்தல் புறக்கணிப்பைப் பேரவையின் முக்கிய நிலைப்பாடாகத் தக்க வைத்தார். அதேவேளையில் இத்தகு நிலைப்பாடுகள் உள்ளூர் அமைப்புகளின் பலமாகவும் பலவீனமாகவும் இருக்கின்றன. இன்றைய அரசியல் என்பது தேர்தலாக மட்டும் மாறிவிட்டது என்பது கசப்பான உண்மை. இந்த எதார்த்தத்தைப் போராடிக்கொண்டே எதிர்கொள்வது பற்றி இன்றைய அமைப்புகள் எவற்றிற்கும் தெளிவில்லை. கரைந்து போய்விடுகிறார்கள் அல்லது நிலவும் சட்டரீதியான நிர்வாக அமைப்பிற்கு வெளியே நின்றுவிடுகிறார்கள்.
இம்மானுவேல் பேரவை ஆரம்பத்திலிருந்தே தேர்தல் புறக்கணிப்பைப் பேசிவந்தாலும் அந்த நிலைப்பாடு மக்கள் இயக்கமாக – கருத்தியலாக மாறிவிட்டிருக்கவில்லை. அந்த அமைப்பு தேர்தலில் போட்டியிடவும் இல்லை, வாக்களிக்கும் மக்களுக்கு மாற்று ஒன்றைக் காட்டவும் இல்லை. இதன் விளைவாகப் பல பிரச்சினைகளில் சமரசமற்றுப் போராடினாலும் அதன் உச்சம் தேர்தலாக ஆக்கப்பட்டுவிட்ட நிலையில், போராட்டத்தின் பயனைத் தேர்தல் அமைப்புகளே எடுத்துக்கொண்டன. உதாரணமாக, கொடியங்குளம் கலவரத்தில் (1993) பூ.சந்திரபோஸ் களப்பணிகளைச் செய்துங்கூட தேர்தல் அமைப்பாக வந்த டாக்டர் கிருஷ்ணசாமியே அவற்றை அறுவடை செய்தார்.
தொடக்கத்திலிருந்தே தேர்தல் புறக்கணிப்பைக் கொள்கையாக பூ.சந்திரபோஸ் ஏற்றுக்கொண்டிருந்தார் என்றாலும், அமைப்பினர் ஏதோவொரு வகையில் தேர்தலில் பங்காற்ற வேண்டும் என்கிற எண்ணத்தோடு தியாகி இம்மானுவேல் பேரவையின் கீழ் ஐந்திணை மக்கள் கட்சி என்ற அமைப்பை அவர் உயிரோடு இருந்தபோதே உருவாக்கிக்கொண்டனர். கள யோசனை என்பதைவிடவும், உருவாகிவந்த கொள்கை என்ற முறையில் தேர்தல் மறுப்பு அவரின் விருப்பமாகவே இருந்திருக்கிறது என்று இதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அரசியல் ரீதியான பார்வை இருந்த அளவுக்குச் சமூகவியல், பண்பாடு போன்றவை குறித்த அழுத்தமான பார்வைகள் அந்த அமைப்புக்கு இருந்திருக்கவில்லை. தனக்குச் சிறுவயதிலிருந்தே கலை இலக்கியங்களில் பெரிய அளவில் நாட்டம் இருந்ததில்லை என்பதை சந்திரபோஸே ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார். இடதுசாரி கருத்தியலை ஏற்றுக்கொண்டவராக இருந்தபோதும், உள்ளூர் சாதி எதார்த்தத்தை எதிர்த்தவர் என்றபோதிலும், கருத்தியல் அளவில் பெரியாருடைய நேரடிப் பயன்பாட்டுவாதம் என்ற அணுகுமுறையே இவரிடம் செல்வாக்கு செலுத்தியிருக்கிறது. தொடர்ந்து சமரசமின்றிச் செயல்பட்டும் எதிர்பார்த்த அளவுக்குத் தாங்கள் செல்ல முடியவில்லை என்று சுயவிமர்சனமாக அவர் கூறியிருப்பதை நாம் இதோடு இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
சந்திரபோஸின் மூத்த மகன் அனீசு ராஜா தமிழ்நாடு விடுதலைப் படையில் அங்கம் வகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நான்காண்டுகள் சிறையிலிருந்தார், அவரின் மனைவி நீண்ட காலம் உடல் நலமில்லாமல் இருந்து காலமானார், அவருக்கும் உடல்நலம் இல்லாமலானது. இதன் தொடர்பில் கடைசி ஆறேழு ஆண்டுகளில் அவரின் செயல்பாடுகள் மெல்ல மெல்ல குறைந்தன. சந்திரபோஸ் அவர்களுடைய இயக்கத்தின் முக்கிய நடைமுறையாக ஆரம்பத்திலிருந்தே உட்சாதியைக் கடத்தல் என்பது வலியுறுத்தப்பட்டு வந்தது. அவர் குடும்பத்திலேயே அத்தகைய திருமண உறவுகளை அவர் உருவாக்கினார். உட்சாதி மறுப்பு என்பது நவீன அரசியல் களத்திலிருந்து அவர் உருவாக்கிக்கொண்ட நிலைப்பாடு.
கள எதார்த்தத்தில் அவற்றை முழுமையாக்கச் சாத்தியமில்லாத நிலையில் தன்னுடைய எல்லைக்கும் கவனத்துக்கும் வந்த விஷயங்களில் அவர் நேர்மையோடு நடந்துகொண்டார். தன் குடும்ப உறவுகளில் தான் விரும்பிய கருத்தியலாக, இயல்பான நடைமுறையாக மாற்றிச் சென்றிருக்கிறார்.
லட்சியவாத அரசியலின் காலத்திலிருந்து உருவாகியர். அவருடைய இயக்கம் போராட்ட இயக்கம். அத்தகைய அரசியலின் கடைசிக் கண்ணி சந்திரபோஸ்.