கொல்லிமலை சாமி – இமையம்

ஓவியங்கள்: ஸ்ரீதர்

 

“நீங்க பேசிக்கிட்டிருங்க, கோயிலுக்குப் போயிட்டு வந்திடுறன்” என்று சொல்லி விட்டு பழனிவேல் எட்டுக் கை அம்மன் கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார். எதிரில் உட்கார்ந்திருந்த சாமியாரைப் பார்த்தேன். ஐம்பது வயதுக்குள்தான் இருக்கும். மொட்டை போட்டு பத்திருபது நாட்கள் இருக்கலாம். நல்ல நிறமாக இருந்தாள். முகமும் மார்பகங்களும் செழுமை யாகவே இருந்தன. கழுத்தில் நான்கு உருத்திராட்ச மாலைகளைப் போட்டுக் கொண்டிருந்தாள். திருநீரைக் குழைத்து நெற்றியில் பட்டையாகப் பூசியிருந்தாள்.

மஞ்சள் நிறத்தில் புடவையும் ஜாக்கெட்டும் அணிந்து, ஆலமரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தாள். மரத்தை ஒட்டி ஒரு சாமி படமும், திருநீர் தட்டும் இருந்தன. மொட்டை போடாமல், தோடு, மூக்குத்தி, வளையல், செயின், விலையுயர்ந்த புடவை ஜாக்கெட்டு எனப் போட்டுக்கொண்டிருந்தால் சினிமா நடிகை மாதிரி இருப்பாள் என்று தோன்றியது. வந்த விஷயத்தை மறந்துவிட்டு என்னுடைய மனம் சாமியாரின் முகத்தையும், மார்பகங்களையும் பார்ப்பதில்தான் குறியாக இருந்தது.

“சாமி எங்கிருந்து வருது?”

“நாமக்கல்.”

“சாமிக்குச் சொந்த ஊரா?”

“இல்ல. பெரம்பலூர் பக்கம் அன்னமங்களம்.”

“அன்னமங்களமேவா?”

“ஆமாம்.”

“சாமிக்கு அன்னமங்களத்தில் வீடு எங்க?”

ஜோசியக்காரர்கள் ஜோசியம் பார்க்க வருகிறவர்களிடமே விஷயத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு ஜோசியம் சொல்வதுபோல, இவளும் செய்வாளோ என எண்ணிக்கொண்டு, “நடுத்தெருல” என்று நான் சொல்லி வாயை மூடுவதற்குள்ளாக, “பிள்ளையார் கோயில் பக்கமா?” என்று அவள் கேட்டது ஆச்சரியமாக இருந்தது. “அன்னமங்களம் ஒங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டேன். சாமியார் பதில் சொல்லாமல் என்னையே பார்த்துக்கொண்டிருப்பது கொஞ்சம் கூச்சமாக இருந்தது. சங்கரின் பேச்சையும் பழனிவேலுவின் பேச்சையும் கேட்டு, ஒரு பெண் சாமியார் முன் இப்படி உட்கார்ந்திருப்பது எனக்கு ஒருமாதிரியாக இருந்தது. ‘இங்கிலீஷ் மருந்தால் முடியாதது, ஒரு சாமியாரால் எப்படி முடியும்? சாமியார்களையும் தேடிக்கொண்டு அலைய வேண்டியிருக்கிறதே’ என்று என்னையே நொந்துகொண்டேன்.

“ரைஸ்மில் வச்சியிருந்த தங்கவேல் ஒடயாரத் தெரியுமா?”

எங்களுடைய ஊரான அன்னமங்களம் பெரிய ஊரல்ல. ஆனால், எங்களுடைய ஊரைப் பத்திருபது கிராமங்களுக்குத் தெரியும். அதற்குக் காரணம் தங்கவேல் உடையார் என்பவர் எங்களுடைய ஊரில் ரைஸ்மில் கட்டியதுதான்.  நெல், வரகு, மிளகாய்த் தூள் அரைப்பதற்கு,  வேர்க்கடலை உடைப்பதற்கு என்று பல ஊர்க்காரர்களும் எங்களுடைய ஊருக்குத்தான் வர வேண்டும். பெரம்பலூருக்கு அடுத்ததாக எங்களுடைய ஊரில்தான் ரைஸ்மில் இருந்தது. எங்களுடைய ஊர் பெரம்பலூர் – துறையூர் வழியில் இருக்கிறது. வழியில் இருந்தாலும் மெயின் ரோட்டிலிருந்து ஒரு மைல் தூரம் உள்ளே வர வேண்டும். தங்கவேல் உடையார் கட்டிய ரைஸ்மில் எங்கள் ஊருக்கு வரும் வழியில் மெயின் ரோட்டிலேயே இருந்தது. “அவரத் தெரியுமா?” என்று கேட்டேன். “ரைஸ்மில் இன்னும் இருக்கா?” என்று கேட்டாள். இப்போது ரைஸ்மில் இருக்கிறதா இல்லையா என்பது ஞாபகத்துக்கு வரவில்லை.  கடைசியாக எப்போது பார்த்தேன் என்பதும் நினைவுக்கு வரவில்லை. கடைசியாகச் சொந்தக்காரர் திருமணத்துக்குப் போயிருந்தேன்.  அதுவும் ஒரு வருசத்துக்குமேல் இருக்கும். அப்போது போனபோதுகூட ரைஸ்மில்லைப் பார்த்த ஞாபகம் இல்லை.

பெரம்பலூர், துறையூர் என்று எங்கு பஸ் ஏறினாலும் எங்களுடைய ஊர்க்காரர்கள் ‘அன்னமங்களம்’ என்று டிக்கெட் கேட்க மாட்டார்கள். ‘அன்னமங்களம் ரைஸ்மில்’ என்று சொல்லித்தான் டிக்கெட் கேட்பார்கள். இப்போது ரைஸ்மில் இருக்கிறதா இல்லையா, நான்கு-வழிச் சாலை போடும்போது இடித்துவிட்டார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. அதனால் சாமியாரின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் இருந்தேன்.

“அருணாச்சல ஒடயார் வீடு தெரியுமா சாமி?”

“நீங்க அன்னமங்களத்துக்குப் பக்கமா?”

“ஈசனுக்கும் காத்துக்கும் தண்ணிக்கும் நெருப்புக்கும் ஏது சாமி ஊரு?” என்று கேட்டுவிட்டுச் சிரித்தாள். அவள் சிரித்த விதம் சாமியார் சிரித்ததுபோல் இல்லாமல் ஒரு கல்யாணப் பெண் சிரித்ததுபோல் இருந்தது.

அருணாச்சல உடையார் வீடு எங்களுடைய வீட்டிலிருந்து ஆறாவது வீடுதான். எப்போது என்னைப் பார்த்தாலும் “என்னாங்க மாப்ள?” என்றுதான் கேட்பார்.  ‘மரியாதையான ஆள்’ என்று ஊருக்குள் அவருக்குப் பெயர் இருந்தது.  வடக்குப் பார்த்த வீடு, வீட்டுக்குப் பின்னால் பெரிய எலுமிச்சை மரமும், அதற்குப் பக்கத்திலேயே இரண்டு தென்னை மரங்களும் இருக்கும்.   அருணாச்சலம் லேசாகத் தாங்கித் தாங்கிதான்  நடப்பார்.

அதனால் அவரை நொண்டிக்கால் உடையார் என்றுதான் ஊருக்குள் சொல்வார்கள்.  தங்கவேல் உடையார், ரைஸ்மில், அருணாச்சல உடையார் பற்றி எல்லாம் கேட்டதால் சாமியார் எங்களுடைய ஊருக்குப் பக்கத்து ஊர்க்காரியாக இருக்கலாம் என்று சந்தேகம் உண்டானது.  “அவர எப்பிடித் தெரியும்?”

“ஒலகத்தில ஈசனுக்குத் தெரியாம எதுவும் இருக்குமா?”

“நீ அருணாச்சல ஒடயாரோட ரெண்டாவது மக ஜோதிதான?” என்று கேட்டேன்.  அதற்கு அவள் பதில் சொல்லாமல் சிரிக்க மட்டுமே செய்தாள். அவள் சிரித்த விதம் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.  இவள் அருணாச்சல உடையாரின் மகள் ஜோதி இல்லையா?

நான் ஆறாவது படிக்கும்போது அப்பா இறந்துவிட்டதால் என்னை அழைத்துக்கொண்டு அம்மா தன்னுடைய பிறந்த வீட்டுக்கே  வந்துவிட்டாள். நல்லது கெட்டதுக்கு மட்டும்தான் அம்மா அன்னமங்களத்துக்குப் போவாள்.  தேவைப்பட்டால் என்னையும் அழைத்துக்கொண்டு போவாள். நான் ஊரைவிட்டு வந்த பிறகு படித்து, வேலைக்குச் சென்று, கல்யாணம் கட்டிக்கொண்ட பிறகு எப்போதாவதுதான் அன்னமங்களத்துக்குப் போவேன்.  அருணாச்சல உடையார், தங்கவேல் உடையார், ரைஸ்மில் பற்றியெல்லாம் எனக்கு அவ்வளவாகத் தெரியாது.

ஒரு சாடையில் அவளைப் பார்ப்பதற்கு ஜோதி போல் தோன்றியது. அவள் எப்படி இந்த ஊரில், இந்தக் கோலத்தில் என்ற சந்தேகமும் இருந்தது.

“நீ ஜோதிதான?” மீண்டும் கேட்டேன். அவள் சாமியார் என்பது மறந்துபோய் ஒருமையில் கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

“ஈசனுக்குப் பேரும் ஜோதிதான்.  ஜோதிக்கும் பேரு ஈசன்தான்” என்று சொல்லிச் சிரித்தாள். அவளைப் பார்க்கப் பார்க்க அவள் ஜோதிதான் என்ற எண்ணம் உறுதிப்பட்டது. என்னுடைய நம்பிக்கையை உறுதிப்படுத்துவது மாதிரி சாமி “முத்துசாமி உடையார் மகன் சிவக்குமார்தான?” என்று கேட்டாள்.

“நீ ஜோதின்னு உண்மையச் சொல்லிடு.”

“செண்பகவள்ளி எப்படி இருக்காங்க?”

‘என்னுடைய அம்மாவை இவளுக்கு எப்படித் தெரியும்?’ என்று நினைத்தேன்.

“நீ யாருனு எனக்குத் தெரிஞ்சிடிச்சி.  அருணாச்சல ஒடயாரு மாமா மக ஜோதிதான்.  நீ, ஒங்கக்கா, நான் எல்லாரும் ஒங்க வீட்டுக்குப் பின்னால் இருந்த எலுமிச்சங்காயப் பறிச்சித் தின்னது, வெளயாடினது எல்லாம் ஞாபகம் இருக்கா?” என்று கேட்டேன்.

“அது ஒரு ஞாபகம் சாமி. அத வச்சிக்கிட்டு என்னா செய்ய முடியும்?”

“என்னெ சாமி சாமினுல்லாம் சொல்லாத.  நீ ஜோதிதானு சொல்லு, அது போதும்” மிகவும் வேண்டப்பட்ட ஆளிடம் பேசுவது மாதிரி பேசினேன். அவள் எந்தவிதமான மாற்றத்தையும் முகத்தில் காட்டாமல், “அப்படித்தான் இருக்கட்டுமே சாமி” என்று சொன்னாள். “என்னா இந்தக் கோலத்தில?” என்று கேட்டதற்கு அவள் வானத்தைப் பார்த்துக் கும்பிட்டுவிட்டு “ஈசன் கொடுத்தது” என்று சொன்னாள்.

“என்னெ ஞாபகம் இருக்கா?”

“சாமிக்கு எல்லாத்திலயும் சந்தேகம் இருக்கும் போல” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

“ஊருக்குப் போனியா? ஊர் நிலவரம் எதாவது தெரியுமா?” எனக் கேட்டேன். அவள் பதில் சொல்லவில்லை. ஊரைப் பற்றி, ஊர்ச் சனங்களைப் பற்றிக் கேட்கவில்லை. என்னைப் பற்றிக்கூட அவள் கேட்காதது ஆச்சரியமாக இருந்தது.  திரும்பவும் இவள் ஜோதி இல்லையோ என்ற சந்தேகம் வந்தது. என்னுடைய சந்தேகத்தைப் போக்கும் விதமாக, “எந்த ஊர்ல வேல? கல்யாணம் ஆயிடிச்சா? எத்தன குழந்தைங்க?” என்று கேட்டாள்.

“நீ ஜோதிதான?” என்று கேட்டதற்கு அவள் கொஞ்சம் எகத்தாளமாக, “சூரியனோட பேரும் ஜோதிதானே?” என்று திருப்பி என்னிடம் கேட்டாள்.

“புத்திசாலி மாதிரி பேசுற. நீ தனம் அத்தயோட மவதான்னு எனக்கு எப்பவோ தெரிஞ்சிடிச்சி.”

“தனத்தயெல்லாம் ஞாபகம் இருக்கா?”

எங்கம்மாவும் தனம் அத்தையும் ஒரே ஊரில் பிறந்தவர்கள். பெரம்பலூர், துறையூர் என்று போனால் ஒன்றாகத்தான் போவார்கள். கடன் கொடுப்பது வாங்குவதெல்லாம் இருவருக்குள்ளும்தான் நடக்கும். குளிக்கப் போனாலும், தோட்டத்துக்குப் போனாலும் ஜோடியாகத்தான் போவார்கள், வருவார்கள். எங்கம்மாவும் சரி, தனம் அத்தையும் சரி ‘ஜோதியத்தான் இவனுக்குக் கட்டிவைக்கணும்’ என்று அடிக்கடி பேசிக்கொள்வார்கள்.

“உயிரோட இருக்காங்களா?”

“செத்து மூணு வருசமாயிடிச்சி”

“கல்யாணம் எப்ப ஆச்சி?”

“பதினோரு வருசமாயிடிச்சி. எட்டு வயசில ஒன்னு, பத்து வயசில ஒன்னுன்னு ரெண்டு பொம்பள பசங்க இருக்கு.

“ஊருக்குப் போக்குவரத்து உண்டா?”

“விசேசம்ன்னா போவன், வருவன்.”

“கல்யாணம் பண்ணினது என்னா ஊரு?”

“ஒங்க பெரியப்பா மக சுமதிதான்.”

சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்தாள். அவளுடைய முகத்தோற்றம் லேசாக மாறியது போல் தெரிந்தது. பெருமூச்சு விட்டாள். சுற்று முற்றும் பார்த்தாள். பிறகு, “சாமி இங்க வந்தது என்ன?” என்று கேட்டாள். இப்போது அவளுடைய குரலில் சலிப்பு தெரிந்தது.

“எங்கூட சங்கருன்னு ஒருத்தர் வேல பாக்குறாரு.  அவருக்கு இன்னிக்குக் கல்யாணம்.  அதுக்காக வந்தன். அருவி இருக்கு, கோயில் இருக்கு பாத்திட்டுப் போவலாமினு கூப்புட்டாங்க. அதப் பாக்கலாமின்னுதான் வந்தன்” என்று பொய் சொல்லியதோடு பொய்யாகச் சிரிக்கவும் செய்தேன். ஜோதி என்று தெரிந்த பிறகு எதற்காக வந்தேன் என்ற உண்மையைச் சொல்ல மனமில்லை.

கல்யாணப் பத்திரிகையைக் கொடுக்கும்போதே, “எங்க ஊர்ல கொல்லிமல சாமினு ஒரு அம்மா இருக்காங்க. அவங்ககிட்ட திருநீர் வாங்கிப் பூசினா நல்லது நடக்கும் சார், ஒங்க மேடத்தோட நெலம எனக்குத் தெரியும், வேலக்கி வந்து அஞ்சி வருசமாப்  பொண்ணு தேடிக்கிட்டிருந்தன்.  ஒண்ணும் அமயல. அவங்ககிட்ட திருநீர் வாங்கிப் பூசின இரண்டாவது மாசமே பொண்ணு அமஞ்சது.  எங்க ஊருக்கு வர்றதே வர்றிங்க. அவங்களையும் பாத்திடுங்க சார்” என்று சொன்னார். என்னிடம் சொன்னதோடு இல்லாமல் பழனிவேலிடமும் சங்கர் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். பழனிவேல் சொன்னால் நான் கேட்பேன் என்பது எல்லோருக்கும் தெரியும். காலையில் கல்யாணம் முடிந்ததுமே, “வாங்க, சங்கர் சொன்ன அம்மாவப் பாத்திடலாம். இதுக்காக நம்ப வரல. இங்க வந்திட்டம். பாத்திட்டுப் போயிடலாமே. பக்கத்திலியே எட்டுக் கை அம்மன்னு ஒரு கோயில் இருக்காம்.  அதயும் பாத்திடலாம்” என்று சொன்னதோடு நிற்காமல் கட்டாயப்படுத்தி அழைத்துக்கொண்டு வந்தது பழனிவேல்தான்.

“எங்க தங்கி இருக்க?”

“இந்த மலமேலதான்.” கண்முன் தெரிந்த மலைக் குன்றுகளைக் காட்டினாள்.

“இந்த ஊர்ல எப்பிடி?”

“காத்து எங்க இருக்கின்னும் தெரியாது.  எங்க போவுதின்னும் தெரியாது” என்று ஜோதி சொல்லி முடிப்பதற்குள், “புரியுற மாதிரி பேசு” என்று சென்னேன். பெண்சாமியார், அருள்வாக்குச் சொல்கிறவள் என்று சுற்று வட்டாரத்தில் பெயர் பெற்றவள் என்பதெல்லாம் எனக்கு மறந்து போய்விட்டது.

“எதுக்கு மொட்ட போட்டிருக்கிற? எதுக்குச் சாமியாரா ஆன?”

“எனக்கு நானே தொண இல்லன்னு போறதுதான் சாமியாரு. மனசில இருட்டு இல்லன்னா எல்லாம் சாமியாருதான். அதிர்ஷடம் இருந்தாதான் சாமியாராக முடியும்” என்று ஜோதி சொல்லிக் கொண்டிருக்கும்போது கருத்த மேகத்திரள் எங்களைக் கடந்துபோனது. அப்போது உடலிலும் மனதிலும் நல்ல குளிர்ச்சி ஏற்பட்டது.

“எத்தன முற இந்த மாதிரி மேகம் வரும்?” என்று கேட்டேன்.

“நூறு, ஆயிரம் முற வரும்.. மழக்காலத்தில சூரியனப் பாக்கவே முடியாது.”

“குளிராக இருக்கே. மழக்காலத்தில அதிகமா இருக்குமா?”

“ஈசனுக்கு வெயிலு, மழ, காத்து, குளிரு எதுவுமில்ல.”

“சாமியப் பாத்திருக்கியா?”

“ம்.”

“எங்க?”

“இங்க” என்று நெஞ்சில் கையை வைத்துக் காட்டினாள். அவள் நெஞ்சில் கையை வைத்துக் காட்டிய விதம் மனதை என்னவோ செய்வதுபோல் இருந்தது. மனக்கஷ்டத்தில் இருக்கிறாளோ என்ற எண்ணம் ஏற்பட்டது.

“எப்பிடிச் சாப்புடுற?”

“கோயிலுக்கு வரவங்க தர்றதுதான். யார் கிட்டயும் நானாப்போயி கைய நீட்ட மாட்டன்.”

“நம்ப நாட்டுல சாமியாருங்க எல்லாம் எப்படி இருக்காங்கினு தெரியுமா?” என்று நான் கேட்டு முடிப்பதற்குள் வாய்விட்டுச் சிரித்த ஜோதி, “பாதி சாமியாருங்க சினிமா நடிகருங்க மாதிரிதான் இருக்காங்க. பள்ளிக்கூடம், காலேஜ் எல்லாம் நடத்துறாங்க. ஊருக்கு ஊரு ஆசிரமம் வச்சிருக்காங்க. கல்யாண மாப்ள ஊர்வலம் போற மாதிரி காரிலியே சுத்துறாங்க” என்று சொன்னாள்.

“நீ எப்பிடி இருக்க?”

“காத்து மாதிரி, ஈசன் மாதிரி.”

“கோயிலுக்குக் கூட்டம் அதிகமா வருமா?”

“திருவிழான்னா கூட்டம் அதிகமா இருக்கும்.”

“மத்த சமயத்தில?”

“அவ்வளவா இருக்காது.”

“ஏன்?”

“சாமி முக்கியமில்ல, சனங்களுக்குத் திருவிழா தான் முக்கியம். சாமிய வச்சி கோயிலுக்கு வருமானமில்ல. திருவிழாவ வச்சிதான் வருமானம்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

“வரவங்க ஒங்கிட்ட என்னா கேட்பாங்க?” என்று கேட்டதற்கு ஜோதி உடனடியாகப் பதில் சொல்லவில்லை. என்னைத் தவிர்ப்பது போல எட்டுக்கை அம்மன் கோயிலுக்குக் கிழக்கில் இருந்த மலையைப் பார்த்தபடியே, “மனக் கஷ்டத்தச் சொல்லுவாங்க” என்று சொன்னாள்.

“வர எல்லாருமா?” சின்னப்பையன் மாதிரி கேட்டேன்

‘ஆமாம்’ என்பது போல் தலையை ஆட்டிய ஜோதி தன்மையான குரலில், ஒனக்கு மட்டும் சொல்றன் என்ற முகபாவனையுடன், “நோவு தொந்தரவு, கல்யாணமாகல, புள்ள பொறக்கல, புள்ள படிக்கல, புருசன் அடிச்சிப்புட்டான், மாமியா வாழவிடல, புருசன் குடிகாரன், காடு வெளயல, பணம் காசில்லங்குற கேசுங்க எல்லாம் கம்மிதான். எம்புருசன் எங்கிட்ட பேசமாட்டங்கிறான், எங்கிட்ட புழங்கி ஏழெட்டு மாசமாச்சி, அவன எங்கிட்ட பேச வையிங்கம்மா. வேலக்கிப் போன எடத்தில ஒருத்தன்கிட்ட பழகிட்டன், நாலு மாசம் நல்லாத்தான் இருந்தான். இப்ப எங்கிட்ட வரமாட்டங்கிறான், பேசமாட்டங்கிறான், அவன் பொண்டாட்டிதான் எதிரியா இருக்கா, மூணு புள்ளய வுட்டுட்டு நான், அவன்கூடப் போறதுக்குத் தயாராத்தான் இருக்கன், எப்பிடியாச்சும் அவன் மனசமாத்தி எங்கூட சேத்து வையிங்க சாமி, அவன மறக்க முடியல. அம்பது வயசு கிழவிகூட வந்து எம் புருசன் ஒருத்திய வச்சிக்கிட்டு சுத்துறான், அவன் கைகால மொடக்குங்கம்மா, கட்டிக்கிறன்னு சொல்லி மூணு தடவ கர்ப்பத்தக் கலக்கச் சொன்னான். இப்ப கட்டிக்க மாட்டங்கிறான், ரெண்டு புள்ளயோட என்னெ வுட்டுட்டு, பேரப்புள்ள எடுத்தவகூட எம்புருசன் சுத்திக்கிட்டுக் கெடக்குறான். அவன வழிக்குக் கொண்டாரவைங்க அம்மா, எம்மாம் காணிக்க வேணும்னாலும் தர்றன்னு சொல்றவங்கதான் அதிகம். நான் அவன்கிட்ட போனது ஊருக்குத் தெரிஞ்சிபோச்சி, புருசனுக்குத் தெரிஞ்சிபோச்சி, புருசனுக்கு மருந்து வச்சிட்டா, சீட்டுக் கட்டிப்புட்டா, இந்தப் பிரச்சனதான். சாமியார மாமாவேல பாக்கவைக்கத்தான் சனங்க வருது. மத்தவங்களச் சாவடிக்கத்தான் வேண்டுதல் பண்றாங்க. எதுவும் வேண்டாமினுதான் இந்தக் கோலம் பூண்டன். இதுலயும் சிக்கலாயிருந்தா என்னா பண்ணுறது?”

நான் பேசாமல் இருந்தேன். ஜோதி தானாகவே, “ஆணும் பொண்ணும் சேந்திருந்தா உத்தமம்.  சேராமா இருந்தா அதவிடப் பெரிய உத்தமம் எதுவுமில்ல” என்று சொன்னாள். ஜோதி நிறைய பேசக்கூடிய ஆள் என்பது தெரிந்தது. பேசுவதில் அவளுக்குக் கூச்சமோ, தயக்கமோ இருந்த மாதிரி தெரியவில்லை. எனக்குத்தான் கொஞ்சம் கூச்சமும் தயக்கமும் இருந்தன. அதுகூட எங்களுடைய ஊர்க்காரி என்று தெரியும்வரைதான்.  இப்போது நான் ஜோதியிடம் இயல்பாகத்தான் பேசிக்கொண்டிருந்தேன். “வர சனங்களுக்கு என்னதான் சொல்லுவ?”

“வர ஒவ்வொருத்தரும் ஒரு கதயச் சொல்லுவாங்க. ஒவ்வொரு கதயும் அதிசயமா இருக்கும். ஒலகத்தில இப்படியெல்லாம் நடக்குமானு நமக்கே ஆச்சரியமா இருக்கும், பயமா இருக்கும்.  தெனம் பத்திருபது பேராவது வருவாங்க.  வெள்ளிக்கிழமயில முப்பது, நாப்பது பேரு வருவாங்க. பொதுவா வரவங்க தங்களோட கஷ்டத்த மட்டும்தான் சொல்லுவாங்க. சிரிப்ப, சந்தோஷத்தச் சொல்ல மாட்டாங்க. பொதுவாச் சனங்க பூட்டாத பூட்டுக்குச் சாவி தேடுற வேலயயும், கட்டாத வீட்டுக்குக் கதவு செய்யற வேலயயும்தான் செஞ்சிக்கிட்டிருக்காங்க. மத்தவங்க கஷ்டத்தக் கேக்குறவன்தான கடவுள், சாமி, ஈசன். எல்லாருக்கும் தன் கதய, கஷ்டத்தச் சொல்றதுக்கு ஒரு எடம் வேணும். யார் வந்து என்ன கத சொன்னாலும் கேட்டுக்குவன். போகயில ‘பாலுக்குள்ளார தயிர் இருக்கிற மாதிரி இந்தத் திருநீர்ல ஈசன் இருக்கான். எல்லாத்தயும் அவன் பாத்துக்குவான்’னு சொல்லி வாயிலயும், தலயிலயும், திருநீரப் போட்டுவிடுவன். அதான் நான் செய்யுறது.  ‘சாமி ஒங்களால எனக்கு அது நடந்துச்சி, இது நடந்துச்சி’னு சொல்லி ‘எங்க வீட்டுக்கு வாங்க’ன்னு கூப்புடுவாங்க. ஆம்பள சாமியாரயே சிக்கல்ல மாட்டிவிடுறவங்க, பொம்பள சாமியச் சும்மா விடுவாங்களா? நான் எங்கியும் போறதில்ல. இந்த ஊர்ல பெரியண்ணன் சாமி கோயில், அர்ப்பஸ்வரர் கோயில், இந்த எட்டுக் கை அம்மன் கோயில் வாசல் அவ்வளவுதான். வேறெங்கயும் போவ மாட்டன். ஆம்பளைக்குப் பொம்பள அமயறது, பொம்பளைக்கு ஆம்பள அமயறது, புள்ளைங்க அமயறது, ஒடம்பு, மனசு, சொந்தம், சொத்துப்பத்து அமயறதெல்லாம் ஈசனோட அருள் இருந்தாத்தான் முடியும். பிச்ச வாங்க ஆளில்லாட்டி பிச்ச போடுறவனுக்குப் பெரும எங்கிருந்து வரும் சாமி? பிச்ச போடுறதுக்கும் ஒரு கொடுப்பன வேணும். ஈசனோட அருள் வேணும்” என்று சொல்லிவிட்டு இரண்டு கைகளையும் குவித்து வானத்தைப் பார்த்துக் கும்பிட்டாள்.

“பொம்பளைங்க இருக்குற எடமெல்லாம் ஆம்பளங்க படுக்கிற எடம்தான? துணியத் துவைக்கிறனு அடிச்சிக்கிட்டேயிருந்தா கிழிஞ்சிதான போவும்? அலுத்துப்போச்சி. மனசச் சாவடிச்சிக் கல்லாக்கிட்டன். அது உசுரோட இருந்தாதான அலயும்? எதுவும் வேணாமின்னுதான் இந்த வேசம் பூண்டன். ‘ஆளப் பாத்தா சாமியார் மாதிரி தெரியல. ஆளு சூப்பரா இருக்கா, இடுப்பு வர முடி தொங்குது, சினிமா நடிக மாதிரி இருக்கா’ன்னு பலரும் சொன்னதாலதான் மொட்டபோட ஆரம்பிச்சன். எங்கியோ பொறந்து எங்கியோ வளந்து வடநாடு தென்னாடுனு சுத்துனன்.  காசியில இருந்தன், இமயமலயில, ரிஸிகேசியில இருந்தன், பனிக்கட்டியிலேயே கெடந்தன், அப்பயும் உசுரு அடங்கல.  திருவண்ணாமலையில இருந்தன், கடசியா இந்த ஊருக்கு வந்தன்.  எல்லா ஈசனோட உத்தரவு. என்னிஷ்டமின்னு எதுவுமில்ல. நல்லது நம்பளத் தேடி வராது,  நாம்பதான் அதத் தேடிப் போவணும். கெட்டது தானா வரும், அதத் தேடி நாம்ப போவ வேண்டியதில்ல” என்று சொல்லிவிட்டு இரண்டு கைகளையும் குவித்துக் கும்பிட்டாள்.

சின்ன வயதில் பார்த்தபோது வாயே திறக்காத பெண்ணாக இருந்தாள். இப்போது வாயைத் திறந்தால் குழாயில் தண்ணீர் கொட்டுவது மாதிரிதான் பேச்சு வந்துகொண்டேயிருக்கிறது.  ஊர்க்காரன், தெரிந்தவன், சாதிக்காரன், சொந்தக்காரன் என்ற விதத்தில் பேசுகிறாளா,  எல்லாரிடமும் இப்படித்தான் பேசுவாளா என்று நினைத்தேன்.

“எப்பவும் இங்கதான் இருப்பியா?” என்று கேட்டதற்கு, கொஞ்சம் கேலியான குரலில், “காத்து ஒரு எடத்தில இருக்குமா சாமி?” என்று கேட்டாள். மழை பொழிவதற்கு முன் வீசுகிற குளிர்ந்த காற்று மாதிரி வீசியது. மழை வரப் போகிறதோ என்று வானத்தைப் பார்த்தேன்.  வானம் மேகங்களால் நிறைந்திருந்தது.

“இங்க எப்பவும் இப்பிடிதான் இருக்குமா?”

“எப்ப மழவரும், எப்ப வெயில் அடிக்கும், மேகம் எப்ப நம்பள மறைக்கும் எதுவும் தெரியாது.  ஈசன் செயல் மாதிரி எல்லா நடக்கும். ஆனா, எதுவும் நமக்குத் தெரியாது. பகலவிட ராத்திரியில ஜிலுஜிலுப்பு அதிகமா இருக்கும்.  அதுக்காகத்தான் சனங்க மலைக்கே வந்து குமியுது.”

“நான் ஒன்னெ ஜோதினு சொல்லட்டுமா?” என்று கேட்டதற்கு உடனடியாக எதுவும் பேசவில்லை. என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“மனுசங்களா வச்சிக்கிறதுதான பேரு? ஈசன்னா, ஜோதி, ஜோதின்னா ஈசன். நெருப்பு” என்று ஜோதி சொல்லி முடிப்பதற்குள், “மத்தவங்ககிட்ட பேசுற மாதிரி எங்கிட்டயும் பேசணுமா? பத்து வயசில ஒன்னெப் பத்தியும், என்னெப் பத்தியும் ஒங்கம்மாவும் எங்கம்மாவும் என்னாப் பேசிக்கிட்டாங்கன்னு ஒனக்கு ஞாபகம் இருக்கா?” என்று கேட்டதும் ஜோதியினுடைய கண்கள் கலங்கிவிட்டன.  அதைப் பார்த்ததும் எனக்குச் சங்கடமாகிவிட்டது.  நானும் ஜோதியும் அவளுடைய அக்காவும் விளையாடியது எல்லாம் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.

மாமா வீட்டுக்கு வந்த பிறகு அன்னமங்களத்தில் உள்ள ஆட்களையெல்லாம் எப்படி மறந்தேன் என்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. “ஒனக்கு என்னாச்சி? எதுக்கு இந்த வேசம்? ஒன்னெ இப்பிடிப் பாக்குறதுக்குக் கஷ்டமா இருக்கு. சின்ன வயசில நீ எப்பிடி இருந்த? ஒன்னெ ஏன் பாத்தம்னு ரொம்ப மனக்கஷ்டமா இருக்கு?” என்று நான் சொன்னதற்கு ஜோதி எதுவும் பேசவில்லை.  கழுத்தில் கிடந்த உருத்திராட்ச மாலைகளைத் தடவிக்கொண்டிருந்தாள்.

“நான் எதச் சொல்றது சாமி?” என்று கேட்டுவிட்டு, பேசாமல் இருந்தாள்.

‘தங்கவேல் ஒடயார் மகன் தங்கதுரய ஒங்களுக்கு ஞாபகம் இருக்கும். விடிஞ்சதிலிருந்து தூங்குறவர, நான் எங்க போறன், எங்க வர்றன்னு பாக்குறதுதான் அவருக்கு வேல. எம்பின்னால வராதீங்க, ஊர்ல பேரு கெட்டுப்போவும்’ன்னு சொன்னன். அவரு கேக்கல. அவரு ஒத்தப் புள்ள. ரைஸ்மில், இருபது காணி நிலம், மெத்த வீடு, டிராக்டர்னு இருக்கிற குடும்பம். சின்ன வயசில எங்கப்பா எறந்திட்டாரு. இருந்த நாலு காணியில ரெண்டு காணிய வித்துதான் எங்கக்கா கல்யாணத்த எங்கம்மா முடிச்சிது. ‘ஒங்க வசதிக்கு நான் எடுபட மாட்டன்’னு சொன்னன். அவங்க வீட்டுலயும் ‘அவகிட்ட செவப்புத் தோலு மட்டும்தான் இருக்கு. ஆளுதான் எடுப்பு, மத்தது ஒன்னுமில்ல. வீடும் கூர வீடுதான்’னு சொன்னாங்க. ‘கட்டுனா இந்தப் புள்ளயத்தான் கட்டுவன்’னு சொன்னாரு. இவன் படிஞ்சி வர மாட்டானு அவங்க வீட்டுல நம்ப ஊர் பூமால ஒடயாரு மவ லட்சுமிய நிச்சயம் செஞ்சாங்க. பூமால ஒடயாரும் சவுண்டான ஆளுதான? நாள் குறிச்சாச்சி, கூரப் பொடவ எடுத்தாச்சி, ஐயருக்குச் சொல்லியாச்சி. கல்யாணத்துக்கு மூனு நாள் இருக்கயில குளிக்கப் போன என்னெ மறிச்சிக்கிட்டு, ‘வா ஓடிப் போவலாம். நீ எங்கூட வல்லன்னா செத்திடுவன்’னு சொன்னாரு. ‘பைத்தியமா? ஊர்ல கெட்ட பேர உண்டாக்கப் பாக்குறீங்களா?’ன்னு கேட்டன்.  ‘நான் உசுரோட இருக்கணுமா வாண்டாமா?’ன்னு கேட்டாரு. நான் அதுக்கு ‘ஒங்கப் பணக்கார வெளயாட்டுக்கு நான் வல்ல, என்னெ வுட்டுடுங்க சாமி’ன்னு கால்ல விழுந்து கும்புட்டன். ‘நீ எங்கூட வல்லன்னா, சாயங்காலம் எம்பொணத்த தான் பாப்ப’ன்னு சொல்லிட்டு விர்னு போயிட்டாரு.  குளிக்கப் போனவ குளிக்காமியே திரும்பி வந்தன். செத்திட்டா என்னா செய்யுறது? நம்பளால ஒரு உசுரு போயிடுமோனு எறக்கப்பட்டன்.  அவ்வளவுதான் நான் செஞ்சது. அன்னிக்கிச் சாயங்காலம் விஷப் பாட்டிலோட வந்து வாசல்ல நின்னாரு. ஐயோ பாவம்னு நெனைச்சி ‘சரி’ன்னன்.  நிச்சயமான பின்னால தாலி கட்டுற முத ராத்திரி பொம்பள பிள்ளங்கதான் ஓடிப்போவும்.  கலியாணம் கட்ட மூனு நாள் இருக்கயில தங்கதுர செய்யுறது அதிசயமாக இருந்துச்சி. கோழி கூவுற நேரத்துக்கு வந்து கதவத் தட்டுனாரு. நான் வாசலுக்குச் சாணி தெளிக்கிற மாதிரி வெளிய வந்தவ, ‘ஊர் அசிங்கமாயிடும், அவப்பேராயிடும். நீங்க சாக வேணாம். நான் வேணுமின்னா செத்துப்போறன்’னு அப்பயும் சொன்னன். ‘ஒரே ஊரு, ஒரே சாதி, எதுக்குப் பயப்படுற?’ன்னு கேட்டாரு.  ‘நிச்சயமாயிடிச்சில்ல?’ன்னு சொன்னதுக்கு, ‘அது எங்கப்பா சொத்து சேக்கிறதுக்குச் செஞ்ச ஏற்பாடு. நீ வல்லன்னா நான் சத்தியமா செத்திடுவன்’னு தலயில அடிச்சி சத்தியம் செஞ்சாரு. ஐயோ பாவம் நம்பலால ஒரு உசுருப் போயிட்டா என்னா செய்யுறதினு எறக்கப்பட்டன். அதான் நான் செஞ்ச தப்பு.

கட்டுன துணியோடதான் போனன்.  அவருகூட நம்ப ஊரு பசங்க ஆறுபேரு வந்தாங்க.  பெரம்பலூர்ல இருக்கிற விநாயகர் கோயில்ல வச்சி மாலய மாத்துனாரு, தாலியக் கட்டுனாரு. ‘வா சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயி ரெண்டு நாள் இருந்திட்டு வரலா’மின்னு கூப்புட்டாரு.  கூட வந்திருந்த பசங்களும் தங்கதுர சொல்ற மாதிரி செய்னு சொன்னாங்க. எல்லாரும் நம்ப சாதி பசங்கதான். ‘ஊருக்குப் போயிடலாம். தெரியாத ஊர்ல தெரியாதவங்க வீட்டுல என்னால இருக்க முடியாது’ன்னு சொன்னன். ‘ஒடனே போனா வீட்டுல சண்ட வரும்.  ரெண்டு நாள் கழிச்சிப் போனா சிக்கல் வராது’ன்னு சொன்னாரு. என் புத்தி அப்ப அவரு சொன்னதக் கேக்கல. அவரு சொன்ன மாதிரி ஆலம்பாடிக்குப் போயிருந்தா கத வேறமாதிரி ஆயிருக்கலாம். ஊருக்குத்தான் போவணுமின்னு அடம்புடிச்சன், அழுதன்.

‘பாப்பா சொல்றதும் சரிதான். வா ஊருக்குப் போயிடலாம்’ன்னு கூடவந்த பசங்களும் சொல்லவே, ‘ஏறு சைக்கிள்ள’ன்னு சொன்னாரு.  நான் சைக்கிள்ள ஏறிக் கிட்டன். ‘நீங்க முன்னால போங்க. நாங்க பின்னால வரோம்’ன்னு கூடவந்த பசங்க சொன்னாங்க. பெரம்பலூர்லயிருந்து முக்காவாசி தூரம் வந்திட்டம். இன்னும் கொஞ்ச தூரம்தான் ஊருக்குப் போறதுக்கு. எங்களுக்குப் பின்னால ‘டமால்’னு ஒரு சத்தம் கேட்டுச்சி.  என்னானு திரும்பிப் பாக்குறதுக்குள்ளார டயர் வெடிச்ச லாரி வந்து எங்கமேலே மோதிடிச்சி.  அப்பறம் என்னா நடந்துச்சின்னே தெரியல.  எங்ககூட வந்த பசங்கதான் என்னெத் தூக்குனாங்க. அப்பறம் தங்கதுரயப் போயி தூக்குனாங்க.  உசுரு அடங்கிப்போயிருந்துச்சி. எங்கள அப்பிடியே போட்டுட்டு எங்ககூட வந்த பசங்க ஊருக்குள்ளாரத் தல காட்டக்கூடாதுனு ஓடிப்போயிட்டாங்க, ஊருக்குப் பக்கம்தான, சேதி தெரிஞ்சி ஊரே வந்துடுச்சி.

‘எம் புள்ளய மயக்கி இழுத்துக்கிட்டுப் போயி இப்பிடிப் பொணமாக்கிக் கொண்டாந்திட்டியே’ன்னு சொல்லி தங்கதுரயோட அப்பாவும் அம்மாவும் என்னெ அடிச்சாங்க, எட்டிஎட்டி ஒதச்சாங்க.  ‘பாவம் விடுங்க’ன்னு ஊர்ல ஒரு ஆள்கூடச் சொல்லல. நான் ஒரு தப்பும் செய்யல.  செத்திடுவாருனு பயந்தன். அதான் நான் செஞ்ச தப்புனு சொல்ல நெனைச்சன். ஆனா சொல்லல.

பொணத்தத் தூக்கிட்டுப் போனாங்க. எனக்கு ஒடம்பெல்லாம் காயம். என் காயத்த ஊரு பாக்கல. காலனி சனங்கதான் என்னெ ஊருக்குத் தூக்கிட்டுப் போனாங்க.

பூமால ஒடயார் வீட்டுச் சனங்க வந்து, ‘நிச்சயமான பொண்ணோட கல்யாணம் நின்னு போனா ராசி இல்லாதவ, கிரகக் கோளாறு புடிச்சவ, கெட்ட ராசிக்காரி, இவளோட கிரகம்தான் அவனச் சாவடிச்சிடிச்சின்னு சொல்லி, இனி ஒருத்தரும் வந்து பொண்ணு கேக்க மாட்டாங்களே. எம் பொண்ணு வாழ்க்கய வீணாக்குன நீயெல்லாம் உசுரோட இருக்கணுமா?’ன்னு கேட்டு அசிங்க அசிங்கமாத் திட்டுனாங்க. நம்பச் சாதிக்காரங்களுக்கு அவ்வளவு கெட்டவாத்த தெரியும்னு எனக்கு அன்னிக்கிதான் தெரிஞ்சிது.

நான் ஒரு தப்பும் செய்யல. நம்மலால ஒரு உசுரு போயிடுமோனு எரக்கப்பட்டன். அதான் நான் செஞ்ச தப்புனு சொல்ல நெனச்சன்,  ஆனா சொல்லல.

‘ஊரே கூடிக்கிட்டு எதுக்கு எம் பொண்ண அடிக்கிறீங்க, திட்டுறீங்க, மூஞ்சியில காறித்துப்பி செத்துபோன்னு சொல்றீங்க?’னு எங்கம்மா கேக்கல. வீட்ட விட்டு வெளியயும் வரல. யாரோ எட்டி ஒதச்சதில மயக்கமாகி கெடந்தப்ப, ‘பூமால ஒடயாரு மவ தூக்குமாட்டி செத்திட்டாளாம்’ன்னு கத்திக்கிட்டே சனங்க ஓடுற சத்தம் கேட்டு கண்ண முழிச்சிப் பாத்தன். கிழக்குத் தெரு பக்கமாகச் சனங்க ஓடுறது தெரிஞ்சிது. தங்கதுர செத்திட்டா என்னா பண்றதுனுதான் நெனச்சனே தவிர, பூமால ஒடயாரு மவ லட்சுமியப் பத்தி யோசிக்கல.  எனக்கு ஒரே தாகமா இருந்துச்சி. கை காலத் தூக்க முடியல. ஒடம்பெல்லாம் ஒரே காயம்.  தங்கதுரயோட வீட்டுப் பக்கம் பாத்தன். ஒரே கூட்டமா இருந்துச்சி. எழுந்திரிச்சி பொணத்தப் பாக்கப் போனன். ‘கொன்னுப்புட்டு வந்து பொணத்தப் பாக்க வரியா?’னு கேட்டு, தங்கதுரயோட அப்பா, அம்மா, சொந்தக்காரங்க எல்லோரும் என்ன அடிச்சாங்க. ‘போயி சாவுடி’ன்னு சொல்லி மூஞ்சியிலே குத்துனாங்க.  மயிரப் புடிச்சி இழுத்து, தெருவுல தள்ளிவிட்டாங்க.  யார் அடிச்சாங்க, யார் திட்டுனாங்க, யாரு மயிரப் புடிச்சிக்கிட்டுக் கன்னத்தில அறைஞ்சாங்க, மூஞ்சியில யாரு காறித்துப்புனாங்கனு எதுவும் தெரியாது. என்னெ அடிச்சதால, ஒதச்சதால நான் அழுவல, ஒரு பாவமும் செய்யாத லட்சுமி செத்துப்போயிட்டாளேனு அழுதன். அவ பொணத்தயாச்சும் பாக்கலாமினு போனன்.  விடல. திரும்பி வந்து தங்கதுர வீட்டுக்கு முன்னால ஒக்காந்திருந்தன். எங்க வீட்டுக்கு எதிர் வீடுதான?

‘பூமால ஒடயார் மவ லட்சுமி தூக்குமாட்டி செத்திட்டா’னு தெரிஞ்ச பின்னலதான் எங்கம்மா வீட்டவிட்டு வெளியே வந்துச்சி. ‘ஒரே நாளுல ஊர்ல ரெண்டு சாவுக்குக் காரணமாயிட்டியே. உசுர உண்டாக்குறவதாண்டி பொம்பள’ன்னு கேட்டு எங்கம்மா என்னெ அடிச்சிது. அப்பறம் தம் முகத்திலியே அடிச்சிக்கிச்சி.

நான் ஒரு தப்பும் செய்யல. நம்பலால ஒரு உசுரு போயிடுமோனு எறக்கப்பட்டன். அதான் நான் செஞ்ச தப்புனு சொல்ல நெனச்சன், ஆனா சொல்லல.

‘ரெண்டு உசுரக் கொன்னவ உசுரோட இருக்கணுமா? போயி செத்துத் தொலை அதான் ஒனக்கும் நல்லது, எனக்கும் நல்லது. இனிமே நான் ஒன்னெ பாத்தா பொணமாத்தான் பாக்கணும். நீ என்னெ பாத்தாலும் பொணமாத்தான் பாக்கணும்’னு சொல்லிட்டுப் போச்சி. அது போயி எம்மாம் நேரமாச்சின்னு தெரியல. ஓடயில அரளி விதய அரைச்சித் தின்னுட்டுச் செத்திடுச்சின்னு யாரோ சொன்னது காதில விழுந்துச்சி. ஓடக்கிச் சனங்க ஓடுனாங்க. என்னால ஓட முடியல.  நடக்க முடியல. எந்திரிச்சி ஒக்காரக்கூட முடியல.  லாரியில அடிப்பட்ட தவள மாதிரி கெடந்தன்.  எங்கம்மா பொணத்தத் தூக்கிட்டு வந்தாங்க.  பொணத்தப் பாக்கப் போனன். எங்கக்கா வீட்டுக்காரர், ‘ஒரே நாளில் மூனு பேரக் கொன்னவ நீ, பொணத்தப் பாக்க வரியா?’னு கேட்டு மாட்ட அடிக்கிற மாதிரி சாட்டயால அடிச்சாரு. யாரும் வந்து தடுக்கல. ‘பொணத்தப் பாக்க விடு’ன்னு சொல்லல. சாட்ட அடியால மயங்கி வாசல்ல கெடந்தன். மூனு வீட்டுச் சாவுக்கும் வந்திருந்த வெளியூர் சனமெல்லாம் என்னியதான் பாத்தாங்க.  உள்ளூர் சனங்களும் வெளியூர் சனங்களும் மூனு பேர ஒரே நாளில் கொன்னவளச் சும்மா விடக்கூடாது. மொட்ட அடிச்சி, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதமேலே ஊர்வலம் விடணும்னு பேசிக்கிட்டாங்க. ஒலகத்திலேயே அதுதான் நல்ல வாத்த மாதிரி, நல்ல விசயம் மாதிரி.

மொத பொணமா தங்கதுர பொணம்தான் சுடுகாட்டுக்குப் போச்சி. போனன். பொணத்தப் பாக்க வுடல. ரெண்டாவது பொணமா லட்சுமியோட பொணம் சுடுகாட்டுக்குப் போச்சி. போனன்.  பொணத்தப் பாக்க விடல. கடசியா எங்கம்மா பொணம் போச்சி. பாக்கப் போனன். பொணத்தப் பாக்க விடல. எங்கம்மா பொணத்துக்கு ஒரு குடம் தண்ணிகூட ஊத்தல. பொணத்தோட தலயில எண்ணெ வைக்கல, வாக்கரிசி போடல.

நல்லா இருட்டிப்போச்சி. ஊர்ல யாரும் எங்கிட்ட ஒரு வாத்த பேசல. ‘தெருவுல எதுக்குக் கெடக்கிற வீட்டுக்குப் போ’ன்னு சொல்லல.  பொணத்தத்தான் பாக்க முடியல. பொணக் குழியையாவது பாக்கலாம். அங்கியே ஏதாச்சும் ஒரு மரத்தில தொங்கிச் செத்திடலாம்னு போனன்.  மூனு பொணக்குழி மேட்டுக்கும் போனன்.  மூனு எடத்திலயும் நான் ஒரு தப்பும் செய்யல.  நம்பலால ஒரு உசுரு போயிடுமேனு எரக்கப்பட்டன்.  அதான் நான் செஞ்ச தப்புனு சொன்னன்.  ஒவ்வொரு பொணக்குழி மேட்டுலயும் மண் எடுத்து நெத்தியில பூசுனன். மூனு பொணக்குழி மேட்டுலயும் ஒவ்வொரு புடி மண்ணள்ளி மடியில கட்டிக்கிட்டன். தங்கதுர பொணக்குழி மேட்டுல தாலியக் கழட்டிப் போட்டன். அது ஒரு நாள்கூட எங்கழுத்தில கெடக்கல. அம்மாம் அதிர்ஷ்டக்காரி நான். காலயில கட்டுன தாலிய அன்னிய சாயங்காலமே அறுத்திட்டன். எங்கியாவது ஒரு மரத்தில தொங்கிச் செத்திடலாம்னு மரம் எங்க இருக்கினு பாத்தன். இருட்டுல தெரியல. மரத்தத் தேடிக்கிட்டு நடக்க ஆரம்பிச்சன்.

கால்போன போக்குதான், மனம்போன போக்குதான். இருபத்தஞ்சி வருசம் ஓடிப்போச்சி.  இந்த மலைக்கு வந்து அஞ்சி வருசமாயிடிச்சி.  எதுக்கு வந்தன், எதுக்காக இந்தக் கோயில் வாசல்ல குந்தியிருக்கன் எதுவும் தெரியாது.  என்னெத் தேடவும் ஆளில்ல.  நானும் யாரயும் தேடுறதில்ல.  எனக்காகக் கவலப்பட யாருமில்ல.

நானும் யாருக்காகவும் கவலப்படுறதில்ல.  என்னெ ஊர்ல எல்லாரும் மறந்துபோயிருப்பாங்க.  அப்படியே இருக்கட்டும். எங்கதெ ஒங்களுக்குத் தெரியாது. தெரியாத கதெயச் சொல்லி எதுக்குத் தெரிய வைக்கணும்? என்னெப் பத்திச் சொல்ல என்ன இருக்கு சாமி? செத்துப் போன பொணத்துக்குக் கத இருக்கா சாமி?’

ஜோதி கண்களை மூடிக்கொண்டிருந்தாள். கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. என்ன தோன்றியதோ எழுந்துசென்று எட்டுக் கை அம்மன் கோயிலின் வாசலின் முன் விழுந்து கும்பிட்டாள். அப்போது கிழக்கிலிருந்து வந்த மேகம் ஜோதியையும், எட்டுக் கை அம்மன் கோயிலையும் முழுமையாக மறைத்துவிட்டது.

சிறிது நேரம் கழித்துதான் வந்தாள்.  அவளுடைய முகம் பார்ப்பதற்கு அழுதுவிட்டு வந்ததுபோல் இருந்தது.  தட்டிலிருந்த திருநீரைக் கொஞ்சம் அள்ளிப்பூசிக்கொண்டாள். எட்டுக் கை அம்மன் கோயிலிலிருந்து இரண்டு பெண்கள் வந்து ஜோதியைக் கும்பிட்டனர்.   இரண்டு பெண்களையும் பார்த்தேன். தாயும் மகளுமாக இருக்கலாம் என்று தோன்றியது.  “சாமிய அனுப்பிட்டுக் கூப்புடுறன், ஒக்காருங்க சாமி” என்று ஜோதி சொன்னதும் அவர்கள் எனக்குப் பின்னால் உட்கார்ந்துகொண்டனர்.

“ஒனக்கு என்னாச்சி? திடீர்னு கண்ண மூடிக்கிட்டு ஒக்காந்திருந்த, கண்ணுல தண்ணியா வந்துகிட்டு இருந்துச்சி. இப்ப ஒம் முகத்தப் பாக்கவே நல்லா இல்ல” என்று சொன்னேன்.

“ஈசன்கிட்ட பேசிக்கிட்டிருந்தன்.

“சாமி வந்ததச் சொல்லவே இல்ல” என்று சொன்னாள்.

முன்பு ஜோதி கண்களை மூடிக்கொண்டது போல நானும் மூடிக்கொண்டேன்.  உண்மையைப் பேசுவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் எனக்கு நானே பேசிக்கொள்ள ஆரம்பித்தேன்.

‘ஆறு வருசத்துக்கு முன்னாடி ஒரு ராத்திரி நல்லா தூங்கிக்கிட்டிருந்தன். திடீர்னு என்னெ எழுப்பி, ‘யாரோ நம்ப வீட்டுக் கதவுகிட்ட நின்னு எட்டிஎட்டிப் பாக்குறாங்க’ன்னு சொன்னா.  திருடனா இருக்கலாமினு பதறிப்போய் கதவத் தொறந்து பாத்தா யாருமில்ல. வீட்டச் சுத்திப் பாத்தன், ஆளில்ல. தெருமுனைவர போய்ப் பாத்தன், யாருமில்ல. எதிர்வீட்டுல, பக்கத்து வீட்டுல எழுப்பிச் சொன்னன். தெருவே தேடிச்சி.  யாரும் கெடைக்கல. யாருமில்லியேனு சொன்னா சுமதி நம்பல. அன்னிக்கி ராத்திரி தெருவே முழிச்சிக்கிட்டிருந்துச்சி. மறுநாள் ராத்திரியும் ‘நம்ப வீட்டுக் கதவுகிட்ட யாரோ நின்னுகிட்டு எட்டிஎட்டிப் பாக்குறாங்க’ன்னு சொன்னா.  போய்ப் பாத்தன். யாருமில்ல. யாருமில்லன்னு சொன்னத அவ நம்பல. சொன்னதயே சொல்லிக்கிட்டிருந்தா. ‘நீயே வந்து பாரு’ன்னு சொன்னாலும் பாக்கிறதில்ல. ராத்திரி முழுக்க அவளும் முழிச்சிக்கிட்டிருந்தா, நானும் முழிச்சிக்கிட்டிருந்தன்.

ஒரு நாளாச்சி, ரெண்டு நாளாச்சி, ஒரு வாரமாச்சி, ரெண்டு வாரமாச்சி, அப்பறம் மாசம், வருசம்னு ஆயி, இப்ப ஆறு வருசமும் ஓடிப் போச்சி. ராத்திரியில மட்டும் சொல்லிக்கிட்டிருந்தவ, அப்பறம் பகல்லயும் சொல்ல ஆரம்பிச்சா.  ஒரு நிமிசம் வாய் ஓயாது. ஆரம்பத்தில கதவுகிட்ட நின்னு யாரோ எட்டிஎட்டிப் பாக்குறாங்கன்னு சொன்னவ, அப்பறம் ஜன்னல்கிட்ட நின்னுக்கிட்டு யாரோ எட்டிஎட்டிப் பாக்குறாங்கன்னு சொல்ல ஆரம்பிச்சா.

ஆரம்பத்தில ராத்திரியில மட்டும் வீட்டப் பூட்டிக்கிட்டிருப்பா. நாளாக நாளாகப் பகல்லயும் கதவு, ஜன்னல் எல்லாத்தயும் பூட்டிக்க ஆரம்பிச்சிட்டா. வீட்டவிட்டு வெளியே வரதே இல்ல. நான் ஆபிஸ் போயிட்டு வந்து கதவத் தட்டுனா லேசில தொறக்கமாட்டா. ‘நான்தான் நான்தான்’னு நூறுதடவ சொன்ன பிறகுதான் தொறப்பா. புள்ளைங்க ஸ்கூலுக்குப் போயிட்டு வந்தாலும் லேசில கதவத் தொறக்கமாட்டா, அவ வீட்டவிட்டு வெளியே வராத மாதிரியே வீட்டுக்குள்ளார யாரையும் சேக்கவும்மாட்டா, மீறி யாராவது வந்தா ‘ஒளவு பாக்க வந்தீங்களா?’ ன்னு கேட்டுச் சண்டைக்குப் போவா. எதிர்வீட்டு, பக்கத்து வீட்டுச் சனங்கதான்னில்ல சொந்தக்காரங்க வந்தாலும் அதே கேள்வியத் தான் கேப்பா. அவளோட அப்பா, அம்மா வந்தாலும் அதே மாதிரிதான் கேட்டுச் சண்டக்கிப் போவா.

முன்னெல்லாம் அரமணி நேரத்துக்கு, ஒருமணி நேரத்துக்கு ஒருமுறதான் கதவுகிட்ட நின்னுகிட்டு  ‘யாரோ எட்டிஎட்டிப் பாக்குறாங்க’ன்னு சொல்லுவா. அப்பறம் ராத்திரி பகல்ன்னு வாய் ஓயாம சொன்னதயே சொல்ல ஆரம்பிச்சிட்டா. டாக்டர் கிட்ட அழச்சிக்கிட்டுப் போனன். லேசுல வரமாட்டா. அடிச்சி, பொணமாப் புரட்டிதான் இழுத்துக்கிட்டுப் போவணும். ஒவ்வொரு முற டாக்டர்கிட்ட அழச்சிக்கிட்டுப் போவும்போதும் ‘நான் பைத்தியமா, நான் பைத்தியமா’ன்னு கேட்டு சாவடிப்பா. சேலத்தில வச்சி ரெண்டு மாசம் பாத்தன். கோயம்புத்தூர்ல வச்சியிருந்தன்.  சென்னையிலயும் நாலு மாசம் வச்சியிருந்தன்.

‘மாத்தரயச் சரியாப் போட வையிங்க. நல்லா தூங்க வையிங்க.  நாளான சரியாயிடும்’னுதான் எல்லா டாக்டரும் சொன்னாங்க. ஆனா சரியாகல.  டாக்டருங்க அவள வீட்டுக்கு அனுப்புனதுக்குக் காரணம் என்னான்னா, யாரோ கதவுகிட்ட நின்னு எட்டிஎட்டிப் பாக்குறாங்க, ஜன்னல்கிட்ட நின்னு எட்டிஎட்டிப் பாக்குறாங்கன்னு சொல்றத தவிர, கதவ, ஜன்னலைப் பூட்டிக்கிட்டு இருக்கிறதத் தவிர வேற தொந்தரவு இருக்காது.  சமையல் பண்றது, துணி துவைக்கிறது, வீட்டக் கூட்டுறதுன்னு எல்லா வேலைகளையும் சரியாச் செஞ்சிடுவா. மாத்தரயத்தான் கட்டாயப்படுத்திப் போட வைக்கணும்.  ஒவ்வொரு முற மாத்தரயப் போடச் சொல்லும்போதும், ‘நான் பைத்தியமா?’ன்னு கேப்பா. ஆரம்பத்தில நீ பைத்தியம் இல்லனு சொன்னன். அப்பறம் ‘மாத்தரயப் போடுறியா ஒத வாங்குறியா’னு கேட்டன். இப்ப மாத்தரயக் கொடுக்கிற ஒவ்வொரு முறயும் கன்னத்தில அறைய வேண்டியிருக்கு. என்னெவிடப் பசங்கதான் பாவம், அரண்டுமிரண்டு போறாங்க. சில நாளில வேலயில்லன்னா வீட்டக் கூட்டிக்கிட்டே இருப்பா. நூறு முற, இரநூறு முற கணக்கே இருக்காது. சில நாளில ஒருமணி நேரம், ரெண்டு மணிநேரம் குளிச்சிக்கிட்டே இருப்பா. கன்னத்தில ஒரு அடிபோட்டா ஒருமணி நேரத்துக்கு எதுவும் செய்ய மாட்டா.

ஒனக்குத் தெரியும். எங்க குடும்ப நெலம. மத்தவங்க, பொறாமப் படுற மாதிரி, எரிச்சல் படுற மாதிரியா எங்க குடும்பம் இருந்துச்சி?  இந்த வேல ஒண்ணுதான். நம்ப ஊர்ல மொத மொதல்லா பேங்க் வேலக்கிப் போனது நான்தான்.  அதுமட்டும்தான். தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்க, வேண்டியவங்க, யாரோ மருந்து வச்சிட்டாங்க. யாரோ சீட்டுக்கட்டிப்புட்டாங்கன்னு சொன்னதால ஜோசியம் பாக்குறவன், தாயத்துக்கட்டுறவன், மந்திரிக்கிறவன், தகடு எழுதுறவன், தர்காவுல ஓதுறவன்னு அலஞ்சன். இதுக்கே காலேஜில படிக்கிறப்ப சாமி இல்ல, பேய் இல்ல, ஜோசியமெல்லாம் பொய்ன்னு சொல்லிக்கிட்டுத் திரிஞ்ச ஆள்தான். எப்படியாவது நல்லாயிடாதான்னு அலஞ்சன். எதுவும் நடக்கல, எதிலயும் பலனில்ல.  நல்லாப் படுத்துத் தூங்குனவளுக்கு நடுராத்திரியில என்னா ஆயிருக்கும்? அதுதான் எனக்கு ஆறு வருசமாத் தெரியல.

நான் ஊர்லியே இருந்திருந்தா எங்கம்மா ஒன்னத்தான் எனக்குக் கட்டிவச்சிருக்கும்.  எங்கம்மா எதுக்காக எங்க மாமா ஊருக்குக் கூட்டிக்கிட்டுப் போச்சின்னு தெரியல. உண்மையச் சொன்னா கட்டுனா இவளத்தான் கட்டுவன்னு சொல்லி சுமதியக் கட்டிக்கிட்டன். ஆனா, இப்ப ஆறு வருசமா நான் தூங்கல, புள்ளைங்களும் தூங்கல, அவளும் தூங்கல. பல நேரங்கல்ல அவ செத்திட்டா தேவலாமின்னு இருக்கு. இழுத்துக்கிட்டுப் போயி கண்காணாத எடத்தில விட்டுட்டு வந்திடலாமான்னுகூடத் தோணுது. பைத்தியம் முத்திப்போயி தானாவே வீட்டவிட்டு போயிட்டாக் கூடப் போதும்னு இருக்கு. கொல்லிமல சாமினு ஒரு அம்மா இருக்கு. அவங்ககிட்ட திருநீர் வாங்கிப் பூசினா நல்லாயிடும்னு சொன்னாங்க. அதனாலதான் வந்தன்.’

எனக்கு அழுகை வர ஆரம்பித்ததும் கண்களைத் திறந்து பார்த்தேன். ஜோதி அதிசயமான பொருளைப் பார்ப்பது போல என்னையே பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

“சாமிக்கு என்னாச்சி?” என்று கேட்டாள். பிறகு தானாகவே “கோயில்ல இருக்கிறவங்களாலயும் மனசில உள்ளதப் பேச முடியாது. கோயிலுக்கு வர்றவங்களாலயும் மனசில உள்ளதப் பேச முடியாது” என்று சொன்னாள்.  அவள் சொன்னது எனக்காகச் சொன்ன மாதிரியே இருந்தாலும் நான் வாயைத் திறக்கவில்லை. நடுத்தர வயதுள்ள ஆணும் பெண்ணும் வந்து ஜோதியைப் பணிவாகக் கும்பிட்டுவிட்டு, “அம்மாகிட்ட கொஞ்சம் பேசணும்” என்று ஒரே குரலாக இரண்டு பேரும் சொன்னார்கள்.

“சாமிய அனுப்பிடுறன்” என்று ஜோதி சொன்னாள். எனக்கு மேற்கு பக்கமாக அந்தாளும், அந்தப் பெண்ணும் உட்கார்ந்துகொண்டனர். அடுத்து ஆறு பெண்கள் வந்தனர். கூட்டம் சேரத் தொடங்கியது.

“அவசரமில்லன்னா இருங்க. இருக்கிற சாமிகள அனுப்பிடுறன்” என்று ஜோதி தணிந்த குரலில் சொன்னாள்.

“கோயிலுக்குப் போன சார் வந்திடுவாரு.”

“அப்படின்னா கிளம்புங்க.”

“எதாவது  ஊர்ல சொல்லணுமா?”

“காத்தப் பத்தி சொல்றதுக்கு என்னா இருக்கு சாமி?” என்று கேட்கும்போது ஜோதியின் கண்கள் கலங்கியதைப் பார்த்தேன்.

“கிளம்புறன்.”

“திருநீர் போட்டுவிடவா?” என்று கேட்டுவிட்டு, திருநீர் தட்டிலிருந்து துளி எடுத்து என் தலையில் போட்டுவிட்டாள். “ஆ காட்டுங்க” என்று சொன்னாள். அவள் சொன்னபடியே செய்தேன். திருநீரை எடுத்து என் வாயில் போட்டாள். ‘எனக்கே திருநீர் போடுறியா?’ என்று கேட்கத் தோன்றியது, கேட்கவில்லை. புதுக் காதலியுடன் சேர்ந்து சிரிப்பதுபோல சிரித்தேன். சின்ன வயதில் அவளுடைய ஜடையைப் பிடித்து இழுத்து, தலையில் கொட்டியதுபோல கொட்ட வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று.

“சாமிக்குப் பழசெல்லாம் ஞாபகம் வந்திடுச்சி போல” என்று சொன்னாள். அப்போது பழனிவேல் எட்டுக் கை அம்மன் கோயிலிலிருந்து வெளியே வந்துகொண்டிருப்பது தெரிந்ததும், “நான் வரட்டுமா?” என்று கேட்டுக்கொண்டே சட்டைப் பையிலிருந்து ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து திருநீர் தட்டில் வைப்பதற்கு முயன்றபோது, “காணிக்க கேக்குறவன் ஈசனா?” என்று கேட்டாள்.

“இருக்கட்டும்” என்று சொல்லி முடிப்பதற்குள், “என்ன இருக்கட்டும்? சின்ன வயசில அங்கத் தட்டுனம், இங்கத் தட்டுனம், சடயப் புடிச்சி இழுத்தம், தலியில கொட்டுனம். இப்ப அப்படிச் செய்யலாமானு ஆச வச்ச ஆளு காசுக் கொடுக்கலாமா?” என்று ஜோதி சொன்னது எனக்கு ஆச்சரியமாகிவிட்டது.

கொஞ்சம் கூடுதலாகத் திருநீரையும் சாமி படத்தில் செருகிவைத்திருந்த பூவையும் எடுத்து ஒரு காகிதத்தில் வைத்து மடித்து, “சுமதி தலயில, வாயில, புள்ளைங்க தலயில, வாயில போட்டு விடுங்க. பூவ ஈசானி மூலையில போட்டுடுங்க. இடிபோல வந்த துன்பம் பனிபோல மறஞ்சிடும்” என்று சொல்லிக் காகிதப் பொட்டலத்தை நீட்டினாள். “வாங்குவதா, வேண்டாமா?” குழப்பமாகிவிட்டது.  நான் தயங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த ஜோதி “புடிங்க மாமா” என்று சொல்லி கையில் பொட்டலத்தைத் திணித்துவிட்டாள்.  ஒருகணம் நான் திக்குமுக்காடிப் போனேன்.

“நீ ஒன்னெப் பத்தி எந்த உண்மயயும் சொல்லல” என்று சொல்லி முடிப்பதற்குள் முகத்திலடிப்பது போல “நீங்களும்தான்” என்று சொன்னாள்.

பழனிவேல் அருகில் வந்து நின்றார்.

“வர்றன்” என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்ததும், “கோயிலுக்குப் போய் சாமியப் பாக்க வாண்டாமா?” என்று பழனிவேல் கேட்டார். “தேவயில்ல” என்று சொல்லிவிட்டு, திரும்பி ஜோதி இருந்த இடத்தைப் பார்த்தேன். அவளையும் அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஆட்களையும் மேகம் மறைத்துக்கொண்டிருந்தது தெரிந்தது. ஒருகணம்தான், எங்களையும் மேகம் மறைத்துவிட்டது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger