‘உய் உய்’ ஒலியோடு
அவசர ஊர்தி கடந்து செல்கிறது
நீல, சிவப்பு விளக்குகள் மாறி மாறி எரிகின்றன
சிறுமியாய் இருக்கும்போது
சாவி கொடுத்தால்
இதேபோல விளக்குகள் எரியும்
பொம்மை வண்டி வைத்திருந்தேன்
அது அப்பா வாங்கிக் கொடுத்தது
அவரை அப்படியொரு ஊர்தியில்தான்
அழைத்துச் சென்றார்கள்
வீட்டிற்கு விளையாட பெரிய வண்டி
வந்திருப்பதாகத்தான் அதை நினைத்தேன்
அந்த நீல, சிவப்பு ஒளியில்
எங்கள் வீடு அழகாகத் தோன்றியது
வண்டியின் சத்தம்
தூங்கிக்கொண்டிருப்பவர்களை எழுப்பியது
எல்லோரும் எங்கள் வீட்டைப் பார்த்தார்கள்
அந்த கவனிப்பு எனக்குப் பிடித்திருந்தது
இதை நான் பார்த்ததே இல்லை
என அக்காவிடம் சொன்னேன்
அவள் தலையாட்டினாள்
பிறகு அவள், அப்பா அந்தப் பெரிய வண்டியோடு
விளையாடச் சென்றுவிட்டதாகச் சொன்னாள்
இப்போது என்னோடிருக்கிற ஒரே துணை
அதன் நீல, சிவப்பு ஒளி மட்டும்தான்.