இந்திய மரபு வலிமையான குடும்ப அமைப்பைக் கொண்டது. இம்மரபு உருவாக்கி வைத்திருக்கும் கட்டுப்பாடுகள் பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. மரபு ஆண்களுக்கு நெகிழ்ச்சியானதாகவும் பெண்களுக்கு இறுக்கமானதாகவும் இருக்கிறது. அந்த இறுக்கத்திலிருந்து வெளியேற பெண்கள் தொடர்ந்து முயன்றுகொண்டே இருக்கிறார்கள்; ஏனெனில், விரும்பிய ஆடவனைத் தெரிவுசெய்துகொள்ளும் தொல்சமூகத்தின் தொடர்ச்சி இன்னும் பெண்களிடம் அற்றுப்போய்விடவில்லை. இதனால் மரபின்மீது தங்கள் எதிர்வினைகளைத் தொடர்ந்து பல்வேறு வழிகளில் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இது கலை இலக்கியங்களிலும் பிரதிபலிக்கிறது. அப்படியோர் எதிர்வினையாகத்தான் சி.மோகன் எழுதியுள்ள ‘கமலி’ நாவலையும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
மரபான குடும்பத்தில் பிறந்தவள் கமலி; முதுகலை படித்தவள். ஒத்த தன்மையுள்ள பிரிதொரு குடும்பத்தில் வாழ்க்கைப்படுகிறாள். அன்பான கணவன்; ஆனாலும், கணவனுடனான பதினான்கு வருட வாழ்க்கைக்குப் பிறகு வேறோர் ஆணுடன் காதல் கொள்கிறாள். கணவனுடன் வாழ்ந்துகொண்டே யாருக்கும் தெரியாமல் காதலனுடன் கூடி ஒரு குழந்தையையும் பெற்றுக்கொள்ள முயல்கிறாள். இதுதான் ‘கமலி’ நாவலின் மையம். இந்த மீறலுக்காகக் கமலி தனக்குத்தானே சில தர்க்கங்களை உருவாக்கிக்கொள்கிறாள். இந்தத் தர்க்கங்களின் மீதுதான் வாசிப்பை நிகழ்த்தவும் சில விமர்சனங்களை முன்வைக்கவும் வேண்டியிருக்கிறது. கமலி, கணவன் ரகுவரன், காதலன் கண்ணன் ஆகிய மூன்று கதாபாத்திரங்களைச் சுற்றியேதான் கதை நிகழ்கிறது. கமலிக்கும் கண்ணனுக்கும் இடையில் காதல் உருவாக கமலியின் மகளும், கமலியும் கண்ணனும் நெருக்கமாகச் சந்தித்துக்கொள்ள கமலியின் அம்மாவும் புனைவுக்குப் பயன்பட்டுள்ளனர். இப்புனைவுக்கு இரு பிராமணக் குடும்பங்கள் களனாக இருக்கின்றன. எங்கு மரபின் அழுத்தங்கள் அதிகமாக இருக்கிறதோ அங்கே அதனை உடைத்துக்கொண்டு வெளியேறுவதற்கான முயற்சிகளும் அதிகமாக நடக்கும். அவ்வகையில் இப்புனைவும் அதன் பின்னணியிலேயே இயங்குகிறது. தி.ஜானகிராமனும் கு.ப.ராஜகோபாலனும் இக்களனில் அதிகமாக எழுதியிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகவும் ‘கமலி’ நாவலை வைத்து உரையாடலை நிகழ்த்தலாம்.
காதலுக்கும் காமத்துக்கும் இடையிலான மெல்லிய கோட்டினை அழிக்க முயன்றிருக்கிறது என்ற கோணத்திலும் இந்நாவலை வாசிக்கலாம். சங்க இலக்கியத்தில் ‘காதல்’ என்ற சொல்லைவிட ‘காமம்’ என்ற சொல்லே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்று காமம் என்பது ஓர் இடக்கரடக்கல் சொல். அதற்குப் பதிலியாகவே காதல் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது எனலாம். காமத்துக்கு உடலே பிரதானம். அந்த உடலை அடைவதற்கான குறுக்குவழிதான் காதல். இவ்விரண்டிற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் அல்ல, கமலியும் கண்ணனும். ஏனெனில், கமலி தன் முப்பத்தேழாவது வயதில்தான் கண்ணனிடம் காதலைக் கண்டுகொண்டதாகக் கூறுகிறாள். அப்போது கண்ணனுக்கு வயது ஐம்பத்திரண்டு. உண்மையில் இவர்கள் இருவருக்கும் தேவைப்பட்டது உடல்தான். இவர்கள் இருவரது திட்டமிடுதலும் அதனை நோக்கியே நகர்கின்றன. ஆனால், சமூக ஏற்புக்காகக் காதலிப்பதான கற்பிதத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். மேலும், ரகுவுக்குத் தெரியாமல் தங்களது ரகசிய உறவைப் பாதுகாக்க இருவரும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்தாம் முதிர்ச்சியற்றதாக இருக்கின்றன. கமலி கற்ற ஆங்கில இலக்கியமும் கண்ணனிடம் வெளிப்படும் படைப்பூக்கச் செயல்பாடுகளும் புனைவுக்குள் என்னவாகச் செயல்பட்டிருக்கிறது என்பதில்தான் பிரச்சினை இருப்பதாகக் கருதுகிறேன்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then