கழுமரம் வென்ற கண்டன் – சாத்தன் குன்றன்

Image Courtesy: Malangatana Valente Ngwenya

ருள் கவ்விய அந்நேரம் யோசனையில் ஆழ்ந்து உட்கார்ந்திருந்தார் நந்தன் பூசாரி. மங்கிய நிலவுவெளிச்சத்தில் உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த முத்துக்கருப்பி, ‘ஏஞ்சாமி என்னத்துக்கு இத்தென ஓசன, வூட்டுக்குள்ள போய் படுத்தொறங்கு.’ என்றாள். நல்ல உயரம், மாஞ்சிவப்பு, அகன்ற மார்பு, உயர்ந்தோங்கிய புருவங்கள், இரண்டு கைகளிலும் வெள்ளிக்காப்புகள், கருப்பசாமி சிலைமாதிரி இருக்கும் நந்தனின் சோகம் கண்ட நிலவும் தூங்கச் செல்லமுடியாமல் நந்தனையே பார்த்துக் கொண்டிருந்தது. ஒருமுடிவிற்கு வந்த நந்தன் திண்ணையிலேயே படுத்துக்கொண்டார். மறுபடியும் முத்துக்கருப்பி, ‘ஏஞ்சாமி, வூட்டுக்குள்ள போயறங்கு’ என்றாள். நந்தன் திண்ணையிலிருந்து எழுந்தார். நிலைப்படி தலைதட்டாமல் குனிந்து வீட்டிற்குள் போய்ப் படுத்துக்கொண்டார். மூக்குமுழி பொருந்தி, பார்த்தவர்கள் கண்டவுடன் முகத்தைக் கடன்கேட்கும் முகவெட்டு, உடற்கட்டுப் பொருந்தி அம்மன் சிலைபோல் இருக்கும் முத்துக்கருப்பியும் திண்ணையிலிருந்து எழுந்து உள்ளே போய்ப் படுத்துக்கொண்டாள். எல்லோரும் தூங்கியதற்கு அடையாளமாக நந்தன் வீட்டைச் சுற்றியிருந்த பத்து வீடுகளும் அரவமற்றுக் கிடந்தன.

அங்கும் இங்கும் புரண்ட நந்தனுக்குத் தூக்கம் வரவில்லை. அருகில் படுத்துக்கிடந்த முத்துக்கருப்பி தூங்கிப்போனாள். கண்கள் சொக்கி நின்றாலும் நாளை ஆவணி மாதம் பிறப்பதை நினைத்து நந்தனுக்கு நெஞ்சு பதைபதைத்துக்கொண்டிருந்தது. ‘இந்த நாகப்புறஞ்சேரியில எங்கம்பளத்துப் பேய்களா, ஆண்டாண்டு காலமா பாறையில வெட்டவெளியா கெடக்கும் கழுவனுக்கு என் வீட்டு ஆண்வாரிசுகளக் கழுவுல ஏத்திப் பலிகொடுத்து வாறேன். எங்கொலத்துல இன்னக்கி ஆண் வாரிசே இல்ல. இப்புடியே போனா எங்கொலமே அழிஞ்சு போயிடும்மே’ என்று மனதிற்குள் நினைத்தபோது நந்தனின் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வடிந்தது. அப்படியே அழுதுகொண்டு படுத்தவர் பெருமூச்சுவிட்டுத் தூங்கிவிட்டார்.

நடுச்சாமப் பொழுதிருக்கும், ‘டேய், இத்தன காலமா ஆண்புள்ளைகள கழுவேத்தின ஒங்கொலத்துல பெண்புள்ளைக நெறஞ்சு கெடக்கு. இனி ஆண்புள்ளக் கழுவேத்தம் நிக்கணுமுன்னா வடக்குப் போய் வள்ளுவப்பறயனப் பாரு. அங்க வந்து நல்லசேதி சொல்றேன்.’ என்று வீட்டின் வாசல்படியில் நின்று கூறிய முனியின் பின்னால் அக்கினிச் சுவாலைகள் படர்ந்து எரிந்துகொண்டிருந்தன. கனவிலிருந்து பயந்து மெய்சிலிர்த்து எழுந்து உட்கார்ந்தார் நந்தன். முத்துக்கருப்பியும் பயந்து தூக்கம் கலைந்து எழுந்தாள். ‘எஞ்சாமி, எஞ்சாமி’ என்று படபடத்துக் கதறினாள். நந்தன் முகம் முத்துக்கருப்பிக்கும் முத்துக்கருப்பியின் முகம் நந்தனுக்கும் தெரியாத அளவில் வீட்டிற்குள் இருள் படர்ந்து கிடந்தது. நந்தனின் குரல் மட்டும் ஒலித்தது. ‘ஒன்னுமில்ல தாயே, கனவுல அக்கினி வீரன் வந்தான். வீட்டு வாசமின்னாடி நின்னு ‘ஒங்கொலத்து ஆண் வாரிசுகளக் கழுவேத்தாம இருக்க வடக்கிருக்கும் வள்ளுவப்பறயன்கிட்ட போன்னு சொல்றான். மீதித் தாக்கல் சொல்றதுக்கு மின்னாடி சொப்பணம் கலஞ்சு எந்துருச்சுட்டேன்.’ என்றார். முத்துக்கருப்பி, ‘அக்கினி வீரா வந்துட்டியா, விடியப் பொழுது எங்கொலங் காக்க வந்துட்டியா. வள்ளுவங்கிட்ட நல்லசேதி சொல்லு சாமி’ என்று இரண்டு கைகளையும் மேலே தூக்கிக் கும்பிட்டாள். நந்தனும் முத்துக்கருப்பியும் கனவு குறித்துப் பலவிதமான யோசனைக்குள் போனார்கள். நாகப்புறஞ்சேரியில் ஆண் குழந்தைகள் பிறக்காமல் போனதால், ஆண்டுக்கொரு பிள்ளையெனத் தங்களது ஆண்குழந்தைகள் ஐந்து பேரையும் கழுவேற்றிப் பலிகொடுத்ததையும் அதனால் ஆண் வாரிசு இல்லாமல் போனதையும் நினைத்துப் பார்த்தார்கள். முத்துக்கருப்பி அழுது ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாள். அவளின் அழுகைச் சத்தத்தில் இருளின் தூக்கம் கலைய, அதிகாலைப் பொழுது நாகப்புறஞ் சேரிக்குள் நுழைந்தது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!