கண்ணகி நகர் கார்த்திகா! இந்தப் பெயரை உச்சரிக்காதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது எனலாம். பஹ்ரைனில் நடைபெற்ற ஏசியன் யூத் கேம்ஸ் மகளிர் பிரிவு கபடி போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. அதில் ஒரு முக்கியமான வீரர் கார்த்திகா. அவர் தங்கப்பதக்கம் பெற்றதால் தமிழ்நாடே கொண்டாடிக்கொண்டிருக்கிறது. அவருடைய பின்னணி மிக எளிமையானது. சென்னை விரிவாக்கத்தின்போது, நகருக்குள் இருந்த எளிய பூர்வக் குடி மக்களை வெளியேற்றியது அரசு இயந்திரம். இவர்கள் புறநகர் பகுதிகளான கண்ணகி நகர், செம்மஞ்சேரியில் வலுக்கட்டாயமாகக் குடியமர்த்தப்பட்டனர். இங்கிருந்துதான் பல இடர்களை வென்று வாகை சூடியிருக்கிறார் கார்த்திகா.
கார்த்திகாவின் படிப்பு, பெற்றோர்களின் வேலை யாவும் சென்னை மையப்பகுதியில் இருந்தன. இந்த வெளியேற்றத்தினால் பல மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. பெரியவர்கள் வேலைக்காக பல மணி நேரம் பயணம் செய்யும் சூழலுக்குத் தள்ளப்பட்டார்கள். இது அவர்களுக்குக் கடும் மனநெருக்கடியை உருவாக்கியது. இதைத் தன்னுடைய முயற்சியாலும் பயிற்சியாளரின் வழிகாட்டுதலாலும் கடந்திருக்கிறார் கார்த்திகா. விளையாட்டில் மட்டுமல்ல பிறரிடம் பழகுவதிலும் வாழ்க்கையை அணுகுவதிலும் மிகுந்த முதிர்ச்சியுடையவர். இதற்கு மிக அடிப்படையான காரணம் அவரின் பயிற்சியாளர் ராஜ். விளையாட்டை மட்டுமல்ல சமூக நீதியையும் கற்றுக்கொடுத்திருக்கிறார். கண்ணகி நகர் என்றால் அழுக்கு, திருட்டு, ஒழுங்கீனம் எனும் சித்திரமே பெறப்படுகிறது.
இது குறித்து பயிற்சியாளர் ராஜ் கூறும்போது, “இங்கு நடைபெறும் குற்றச் சம்பவங்களின் விகிதாச்சாரம் குறைவுதான். எல்லா இடங்களிலும் நிகழ்வதுபோல் இங்கும் குற்றம் நடக்கத்தான் செய்கிறது. அதை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால், இங்குள்ளவர்கள் எல்லோரும் குற்றம் செய்பவர்கள் போலவும் இங்குதான் குற்றம் அதிகம் நிகழ்வதுபோலவும் கட்டமைப்பது மிக மோசமானது. இத்தோடு சாதி, வர்க்கம், பொதுபுத்தி இவற்றை எல்லாம் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது” என்றார். இதற்காகத் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார் பயிற்சியாளர் ராஜ். அதன் விளைவுதான் கார்த்திகாவும் அவர் பெற்ற நிராகரிக்க முடியாத வெற்றியும்.
கார்த்திகா ஒரு ரைட் ரைடர். அதாவது தன்னுடைய வலது கையைப் பயன்படுத்தி ஆடுவார். ஆடுகளத்தில் பாடிச் செல்லும்போது இடப் பக்கமாக முன்னேறி எதிரணி வீரர்களை வீழத்துவார். இது அவருடைய தனித்திறன் எனலாம். அவரை எளிதாகப் பிடிக்க முடியாது. எதிரணியிடம் காலைக் கொடுக்க மாட்டார். துள்ளி குதித்து எதிரணியை மிரட்டுவார். களத்தில் நடுக்கோட்டுக்குப் பக்கத்தில் குதித்து ஒரு கையை மேலே உயர்த்தி சந்தோஷத்தை வெளிப்படுத்துவது அவருடைய தனி ஸ்டைல்.
அவருடைய ஆட்டத்தை விரும்பாத கபடி ரசிகர்கள் இருக்க முடியாது. நான் புரோ கபடி வர்ணனைக்காக மும்பைக்குக் கடந்த இரண்டு வருடங்களாகச் சென்று வருகிறேன். ஒரு நாள் ஹோட்டலில் இருக்கும் நீச்சல் குளமருகே அமர்ந்து படித்துக்கொண்டிருந்தேன். அங்கு ஒருவர் பார்ப்பதற்குத் தமிழர்போல இருந்தார். அவர் உணவக ஜன்னலைச் சுத்தப்படுத்தும் தொழிலாளி; மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியைச் சேர்ந்தவர். “சார் ஒரு யூடியூப் சானலில் கார்த்திகாவை நீங்கள் நேர்காணல் செய்ததைப் பார்த்திருக்கிறேன்” என்று இந்தியில் சொன்னார். தமிழ்நாட்டைப் போன்று மகாராஷ்டிராவிலும் கபடி விளையாட்டு பிரசத்தி பெற்றது. அவர் கபடியை விரும்பிப் பார்ப்பவர் என்றும் கார்த்திகா மட்டுமின்றி கண்ணகி நகர் கபடி கிளப்பின் மிகப் பெரிய விசிறி என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டார். கபடி மேட்ச்கள் மட்டுமின்றி கபடி வீரர்களின் நேர்காணல்களைப் பார்ப்பதாகவும் இந்தியில் மட்டுமின்றி ஆங்கிலத் துணைத் தலைப்புகளின் (Subtitle) உதவியோடு பிற மொழி கபடி யூடியூப் காணொளிகளைக் காண்பதாகவும் தெரிவித்தார். கண்ணகி நகர் வீரர்களின் விளையாட்டு குறித்தும் கார்த்திகா, சுஜி, கார்த்திகாவின் தங்கை காவ்யா உள்ளிட்டோருடைய திறன்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டார். கண்ணகி நகர் கபடிக் குழு விளையாடிய அனைத்துப் போட்டிகளின் தகவல்களையும் தெரிந்து வைத்துள்ளார். கபடியின் மீதும் கண்ணகி நகர் வீரர்கள் மீதும் அவர் கொண்டுள்ள அன்பு, மதிப்பு என்னை வியக்க வைத்தது. தமிழில் பார்த்த ஒரு நேர்காணலைக் கொண்டு என்னைக் கண்டுகொண்டது எனக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது. அவருடன் பேசியது குறித்து அவருடை புகைப்படத்தோடு என்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தேன்.
பயிற்சியாளர் ராஜ் உடன் கார்த்திகா
கும்மிடிப்பூண்டியிலிருந்து கன்னியாகுமரி வரை கண்ணகி நகர் கபடி விளையாட்டு வீரர்களான கார்த்திகா, சுஜி, ஜெசி, காவ்யா, பயிற்சியாளர் ராஜ் ஆகியோரைப் பலர் தெரிந்து வைத்துள்ளனர். அந்தளவுக்கு அவர்களுடைய பிரபல்யம் இருந்தது. இது மிக முக்கியமான சாதனை. ராஜ் அவர்களின் நோக்கம் சமூகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். கபடி என்பது விளையாட்டு கிடையாது. சமூக மாற்றத்திற்கான ஆயுதம் என்று நம்புகிறார். மாற்றம் ஏற்பட வேண்டுமென்பதில் குறியாக இருக்கிறார். விளையாட்டைப் பயன்படுத்தி கண்ணகி நகர் மீதிருக்கும் கெட்ட பெயரைத் துடைக்க வேண்டும் என்பார். “நாங்க ஓர் அடையாளமாகணும். எங்க மேல இருக்குற கெட்டப் பேர மாத்தணும்”என்று கார்த்திகா கூறுவார். பஹ்ரைனிலிருந்து வந்த பிறகு “கண்ணகி நகர் என்று பெருமையாகச் சொல்வேன். எல்லோருமே பெருமையாகச் சொல்லணும்” என்றார். இதுதான் என் அடையாளம். இதுதான் என் அரசியல் என்று 17 வயது பெண் சொல்வது முக்கியமானது. இதற்குக் காரணம் பயிற்சியாளர் ராஜ். அவர்தான், சமூக நீதி, சமத்துவம், சமூகத்தில் மாற்றம் உண்டாக வேண்டும் என்கிற பாடத்தைக் கற்றுக்கொடுத்தவர்; மிகச் சிறந்த தலைமை குணம் மிக்கவர். ஒரு விஷயத்தை நுட்பமாகப் பார்க்கக்கூடியவர். ஏன் பூர்வக்குடி மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்; ஏன் அவர்களுக்கு இந்த அவப்பெயர் என்பது குறித்து யோசித்துக்கொண்டே இருப்பார்.
கார்த்திகா மிகச் சிறந்த திறமைசாளி. ஏசியன் யூத் கேம்ஸ் என்பது ஒரு தொடக்கம்தான். அடுத்த வருடம் 18 வயதாகும்போது ஏசியன் கேம்ஸில் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம். அதிலும் தங்கம் பெற வேண்டும். அப்போதுதான் சீனியர் லெவலில் பெரிய சாதனை பெற முடியும். அர்ஜுனா விருதைப் பெற வேண்டும். எதிர்காலத்தில் காமன்வெல்த் போட்டியில் கபடி நுழைவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கு அவர் தயாராக இருக்க வேண்டும். ஒலிம்பிக்கில் கபடி சேர்க்கப்பட்டால் அதிலும் கார்த்திகா தன்னுடைய திறனை வெளிப்படுத்த வேண்டும். சமூக ஊடகத்தில் வெகுவாகக் கொண்டாடப்படுகிறார். அது தவிர்க்க முடியாதது. அவர் ஒரு ராக் ஸ்டார். தன்னுடைய இலக்கை அவர் மறந்துவிடக்கூடாது. அதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டும். உடல் நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும். சீனியர் மேட்ச் ஆடும்போது மிகக் கடுமையான சவாலை எதிர்கொள்ள நேரிடும். ஹரியானா, இமாச்சல் உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பான கபடி வீரர்கள் உள்ளனர். கார்த்திகாவை அழுத்த அவர்கள் முயலலாம். இதற்காக கார்த்திகா ஒவ்வொரு நாளும் மிகக் கடுமையாகப் பயிற்சி செய்ய வேண்டும். local level tournament, khelo india games, national junior championship, chief minister trophy உள்ளிட்ட போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளார். இன்னும் அடுத்த கட்டத்திற்கு அவர் முன்னேற வேண்டும். இதைப் பயிற்சியாளர் ராஜ் அவர்களும் அறிவுறுத்துவார். இந்திய அணியின் கபடி பயிற்சியாளர் மம்தா புஜாரியிடம் (mamta pujari) நான் பேசும்போது “கார்த்திகாவுக்கு திறமை, உடற்திறன், அர்ப்பணிப்பு இருக்கிறது. இது மாதிரியான திறமைகள் வேறு யாருக்கும் இருக்காது” என்று அவர் சொன்னார். கார்த்திகாவை நாம் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்னும் சாதிப்பதற்கான உத்வேகத்தை நாம் கொடுக்க வேண்டுமே தவிர, இதுபோதும் என்ற எண்ணத்தை அவருக்கு ஏற்படுத்திவிடக் கூடாது, ஏனென்றால் இந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகள் என்பது சிறிய அளவிலான போட்டியே. இப்போட்டிகள் மிகவும் கடுமையானவை இல்லை. இந்தப் போட்டிகளை விட, குறிப்பாக கார்த்திகா இந்த வருட தொடக்கத்தில் ஃபெடரேஷன் கோப்பை போட்டி ஒன்றிற்குச் சென்றார், அது சீனியர்களுக்கான போட்டி.
பதினேழு வயதான கார்த்திகா அந்தப் போட்டிகளில் விளையாடி ரயில்வே அணிக்கு எதிராக வெற்றிபெற்று தமிழ்நாட்டிற்கு முதன்முறையாக வெண்கல பதக்கம் வாங்கிக் கொடுத்தார். அது பெரிய சாதனை. ஏனென்றால் சீனியர் அளவில் விளையாடி வெல்வது கடினம். அந்த அணியை வரவேற்க நான் சென்றிருந்தேன். அப்போது சுஜியையும், கார்த்திகாவையும் நேர்காணல் செய்தேன். இப்போட்டிகளில் நன்றாக விளையாடியதற்கு கார்த்திகா காரணம் ஒன்று சொன்னார். “என்னுடன் விளையாடக் கூடிய அக்காக்களுக்கு சலுகைகள் (norms) இல்லை. ஃபெடரேஷன் கோப்பை, தேசிய போட்டிகள் போன்றவற்றில் வென்றால் மட்டுமே சலுகைகள் கிடைக்கும். அதன் மூலமாக ரயில்வே, வங்கி போன்ற அரசு வேலை கிடைக்கும். தமிழ்நாடு மகளிர் அணி தொடர்ந்து ஜெயிக்காததால் அவர்களுக்குச் சலுகைகள் தரப்படவில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த அக்காக்களுடைய வருத்தங்களைப் போக்குவதற்காக நான் விளையாடினேன்” என்று சொன்னார். அதைக் கேட்டதும் எனக்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது. சுஜியையும் கார்த்திகாவையும் அனைத்து போட்டிகளிலும் ஆட வைக்கவில்லை. முக்கியமான போட்டிகளில் கூட இரண்டாம் கட்ட ஆட்டத்தில்தான் இறக்கிவிட்டார்கள். தன்னைவிட அனுபவம் வாய்ந்த வீரர்களும் அணியில் இருப்பதைப் புரிந்துகொண்டு விளையாடினேன் என்றார். அந்த வெற்றியையும் நாம் கொண்டாடியிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதே கடினம். கபடியில் ஆடவர், மகளிர் பிரிவில் ஹரியானாதான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தலைசிறந்த ஆட்டக்காரர்கள் அங்கு இருக்கிறார்கள் என்பதால் தமிழ்நாட்டவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம். அந்த வகையில் கார்த்திகா ஆசியப் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெற்று வெற்றிபெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. அடுத்தடுத்தப் போட்டிகளிலும் இடம்பெற்று பல சாதனைகளைக் கார்த்திகா செய்ய வேண்டும். கார்த்திகாவின் இலக்கு என்றுமே உயரத்தில் இருக்க வேண்டும். அவர் சாதாரண போட்டியாளர் இல்லை. இன்னும் நிறைய சாதிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கண்ணகி நகர் போன்று விளிம்புநிலையில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் நிறைந்த பகுதியையும், ஏன் கார்த்திகாவின் பள்ளியைக் கூட தமிழக அரசு தத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கண்ணகி நகர் பகுதியில் கபடிக்கான உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும். கார்த்திகாவிற்குக் கொடுத்த உதவித்தொகையைத் தாண்டி இன்னும் சில நல்ல விசயங்களைத் தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்தால் நன்றாக இருக்கும். கார்த்திகாவிற்குச் செய்வதென்பது தமிழகத்திலுள்ள அனைத்து அடித்தட்டு மக்களுக்கும் செய்வது போன்றது.





