கறுப்பிலக்கியக் கவிதைகள்

- கைசர் இன்யட்சும்பா,டோஸ்ட் கோட்ஸர்,விக்டர் உக்வ்,எஜியோபர் உக்வ்,டெரென்ஸ் ஹேய்ஸ்,ட்ரேஸி கே.ஸ்மித்,ஜெரிக்கோ ப்ரௌன்,க்ளாடியா ரான்கீன் | தமிழில் : எஸ்.ஜே.சிவசங்கர்,அனுராதா ஆனந்த்

கைசர் இன்யட்சும்பா
( Kaizer Nyatsumba )
(தென்னாப்பிரிக்கா)

தென்னாப்பிரிக்காவின் முக்கிய இளம் எழுத்தாளர்களில் ஒருவர். இதுவரை சிறுகதைகளும் கவிதைகளுமாக ஏழு புத்தகங்களைத் தந்திருக்கிறார். When Darkness Falls (கவிதைகள்), UMLOZI (சூலு கவிதைகள்), A Vision of Paradise (சிறுகதைகள் ), In Love With A Stranger (சிறுகதைகள்), ALL SIDES OF THE STORY: A Grandstand View of South Africa’s Political Transition, Silhouettes (கவிதைகள்).இவரது ஏழாவது புத்தகம் , Incomplete Without My Brother, Adonis, 2014இல் வெளியானது .

சொற்கள்
தமிழில் : எஸ்.ஜே.சிவசங்கர்

தன்னளவில்
அவை மலைமுகட்டில்
காணாமல் போன மறிகளை
ஒத்திருக்கும்
அர்த்தமின்றி
முக்கியத்துவமின்றி
எளிதில் வடுவேற்கவும்
அவற்றைப் பத்திரமாகக் காத்துக்கொள்
அவற்றைக் கவனமாக ஒன்று சேர்
அவற்றை ஒப்பனை செய்
அவற்றை சுதி சேர்
ஒன்றாக்கு
அவை இனி ஒன்றாகப் பாடும்
சொற்கள் நம் உடல்களைப் போல
வெறுமையாய் இருக்கும் அல்லது கந்தலாடை அணிந்திருக்கும்
அவை முட்களைவிட கூர்மையாய்க் குத்தும்
வெறுப்பூறிய எஜமானியின் நாக்கைப் போல்
அதை உதிர்ப்பவரை அவமானப்படுத்தும்
ஆனால் நல்லாடைகளால் போர்த்தப்பட்டால்
அவை சீழ்பீடித்த புண்களைச் சுகமாக்கும்
உடைந்த இதயங்களை ஒட்டவைக்கும்
சாம்பிராணியைவிட வாசனை அடிக்கும்
கிளர்ந்தெழும் இடத்துக்குப் பெருமை சேர்க்கும்
ஆகவே என் சகோதரா

அவற்றை அழகாக அலங்கரி
அவற்றை ரசனையோடு துடைத்துப் பொட்டலமாக்கு
மென்மையாகத் தெரிந்தெடுத்து இணைத்துவிடு
சிறப்பாகத் தேர்ந்த சொற்கள்
வைரங்களை விட விலை மதிப்பில்லாதவை சகோதரனே

டோஸ்ட் கோட்ஸர்
(Toast Coetzer)
(தென்னாப்பிரிக்கா)

1977 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் க்ராடோக்கில் பிறந்தார். 1998 ஆம் ஆண்டு முதல் ஏழு இருமொழி ஆல்பங்களை வெளியிட்டுள்ள இசைக்குழுக்களின் பாடலாசிரியரும் தலைவருமான இவர், இவரது கவிதைகளும் சிறுகதைகளும் ஆங்கிலம் , ஆப்பிரிக்க மொழிகளில் பல்வேறு தென்னாப்பிரிக்கத் தொகுதிகளில் வெளியிடப்பட்டுள்ளன. கோட்ஸர் ஆப்பிரிக்கன் மொழியில் 2009-இல் ஒரு நாவலையும் இரண்டு பயணப் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். ஆப்பிரிக்காவில் பரவலாகப் பயணம் செய்துள்ள இவர் கோ / வெக் பயண இதழ்களில் எழுத்தாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் பணியாற்றி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் கேப்டவுனிலிருந்து நேரடியாக ஒளிபரப்பப்படும் புஷ் ரேடியோ 89.5 எஃப்.எம்மில் The Unhappy Hour நிகழ்வையும் வழங்குகிறார். கவிதை, சிறுகதைகள், கார்ட்டூன்கள் புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிடும் ஒன்ஸ் கிளைன்ட்ஜி என்ற வருடாந்திர இதழின் இணை ஆசிரியராக உள்ளார்.

அனீன் பூய்சென்
தமிழில் : எஸ்.ஜே.சிவசங்கர்

ப்ரெடாஸ்டார்பில்
காற்று இறந்துவிட்டது
அது சனிக்கிழமை மாலை
பத்து மணி
பதினேழு வயது
அனீன் பூய்சென்
இறந்துவிட்டாள்
அவள் ஒரு கட்சியால் கவரப்பட்டிருந்தாள்
அவள் வெளிச்சத்திலிருந்து வழி நடத்தப்பட்டாள்
இருண்ட போர்வையில் மூடப்பட்டிருக்கும்
புரிந்துகொள்ளப்படாத
நான்கு ஆண்கள் அவளைப் பாலியல் பலாத்காரம் செய்தனர்
அவள் எலும்புகளை உடைத்து
அவள் விரல்களை உடைத்து
அவள் விரல்கள் அனைத்தையும் உடைத்து
பின்னர் அவர்கள் அவளைக் கொன்றார்கள்
அவளது குடல்களை வெளியே உருவி
அதை மணல் மீது வீசினர்
ஔ முயிலே தெருவுக்குப் பக்கத்தில்
ஒரு கட்டுமானத் தளத்தில் ஒரு துப்புரவாளராக
அவள் வேலை செய்த இடம்
அவள் உயிருடன் இருந்த வாரத்தில்
அவள் கறுப்பு வெட்டுக்கிளிகள் அணிந்திருந்தாள்
சுவாசித்தாள்
உயிரோடிருந்தாள்
பாதுகாப்புக் காவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டு
ப்ரெடாஸ்டார்பில்
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள்
அவளை வளர்த்த தாய்
அவளது சொந்தத் தாய் அல்ல
அனீன் தாகமுள்ள உதடுகளுக்கு ஒரு பனிக்கட்டியைத் வேண்டாமெனத் தடுக்க அனுமதிக்கப்பட்டாள்
சோர்வாக இருந்ததை, தூங்க விரும்பியதை அறிந்தாள்
அனீன் வொர்செஸ்டருக்கு மாற்றப்பட்டாள்
பின்னர் டைகர்பெர்க்குக்கு
அவசர அறுவை சிகிச்சைக்கு
இறப்பதற்கு
அவள் அந்தக் கோழைகளில் ஒருவனை அறிந்திருந்தாள்
கொலைகாரர்கள்
வன்புணர்ச்சியாளர்கள்
ஆண்கள்
இல்லை- சந்தேக நபர்களில் ஒருவர்
ஒரு பெண் – அவள்
இறப்பதற்கு முன்பு அவனது பெயரைக் கூறினாள்
அவளது முன்னாள் காதலனாக அவன் இருந்திருக்கலாம்

அவளுடன் வளர்ந்த யாரோ ஒருவராக இருக்கலாம்
அதே தெருவில்
டியூன் தெருவில்
அவளது வீட்டில்
குடும்ப உறுப்பினர் போன்றவர்

அதைச் சொல்கையில்
அவரது பெயரைச் சொல்கையில்
எப்படி உணர முடிந்தது?

ப்ரெடாஸ்டார்பில் காற்று இறந்துவிட்டது.
உலர்ந்த நாணல்களில் அமைதியாக
நாங்கள் உட்கார எஞ்சியுள்ளோம் எரிந்தபடி.

விக்டர் உக்வ்
(நைஜீரியா)
நைஜீரியாவின் ஒனிட்ஷாவில் பிறந்தவர். Ebedi Review, ANA Review, Praxis, Dwartonline, The Kalahari Review போன்ற இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. RHYTHMS என்கிற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்.

எளிதில் உடையக்கூடிய
தமிழில் : எஸ்.ஜே.சிவசங்கர்

உடல்களில் கடிகாரங்கள் எப்படி வேலை செய்கின்றன
என்று எனக்குப் புரிகிறது
என்
சகோதரி
சவரக்கத்தியால் அவள் தொடையைக் கிழிப்பாள்
பிறகு அதனுள்ளே ஆரஞ்சுச் சாற்றை ஊற்றுவாள்
நான் அவை குணமடைவதைப்
பார்க்க விரும்புவேன்
அவள் மீண்டும் வெட்டுவதையும்
என் வீட்டில்,
நாங்கள் விரும்பிய பொருட்களை வீசியெறிந்திருந்தோம்
என் அம்மா அவரது இடது காலை வீசியிருந்தார்.
என் தந்தையின் உடல் எளிமையானது,
அதற்கு ஒரு குறை இருந்தது என்னுடலைப் போலில்லை அது
என் உடல் தண்ணீரில் அடித்துச் செல்லத் தோதானது
தேவதூதர்கள் என்பவர்கள்
பிரகாசமான பழுப்பு நிறத்தில் இருக்கும்
ஊதிபெருக்கபட்ட உடைந்த
சுயங்கள்
என்றார் அவர் ஒரு முறை

எஜியோபர் உக்வ்
(நைஜீரியா)
நைஜீரியாவின் இன்சுக்காவில் இருந்து எழுதிவருபவர். The Book of God என்கிற சிறு கவிதை குறுந்தொகுப்பு வெளியாகியுள்ளது. Guernica, African American Review, Drumtide Magazine, The New Black Magazine, ELSEWHERE Lit, Cordite Poetry Review, Sentinel Nigeria, The Kalahari Review, The Muse போன்ற இதழ்களிலும் இணையதளங்களிலும் இவரது கவிதைகளும் சிறு புனைவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இறந்த உடல்களின் ’கலைஞர்
தமிழில் : எஸ்.ஜே.சிவசங்கர்

எஜியோபர் உக்வ் (அலெப்போவிற்கு)
ஒகோடோ இறந்த உடல்களை வரைகிறார்,
அவை இப்போது அவருடைய காட்சிக்கூடம் முழுதும்:
அவர் மின்மினிப் பூச்சிகளின் நுரையீரலைப் பயன்படுத்துகிறார்,
அந்துப்பூச்சிகளால் அரிக்கப்பட்ட வல்லூறின் வழுக்கை மண்டை ஓட்டைப் பயன்படுத்துகிறார்
கைவிடப்பட்ட, வெளியேற்றப்பட்ட மூளை நரம்புகளின் வலைப்பின்னலுக்கு இடமளிக்க
அவர் தனது கித்தானில் ஒரு பெரிய வெற்றிடத்தை விட்டு விடுகிறார்
கிரானைட்டில் வேலை முடிந்த பிறகு,
அவர் அதைக் கையிலேந்தி குலுக்கி அவரது உடலின் வலிப்பு நோவு குணமாக
எப்போதும் செய்வது போல் கண்ணீர் சிந்துகிறார்
கடந்த ஈஸ்டர் முதல் – அவரது மூளையின் உள்ளே உள்ள
நூறு வயதுக்கு மேற்பட்ட ஆமையை அவர் அவிழ்த்து விடுகிறார்
மிருகக்காட்சி சாலை சைவ உணவு உண்பவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதால்;
மீண்டும் அவர் வரைவதன் பொருட்டு வயதான ஆமை அதன் கன்னங்களில் கண்ணீர்ச் சரங்களை விட்டுவைத்திருக்கிறது.
அவற்றின் மீது பொறிக்கப்பட்ட பெயர்களை நீக்கிவிட்டு,
அலெப்போவில் பயன்படுத்தப்பட்ட அனைத்துத் தோட்டாக்களையும் சேகரித்தார்
பெயர்கள் எளிதில் தீப்பற்றக்கூடியவை
அவரது தூரிகையிலிருந்து நெருப்பைக் கவர்ந்துவிடுகிறது,
அவர் எரிந்த பெயர்களின் சாம்பலைக் கிளறி
ஆமை அவரது மனதில் சிந்திய கண்ணீர் சரங்களைச் சிறப்பாக வண்ணம் துலக்கப் பயன்படுத்துகிறார்
ஆமை, கழுகு, மின்மினிப் பூச்சிகள்
இப்போது ஒரே உடலில் சேர்ந்திருக்கின்றன. அவரது பெயர் சொல்ல
கழிவுப்பொருள் சேகரிப்பவர் அவரது வலி நிவாரணிகளுக்கும் அவரது பிற பாவங்களுக்கும் செலவழிக்கிறார்
அவர் வலிப்புத் தாக்குதல்களுக்கு அளவுக்கதிகமாகத் தடுப்பூசி போடுகிறார்.
இப்போது அவர் கலந்து கொண்ட கூட்டமாகப் புதைக்கப்பட்ட எல்லா ஈமச்சடங்குகளிலிருந்து ஓர் ஓவியம் தீட்ட ஒரு நீண்ட நாளைத் திட்டமிடுகிறார்.

டெரென்ஸ் ஹேய்ஸ்

கொலம்பியாவில் பிறந்தவர். சொனட் என்கிற 14 வரிக் கவிதைகளின் தொகுப்புகள் முதலாகப் பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ஹார்லெம் கலகம் தொடங்கி ( லாங்ஸ்டன் ஹூயூக்ஸ் ) முதல், தற்காலத்தில் எழுதும் டானேஷ் ஸ்மித் வரை தன்னைப் பாதித்த( கறுப்பின) கவிஞர்கள் என்று ஒரு வரிசையை முன்வைக்கிறார். சமகால அமெரிக்க அரசியல், சமூகம், பிரத்யேகமான கறுப்பின வாழ்வியல் முறை, இவற்றைச் சார்ந்த கவிதைகளை எழுதி வரும் முக்கியமான கவிஞர். NYU பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இந்தக் கவிதை அவரது `Muscular Music’ என்ற தொகுப்பில் உள்ளது.

நான் என்ன மாதிரியானவன்
தமிழில்: அனுராதா ஆனந்த்

ஃப்ரெட் சான்ஃபோர்ட்* பன்னிரண்டிற்கு ஒலிபரப்பாக இருக்கிறது
நான் இங்கு பணம் மட்டுமே பெற்றுக்கொள்ளும் ( கடன் அட்டை அல்லாது )
வரிசையில் நின்றுகொண்டிருக்கிறேன்
வெள்ளை இனத்தவரின் ஷாம்பூவான ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ் வாங்குகிறேன்.
நான் என்ன மாதிரியானவன் என்று யாருக்கும் தெரியாது.

என் பெயர் லாமெண்டாக* இருக்கலாம்
ஃப்ரூட் லூப் காலை உணவு விளம்பரத்தில் வரும் டூகன் சாம் நாரையைப் போன்ற
நிறங்களில் உடையணிந்த ஜார்ஜ் கிளின்டன் “நேராக முன்னேறிச் செல்லுங்கள்”
என்று அறிவுறுத்துகிறார்( உங்கள் மூக்கின் வழிப் பயணியுங்கள்)
எனக்கோ மூக்கும் இல்லை, வாயும் இல்லை
எனவே யார் யார் நல்லவர்கள்
யார் யார் கடவுளர்கள்

எது வழக்கத்திற்கு மாறானது என்று என்னிடம் தெளிவாகச் சொல்லிவிடுங்கள்.
மெக்டோனல்ட்ஸில் ஒரு சீஸ் பர்கருக்காக நின்றபோது நான் என்ன
மாதிரியானவன் என்று யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படவில்லை
நான் காதலிக்கும் முற்போக்கானவள்
கோபத்தோடும் எரிச்சலோடும் பில் போட்டுக்கொண்டிருக்கிறாள்.
அவளுக்குப் பின்னால் மெக்டோனல்ட்ஸின் மாறாப் புன்னகையுடைய
கோமாளி ரோனால்டின் படத்தைப் பார்த்து நான் சிரிக்கிறேன்.

நான் கேட்ட, அந்த இழவெடுத்த உருளை வறுவல் எங்கே?
நான் அமெரிக்காவைச் சேர்ந்தவன் இல்லையா?
நான் என் கவிதைகளில் நிகாஸ்(niggaz*) என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை
என் மூதாதையர்கள் புலம்பெயர்ந்தவர்கள் இல்லை
யாராவது தான் பிறந்த நாட்டைவிட்டு வருவார்களா?
இந்த வேலையை முடித்து விட்டு நேராகக் கூடைப்பந்தாடும் எண்ணத்தில்
இருக்கிறேன்
அங்குள்ள நிகாஸ் அனைவரையும் வெற்றி கொள்வேன்
கடவுளே நான் அடுத்த ஜார்டனாகக்* கூட இருக்கலாம்
டோனி மோரிஸன் ஆணா பெண்ணா என்று கூட அவர்களுக்குத் தெரியாது
உலகிலேயே மிகப் பிரபலமான பாடகர் மைக்கேல் ஜாக்ஸன்தான்.
‘மாமா சே மாமா சா மாமா குசா’ என்று ஆப்பிரிக்கப் பழங்குடியினர்
பாடினார்கள்.

விளையாட்டு முடிந்த பின் நானும் ஜோடியும் ‘டைம் பேக்’ (போதை மருந்து)
ஒன்றை வாங்குவோம்
அவன் எப்போதுமே “என்னுடன் வேலை செய்யும் வெள்ளைத் தாயோலிகள்…”
என்றுதான் தன் பேச்சைத் தொடங்குவான்.
பள்ளியில் கால்பந்து விளையாடியவன், அமைதியானவன், நிதானமானவன்.
ஆனால் அவனுக்குக்கூட நான் யார் என்று தெரியாது
அதனால் என்ன…

இன்னும் சிறிது நேரத்தில் சான் ஃபோர்ட் வந்துவிடும்
என்னிடம் பொடுகை நீக்கும் ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ் இருக்கிறது
தொடர்ந்து சீஸ் பர்கர் சாப்பிட்டதால் ஏற்பட்ட பானை வயிறு இருக்கிறது
நைகேயின் விலையுயர்ந்த ஷூக்கள் இருக்கின்றன
MJ யின் த்ரில்லர் சிடி இருக்கிறது
கறுப்பின அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டுவிட்டது
தொலைக்காட்சியே என் அப்பன்
ஃபெரெட், லாமாண்டிடம் சொல்கிறான்
“அட அறிவு கெட்டவனே…”

*ஃபெரெட் லாமண்ட் – கறுப்பினத்தவர்களை மையமாக வைத்த தொலைக்காட்சி தொடரின் கதாபாத்திரங்கள்.
*niggaz நிகாஸ்- ஆப்பரிக்க அமெரிக்கர்களைக் குறிக்கும் இழி சொல்
ஜோர்டன் – பிரபல கறுப்பினக் கூடைப்பந்தாட்ட வீரர்

ட்ரேஸி கே.ஸ்மித்

புலிட்ஸர் பரிசினை வென்றவர். கல்வியாளர். எல்லா வகையிலும் சமத்துவம்
நிறைந்த உலகைக் கற்பனை செய்வதாகவும், அதை நோக்கியே தன் படைப்புகளை முன் வைப்பதாகவும் சொல்லும் இவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இந்தக் கவிதை அவரது ‘Wade in Water‘ என்ற தொகுப்பில் உள்ளது.

அமெரிக்கா உங்களை அன்புடன் வரவேற்கிறது
தமிழில்: அனுராதா ஆனந்த்

எதற்காக இங்கே நீங்கள் அனுப்பப்பட்டிருக்கிறீர்கள்?
யாருடைய அதிகாரத்தின் பெயரில் ?
இங்கிருந்து எதைத் திருடிச் செல்வதாக உள்ளீர்கள்?
எதற்காக இந்த ஆட்டம்?
உங்கள் கறுப்பு உடம்புகள் ஏன் எல்லா வெளிச்சங்களையும்
குடித்து விழுங்கிவிடுகின்றன?
நாங்கள் எதனை, எப்படி உணர வேண்டும் என்று கோருகிறீர்கள்?
நீங்கள் எதையும் திருடியுள்ளீர்களா?
பின் உங்கள் நெஞ்சிற்குள் எது துடித்துக்கொண்டிருக்கிறது?
நீங்கள் மேற்கொண்டுள்ள பணியின் தன்மை எத்தகையது?
ஒப்புதல் வாக்குமூலம் தர யத்தனிக்கிறீர்களா?
எங்களால் தீங்கிழைக்கப்பட்டவர்களுக்கும் உங்களுக்கும் என்ன
தொடர்பு?
பின் எதற்காக இந்தப் பயம்?
கைகளை உயரத் தூக்கி, கண்களை விரியத் திறந்து,பேசாப் பேய்கள்
போல, எதற்கு எங்களுடைய இரவினுள் படையெடுத்தீர்கள்?
உங்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா?
இது புதிர் நிறைந்ததொரு தேர்வு போன்றதா?
இதில் நாங்கள் தோல்வியுற்றால் என்ன செய்வது?
யாரிடம், எப்படி மேல் முறையீடு செய்வது?

ஜெரிக்கோ ப்ரௌன்

இவரது இயற்பெயர் நெல்சன் டிமெரி 3. அமெரிக்காவின் லூயீசியானா மாகாணத்தில் பிறந்தவர். தன்னுடைய The Tradition என்ற கவிதைத் தொகுப்பிற்காக 2019 ஆம் ஆண்டு புலிட்ஸர் பரிசு பெற்றவர். இமோரி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று அங்கேயே பணிபுரிகிறார். இந்தக் கவிதை அவரது ‘The New Testament‘ என்ற தொகுப்பில் உள்ளது.

சலசலப்பு
தமிழில்: அனுராதா ஆனந்த்

அசைய பயந்து, பாறைகளைப் போலக்கிடக்கிறார்கள்.
சிறைச்சாலையில், தூங்கும் போது கூட எல்லோரும்
காதுகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள்.
ட்வேன் பெட்ஸ்* தன் பதின்ம வயதுகளைச் சிறையில்
வீணாக்கியதற்குப் பதிலாக இந்தக் காய்ந்த மையைத் (கவிதைப்
புத்தகம்) தாண்டி, பெரிதாக வேறு ஏதாவது கிடைத்திருக்க
வேண்டும்.

நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தில்
நீனா டேரியஸை ஒரு கூடுகைக்கு அழைத்துச் செல்கிறாள்.
அங்கு காதலர்கள் இருவரும் கட்டிப்பிடித்து உறவு கொள்கிறார்கள்.
அவர்களுக்குச் சகோதரர்கள் யாரும் கைதாகி சிறையில்
இல்லை போலும்…

கறுப்பினக் கதாபாத்திரங்கள் நிறைந்த புத்தகம் என்றால் அது
இனப்பாகுபாடு பற்றியதாகத்தான் இருக்க வேண்டும் என்று
நம்பும் மனிதர்களுடன் அமர்ந்து உணவு உண்கிறேன்.
வெள்ளையினத்தவர்களை மட்டுமே கொண்ட புத்தகம்
மனப் பிறழ்வை ஆராய்வதாக இருக்கிறது. ஆனால் அது கூட
சிறையில் நிகழும் மனப் பிறழ்வைப் பற்றிப் பேசுவதில்லை.

403 ஆம் அறையின் கதவிற்கு அவனுடைய மொத்தக் குடும்பமும்
தங்கள் உடலாலேயே அண்டை கொடுத்து நின்றார்கள்.
அவன் தான் விரும்பிய ஆணுடன் சேராமலேயே இறந்து போனான்
வீடோ, சிறையோ காதலினால் என்ன பயன்?

காவல்துறையினர், சுறா மீன்குஞ்சுகளின் மூச்சு துடி துடித்து
பின் நின்று போவதைப் பார்ப்பதற்காகவே அவற்றை வெளியில்
இழுத்துப் போடுவதைப் பார்த்தோம்.
சிறையின் கண்ணாடி வழி ஒரு சகோதரன் தன் குடும்பத்தைச்
சந்திக்கிறான்.

ஞாயிறுகளில் அவன் வெளியில் தூக்கியெறிந்த அவளது உடுப்புகளைத்
துவைத்துக் காயவைத்தேன்.
எனக்கு மிகப் பிடித்த நாவலில் ப்ரௌன் ஃபீல்ட்ஸ் தன் மனைவியைக்
கொன்று விடுகிறான். அவனுக்கு ஏழு ஆண்டுகள் மட்டுமே சிறை
தண்டனை வழங்கப்பட்டது.

பாவம் மிகச் செய்த என் விரல்களால் நான் சுட்ட விரும்பவில்லை
அதனால் சுத்தமான உங்கள் விரல்களைத் தாருங்கள்.
இதைப் படித்துக்கொண்டிருக்கும் இந்த ஜனநாயக நாட்டின்
குடிமகன் ஒருவனுக்குத் தன்னுடைய மகனின் ஒட்டி வெட்டப்பட்ட
முடியைப் பற்றிய கவலை எதுவுமில்லை ( சிறைக் கைதிகளின் முடி)

எங்கள் வீட்டில் ஒரே பெயருடைய மூன்று ஆண்கள் இருந்தனர்.
மூவருமே ஒன்று சண்டை போட்டார்கள் அல்லது ஓடிப் போனார்கள்.
நான் நெல்சன் டிமெரி 3 என்ற பெயரை விடுத்து, சிறையில் சம்பாதித்த
பெயரான ஜெரிக்கோ ப்ரௌன் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டேன்.

*ட்வேன் பெட்ஸ் – 13 வயது கறுப்பினச் சிறுவனாக, பள்ளியில் முதல் மாணவனாக ( gifted Children programme) இருந்த ட்வேன் ஒரு சிறு திருட்டு நடக்கும் போது அங்கு கூட இருந்ததால் 7 வருடச் சிறைத்தண்டனை பெற்று தன் பதின்மத்தைச் சிறையில் கழித்தவர். அதனால் கல்வியை இழந்தவர். பின்பு தன் அனுபவங்களைக் கவிதைகளாக எழுதினார்.

ஒரு வெள்ளையின ஆண் தன் கறுப்பின மனைவியைக் கொன்றதற்காக 8 வருடச் சிறைத் தண்டனை மட்டுமே அளிக்கப்பட்ட நிகழ்வையும் சுட்டிக் காட்டுகிறார் கவிஞர்.

க்ளாடியா ரான்கீன்

ரான்கீன் ஜமைக்காவில் பிறந்தவர். கவிஞர், கட்டுரையாளர், நாடக ஆசிரியர் மற்றும் தொகுப்பாசிரியர். இனப் பாகுபாடுகளைப் சுற்றியே அவரது ஆக்கங்கள் புனையப்பட்டிருக்கின்றன. எழுத்தில் கவிதை உரைநடை இவற்றிற்கு இடையிலான விளிம்புகளில், இடைவெளிகளின் துணையோடு, இனங்களுக்கிடையிலான எல்லைக் கோடுகளைத் தான் சித்தரிக்க விரும்புவதாகச் சொல்கிறார். இந்தக் கவிதை அவரது ‘Dont let me be lonely‘ என்ற தொகுப்பில் உள்ளது.

“என்னைத் தனிமையில் விடாதீர்கள்” — விமான நிலையப் பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் …

தமிழில்: அனுராதா ஆனந்த்

என் பாட்டியைப் பார்க்கப் பயணித்த போது விமான நிலையப் பாதுகாப்புச் சோதனை செய்யுமிடத்தில் என்னைத் தண்ணீர்ப் போத்தலில் இருந்து குடிக்கச் சொன்னார்கள்

‘ இந்தத் தண்ணீர்ப் போத்தலில் இருந்தா?’
‘ஆம் ! அதைத் திறந்து குடியுங்கள்’.

என் பாட்டியைப் பார்க்கப் பயணித்த போது விமான நிலைய சோதனைச் சாவடியில்
என் ஷூக்களைக் கழற்றச் சொன்னார்கள்.

‘ என் ஷூவையா’
‘ ஆம்! இரண்டையும் கழட்டுங்கள்’

என் பாட்டியைப் பார்க்க பயணித்த போது, விமான நிலையச் சோதனைச் சாவடியில்
எனக்குக் காய்ச்சல் அடிக்கிறதா என்று கேட்டார்கள்.

‘ எனக்கா? காய்ச்சலா?’
‘ ஆம் ! உங்களுக்குத்தான்.’

பாட்டி மூத்தோருக்கான காப்பகத்தில் இருக்கிறார். அது மோசமானதில்லை.
மூத்திர வீச்சமெல்லாம் அடிப்பதில்லை. சொல்லப்போனால் எந்த வாடையுமே இல்லை.
அவரைச் சந்திக்கச் செல்லும்தோறும் அனைவரும் கூடியிருக்கும் பொதுவான அறையைக் கடக்க வேண்டும். ஒவ்வொருவரும் அவர்களது கையை நீட்டுகிறார்கள். என்னை நோக்கி நீட்டுகிறார்கள். ஒருவர் ‘ஸ்டீவன்’ என்கிறார். ‘ஆன்’ என்கிறார் இன்னொருவர். வளர்ச்சியடையாத நாட்டில் இருப்பது போல ஓர் உணர்வு. அங்கு சாப்பாட்டிற்கும் பணத்திற்கும் கை ஏந்துவார்கள். இங்கு தொடுகைக்கும் அன்பிற்கும். அங்கு நான் என்னையே ஒரு வெள்ளையின, பணக்கார, சலுகைகளை அனுபவிக்கும் ஆண் போல உணர்வேன். இங்கு இளமையாகவும் அதிர்ஷ்டசாலியாகவும் வருத்தமாகவும் உணர்கிறேன்.

வருத்தம் என்ற வார்த்தை நம் நட்டிற்காக உயிரை விட்ட வார்த்தைகளுள் ஒன்று. அமெரிக்கக் கனவிற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த ஒன்று. அதை ஒன்றுமில்லாததாக்கிவிட்டார்கள். நம் பண்பாடு அவ்வார்த்தையைத் தனதாக்கிக்கொண்டது. அது இப்போதெல்லாம் ஒரு சிறிய அசௌகரியத்தைக் குறிக்கிறது. அதுவும் இதுவும் செய்வதற்கான கால அளவு மட்டுமே நீடிக்கும் அசௌகரியம். தொலைக்காட்சியில் அலைவரிசை மாற்ற ஆகும் கால அளவு.
ஆனால் முன்னொரு காலத்தில் அதற்கு உண்மை என்ற பொருளிருந்தது. மதிப்பு மிக்கது மற்றும் அருள் என்று புரிந்துகொள்ளப்பட்டது. மிக மோசமான, கேவலமான, பெரிய, கனதியான, வீழ்வதான என்ற பொருள்களும் இருந்தன.
மேலும் வருத்தம் என்பது முக்கியமாக ஒரு நிறத்தைக் குறிக்கும் சொல். கறுப்பு
அல்லது கறுப்பாக்குவது என்று புரிந்துகொள்ளப்பட்டது.
அது என்னைக் குறிக்கும் சொல்.
நான் வருத்தமாக உணர்ந்தேன்.

டானேஷ் ஸ்மித்

29 வயதான கவிஞர், எழுத்தாளர் மற்றும் நிகழ்த்து கலைஞர் டானேஷ் மின்னிஸோட்டாவைச் சார்ந்தவர். தன்னை ஆண் , பெண் இரண்டும் அல்லாது ‘they’ என்ற உடைமைப் பெயர்ச் சொல்லால் குறிப்பிட்டுக் கொள்பவர். கறுப்பினக் குயர் மக்களுக்கான செயல்பாட்டாளராகவும் விளங்குகிறார். இந்தக் கவிதை அவரது ‘Dont call us dead‘ என்ற தொகுப்பில் உள்ளது.

எல்லா கறுப்பினத்தவரும் சமுத்திரக்கரையில் நிற்பது போன்றதொரு கனவு.

தமிழில்: அனுராதா ஆனந்த்

நாங்கள் அவளிடம் கேட்கிறோம்
“ நீ விழுங்கிய எங்கள் குழந்தையை என்ன செய்தாய்?”

அவள் சொல்கிறாள்
“அது பல காலங்களுக்கு முன் அல்லவா. நீங்கள்தான் அவர்கள் எல்லோரையும்
குடித்து முடித்துவிட்டீர்களே”

எங்களுக்குப் புரியவில்லை
பின் எங்களைப் போன்றே அடர்கறுப்புத் தோலுடைய ஒரு பெண்
சமுத்திரத்தின் விளிம்பிற்குச் சென்று “எம்மட்*’’ என்று கத்துகிறாள்.
துப்புகிறாள்.

சர்வ நிச்சயமாக ஒரு சிறுவன் சமுத்திரத்திலிருந்து கரையை நோக்கித்
தவழ்ந்து வருகிறான்.

1955 ஆம் ஆண்டு எம்மட் டில் என்ற 14 வயதுக் கறுப்பினச் சிறுவன் மிஸ்ஸிஸ்ஸிப்பி மாகாணத்தில் கொல்லப்படுகிறான். அவன் சிறிது முற்போக்கான வடக்கின் சிக்காகோ நகரிலிருந்து தன் சிற்றப்பா வீட்டிற்கு வந்தவன். தன் ஊரில் இரு இனத்தவர்களும் சேர்ந்து படிக்கும் பள்ளியில் படித்து வந்தவன். தெற்கு மாகாணங்களில் கறுப்பின வெறுப்பும், அவர்களை ஒடுக்கும் சட்டங்களும் இருந்த சூழல். ஒரு கடையில் வேலை செய்த 21 வயதுப் பெண்ணிடம் சாதாரணமாகப் பேசிவிட்டான் என்பதற்காக அப்பெண்ணின் கணவனால் சித்திரவதை செயப்பட்டுக் கொல்லப்படுகிறான். இது பத்திரிகைகளில் பெரிதாக எழுதப்பட்ட போதும் அந்த ஊரின் வெள்ளையின ஆண்கள் நிறைந்த ஜூரியால் அது குற்றமேயில்லை என்று தீர்பாகி குற்றவாளிகள் விடுவிக்கப்படுகிறார்கள். அவர்கள் கறுப்பினத்தவர்களுக்குப் பாடம் கற்பிக்கவே சிறுவனைக் கொன்றதாக வெளிப்படையாகப் பத்திரிகைகில் பேட்டி அளித்துள்ளனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!