சமகால தமிழ் ஆய்வாளர்களில் தவிர்க்க முடியாதவர் கோ.ரகுபதி. நிலவும் சமூகப் பிரச்சினைகளின் வேர் எது, எவ்வாறெல்லாம் அது உருமாறியிருக்கிறது என்பவற்றையே பிரதானமாக ஆய்வு செய்திருக்கிறார். ஜாதி, மத விஷயங்களில் இவரது அணுகுமுறை முக்கியமானது. இவர் தொகுத்த, பதிப்பித்த நூல்களின் பேசுபொருளும் பன்முகத் தன்மையிலானவை. கிட்டத்தட்ட இருபதாண்டுகளாக இயங்கிவரும் ரகுபதி இந்நேர்காணலில் தெரிவித்திருக்கும் கருத்துகள் உங்கள் சிந்தனைகளில் பெரும் தாக்கத்ததை ஏற்படுத்தும் என நம்புகிறோம்.
ஆய்வுப் புலத்தின் மீதான ஆர்வம் எப்போது தொடங்கியது?
தொடக்கப்பள்ளி காலத்திலேயே இருந்தது. எங்கள் கிராமத்தில் யாரும் எங்கள் மீது ஆதிக்கம் செலுத்தியது இல்லை. நாங்களும் எவரையும் சார்ந்து இருந்ததில்லை. சுதந்திரமாக இருந்தோம். பள்ளிக்குச் சென்ற பிறகே ஜாதி புரிய ஆரம்பித்தது. பள்ளிக்கூட ஆசிரியர்கள் நேர்மறையான அம்சத்தை எதிர்மறையாகச் சொல்வார்கள். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், வகுப்பில் இருக்கும் பிற சமூகத்து மாணவர்களிடம் “கீழச்சேரி பசங்க மாரி நீட்டா வாங்கடா” என்பார்கள். நாங்கள் தினமும் குளித்து, எண்ணெய் தேய்த்து தலை சீவி சுத்தமாகச் செல்வோம். கை, கால்கள் கூட அழுக்காக இருக்காது. ஆனால், பிற சமூகத்து மாணவர்கள் அப்படி இருக்க மாட்டார்கள். அதனால் எங்கள் ஆசிரியர்கள் அவர்களுக்குச் சொல்லும் அறிவுரைதான், “கீழச்சேரி பசங்க மாரி வாங்கடா” என்பது. முதல் ரேங்க் மாணவனான எனக்கு, இது உறுத்திக்கொண்டே இருந்தது. ஏன் இப்படிச் சொல்கிறார்கள்? அதேபோல பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என் பெற்றோரை ஒருமையில் அழைப்பார்கள். அவர்களைச் சார்ந்து நாம் இல்லை, எல்லோரும் ஒன்றுபோலதான் உழைக்கிறோம். பிறகேன் இப்படி? இக்கேள்விகள் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
ஒருநாள் என் தந்தையிடம் இதுகுறித்துக் கேட்டேன். அப்போது நான் நான்கோ, ஐந்தோ வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஜாதி பற்றி அவர் சொன்னார். கொஞ்சம் புரிந்தது. அவரோடு வெளியே செல்லும் போதெல்லாம் எதிரில் வருபவர்கள் குறித்து, “இவர் எந்த ஜாதி? அவர் எந்த ஜாதி? நம்மைவிட உயர்ந்தவர்களா, தாழ்ந்தவர்களா?” என்றெல்லாம் கேட்பேன். நம்மைவிட உயர்ந்தவர்கள் என்று சொன்னால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அது அப்போதைய சூழல். இப்படித்தான் இந்த எண்ணம் தொடக்க நிலையிலேயே தோன்றியது. அப்போது அது ஆராய்ச்சி என்றெல்லாம் தோன்றவில்லை. இன்று திரும்பிப் பார்க்கும்போது ‘இது ஏன் இப்படி இருக்கிறது? இதன் அடிப்படை என்ன?’ என்ற என் தேடுதலுக்கான விதை பால்யத்தில் இருப்பது புரிகிறது. முதன்முதலில் எனக்கு ஜாதியியல் (castology) சொல்லித் தந்தது என் தந்தைதான்.
ஓர் ஆய்வுக்கான கருப்பொருளை எங்கிருந்து பெறுகிறீர்கள்? உங்கள் ஆய்வு முறையியல் குறித்தும் சொல்லுங்கள்.
ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு முறையியல் இருக்கிறது. அது கல்விப்புலம் சார்ந்தது. என்னைப் பொறுத்தவரை, ஒரு பொருள் எப்போது தோன்றியது, அதன் செயல்பாடு, தற்போதைய நிலை என்ற ரீதியில்தான் என் ஆய்வுகள் இருக்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் இயக்கவியல் அணுகுமுறை இருக்கும். மார்க்ஸின் இயக்கவியல் பொருள்முதல் வாதம், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஆகியவைதான் என் ஆய்வு முறையியல். இதை அண்ணல் அம்பேத்கரின் ஆய்வுகளிலும் பார்க்கலாம். குறிப்பாக, ‘இந்தியாவில் சாதிகள்’ நூலில் ஜாதி எப்படிப் புறமணமாக இருந்து அகமணத்திற்கு மாறியது என்பதை விவரிக்கும் பின்னணியில் இயக்கவியல் அணுகுமுறை இருப்பதைப் புரிந்துகொள்ளலாம். ஒரு பொருள், அதன் இன்றைய நிலையிலேயே அது காலங்காலமாக இல்லை. பொருள் எப்போதும் இங்கேதான் இருக்கிறது. ஆனால், அதன் பயன்பாடும் முக்கியத்துவமும் மாறிக்கொண்டே இருக்கிறது. மனிதர்கள் தோன்றும் முன்பிருந்தே இயற்கை வளங்கள் இங்குள்ளன. மனிதர்கள் அதன் பயனைக் கண்டறிந்து சமூகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும்போது, அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மனிதர்கள் நாம் பொருள்களோடுதான் இயங்கிக்கொண்டிருக்கிறோம். அந்தவகையில் இயக்கவியல் அணுகுமுறை எனக்குப் பெரிதும் உதவியாக உள்ளது.
ஆய்வுக்கான கருப்பொருளைப் பொறுத்தவரையில், கல்விப்புல ஆய்வுகளைத் தாண்டி விரிந்த தளத்தில் வாசிப்பேன். குறிப்பாக, ஆய்வுகளின் முதன்மைத் தரவுகளாக இருப்பவற்றைப் பரந்த கண்ணோட்டத்தில் படிப்பேன். அந்தவகையில் தொடர்ந்து ஒரு விஷயத்தைக் கவனித்துக்கொண்டிருக்கையில் ‘இது எப்போதும் பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறதே ஏன்? இதை ஆய்வு செய்யலாமே’ என்று தோன்றும். எனது ஆய்வுகள் பன்முகத் தன்மையில் இருப்பதற்கு இதுதான் காரணம். இன்றைய பத்திரிகைகளில் பலவிதமான செய்திகள் இருக்கும். அதுபோல பழைய பத்திரிகைளையும் வாசிப்பேன். எந்தெந்தப் பிரச்சினைகள் குறித்து யார்யார் பேசியிருக்கிறார்கள் என்று பார்க்கும்போது யாரேனும் ஒருவர் குறிப்பிட்ட பிரச்சினை குறித்து தொடர்ந்து பேசியிருப்பார். அதில் சிலவற்றைக் குறித்து ஆய்வு செய்யலாம் என்று தோன்றும். அதே வேளை இன்றைக்கு அதற்கான தேவை இருக்கிறதா என்பதையும் யோசிப்பேன். இன்றைய பிரச்சினைகளோடு ஏதாவதொரு வகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பிருக்கும்பட்சத்தில் எழுத நினைப்பேன்.
அதற்கான தேடல் விரிவானது. ஏற்கெனவே வேறொன்றை எழுதிக்கொண்டிருப்போம். அதை விடுத்து இந்த ஆய்வுக்குள் செல்ல நேரிடும். உதாரணத்திற்கு, என் ஆய்வின் தொடக்கக் காலத்தில் அருந்ததியர்களின் இயக்கங்கள் பற்றி ஆய்வு செய்ய நினைத்தேன். ஒரு கட்டத்தில் அதை விட்டுவிட்டேன். பின்னர், பள்ளர் இயக்கங்கள் பற்றி ஆய்வு செய்தேன். தற்போது அரசாணைப்படி தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இதற்கு முன்பே என் ஆய்வுத் தலைப்பு ‘தேவேந்திர குல வேளாளர்கள் இயக்கங்கள்’தான். இந்த ஆய்வுக்காக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரக ஆவணக் காப்பகம், தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகம், பெரியார் திடல் நூலகம், ரோஜா முத்தையா நூலகம், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மைய நூலகம், திருவனந்தபுரம் வளர்ச்சி ஆராய்ச்சி மையம் (CDS) போன்றவற்றில் தகவல்கள் திரட்டும்போது மூலத் தரவுகளை, அதாவது சட்டமன்ற, நாடாளுமன்ற உரைகள், பத்திரிகைச் செய்திகள் போன்வற்றைப் படிப்பேன். அப்படி ஒருமுறை சட்டமன்ற உரைகளைப் படித்துக்கொண்டிருந்தபோது, “வண்ணான் பாட்டுக்கு எதிராகப் பெரிய போராட்டம் நடந்திருக்கிறது. அரசாங்கம் இதற்கு என்ன செய்திருக்கிறது” என்று ஒரு கேள்வி இருந்தது. ‘இது என்ன வண்ணான் பாட்டு, சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புகிற அளவுக்குப் போராட்டமா’ என்று தோன்றியது. இது நடந்தது 1930களில். சமகாலத்தில் திரைப்பட பாடல்களில் சில வரிகள் குறிப்பிட்ட சமூகத்தை அவமதிப்பதாக இருக்கும். அதற்கெதிராகப் புகார்களும் போராட்டங்களும் நடக்கும். எனவே ‘வண்ணான் பாட்டு’ குறித்த ஆர்வம் எழுந்தது.
ஆவணக் காப்பகம் செல்லும்போதெல்லாம் ‘வண்ணான் பாட்டு’ பற்றிய தகவல்களையும் தேடுவேன். பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வண்ணான் பாட்டுக்கு எதிராக நடந்த போராட்டங்களை ஒரு பத்திரிகை தொடர்ந்து செய்திகள் வெளியிட்டுள்ளது தெரிந்தது. அதில் கூடுதலான சில தகவல்கள் கிடைத்தன. அப்பாட்டுக்கெதிராகத் தென்னிந்திய அளவில் பெரிய போராட்டம் நடந்துள்ளது; சிவபாக்கியம் என்ற பெண்மணி பாடிய பாடலை ஒடியன் என்ற ஒலிப்பேழை நிறுவனம் வெளியிட்டிருக்கிறது; இப்பாடல் திரையரங்குகள், தேநீர்க் கடைகள் எனப் பொதுவிடங்களில் ஒலிபரப்பப்பட்டிருக்கிறது. இப்பாட்டுக்கு எதிராக நீதிமன்றம் செல்கிறார்கள், அது தோல்வியில் முடிகிறது; இறுதியாக, திருச்சியில் வண்ணார்கள் மட்டுமல்லாது பிற சமூகத்தினரும், தந்தை என்.சிவராஜ், திராவிட இயக்கத்தினர் போன்ற ஆளுமைகளும் பங்கேற்ற பெரிய மாநாடு நடந்தது; மாநாட்டின் இறுதியில் அந்த ஒலிப் பேழையை உடைத்து, தீயிட்டுக் கொளுத்துகின்றனர். இதைத் தொடர்ந்து வண்ணான் பாட்டைத் தெரிந்துகொள்ள ஆர்வம் மேலிட்டது. இத்தகவல்கள் கிடைப்பதற்கே பனிரெண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன, இனிப் பாட்டு எப்போது கிடைப்பது. முதலில் இதை எழுதிவிடுவோம் என்று கருதி ‘வண்ணார் கிளர்ச்சி’ என்ற கட்டுரை எழுதினேன் (காலச்சுவடு, பிப்ரவரி 2013). அதன்பிறகு சில ஆண்டுகள் கழித்து நூலகத்தில் தேடிக்கொண்டிருந்தபோது ‘வண்ணான் பாட்டு’ கிடைத்தது. அதைப் படித்தபோது ‘இந்தப் பாட்டுக்கா இவ்வளவு போராட்டம் நடந்தது’ என்றே தோன்றியது. இதுகுறித்து ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியத்திடம் பேசியபோது, “ஊர்களில் சிலர் நாசுக்காகச் சொல்வார்களல்லவா, அது போன்று அதைப் பாடியிருக்கலாம். அது போராட்டம் வரைக்கும் சென்றிருக்கும்” என்றார். இதன் நீட்சியாக இன்னும் சில ஆவணங்களைத் தேடும்போது ஆவணக் காப்பகத்தில் இப்பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்புக் கிடைத்தது. இப்பிரச்சினை குறித்து அன்றைய ஆங்கில அதிகாரிகளுக்கு விளக்குவதற்காக மொழிபெயர்த்திருக்கிறார்கள். அதில்தான் பாடலின் உண்மையான சாராம்சம் புரிந்தது. தமிழில் உங்களுக்கு அவ்வளவு எளிதாகப் புரிந்துவிடாது. பாடலின் பாடுபொருள் இதுதான்: வண்ணார் சமூகத்துப் பெண்ணும் வேறொரு சமூகத்து ஆணும் காதலிக்கிறார்கள், அது நிறைவேறவில்லை. பெண் வண்ணார் சமூகத்து ஆடவரை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துகொள்கிறாள். சில ஆண்டுகளுக்குப் பிறகு காதலர்கள் சந்திக்க நேரிடுகிறது. இருவரும் பேச நினைக்கின்றனர். அதற்குள் கணவன் வரவே, தன் சோகத்தைப் புலம்பலாகப் பாடுகிறாள். அந்தப் புலம்பல் தங்கள் சமூகத்தை இழிவு படுத்துவதாக உள்ளது என்றுதான் போராடியிருக்கிறார்கள். இதுபோன்று பல பாடல்கள் இருப்பதைப் பிறகு கண்டறிந்தேன்.
ஆய்வுக்கான கருப்பொருள் என்பது உடனடியாகத் தோன்றாது. அது ஏற்கெனவே இங்குதான் இருக்கிறது. நாம் அதைக் கண்டறிய வேண்டும். ‘போக்குவரத்து உருவாக்கமும் ஜாதிகளின் உருமாற்றமும்’ என்ற நூலை முதலில் கட்டுரையாகத்தான் எழுதினேன். ‘வண்ணான் பாட்டு’ போலவே தீண்டத்தகாதவர்களும் பஞ்சமர்களும் பேருந்துகளில் பயணிக்கக் கூடாது என்ற நிலை குறித்துச் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியதைப் படித்தபோது எனக்கு வேறொரு பிரச்சினை நினைவுக்கு வந்தது. ஆங்கிலேயர்கள் காந்தியை இரயிலிலிருந்து இறக்கிவிட்டதைத்தானே பள்ளிப் பாடத்தில் படித்திருக்கிறோம். ஆனால், இந்தியர்கள் தம் சக மக்கள், பட்டியலின மக்களைப் பேருந்துகளில் பயணிக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்களே. இதை ஏன் பள்ளியில் சொல்லித்தரவில்லை. எனவே, இதுகுறித்து எழுத வேண்டும் என்று தோன்றியது. அப்போது கிடைத்த தகவல்களை வைத்து ‘காந்தியின் தென்னாப்பிரிக்கா பயணமும் தலித்துகளின் உள்ளூர் பயணமும்’ என்ற கட்டுரையை எழுதினேன் (உரை மொழிவு, ஒக்டோபர் – நவம்பர் 2003).
காந்தி பற்றி இவ்வளவு சொல்லிக்கொடுத்த பாடத்திட்டம், என் மக்களைப் பேருந்தில் ஏறக் கூட அனுமதிக்காததை ஏன் சொல்லவில்லை என்று தோன்றியது. 1924இல் பேருந்து பயணச் சீட்டுகளிலேயே ‘பஞ்சமர்கள், பெரும் வியாதியஸ்தர்கள், குஷ்டரோகிகள் பேருந்தில் பயணம் செய்ய அனுமதியில்லை’ என்று அச்சடித்திருக்கிறார்கள். காந்தியின் சம்பவத்திற்குப் பிறகுதான் இது நடக்கிறது. இது சம்பந்தமான கூடுதல் ஆவணங்கள் கிடைத்தபோது, அவற்றைப் பொதுமைப்படுத்தி போக்குவரத்தின் தன்மைகளையும் அது ஏற்படுத்திய தாக்கங்களையும் பற்றி ‘பயணங்களில் அசமத்துவமும் சமத்துவத்திற்கான பயணமும்’ என்ற கட்டுரை எழுதினேன் (புதுவிசை, ஜூன் 2011).
அமெரிக்காவில் ரோசா பார்க்ஸ் நடத்திய போராட்டத்திற்கும் இங்கே தலித்துகளின் போராட்டத்திற்கும் அடிப்படை வேறுபாடுகள் உள்ளன. அமெரிக்காவில் கறுப்பின மக்கள் பேருந்துகளில் கடைசி இருக்கைகளில்தான் அமர வேண்டும், ஒருவேளை வெள்ளையர்கள் அங்கு வந்தால் அவர்களுக்கு இடம் தர வேண்டும். இதுதான் காந்திக்கும் நடந்தது. கறுப்பர்கள் இரயிலில் பயணிக்கலாம், ஆனால், முதல் வகுப்பில் பயணிக்கக் கூடாது. நம் ஜாதிய அமைப்பில் உள்ள சிக்கல் என்னவென்றால், தலித்துகள் பேருந்துகளில் பயணிக்கவே கூடாது. இதுதான் மிக மோசமானது. இதை ஏன் பள்ளிப் பாடத்தில் சொல்லித் தரவில்லை. இதையெதிர்த்து நடந்த போராட்டங்கள் பற்றிய தகவல்களைத் தேடும்போது வேறு சில உண்மைகள் புலப்பட்டன. திருநெல்வேலி சிவந்திப்பட்டியில் தேவேந்திரர்களின் கிராமமொன்றில் தங்கி ஆய்வு செய்துகொண்டிருந்தேன். அங்கே பேருந்து பெரிய பிரச்சினையாக இருந்தது. 1950 – 60களில் தங்கள் பகுதிக்குப் பேருந்து வேண்டுமென்று இம்மக்கள் போராடிப் பெற்றனர். பிற சமூகத்தினரின் பகுதிகளையடுத்துதான் தேவேந்திரர்கள் பகுதி இருக்கிறது. பேருந்தின் கடைசி நிறுத்தமும், அடுத்த சுற்றின் தொடக்கமும் இப்பகுதிதான். தேவேந்திரர்கள் பகுதியைத் தாண்டிப் பிற்படுத்தப்பட்ட மக்கள் பகுதிக்கு வரும்போது வயதில் மூத்த தேவேந்திரர்கள் எழுந்துகொள்வார்கள். ஆனால், படித்த இளைஞர்கள் அவ்வாறு செய்ய மறுக்கவே, அது பிரச்சினையாகிறது. முதலில், தங்கள் பகுதியைத் தாண்டி தேவேந்திரர் பகுதிக்குப் பேருந்து போகும்போது பிற்படுத்தப்பட்ட மக்கள் இடம் பிடிக்கிறோமென்று துண்டுகளையும் செருப்புகளையும் இருக்கைகளில் வீசினர். பிறகு, பிற்படுத்தப்பட்ட மக்கள் பகுதியோடு பேருந்து நிறுத்தப்பட்டது. இறுதியாக, இரண்டு பேருந்துகள் என்றானது.
புகைப்படங்கள்: பிரவீன் குமார் சீனு
அதே திருநெல்வேலியில் வெள்ளாளன்குளம் என்ற பகுதி உண்டு. அங்கே 2000 தேவேந்திரர் குடும்பங்கள் உள்ளன. இவ்வூருக்கும் திருநெல்வேலி இரயில் நிலையத்திற்குமிடையே பல கிராமங்கள் உள்ளன. ஆனால், வெள்ளாளன்குளத்திலிருந்து வரும் பேருந்தில் இடையில் இருக்கும் ஊரில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் ஏற மாட்டார்கள். அச்சமயம் நான் காந்தி நகர் என்ற பகுதியில் இருந்தேன். சில சமயம் இந்தப் பேருந்தில் பயணிக்க நேர்ந்தது. அப்போது “இந்தப் பஸ்சுல ஏன் வந்த?” என்றார்கள். “இதுதான் வந்தது, ஏறிட்டேன்” என்பேன். “பொதுவா நாங்க இதுல வர மாட்டோம்” என்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. இவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் மேற்குறிப்பிட்ட இரண்டு கட்டுரைகளையும் எழுதினேன். அப்போதே இது ஒரு நூலாக எழுதுவதற்கான பெரிய தளம் என்று தோன்றியது. ஏனென்றால், போக்குவரத்து அறிமுகமாகும் போது இந்தியாவில் இது என்ன வகையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று மார்க்ஸ் எழுதியிருப்பார். அதேபோல போக்குவரத்து என்ன செய்யுமென்று கறுப்பின மக்களின் பார்வையில் லுமும்பா எழுதியது, அம்பேத்கரின் அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் போக்குவரத்தின் தோற்றம், பரிணாமம், ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் அது ஏற்படுத்திய தாக்கங்கள் என வாசிக்கும்போது அந்த ஆய்வு நீண்டது. ஆய்வு என்பது இப்படித்தான். திட்டமிட்டு நடக்காது. அதுவாகவே நம்மை அடுத்தடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். என்னுடைய எல்லா ஆய்வுகளுக்கும் இது பொருந்தும்.
நீர், போக்குவரத்து, நிலம் இவை தொடர்பாகவே பெரும்பாலும் ஆய்வு செய்கிறீர்களே…
பொதுவாக, பொருள்கள் குறித்து எழுதியிருக்கிறேன் என்று வைத்துக்கொள்ளலாம். இவை அத்தியாவசியமானவை. நீர் என்பதிலும் குடிநீரில் நிலவும் பிரச்சினைகள் குறித்தே அதிகம் எழுதியிருக்கிறேன். போக்குவரத்தில் கவனம் செலுத்தியதற்கான காரணம், ஜாதி பிரச்சினைகளில் ஒருவர் வேறு கட்டத்திற்குப் போக வேண்டுமானால் அவர் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு இடம்பெயர வேண்டும். அப்போது அவர் போக்குவரத்தைப் பயன்படுத்தியாக வேண்டும். இவற்றைத் தனியாகப் பார்க்காமல் பொதுப் பொருள், பொது உரிமை என்பதாகப் புரிந்துகொண்டால் சரியாக இருக்கும்.
தண்ணீரும் இப்படித்தான். உரை மொழிவு இதழில் ‘தமிழ்நாட்டில் தண்ணீருக்கான போராட்டத்தில் (1924 – 2003) அரசும் தீண்டாமையும்’ கட்டுரை எழுதினேன் (நவம்பர் 2003). ஒன்றைக் குறித்து யோசிக்கும்போதுதான் அதில் நிறைய பிரச்சினைகள் நடந்திருப்பது தெரியவரும். தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். பொதுவாக இங்கு, உலகமயமாக்கலால் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழலைப் பற்றி மட்டும்தான் பேசுவார்கள். ஜாதிய கட்டமைப்பில், குறிப்பிட்ட மக்களுக்குத் தண்ணீர் தராமல் இருந்தீர்களே. மழை காலத்தில் கூட அவர்களுக்குச் சேரும் சகதியுமான நீர்தானே கிடைத்தது. இன்றும் இந்நிலை தொடர்கிறது. இதை ஏன் யாரும் கவனப்படுத்த வில்லை. கடந்த காலத்திலிருந்து இன்றுவரை இப்பிரச்சினை எப்படியாக மாறியிருக்கிறதென்று பார்க்கும்போது, நிறைய தரவுகள் கிடைத்தன. அன்று இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, இரண்டு கிணறுகள் கட்டித் தந்திருக்கிறார்கள். இன்று, பொது நீர்த்தொட்டியிலிருந்து குழாய் மூலம் நீர் வழங்குகிறார்கள். இப்படியாக அன்றும் இன்றும் ஜாதிய அமைப்பைத் தக்கவைத்துக்கொண்டார்கள்.
இவையெல்லாம் அன்றாடப் பிரச்சினைகள். சுயசார்புடன் வாழ இவை வேண்டும். அதில் பிரச்சினைகள் வரும்போது நான் பேசித்தான் ஆக வேண்டும்.
உங்கள் எழுத்துகளிலிருந்தும் இதுவரை நீங்கள் சொன்னதிலிருந்தும் கம்யூனிஸ – திராவிட – அம்பேத்கரிய கருத்தியல்களில் உங்களுக்கு ஆழ்ந்த பரிச்சயம் இருப்பது தெரிகிறது. ஆனால், இச்சித்தாந்தங்களைப் பின்பற்றுபவர்கள் அவ்வப்போது முரண்பட்டு நிற்கின்றனரே…
மூன்று கருத்தியல்களையும் நீங்கள் எவ்வாறு புரிந்துகொள்கிறீர்கள் என்பதில் இருக்கிறது. அம்பேத்கரும் மார்க்ஸும் பல்வேறு பிரச்சினைகளை எழுதியிருக்கிறார்கள். ஆனால், இருவரும் இணைகிற புள்ளி மிகவும் முக்கியமானது. அம்பேத்கரின் ‘இந்தியாவில் சாதிகள்’, ஏங்கெல்ஸின் ‘குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்’, மார்க்ஸின் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ ஆகிய நூல்களைப் படித்தால் இவர்கள் மூவரும் ஒரேவிதமாகச் சிந்தித்துள்ளனர் என்பது புரியவரும். ஜாதியின் தோற்றத்திற்குச் சான்றாக அம்பேத்கர் ஒரு ஜாதியை உதாரணமாகக் குறிப்பிடுவார். இதே ஜாதியைத்தான் இயக்கவியல் பொருள்முதல்வாதம் பற்றிய உதாரணத்திற்கு மார்க்ஸும் பயன்படுத்துவார். ஐரோப்பாவில் பிறந்த மார்க்ஸ், இந்திய ஜாதி கட்டமைப்பில் பிறந்த அம்பேத்கர் இருவரும் குறிப்பிட்ட விஷயத்தை விளக்குவதற்கு ஒரே உதாரணத்தைப் பயன்படுத்தியிருப்பது முக்கியமானது. அவர்களின் சிந்தனை முறைதான் அவர்களை ஒரேவிதமாக யோசிக்கத் தூண்டியிருக்கிறது, அது இயக்கவியல் தத்துவம். இங்கு எதுவும் இப்போது தோன்றியதல்ல, காலங்காலமாகவும் இருப்பதல்ல. எல்லாமே பல்வேறுகட்ட மாறுதல்களுக்குட்பட்டு ஒன்று வேறொன்றாக மாறிக்கொண்டேயிருக்கிறது. இது அம்பேத்கரிடமும் மார்க்ஸிடமும் தெளிவாகப் புலப்படும். நான் எப்படி இவர்களைப் பேசாமல் இருக்க முடியும்.
திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரையில் இதே இயக்கவியல், பகுத்தறிவு கருத்தியல்களை வேறொரு தளத்தில் பேசக் கூடியது. இம்மூன்று கருத்தியல்களும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை, ஒன்றுக்கொன்று பங்களிப்புச் செய்யக் கூடியவை. இம்மூன்று சித்தாந்தந்தங்களின் செயல்முறைகள் வேறு, ஆனால் இலக்கு ஒன்று. உலக அளவிலான சமூகப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கான அறிவியலைத் தந்தவர் மார்க்ஸ். நான் அதைத் தத்துவமாகவும் அறிவியலாகவும் புரிந்துகொள்கிறேன். இந்தியாவின் ஜாதிய கட்டமைப்பைப் புரிந்துகொள்ளும் வகையில் அம்பேத்கரின் எழுத்துகள் இருக்கும். அதை இன்னும் அடுத்தடுத்த கட்டத்திற்குக் கொண்டு போக வேண்டும். அம்பேத்கர் ஜாதியை ஆரியர்களின் நான்கு வர்ணங்களை முன்வைத்துதான் பேசியிருப்பார். திராவிட இனக்குழுவுக்குள் இருக்கிற ஐந்து திணை வகைகளைப் பேசியிருக்க மாட்டார். திணைகள் ஐந்தும் கிடைநிலையில் இருக்கும். இதில் யாரும் யாரையும் திருமணம் செய்துகொள்ளலாம், யாரும் எந்தத் தொழிலும் செய்யலாம்.
நான்கு வர்ணம் என்பது ஆரியர்களின் செங்குத்தான படிநிலை அமைப்பு. திராவிடர்களுக்கு இருப்பது ஐந்து திணைகள்தானே. ஆரியர்கள் இங்கு நுழைந்தது மிகவும் பிந்தைய காலத்தில்தான் என்று வரலாற்றாய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்தத் திணைகளில் இருக்கும் சிலர், நிலவுடைமையாளர்கள் உட்பட, தம்மைச் சூத்திரர் என்று அறிவித்துக்கொண்டார்கள். ஐந்திணையைச் சேர்ந்தோர் ஆரியர்களின் நான்கு வர்ணங்களுக்குள் புகுந்து ‘ஜாதி திராவிடர்’களாக விரும்புகிறவர்கள். ஷத்திரியன் என்று இங்கு யாரும் இல்லை. அப்படிச் சொல்லிக்கொள்பவர்களும் உடல் உழைப்பைப் பிரதானமாகக் கொண்டவர்கள்தாம். வைசியன் என்றும் இங்கு யாரும் இல்லை. எனில், இங்கு எப்படி ஜாதி நுழைந்தது என்பதைப் புரிந்துகொள்ள அம்பேத்கரும் பெரியாரும் உதவியாக இருக்கிறார்கள். இம்மூவரையும் விட்டுவிட்டு இச்சமூகத்தை என்னால் புரிந்துகொள்ள முடியாது. ஆனால், யதார்த்தம் முரண்பாடாக இருக்கிறது.
இம்மூவரையும் பின்பற்றுவதில் எனக்குள்ள சிக்கல் என்னவென்றால், ‘இவர் தலித் தோழர்’ என்று சில மார்க்ஸியர்களும், ‘இவர் இடதுசாரி’ என்று சில அம்பேத்கரியர்களும் கருதுகின்றனர். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடிதான் என்பார்கள். எனக்கும் அப்படித்தான் கிடைக்கிறது; ஆனாலும் இசைக்கிறேன். அடிப்படையில் நான் திராவிடக் கருத்தியலில் இருந்து வந்தவன். சிறுவயதில் ஜாதி பற்றிய தேடல்கள் எழுந்தபோது முதலில் கண்ணைத் திறந்தது திராவிடர் கழகம்தான். கல்லூரி இரண்டாமாண்டு படிக்கும்போதுதான் பெரியாரியல் அறிமுகமானது. முதுநிலை படிக்கும்போது இடதுசாரி மாணவர் அமைப்புடன் ஏற்பட்ட தொடர்பால் மார்க்ஸின் தத்துவங்களைப் படித்தேன். இதே காலகட்டத்தில்தான் அம்பேத்கரையும் வாசித்தேன். இவர்கள் யாரையுமே என்னால் ஒதுக்க முடியவில்லை. இவர்கள் இல்லாமல் இந்தச் சமூகத்தை உங்களால் புரிந்துகொள்ளவே முடியாது. பகுத்தறிவு இல்லாமல் ஜாதி பிரச்சினையை எவ்வாறு கையாள்வீர்கள்? பெரியார் இல்லாவிட்டாலும் பகுத்தறிவைப் பேசாமல் இருக்க முடியாது.
திராவிடக் குழுக்களுக்கானது திணை மரபு என்று சொன்னீர்கள். அதைத் திராவிட மரபு, திராவிட அறிவியல் என்றும் புரிந்துகொள்ளலாம். நீங்கள் எழுதிய ‘பறையர் விஞ்ஞானமும் வினைஞர் பரிணாமும்’ கட்டுரையிலும் அடித்தள மக்களின் அறிவியல் மரபுகளைச் சுட்டிக் காட்டியிருப்பீர்கள். அதேசமயம், பகுத்தறிவு என்ற பெயரில் பழமரபுகள் எல்லாவற்றையும் மறுக்கும் போக்கும் நிலவுகிறது. மரபையும் பழைமைவாதத்தையும் எவ்வாறு வேறுபடுத்துவீர்கள்?
நான் திணை பற்றி பேசுவதென்பது அவற்றையெல்லாம் காப்பாற்ற வேண்டும் என்ற பொருளில் அல்ல. எதை வைத்துக்கொள்ள வேண்டும், கூடாது என்ற தெளிவு வேண்டும். அன்று இருந்த ஒரு பொருள் இன்றும் எனக்குத் தேவைப்படுகிறதென்றால் அதை நான் வைத்துக் கொள்ளத்தான் வேண்டும். இல்லாதபட்சத்தில் அதைத் தவிர்த்துவிடலாம். பகுத்தறிவு இயக்கங்கள் அப்படி அனைத்தையும் மறுக்கவில்லை. அவர்கள் பார்ப்பனிய புராணங்களைத்தான் கட்டுடைத்தார்கள். இராமாயண, மகாபாரத புராணங்களை விமர்சித்த அளவுக்கு அவர்கள், ஆதி – ஜாதி திராவிட மக்கள் வணங்கும் தெய்வங்களை விமர்சிக்கவில்லையே. ஏனெனில், அவை மத நிறுவனங்களாக இல்லை என்ற தெளிவு அவர்களுக்கு இருந்தது.
இன்றைய இருத்தலுக்குத் தேவைப்படாத எதையும் தவிர்க்கத்தான் வேண்டும். இங்கு நிலையான பொருள் என்று எதுவும் இல்லை. இன்றைய பிரச்சினைக்கு முந்தைய மரபுகளில் தீர்வு இருந்தால் அதை எடுத்துக்கொள்ளலாம் அல்லது புதிய வழிகளைத்தான் கண்டறிய வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கட்டுரையின் சாரம் இதுதான்: பறையர் என்பதை ஜாதியாகச் சொல்கிறார்கள், நான் அதை ஒரு சமூக கட்டமைப்பாகப் புரிந்துகொள்கிறேன். இதற்கு “பாணன், பறையன், துடியன், கடம்பன் இந்நான்கல்லது குடியுமில்லை” என்ற புறநானுற்றூப் பாடலும் துணை நிற்கிறது. அந்த அமைப்புக்குள் பல குழுவினர் இருக்கின்றனர். அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தொழிலோடு, மரபோடு தொடர்பில் இருந்திருக்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் ஒரு சமூகம் இயங்கத் தேவையான அனைத்துப் பொருள்களையும் உற்பத்தி செய்யும் குழுக்கள் அதில் இருந்தன. திராவிட அறிவு மரபும் பறையர்களின் அறிவியல் அறிவும் வெவ்வாறனவை அல்ல; அவை ஒன்றுதான். அதனால்தான் அவர்கள் தங்களை “ஆதிதிராவிடர்கள்” என்று கோரினர். இக்குழுவினர் நிலையாக ஓரிடத்தில் தங்கி வாழத் தொடங்கிய பிறகு உருவான அமைப்பு அது. அதற்கு முன்பாக நாடோடி நிலை இருக்கிறதே. நாம் அங்கிருந்துதானே வந்தோம். அவர்களிடமிருந்துதான் இந்த மரபும் அறிவியலும் நமக்கு வந்திருக்க முடியும். அவர்கள் யார்? இது ஆய்வுக்குரியது.
முன்பே சொன்னதுபோல், இங்கு எதுவும் நிலையானதல்ல. ஒன்றிலிருந்து மற்றொன்று உருவாகிறது. பறையர்களின் பொற்காலம் குறித்து எழுதுவதோ மீட்டுருவாக்கம் செய்வதோ என் நோக்கமல்ல. குறிப்பிட்ட சமூகம் பற்றி நமக்கிருக்கும் பார்வையானது பார்ப்பனியப் பார்வை. இச்சமூகத்தை இழிவுபடுத்துகிற அத்தகைய பார்வையைக் கட்டுடைக்க வேண்டும். மற்றபடி எதையும் நிலைநிறுத்துவதற்காக எழுதவில்லை. அதற்கான தேவையும் இல்லை. மக்கள் பயன்படுத்தும் பொருட்கள், வாழ்க்கை முறை, மனிதர்களுக்கு இடையிலான உறவுகள் ஆகியவற்றை நிலைநிறுத்தலாம். உதாரணத்திற்கு, காலனிய காலத்துப் பெண் எழுத்துகளில், ‘நமக்கான துணையை நாமே தேர்ந்தெடுக்கும் முறை வேண்டும். முந்தைய காலத்தில் சுயம்வரம் இருந்தது. அதுபோன்று இப்போதும் வேண்டும்’ என்று எழுதியிருப்பார்கள். அதேசமயம், திருமண உறவு மகிழ்ச்சியாக இல்லையென்றால் பிரிந்து செல்லும் உரிமையும் வேண்டும். அன்றைய கிராமங்களில் அது இருந்தது. இன்றைய விவாகரத்து முறையைவிட மிக எளிமையானது. பழங்காலத்தைப் பேசுவதென்பது, அதை நிலைநிறுத்துவதற்காக அல்ல. மாறாக, எவை தேவையோ அவற்றைச் சுட்டிக்காட்டத்தான்.
இன்றைக்கு, பறையர் என்றாலே பொதுவாகச் சொல்லப்படுவது பறையடித்தார்கள் என்பதுதான். தர்க்க ரீதியாகச் சிந்தித்துப் பாருங்கள், ஒட்டுமொத்த சமூகமுமா பறையடித்திருப்பார்கள்? அதற்கான தேவைதான் இருந்திருக்குமா? பல வகையான தொழில்களைச் செய்த பறையர்கள் இருந்ததை பாமரன் மட்டுமல்ல படித்தவர்களும் கூட அறியாதது வேடிக்கைதான்! பறையர்கள் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள், அடிமைப் படுத்தப்பட்டார்கள் என்பார்கள். அதில் உண்மை உள்ளது. குறிப்பிட்ட காலகட்டத்தில் அது நடந்தது. ஆனால், எல்லாக் காலத்திலும் அவர்கள் கீழ்நிலையில் இல்லையே. இவற்றை எல்லாம் விளக்கவே அக்கட்டுரையை எழுதினேன். என் சொந்தக் கருத்து என்று சொல்ல முடியாது, பல தரப்பட்ட தரவுகளை உள்வாங்கிக்கொண்டு எழுதினேன்.
சனாதனம், இந்து போன்ற சொற்களை நீங்கள் ‘ஸநாதநம்’, ‘ஹிந்து’ என்று எழுதுகிறீர்கள், ஏன்?
ஜாதி என்றொன்றுள்ளது, அது நம் பொருளா? அது பார்ப்பனர்களின் பொருள். ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கம் செய்யும்போது, அவர்களது உச்சரிப்புக்கு ஏற்றவாறுதானே மாற்றுகிறோம். வடமொழிச் சொற்களையும் அப்படித்தானே மாற்ற வேண்டும், ஏன் தமிழ்ப் படுத்துகிறீர்கள்? ‘ஜாதி’ என்ற உச்சரிப்பு தமிழில் இருக்கிறதா, அதற்குப் பொருள் உண்டா? இல்லாதபோது அதை ஏன் ‘சாதி’ என்று தமிழ்ப்படுத்த வேண்டும். தமிழில் சாதி என்பதற்கான பொருள் வேறு. உங்களுடையதல்லாத, உங்களுக்கு உரிமையல்லாத, நீங்கள் கண்டுபிடிக்காத பொருளை உங்கள் மொழிக்கு மாற்றும்போது அது உங்கள் பொருளாகிவிடும். ஆகையால், அவர்கள் பொருளை அவர்கள் உச்சரிப்பிலேயே எழுத வேண்டுமென்றுதான் அவ்வாறு எழுதுகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக, அப்பொருட்களுக்கு உரியவர்களான பிராமணர்கள் தங்களை ‘ஸநாதநி’, ‘ஹிந்து’ என்றே அழைத்தனர். அவர்கள் ‘ஹிந்து’ என்ற பெயரைக் கூட ஏற்கவில்லை, வைதீகர்கள் என்ற சொல்லைத்தான் விரும்பினர்.
ஜாதியொழிப்பு குறித்த உரையாடல்கள் நீண்டகாலமாக நடந்துவருகிறது. ஒருகட்டத்தில் ஜாதியை ஒழிக்க முடியாது, புறமணத் திருமணங்கள் மூலம் கரைக்க முற்படலாம் என்ற வாதங்கள் எழுந்தன. இன்று ஜாதிய பெருமிதங்களை இளைஞர்களும் சிறுவர்களும் வெளிப்படையாகப் பேசும் சூழல் உள்ளது. இதுகுறித்து உங்கள் நிலைப்பாடு என்ன, ஜாதியொழிப்பு சாத்தியமா?
ஜாதி என்றால் என்ன, எது ஜாதியானது என்பவை முக்கியமான கேள்விகள். சமூகத்தில் புறமணம் மறைந்து அகமணம் தோன்றியபோதுதான் ஜாதி உருவானது என்கிறார் அம்பேத்கர். இதற்குப் பல சான்றுகள் உள்ளன. உங்கள் குலதெய்வக் கோயில் திருவிழாவை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் உங்கள் சமூகத்தினர் மட்டுமா கலந்துகொள்கிறார்கள், மாற்றுச் சமூகத்தினரும்தானே பங்கேற்கின்றனர். தென் மாவட்டங்களில் உள்ள சாஸ்தா கோயில்களிலும் இதே நிலைதான். இது ஏன் என்று யோசித்ததுண்டா? பழைய இனவரைவியல் குறிப்புகளைப் படிக்கும்போது, ஜாதிப் படிநிலையில் ஏற்றத்தாழ்வான குழுக்களுக்குத் திருமணத்திற்கென்று ஒரே குலம் இருந்தது தெரியவருகிறது. அப்படித்தான் திருமணம் செய்திருக்கிறார்கள். பிற்காலங்களில் இது மாறுகிறது. மேலும், ஆதிதிராவிடச் சமூகங்களிலுள்ள சில குழுக்களுக்கும் ஜாதி திராவிடச் சமூகங்களிலுள்ள சில குழுக்களுக்கும் அண்ணன் – தம்பி உறவு இருந்ததையும் இனவரைவியல் தரவுகள் கூறுகின்றன.
படிநிலைப்படுத்தப்பட்ட ஜாதிகள் யாவும் ஒருகாலத்தில் கிடைமட்டமாகச் சமநிலையில் இருந்திருக்கின்றனர் என்பதற்குக் குலதெய்வங்களே சாட்சியாக இருக்கின்றன. ஆனால், இது ஏன் என்ற எந்த விளக்கமும் இதுவரை தரப்படவில்லை. மேலும், ஜாதியோடு தொடர்புடைய எதுவும் முன்பிருந்ததுபோல் இப்போது இல்லை. குலத்தொழில் உள்ளிட்ட பல விஷயங்கள் மாறியிருக்கின்றன. ஜாதி கரைந்திருக்கிறது என்பது இவற்றிலிருந்து தெளிவாகிறதல்லவா! ஜாதியொழிப்பு உடனடியாக நடந்துவிடாது. படிப்படியாகத்தான் நிகழும். ஆனால், அதற்கெதிரான எண்ணங்களே இன்று பலமாக இருக்கின்றன. அதேவேளை, ஜாதியொழிப்பைச் சாத்தியப்படுத்துவதற்கான சரியான திட்டமிடல்கள் இங்கில்லை. குறிப்பாக, வரலாற்று ரீதியான சிந்தனை இல்லை. ஒன்றிலிருந்து மற்றொன்று உருவானது என்றோ, ஒன்று மற்றொன்றோடு கலந்தது என்றோ சிந்தனை இல்லை. ஜாதியமைப்பானது காலங் காலமாக ஒரே நிலையில் இருந்ததில்லை. எடுத்துக்காட்டாக, தங்கநகை என்ற பொருள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு அதைச் செய்யும் ஆசாரி சமூகம் எங்கிருந்தது, எப்படி அவர்கள் இத்தொழிலுக்குள் வந்தார்கள்? இரும்பு பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு கொல்லர்கள் என்ன தொழில் செய்தனர்? இவையெல்லாவற்றையும் தேடிப் பின்னே சென்றீர்களானால், முதலில் மண்ணைக் கொண்டுதான் பொருட்கள் செய்திருக்கின்றனர். மண்ணோடு தொடர்புடைய சமூகங்கள் மூன்று: குயவர்கள், வண்ணார்கள், வெட்டியார்கள். பழைய சடங்குளில் களிமண் பொம்மைகள் செய்வது வண்ணார்கள், அவர்களுக்குத் துணையாக இருந்தது வெட்டியார்கள். இங்கிருந்துதான் பிற சமூகத்தினர் பிரிந்து செல்கின்றனர். இதை நாம் வெளிப்படையாகப் பேசுவதற்கோ, எழுதுவதற்கோ தைரியம் இல்லை என்பது இங்கு சிக்கல் இல்லை. இத்தகைய சிந்தனையே நம்மிடம் இல்லை. நம் சிந்தனை தேக்கநிலையிலுள்ளது. நாம் இயக்கவியலைச் சிந்திக்க வேண்டும். அது பகுத்தறிவு இருந்தால்தான் வரும். மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் மூவரும் இதற்கான அடிப்படையைத் தந்திருக்கிறார்கள். இதை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்த வேண்டிய பொறுப்பு ஆய்வாளர்களுக்கு இருக்கிறது. இந்த உரையாடல்கள் நிகழும்போது அதைப் புரிந்துகொள்பவர்கள், குலத் தொழிலுக்கும் குலதெய்வத்துக்கும் ஏதோ தொடர்பிருக்கிறது; படிநிலைப்படுத்தப்பட்ட சாதியினர் ஒருகாலத்தில் உறவினராகவே இருந்துள்ளனர், பின்புதான் எல்லாம் மாறியிருக்கிறது என்ற மனநிலைக்கு வருவார்கள். அப்போது மெல்ல மெல்ல ஜாதியைப் புரிந்துகொண்டு அதிலிருந்து வெளியேறுவார்கள்.
ஜாதி ஒழியாது என்று கருதத் தேவையில்லை. எவ்வளவோ பொருட்கள் காணாமல் போயிருக்கின்றன. சில இனங்களே அழிந்திருக்கின்றன. எனவே அவநம்பிக்கை வேண்டாம். அதேவேளை ஜாதியைப் பாதுகாக்கும் வேலைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. அடையாளம் என்ற பெயரில் எல்லாம் நிலையானது என்று புரிந்துகொள்ளப்படுகிறது.
தமிழ்ச் சூழலில் ஆய்வாளர்களின் விருப்ப ஆளுமையாக பண்டிதர் அயோத்திதாசர் இருக்கிறார். பலரும் அவரைக் குறித்து நூல்கள் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் தாத்தா இரட்டைமலை சீனிவாசன், பாலம்மாள் என உங்கள் தேர்வு வித்தியாசமாக இருக்கிறதே.
அயோத்திதாசரின் பணிகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், அவர் ஒரேயொரு விஷயத்தைத்தான் வெவ்வேறு விதங்களில் சொல்கிறார், அது பௌத்தம். நடைமுறையில் நம் பிரச்சினைகள் பலவிதமானவை. இதற்குப் பௌத்தம் மட்டுமே தீர்வாக இருக்க முடியுமா என்றால், இல்லை. மேலும், பௌத்தம் குறித்து யார் தொடர்ந்து பேசுகிறார்கள்? கல்வியிலும் பொருளாதாரத்திலும் ஓரளவு நிலைபெற்றுவிட்டவர்கள்தாம் பேசுகிறார்கள். அன்றாடக் கூலிகள் ஏதோவொரு சாமியை வணங்கிக்கொண்டிருக்கிறார்கள். நான் ஏன் அயோத்திதாசரைவிடுத்து இவர்களைப் பேசுகிறேனென்றால், இவர்கள் சமகால ஒடுக்குமுறையிலிருந்து முன்னேறுவதற்கான கருத்துகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்தவர்கள். பொதுவிடங்களில் தலித்துகளின் உரிமைக்கான போராட்டங்கள் பன்னெடுங்காலமாக நடந்துவந்தாலும், அதற்குச் சட்டரீதியான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது இரட்டைமலை சீனிவாசனின் தனித்துவமான செயற்பாடு. “பொது இடத்தில் நடப்பதற்கு, பொதுவான பொருட்களைப் பயன்படுத்துவதற்கு ஜாதி, இன பாகுபாடுகள் கிடையாது” என்று அவர் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, கோயில் நுழைவுப் போராட்டங்களுக்குக் கூடுதல் பலம் கிடைத்தது. அவர் மதங்கள் குறித்துக் கவலைப்பட மாட்டார், பொருளியல் பிரச்சினைகளைத்தான் பேசுவார்.
இந்த உடலெனும் பொருள் இயங்குவதற்குப் பல பொருட்கள் வேண்டும். திருவள்ளுவர் பொருளின் முக்கியத்துவத்தைக் கூறியுள்ளார். அந்தப் பொருட்கள் தலித்துகளுக்கு மறுக்கப்படுகிறது. அதற்காகப் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள், அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறார்கள். என்னிடம் உள்ள பொருட்களின் எண்ணிக்கைதான் என் பண்பாட்டையும் தீர்மானிக்கிறது. இங்கே பௌத்தத்தை முன்னெடுப்பவர்கள் அரசியல் பொருளாதாரம் குறித்துப் பேச மறுக்கிறார்கள். அவர்களால் கல்வி பிரச்சினைக்கோ தீண்டாமை பிரச்சினைக்கோ தீர்வு காண முடியவில்லை. கிறிஸ்தவர்கள் இங்கே மதத்தை மட்டும் பிரச்சாரம் செய்யாமல். பள்ளிகள், மருத்துவமனைகள், தொழிற்கல்வி நிலையங்கள் என மக்கள் தேவைக்கான அனைத்தையும் நிறுவினர். அதனால்தான் கிறிஸ்தவம் இங்கே வளர்ந்தது. வெறும் மதத்தை மட்டும் பரப்புவதால் இங்கே எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடாது.
அப்படியானால் இங்கே முன்னெடுக்கப்படும் மதமாற்றச் செயற்பாடுகளில் உங்களுக்கு உடன்பாடு இல்லையா?
அப்படிக் கூறவில்லை. அரசியல், பொருளாதார பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் மதமாற்றம் செய்வீர்களானால், மக்களின் குறைந்தபட்ச தேவைகளைக் கூட உங்களால் நிறைவேற்ற முடியாது. மதத்திற்குப் புத்தரை வணங்கிவிட்டு வயிற்றுக்கு நான் எங்கே போவேன்? அன்றாடப் பிழைப்பிற்கு வழிவகை செய்தால்தான் மதம் உயிர்ப்போடு இருக்கும். அதைச் செய்யுங்கள் என்று தொடர்ந்து பேசுகிறேன். வெறும் மதமாற்றம் தீர்வாகாது. எனக்குமே என்னை ஹிந்து எனச் சொல்லிக்கொள்ள விருப்பமில்லைதான். அவர்கள் சொல்லும் மதத்தில் நான் இல்லை. ஆனாலும் மதமாற்றம் குறித்து யோசித்ததில்லை. அதைவிட வேறு பிரச்சினைகள் இருக்கின்றன.
அம்பேத்கர் பௌத்தம் குறித்து மட்டுமா எழுதியிருக்கிறார்? “நான் இந்துவாகச் சாக மாட்டேன்” என்று அறிவித்ததற்கும், பௌத்தமேற்றதற்கும் நீண்ட இடைவெளி இருந்தது. அதில் அவர் பல பிரச்சினைகள் குறித்து எழுதியிருக்கிறார். அப்படிச் செய்யாமல் வெறும் மதத்தை மட்டும் பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. நடைமுறையில் அது மக்களுக்கு விடுதலை தருமா என்ற கேள்வியும் எனக்குள்ளது.
அண்ணல் அம்பேத்கர் பௌத்த மதமாற்றத்தையொட்டிப் பல திட்டங்களை வைத்திருந்தார். மதம் மாறுபவர்களின் கல்வி, பொருளாதாரம், அரசியல் பிரதிநிதித்துவம் குறித்துச் சிந்தித்தார். பண்டிதரும் நாளிதழ், பதிப்பகம், பௌத்த சபை ஆகியவற்றை நடத்தினார். இருவரும் தம்மாலான செயற்பாடுகளைச் செய்தனர். எனினும், நீங்கள் இதை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல தவறியதைச் சுட்டிக்காட்டுவதாகவே புரிந்துகொள்கிறேன். ஆனால், அரசியல் – சமூக விடுதலை போன்றே பண்பாட்டு விடுதலையும் முக்கியம்தானே.
என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் மதமாற்றம் என்பது திட்டமிட்டு நடப்பதில்லை. பௌத்த மதமாற்றம் என்பது பெரும் எண்ணிக்கை கொண்ட மக்களின் பங்கேற்போடு நடப்பதில்லை. பௌத்தம் பற்றி நன்கு அறிந்தவர்கள் ஆங்காங்கே சில மதமாற்ற நிகழ்வுகளை நடத்துகிறார்கள். அதிலும் படித்த, பொருளாதார முன்னேற்றமடைந்த மக்கள்தாம் பெரும்பாலும் இங்கே பௌத்தமேற்கிறார்கள். அதைத் தாண்டி எளிய மக்களின் சமூக – பொருளாதார மாற்றத்திற்குப் பௌத்த இயக்கங்கள் பெரிதும் பங்காற்றவில்லை. கிறிஸ்தவத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஹிந்து மதம் எவற்றையெல்லாம் தலித்துகளுக்கும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் மறுத்ததோ அவற்றையெல்லாம் அவர்களுக்குக் கொடுத்தனர். புதிதாகக் கிறிஸ்தவத்தை ஏற்றவர்கள் மிஷனரிகளின் பள்ளிக்கூடங்களில், கல்லூரிகளில் படித்து அவர்களின் நிறுவனங்களிலோ பிற நிறுவனங்களிலோ வேலைக்குச் செல்வர். மிஷனரிகள் மதத்தை மட்டும் பரப்பவில்லை. தம் மக்கள் வாழ்வதற்கான அனைத்துக் கட்டுமானங்களையும் திட்டமிட்டு உருவாக்கினர். பழைய கிறிஸ்தவ கிராமங்களில் தெருக்களைப் பாருங்கள், அதுவே முக்கியச் சான்று. இத்தகைய திட்டமிடல் இன்றைய பெரும்பான்மை பௌத்த மதமாற்ற இயக்கங்களிடம் இல்லை.
மதம் என்பது தனிமனிதத் தேர்வாகவும் இருக்கிறது. பொதுவாக, அடித்தள உழைக்கும் வர்க்க மக்களுக்கு மதம் முக்கியமானதும் அல்ல. அவர்கள் தினமும் வழிபாடு செய்வதில்லை. அவர்களுக்குக் கோயில்களும் அவ்வளவாக இருக்காது. கோடை காலத்தில் ‘அம்மன் கொடை’ எனும் விழா எடுப்பார்கள். வடமாவட்டங்களில் எவ்வாறென்று தெரியவில்லை, தென்மாவட்டங்களில் இவ்விழா உண்டு. அப்போதுதான் அம்மனுக்குக் களிமண்ணில் பூடம் எழுப்பி, அலங்கரித்து வழிபாடு செய்வர். இரண்டு நாள்கள் திருவிழா நடக்கும். அதிகபட்சம் ஒரு வாரத்திற்குப் பிறகு யாரும் அதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அந்தப் பூடம் வெயிலில் காய்ந்து மழையில் நனைந்து மண்ணோடு மண்ணாக மக்கிப்போகும். ஒருவருடம் கழித்து மீண்டும் இதேபோல் கொண்டாடுவார்கள். அவர்களின் அன்றாட வாழ்க்கையில் மதத்தின், தெய்வத்தின் இடம் இதுதான். தினசரி வழிபாடு என்பதே குறைந்தபட்ச பொருளாதார முன்னேற்றம் அடைந்தவர்களிடம் மட்டுமே நிகழ்கிறது. பொருளாதார வசதி கிடைத்த கிராமங்களில் நிலையான கோயிலைக் கட்டுகின்றனர்.
இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். இவ்வகை விழாக்களின் முக்கிய அம்சமே அதன் இசைதான். கொட்டு, உருமி, பறை என எதுவாக இருந்தாலும் அது தரக்கூடிய உணர்வும் உற்சாகமும் வேறு. இவர்களை மதமாற்றம் செய்து அமைதியான வழிபாட்டுக்குள் ஈடுபடுத்த இயலாது. உழைக்கும் வர்க்கத்தினரிடம் மௌனத்தை எதிர்பார்க்க முடியாது. சத்தமே அவர்களது மொழி. மேலும், இவை மதம் என்ற வகைமைக்குள் வராது. ஆனால், மதத்திற்குள் இணைத்து வைத்திருக்கிறார்கள், அவ்வளவுதான். இந்தியச் சூழலில் எது மதம் என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. முதலில் சமணம், பௌத்தம் என்றார்கள். பிறகு சைவம், வைணவம் என்றார்கள். அதை இந்து மதத்தில் இணைத்து விட்டார்கள். தற்போது புதிதாக ஆசீவகத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட எந்த அகழ்வாய்விலும் நிறுவனமயமாக்கப்பட்ட மதம் இங்கு இருந்ததற்கான எந்தச் சான்றுகளும் இல்லை.
இதுகுறித்த தெளிவு இருந்ததனால்தான் இரட்டைமலை சீனிவாசன் மத விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டவில்லை என்று நினைக்கிறேன். ஆதிதிராவிடர் பிரிவுக்குள் உள்ள அனைத்துப் பிரிவினரும் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுகின்றனர். அவர்களின் சமூக நிலை ஒன்றுதான். என்னைப் பொறுத்தவரை பொருளாதார ரீதியாகச் சுய சார்புடன் வாழ்வதுதான் முக்கியம். இத்தகைய திட்டங்களை அம்பேத்கரும் அயோத்திதாசரும் முன்வைத்திருந்தாலும் அது நடைமுறையில் இல்லை. அதற்கான வேலையைச் செய்துவிட்டு மதமாற்றத்தை முன்னெடுக்கலாம்.
எழுதுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு புத்தகங்களைத் தொகுத்தும் பதிப்பித்துமிருக்கிறீர்கள். இதற்கும் இயக்கவியல் முறையியலைத்தான் பின்பற்றுகிறீர்களா? வேறு காரணங்கள் உள்ளனவா?
முந்தைய கேள்விக்கான பதில்தான் என்னுடைய தொகுப்பு – பதிப்புப் பணிகள். ஜாதி குறித்துப் பேசும்போது அது நம் பண்பாடு என்பார்கள். அப்படிச் சொன்னவர்கள் பலர் தம் சமூகப் பண்பாட்டை மாற்றியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு, அயல்நாடு செல்வது சில சமூகத்தாருக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடல்கடந்து செல்வது அரசியல் – பொருளாதார அதிகாரத்தைப் பெற்றுத் தரும் எனத் தெரிந்ததும், தங்களை மாற்றிக்கொண்டார்கள். ‘பாலம்மாள்: முதல் பெண் இதழாசிரியர்’ (தடாகம் வெளியீடு) என்ற நூலைத் தொகுத்தேன். பார்ப்பன வகுப்பைச் சேர்ந்த இவர், வெளிநாடுகளுக்குச் சென்று, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பயணித்து தன் இதழில் பதிவு செய்கிறார். ஜாதியை எதிர்த்தும் எழுதுகிறார். சமூகப் படிநிலையில் மேல்நிலையில் இருப்பவர்கள், பண்பாட்டை நிலையாகப் பற்றிக்கொள்வது கிடையாது. சமூக – பொருளாதார அதிகாரத்தை முன்வைத்துப் பண்பாடு ரீதியாக நகர்ந்துகொண்டே இருக்கிறார்கள். இதைப் பதிவு செய்ய வேண்டும் என்றுதான் தொகுத்தேன்.
‘அறிவியல் கலைஞர் இராசேசுவரி 1906’ (தடாகம் வெளியீடு) நூலின் பின்னணியும் இதுதான். பெண் ஒடுக்குமுறை அதிகமிருந்த காலகட்டத்தில் அதை மீறி எழுதியவர்கள், செயற்பட்டவர்கள் உண்டு. இதற்கும் ஆதிதிராவிடர் விடுதலைக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம். இந்த நிலப்பரப்பில் அரசியல் மாற்றம் நிகழும்போது, மேல்நிலையில் இருந்தவர்கள் அதற்கேற்ற வகையில் தங்கள் சமூக அமைப்பை மாற்றிக்கொண்டனர். சதியொழிப்பு, விதவை மறுமணம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவை ஜாதியமைப்பை, மதத்தை அழிக்கிறது என்ற குரல்கள் எழவில்லை. ஆனால், ஆதிதிராவிடர்கள் அரசியல் – சமூக – பொருளாதார அதிகாரம் கோரும்போது அவர்கள் பதற்றமடைகிறார்கள்.
அரசியல் அதிகாரத்திற்காகத் தம்முடைய பண்பாட்டு வழக்கங்களை மாற்றியவர்களின் இரட்டை முகத்தையும், அச்சமூகத்துப் பெண்கள் தங்கள் பிரச்சினைகள் குறித்தும் ஜாதி குறித்தும் அறிவியல்பூர்வமாகப் பேசியிருப்பதையும் பதிவு செய்ய வேண்டுமென்பதற்காகத்தான் சில நூல்களைப் பதிப்பித்ததும் தொகுத்ததும். பாலம்மாள் ஜாதியை எதிர்த்து நிறைய எழுதியிருக்கிறார். விமர்சனங்கள் இருந்தாலும் அவரது சில செயற்பாடுகளைப் பதிவு செய்வது முக்கியம் என்று கருதினேன். நீலம் மறுவெளியீடாக வந்த ‘ஹரிஜன மகான்கள்’ நூலை எழுதியவரும் பார்ப்பனர்தான். அந்நூலில் அவர் குறிப்பிடும் ஆளுமைகள் அனைவரும் ஆதிதிராவிடச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அப்போதே எழுதியிருப்பார். அதுதான் அந்நூலின் மறுபதிப்பிற்குக் காரணம். இதே தேவையையொட்டி இன்னும் சில நூல்களும் வெளியிட நினைக்கிறேன்.
ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபாடு காட்டிவரும் நீங்கள் புனைவுகள் எழுத முயன்றிருக்கிறீர்களா?
ஜாதிகள் புனைவுகளால்தான் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன. எல்லா ஜாதிகளும் தொடக்கத்தில் ஒன்றாகத்தான் இருந்தன என்று முன்பு குறிப்பிட்டேன். பறையர்களில் கோலிய பறையர் என்ற பிரிவினர் உண்டு. அவர்களது தொழில் நெசவு. பிற்படுத்தப்பட்டவர்களில் கைகோளர் என்ற பிரிவினருக்கும் நெசவுதான் தொழில். இது எப்படிச் சாத்தியம்? உவர்நீரால் துணி வெளுத்து, பனையோலையால் புட்டில் செய்து விற்பனை செய்த சங்க கால இலக்கியங்கள் கூறும் புலைச்சியிடமிருந்து பரிணமித்தவள்தான் சுண்ணாம்பு உற்பத்தியும் பனையோலையால் கூடைகளும் தென்னை ஓலையால் கீற்றும் செய்யும் சாம்பவச்சி என்பது என் ஆய்வு முடிவு. ஆனால், இந்நால்வருக்கும் வெவ்வேறு புனைவுகள் கூறப்படுகின்றன.
தொழில் பிரிவினைதான் ஜாதி என்றால், படிநிலைப் படுத்தப்பட்ட பிரிவினரில் எப்படி இருவருக்கு ஒரே தொழில் இருக்க முடியும்? புனைவுகள் மூலம்தான் ஜாதியை நிலைநிறுத்தியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்கு வண்ணார்கள் பற்றிய கதைகள் உதவும்.
வண்ணார்களின் தொழில் ஒன்றுதான். ஆனால், ஆதிதிராவிட சமூகங்களுக்கான வண்ணார் வேறு, ஜாதி திராவிடர்கள் சமூகங்களுக்கான வண்ணார் வேறு. இரு தரப்பினருக்கும் மண உறவுகள் இருக்காது. இது ஏன்? ஜாதி திராவிடர்களின் வண்ணாருக்குச் சொல்லப்பட்டிருக்கும் புராணங்களைப் படித்தால், ஏற்கெனவே இருந்த வண்ணார் சமூகத்திலிருந்து பிரிந்து வந்ததாகத்தான் இருக்கும். அதாவது, வண்ணாருக்கு இரண்டு பிள்ளைகள், ஒருவர் சொந்த மகன், மற்றவர் வளர்ப்பு மகன். இந்நிலையில், சிவனுக்குத் துணி தேவைப்பட்டது. வண்ணார், சொந்த மகனை கௌரவமாக யானையிலும் வளர்ப்பு மகனைக் குதிரையிலும் அனுப்பினார். குதிரை வேகமாகச் சென்றதால் வளர்ப்பு மகன் கோயிலுக்குள் நுழைந்து சாதி இந்துக்களுக்கு வண்ணாரானார். யானையில் செல்வதற்குள் கோயில் அடைக்கப்பட்டதால் சொந்த மகன் ஆதிதிராவிடர்களுக்கு வண்ணாரானார். இப்படிப் பல கதைகள் உள்ளன. பிற வண்ணார்கள் பற்றிச் சொல்லப்படும் கதைகள் இவை. ஆதிதிராவிட சமூகங்களின் வண்ணார்கள் குறித்த கதைகளில் அவர்களுக்குள் இரத்த உறவு இருப்பதாகச் சொல்லப்படும். இவை குறித்தத் தெளிவு இருந்ததால்தான் “வண்ணார்கள் திராவிட இனத் தலைவர்கள்” என என் கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருப்பேன்.
இந்த வகையில் ஜாதியை நிலைநிறுத்துவதில் புனைவுகள்தாம் அதிகம் பங்காற்றியிருக்கின்றன. இதைக் கட்டுடைப்பதற்கு நமக்கு உரைநடைதான் தேவைப்படுகிறது. தலித் இலக்கியங்களில் புனைவுகள் இல்லாமல் இல்லை. இருப்பினும் அறிவியல் அறிஞர் போல் சமூகப் பிரச்சினைகளை ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. இருப்பினும், சோதனை முயற்சியாகச் சிலவற்றை எழுதி வைத்திருக்கிறேன். கதையாகவும், கவிதையாகவும். சமீபத்தில்தான் கவிதை எழுதத் தொடங்கினேன். நீலம் இதழில்தான் என் முதல் கவிதை ‘கருங் கழுதை’ என்ற புனைபெயரில் வெளியானது. ஏதோ ஓர் உள்ளூணர்வு, நான் கண்டிராத என் தந்தைவழி தாத்தாவின் நினைவு அதைத் தூண்டியது. கதையைச் செம்மையாக்க இன்னும் காலம் ஆகும். சொல்வதற்கு ஏராளம் இருக்கின்றன!
வழக்காறுகளாக, விடுகதைகளாக, பழமொழிகளாக மக்களை எளிதில் சென்றடைவது புனைவுகள்தாம். நீங்கள் சொல்கிறபடி புனைவுகளால்தான் ஜாதியத்தை நிலைநிறுத்தினர் என்றால், நாமும் புனைவுகளாலேயே அவற்றைக் கட்டுடைக்க முடியாதா?
ஒட்டுமொத்த சமூகமுமே புனைவு அல்லது அபுனைவு என்று ஒருசார்பாக இருக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். மாரி செல்வராஜின் ‘கர்ணன்’ திரைப்படம் வந்தபோது ‘மாரி செல்வராஜ் வன்முறையைத் தூண்டுகிறாரா?’ என்று இடதுசாரி தரப்பிலிருந்து ஒருவர் வாட்ஸப்பில் எழுதியிருந்தார். ‘அவர் யதார்த்தத்தைத்தான் சொல்லியிருக்கிறார். எப்படி வன்முறை என்கிறீர்கள்?’ என்று பதில் எழுதினேன். சான்றாக, போக்குவரத்து பற்றிய எனது நூலை முன்வைத்தேன். பேருந்தில் இவ்வளவு சிக்கல்கள் இருப்பது உண்மைதான் என்பதைப் புரிய வைத்தேன். புனைவுகள்தாம் எளிய மக்களுக்கானது எனும்போது புனைவாசிரியர்களுக்குச் சமூக அறிவியல் தெரிந்திருக்க வேண்டும். புனைவுகள்தான் மக்களை மடைமாற்றுகிறது என்பது என் கருத்து. புனைவு அளவுக்கு இல்லையென்றாலும், அதில் பகுதியளவுக்காவது உரைநடைகள் மக்களைச் சென்றடைய வேண்டும்.
புனைவு, அபுனைவுகளில் உங்களை அதிகம் பாதித்த எழுத்தாளர் என்று யாரைக் குறிப்பிடுவீர்கள்?
மார்க்ஸ், ஏங்கெல்ஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோரது எழுத்துகள் எப்போதும் பிடிக்கும். ஆப்பிரிக்க எழுத்தாளர் அமில்கர் கப்ராலின் ‘தத்துவம் எனும் ஆயுதம்’ நூல் அடிக்கடி வாசிப்பேன். அதில், சமூக விடுதலைக்கு முன்பு அந்தச் சமூகத்தைத் தெரிந்துகொள்வார். நம் ஜாதிய பிரச்சினைகளை அணுகுவதற்கு இது உதவியாக இருக்கும். திரும்பத் திரும்ப நான் படிப்பது, அம்பேத்கரின் ‘இந்தியாவில் சாதிகள்’ நூலும் மார்க்ஸின் ‘இயக்கவியல் பொருள்முதல்வாதம் வரலாற்றுப் பொருள்வாதம்’, ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ நூல்களும்தாம். இவற்றைப் படிக்கிற ஒவ்வொரு முறையும் புதிய அனுபவங்கள் ஏற்படும். ராகுல் சாங்கிருத்யாயனின் நூல்கள், சமகாலத்தில் இமையத்தின் எழுத்துகளைச் சொல்லலாம். அவரது ‘கோவேறு கழுதைகள்’, ‘வாழ்க வாழ்க’, ‘பெத்தவன்’ ஆகிய கதைகளைப் பலமுறை படித்திருக்கிறேன். கன்னட தலித் இலக்கியங்களும் படித்திருக்கிறேன். கவிதைகள் அதிகம் படித்ததில்லை. சுகிர்தராணியின் கவிதைகள் பிடிக்கும். குறிப்பாக, ‘ஊரின் கடைசியில் இருப்பதாக / நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் / நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன் / முதலில் இருப்பதாக’ என்ற வரிகள். புனைவாக அவர் சொல்லியதை நான் ஆய்வு ரீதியாக எழுதிப் பார்த்தேன். அதுதான் ‘பறையர் விஞ்ஞானமும் வினைஞர் பரிணாமும்’. சேரிகள்தானே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அக்ரஹாரம், ஊர் எல்லாம் பின்னால்தானே உருவாகின்றன. நான் / நாம் இதைத்தானே வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.
இப்போது நீங்கள் குறிப்பிட்டது போல் புனைவுகளிலிருந்து உங்களுக்கான கருப்பொருள் கிடைத்திருக்கிறதா?
அப்படியும் நடந்திருக்கிறது. புதுமைப்பித்தனின் ‘நாசகாரக் கும்பல்’ சிறுகதைதான் ‘ஆதி மருத்துவர் சவரத் தொழிலாளராக்கப்பட்ட வரலாறு’ நூல் எழுதத் தூண்டுதலாக இருந்தது. அக்கதையில் உள்ளது போலவே ஒரு சம்பவம் திருநெல்வேலியில் நடந்தது என்ற செய்தியில் தொடங்கிய தேடல், அடுத்தடுத்த கட்டத்திற்குச் சென்று விரிவான நூலாகிவிட்டது. அதேபோல் தற்செயல் ஒற்றுமையாக ஒரு விஷயம் நடந்தது. ‘தலித்துகளும் தண்ணீரும்’ நூல் எழுதி பல ஆண்டுகளுக்குப் பிறகு ராஜாஜி எழுதிய ‘முகுந்தன் பறையனான கதை’யைப் படிக்க நேர்ந்தது. இரண்டுக்கும் மையக் கரு, தலித்துகள் பொதுக் கிணற்றில் நீர் எடுக்கும் பிரச்சினைதான். இது ஆச்சரியமானது. ஒருவேளை இது முன்பே கிடைத்திருந்தால் இன்னும் கூடுதலாக எழுதியிருக்கலாமே என்று தோன்றியது.
தலைகீழ் நிகழ்வாக, ‘ஆதி மருத்துவர் சவரத் தொழிலாளராக்கப்பட்ட வரலாறு’ நூலில் பேசப்பட்ட விஷயங்களைக் கொண்டு பின்னாளில் இ.எம்.எஸ். கலைவாணனின் ‘ஒரு சவரக்காரனின் கவிதை மயிறுகள்’ நூல் வெளியானது.
தீண்டாமை கொடுமைகளின் விளைவாக ‘தனி – பொது’ என்பது சமூக நடைமுறையாக இருந்திருக்கிறது. காலனிய காலத்தில் தலித்துகளின் அரசியல் பங்கேற்பால் ‘தனி – பொது’ என்பது சமூக மாற்றம் – அரசியல் பிரதிநிதித்துவம் குறித்த விவாதமாக உருமாறுகிறது. காந்தி அம்பேத்கர் இடையிலான புனா ஒப்பந்தத்தையொட்டி அது தீவிரமடைந்து, இன்றும் தொடர்கிறது. உங்கள் பார்வையில் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் எப்போது ‘தனி’ சாத்தியம், எங்கே ‘பொது’ தேவை?
ஜாதியக் கட்டமைப்பின் அடிப்படையே பிறப்புவழி தனித்திருக்கச் செய்வதுதான். பிராமணர்களும் ஜாதி திராவிடர்களும் ஜாதியக் கட்டமைப்பின் அரசியல் அதிகாரத்திலும், பொருளாதாரத்திலும் வலுவாய் நிலைத்து நிற்பதையும், அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளை ஆதிதிராவிடர்களுக்கு மறுப்பதையும், அவர்கள் அமைப்பாய்த் திரண்டுதான் செய்கின்றனர். அவர்களுக்குள் பகையும் இருக்கிறது. அதேசமயம், சமரசமும் ஒத்துழைப்பும் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் ஆதிதிராவிட சமூகங்களும் அரசியலிலும் பொருளாதாரத்திலும் அமைப்பாய்த் திரள வேண்டியது தவிர்க்க இயலாதது. அதேசமயம் தனித்து இயங்குவது குறித்த தெளிவு வேண்டும். ‘தனி’, ‘பொது’ என்ற விவாதம் காலனியாட்சிக் காலந்தொட்டே நடைபெறுகிறது.
தனித்தனி தீவுகள்போல் இயங்கும் ஜாதியக் கட்டமைப்பில் பிரிட்டிஷாரின் நவீன உற்பத்தி முறை, அரசு, நிர்வாகம் போன்றவை ‘பொது’க்களை உருவாக்கியது. அதிகாரமும் பொருளாதாரமும் பாரம்பரிய நிலையிலிருந்து நவீனத்துக்குப் பரிணமித்தபோது உருவான பொதுக்களில் ஜாதிபேதமற்று அனைவருக்குமான உரிமை வழங்கப்பட்டது. பள்ளிக்கூடம், பாராளுமன்றம், போக்குவரத்து எனப் ‘பொது’க்களைப் பயன்படுத்துவதைப் பிராமணர்கள் பிராமணரல்லாதோருக்கும்; முன்னவர்கள் இருவரும் ஆதிதிராவிடர்களுக்கும் அப்பொதுக்களில் உரிமைகளை மறுத்தனர். பொதுக்களில் பங்கேற்க, ஜாதி சங்கங்களும், பிராமணரல்லாதோர் என்ற ‘பெருங்கூட்டணியும்’ ஆதிதிராவிட அமைப்புகளும் தனியாக அமைப்பாய்த் திரண்டனர். பிராமணரல்லாத அனைவரும் தனியாய்த் திரண்டபோதிலும் சுயமரியாதை இயக்கத்தோடு ‘கூட்டணி’யில் இயங்கினர். ஜாதி, ஆதி திராவிடர்களுக்குள் நட்புறவு இருந்ததையும் கவனத்தில், நினைவில் கொள்ளவும். அம்பேத்கர் முன்வைத்த தனித்தொகுதி முறையின் இலக்கும், அயோத்திதாசர், எம்.சி.ராஜா, இரட்டைமலை சீனிவாசன், ஆர்.வீரையன் தொடங்கி இன்றுவரை நீடிக்கும் போராட்டங்களின் அடிப்படை இலக்கும் பொதுக்களில் உரிமைகளையும் பங்குகளையும் பெறுவதே. அம்பேத்கரின் தனிக்குடியேற்றத் திட்டமும் இம்மக்கள் ஆதிக்க ஜாதிகளின் அணுதின ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபட்டு நிம்மதியாய் வாழ்வதற்கே. ஆதிதிராவிடருக்கெனத் தனிக்கிணறு, தனிக்கோயில், தனிப்பள்ளிக்கூடம் போன்றவற்றை உருவாக்குவதா? அல்லது பொதுக்கிணறு, பொதுக்கோயில், பொதுப் பள்ளிக்கூடத்தில் அனுமதிப்பதா? என்ற விவாதமும் அன்றுதொட்டு நீடிக்கிறது. இதற்குச் சமீபத்திய உதாரணம், ஆதிதிராவிட நலப் பள்ளிகளைப் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் இணைப்பதா, கூடாதா என்ற விவாதம். இதில் ஆதிதிராவிடர்களிடம் முரண்பட்ட கருத்தும் தோன்றியது.
சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நீடிக்கிற இவ்விவாதத்தின் அடிப்படைக் கேள்வியே, ஆதிதிராவிடர் சமூகங்களின் தேவைகளை, உரிமைகளை எந்த வழிகளில் நிறைவேற்றுவது? தனிவழியா, பொதுவழியா? இரண்டுக்கும் ஆதரவும் எதிர்ப்பும் உண்டு. இந்த முரண்பட்ட நிலைப்பாடுகளின் அடிப்படை நோக்கம் ஆதிதிராவிடர் விடுதலைதானே! ஆதிதிராவிடர்களுக்குத் ‘தனி’ என்ற ஏற்பாட்டு முறை அவசியம்தான். ஏனென்றால், தனிவழி தேவைகளை நிறைவேற்றும். ஆனால், ஜாதியால் ஏற்பட்ட தீண்டாமையை நீடிக்கச் செய்யும். அதேசமயம், எல்லா இடங்களிலும் ‘தனி’ அவசியமா? ஜாதி வேறுபாடு இல்லாமல் இயங்கும் பொதுக்களிலும் அரசியல் சாசனத்தின் அடிப்படையிலும் மனிதநேயத்தின்படியும் ஜனநாயக அரசியல் கண்ணோட்டத்தில் ஆதிதிராவிட சமூகங்களை அரவணைக்கும் பொதுக்களிலும் ‘தனி’க்கு அவசியமில்லையே!
இதுபோல், ஆதிதிராவிட சமூகங்களின் முன்னேற்றத்துக்காக அக்காலத்தில் உருவாக்கப்பட்ட தொழிலாளர் நலத்துறையிலும், இக்காலத்திலுள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறையிலும் ஆதிதிராவிடர்களைப் பணியில் அமர்த்துவதா? அல்லது பிற சமூத்தினரையும் அமர்த்துவதா? என்ற விவாதமும் அக்காலந்தொட்டு நிகழ்கிறது.
ஆதிதிராவிட சமூகங்களைச் சேராத அதேசமயம் சட்டங்கள், விதிகள், அரசாணைகள் ஆகியவற்றைப் பின்பற்றுபவர்களும், ஜாதி சார்பற்று வளர்க்கப்பட்டவர்களும், ஜனநாயக அரசியல் நிலைப்பாடு கொண்டவர்களும் ஆதிதிராவிடர்களுக்கான துறைகளில் அம்மக்களுக்காக உளப்பூர்வமாகப் பணியாற்றுகிற நபர்களையும் நான் பார்க்கிறேன்; ஆதிதிராவிடர்களுக்காகப் பணியாற்றாமல் பதவி, பணம் எனத் தன்னலத்துடன் செயல்படுகிற ஆதிதிராவிடர்களையும் பார்க்கிறேன். இந்த உண்மையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஜாதி திராவிடர்கள் தங்களின் ஆதிக்க மனநிலையில் இருந்து விடுபடுகிற வரையிலும், தங்களின் ஆதிக்கத்தைக் கைவிடுகிற வரையிலும் ஆதிதிராவிடர்களுக்குத் தனித்தொகுதி, தனிக்குடியேற்றம் போன்ற ‘தனி’க்கள் அவசியம். இவை குறித்து கட்டுரைகளாகவும், அம்பேத்கரின் தனித்தொகுதியை ஆதரித்து இடதுசாரியான பி.டி.ரணதிவே ஆங்கிலத்தில் எழுதியதைத் தமிழாக்கி அக்காலத்தில் வெளியானதையும் புதுவிசையில் வெளியிட்டேன். பொதுக்களில் ஆதிதிராவிடர்களை அனுமதிப்பது சமூகம் முழுமைக்கும் நிகழ்கிறபோது இந்தத் ‘தனி’க்களின் அவசியம் ஏற்படாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆதிதிராவிடர்கள் பொதுத் தொகுதிகளில் வெற்றிபெறுவதும், பிற துறைகளில் அமைச்சர்களாவதும், முதலமச்சர்களாகவும், பிரதமராகவும் மாறுகிறவரை இந்தப் பிரச்சினையும் நீடிக்கும். இந்த அதிகாரம் ஜனநாயகச் சக்திகளின் ஆதரவால்தான் சாத்தியப்படும். அவர்களுடன் கூட்டணியும் வேண்டும்.
தனியா, பொதுவா என்ற கேள்விக்கு ஒற்றைப் பதிலைக் கூற இயலாது. இரண்டும் அந்தந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப அவசியமாகும். இவற்றின் இலக்கு என்னவென்றால், எம்.சி.ராஜா, ஆதிதிராவிடர் பெயர் மாற்ற விவாதத்தின்போது “இப்பெயரின் நோக்கம் ஆதிதிராவிடர்களை ஜாதி திராவிடர்களுக்கு இணையாக உருவாக்குதல்தான்” என்று கூறியதுதான். அதாவது, ‘தனி’ என்பதன் இலக்கு ‘பொது’வில் கலப்பதுதான். இதற்கு அம்பேத்கர் முன்வைத்த ‘பொது’ சிந்தனையும் அனைவருக்கும் வேண்டும்..
இன்னும் இச்சமூகத்தில் இவ்விஷயங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் இருக்கின்றன அல்லது இவற்றை இன்னும் விரிவான தளத்தில் விவாதிக்க வேண்டும் என்று நினைக்கும் புள்ளிகள் எவை?
நிறைய உண்டு. ஆனால், ஒற்றை மனிதரால் எல்லாவற்றையும் செய்ய முடியாதென்ற தெளிவு இருக்கிறது. முற்காலங்களில் யார் யார் என்னென்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதைச் சொல்லி, அதிலுள்ள நிறை குறைகளைச் சுட்டிகாட்டுவதிலிருந்துதான் மார்க்ஸ் தொடங்குகிறார். அம்பேத்கரும், ‘இந்தியாவில் சாதிகள்’ நூலில் ஜாதிய அமைப்புக் குறித்துத் தனக்கு முன்னால் யாரெல்லாம் எப்படி அணுகியிருக்கிறார்கள் என்பதைச் சொல்லிவிட்டுத்தான் தன்னுடைய கருத்து இவற்றிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதை எடுத்துரைக்கிறார். அவ்விருவரும் சரியான முடிவுகளை அறிவித்தனர். ஓர் ஆய்வாளர்தான் முதலும் முடிவும் என்பதல்ல. ஏற்கெனவே இருந்த ஆய்வை அவர் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார். அவ்வளவே.
சமூக அறிவியல் ஆய்வுகளில் மட்டுமல்ல அறிவியலிலும் அப்படித்தான். போக்குவரத்தில் கூட இரயில் கண்டுபிடிப்பதற்கு முன்பு யாரெல்லாம் அதுகுறித்து வேலை பார்த்தார்கள், அதன் அடுத்த கட்டம் என்ன என்ற தொடர் செயற்பாடுகளையடுத்துதான் இரயில் உருவாக்கப்பட்டது. இப்படித்தான் மார்க்ஸும் அம்பேத்கரும் செய்தார்கள். நாம் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். குலதெய்வங்கள் குறித்துச் சொன்னேன் அல்லவா, இதுகுறித்து என்ன ஆய்வு நடந்திருக்கிறது? கல்விப் புலங்களில் என்ன நடக்கிறதென்றால், ஒவ்வொரு ஜாதிக்கும் என்ன புராணங்கள் சொல்லப்பட்டிருக்கிறதென்று தனித்தனியாகவே ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் தொடர்ந்து குலதெய்வ, அம்மன் வழிபாட்டைக் குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது. ஏன் பெரும்பாலான அம்மன் திருவிழாக்கள் கோடை காலத்தில் நடைபெறுகின்றன?
உலகம் முழுக்க மாயவித்தை என்றொன்றைச் சொல்வார்கள். அதாவது, அறிவியல் வளராத காலகட்டத்தில் நமக்கு என்ன வேண்டுமோ, அதைப் போலச் செய்து வழிபட்டால் அது கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை. அப்படி மழை வேண்டி நடப்பவைதாம் இத்திருவிழாக்கள். அறிவியல் வளர்ந்த பிறகும் நாம் அதைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். தொடக்கத்தில் நாம் ஒன்றாக இருந்த காரணத்தால்தான் குலதெய்வங்களும் ஒன்றாக இருக்கின்றன. இதை ஆய்வுக்குட்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இளைஞர்கள் இந்தத் தளங்களில் கவனம் செலுத்த வேண்டும். புனைவை நாம் அதிகம் கொண்டாடிவிட்டோம். சாகித்ய அகாதமி விருது உட்பட அரசும் புனைவுகளைக் கொண்டாடுகிறது. சமூகப் பிரச்சினைக்குத் தீர்வு காண நாம் ஆய்வை நோக்கித் திரும்ப வேண்டும்.
குலதெய்வங்கள் பற்றிச் சொன்னீர்கள், ஆனால், குலதெய்வ வழிபாடுதான் ஜாதிய கட்டமைப்பைப் பாதுகாக்கிறது. ஆதலால் அவ்வழிபாட்டைக் கைவிடுங்கள் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகிறதே.
ஏற்றத்தாழ்வான ஜாதிகளுக்கு ஒரே குலதெய்வம் இருப்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். முன்பு மழைச் சடங்கு என்பதைப் பற்றிச் சொன்னேன். அதுபற்றிய ஆங்கிலேயர் குறிப்பில், அது பறையர் பகுதிகளில் நடக்கும் விழா; பத்து நாட்கள் நடக்கும்; வண்ணார் உள்ளிட்ட பிற சமூகத்தினரும் கலந்துகொள்வர் என்று விவரிக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய ஆய்வு மாணவர் தண்டபாணி தன் ஆய்வேட்டில், அத்திருவிழா பறையர் பகுதிகளில் உள்ள மாரியம்மன் கோயில்களில் நடக்கும்; வண்ணாரும் வெட்டியாரும் அதில் சடங்குகள் செய்வர்; விழா முடிந்து கணக்கு வழக்குகளையெல்லாம் பறையர்கள் பார்த்துக்கொள்வர்; பறையர் பகுதியில் நடக்கும் இத்திருவிழாவில் ஜாதி திராவிடர்களும் கலந்துகொள்வர் என்பவற்றைக் குறிப்பிட்டுள்ளார். இதை எப்படிப் புரிந்துகொள்வது? நாம் தொடக்கத்தில் ஒன்றாக இருந்தோம், பின்னாட்களில்தான் பிரிந்து சென்றோம் என்பதற்கான களச் சான்று இது. இதுகுறித்த ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. இதைப் பரிணாமமாகப் பயில வேண்டும். கடந்தகால வரலாற்றைப் பரிணாமமாகப் புரிந்துகொண்டால் ஜாதி சிக்கல்களுக்குத் தெளிவு கிடைக்கும். அப்படிச் செய்யாமல் இவற்றை வெறும் புனைவாகப் பேசுவதால்தான் நம் சமூகப் பிரச்சினைகளும் நீடித்துக்கொண்டிருக்கின்றன.
இன்றைய டிஜிட்டல் காலத்தில், காத்திரமான எழுத்துகள் அருகிவிட்டன. சமூக அக்கறை இல்லாமல், பொறுப்பு இல்லாமல், தனிநபர் காழ்ப்பையே வெளிப்படுத்துகிறார்கள். ஆய்வு ரீதியாக நான் எழுதுவது குறைவென்றாலும், நிறைய வாசிக்கிறேன். கிட்டத்தட்ட 1860களிலிருந்து வெளியான பத்திரிகைகள், 1880களிலிருந்து வெளிவந்த ஆளுநர் நடவடிக்கைகள், 1919 தொடங்கி 2000 வரையிலான சட்டமன்ற விவாதங்கள் ஆகியவற்றைப் படித்திருக்கிறேன். இவற்றில் வெளிப்படும் பொறுப்புணர்வு இன்றைய காணொலிகளில் இல்லை. இப்படியான சூழலில் குல தெய்வத்தையொட்டிய சாதியப் பெருமைகள் எழத்தான் செய்யும். இதை ஆராய்ச்சிகளால்தான் கட்டுடைக்க இயலும்.
உங்களது அடுத்தகட்ட ஆய்வுத் திட்டங்கள் என்னென்ன?
மெய்யற்ற ஜாதியைக் கட்டிக்காக்கத்தான் அனைவரும் பொய்யாய் வாழ்கிறோம். பொய்களால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தில் பொய்களைத் தவிர வேறென்ன இருக்க முடியும். ஒவ்வொருவரும் தாங்களல்லாத மூன்றாம் நபர்களுக்காக வெவ்வேறு வேடம் தரிக்கிறோம்; இடம், பொருள் பார்த்து நடிக்கிறோம்; இந்த நடிப்பைத் தலைமுறைத் தலைமுறையாய்க் கடத்துகிறோம்; எதிர்காலத் தலைமுறைக்கும் பொய்யாய் வாழக் கற்றுக் கொடுக்கிறோம். ஒவ்வொருவரின் மானமும் ஆணவமும் மூன்றாம் நபர்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. நமக்காக வாழாமல் மூன்றாம் நபர்களுக்காகவே பொய்யாய் வாழ்கிறோம். இவற்றின் பின்னணியில்தான் ஆணவக் கொலைகளையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆயிரமாயிரம் பொய்யைச் சொல்லித்தானே நம் குடும்ப வாழ்க்கையைப் பொய்யிலேயே தொடங்குகிறோம்.
ஜாதியும் வர்க்கமும் பார்த்துப் பார்த்து மணவுறவுகளைத் தீர்மானித்து இறுதியில் மணவிழா அழைப்பதழில் “கடவுள்” அருளியதாகப் பச்சையாய்ப் பொய்களை அள்ளிவிடுகிறோம். ஜாதியைக் கடவுளின் படைப்பு என்றும், பொருளியல் வளத்தைக் கடவுளின் ஆசி என்றும் படித்தவர்களும்கூட நம்புகின்றனர். பிறர் உழைப்பைச் சுரண்டியும், கொள்ளை அடித்தும், கடவுளைக் கூறுகூறாய் விற்றும் பொருளீட்டுவதைக் கடவுளின் ஆசி என ஒப்புக்கொள்ள முடியுமா? ஜாதியும் வர்க்கமும் இல்லாத ஒரு சமூகத்தில்தான் இயல்பான, மெய்யான வாழ்க்கை உருவாக முடியும். அங்குதான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான அன்பும் காதலும்கூட இருக்க முடியும்.
ஜாதியும் வர்க்கமும் பொய்கள் என்பதை அம்பேத்கரின் ‘இந்தியாவில் சாதிகள்’ நூலிலும், குடும்பக் கட்டுமானத்தை ஏங்கெல்ஸின் ‘குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்’ நூலிலும், குடும்ப உறவுகள் அனைத்தையும் பணம்தான் தீர்மானிக்கிறது என்பதைக் மார்க்ஸின் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யிலும், ஆணாதிக்கத்தைப் பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்’ நூலிலும் எடுத்துரைத்ததுபோல், ஆதிதிராவிடர்களும் ஜாதி திராவிடர்களும் திராவிட இனக்குழுவில் தோன்றியதையும், அவர்களுக்குள் வர்க்கம் உருவானதையும் ஆராய வேண்டுமென்பது என் பெருங்கனவு. இதற்கு அம்பேத்கர், மார்க்ஸ், ஏங்கல்ஸ், பெரியாரின் பார்வைகள் எனக்குப் பெருந்துணைபுரியும்.
முன்பே சொன்னது போல் திணைச் சமூகங்களுக்குள் காதலும் புறமணமும் தாராளமாக இருந்தன. இவை ‘தூய இரத்தம்’, ‘தனி ஜாதி’ என்ற கற்பனையை, பொய்யைக் கட்டுடைக்கின்றன. இது எப்படி ஏற்றத்தாழ்வான அமைப்பாக மாறியது என்பதை எழுத வேண்டும். காதல், குடும்பம் என மாறிவரும் உறவமைப்புகளைப் புரிந்துகொள்வதற்காக அவ்வப்போது சில கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்: ‘நவீன கால காதல் உரையாடல்’, ‘காந்தி ஆதரித்த சத்தியவதியின் காதல்’ (காலச்சுவடு, அக்டோபர் 2019), ‘கமுக்கக் காதல் கொலைகள் 1863 – 1950’ (காலச்சுவடு, மார்ச் 2021). என்னுடைய எல்லா ஆய்வுகளும், தொகுப்புகளும், பதிப்புகளும் இவை குறித்தத் தேடல்களின் அங்கங்கள்தாம். இவற்றின் இறுதி இலக்கு இதுதான்: ‘ஜாதிகளின் பரிணாமமும் பரிமாணமும்’.
l
கோ.ரகுபதியின் படைப்புகள்
- ஆதி மருத்துவர் சவரத் தொழிலாளராக்கப்பட்ட வரலாறு
- இரட்டைமலை சீனிவாசனின் மத நிலைப்பாடு
- காந்தியின் ஸநாதந அரசியல்
- காவேரிப் பெருவெள்ளம் 1924
- தலித் பொதுவுரிமைப் போராட்டம்
- தலித்துகளும் தண்ணீரும்
- தீண்டாமைக்குள் தீண்டாமை (புதிரை வண்ணார் வாழ்வும் இருப்பும்)
- பறையன் பாட்டு (தலித்தல்லாதோர் கலகக் குரல்)
- பூனா ஒப்பந்தம் (தலித்துகளின் தோல்வியை கொண்டாடிய காந்தி)
- போக்குவரத்து உருவாக்கமும் ஜாதிகளின் உருமாற்றமும்
பதிப்பு
- ஆனந்தம் பண்டிதர் (சித்த மருத்துவரின் சமூக மருத்துவம்)
- ஹரிஜன மகான்கள்
தொகுப்பு
- அறிவியல் கலைஞர் இராசேசுவரி 1906
- திராவிடப் பத்திரிகைகளில் ஆதிதிராவிடர் ஆவணங்கள்
- திராவிட மதம்
- பாலம்மாள் (முதல் பெண் இதழாசிரியர்)