இந்த நாடு
நாம் பிறப்பதற்கு முன்பே நம்மைப் புதைத்துவிடுகிறது.
நம் பெயர் சொல்லி அழைப்பதற்கு முன்பே,
இறப்புச் செய்தியால் நம்மை அழைக்கிறது.
நம்மை உருவாக்குகிறது.
பெண்களை நரம்பியல் சிக்கல்களுடன்.
நரம்பியல் சிக்கல்களை அவர்களின் மூடி மறைக்கும் தன்மையுடன்.
சட்ட அமலாக்கத்தை உடைந்த அமைப்புடன்.
உடைந்த அமைப்பை அதீத அதிகாரத்துடன்.
அதிகாரத்தை மனைவிகளைச் சுட்டு வீழ்த்தும் துப்பாக்கிகளுடன்.
தொலைபேசிகளைக்
காணாமல் போனவர்களின் விவரங்களுடன்.
காணாமல் போனவர்களின் விவரங்களைக் கண்டறியப்படாத யுக்தியுடன்.
வாகன கூடங்களைப் படிக்க வேண்டிய குழந்தைகளுடன்.
வாகனங்களை ஆவணங்களுடன்.
ஆவணங்களை வழக்குத் தொடர முடியாத அதிகாரத்துடன்.
தபால் நிலையங்களை ஆயுதங்களுடன்.
வணிக வளாகங்களை ஆள்கடத்தல்காரர்களுடன்.
குளியலறைகளைப் படுகொலைக் கூடங்களாக.
படுகொலைகளை அழியாத் தன்மையுடன்.
கேளிக்கைக் கூடங்களைப் போதை மருந்துகளுடன்.
தெருக்களைப் போதிய வெளிச்சமின்மையுடன்.
போதிய வெளிச்சம் இருப்பினும்
உங்களுக்குப் பாதுகாப்பு இன்மையுடன்.
ஊபர் வாகனங்களைப் பயத்துடன்.
டேக்சிஃபை வாகனங்களை மனச்சிதைவுடன்.
உலாவல்களை மின் துப்பாக்கிகளுடன்,
குழுக்களில் பொது வெளிகளில்
இப்படி நடக்குமென்று நினைத்துப் பார்த்திராத இடங்களில்.
கல்லறைகளைப் பெண்களுடன்,
மிக விரைவாக,
மிகக் கொடூரமாக,
பெயரிட மிகவும் பயங்கரமானதாக,
ஆவணப்படுத்தவும் கண்டறியவும்
ஆபத்து மண்டலங்களாகக் குறிக்கப்படவுமே கூட.
பாதுகாப்பான இடங்களாக மாறு வேடமிட்ட ஆபத்து மண்டலங்கள்.
பாதுகாப்பான இடங்களைக் கொலைகாரர்களுடன்.
கொலைகாரர்களைக் கணவரின் அம்சங்களுடன்.
பள்ளிகளைச் சிறாரைத் துன்புறுத்தும் காமுகர்களுடன்
காமுகர்களைச் சிறார் பணிப் பட்டப்படிப்புடன்
விரிவுரை அரங்குகளைப் பாலியல் சீண்டல்களுடன்.
பேருந்து நிறுத்தங்களைக் கொலைகாரர்களுடன்.
கட்டுமானத் தளங்களை
‘வேண்டாம்!’ என்பதைப்
புரிந்துகொள்ள முடியாத முதிய ஆண்களுடன்.
தேவாலயங்களை
உங்கள் பிரார்த்தனைகளைப் பயன்படுத்தி
உங்கள் கைகளை உயர்த்தி
மண்டியிடச் செய்யும் கொடூரர்களுடன்.
[ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும், எங்களில் ஒருவர் இதிலிருந்து தப்பிக்க முடியாது மரணிக்கிறார்]
இந்த நாடு நமது கண்ணியத்தை அரைக்கம்பத்தில் தொங்கவிடுகிறது.
கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாக, தொகுதிகளாக
ஆய்வு மாதிரிகளாக, பரிசோதனைக்காக,
நமது உடலை ஆட்டுவிக்கிறது.
என்னுடைய இருப்பு,
என் தாயின் தொண்டையை
ஆறடி பள்ளத்தில் புதைத்துவிட்டு
அத்துயரை உதவித்தொகையாலும்
திருத்தப்பட்ட சட்டங்களாலும் ஈடுசெய்யும்
உங்கள் போதனைகளுக்கானது அல்ல.
திட்டமிடப்படும் முன்பே காலாவதியாகும் கொள்கைகள் அவை.
இந்த நாடு
நாம் பிறப்பதற்கு முன்பே நம்மைப் புதைத்துவிடுகிறது.
நம் பெயர் சொல்லி அழைப்பதற்கு முன்பே,
இறப்புச் செய்தியால் நம்மை அழைக்கிறது.
கொலேகா புடுமா (koleka puduma)
கொலேகா புடுமா தென்னாப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத்தில் 1993இல் பிறந்தவர். கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் நாடகம் மற்றும் செயல்திறன் துறைகளில் பி.ஏ பட்டத்தை முடித்திருக்கிறார். 2016இல், ‘தண்ணீர்’ எனும் கவிதைக்காக PEN Student Writing Prize அவருக்கு வழங்கப்பட்டது. புடுமா படைப்புகளின் கருப்பொருள்களாக காதல், வினோதம், காலனித்துவப் போராட்டம், நிறவெறியின் மரபு, ஆணாதிக்கத்தின் குறுக்குவெட்டு அடையாளங்கள் போன்றவை இருக்கின்றன. தற்போது டிசைன் இன்டாபா எனும் நிறுவனத்தில் நாடகத் தயாரிப்பாளராகப் பணிபுரிகிறார். Okay Africa என்ற ஊடகம் 2019ஆம் ஆண்டின் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராக புடுமாவைத் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.