லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ் கவிதைகள்

- லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ் | தமிழில் : இந்திரன்

கனவுகள் 1

என் கனவுகளை எடுத்து
ஒரு வெண்கலப் பூஜாடியைச் செய்கிறேன்.
மையத்தில் ஓர் அழகிய சிற்பத்தை வைத்திருக்கும்
வட்ட வடிவமான ஒரு நீரூற்றைச் செய்கிறேன்.
ஒரு பாடலோடு கூடிய
ஓர் உடைந்த இதயத்தைச் செய்கிறேன்.
உன்னிடம் கேட்கிறேன்
என் கனவுகளை நீ புரிந்துகொள்வாயா?
சில நேரங்களில் நீ ஆம் என்று சொல்கிறாய்.
சில நேரங்களில் நீ இல்லை என்று சொல்கிறாய்.
இரண்டில் எதுவாக இருந்தாலும்
எனக்குக் கவலையில்லை.
நான் கனவு காண்பதைத்
தொடர்ந்துகொண்டே இருக்கிறேன்.

கனவுகள் – 2

கனவுகளை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்
ஏனெனில் கனவுகள் செத்துப் போனால்
வாழ்க்கை என்பது சிறகொடிந்து
பறக்க முடியாத ஒரு பறவையாகிவிடும்.

கனவுகளை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்
ஏனெனில் கனவுகள் போய்விட்டால்
வாழ்க்கை என்பது பனியில் உறைந்து போன
ஒரு பாழ் வயலாகி விடும்.

கனவுகள் 3

கனவு காண்பவர்களே
உங்களது எல்லாக் கனவுகளையும்
என்னிடம் கொண்டு வாருங்கள்.
உங்களது இதயத்தின்
எல்லா இனிமையான பாடல்களையும்
என்னிடம் கொண்டு வாருங்கள்.
அவற்றை உலகின்
கரடுமுரடான கைகளில் படாமல்
ஒரு நீலமேகத் துணியில்
சுற்றி வைத்துக்கொள்கிறேன்..

என் மக்கள்

இரவு அழகானது
எனது மக்களின் முகங்களைப் போல்.
நட்சத்திரங்கள் அழகானவை.
எனது மக்களின் கண்களைப் போல்.
சூரியனும்கூட அழகானது
எனது மக்களின்
ஆன்மாவும்கூட அழகானதுதான்.

புதைகுழிகள்

நாங்கள் அவர்களின்
புதைகுழிகளைக் கடந்து சென்றோம்.
அங்கிருந்த செத்துப் போன மனிதர்கள்
வெற்றி பெற்றவர்களோ
தோல்வியடைந்தவர்களோ
யாரையும் சட்டை செய்யவே இல்லை.
யார் வெற்றி பெற்றார்கள் என்பதை
அவர்களால்
பார்க்க முடியாது.

பாடல்கள்

இருட்டில்
அவளது பாடல்களைப் பாடிக்கொண்டு
அங்கே அமர்ந்திருந்தேன்.
அவள் சொன்னாள்:
“வார்த்தைகள் எனக்குப் புரியவில்லை” .
நான் சொன்னேன்
“அங்கு வார்த்தைகளே இல்லை”.

கனவு மாறுபாடு

நான் கைகளை அகல வீசுகிறேன்
சூரியனில் ஏதோ ஓர் இடத்தில்.
வெள்ளையான பகல் முடியும்வரை
சுற்றிச் சுற்றி நடனம் ஆடுவதற்காக.
பிறகு குளிர்ந்த மாலையில்
உயர்ந்த மரத்தின் கீழே ஓய்வெடுக்கிறேன்.
இரவு
என்னைப்போல் கறுப்பாக
மெதுவாகப் பரவும்வரை.
நான் கைகளை அகல வீசுகிறேன்
சூரியனின் முகத்துக்கு நேரே.
சுற்றிச் சுற்றி நடனமாடு
பகல் வேகமாக முடியும்வரை.
ஒல்லியான உயர்ந்த மரத்துக்குக் கீழே
வெளிறிப்போன மாலையில் ஓய்வெடு.
இரவு
மிருதுவாக
என்னைப் போல் கறுப்பாக
வந்துகொண்டிருக்கிறது.

கறுப்பு இயேசுநாதர்

இயேசுவானவர்
ஒரு கறுப்பனாகத் திரும்பி வருவாரென்றால்
அது நல்லதல்ல.

அவர் சென்று பிரார்த்தனை செய்ய முடியாத
தேவாலயங்கள் இங்கு ஏராளமாய் உள்ளன.
எவ்வளவு புனிதப்படுத்தப்பட்டாலும்
நீக்ரோக்களுக்கு
அங்கு வாயில்கள் மறுக்கப்படும்.
அங்கே இனம்தான் பெரிதே தவிர
சமயம் அல்ல.
ஆமாம்
இதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.
இயேசுவே
நீர் நிச்சயமாக மீண்டும்
சிலுவையில் அறையப்படுவீர்கள்.

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!