“யார் சொல்லிருந்தாலும்
எங்கு படித்திருந்தாலும்
நானே சொன்னாலும்
உன் புத்திக்கும்
பொதுஅறிவுக்கும்
பொருந்தாத
எதையும் நம்பாதே.”
– பெரியார்
தந்தை பெரியார் 1942ஆம் ஆண்டு ‘பெண் ஏன் அடிமையானாள்?‘ என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதைப் போல பெண்களுக்குச் சமத்துவம் கோரும், பெண்களுடைய உரிமைகளைப் பேசும், பெண்களின் பிரச்சனைகளுக்கு ஆதரவாக வாதாடும் புத்தகம் இதுவரை உலகில் எங்கும் வெளிவந்ததில்லை.
திராவிட ஆட்சி தொடங்கிய பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருந்தன.
பிரித்தானியர்களின் சமஸ்தானமாக இயங்கிய புதுக்கோட்டை சமஸ்தானம், 1948ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1987இல் எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு திமுக ஆட்சி அமைத்தது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பின் (1989ஆம் ஆண்டு) திமுகவிடம் ஆட்சிப் பொறுப்பு வந்தது. தேர்தல் வாக்குறுதிகளில் இருந்த முக்கியமான விஷயங்களை நிறைவேற்ற ஆணையிட்டிருந்தனர். அதில் முக்கியமாகப் பார்க்கப்பட்டது, பெண்களுக்கும் சொத்தில் சமஉரிமை, முதல் பட்டதாரிகளுக்கு இலவசப் பட்டப்படிப்பு, அரசு வேலைவாய்ப்பில் 30 சதவீதம் ஒதுக்கீடு, சத்துணவில் முட்டை ஆகிய திட்டங்களை கருணாநிதி செயல்படுத்தினார்.
மதுவிலக்கு அன்றைக்கு முக்கியமான பிரச்சினையாகப் பார்க்கப்பட்டது. சில்லறை விற்பனைக் கடைகளில் அந்தந்தக் கடையின் உரிமையாளர்களே போலியான மதுக்களைத் தயார் செய்துவந்தனர். பின்னர் திமுக கடைகளை ஏலம் எடுத்து நடத்தும் முறையை அறிமுகப்படுத்தியது. அப்போது மிகவும் அதிக விலைக்கு மது கிடைத்ததால் கள்ளச்சாராயம் அருந்துவோர் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. இதனால் திமுக அரசே குறைந்த விலைக்கு மதுவை அறிமுகப்படுத்தியது. எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தன. 1991 ஜனவரியில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டுக் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. அதே ஆண்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் அப்போதைய பிரதமருமான ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த ஷீலாராணி சுங்கத் அம்மாவட்டத்தில் 1990 – 1992ஆம் ஆண்டுகளில் முக்கியமான சில பணிகளைச் செய்தார். அதில் பெண்களுக்கு இருசக்கர வாகனப் பயிற்சி அளித்ததும் பெண் சிசுக்கொலையைத் தடுத்து நிறுத்தியதும் அடங்கும்.
ஷீலாராணி சுங்கத் அறிவொளி இயக்கத்தை முன்னெடுத்து நடத்தினார். அதன் மூலம் பெண்களுக்கான பல திட்டங்களைக் கொண்டுவந்தார். அதன் மூலம்தான் பல பெண்கள் வெளியே வர ஆரம்பித்தார்கள் என்றே சொல்லலாம். ‘இரவு 10 மணிக்குக் கூடப் பெண்கள் பாடம் எடுத்த காட்சியைக் காணமுடிகிறது’ என ஒரு நேர்காணலில் ஷீலா கூறியிருக்கிறார். தனது ஆட்சிக் காலத்தில் இந்த மாவட்டத்தில் உள்ள கடைக்கோடி கிராமங்கள்வரை சென்று அங்குள்ளவர்களுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்திருக்கிறார். மேலும் வங்கிகள் மூலமாக சைக்கிள் வாங்க பல பெண்களுக்கு உதவியாக இருந்திருக்கிறார். 1990களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட சைக்கிள் ஓட்டப் பயிற்சி மூலமாக இந்தியாவிலேயே 100% பெண்கள் சைக்கிள் ஓட்டத் தெரிந்த மாவட்டம் என்கிற அந்தஸ்தைப் புதுக்கோட்டை மாவட்டத்திற்குப் பெற்றுக்கொடுத்தார்.
2016ஆம் ஆண்டு அறிவொளி இயக்கத்தின் 25ஆவது ஆண்டு விழா கடந்த குடும்ப நிகழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டது. அதில் ஓய்வு பெற்ற அரசுச் செயலாளர் ஷீலாராணி சுங்கத் கலந்துகொண்டார். இந்த மாவட்டத்தில் 58.4 சதவீதமாக இருந்த எழுத்தறிவு நிலையை அறிவொளித் திட்டம் மூலம் 81 சதவீதமாக உயர்த்திக் காட்டினார். இவ்வளவு சிறப்புகளைத் தாங்கிய புதுக்கோட்டை மாவட்டத்தில் அக்காலகட்டத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகள், சமூக மாற்றம் எனச் சில விஷயங்களையும் சேர்த்து ‘அயலி’யில் கொடுத்திருக்கலாம். இந்தக் கதையை ஒட்டுமொத்தமாக சிறுமி தமிழ்ச்செல்வி மட்டுமே தாங்கி நிற்பதுபோல் இருக்கிறது. மற்ற பெண்களுக்கு இருக்கும் உணர்வுகளையும் சற்று விரிவாகப் பிரதிபலிக்கும் விதமாகக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கலாம். பெண்கள் நம்பியிருப்பது ஆண்களை மட்டும் அல்லாது தனக்கென ஒரு சிறு சேமிப்பு இருப்பது போன்ற காட்சிகள் கூடுதலாக இருந்திருக்கலாம்.
1991 காலகட்டம், மாநிலத்தில் ஜெயலலிதா என்கிற பெண் முதல்வரின் ஆட்சி, மாவட்டத்தில் ஷீலாராணி சுங்கத் என்கிற பெண் ஆட்சியர் என இருக்கும் போது அந்த மாவட்டத்தில் சிறு தாக்கம் கூட இல்லாமல் ஒட்டுமொத்தக் கிராமமே அப்படி எதிர்த்து நிற்க வேண்டிய சூழலில் மொத்தக் கதையும் அந்தச் சிறுமியின் மீது வைக்கப்பட்டிருப்பது இன்றும் ஒரு நாயகி அல்லது நாயகனின் முன்னெடுப்புத் தேவைப்படுவதாகவே இருக்கிறது.
1990ஆம் ஆண்டு பெண்கள் இருசக்கர வாகனங்களில் பயிற்சி மேற்கொள்வது
மாதவிடாய்ப் போராட்டம் வெள்ளைக்காரத் துரையிடம் தொடங்கி இன்று வரை நீண்டு கொண்டே போகிறது. விடுமுறை அளித்த கேரள அரசுக்கு, இன்றும் பெண்களுக்காகக் கோயிலில் விதிமுறைகள் இருக்கிறதே என்று கேள்வி எழத்தான் செய்கிறது. மாதவிடாய்ச் சுழற்சி சாதாரண நிகழ்வாகப் பார்க்க இன்னும் பல காலங்கள் ஆகலாம். ஆனால், அதற்கான எதிர்வினைகளை மேற்கொண்டுதான் ஆகவேண்டும்.
2014ஆம் ஆண்டு கருஞ்சட்டைத் தமிழர் ஜனவரி 16 இதழில் ஒரு கட்டுரை வெளியானது. அதில் கூவிலபுரம் எனும் ஊரில் மாதவிலக்கின்போது பெண்கள் நடத்தப்படும் விதம் கொடுக்கப்படும் தண்டனையின் உச்சம், அந்த ஊரின் கடைக்கோடியில் மாதவிலக்கானவர்கள் தங்குவதற்கு என்று தனி இடமே கட்டப்பட்டிருக்கிறது. உங்களுக்குக் குழந்தைகள் இருந்தாலும் மாதவிடாய்க் காலத்தில் குழந்தைகளைப் பிரிந்து அந்த வீட்டில் மட்டுமே தங்க முடியும். இப்படித் தீண்டாமைக் கொடுமைகள் இன்றுவரை ஒவ்வொரு கிராமத்திலும் நீண்டு கொண்டுதான் இருக்கின்றன. இது இன்னும் வெளி வராமல் இருப்பதற்கான காரணம் அந்தக் கிராமத்தில் உள்ள கட்டுப்பாடு.
அயலிக்குத் தைரியம் அதிகம்தான். அமாவாசையைக் கடந்து, ஊர் வசையைக் கடந்து தனியோர் பெண்ணாக நின்று போராடுகிறாள். என் பார்வைக்கு அயலியாகத் தெரிந்தது அந்தப் படத்தில் காட்டிய சிலையல்ல; அழகிய சிரிப்புடன் இருந்த தமிழ்ச்செல்விதான். 1990ஆம் காலகட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வீரபண்ணை கிராமத்தில் தொடங்குகிறது அயலியின் வாழ்க்கைப் பயணம்.
ஊரையே கட்டுப்பாட்டுக்குள் வைக்க ஊரின் எல்லையில் ஒரு கோயில். அந்தக் கோயிலின் புனிதம் கெடக் கூடாது என ஊரே அந்தக் கலாச்சாரம், பண்பாட்டைத் தாங்கி நிற்கிறது. அதற்கு இணையாக ஒரு பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக்கூடம் எப்படியாவது அந்த ஊரில் ஒருவரையாவது பத்தாம் வகுப்பைத் தாண்டி வெளியே அனுப்பிவிட வேண்டும் எனத் தவியாய்த் தவிக்கிறது. அதைத் தடுக்கத் தலைபிரட்டை என்கிற உதவி தலைமை ஆசிரியர். வயதுக்கு வந்த பிறகு திருமணம் என்கிற கட்டுப்பாடு. இத்தனையும் தாண்டி தமிழ்ச்செல்வி அங்கே இருந்து வெளியே வந்து படிக்கத் தொடங்குகிறாள். அயலியாக நடித்த அபி தனது இயல்பான நடிப்பால், முகபாவனையால், கண்களின் வழியாக எண்ணற்ற உணர்வுகளை நமக்குள் கடத்துகிறாள்.
ஒரு கல்லாக இருந்து, காலம் கடந்து அம்மனாக உருவகம் செய்யப்பட்ட அயலி அந்தக் கிராமத்தில் நடக்கும் குழந்தைத் திருமணம், பெண்களின் மரணம், கள்ளச் சாராயம் போன்ற எண்ணற்ற பிரச்சனைகளையும் வெறுமனே வேடிக்கைதான் பார்க்கிறாள். 500 வருடங்களாக அதே வழக்கத்தைப் பின்தொடர்ந்து வளரும் கிராமம், பெண்களையும் அதே நிலைமையில்தான் வைத்திருக்கிறது. அந்த ஊரில் உள்ள தலைமை ஆசிரியர் மற்றும் காவல் அதிகாரி விதிவிலக்கு. அவர்களைப் பார்த்துக்கொண்டு நிற்கும் மக்களுக்கு அந்த உணர்வை தமிழ்ச்செல்வி மூலமாகக் கடத்தியிருக்கிறார் இயக்குநர்.
“உங்க குடும்ப கௌரவத்தை ஏன் எங்க காலுக்கு இடையில தேடுறீங்க?”, “அப்படி குடும்ப மானம் முக்கியம்னா, அதை நீங்களே தூக்கிச் சுமக்க வேண்டியதுதானே? அதை ஏன் பொம்பளைங்கக் கிட்ட தர்றீங்க?”, “அவசரத்துக்குப் படுத்து எழுந்து போற உனக்கு என்னுடைய பொண்ணப் பத்திப் பேசத் தகுதி இல்லை” எனப் பெண்கள் கேட்கும் கேள்விகளுக்குக் காலரைத் தூக்கிக்கொண்டு சுற்றித் திரியும் ஆண்களில் ஒருவரால் கூடப் பதில் சொல்ல முடியவில்லை.
இந்தப் படத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விஷயங்கள், மூடநம்பிக்கைகளை மூடநம்பிக்கைகள் மூலமாகவே உடைக்கும்போது எதிரிகளின் மூக்குடைந்த நிலையை அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருப்பார். மற்றொன்று தாலியைக் கழற்றி மூஞ்சிலெறியும் காட்சி. ஒட்டுமொத்தத் தமிழகப் பெண்களுமே ஆண்களின்மீது வீசப்படுவதாக இருக்கிறது.
சர்ச்சைக்குரிய கதையைத் தேர்ந்தெடுத்தெருக்கிறார் இயக்குநர். கிளைக் கதைகளாக இரண்டு கிழவிகள், ஊருக்கு ஒரு திருடன், வாத்தியார், ஊமையன் என ஒவ்வொரு கதையும் சுவாரஸ்யமாக இருக்கிறது. திருடன் என்பவன் கடைசி வரை உழைத்து உண்ணும் எண்ணமே இல்லாமல் இருக்கிறான். இதுபோல எல்லா இடங்களிலும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஊமையனின் நேர்மை, கோபம் மிக அருமையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. வாத்தியாராக வரும் தர்மராஜ் ஆரம்பத்தில் சற்றுப் பயமாக இருந்தாலும் அடுத்தடுத்த எபிசோடுகளில் அந்தப் பயம் நகைச்சுவையாகிறது.
கதையில் தமிழ் வயசுக்கு வரும் காட்சி இயற்கையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனை ஒவ்வொரு முறையும் மறைக்க அந்தச் சிறுமி ஏமாற்றும் காட்சிகள் அனைத்தும் எதார்த்தமாகவே இருக்கின்றன.
தலைமையாசிரியர் ஊரில் நடக்கும் பிரச்சினைகளைக் கண்டும் காணாமல் இருக்கிறார். மாவட்ட கலெக்டர் அந்த ஊரின் பள்ளிக்கூடத்திற்கு வருகை புரியும்போது கூட தமிழ்ச்செல்வி அதனைப் பற்றிக் கூற வேண்டுமென எதிர் பார்க்கிறார். பிரச்சினைகள் அனைத்தும் தமிழ்ச்செல்விக்காகக் காத்திருக்கின்றன. இவையெல்லாம் அந்தச் சிறுமியின் கதாபாத்திரம் வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது எனப் புரிந்துகொள்ளலாம். கதாபாத்திரங்களின் வடிவமைப்பு நேர்த்தியாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு கிழவியின் சண்டைக் காட்சிகள் இன்னும் நம்ம ஊர்க் கிழவிகள் உயிருடன்தான் இருக்கிறார்கள் என்பதை நினைவூட்டுகின்றன. கிணத்தடிச் சண்டை, ஒரு கிழவிக்கு உடல் நிலை சரியில்லாதபோது மற்றொருவர் பகை மறந்து பாசத்தைக் காட்டுகிறார்.
பெண் கல்வி, கோயில், மாதவிடாய், குழந்தைத் திருமணம் எனப் பெண்களின் முக்கியப் பிரச்சினைகளைப் பற்றி அலசுகிறது. சச்சின் வசனங்கள் மிகவும் கச்சிதமாகப் பொருந்தியுள்ளன. இவரும் புதுக்கோட்டை மாவட்டம் என்பது கூடுதல் வலு. மண்ணின் வாடை, அதன் வண்ணம் ஆகியவற்றை நமக்குள் கடத்தும் காட்சிகள் அந்த மாவட்டத்தில் வாழ்ந்த உணர்வைத் தருகிறது. ஒவ்வொரு முறையும் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் காப்பாற்றுவதற்குப் படைக்கப்பட்டவர்கள் எனக் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். இறுதியில் பெண்கள் அதற்குப் பதிலடி கொடுக்கின்றனர். இந்தச் சமுதாயம், கூட இருப்பவர்கள், தெருக்காரர்கள் என்ன சொல்லுவாங்க என ஒவ்வொரு கதாபாத்திரமும் ஆங்காங்கே சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்கள். தமிழ்ச்செல்வியின் தந்தை தனது மகளைத் தேர்வு எழுத அனுப்பச் சம்மதிக்க, அதற்கு ஊர் மக்கள் கொடுக்கும் எதிர்வினை மிகச்சரியாகக் கையாளப்படவில்லை.
கதையில் இறுதிவரை ஆண்கள் அந்தக் கோயில் உள்ளே போகாமல், சபரிமலைக்குப் பெண்களுக்கு விதிக்கப்பட்டது போல, ஆண்கள் தங்களுக்குள் ஒரு கட்டுப்பாட்டை வளர்த்திருக்கிறார்கள். அயலியில் இடம்பெறும் கோயில் இன்னொரு சபரி மலையாகத்தான் தெரிகிறது. இதனையும் சற்று வேறு மாதிரியாக யோசித்திருந்தால் கதை முழுமையாக முடிவு பெற்றிருக்கும். இறுதியில் அருகில் உள்ள ஊர்க்காரர்களும் மாணவர்களும் இந்தக் கிராமத்தில் வந்து படிப்பது போலக் காட்டப்படுவது மகிழ்ச்சி.
தமிழ்ச்செல்வியாக நடித்திருக்கும் அபி, கச்சிதமான தேர்வு. அவளது சிரிப்பு, அழுகை, இணைந்த புருவங்கள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்கின்றது. படம் பார்ப்பவர்களுக்குத் தமிழ்ச்செல்வியைவிட அவளது பெயர் அயலியாகத்தான் ஞாபகப்பட்டுக்கொண்டிருக்கிறது. தனது தோழி படும் கஷ்டங்களைப் புரிந்துகொண்டு தானும் அதுபோல வாழ்க்கையில் இருந்துவிடக் கூடாது எனக் குழந்தைத்தனமான யோசனைகளைத் தவிர்த்து எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறார்.
தமிழ்ச்செல்வி கதாபாத்திரம், முதன்முதலாக ஒரு பெண்குழந்தை மாதவிடாய்க் காலத்தில் அனுபவிக்கும் வலியை மிகச் சரியாகத் தனது நடிப்பின் மூலம் உணர்த்தியுள்ளார். தன் உடையில் படிந்த இரத்தக் கறையை, கட்டுப்பாடான ஆசிரியர் தர்மராஜ் முன் மறைக்கிறாள். யாரிடமும் மாட்டிக்கொள்ளக் கூடாது என நடுக்கமுறுகிறாள். இதைப் போல ஒவ்வொரு மாதமும் தமிழ்ச்செல்வி எப்படித் தனது மாதவிடாய்த் தருணங்களை மற்றவருக்குத் தெரியாமல் மறைக்கப் போகிறார், தனது கல்வியைத் தொடர்வாரா என்கிற ஏக்கத்தை நமக்குக் கடத்திக்கொண்டே செல்கிறார்கள். இரண்டாவது முறையாக அவளது கால் இடுக்குகளில் வழியும் இரத்தத்தை ஊரில் உள்ள குளத்தில் அப்படியே வந்து விழும்போது, தண்ணீர் எல்லாத்தையும் விழுங்கிக் கொள்ளும் என்பதைப் போல, இவளது துயரத்தையும் அந்தத் தண்ணீர் விழுங்கிக்கொண்டதாக நம்மை உணர வைக்கிறாள்.
குருவம்மாள் கதாபாத்திரம் தமிழ்ச்செல்விக்கு இணையாக ஓர் உண்மையை மறைக்கப் போராடிக்கொண்டிருக்கிறது. குருவம்மாளின் வசனங்கள் மற்ற பெண்களிடமிருந்து வேறுபட்டு நிற்கிறது. வாத்தியாரிடம் குளக் கறையில் நின்றுக்கொண்டு தனது பெண் தைரியமாகப் பத்தாம் வகுப்பைத் தாண்டி “(SAC) SSLC எனப் போட்டுக்கொள்வாள்” என்று சவால் விடும் காட்சிகள் நமக்கும் தைரியத்தைக் கொடுக்கும். மகளுக்குத் தன்னால் எவ்வளவு உதவிகள் செய்ய முடியுமோ அதை அனைத்தையும் செய்து முடிக்கிறார் குருவம்மாள். ஊர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு இருந்தவள் தனது மகள் தமிழ்ச்செல்விக்காக அதனை உடைக்கிறாள்.
கிராமத்துத் தந்தையாக வலம் வந்திருக்கிறார் மதன்.. அவர் அணிந்திருக்கும் வேஷ்டி, சட்டை என அனைத்தும் பொருத்தமாக இருக்கின்றன. மகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணியும் தந்தையாக மிளிர்கிறார்.
தர்மராஜ் கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். சிறு வயதில் பார்த்த அதே எடுத்துக்காட்டு கணக்கை வகுப்பில் உள்ள மாணவர்கள் மூலமாகப் போட்டுக் காட்டிப் பாடம் நடத்துகிறார். ஒவ்வொரு முறையும் மற்றொருவரை குறைச் சொல்லி, திட்டியபடியே இருக்கிறார்.
தமிழ்ச்செல்வியின் தோழிகள், ஊர் மக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என ஒவ்வொருவரும் மிகவும் நேர்த்தியாகவும் எதார்த்தமாகவும் நடித்திருக்கிறார்கள். முதன்மைக் கதாபாத்திரமாக அயலியின் சிலை அந்தக் கிராமத்து நிலையை யதார்த்தமாக வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கிறது. அயலி கோயில் அமையப் பெற்ற இடம் வீரப்பண்ணை என்கிற கற்பனைக் கிராமத்தை முழுமையாக்குகிறது.
சில இடங்களில் காட்சிகளின் கோவை தடுமாறுகிறது உதாரணமாக இரண்டு கிழவிகள் சண்டையிட்டுக் கொள்ளும் கிணற்றுப் பகுதியில் கிழவி கயிற்றைப் பிடித்துக்கொண்டிருக்கிறாள்; மற்றொருபுரத்தில் அதே காட்சியைக் காட்டும்போது அதனை விட்டுக் கைகளால் பேசிக் கொண்டிருக்கிறாள்.
2020 ஆம் ஆண்டு ஐநா கணக்கெடுப்பில் உலக அளவில் 130 பெண்களில் ஒருவர் நவீன அடிமைத்தனத்தில் இருக்கிறார். ஆசியாவிலும் பசிபிக் நாடுகளிலும் (73 சதவீதம்), ஆப்பிரிக்காவில் (71 சதவீதம்), ஐரோப்பாவிலும் மத்திய ஆசியாவிலும் (67 சதவீதம்), அமெரிக்காவிலும் (63 சதவீதம்) என ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் நவீன அடிமைத் தனத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பெண்ணும் தமிழ்ச்செல்வியாகத் தனக்கென ஒரு கனவைத் தக்கவைத்துக்கொள்ள அயலி கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்க வேண்டிய கட்டாயத்தேவை இங்கே இருக்கிறது.
மொத்தத்தில் அயலி ஆண்கள் நுழைய முடியாமல் போன சபரிமலை.