அதோ பாருங்கள்
அங்கு ஓர் அவைக்களம் தென்படுகிறது
குற்றவாளிகளாக
நானும் என் உடலும் கூண்டிலேற்றப்பட்டுள்ளோம்
எதிரில்
அந்த இருட்டு அதிகாரமாக
அமர்ந்திருக்கிறது
தன்னை மாட்சிமை பொருந்திய இருட்டு எனப் பீற்றிக்கொண்டது
மேசை மேல்
பழங்களையும் கத்தியையும் வைத்துள்ளார்கள்
இப்போது
அவையில் சிறு சலசலப்பு தென்படுகிறது
‘அமைதி அமைதி’ எனக் கூச்சலிடுகிறார்கள்
நறநறவெனப் பல்லைக் கடித்தபடி
இருட்டு முதலில் பேசத்தொடங்கியது
இந்த உடல் என்னிடம் இணக்கமாக இல்லை
எப்போதும் பசப்புச்சொல் பேசுகிறது
நெருங்காமல் தள்ளிச் செல்கிறது
இந்த உடல் மீது பெருங்கோபம் கொண்டுள்ளேன்
அதைக் கத்தியால் குத்தப்போகிறேன் என்றது
அவையில் பேரமைதி
இப்போது
உடலைப் பேச அழைத்தார்கள்
வணக்கத்திற்குரிய இருட்டே உன்னுள்
என்னால் மூழ்க முடியாது
உனக்கும் எனக்கும் எல்லைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன
இங்கு சுயகொலை
பிற கொலை
எல்லாம் உண்டு
அதற்குக் கத்தி தேவையில்லை
நான் என்பது என் உடல் மட்டும்தான்
கணக்கிட முடியாத “நான்”கள்
உறங்கிக்கொண்டுள்ளனர்
தூய்மையான கல்லறையில்.
என்னை விட்டுவிடு
எனச் சொல்லி வெளியேறியதில்
சமதளமான மண்மேடுகளை
நிலமெங்கும் பரப்பிக் காத்திருந்தாள்
அதகளத்தி.