“மார்கழியில் மக்களிசை நடத்துவதற்கான நோக்கம், தொடர்ந்து நான் சொல்லிக்கொண்டிருப்பதுதான், கலை மக்களுக்கானது. மக்களுக்கான கலையை மேடையேற்றி மக்களிடமே கொண்டு சேர்க்க வேண்டும்.”
– இயக்குநர் பா.இரஞ்சித்
மிகுந்த நெருக்கடிகளுக்கிடையில் ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்வு கடந்த டிசம்பர் மாதம் 28, 29, 30 தேதிதளில் நடைபெற்றது. நாட்டுப்புற, பழங்குடி பாடல்கள் / கானா, ஹிப்ஹாப் பாடல்கள் / ஒப்பாரி பாடல்கள் என, மக்களால் அதிகம் ரசிக்கப்பட்டாலும், பொது மேடைகளில் புறக்கணிப்படும் கலைகளைத் தொடர்ந்து முன்னிறுத்துவது இந்நிகழ்வின் தனிச்சிறப்பாக இருந்தாலும், சமூக அக்கறையோடு இக்கலைகளைப் பல ஆண்டுகளாக மக்களிடம் கொண்டு சேர்த்த ஆளுமைகளுக்கு ‘மக்களிசை மாமணி’ என்ற பெயரில் விருது வழங்கி கௌரவித்தது இந்நிகழ்வின் முக்கிய அம்சமாகப் பார்க்கப்பட்டது. விருதுபெற்ற அம்மேதைகளை வாழ்த்துவதுடன், அவர்களின் கலைப் பயணம் குறித்தும் சற்றுத் தெரிந்துகொள்வோம்.
நையாண்டி மேளம் தவில் நாதஸ்வர கலைஞர் ஏ.பி.அய்யாவு
ஜனவரி 14, 1948 அன்று பிறந்தவர். தனது 13வது வயது முதல் இன்றுவரை தொடர்ந்து கச்சேரிகளுக்குச் சென்றுவருகிறார். கிட்டத்தட்ட 69 ஆண்டுகள் கலைக்காகத் தன்னை அர்ப்பணித்தவர்.
தந்தை பெருமான் மட்டுமல்லாமல் இவரது மூத்த அண்ணனும் நாதஸ்வரக் கலைஞர். இவரது மகன்களும் நாதஸ்வரம், தவில் கலைஞர்கள்தாம். 9 வயதில் தாளம் போடுவது, தமுக்கு அடிப்பது என்று தொடங்கியவர், பம்பை வாசித்தல், கொம்பு ஊதுதல் என்று தொடர்ந்து இசைக்கருவிகளை இசைக்கக் கற்றுக்கொண்டார். உத்தமபாளையம் பாளையத்து பாண்டி என்பவரிடம் நாதஸ்வரக் கலையை முறையாகக் கற்றுக்கொள்கிறார்.
சிறப்புகள்:
2004ஆம் ஆண்டு மதுரை மண்டல கலைப் பண்பாட்டு மையம் சார்பாக ஏ.பி.அய்யாவிற்கு ‘கலை முதுமணி’ விருதும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பாக 2012ஆம் ஆண்டு ‘கலைமாமணி’ விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
2020ஆம் ஆண்டு லயோலா கல்லூரியும் மாற்று ஊடக மையமும் இணைந்து ‘வீதி விருது’ என்ற விருதும் ரூபாய் 10,000 பரிசுத் தொகையும் வழங்கின.
இது தவிர இவருடைய கலைத்திறனைப் பாராட்டி கிராமங்களில் குறிப்பாக மதுரை குமாரம் அருகே உள்ள மணியாஞ்சியில் தங்க டாலரும், மதுரையில் பி.கண்ணன் நகைக்கடைக்காரர் அவரது மகன் திருமணத்திற்கு வாசித்ததற்காகத் தங்க டாலரும், அவருடைய 60ஆவது திருமண நிகழ்விற்கு வாசித்ததற்காக ஒரு தங்க டாலரும், சென்னை எஸ்டிஎஸ் சுப்பிரமணியன் பழனி பாதை யாத்திரைக் குழு ஒரு தங்க டாலரும், மதுரை மேலமாசி வீதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் உற்சவத்திற்குத் தொடர்ந்து 25 ஆண்டுகள் வாசித்ததற்குப் பாராட்டி ஒரு தங்க டாலரும், அதே கோயிலில் 50 ஆண்டுகள் தொடர்ந்து வாசித்ததைப் பாராட்டி ஒரு தங்க டாலரும் வழங்கி கௌரவிக்கப் பட்டார்.
பெற்றோர் : பெருமான் – கருப்பாயி அம்மாள்
குடும்பம் : மனைவி அழகம்மாள், 4 குழந்தைகள்.
‘கானா’ புண்ணியர்
பத்து வயதில் (1972இல்) தொடங்கிய இவரது இசைப்பயணம், 50 ஆண்டுகளாகத் தொடர்கிறது.
மாட்டாங்குப்பம் காளி, சிந்தை ராஜிவ்பாய் ஆகியோரின் பாடல்களால் ஈர்க்கப்பட்டு கானா பாடக் கற்றுக்கொண்டார்.
அப்போதைய றிஹிசி படிப்பை முடித்தவர், 1990இல் அறிமுகமான ‘காதல் நிலா’ கேசட்டில் தன் முதல் பாடலான ‘சின்னப் பொண்ணு கேளம்மா…’வைப் பதிவுசெய்தார். அதைத் தொடர்ந்து ‘அழகு அழகு தமிழ்நாடு அழகு…’, ‘கண்கள் ரெண்டும் உன்னைத் தேடும்…’ போன்ற பாடல்களோடு நூறு பாடல்களை எழுதியும் பாடியும் பதிவுசெய்திருக்கிறார். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையில், ‘மாமல்லன்’ (கடவுள் இருக்காரா…), ‘கறுப்பர் நகரம்’ (அடேங்கப்பா அடேங்கப்பா…), ‘பதிலடி’ (கலகலன்னு சிரிக்கிறா…), ‘ஆ பிரிவு மாணவர்கள்’ (ஒரே ஒரு சிகரெட்டை…), ‘கோவலனின் காதலி’ (ஆசையெல்லாம் மனுஷன் இங்கே யாருடா…), ஆகிய திரைப்படங்களில் பாடியும் உள்ளார். 2004இல் விஜய் தொலைக்காட்சியில் ஜேம்ஸ் வசந்த் நடுவராக இருந்த நிகழ்ச்சி ஒன்றில் தன் கானா பாடலைப் பாடியுள்ளார்.
பெற்றோர்: சுந்தரராஜ் – ராஜாம்மாள்
சமகால பாடகர்கள்: ஆயிரம் விளக்கு செல்வம், சிந்தை சூர்யா, பவர்ஹவுஸ் பாண்டியன், சிந்தைநாதன், கானா பழனி, கானா உலகநாதன், அந்தோணி, ரேவ் ரவி, ஸ்டாலின் நகர் நித்தியா.
வேலு ஆசான்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பிறந்தவர். தந்தை ராமையா அவர்களும் பறையிசைக் கலைஞரே. திரைப்படக் கொட்டகையில் டிக்கெட் கவுண்டர் இல்லாத காலகட்டங்களில் சைட் பறையிசையை அடித்துத் திரைப்படத்தைக் காணச் செல்வர். அக்கலைஞர்களில் ராமையாவும் ஒருவர். தீப்பெட்டியில் இசைப் பயிற்சியைத் தொடங்கியவர். 12 வயதில் சேவுகன் வாத்தியாரிடம் இசையையும், கட்டப்பாஸ் வாத்தியாரிடம் ஆட்டத்தையும் கற்றுக்கொண்டார். 1982ஆம் ஆண்டு தொடங்கிய இவரது கலைப்பயணம் இன்று உலகம் முழுவதும் விரிந்திருக்கிறது. இலங்கை, மலேசியா, அமெரிக்கா நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு ஆன்லைனில் பயிற்சியளித்துக் கொண்டிருக்கிறார். பறை, ட்ரம், முரக்கோஸ், கொம்பு, டங்கா போன்ற இசைக்கருவிகளில் வல்லவரான வேலு ஆசான், 35 நபர்களைக் கொண்ட சமர் இசைக்குழுவை உருவாக்கியிருக்கிறார்.
விருதுகள்:
மாற்றுச் சிந்தனை இசைக்காகப் பெரியாரிய விருது,
அழகர்சாமி விருது (மதுரை இறையியல் துறை)
பறையிசை சிற்பி விருது
பறையிசை வல்லிசை வானர்
மக்கள் கலைஞன் விருது
கலைச்சுடர் விருது (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்)
கலை நன்மணி விருது (கலை பண்பாட்டுத் துறை)