?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

கக்கன் பெயரில் மறைந்திருக்கும் வரலாறு – எம்.இராஜேஷ்குமார்

ஓவியம்: இனியன்

முன்னுரை

தமிழக அரசியல் வரலாற்றில் கக்கன் என்ற பெயரை அறியாதவர் இருக்க முடியாது. என்றாலும் அவரை தியாகி, காங்கிரஸ்காரர் என்னும் அளவிலேயே சுருக்கிவிட்டோம். அவர் தியாகியாகக் காட்டப்படுவதால் தலித்துகள் மேம்பாட்டிற்காக அவர் எதுவும் செய்யவில்லை என்றே கருதும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அது உண்மையல்ல. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எஸ்.பொன்னம்மாளின் இறப்பையொட்டி, ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய இரங்கல் குறிப்பில், ‘கக்கன் காலத்து வேலைகளும் அவர் பற்றிய சாதாரண மக்களின் நினைவுகூரல்களும் வேறாக இருக்கின்றன என்றும், அவருடைய காலத்தில்தான் அவர் தொகுதி தலித் மக்களுக்குப் பட்டா, வீடு போன்றவை அதிகம் வழங்கப்பட்டுள்ளதையும் அவை பறிபோனது பிந்தைய கால ஆட்சிகளில்தான்’ என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பின் கக்கன் பற்றிய தரவுகளைத் தேடிப் படிக்கவும் / கள ஆய்வுகளுக்குச் சென்று அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்ட வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இக்கட்டுரை.

மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகில் தும்பைப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு தலித் (பறையர்) சமூகத்தைச் சேர்ந்த பூசாரி கக்கன் என்பவர் வருவாய்த்துறை அலுவலரின் ஊர்ப்புற உதவியாளராக (தலையாரியாக) பணியாற்றினார். பூசாரி கக்கன் குடும்பத்தில் மரபுவழியாக ஆண் குழந்தைகளுக்கு ‘கக்கன்’ என்றும் பெண் குழந்தைகளுக்கு ‘கக்கி’ என்று பெயர் சூட்டுவது வழக்கம். பூசாரி கக்கனுக்கு முதலில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து, சில ஆண்டுகளிலேயே இறந்துவிட்டன. பூசாரி கக்கன்  – குப்பிக்கு மூன்றாவது குழந்தையாக 1909ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் நாள் பிறந்தவர்தான் கக்கன். ஒன்பது வயதாக இருந்தபோதே அவரது தாயார் இறந்துவிடுகிறார். அதனால் குப்பியின் தங்கையான பறம்பியை மறுமணம் செய்துகொள்கிறார் பூசாரி கக்கன். அவர்களுக்கு நான்கு மகன்கள். அவர்களில் பூ.வடிவேலு காங்கிரஸில் இருந்தார். கக்கன் சிலை பராமரிப்பு, கக்கன் அஞ்சல் தலை வெளியீடு, மணிமண்டபம் அமைப்புக் குழு என கக்கனுக்காக இவர் மிகுந்த கவனம் கொண்டிருந்தார். மேலும், தலித் இயக்கங்களோடு இணைந்து அப்பகுதியில் நிலவிவந்த சாதிய கொடுமைகளுக்குக் குரல் கொடுத்தும் வந்தார்.

1932ஆம் ஆண்டு சிவகங்கையைச் சேர்ந்த ஆசிரியரான சொர்ணம் பார்வதியைச் சீர்திருத்த மணம் செய்துகொள்கிறார் கக்கன். இவர்களுக்கு பத்மநாதன், பாக்கியநாதன், காசிவிசுவநாதன், சத்தியநாதன், நடராஜ மூர்த்தி என்கிற புதல்வர்களும் கஸ்தூரிபாய் என்கிற புதல்வியும் உள்ளனர்.

வறுமைச் சூழலிலும் வாழ்வில் முன்னேற வேண்டுமென்ற பேரார்வத்தில் மகன் கக்கனை மட்டும் முதலில் படிக்க வைத்துள்ளார் பூசாரி கக்கன். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்று, பின்பு வறுமை காரணமாகக் கல்வியைத் தொடர முடியாமல் கிராமத்திலுள்ள விவசாயப் பண்ணையில் வேலைக்குச் செல்கிறார் கக்கன். இருந்தாலும் கல்விகற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மதுரைக்கு அருகில் திருமங்கலத்தில் உள்ள பிகேஎன் பள்ளியில் ஆறாம் வகுப்பும், மேலூரில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழாம், எட்டாம் வகுப்புக் கல்வியை முடிக்கிறார். மானாமதுரையில் உள்ள கிறிஸ்தவப் பள்ளியில் உயர்நிலைக் கல்வி பயின்றார். அங்கு அரசு நடத்திய தனித்தேர்வில் தோல்வியடையவே, பள்ளி இறுதித் தேர்வு எழுத அவர் அனுமதிக்கப்படவில்லை. எனினும், மனம் தளராது மதுரை பசுமலை சி.எஸ்.ஐ பள்ளியில் சேர்ந்து பயின்றார். அப்போது ஒடுக்கப் பட்டோர் நலன் சார்ந்து பணி செய்துகொண்டிருந்த என்.ஆம்.ஆர்.சுப்புராமனிடம் கக்கனின் தந்தை சென்று தன் மகனின் கல்விக்கு உதவி கேட்கிறார். அதன் பேரில் கக்கனுக்கு அவருடன் தொடர்பு ஏற்பட்டது. அதே காலகட்டத்தில் ஒடுக்கப்பட்டோர் நலன் சார்ந்து இயங்கிய வைத்தியநாதய்யரின் தொடர்பும் ஏற்படுகிறது. இவ்விருவரின் தொடர்பால் கல்வியைத் தொடர வாய்ப்பு கிடைக்கிறது. தலித் மக்களுக்குச் சேவை மனப்பான்மையுடன் பணிசெய்த கக்கனைத் தனது வீட்டிலேயே தங்கவைத்துக் கொள்கிறார் வைத்தியநாதய்யர். தன்னுடைய மகன் படித்து முடித்து அரசுப்பணி பெற்றுத் தங்களது குடும்ப வறுமையைப் போக்குவார் என்று நினைத்திருந்த கக்கனின் தந்தை, இத்தகைய போக்கால் அவரை நம்பியிராமல் தன்னுடைய உழைப்பின் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தைக் கவனித்து வந்தார். கக்கனின் தந்தை 92 வயதில் காலமானார். ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி எவ்வளவு அவசியமானது என்பதை கக்கன் தன் தந்தையின் மூலமே அறிந்திருந்தார்.

அரிசன சேவா சங்க மாணவ – மாணவியர் விடுதி

பாபாசாகேப் அம்பேத்கர் தென்னிந்தியாவில் ஹரிஜனங்களின் துன்பங்கள் என்று மேலூர் வட்டார சாதியத்தின் கொடூரத்தை விளக்கும் வகையில் அரிசன சேவா சங்கத்தைச் சேர்ந்த ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் எனும் சமூகத் தொண்டரின்  அனுபவத்தைத் தனது எழுத்தில் பதிவுசெய்துள்ளார். அவ்வளவு பெரிய சாதிய இறுக்கமான பகுதியில் பிறந்த கக்கன் தனக்கு நேர்ந்த / தான் பார்த்த சாதியக் கொடூரங்களை ஒழிக்க முற்பட்டுள்ளார். தலித்துகளின் நலனை முன்னிறுத்தி அப்போதிருந்த காங்கிரஸ் மீதும் காந்தியின் மீதும் பாபாசாகேப் அம்பேத்கர் தந்த அழுத்தத்தால், காந்தி பட்டியல் சமூக மக்களின் வளர்ச்சிக்காகத் தொடங்கிய ‘அரிசன சேவா சங்கம்’, அடித்தட்டு மக்களின் தேவைகளை நிறைவு செய்வதில் முனைப்புக் காட்டியது. சாதி சார்ந்த நிலைப்பாட்டில் ஒடுக்கப்பட்டோரோடு நிற்பதற்கான வாய்ப்பு அங்கு காந்தி காலத்திலிருந்து வந்தது. தேசிய அரசியலில் அத்தகைய நெருக்கடி அம்பேத்கரின் போராட்டத்தால் உருவாகியிருந்தது. தலித்துகளின் கல்வி, வேலைவாய்ப்பு, குடிநீரெடுத்தல், தீண்டாமை ஒழிப்பு போன்ற நலப்பணிகள் ஆற்றிடத் தொண்டர்கள் தேவைப்பட்டனர். ஏற்கெனவே மேலூர் பகுதியில் 5 மாணவர்கள், 5 மாணவிகள் என்று கீற்றுக் கொட்டகையில் பாடசாலை அமைத்துப் பாடம் நடத்தி வந்தார் கக்கன். இதையறிந்த வைத்தியநாதய்யர் அரிசன மாணவர்களுக்காக மதுரையில் அமைக்கப்பட்ட விடுதியின் துணைக்காப்பாளராக கக்கனைச் சேர்த்துக் கொண்டார். தமிழகத்திலேயே முதன்முதலாக மதுரை மாவட்டத்தில்தான் 1934ஆம் ஆண்டு சேவாலயம் என்ற பெயரில் மாணவர் விடுதி தொடங்கப் பெற்றது. க.அருணாச்சலம் என்பவர் அதன் முதலாவது காப்பாளராக நியமனம் செய்யப் பெற்றார்.

இருவரும் தலித் மக்களின் வாழ்விடங்களுக்குச் சென்று இரவு பாடசாலைகளை நடத்தியுள்ளனர். கிராம மக்கள் அவர்களை ‘நைட் ஸ்கூல் வாத்தியார்கள்’ என்றே அழைத்துள்ளனர். கக்கனின் பணியை அங்கீகரிக்கும் விதமாக அவர் வாழ்ந்த காலத்திலேயே சேவாலய விடுதி அமைந்துள்ள, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகிலுள்ள, செனாய் நகரின் ஒரு தெரு கக்கன் பெயரைத் தாங்கி நிற்கிறது. இன்றைக்கும் தமிழகம் முழுவதும் கக்கன் தெரு, கக்கன் காலனி, கக்கன் நகர், கக்கன் குடியிருப்பு, கக்கன் படிப்பகம் என இருப்பதைக் காண்கிறோம். காரணம், அவர் அம்மக்களுக்காக ஆற்றிய பணியின் நன்றிகூரலே என்றால் அது மிகையாகாது. போக்குவரத்து வசதிகள் இல்லாத அக்காலத்தில் தன் கால் படாத கிராமங்களே இல்லையென்று சொல்லும் அளவிற்கு மதுரை, மேலூர், சிவகங்கை பகுதிகளில் உள்ள கிராமங்கள்தோறும் கால்நடையாகவே சென்று பணியாற்றியுள்ளார். தலித் மக்களுக்குக் கல்வியைக் கொண்டு சேர்க்கும் வகையில் அரிசன சேவா சங்கம் அளித்த உதவிகளைப் பயன்படுத்தி அம்மக்களின் இருளகற்றிடும் பணியில் மனநிறைவு கொண்டார். படிப்படியாக இருபாலருக்கும் பள்ளிகள், விடுதிகள் திறக்கப்பட்டன. பின்னாளில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் அப்பள்ளிகளில் சேர்ந்து கல்வி கற்றனர். 1962இல் அடிக்கல் இட்டு, 1976இல் கக்கன் தலைமையில் ‘கஸ்தூரிபா விடுதி’ கட்டடம் தொடங்கப்பட்டது, தலித் மாணவர்களுக்குப் பேருதவியாக இருந்தது. இன்றளவும் அவ்விடுதிகள் செயல்பட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தலித் மக்களுக்கான உரிமை மீட்புப் போராட்டங்கள்

1927ஆம் ஆண்டு பாபாசாகேப் அம்பேத்கரால் நடத்தப்பட்ட மகத் சத்தியாகிரகம் போன்று கக்கனாலும் ஒரு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அவர் பிறந்த தும்பைப்பட்டி கிராமத்தில், தலித் மக்கள், மழைநீர் தேங்கும் பீக்குளத்திலும், தலித்தல்லாத பிற ஜாதியினர், ‘ஊரணி’ குளத்திலும் குடிநீர் எடுப்பது வழக்கம். எவரும் குளிக்காமலும், மாடுகள் வாய் வைக்காமலும், மிகவும் பாதுகாப்பாகக் காவலிட்டு, காப்புச் செய்துவந்த குளம் ஊரணி. இதில், தலித் மக்கள் குடிநீர் எடுக்கக் கூடாது என்பது ஊர்க் கட்டுப்பாடு. இதை எதிர்த்து, ‘தலித் மக்களும் ஊரணியைப் பயன்படுத்த வேண்டும்’ என்ற தன் எண்ணத்தை, சக தலைவர்களான ஒருங்கான் அம்பலம், கருப்பன் செட்டியார் என்கிற கருப்பையா ஆகியோருடன் கலந்தாலோசித்தார் கக்கன். அவர்களும்  இக்கொடுமையை எதிர்த்துப் போராட ஒப்புக்கொண்டனர். அதன்படி ஊர்ப்பொதுச் சேவையில் ஈடுபட்டிருந்த குப்பையன் (குப்புசாமி) தலைமையில், ஊரணியில் குடிநீர் எடுப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

கக்கன், ஒருங்கான் அம்பலம், கருப்பையா செட்டியார் ஆகியோர் முன்செல்ல, மக்கள் பின் சென்றுள்ளனர். அனைவரும் குளத்தில் குடிநீர் எடுத்துத் திரும்பும்போது, சாதி இந்துக்கள் கத்தி, கம்பு போன்ற ஆயுதங்களுடன் வழி மறித்துள்ளனர். ஆனால், அந்தத் தலைவர்கள் இதற்கு அஞ்சவில்லை; அகிம்சை வழியில் எதிரணியினரைச் சந்திக்க முடிவு செய்தனர். ஒருங்கான் அம்பலம் முன்வந்து பேசத் துவங்கினார், “நானும் உங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவன்தான். நம்மோடு வாழும் மக்கள், கழிவுநீரைக் குடிப்பது என்ன நியாயம்? இயற்கையால் வழங்கப்பட்ட நீரைக் கொடுக்க மறுப்பது எவ்வளவு பெரிய கொடுமை…” என்று கூறியுள்ளார். ஆனால், எவரும் அவர் பேச்சுக்குச் செவி சாய்க்கவில்லை; கூச்சல் அதிகமாகியுள்ளது. அதனால், “இவர்களை வெட்டி, உங்க ஆசையை நிறைவேற்றிக்கொள்ள நினைத்தால், முதலில் என்னை வெட்டிவிட்டு, பின் மற்றவர்களை வெட்டுங்கள்…” என்று சொல்லி சாலையின் நடுவில் அமர்ந்துள்ளார் ஒருங்கான் அம்பலம். உடனே கருப்பையா செட்டியார், “உங்க ஆயுதத்தால்தான் இந்தச் சமூகக் கொடுமைக்கு முடிவு ஏற்படும் என்றால், என்னைத் தீர்த்துக் கட்டி, பின் தீர்வு காணுங்கள்…” என்று அவரும் சாலையில் அமர்ந்துள்ளார். அவர்களைத் தொடர்ந்து கக்கன், “இந்த இரு தலைவர்களை வெட்டுவதற்கு முன், என்னை வெட்டுங்கள். எங்கள் சமுதாயத்திற்கு விடுதலை பெற்றுத்தர முன்வந்த இவர்கள் சாவதற்கு முன் நான் மரணமடைய வேண்டும். அதனால், என்னை முதலில் வெட்டுங்கள்…” என்று கூறி, சாலையில் அமர்ந்தார். எதிரணியில் இருந்தவர்களோ என்ன செய்வதென்று புரியாமல், தடுமாறியுள்ளனர். இறுதியில், “இரவு ஊர் பஞ்சாயத்தில் முடிவு செய்யலாம்.” என்று கூறி கலைந்து சென்றுள்ளனர். இரவு பஞ்சாயத்து நடந்தது. கக்கன், ஒருங்கான் அம்பலம், கருப்பையா செட்டியார் ஆகியோரும் பஞ்சாயத்தில் கலந்துகொண்டுள்ளனர். இறுதியாக, தலித் மக்கள் ஊருணியின் ஒரு மூலையிலும், சாதி இந்துக்கள் மறுமூலையிலும் நீர் எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதுவும் சமுதாயக் கொடுமையின் மறுவடிவம்தான் என்றாலும், அன்றைய சூழலில், அந்த மக்களை அமைதிப்படுத்த, இம்முடிவை ஏற்றுக்கொண்டனர் எனப் புரிந்துகொள்ள முடிகிறது.

கோயில் நுழைவுப் போராட்டங்கள்

தலித்துகள், இன்றைக்குச் சாதி இந்துக்களாக மாறிக் கொண்டிருக்கும் சில சாதிகள் ஆகியோர் கோயிலுக்குள் நுழைய தடை இருந்தது. இச்சூழ்நிலையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே வைத்தியநாதய்யர் தனது ஆதரவாளர்களான கக்கன் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து ஆலயப் பிரவேசம் செய்வதென முடிவெடுத்தார். அதன்படி 1939ஆம் ஆண்டு ஜூலை மாதம் எட்டாம் நாள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழைந்தனர். பகலில் காவல் துறையினரின் தடைகள் ஏராளமாகவே இருந்தன. போராட்டத் தளத்தில் எடுத்த முடிவின்படி போராட்ட வீரர்கள் இரவு நேரத்தில் கோயிலுக்குள் நுழைந்தனர். கோயிலுக்குள் போகக் கூடாது என்று விதிக்கப்பட்ட அத்தனை தடைகளையும் தூக்கி எறிந்துவிட்டு, சுதந்திரமாக நுழைந்தனர். இதில் முக்கியப் பங்கினை வகித்த பெருமை போராட்டத் தளபதி கக்கனையே சாரும். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நுழைவுப் போராட்டத்தை அடுத்து, மதுரையிலுள்ள கள்ளழகர், கூடல்அழகர் கோயில்களும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் திறந்துவிடப்பட்டன. இதைத் தொடர்ந்து தஞ்சை, திருநெல்வேலி, குற்றாலம், தென்காசி, முதலிய இடங்களிலும் கோயில் நுழைவு உரிமைப் போராட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்றன. ஆலய நுழைவுப் போராட்டங்கள் மூலமாக கக்கன் மக்களிடையே பிரபலமானார்.

அன்றைக்குக் காங்கிரஸின் தலித் மேம்பாட்டுப் பணிகளுக்கான ஆதரவைக் காங்கிரஸ§க்கு வெளியே இருந்த தலித் தலைவர்கள் தேவைக்கேற்ப அளிக்கவும் விலக்கவும் செய்தனர். ஆனால், காங்கிரஸுக்குள்ளே பிரபலமான தலித் தலைவராக இருந்தவர் கக்கன்தான். காங்கிரஸின் தலித் மேம்பாட்டுப் பணிகளுக்காக கக்கனைத் துணைகொள்வது அவசியமாக இருந்தது. அந்த அளவிற்குக் காங்கிரஸில் தலித் அடையாளமாக அவர் இருந்தார். எதிர்த்தரப்பினரின் உதவியைப் பெற்றுத் தலித் மேம்பாட்டுப் பணிகளை விரிவுபடுத்துவதே கக்கனின் நோக்கமாக இருந்துள்ளது. எனவே அவரை மதிப்பிடும்போது எந்த அளவிற்கு எதிர்த்தார் என்று தேடுவதைவிட, எவ்வாறு பணிகளைச் சாத்தியப்படுத்தினார், எத்தகைய பயன்கள் ஏற்பட்டன என்றே பார்க்க வேண்டியிருக்கிறது.

பள்ளிகள், விடுதிகள் தொடங்கவும் / தொடர்ந்து நடத்தவும் காந்தியால் ஈர்க்கப்பட்டிருந்த பணக்காரச் சாதி இந்துக்களை அவர் பயன்படுத்திக்கொண்டார். அவர்களிடம் அவர் பணிந்து பெற்றார் என்பதைச் சொல்லும் அதேவேளையில், அவ்வாறு பெற்றுக் கல்விப் பணிகளைத் தொடர காரணமானவர் என்பதையும் பார்க்க வேண்டும். மதுரை, மேலூர் வட்டாரங்களில் அக்காலத்தில் பள்ளிகள், விடுதிகள் சார்ந்த களப் பணிகளை மேற்கொள்ளும்போது அவர் எவ்வாறு நிதியுதவிகளைப் பெற்றுவருவார் என்ற நினைவு கூரல்களைக் கேட்க முடிகிறது. போராட்டங்கள் நடத்தினால் பிரசுரங்கள், செய்தித்தாள் பதிவுகள் என்று சான்றுகள் கிடைக்கும். ஆனால், இதுபோன்று நேரில் வாய்மொழியாகக் கேட்டுப் பெற்ற உதவிகளுக்குச் சான்றுகள் கிடைக்காது. எனவேதான் கக்கன் செய்த பணிகளைத் துல்லியமான சான்றுகள் மூலம் சொல்ல முடிவதில்லை. சான்றுகள் இல்லாததாலேயே நடந்த சம்பவங்கள் இல்லாமல் போய்விடுவதுமில்லை.

விடுதலைப் போராட்டமும் தலித்துகளின் பங்களிப்பும்

கக்கன் பள்ளியில் படிக்கும்போதே காங்கிரஸ் கட்சியில் நாலணா உறுப்பினராக இருந்திருக்கிறார். ஆனால், கட்சி வேலைகளில் ஈடுபட்டதில்லை. அரிஜன சேவா சங்கப் பணிகளில் செயலாற்றியே படிப்படியாகக் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்துள்ளார். 1934 ஜனவரி 22 முதல் பிப்ரவரி 21 வரை 31 நாட்கள் தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்திற்காக காந்தி தமிழகத்தில் விரிவான சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்பயணத்தின் ஒரு பகுதியாக ஜனவரி 27ஆம் நாள் மதுரைக்கு வருகை தந்தார். என்.எம்.ஆர்.சுப்புராமனின் மதுரை புதூர் மணல்மேடு பங்களாவில் அவர் தங்கியிருந்தபோது சேவா சங்க ஊழியர் என்ற முறையில், சுப்புராமன் அவர்களால் காந்தியிடம் கக்கன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். பின்னர், மதுரை வட்டாரப் பகுதிகளில் காந்தியடிகள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கக்கனுக்கு வழங்கப்பட்டது. காந்தியின் உந்துதலாலும் மதுரை வைத்தியநாதய்யரின் கட்சிப் பணிகளாலும் ஈர்க்கப்பட்ட கக்கன் தன்னையும் காங்கிரஸுடன் ஐக்கியப்படுத்திக்கொண்டு தீவிர கட்சிப் பணி ஆற்றியுள்ளார். அவரது முயற்சியால் ஏராளமானோர் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க முன்வந்தனர். இரண்டாம் உலகப் போரில் இந்திய மக்களின் அனுமதியின்றி, இந்தியாவைப் போரில் ஈடுபடுத்தியதை எதிர்த்து காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் கக்கனும் பங்கேற்றார். ‘வந்தே மாதரம்’ என்று முழங்கியதற்காகவும் விடுதலை வேட்கையை ஊட்டும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கியதற்காகவும், 1940ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் நாள் மேலூரிவிருந்து 8 கி.மீ தொலைவில், கருங்காலக்குடிக்கு அருகில், அமைந்துள்ள வஞ்சி நகரம் என்ற கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் அவரைக் கைது செய்து பதினைந்து நாட்கள் சிறையில் அடைத்துள்ளது. விடுதலைப் போராட்டத்தில் கக்கன் பெற்ற முதல் சிறைவாசம் இதுவே. சிறைத் தண்டனை முடித்து வெளியே வந்த கக்கன் தொடர்ந்து விடுதலைப் போராட்ட நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ளார்; தலித்துகளையும் இணையச் செய்துள்ளார்.

குறிப்பாக, மேலூர் வட்டாரத்தில் தலித்துகள் வசிக்கும் பகுதிகளில் ஏராளமான சுதந்திரப் போராட்ட தியாகிகள் இருந்துள்ளனர் என்பது கள ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது. அவர்கள் கக்கன்மீது கொண்ட நம்பிக்கையின் பேரிலே சுதந்திரப் போரில் கலந்து கொண்டனர் எனலாம். கக்கன் ஊருக்கு அருகில் உள்ள கீழையூர் எனும் ஊரில் தன்னுடைய உறவினர் தியாகி பென்சன் பெற்று வந்ததாகவும், அரசு சார்பில் 5 ஏக்கர் நிலங்கள் பெற்றதாகவும் ஆய்வாளர் பொய்யாமொழி கூறுகிறார். அவ்வட்டாரத்தில் ஏராளமான மக்கள் விடுதலை இயக்கத்தில் இணைந்து தேசத் தொண்டாற்ற கக்கன் காரணமாக இருந்திருக்கிறார். மதுரை மேலூர் பகுதியில் உள்ள தெற்குத் தெரு கிராமத்தில் மட்டும் 24 விடுதலை இயக்கப் போராட்ட வீரர்களை உருவாக்கியுள்ளார். தலித்துகள் மட்டுமல்லாது சாதி இந்துக்களும் கக்கனின் பேச்சில் நம்பிக்கை கொண்டு அவரைப் பின்தொடர்ந்துள்ளனர்; சுதந்திரத்திற்குப் பின்பு அப்பகுதியில் ஏராளமானோர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். இன்றளவும் அவ்வட்டாரத்தில் காங்கிரஸ் கட்சிக்குக் கணிசமான வாக்கு வங்கி உள்ளதென்றால் அதற்கு கக்கன்தான் மூலக்காரணம் எனக் கூறலாம்.

அரசியல் பயணம்

1940ஆம்  ஆண்டு  காங்கிரஸ்  கட்சியின்  மேலூர்  வட்டச் செயலராக கக்கன் பொறுப்பேற்றார். 1941 மே 15ஆம் நாள் நாடு முழுவதும் நடைபெற்ற  சத்தியாகிரகப் போராட்டத்தின் ஒருபகுதியாக மதுரை மேலூரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதால் தேசத் துரோகக் குற்றச்சாற்றின் பேரில் கைதாகி சிறை சென்றார் கக்கன். மேலூர் மற்றும் மதுரை சிறைகளில் அவர் வைக்கப்பட்டார். சிறையிலிருந்து திரும்பிய கக்கனின் கட்சிப் பணியைப் பாராட்டும் விதமாக மாவட்ட அளவிலான பதவி அவரைத் தேடி வந்தது. 1941 ஐனவரி 21ஆம் நாள் மதுரை மாவட்டக் காங்கிரஸ் பொருளாளராகப் பொறுப்பு வழங்கப்பட்டது. 1941 – 1942 ஆண்டு நடைபெற்ற மாவட்டக் கழக உறுப்பினர் தேர்தலில் மேலூர் வையாபுரி அம்பலம் என்பவரை எதிர்த்து கக்கன் நிறுத்தப்பட்டார். சாதிய ஆதிக்கம் மிகுந்திருந்த காலச் சூழலில் சாதி இந்துவை எதிர்த்து தலித் வகுப்பினரான கக்கனைத் தேர்தலில் போட்டியிட வைத்தது காங்கிரஸ் கட்சி. இதற்குச் சாதி இந்துக்களிடமிருந்து எதிர்ப்பு இருந்தபோதிலும், கக்கனின் பின்புலத்தில் வைத்தியநாதய்யர், சுப்புராமன், கருப்பணச் செட்டியார் போன்ற தலைவர்கள் இருந்ததால் சுமுகமாகத் தேர்தல் நடைபெற்று கக்கன் வெற்றிபெற்றார். கக்கன் போட்டியிட்ட மாவட்டக் கழக உறுப்பினர் தேர்தல் தொகுதியில் மேலவளவு கிராமமும் அடங்கும். சாதிய இறுக்கம் நிறைந்த அக்காலகட்டத்தில் துணிந்து உள்ளூர் சாதியவாதிகளை எதிர்த்து நின்ற கக்கனின் தீரத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அவரின் தொடர்ச்சியாகத்தான் அப்பகுதியைச் சேர்ந்த உரிமை மீட்புப் போராளிகளான வஞ்சிநகரம் கந்தன், மேலவளவு முருகேசன் ஆகியோரைப் பார்க்கத் தோன்றுகிறது.

கக்கன் 1946 டிசம்பர் 2ஆம் நாள் இந்திய அரசியல் நிர்ணயச் சபை உறுப்பினராகி 1950வரை பணியாற்றியுள்ளார். அச்சபையில் பட்டியலின மக்களின் உரிமைகளுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் குரல் எழுப்பியுள்ளார். 1948 நவம்பர் 30ஆம் நாள் இந்திய அரசியலமைப்பு உறுப்பு 10 குறித்த விவாதத்தில் பங்கேற்று கக்கன் பேசியுள்ளார். அதில், “அரசுப் பணிகளில் சேர விண்ணப்பிக்கும் ஏழை அரிஜன இளைஞர்களுக்கு உரிய பணிகள் வழங்கப்படவில்லை. ஆனால், அரிஜனங்களைத் தேர்வு செய்யாமல், உயர் அலுவலர்கள் தங்கள் இனமக்களையே தேர்வு செய்கின்றனர். பணி மேம்பாட்டில் கூட அரிஜனங்கள் தங்களுக்குரிய நீதியைப் பெற முடியவில்லை” எனத் தலித் இளைஞர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டதுடன், நாட்டின் பாதுகாப்புப் படையிலும் வேலைவாய்ப்பை  அளித்து ஊக்குவிக்க வேண்டுமென்று நாடெங்கிலும் உள்ள தலித் மக்களுக்காகக் குரல் எழுப்பியுள்ளார். 1947ஆம் ஆண்டு நாடு விடுதலை பெற்ற பின்னர் கக்கனின் தன்னலமற்ற மக்கள் பணி பல்வேறு நிலைகளில் மக்கள் மன்றத்தால் அங்கீகரிக்கப் பட்டதின் விளைவாக நாடாளுமன்ற உறுப்பினராக / சட்டமன்ற உறுப்பினராக / மாநில அமைச்சராக மக்கள் சேவையில் மேன்மையுற வழி வகுத்தது. இந்தியா குடியரசான பின்னர் 1951-1952ஆம் ஆண்டு நாட்டின் முதலாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. மதுரை மாவட்டம் சமயநல்லூர் தொகுதியில் வெற்றிபெற்று இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பணியாற்றியுள்ளார்.

தமிழ்நாட்டில் 1952இல் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சிக்குப் போதிய ஆதரவுடன் வெற்றி கிடைத்தது. ராஜாஜி முதல்வரானார். குலக்கல்வி எனும் திட்டத்தைக் கொண்டுவந்தார். இத்திட்டத்தால் தலித் மக்களின் வாழ்வில் பெரும் பாதிப்பு ஏற்பட நேர்ந்தது. காங்கிரஸ் கட்சியை மக்கள் வெறுக்கும் அளவிற்கு இக்கல்வித் திட்டம் காணப்பட்டது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், கக்கன் இதனை எதிர்த்துத் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் காங்கிரஸ் தலைவர்கள் நல்ல முடிவெடுக்கத் திட்டமிட்டனர். தமிழ்நாடு முழுவதும் உருவான எதிர்ப்புகளின் பயனாக 1954 ஆம் ஆண்டு  ராஜாஜி தானே முன்வந்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. ஆக காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மக்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் மக்கள் எதிர்ப்பதோடு, காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் கக்கன் போன்ற சமுதாயச் சிந்தனையாளர்களும் எதிர்த்தனர் என்பதுதான் சான்று. அதன் பின்பு கட்சியின் ஆணைக்கிணங்க காமராஜர் முதல்வர் பொறுப்பேற்றார். அதன் பிறகு, 1954 டிசம்பர் 29 அன்று கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

காமராஜர் முதல்வர் பொறுப்பை ஏற்றதினால் கட்சித் தலைமைப் பதவிக்கு கக்கன் ஒருமனதாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில காங்கிரஸ் தலைவராகப் பட்டியல் சமூகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் கக்கனே. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் 70ஆவது ஆண்டு (பவளவிழா) மாநாடு நடைபெற்றது. கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கக்கன் அம்மாநாட்டைச் சிறப்புற ஏற்பாடு செய்துள்ளார். மாநாட்டில் சிறப்புரையாற்றிய அப்போதைய இந்திய பிரதமர் நேரு தனது உரையில் மாநாட்டுத் தலைவரான கக்கனை வட இந்திய முறைப்படி ‘கக்கன்ஜி’ என்று மரியாதை நிமித்தமாகக் குறிப்பிட்டுள்ளார். பின்னர் தமிழ்நாட்டு மக்களாலும் கக்கன்ஜி என்று அழைத்திடும் வழக்கம் ஏற்பட்டது. 1956ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தொழிலாளர் பிரிவும் பின்னர் மகளிர் பிரிவும் துவங்க கக்கன் காரணமாக இருந்துள்ளார். மேலும், 1955 – 1957 ஆண்டுகளில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக கக்கன் செயல்பட்ட குறுகிய காலமே குழுச் சண்டைகள் மட்டுப்பட்டிருந்த காலம் என்று கூறுவதுண்டு.

அமைச்சராகத் தலித்துகளுக்குச் செய்திட்ட நலன்கள்        

1957ஆம் ஆண்டு இந்தியாவில் இரண்டாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. கக்கன் தலைமையில் போட்டியிட்ட 205 இடங்களில் 151 இடங்களைக் கைப்பற்றிச் சாதனை படைத்தது காங்கிரஸ். அத்தேர்தலில் கக்கனும் சமயநல்லூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை அமைக்கப்பெற்றது. அவருடன் கக்கன், எம்.பக்தவத்சலம், சி.சுப்பிரமணியன், எ.மாணிக்கவேலன், வி.ராமய்யா, லூர்தம்மாள் சைமன் ஆகிய ஆறு பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். கக்கனுக்குப் பொதுப்பணித்துறை மற்றும் அரிஜன நலத்துறை வழங்கப்பட்டது.

பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் போதும் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளின் கல்வித் தரத்தைப் பற்றிக் கேட்டறிந்தார் கக்கன். தமக்கு நேரடியாகத் தொடர்பில்லாத துறையாக இருந்தாலும் கல்வி மேம்பாட்டை உயர்த்த வேண்டிப் பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்லத் தயங்குவதில்லை. இவருக்கு அளிக்கப்பட்ட மற்றுமொரு துறையான அரிஜன நலத்துறையும் அவருடைய கல்வி மேம்பாட்டுப் பணிகளைச் செய்ய வாய்ப்பாக இருந்துள்ளது. மாவட்டந்தோறும் பள்ளிகள் இருக்கும் ஊர்களில் விடுதிகள் தொடங்கி ஏழைத் தலித் மாணவர்களுக்குப் பள்ளியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பை உருவாக்கித் தந்தார். அரசு சலுகை மூலமாகத் தலித் குழந்தைகளுக்குக் கல்வி கிடைத்திட பாடுபட்டார் கக்கன். இந்த விடுதிகளில் பட்டியலின மாணவர்கள் மட்டுமல்லாமல் பிற சாதியினருக்கும் குறிப்பிட்ட விழுக்காடு ஒதுக்கீடு வழங்கினார். சிறார்ப் பருவத்திலேயே அனைத்துப் பிரிவினரும் ஒன்றாய்ப் பழகி சகோதரர்களாக வாழ்வார்களேயானால் எதிர்காலத்தில் சாதிய வேறுபாடோ ஏற்றத்தாழ்வுகளோ இல்லாத சமூகம் ஏற்படும் என்று கக்கன் நம்பினார். பட்டியல் மாணவர்களுக்கென்று தனியாகக் கல்லூரி நடத்தப்படுமாயின், அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை உருவாகக் கூடும். ஆதலால், எல்லாக் கல்விக் கூடங்களிலும் விடுதிகளிலும் அனைத்துப் பிரிவினரையும் சேர்ப்பதற்கான முடிவை அரசாங்கம் மூலமாகச் செயல்படுத்தினார். கக்கன் அமைச்சராக இருந்தபோதும் சர்வோதய இயக்கம் சார்ந்த நடவடிக்கைகளில் அதிக கவனம் காட்டினார். குறிப்பாக, தலித் மக்களின் நல்வாழ்விற்காக சர்வோதய இயக்க அன்பர்கள் மேற்கொண்ட பல்வேறு போராட்டங்களுக்கு ஆதரவு தந்து ஒத்துழைப்பு நல்கியுள்ளார்.

1962ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று காமராஜர் மூன்றாவது முறையாக முதல்வரானார். இத்தேர்தலில் மேலூர் தொகுதியில் வெற்றிபெற்று கக்கன் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெற்றார். வேளாண்மை, உணவு, சிறுபாசனம், ஆதிதிராவிடர் நலம், மதுவிலக்கு, கால்நடை போன்ற துறைகள் கக்கனுக்கு வழங்கப்பட்டன. சென்னை மாதவரம் பால்பண்ணை, சாத்தூர் கொல்லைப்பட்டி  ஆட்டுப்பண்ணை, மதுரைப் பால்பண்ணை திட்டங்கள் கக்கனால் கொண்டு வரப்பட்டவை. மேலூரில் நரிக்குறவர் விடுதி, அடித்தட்டு மக்களின் நலம் காக்க வீட்டு வசதிக் குடியிருப்புகள், மாணவர்களுக்கான விடுதிகள், உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் கக்கனின் முயற்சியால் கொண்டுவரப்பட்டு அனைத்துத் தரப்பு மக்களும் வாழ வழிவகை செய்யப்பட்டது. 1963க்குள் ஆதிதிராவிட நலத்துறையின்கீழ் இயங்கும் 1,052 பள்ளிகளைத் திறக்கக் காரணமாயிருந்த பெருமை கக்கனுக்கு உண்டு. அப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளார். தலித், பழங்குடியின சமூகக் கல்வி வளர்ச்சிக்காக மாணவர்களுக்கு இலவசக் கல்வி வசதி, உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டன. இதனால் கல்வி பயில வரும் தலித் – பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் மாநில அளவில் உயர ஆரம்பித்தது. மேலும், 1961 மார்ச் 14 அன்று தமிழக சட்டமன்றத்தில் கக்கன் பெண் கல்வியின் தேவையை வலியுறுத்தியுள்ளார். “என்னைப் பொறுத்தவரையில் பெண்கள் எவ்வளவு தூரம் உயர்ந்த நிலைக்கு வர வேண்டுமோ, அவ்வளவு வர வேண்டும். ஆண்களில் 10 பேர் படிப்பதைவிட, பெண்களில் 5 பேரையாவது கல்வியில் உயர்நிலைக்குக் கொண்டுவந்தால் அதுவே சாலவும் சிறந்தது. அவர்கள் உயர்ந்தால் குடும்பமே உயரும் என்ற எண்ணம் அரசுக்கு உள்ளது.” இக்கருத்து அவரது பெண் விடுதலைச் சிந்தனையை உணர்த்துகிறது. மேலும், கல்வி ஒன்றே பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் கருவி என்ற எண்ணத்தில், பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் எல்லா மாணவிகளுக்கும் உடை கொடுக்கப்பட்டுள்ளது. தான் செய்த உதவிகளைப் பிரகடனப்படுத்தும் அரசியலுக்குப் பழகியிராத கக்கன், அமைச்சராகி தலித் மக்களுக்குத் தான் ஆற்றிய பணிகளை அரசியல் சாதனையாகக் கூறிக்கொள்ளவில்லை. தலித் மக்களுக்குத் தனி வீட்டுவசதி வாரியம் ஒன்றினை அமைத்துக் குடிசைவாழ் மக்களுக்கும் கிராமவாழ் மக்களுக்கும் உதவியதுடன் அதில் பத்து விழுக்காடு சாதி இந்துக்களுக்கு ஒதுக்கி அவர்கள் விரும்பினால் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆணை வழங்கினார். பின்னாளில் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட சமத்துவபுரம் திட்டத்தின் முன்னோடியாக கக்கனின் இத்திட்டத்தைப் பார்க்கலாம். இன்றைக்கும் தென்மாவட்டக் கிராமங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் தாங்கள் வாழும் பகுதிகளுக்கு கக்கன் காலத்தில் காலியிடங்களோ, காலியிடங்களுக்குப் பட்டாவோ வழங்கப்பட்டதைப் பரவலாக நினைவு கூருகின்றனர். மேலவளவு பகுதிகளில் களஆய்வு மேற்கொண்டபோது மேலவளவு தேர்தலில் வெற்றி பெற்ற தலித் பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன், பதவியேற்றதும் முதன்முதலில் செய்த பணி கக்கன் அமைச்சராக இருந்தபோது ஆதிதிராவிடர்களுக்குப் பட்டா நிலம் பெற வழங்கிய உத்தரவின்படி, பட்டா பெற வழிவகை செய்ததுதான் என அம்மக்கள் நினைவுகூருகின்றனர். அதேபோல், கக்கன் அமைச்சராக இருந்தபோதுதான் தலித் சமூக மக்கள் பலர் காவல்துறையில் சேர்க்கப்பட்டனர். இனக் கலவரங்கள் ஏற்படா வண்ணம் முன்கூட்டியே அறிந்து தடுத்திட சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அமைக்கப்பட்டது. கலவரங்களைத் தடுக்க ரகசியக் காவலர் முறையை கக்கன் கொண்டுவந்தார்.

கக்கனும் தலித் தலைவர்களும்

பட்டியல் சமூகத் தலைவர்களுக்கு கக்கன் அளித்த முக்கியத்துவம் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அந்தவகையில் எண்ணற்ற தலித் தலைவர்களோடு இணக்கமாக இருந்துள்ளார். அதன் தொடர்பில் அம்மக்களுக்கு நலன்கள் கிடைத்திட வெளிப்படையாகவும் / மறைமுகமாகவும் கக்கன் செயல்பட்டுள்ளார் என அறிய முடிகிறது. தலித் சமூகத்திற்கு ஏற்பட்ட சாதியக் கொடூரங்களுக்கு எதிராக இம்மானுவேல் சேகரன் வட்டாரம் சார்ந்து இயங்கிக்கொண்டிருந்தார். அவரது நடவடிக்கைகளைக் கவனித்த கக்கன், ‘வெறுமனே போராடிக் கொண்டிருக்காமல் அரசியல் அதிகாரத்தோடு தொடர்பில் இருந்தால்தான் அம்மக்களின் துயர் துடைக்க முடியும்’ என்பதை இம்மானுவேலுக்கு உணர்த்தியுள்ளார். இம்மானுவேல் எடுக்கும் சமூக உரிமைக்கான போராட்டங்களுக்கு அரசின் ஆதரவைப் பெற்றுத் தருவதாகக் கூறி அவரைக் காங்கிஸில் இணையும்படி கூறியுள்ளார். அதன்படியே 1954ஆம் இம்மானுவேல் தன்னை காங்கிரஸில் இணைத்துக்கொண்டார். அரசியல் அதிகாரத்தின் அவசியத்தைத் தமது மக்களிடம் கூறி பெருமளவில் காங்கிரஸில் சேரும்படிச் செய்தார்.

தஞ்சை மாவட்டத்தில் வேதாரண்யம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆயக்காரப்புலம் 3வது சேத்தி ஊராட்சி மன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் உறுப்பினர்கள் தீண்டாமைக் காரணமாக ஊராட்சி மன்றத்திற்குள் சென்று அமர முடியாத சூழ்நிலை தொடர்ந்து 12 ஆண்டுகள் இருந்துவந்துள்ளது. இதை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல எண்ணியிருந்தார் இந்தியக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சேப்பன். 1961இல் திருத்துறைப்பூண்டி தாழ்த்தப்பட்டோர் லீக் – தாழ்த்தப்பட்டோர் இழிவு ஒழிப்பு முதல் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அம்மாநாட்டினை வரவேற்றுப் பேசிய சேப்பன், ஊராட்சி மன்றத்தில் தலித்துகளுக்கு இருந்த பிரச்சினையை மேடையில் கக்கனை வைத்தே பேசிவிட்டார். இவ்விசயத்தைத் தன்னுடைய கவனத்திற்குக் கொண்டுவராமல் மிக சாதுர்யமாக நடந்துகொண்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாதி இந்துக்களைக் கண்டித்ததோடு, சேப்பனைப் பார்த்து ‘ஏன் எனது கவனத்திற்குக் கொண்டுவரவில்லை’ எனக் கடிந்துகொண்டார். அங்கு இருந்த உயரதிகாரிகளிடம் “அந்தப் பஞ்சாயத்து போர்டு உறுப்பினர்கள் உள்ளே அமர்வதற்கு உடனே ஏற்பாடு செய்யுங்கள். இல்லாவிட்டால், அந்தப் பஞ்சாயத்து போர்டை ஒரு வாரத்திற்குள் டிஸ்மிஸ் செய்து எனக்குத் தகவல் கொடுக்க வேண்டும்.” என நேரடியாக உத்தரவிட்டார்.

அதன்பின் தலித் உறுப்பினர்களை ஊராட்சி மன்ற கூட்டத்திற்குள் அனுமதிக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைச் சாதி இந்துக்கள் ஏற்க மறுத்துள்ளனர். அதுமட்டுமின்றி “இங்கிருந்து ஒரு பறையன் (சேப்பன்) கூறினான் என்பதற்காக, சென்னையிலிருந்து வந்த பறையன் (கக்கன்ஜி) பேசினான் என்பதற்காக நமது பாரம்பரிய கௌரவத்தை விட்டுவிடக் கூடாது. பறையர் இன உறுப்பினர்கள் மன்றக் கூட்டத்திற்குள் எங்களுக்குச் சமமாக உட்காருவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது, இது எங்களுக்கு மிகவும் கேவலம்” என வாதிட்டுள்ளார்கள். அதை மறுத்துப் பேசிய ஊராட்சி மன்றத் தலைவர், “அப்படி அவர்களை உள்ளே நுழைய அழைக்கவில்லையெனில் நமது ஊராட்சி மன்றம் டிஸ்மிஸ் செய்யப்படும். அப்படி அரசாங்கமே முன்வந்து டிஸ்மிஸ் செய்தால் அது நமக்கெல்லாம் அவமானமில்லையா” எனக் கூறியுள்ளார். அதற்குப் பிறகு மனம் மாறிய சாதி இந்துக்கள், தலித் உறுப்பினர்களை ஊராட்சி மன்றக் கூட்டத்திற்குள் அழைத்துவந்தனர். பின்னாளில் சேப்பனை நேரில் வரவழைத்து “என்ன நிலையில் இப்போது உள்ளது” என கக்கன் கேட்டுள்ளார். அதற்கு சேப்பன் “இப்போதெல்லாம் மாறிவிட்டது. அதற்கு உங்களுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார். இதைக் கேட்ட கக்கன் சிறுது நேர அமைதிக்குப் பின் கண்ணீர் வடித்துள்ளார் என சேப்பன் பதிவுசெய்கிறார்.

காங்கிரஸில் மிக முக்கியமான ஆளுமையாகத் திகழ்ந்து பின்னாளில் தலித்துகளுக்காகத் தனி இயக்கம் கண்ட மூத்தத் தலைவர் இளையபெருமாள், கக்கனின் நினைவேந்தல் நிகழ்வை ஒருங்கிணைத்து மதுரை மேலூரில் கூட்டம் ஒன்றை நடத்தி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளது இங்கே கவனிக்கப்பட வேண்டியது.

மேலும் அவர் காலகட்டத்தில் சட்டமன்றத்தில் அங்கம் வகித்த கே.பி.எஸ்.மணி, ஏ.எஸ்.பொன்னம்மாள், மு.ஜெகன்னாதன் போன்ற பட்டியல் சமூகத் தலைவர்கள் சட்டமன்றத்தில் பட்டியல் சமூகம் சார்ந்து அதிக கேள்வி நேரங்களிலும் விவாதங்களிலும் கலந்துகொள்வதற்குக் காரணமாக கக்கன் இருந்தார் எனப் புரிந்துகொள்ள முடிகிறது. இன்றைக்கு ஆதிதிராவிட நலத்துறையின் செயல்பாடுகளைப் பற்றி விவாதிக்க, கக்கனின் சட்டமன்றச் செயல்பாடுகளைப் பற்றி விரிவாகப் பேச வேண்டிய தேவையும் உள்ளது. பத்தாண்டு காலம் அமைச்சராக கக்கன் ஆற்றிய ஆதிதிராவிட நலத் திட்ட உதவிகள் அம்மக்களிடம் நல்ல மாற்றத்தையும் வளர்ச்சியையும் கொண்டுவந்துள்ளன. ஆரம்பகாலத் தேர்தல்களில் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கே தங்களது வாக்குகளை அளித்துவந்தனர். இன்றைக்கும் கூட தலித் மக்கள் குடியிருப்புகளில் காங்கிரஸ் கட்சியின் கொடி பறக்கிறது என்றால் அதற்கு விதை தூவியவர் கக்கன். வாழ்நாளில் கக்கன் பல நிலைகளில் தீண்டாமைக் கொடுமைகளை அனுபவித்துள்ளார். பள்ளியில் படித்த காலத்தில் சிற்றுண்டிச் சாலையில் வெளியில் இருந்து சாப்பிடும் அவலநிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். வறுமையுற்ற, நலிவடைந்த மக்கள் பிரிவிலிருந்து வந்த ஒருவர் என்கிற நிலையில் அவர்களின் வலியை உணர்ந்திருந்தார். ஆதலால் ஒடுக்கப்பட்ட மக்களின் நலம் காக்கப் பல்வேறு பணிகளை மேற்கொண்டார். தலித் சமுதாயத்தை அரசியல், பொருளாதாரம், கல்வி, சமூகத் துறைகளில் உயர்த்துவதே அவரது லட்சியமாக இருந்துள்ளது.

கக்கனின் ஆளுமைத் திறனும் – அமைச்சராகத் தமிழக வளர்ச்சிக்கு அவரின் செயல்பாடுகளும்

1962ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய – சீனப் போரின் விளைவாக நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்தது. பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் அவதியுற்றனர். உணவுத் தட்டுப்பாட்டைப் போக்க உணவுத்துறைப் பொறுப்பு வகித்த கக்கன் மாநிலம் முழுவதும் கிராமக் கூட்டுறவுச் சங்கங்களையும் நியாய விலைக் கடைகளையும் திறக்க நடவடிக்கை எடுத்தார். அத்துடன், கூட்டுறவு சங்கங்கள் மூலம் வேளாண் மக்கள் உற்பத்திசெய்த விளைபொருட்களைக் கொள்முதல் செய்யவும் உத்தரவிட்டார். இதன் மூலம் 59 இலட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. வேளாண் துறை அமைச்சராக இருந்தபோது 1963 செப்டம்பர் 7ஆம் நாள் அரசு முறைப் பயணமாகச் சீனா சென்ற கக்கன், அந்நாட்டின் நீர்பாசனத் தொழிற்நுட்பங்களை அறிந்துவந்து தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த வகைசெய்துள்ளார்.

வயதில் மூத்தவர்கள் அரசியல் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்துவிட்டுக் கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற தனது ரி-றிலிகிழி திட்டத்தைப் பிரதமர் நேருவிடம் காமராஜர் தெரிவித்தார். திட்டத்திற்கு முன்னுதாரணமாய் முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிக் கட்சிப் பணியாற்ற முன்வந்தார் காமராஜர். பிறகு அகில இந்திய காங்கிரஸின் தலைவராகி தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றார். காமராஜர் கட்சிப் பணிக்குத் திரும்புகையில், சென்னை மாநில முதலமைச்சர் பதவியை கக்கனுக்கு வழங்க விரும்பினார் என்று சொல்லப்படுகிறது. எனினும், காமராஜருக்குப் பின் அப்போதைய பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த பக்தவத்சலம் முதலமைச்சரானார். அவரது அமைச்சரவையில் கக்கனுக்கு உள்துறை, காவல்துறை சிறைச்சாலைத் துறை, மதுவிலக்குத் துறை, கல்வித் துறை, தொழிலாளர் நலத் துறை, அறநிலையத்துறை ஆகிய துறைகள் வழங்கப்பட்டன. மதுரை ஒத்தக்கடை பகுதியில் அவரது முயற்சியால் நிறுவப்பெற்றதுதான் வேளாண்மைக் கல்லூரி. தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட இரண்டாவது வேளாண்மைக் கல்லூரி இதுவாகும். மதுரை, ராமநாதபுரம், நெல்லை, குமரி மாவட்ட மக்களின் தேவையை நிறைவுசெய்யும் வகையில் இக்கல்லூரி அமைக்கப்பட்டது. தற்போது இது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய கல்லூரியாகவும் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையமாகவும் விளங்குகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு கால்நடை மருத்துவமனை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு 1961 – 1962 நிதியாண்டில் 25 மருத்துவமனைகள் ஆரம்பிக்கப்பபட்டன. 1962 – 1963 நிதியாண்டில் மேலும் 30 மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டன.

மாநில மின்தேவையை நிறைவு செய்யும் வகையில் குந்தா நீர்மின் திட்டம், மேட்டூர் நீர் மின் திட்டம், பரம்பிக்குளம் நீர் மின்திட்டம் போன்றவை தொடங்கப்பட்டன. மேலூரில் உள்ள கூட்டுறவு நூற்பாலை கக்கன் அமைச்சராக இருந்தபோது அவரது முயற்சியால் தொடங்கப்பட்டது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த தானியங்களைச் சேமித்து வைக்க விவசாயத்துறை மூலமாக கக்கனின் முயற்சியால் மாநிலம் முழுவதும் பல தானியக் கிடங்குகள் ஏற்படுத்தப்பட்டன. 1963 அக்டோபர் 3 அன்று அமைச்சராகப் பொறுப்பேற்று, தமிழ்நாட்டில் 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியதுவரை கக்கன் அப்பொறுப்பில் இருந்தார். தமிழக வரலாற்றில் முதல்முறையாக உள்துறை அமைச்சர் பதவிக்குப் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த கக்கனை நியமித்தது காங்கிரஸ். முதலமைச்சருக்கடுத்து முக்கியத்துவம் வாய்ந்த பதவி உள்துறை அமைச்சர் பதவி. பட்டியல் சமூகத்தின் தலைவர்களுக்கு ஆளுமை ஏதும் இல்லாததுபோல் ஒவ்வாமையோடு நடந்துகொள்ளும் இன்றைய சாதி இந்துக்களுக்கு மத்தியில், கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தித் தனது ஆளுமையை அன்றே நிரூபித்திருக்கிறார் கக்கன். அவருக்குப் பிறகு பட்டியல் சமூகத்தைச் சார்ந்த எவருக்கும் இவ்வளவு பெரிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிக்காலம்

இந்தி எதிர்ப்புப் போராட்டம் படிப்படியாக காங்கிரஸ் எதிர்ப்பு இயக்கமாக மாறி, 1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதைத் தோல்வியடைச் செய்தது. அதற்குப் பிறகு வந்த தேர்தலில் காமராஜர், கக்கன் போன்றோர் தோல்வியடைந்தனர். பத்தாண்டுகள் அமைச்சராகவும் பல்வேறு பொறுப்புகளையும் வகித்த மகத்தான போராளி, தன்னுடைய கடைசிக் காலக் கட்டத்தில் மிகுந்த சிரமங்களுக்கிடையே 1981 டிசம்பர் 23ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார். தலித்துகளின் கல்வி, உரிமை மீட்புப் போராட்டம், அரசியல் அதிகாரம் என்று தனித்து விளங்கியவரும், மதிக்கத்தக்கவராகவும், தலித் சமூக மக்களுக்கு அரசியல் வழிகாட்டியாகவும் திகழ்கிறார் கக்கன். இதுமட்டுமல்ல, அவரைப் பற்றியும், அவரது நலப் பணிகள் குறித்தும் மிகப்பெரிய ஆய்வை நடத்த வேண்டியுள்ளது. தலித்துகளிடமே அவரைத் திட்டமிட்டு மறைத்ததையும் பேசியாக வேண்டியுள்ளது. தனித் தொகுதியில் வெற்றிபெற்றுச் சட்டமன்ற / நாடாளுமன்ற அவைகளுக்குச் செல்லும் உறுப்பினர்கள், சாதிய இறுக்கம் நிறைந்த காலத்தில் கக்கன் போன்ற தலித் ஆளுமைகளின் செயல்பாடுகளை எண்ணிப் பார்த்துச் செயல்பட வேண்டும் என்றே கருதப்படுகிறது.

துணை நின்ற நூல்கள்

  1. மனிதப் புனிதர் கக்கன் – சி.அம்பேத்கர்பிரியன்
  2. கக்கன் என்றொரு நல் அமைச்சர் – இராம்பொன்னு
  3. வஞ்சிநகரம் கந்தன் – ஸ்டாலின் ராஜாங்கம்
  4. சமுதாயப் போராளி டாக்டர் அ.சேப்பன் வாழ்கை வரலாறு – சி.அம்பேத்கர்பிரியன்
  5. Demand XXII – Harijan Uplift 19.07.1957 தேதிய கக்கனின் சட்டமன்ற உரைகள்

 

தொடர்புக்கு : [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!