தமிழகத்தில் மலக்குழி மரணங்கள் – முருகப்பன் ராமசாமி

சிறப்புப் பகுதி: சுதந்திர இந்தியாவில் ஜனநாயகம்

தன் குழந்தைககளின் மலத்தைக் கழுவ தயங்குபவர்களும், அப்படிக் கழுவுவதைப் பெரும் சாதனையாகக் கூறிக் கொள்பவர்களும் உள்ள நிலையில் மனித மலத்தை மனிதன் அள்ளும் அநாகரிமான, மனிதத் தன்மையற்ற நடைமுறை இன்றும் நாட்டில் உள்ளது. இது சமூகத்தின் பெரும் அவலமாகக் கருதப்படவில்லை. இச்செயலில் அருந்ததியர், வால்மீகி, மாதிகா, மகர் போன்ற சமூகத்தினர்தான் அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றனர்.  இந்தியாவில் 7,50,000 பேர் இப்படிக் கையால் மலம் அள்ளும் பணியினைச் செய்துவருகின்றனர் என்று அரசாங்கமே 2011இல் தெரிவித்தது. அப்போது, அரசு சாரா நிறுவனங்கள் எடுத்த கணக்கெடுப்பின் படி 13,00,000 பேர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனை ஒழிக்க, ‘கைகளால் மனிதக்  கழிவுகளை அகற்றுபவர்களை வேலைக்கமர்த்தல் மற்றும் உலர் கழிப்பறை அமைப்பது தடைச் சட்டம் 1993’ஐ தீவிரமாக நடைமுறைப்படுத்தக் கோரி சபாஃய் கரம்சோரி அந்தோலன் அமைப்பு முன்னெடுத்த முயற்சிகளின் விளைவாகவும், உச்சநீதிமன்றம் வரையிலான வழக்குகளின் காரணமாகவும், கையால் மலம் செயலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும், உலர் கழிப்பிடங்களும் பெருமளவில் குறைந்துள்ளன. முற்றிலும் ஒழிந்துவிட்டது என்று சொல்லமுடியாத நிலையில், பல்வேறு வடிவங்களில் இந்த இழிநிலை இன்றும் தொடரவே செய்கின்றது.

இந்த உலர் கழிப்பிடங்கள் என்பது வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இருந்த நிலையில், தொடர் சட்ட, சமூகப் போராட்டங்களின் விளைவாக ஆயிரக்கணக்காகச் சுருங்கியிருந்தாலும் ஒன்றிரண்டு இடங்களில் இன்னும் நடைமுறையில் உள்ளது. ஆனால், இதனை அடையாளம் காண்பதோ, புகாராக எடுத்துச் செல்வதோ பெரும் சவாலானதாகும்.

நகர்மயமாதலின் நவீன வடிவங்கள்

அரசின் கொள்கை மற்றும் விழிப்புணர்வு காரணமாகவும் மனிதர்களின் அடிப்படைத் தேவை மற்றும் வசதிகளில் நாடு முழுவதும் பல்வேறு மாற்றங்கள் நடந்தன. அதில் ஒன்றுதான் இந்தத் திறந்தவெளிக் கழிவறை. வளர்ச்சி பெறும் நகரங்களில், கொஞ்சமும் கவனிக்கப்படாமல், மாறாமல் இருப்பது சாக்கடை என்கிற கழிவுநீர் கால்வாய்ப் பிரச்சனையாகும். இச்சூழலில்தான், 1993ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின் போதாமைகள் காரணமாகவும், பல்வேறு சமூக அமைப்புகளின் அழுத்தங்கள் காரணமாகவும், ‘கையால் மலமள்ளும் தொழிலுக்குத் தடை மற்றும் மறுவாழ்விற்கான சட்டம் 2013, விதிகள் 2013’ கொண்டுவரப்பட்டது. உலர் கழிப்பிடங்களில் மலமள்ளிய சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். கிராமங்கள் தோறும் இன்று நகரமயமாகி வருகின்ற நிலையில், நவீன வடிவங்களில் மலமள்ளும் நிலையும் நீடித்து வருகிறது. தமிழகம் முழுவதும் தூய்மைப் பணி என்ற பெயரில் மலம் அள்ளுவது, சாக்கடை அள்ளுவது, கழிவுநீர் கால்வாயில் அடைப்பு நீக்குவது, கழிவுநீர் தொட்டியில் நீர் அகற்றுவது, கழிவுகளை அள்ளுவது, அடைப்புகளை எடுப்பது என ஈடுபடுத்தப்படுகின்றனர். ஊராட்சி முதல் மாநாகராட்சி வரை அரசுப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் என அனைவரும் இப்பணிகளைச் செய்து வருகின்றனர். நகராட்சி ஊழியர்கள், சானிட்டரி ஒர்க்கர்ஸ் என அழைக்கப்பட்ட இவர்கள், கொரோனா காலத்தில் முன்களப் பணியாளர்கள் எனக் கூறப்பட்டும், பூக்கள் தூவப்பட்டும், அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் கொடியேற்ற வாய்ப்பளிக்கப்பட்டும், மரியாதைக்கும் சிறப்புக்கும் உரியவர்கள் எனப் புகழப்பட்டாலும் அதே கொரோனா ஊரடங்கு காலத்தில்தான் இவர்கள்மீது மிகப்பெரும் சாதிய வன்கொடுமைத் தாக்குதல்களும் அதிகமாக நடந்தன.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக மலக்குழி மரணங்கள் நடந்துள்ளன. அதிலும் கடந்த 7 மாதத்தில் 12 பேர் மரணமடைந்துள்ளனர். ஜனவரி 19ஆம் தேதி தாம்பரத்தில் 2 பேரும், ஏப்ரல் 21ஆம் தேதி மதுரையில் 3 பேரும்,  மே 5ஆம் தேதி ஆவடியில் ஒருவரும், மே 18ஆம் தேதி புதுச்சேரியில் ஒருவரும், ஜூன் 28ஆம் தேதி சென்னை சிப்காட்டில் ஒருவரும், ஜூன் 29ஆம் தேதி சென்னை ஆவடியில் இருவரும், மாதவரத்தில் ஒருவரும், ஜூலை 12ஆம் தேதி சென்னை கும்மிடிபூண்டியில் ஒருவரும் என  மொத்தம் 12 பேர்  இறந்துள்ளனர். இருவர் இன்னும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

புறக்கணிக்கப்படும் சட்ட நடைமுறைகள்

மனிதர்கள் மூலம் மலமள்ளுவது, கழிவுநீர் தொட்டி நீர் அகற்றுவது, அடைப்பு நீக்குவது போன்றவற்றை 2013ஆம் ஆண்டுச் சட்டம் தடை செய்கிறது. குறிப்பாக, சட்டத்தின் பிரிவு 17 இல், சட்டம் நடைமுறைக்கு வந்த 9 மாதங்களுக்குள் (அதாவது, 06.09.2014-க்குள்).

  1. தங்கள் எல்லைக்குள் சுகாதாரக் கேடு விளைவிக்கும் கழிவறைகள் கட்டப்படுவது மற்றும் பராமரிக்கப்படுவதைத் தடைசெய்து அவை முற்றிலும் இல்லாதிருப்பதை உறுதி செய்யவேண்டும்.
  2. அப்படி எங்காவது சுகாதாரமற்ற கழிவறைகள், மனிதர்கள் கைகளால் மலம் அகற்றும் வகையில் சுகாதாரமற்றக் கழிவறைகள் இருப்பின் அதன் உரிமையாளர்கள் அல்லது பயன்படுத்துவோர் மீது சட்டப்பிரிவு 5(3)இன்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நடைமுறைபடுத்த மாவட்ட ஆட்சியருக்கும், உள்ளாட்சி அமைப்புக்கும்தான் அதிகாரம் அளிக்கப் பட்டுள்ளது. சட்டத்தின் விதி 4இல், “பாதாளச் சாக்கடை மற்றும் மலக்கழிவுக் கிடங்குகளைச் சுத்தம்செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுவோருக்கு, கீழ்க்காணும் பாதுகாக்கும் கருவிகள், உபகரணங்களை வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளது.

மொத்தம் 40 வகையான பாதுகாப்புக் கருவிகள் வழங்கப்பட வேண்டும். அது அரசு, உள்ளாட்சி அமைப்போ, தனியாரோ யாராக இருந்தாலும் இவ்விதியினைப் பின்பற்ற வேண்டும். ஆனால், இந்த 40 இல் கிழிந்துபோன கையுறை தவிர வேறு ஒன்றும் வழங்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை. இந்தக் கிழிந்துபோன கையுறை கூட ஒன்றிரண்டு இடங்களில்தானே தவிர அனைத்து இடங்களிலும் இல்லை. காற்றைப் பீய்ச்சி அடிக்கும் காற்றழுத்தக் கருவி, காற்று சுவாசிக்கப் பயன்படும் கருவிகள், கையால் அழுத்தி இயக்கி சுவாசத்தை மீட்டெடுக்க உதவும் காற்றழுத்தக் கருவி, ஆபத்தான வாயுக் கசிவு ஏற்பட்டால் அதைத் தடுத்து காற்றைத் தூய்மைப்படுத்தி சுவாசிக்க உதவும் முகமூடி, செயற்கையான முறையில் சுவாசத்தை மீட்டெடுக்க உதவும் கருவி, தடுப்பு ஏற்படுத்த பயன்படுத்தப்படும் பிரதிபலிக்கும் பட்டை – பசை – ஊன்றுகோல் சாதனம், காற்றடிப்பான், சுவாச முகமுடி, சுவாசக் கருவிகள், எச்சரிக்கைப் பலகை, குளோரின் முகமூடி, அவசர மருத்துவச் சிகிச்சைக்கான ஆக்ஸிஜன் பெட்டி, முதலுதவி சிகிச்சைப் பெட்டி, முகமூடி, வாயு கண்காணிப்புக் கருவி (4 வாயுக்கள்), வழிகாட்டும் குழாய், முழுமையாக உடலைப் பாதுகாக்கும் கவச உடை, காலுறையுடன் இணைக்கப்பட்ட நீந்துவதற்கு உதவியான முழு கவச உடை, கையுறைகள், தலையில் அணியும்  மின்விளக்கு, தலைக்கவசம், தலைக்கவச அழிப்பான், அசிடிக் அமிலத்தில்  தோய்க்கப்பட்ட தாள், உயிர்காக்கும் அட்டை, பொருட்களைச் சுமக்கும் தானியங்கிக் கருவி, சாதாரணமாக முகத்தில் அணியக்கூடிய முகமூடி, 5 மீட்டர் நீளமுள்ள நைலான் கயிற்றினாலான ஏணி, நைலான் கயிற்றினாலான பாதுகாப்பு இடைக்கச்சை, பாக்கெட் குறிப்பேடு, போர்ட் ஆக்ஸி (Port Oxy), மழைக் கவசம் பிரதிபலிக்கும் மேலாடை, பாதுகாப்பு இடைக்கச்சை, உடலை முழுமையாக மறைக்கும் பாதுகாப்பான உடை, உடலைக் கட்டுப்படுத்தும் பாதுகாப்புச் சேணம், பாதுகாப்பான மூக்குக் கண்ணாடி, முழங்கால் வரை அணியும் பூட், பாதுகாப்புத் தலைக்கவசம், பாதுகாப்புத் தெளிப்பான், பாதுகாப்பு மின்கல விளக்கு,  பாதுகாப்பான முக்காலி, தேடும் விளக்கு ஆகியவையாகும். இத்தனையும் நாட்டில்  யாரேனும் ஒருவர் ஒரே இடத்தில் கண்ணால் கண்டிருப்பாரா என்றால், இல்லை என்று உறுதியாகக் கூறமுடியும்.

முன்களப் பணியா? முதல்நிலை பலியா? 

முன்களப் பணியாளர்கள் என்றும் தூய்மைப் பணியாளர்கள் என்றும் கொரோனா காலத்தில் போற்றப்பட்ட இவர்கள்தான் பாதாளச் சாக்கடைப் பணியிலும், மலக்கழிவு கிடங்கு தொட்டி சுத்தப் பணியிலும் அடையாளமின்றி இறந்து போகின்றனர்.  மேலும், பல்வேறு தனியார் வீடுகளிலும், அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் கூடப் பலர் இறந்துபோகின்றனர். இதுபோன்ற மரணங்களில்  வழக்குப் பதிவதும், இழப்பீடு பெறுவதும் பெரும் சிக்கலான ஒன்றாக உள்ளது. தனியாரிடம் விருப்பப்பட்டுச் செய்தார்கள் என்று கூறிவிட்டு அரசுக்கு இதில் பொறுப்பில்லை என அதிகாரிகள்  நழுவிவிடுகின்றனர். இதுபோன்ற மரணங்களில் மாநில அரசு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டும் என்று  2014 உச்சநீதிமன்றத் தீர்ப்பு (WP (Civil) No.583 of 2003) உத்திரவிட்டுள்ளது. மேலும், 2018இல் சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் (WP no. 25726 of 2017) தனியார் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் நடக்கும்  மரணத்திற்கும் இது பொருந்தும் எனத் தீர்ப்பளித்து. நாட்டின் மிகச்சிறந்த பொறியியல், மருத்துவம், அறிவியல் & கலைக் கல்லூரிகளில் பெருமளவில் தமிழகத்தில் உள்ளது என அண்மையில் செய்திகள் பகிரப்பட்டது. கடந்த 29 ஆண்டுகளில் தமிழகத்தில் 218 மலக்குழி மரணங்கள் நடந்துள்ளன என்று  சஃபாஸ் கரம்சாரிஸ் தேசிய ஆணையம் தெரிவித்துள்ளது.

1993 முதல் 2022 வரை நாடுமுழுவதும் மலக்குழி தொட்டி மற்றும் பாதாளச் சாக்கடை பணிகளில் இறந்துபோனவர் விவரம் மாநில வாரியாக:

மொத்த மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு தமிழகத்தில்தான் நிகழ்ந்துள்ளது. இந்த தகவலை அரசாங்கத்தின் ஆணையம்  அளித்தது. உண்மையில் இதுபோன்று பலமடங்கு மரணங்கள் நிகழ்ந்திருக்கும் என்பதை நாம் உணர முடியும். இந்த இழிதொழிலை வேலையாகவோ தொழிலாகவோ பார்ப்பதால், வேலை செய்யும்போது நிகழ்ந்த விபத்து மரணமாகவும் கருதப்படுகிறது. ஆனால், இது வேலையும் அல்ல, தொழிலும் அல்ல, தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட சாதிக்கான தொழில் என வரையறுக்கப்பட்டு, இன்றுவரை நடைமுறையில் உள்ளது.

இதுபோன்று தூய்மைப் பணியில் ஈடுபடும்போது விஷவாயு தாக்கி இறப்பவர்களின் மரணத்தை மட்டுமே அரசு கணக்கில் எடுக்கின்றது. ஆனால், விஷவாயு தாக்கியும், போதிய பாதுகாப்பில்லாத பணிகளை ஆண்டுக்கணக்கில் செய்வதால் ஏற்படும் சுகாதாரக் கேடு போன்றவற்றால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையிலோ, வீடுகளிலோ இறப்பவர்களின் மரணத்தை அரசு கணக்கிடுவது இல்லை. குறிப்பாகத் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், உணவகங்கள், மருத்துவமனை போன்றவற்றில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை, அடையாளமும் இல்லை. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கீழ்ப்பாக்கத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் பணிசெய்யும் போது கையில் ஊசி குத்தி, சிலநாட்களில் அவரது கை செயல்படாமல் போனது. கொஞ்ச நாளில் அந்தக் கை அழுகி,உடல் நிலை சரியில்லாமல் இறந்தே போனார். இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கினை, நீதி மன்றம் ‘இப்பணி தொழில் முறை பிரிவில் வரவில்லை. நிவாரணம் கோரமுடியாது” எனத்  தள்ளுபடி செய்துவிட்டது.  குறிப்பாகத் தமிழகத்தில் அருந்ததியர் மக்கள்தான் பெருமளவில் இதில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.  உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியாளர்கள் எனும் இப்பணிக்குப் பெரும் போட்டி நிலவுகின்றது. இலட்சக் கணக்கில்  பணம் கொடுத்து, தலித் அல்லாத பிற சாதியினரும் இப்பணிக்கு வருகின்றனர். ஆனால்,அவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட மாட்டார்கள். குறிப்பாக, குப்பை அள்ளுவது, சாக்கடை கழிவுகளை அகற்றுவது போன்ற வேலைகளில் எப்போதும் போல தலித்துகள்தான் ஈடுபடுத்தப்படுவார்கள்.  தலித் அல்லாத தூய்மைப் பணியாளர்கள் குப்பை லாரி ஓட்டுவது, 10 அல்லது 20 பேருக்கான மேஸ்திரி மற்றும் நகராட்சி அலுவலகப் பணி எனச் செயல்படுகின்றனர்.

தூய்மைப் பணியாளர்களில் 95% தலித்துகள் 

நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர். ஆனால், இவர்கள் அனைவரும் அரசு ஊழியர்கள் கிடையாது. மிகக் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே அரசுப் பணியாளர்களாக உள்ளனர். அரசின் பணப் பலன்கள் கிடைக்கின்றது. 90% பேர் தற்காலிக ஊழியர்களாகவும், ஒப்பந்த  அடிப்படையிலும், அன்றாடப் பணியாளர்களாகவும் உள்ளனர். இவர்களுக்குப் பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம், நிலையான ஊதியம், பணிப் பலன்கள் என எதுவும் இல்லை. பேட்டரியில் சார்ஜ் தீர்ந்ததும் தூக்கிப் போட்டுவிடுவதுபோல், இவர்களின் உடல் சக்தி இருக்கும் வரையில் உழைப்பினை பெற்றுக்கொண்டு, உடல் நிலை முடியவில்லை என்றாலோ, கூடுதல் சம்பளம் கேட்டாலோ நிறுத்தப்படுகிறார்கள். தற்காலிக ஊழியராகத் தனது பணிக்காலம் முழுவதும் வேலை செய்தவர்கள் பலர் உள்ளனர்.

2012ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி தூய்மைப் பணியாளர்களில் அதுவும் இதுபோன்ற மலம் அள்ளும் தொழில், பாதாளச் சாக்கடை, மலக்குழி கிடங்கு தொட்டி போன்ற தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தப்படுபவர்களில் 95% தலித் மக்களாக உள்ளனர். அதிலும் 99% பேர் தலித் பெண்களாக உள்ளனர்.

நாடு முழுவதும் சாக்கடை தூய்மைப் பணிகளின்போது ஆண்டுதோறும் 22,327 பேர் மூச்சுத் திணறி இறந்துபோவதாக இன்னொரு தகவலும் உள்ளது. பள்ளிகளில் தீண்டாமைப் பாகுபாடுகள் நிலவுவது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், பள்ளிகளில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்வது, அதற்கான  தண்ணீர் கொண்டு வந்து வைப்பது, வகுப்பறையினை சுத்தம் செய்வது போன்றவைகளில் எல்லாம் தலித் மாணவர்கள் குறிப்பாக, அருந்ததியர் மாணவர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுகின்றனர்.  இதுபோன்ற சம்பவங்கள் கடந்த மார்ச் மாதம் மட்டும் 8 இடங்களில் நடந்துள்ளது. அதில் சில நிகழ்வுகளில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் இயந்திரமயமாக்கப்பட வேண்டும். 

சஃபாய் கரம்சாரி அந்தோலன் தமிழ்நாடு அமைப்புச் செய்த ஆய்வின்படி, தமிழகத்தில் 2016 முதல் 2020 வரையிலான நான்காண்டுகளில் மொத்தம் 55 பேர் இறந்துள்ளனர். இதே காலத்தில் உத்திரபிரதேசத்தில் 52 பேர் இறந்துள்ளனர். இதிலும் தமிழகம் முன்னோடியாகத்தான் உள்ளது. இந்த 4 ஆண்டுகளில் சென்னையில்தான் அதிகமானோர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் நிகழ்ந்த மலக்குழி மரணங்கள் (2016 – 2020)

பணம் எண்ணுவதற்கும், போடுவதற்கும் எடுப்பதற்கும் இயந்திரம் வரும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு நாம் யாரேனும் நினைத்துப் பார்த்திருப்போமா? இப்போது இட்லி, சப்பாத்தி, தோசை, பூரி போன்ற பல உணவு வகைகளை மனிதர்களை இல்லாமல் இயந்திரங்கள், அதுவும் காசு போட்டால் அதற்குரிய உணவு வெளியில் வருமளவுக்கு இயந்திரங்கள் வந்துவிட்டன. ஆனால், ஒரு மனிதனின் மலத்தை இன்னொரு மனிதன் வெறும் கைகளால் அள்ளுவதைத் தடுப்பதற்கோ, மாற்றுவதற்கோ ஏன் இயந்திரங்கள் வரவில்லை என்பதற்கு, சாதியைத் தவிர வேறு என்ன காரணத்தைச் சொல்ல முடியும். தலித்துகள் மட்டுமே செய்துவரும் இந்த இழிதொழிலை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் அதிகாரிகளுக்கோ, அரசுக்கோ, அறிவியல் ஆய்வகங்களுக்கோ, விஞ்ஞானிகளுக்கோ தோன்றவில்லை; அல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை; அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியாமல் குறுக்கே நிற்பது எது? இந்நிலையில்தான் தெரிந்தோ, தெரியாமலோ கடந்த சட்டமன்றத்  தேர்தலின்போது தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் கையால் மலமள்ளும் முறை ஒழிக்கப்படும் என்று கூறியிருந்தது. ஸ்டாலின் முதல்வரானதும் அதனை அறிவிப்பாகவும் வெளியிட்டார். ஆனால், அதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பபதைத்தான் தொடர் மலக்குழி மரணங்கள் காட்டுகின்றன. 1973இல் கலைஞர்  முதல்வராக இருந்தபோது கை ரிக்‌ஷா முறையினை ஒழித்தார். அதுபோன்று இதனையும் அவரது வழிவந்த முதல்வர் ஸ்டாலின் ஒழிக்க முன்வரவேண்டும்.

தற்போதைய சூழலில் நவீன இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றோலோ, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இதனை செய்யாமல், இன்னும் மனிதர்களை மட்டுமே, அதுவும் தலித்துகளை மட்டுமே ஈடுபடுத்திக் கொண்டிருந்தால், இதுபோன்ற மரணங்கள் தமிழகத்தில் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.  குற்றத்தைத் தடுக்கவோ, சமூக அவலங்களை ஒழிக்கவோ, சாதிய வன்கொடுமை, தீண்டாமைப் பாகுபாடுகளை ஒழிக்கவோ சட்டங்கள் மட்டுமே போதாது என்பதைத்தான் இவை காட்டுகின்றன.  சட்டங்களைச் சரியாக அமுல்படுத்துகின்ற மனநிலை அரசுக்கும் அதிகாரிகளுக்கும் வேண்டும். ஒரு மனிதனின் மலத்தை இன்னொரு மனிதன் வெறும் கைகளால் அள்ளுவதைச் சமூகத்தின் அவலமாகக் கருத வேண்டும், குற்ற உணர்ச்சியோடு பார்க்க வேண்டும்.

ஒரே மாதத்தில் சென்னையில் மட்டும் 5 பேர் மரணம்.

28.06.22  : சென்னை மாதவரத்தில் பாதாளச் சாக்கடை அடைப்பு எடுக்கும்போது விஷவாயு தாக்கி நெல்சன், ரவிக்குமார் மரணம்.

29.06.22 : சென்னை பெருங்குடி அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டி  சுத்தம் செய்ய  இறக்கப்பட்ட பெரியசாமி, தட்சிணாமூர்த்தி இருவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

13.07.22 : கும்மிடிபூண்டி SIDCO வளாகத்தில் கழிவுநீர்த் தொட்டியில் அடைப்பு எடுக்கும்போது  ஹரி மரணம்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!