தலையங்கம் – தனியார் பள்ளிகளும் அதிகாரமும்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி இறப்புச்  சம்பவம் மாநிலத்தையே உலுக்கிப்போட்டது. முதல் பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் பெற்றோர் ஏற்க மறுத்தனர். அதனால், நீதிமன்றம் சில பரிந்துரைகளை வழங்கியதோடு மறு பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிட்டது; அதிலும் கொலைக்கான எந்தத் தடயமுமில்லை என்று மருத்துவக் குழு அறிவித்தது. பின்னர் மாணவியின் சடலத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு பெற்றோரை அறிவுறுத்திய நீதிமன்றம், மீறினால் காவல்துறையே அடக்கம் செய்யலாம் என்கிற தீர்ப்பையும் வழங்கியது. ஆனால், பெற்றோர்கள் தங்களின் மகளை அடக்கம் செய்த பின்னரும் மரணத்திற்கு நீதி கேட்டபடியே இருக்கிறார்கள்.

கொலையா, தற்கொலையா என்கிற மர்மம் இன்னும் விலகவில்லை. காவல்துறை மற்றும் தமிழக அரசின் நடவடிக்கைகளிலும் எந்த உறுதித்தன்மையுமில்லை. இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளும் போதுதான், விடுதி நடத்துவதற்கான உரிமமே பள்ளிக்கு இல்லை என்பது தெரிய வருகிறது. இந்தக் குழப்பங்கள் நிலவிக்கொண்டிருக்கும்போதே திருவள்ளூர் மாவட்டத்தில் மற்றுமொரு மாணவி, விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட செய்தி வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு விரைந்த ‘தேசியக் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையக் குழு’வின் முதற்கட்ட விசாரணையின்படி விடுதியில் இருந்த மாணவர்கள் மீது உரிமை மீறல் நடந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியிருக்கக் கூடிய மாணவர்களின் மரணங்களுக்கான காரணங்கள், ஆணையங்களின் அறிக்கை, அதற்கு அரசு கொடுக்கப்போகும் விளக்கங்கள் என இவற்றைச் சுற்றியுள்ள அரசியல் ஒருபுறமிருக்கட்டும். ஆனால், இவையெல்லாம் குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமே நடந்து விடவில்லை என்பதைப் பள்ளிக்கல்வித்துறையும் அரசும் உணர வேண்டும்.

தனியார் பள்ளிகள் நெடுங்காலமாக மாணவர்கள் மீதும் பெற்றோர்கள் மீதும் நடத்திவந்த உளவியல் தாக்குதல் வெளிப்படத் துவங்கியுள்ளது. 2004ஆம் ஆண்டு கும்பகோணத்தில் 94 குழந்தைகள் தீக்கிரையாகும்வரை அந்தப் பள்ளியின் அடிப்படை வசதி மற்றும் கட்டமைப்புக் குறித்தும் அரசு இயந்திரத்திற்கு எவ்வித அக்கறையும் இருந்திருக்க வில்லை. அப்படி ஒரு பள்ளி இருப்பதைத் தெரிந்துகொள்ளவே 94 உயிர்கள் தேவைப் பட்டிருக்கின்றன. இத்தொடர்ச் சம்பவங்களிலிருந்து நாம் எவ்விதப் படிப்பினைகளையுமே எடுத்துக் கொள்ளவில்லை என்பதே நிதர்சனம். தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் இங்கு தனியொரு அரசாங்கத்தையே நடத்திக்கொண்டிருக்கின்றன. கல்வியை வியாபாரமயமாக்கும் நோக்கத்திலேயே இவர்கள் கல்விப்புலத்தில் கால் பதித்திருக்கிறார்கள். கல்வித்துறையும் சுகாதாரமும் என்றென்னைக்கும் அரசுடைமையாகவே இருக்க வேண்டுமென்கிற குரல் ஒருபக்கம் இருந்தாலும், இதைச் சாத்தியமாக்கும் சூழல், அது சார்ந்த உரையாடல்கள் என அதன் தீர்வு மிக நெருக்கத்தில் இல்லை. இத்தகையச் சூழலில் தனியார் பள்ளிகளின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதிலும் கண்காணிப்பதிலும் அரசுகள் தீவிரமாய்ச் செயல்படுவதுதான் இப்போதைக்கு ஒரே தீர்வு. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளை மட்டுமே குறிவைத்துத் தமிழகத்தில் தொடங்கப்பட்ட பெரும்பான்மைப் பள்ளிகள் எந்தவிதச் சட்டவிதிக்கும் கட்டுப்படாதவையாக உள்ளன.

பள்ளி நேரங்கள், மாதிரித் தேர்வுகள், பள்ளிக் கட்டணங்கள், விடுமுறை நாட்கள், விடுதி மற்றும் உணவின் தரம், விடுதிக் காப்பாளர்கள், ஆசிரியர் நன்நடத்தைகள் என எதிலும் ஓர் ஒழுங்கைப் இப்பள்ளிகள் பின்பற்றுவதில்லை. இத்தகையச் சிக்கல்கள் இருப்பது பெற்றோருக்குத் தெரியாமலும் இல்லை. ஆனாலும், ஓரிரு வருடம் பல்லைக் கடித்துக்கொண்டு கடந்துவிட்டால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம் என்கிற சமாதானத்தோடு தெரிந்தே குழந்தைகளை அதீத அழுத்தத்திற்குள் தள்ளுகிறார்கள். தரமான கல்விக்கும் சுகாதாரத்திற்கும் கடன்பட்டாவது பணத்தைச் செலுத்திவிடுவார்கள் என்பதையறிந்த தனியார் பள்ளிகள் சர்வாதிகாரிகளாகச் செயல்பட்டு வருகிறார்கள். எந்தக் குழந்தைகளின் நலனுக்காக இதை ஏற்றுக்கொண்டோமோ, அதே குழந்தைகள் பலி வாங்கப்படும் போதுதான் அதன் தீவிரத்தை உணர்கிறோம்.

நீட் நுழைவுத் தேர்வு அறிமுகமாவதற்கு முன்பு ஒன்பது மற்றும் பதினோராம் வகுப்பில் தனியார் பள்ளிகள் கவனம் செலுத்தவில்லை. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பை மையப்படுத்தியே விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து பள்ளிகளை நடத்தினர். நீட் தேர்வுக்குப் பின்பு தற்போது பத்தாம் வகுப்பிலிருந்தே நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியும் கொடுக்கப்படுகிறது. நுழைவுத் தேர்வுகளுக்கு எதிராகத் தமிழக அரசு தொடர்ந்து களமாடி வந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. அதே வேளையில் அவை பயிற்றுவிக்கப்படும் முறைகளையுமே ஒழுங்குபடுத்த வேண்டிய பொறுப்புக் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதியின் மரணம் எதன் பொருட்டு நிகழ்ந்தது என்பது நமக்கு இதுநாள் வரை புலப்படவில்லை. மேலும், திருவள்ளூர் மாணவி சரளாவுக்கு நேர்ந்த மன உளைச்சல் எதன்பொருட்டு என்பதும் விளங்கவில்லை. ஆனால், அவர்கள் தங்கள் வயதிற்கு அப்பாற்பட்ட துயரங்களைச் சந்தித்துள்ளார்கள் என்பது மட்டும் புலனாகிறது. பள்ளி மாணவிகளுக்குத் தற்கொலை எண்ணம் எப்படி வந்திருக்கும் என்பதைக் கூட யோசித்துப் பார்க்க முடியாத சூழலில், மரணத்தை எங்ஙனம் ஏற்பது?

பள்ளிகளைக் கண்காணிப்புக்குட்படுத்துவதும் அறநேர்மையற்ற பள்ளிகளைத் தாமதமின்றி அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதும்தான் மாணவர்களின் மரணங்களுக்கான நீதியாக இருக்க முடியும். குழந்தைகளின் மனநலத்தைப் பாதுகாக்க அறிவியல் மற்றும் உளவியல் ரீதியான அணுகுமுறைகள்  கல்வி நிலையங்களில் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும். தனியார் பள்ளிகளின் அதிகார மையமான நிர்வாகத்தை அரசு சரியாக நிர்வகிக்கத் தவறிவிட்டது என்பதன் சமிக்ஞையே இத்தகைய மரணங்கள். எனவே, இத்தருணத்தைத் தனியார் பள்ளிகளைச் சீரமைப்பதற்கான வாய்ப்பாகப் பள்ளிக்கல்வித்துறையும் தமிழக அரசும் கருதுமென்று நம்புவோம்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!