வெளியாகி பல மாதங்களுக்குப் பிறகே ‘பரியேறும் பெருமாள்’ படத்தைப் பார்க்க முடிந்தது. அப்போது இயக்குநர் மாரி செல்வராஜ் குறித்து எனக்குப் பெரிதாக எந்த அறிமுகமும் இல்லை. ஆனால், படத்தில் அவர் பேசிய அரசியலும் அதன் உளவியல் சிக்கலும் பெரும் வியப்பைக் கொடுத்தன. காரணம், கதைக்களம் எனக்கு ரொம்பவே நெருக்கமானதாக இருந்தது. மாரி செல்வராஜும் நானும் ஒரே நிலப் பகுதியில், ஒரே காலகட்டத்தில் வளர்ந்தவர்கள். தனிப்பட்ட முறையில் இருவருக்குமிடையே எவ்விதமான அறிமுகமும் இல்லையென்றாலும், ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மைய நீரோட்டத்தில் இருவருமே ஒரே கரையில் நின்றுகொண்டிருந்தோம்.
படத்தில் இடம்பெற்ற பல காட்சிகளை ஏற்கெனவே பார்த்ததைப் போல உணர முடிந்தது. என்னைச் சுற்றியிருந்த, நான் பழகிய, எனது நண்பர்களாகிய பல பரியன்களின் வலியாகவும் அனுபவமாகவும் அவர்கள் என்னிடத்தில் பகிர்ந்துகொண்டது நினைவில் வந்தது. உலக சினிமாக்கள் ஏற்படுத்திய தாக்கங்களை விடவும் ‘பரியேறும் பெருமாள்’ இன்னும் வீச்சுக் கொண்டவனாகக் கண் முன்னே நின்றான். அந்த அளவுக்குத் தனது உளக்குமுறல்களை மனம் திறந்த உரையாடலுடன் முன்வைத்திருந்தார் மாரி செல்வராஜ். பரியனைப் போலவே ஆனந்த் பாத்திரமும் எனக்கு நண்பன்தான். என்னால் இருதரப்பையும் அவர்களின் பின்னணியையும் உணர முடிந்தது. இருப்பினும் இவர்களில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பது அனைவரும் அறிந்ததே.
‘பரியேறும் பெருமா’ளின் அடுத்த பாய்ச்சல்தான் ‘கர்ணன்’, இதில் உரையாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பெரும் வெடிப்பை நிகழ்த்திக் காட்டினார். கர்ணனின் எதிர்த் தாக்குதலை வெறும் வன்முறையாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியாது. பரியன் முன்வைத்தது இச்சமூகத்துக்கான உரையாடல்கள், கர்ணனோ அதிகார வர்க்கத்துக்கு எதிரான தனது கோபத்தை வெளிக்காட்டுகிறான். பரியனின் உரையாடலை ஏற்றுக்கொண்ட இச்சமூகத்தால், கர்ணனின் அறச்சீற்றத்தைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதற்கு வன்முறை எனப் பெயர்ச் சூட்டி அங்கேயும் ஒரு சமூகத்துக்கு எதிராக அடக்குமுறை நிகழ்த்தப்படுகிறது.
இந்த வலிகளை மாரி செல்வராஜ் தனது படைப்புகளின் வழியே பேசும்போது அதில் குறைகள் இருக்கலாம். ஆனால், அவற்றைப் புறந்தள்ளிவிட முடியாது. இக்கூற்று இயக்குநர் பா.இரஞ்சித்திற்கும் பொருந்தும். பல தலைமுறைகளின் வலியைத் திரையில் பேசும் முதல் தலைமுறை படைப்பாளர்கள் இவர்கள். அதனால் அதில் குறைகள் இருப்பினும் அப்படைப்புகளைச் சுதந்திரமாக வரவேற்க வேண்டும். விமர்சனங்கள் இருப்பின் அதையும் கூட நேர்மையாக முன்வைக்கலாம். அப்படியல்லாமல் பா.இரஞ்சித்தும் மாரி செல்வராஜும் சாதிய சுயதம்பட்டம் அடிப்பதாக எள்ளி நகையாடுவது என்ன மாதிரியான மனநிலை?
இதற்கு முன்பாகத் தமிழில் வெளியான சாதிய சுயதம்பட்டம் அடித்த படங்களுக்கு இச்சமூகம் என்ன எதிர்வினை செய்தது? ஆர்.வி.உதயகுமார், கே.எஸ்.ரவிகுமார் போன்றோரின் படங்களில் விதைக்கப்பட்ட சாதிய நச்சுத்தன்மையை அப்படங்கள் வெளியான காலத்தில் யாரும் எந்தக் கேள்வியும் கேட்கவில்லையே. இந்த நுட்பமான உளவியலில் இருந்தே பா.இரஞ்சித்தும் மாரி செல்வராஜும் வஞ்சிக்கப்படுகிறார்கள். தன் சமூகத்தின் வலிகளை இயல்பாகப் பேசுவதோடு, அதற்கான தீர்வுகளை நோக்கியும் வீரியத்துடன் முன்நகர்கிறார்கள்.
கபாலி, காலா, கபிலன், பரியன், கர்ணன், மாமன்னன் என ஒரு சமூகம் தன்னை வலிமையாக மீட்டெடுத்து எழும்போது, இங்கே பலருக்கும் கை நடுக்கம் வருவது இயல்புதானே. மதத்தை அடிப்படையாக வைத்து முஸ்லிம்களையும், சாதியை அடையாளம் காட்டி தலித்துகளையும் தமிழ் சினிமா ரொம்பவே வஞ்சித்துள்ளது. 1992க்குப் பிறகு நடத்தப்பட்ட இந்தத் தொடர் தாக்குதலிலிருந்து தலித் சமூகம் மெல்ல மெல்ல விடுபட்டுவருவது நம்பிக்கையையும் ஆறுதலையும் தருகிறது. ஆனால், முஸ்லிம் சமூகத்தில் இன்னும் இதற்கான சிறு நம்பிக்கைக் கூட பிறக்கவில்லை. ஆரோக்கியமான படைப்பாளர்கள் இருந்தபோதும் கூட இதனைச் சாத்தியமாக்கிவிடக் கூடாது என்பதில் சில இயக்கங்கள் முனைப்புடன் இருக்கின்றன. அதேநேரம் தமிழில் நேரடியான தலித் சினிமாக்கள் வெளியாக அடித்தளமிட்டது பா.இரஞ்சித் தான். இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பல இயக்குநர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.
‘மாமன்னன்’ படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே பலவிதமான எதிர்பார்ப்புகள் இருந்தன. உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில், ஏ.ஆர்.ரஹ்மான் எனப் பெரும் பலம் கொண்டவனாகத் தனது பயணத்தைத் தொடங்கினான் மாமன்னன். எல்லாவற்றுக்கும் மேலாக ‘மாமன்னன்’ இசை வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ் பேசியதும் சர்ச்சையானது. ’தேவர் மகன்’ படம் குறித்த உரையாடல்கள் இன்றுவரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. அந்தப் படம் எடுத்ததன் நோக்கம் குறித்து கமல்ஹாசன் விளக்கம் கொடுத்து மன்னிப்புக் கேட்டது ஒருபக்கம் இருக்கட்டும். அதில் இடம்பெற்ற இரண்டு பாடல்களால் தென்மாவட்டங்களில் நடந்த, இப்போதும் ஏதாவதொரு தருணத்தில் நடந்துகொண்டிருக்கும் அசம்பாவிதங்களுக்கு யார் பொறுப்பு?
இத்தகைய நேரடி அனுபவங்களில் தனக்கு ஏற்பட்ட வலிகளை ‘மாமன்னன்’ இசை வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ் பகிர்ந்துகொண்டார். அது சரியா, தவறா எனப் பலரும் மாரி செல்வராஜுக்குப் பாடம் எடுத்ததோடு ‘மாமன்னன்’ படத்துக்கும் சாதியச் சாயம் பூசி வேடிக்கை பார்த்தார்கள். ஆனாலும் படம் மக்களிடம் சரியாகச் சென்றடைந்தது. கல்வி, பொருளாதாரம், அரசியல் என எந்த வகையிலும் நீங்கள் முன்னேறலாம். அப்படி முன்னேறியவன் மாமன்னனாகக் கூட இருக்கலாம். ஆனால், தன் முன்னால் கைக்கட்டிக்கொண்டு நிற்பது மட்டுமே தனது சாதிய அதிகாரத்திற்குப் பெருமை என்பது ஒருவிதக் கிளர்ச்சி. அதனை உடைக்க அவன் எதிரில் சரிக்குச் சமமாக உட்கார்ந்துவிட்டால் போதும் என நினைப்பது வெகு இயல்பான மனநிலை. அதன்படி ‘மாமன்னன்’ படத்தில் தான் பேச நினைத்த சமூக நீதி அரசியலைச் சரியாக முன்வைத்தார் மாரி செல்வராஜ்.
இருப்பினும், ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ திரைப்படங்களில் இருந்த திரைக்கதை ‘மாமன்ன’னில் இல்லாமல் போனது பெரும் ஏமாற்றம். அதற்கு முதல் காரணம் உதயநிதி ஸ்டாலின்தான். முழுநேர அரசியல்வாதி, அமைச்சர் என்ற பொறுப்புணர்வுடன் சினிமாவிலிருந்து விலகும் உதயநிதி, ‘நெஞ்சுக்கு நீதி’, ‘மாமன்னன்’ என இரண்டு முக்கியமான படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். சமூகநீதிதான் தனக்கான அரசியல் பாதை என்பதைத் தெளிவாக முன்வைத்துப் பயணிக்கும் உதயநிதிக்கு மேற்சொன்ன இரண்டு படங்களுமே இலாபக் கணக்கில் இடம்பிடித்துவிட்டன. ஆனால், இதில் அதிகம் பாதிக்கப்பட்டது மாரி செல்வராஜ்தான். உதயநிதி தனக்கான எல்லையை விரிவுபடுத்தியும், மாரி செல்வராஜ் சில சமரசங்களோடும் ‘மாமன்ன’னை முழுமையாக்கினர். உதயநிதியை வைத்துக்கொண்டு வசனங்களைக் கூர்தீட்ட முடியாது எனப் பல இடங்களில் விஷுவலாகக் கதை சொன்னது ரசிக்க முடியாமல் போனது.
‘மாமன்னன்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் பாத்திரம் தேவையில்லாத திணிப்பாக இருந்தது. இவர்களை விட்டுவிட்டால் படத்தைத் தாங்கிப் பிடித்தது பஹத் பாசில், வடிவேலு, ஏ.ஆர்.ரஹ்மான் மூவரும்தான். ‘பரியேறும் பெருமா’ளின் ஜோ என்கிற ஜோதி பாத்திரத்தைச் சத்தமே இல்லாமல் பஹத் பாசிலின் மனைவி ஜோதியாக நடிக்க வைத்து மௌன கதை பேசிவிட்டார் மாரி செல்வராஜ். ஜோதி கதாபாத்திரத்தை இவ்வளவு நுட்பமாக யோசித்த மாரி செல்வராஜால் ‘மாமன்னன்’ படத்தின் இரண்டாம் பாதியை நேர்த்தியாக வடிவமைக்க முடியாமல் போனது துர்பாக்கியம்தான். தர்க்க ரீதியிலும் உருவாக்கத்திலும் பல இடங்களில் ‘மாமன்னன்’ திக்கற்று நிற்பதை ஜீரணிக்க முடியவில்லை.
இடைவேளை காட்சியில் படத்தின் நோக்கத்தையும் தான் பேச நினைத்த அரசியலையும் சரியான புள்ளியில் இணைத்து சபாஷ் போட வைத்தார். ஆனால், இரண்டாம் பாதி வழக்கமான சினிமா பாணியில் பிசுபிசுத்துப் போனது. இருப்பினும், மக்கள் மன்றத்தில் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. விமர்சன ரீதியாகவும் வணிக அளவிலும் ‘மாமன்ன’னுக்குப் பெரும் வெற்றியே கிடைத்தது.
அரசியலில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் உதயநிதி, மாரி செல்வராஜை முன்னிலைப்படுத்துவது அவர் மீதான தனிப்பட்ட நட்பின் பொருட்டல்ல. மாரியின் படைப்புகளும் அது பேசும் அரசியலின் வீரியமும் உதயநிதியை அப்படிப் பேச வைத்தது. இன்னொரு வகையில் மாரி செல்வராஜின் திரை மொழியில் இருந்த நேர்மையான அரசியலும் அதன் தாக்கமும் எனலாம். தனது தயாரிப்பில் சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ படத்தில் இடம்பெற்ற தவறான வசனத்துக்காகத் தற்போது மன்னிப்புக் கேட்கிறார் உதயநிதி. இந்தப் புரிதல்கள் அவரது அரசியல் பயணங்களால் மட்டும் சாத்தியமாகவில்லை. சினிமாவில் மாரி செல்வராஜ், பா.இரஞ்சித், வெற்றி மாறன் ஆகியோர் பேசிய சமூகநீதி அரசியலுக்குக் கிடைத்த வெற்றி.
ரஜினியை வைத்து ‘கபாலி’, ‘காலா’ படங்களை இயக்கிய பின்னரும் அவரை ‘அட்டக்கத்தி இரஞ்சித்’ என்றழைப்பதையே சிலர் விரும்புகின்றனர். காரணம், ரஜினியைத் தனது படங்களில் நடிக்க வைத்ததால் மட்டுமல்ல, சூப்பர் ஸ்டாரைத் தலித் ஹீரோவாக்கி அவரை ஆட்டிவைத்த சில எஜமானர்களுக்கே பதிலடி கொடுத்ததால் வந்த மனப்பிறழ்வு. இப்போதும் கூட ‘கபாலி’, ‘காலா’ இரண்டும் வெற்றிப் படங்கள் இல்லையென விவாதம் செய்கிறது ஒரு கூட்டம். நேர்மையாக, தங்களது வலிகளை முன்வைத்து அரசியல் பேசும் பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோரின் படைப்புகள் மட்டம் தட்டப்படுவதுடன் அதன் வணிக வெற்றியும் புறக்கணிக்கப்படுகிறது. ஆனால், சமூக அக்கறையில்லாமல், பழைமைவாதத்தின் பின்னணியில் போலியான அரசியல் பேசி ரசிகர்களை ஏமாற்றிய ஷங்கர் போன்ற இயக்குநர்களை வணீகரீதியான வெற்றிக்காகக் கொண்டாடுவது எவ்வளவு பெரிய முரண்.
தனது கனவுலகில் கொக்கரித்துக்கொண்டிருந்த கிச்சா, அம்பி போன்றவர்களை ஹீரோவாகப் போலி பிம்பம் கொடுத்து அழகு பார்த்தவர்தானே இயக்குநர் ஷங்கர். அவ்வளவு ஏன்? ‘பறவை மனிதன்’ என்ற புனைபெயருடன் சர்வதேச அளவில் பிரபலமான ‘சலீம்’ என்பவரை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் ‘2.ளி’ படத்தில் பக்ஷிராஜன் பாத்திரத்தை உருவாக்கினார் ஷங்கர். அப்போதும் கூட அவரால் சலீம் என்ற உண்மையான பெயரை அப்பாத்திரத்திற்குச் சூட்ட மனம் வரவில்லையே. இந்த வரலாற்று இருட்டடிப்புக் குறித்து ஷங்கரை நோக்கி எத்தனை கேள்விகள் எழுந்தன. சமூகநீதிக்கு எதிரான அரசியல், வரலாற்று உண்மைகளை மறைப்பது என ஷங்கரின் அத்தனை தவறுகளையும் யாரும் கண்டுகொள்ளவே இல்லை. காரணம், சர்வதேச அளவில் அவரது படங்களுக்குக் கிடைத்த வணிக ரீதியான வெற்றி. தமிழ்த் திரைப்படங்களை அவர் மட்டுமே தரம் உயர்த்தினார் என்பதான வெற்று முழக்கங்கள்.
இப்போது பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோரின் படங்களும் வணிக சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி இரு படங்களில் நடித்தார்; மாரி செல்வராஜ் இயக்கிய படத்தில் சமூகநீதி பேசுகிறார் உதயநிதி. இருவரும் இரண்டே படங்களில் தங்களின் வருகையை மிக அழுத்தமாகப் பதிவு செய்துள்ளனர். தம் படைப்புகள் வழி பெரும் தாக்கத்தை நிகழ்த்துகின்றனர். அதிலிருந்து ஆரோக்கியமான உரையாடல்களை முன்னெடுக்கின்றனர். ஆனால், எந்த வகையிலும் தங்களது கருத்தியலில் இருந்து சிறிதளவுகூட பின்வாங்கவில்லை. சினிமாவுக்காகப் போலியான அரசியல் பேசவில்லை, பெரிய ஹீரோக்கள் என்பதற்காகச் சமரசம் செய்துகொள்ளவில்லை. குறிப்பாக ரஜினியையோ உதயநிதியையோ அவர்களாகத் தேடிப் போகவில்லை.
மிக ஆரோக்கியமான சூழலை நோக்கித் தமிழ் சினிமா நகர்ந்துகொண்டிருப்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்களின் தேவையும், காலம் கடந்த இருப்பும் இனி மிக மிக அவசியம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சாதிய ரீதியாகத் தலித்துகள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகப் பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அவை அனைத்தையும் திரைப்படங்களின் வழியே ஆவணப்படுத்த வேண்டும். சினிமா மட்டுமே காலத்திற்கும் நிலைத்து நிற்கக் கூடிய ஒரே தளமாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதனால்தான் பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்களின் படங்கள் பலருக்கும் ஒவ்வாமையைத் தருகின்றன.
அதேநேரம் இவர்களின் படைப்புகள் இச்சமூகத்தில் முழுமையான மாற்றங்களை ஏற்படுத்திவிடும் என நம்பிவிட முடியாது. அவர்களது உரையாடல்கள் சரியான விதத்தில் புரிந்துகொள்ளப்படும் என்றும் கூற முடியாது. அவர்கள் பேச வேண்டிய வலிகளும் தீர்வுகளும் இன்னும் அதிகம் உள்ளன. இன்னும் பல இரஞ்சித்களும் மாரி செல்வராஜ்களும் வரவிருக்கின்றனர். இந்த ஆரோக்கியமான உரையாடல்கள் ஒருபோதும் முற்றுப்பெறாது. அதுகுறித்த சிந்தனைத் தெளிவுகள் காலத்தின் கட்டாயமாகும், அப்போதும் பரியனின் கேள்விகளுக்கு முழுமையான பதில்கள் கிடைக்காது. அவனது கேள்விகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கும். ஏனெனில், இச்சமூகம் அவ்வளவு எளிதாகத் தனது உள்ளடுக்கு அடையாளங்களை இழந்துவிடாது. முழுமையாக இழக்காமல் இருந்தாலும் அதனைப் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பதுதான் சமூக நீதியின் முதல் வெற்றி.
சத்யம் திரையரங்கில் பத்திரிகையாளர்களுக்கான ‘மாமன்னன்’ திரையிடல் நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கும் உதயநிதியிடம் வேங்கைவயல் பிரச்சினை குறித்த கேள்வி முன்வைக்கப்படுகிறது. அதற்கு “இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால், இதனையெல்லாம் ஒரே படத்தில் நடித்துத் தன்னால் மாற்றிவிட முடியாது” எனப் பதிலளித்தார். நியாயமாகப் பார்த்தால் இந்தக் கேள்விக்கு அவர் அமைச்சராகப் பதில் கூறியிருக்க வேண்டும். இல்லையென்றால் ‘நாம் அனைவரும் நினைத்தால் இதனை மாற்ற முடியும்’ எனக் கூறி மக்களைத் தன்பக்கம் அரவணைத்திருக்க வேண்டும். இந்தப் புரிதலில்தான் ‘மாமன்னன்’ சிதைந்துவிட்டானோ என நினைக்கத் தோன்றுகிறது. அதேநேரம் படம் குறித்து இயக்குநர் பா.இரஞ்சித்தின் டிவிட்டர் பதிவுக்கு உதயநிதி கூறிய பதிலையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் ‘மாமன்னன்’ சரியான நேரத்தில் அதன் இலக்கை அடைந்தது உதயநிதியின் இந்தப் புரிதலில்தான். பா.இரஞ்சித்தும் மாரி செல்வராஜும் சரியான பாதையில் பயணித்துக்கொண்டிருப்பதையே இது காட்டுகிறது. சமூக நீதி பிரச்சினையில் எல்லாவற்றுக்கும் இங்கே தீர்வுகள் உள்ளன, அதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவது ஆறுதல் தரக்கூடியதே. அதேபோல் தன் சமூகத்தின் வலிகளை மனம் திறந்து பேசும் மாமன்னர்களின் குரல்கள் தொடர்ந்து ஒலிக்க வேண்டும் என்பதும் இங்கே முக்கியமானதுதான். அதற்கான முன்னெடுப்புகளை அங்கீகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம், ஏனென்றால் இது வெறும் தலித் சமூகத்தின் குரல் மட்டுமல்ல, அதிகாரத்தால் ஒடுக்கப்படும் அனைவருக்குமானது.