மராட்டியத் தலித் இலக்கியம் – எஸ்.வாசுதேவன்

”…தெரு விளக்குகளைக் கீழே விழ வைக்க வேண்டும்

காவல் நிலையங்களையும் ரயில் நிலையங்களையும் தகர்க்க வேண்டும்

கையெறி குண்டை வீச வேண்டும்: இலக்கியக் குழுமங்கள், கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், விமான நிலையங்களை ஹைட்ரஜன் குண்டை வெடிக்கச் செய்து தரைமட்டமாக்க வேண்டும்.

பிளேட்டோ, ஐன்ஸ்டைன், ஆர்க்கிடிமிஸ், சாக்ரடீஸ், மார்க்ஸ், அசோகா, ஹிட்லர், காம்யு, சார்த்தர், காஃப்கா, போதலர், ரைம்போ, எஸ்ரா பவுண்ட், ஹாப்கின்ஸ், கதே, தாஸ்தெவெஸ்கி, மாயாவெஸ்கி, மாக்சிம் கார்க்கி, எடிசன் மடிசன், காளிதாஸ், துக்காராம், வியாசர், ஷேக்ஸ்பியர், தியானேஷ்வர் போன்றவர்களைச் சாக்கடையின் ஆள்துளையைத் திறந்து உள்ளே தள்ள வேண்டும். அவர்கள் எழுதிய வார்த்தைகளால் அழுகி அங்கேயே இருக்கட்டும்….”

மராத்தியத் தலித் கவிஞர் நாம்தியோ தசல் (1949-2014) ‘மனிதா நீ கிளர்ந்தெழ வேண்டும்’ என்ற நெடிய கவிதையிலிருந்து ஒரு பகுதி.

ஆண்டாண்டு காலமாகக் கொடிய சாதி அமைப்பால் கல்வி மறுக்கப்பட்ட தலித்துகள், இருபதாம் நூற்றாண்டில் இலக்கியத்தில் எழுச்சி பெற்றார்கள். தலித்துகளுக்கு எழுதுகோல் விலக்க‌ப்பட்டது. தலித்துகளின் வரலாறு தொகுக்கப்படாமல் வாய் மொழியாகப் பேசப்பட்டபோது, டாக்டர் அம்பேத்கர் தலித்துகளுக்குக் கல்வியும் இலக்கியத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்தினார். மேற்கத்திய இலக்கியத்தில் கறுப்பின இலக்கியம் என்ற வகைமை முக்கியமானது. அதேபோல் இந்திய அளவில் தலித் இலக்கியத்தைத் தவிர்த்துக் கலை, இலக்கிய வரலாற்றை எழுத முடியாது. இதற்கு முன்னோடியாக விளங்கியது மராட்டிய தலித் இலக்கியம். அம்பேத்கர் மேற்கத்தியத் தத்துவங்களை ஆழ்ந்து கற்றவர். குறிப்பாக வால்ட்டர், ரூசோவின் தத்துவ நூல்களை விரும்பிப் படித்திருந்தாலும், வால்ட்டர் போன்ற தத்துவ ஞானி ஏன் இந்தியாவில் பிறக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பினார். 18ஆம் நூற்றாண்டில் பிரான்சில் பிறந்த தத்துவ அறிஞர் வால்ட்டர், கத்தோலிக்க திருச்சபைகளையும் ஒட்டுமொத்த அமைப்பையும் (அரசியல், மதம் உட்பட) கேள்விக்கு உட்படுத்தியது அம்பேத்கருக்கு மேற்சொன்ன கேள்வியைக் கேட்கத் தூண்டியிருக்கலாம். இதை ஒட்டி நாக்பூர் விதர்பா சாகித்தியச் சங்கத்தில் உரையாற்றும்போது இலக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தித் தலித் மக்களின் கலாச்சாரம், மறுக்கப்பட்ட நீதி, விலக்கப்பட்ட அவலங்களை எழுத்தில் பதிவு செய்ய வலியுறுத்தினார்.

20ஆம் நூற்றாண்டில் அம்பேத்கர் தலித் இலக்கியத்தை வளர்த்தெடுத்ததற்கு 19ஆம் நூற்றாண்டில் விதை நட்டது ஜோதிபா பூலே. ‘குலாம்கிரி’ என்ற நூலில் ஜோதிபா பூலே விஷ்ணுவின் பத்து அவதாரங்களைப் பூர்வ குடிமக்கள் கோணத்தில் எழுதி, இந்து புராணங்களைத் தோலுறித்தார். பல வருடங்கள் தேடலுக்குப் பிறகுதான், 1969 வாக்கில், இந்த முக்கிய நூல் கண்டெடுக்கப்பட்டது.

1960களில் எழுச்சிபெற்ற மராத்தியத் தலித் இலக்கியத்திற்கு அடிக்கல் நாட்டியது இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கப்பட்ட தலித் நாளேடுகள் / இதழ்கள்தாம். இதற்கு முன்னோடியாக 1920இல் அம்பேத்கர் மூக்நாயக் பத்திரிகையைத் தொடங்கினார். இது அரசியல் பத்திரிகையாக இருந்தாலும், தலித் தரப்பிலிருந்து வந்த முக்கியப் பத்திரிகை. பின்னாட்களில் பல இதழ்கள் வெளி வந்ததற்கும் தலித் எழுத்தாளர்களுக்கும் ஆதர்சமாக இருந்தது மூக்நாயக்.

அம்பேத்கர் ‘தலித் எழுத்தாளர் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்க ஆர்வமாக இருந்தார். தீவிர அரசியல் ஈடுபாடு, நாட்டின் சட்ட அமைச்சர் என்ற முறையில் அதன் வேலைப் பளு ஆகியவை காரணமாக அவருக்கு அது சாத்தியப்படவில்லை. 1950 ஆகஸ்ட் 15ஆம் நாள் மும்பையில் சில இளைஞர்கள் ‘தலித் சாகித்ய சங்கம்’ என்ற அமைப்பைப் பேராசிரியர் ஆர்.டி.பந்தாரே மற்றும் பி.சி.காம்ப்ளே முன்னிலையில் தொடங்குகிறார்கள். இருபதாம் நூற்றாண்டில் மராட்டிய தலித் இலக்கியத்தின் துவக்கப்புள்ளி இங்கிருந்து தொடங்குகிறது. பின்னாட்களில் இந்தியா முழுவதும் தலித் இலக்கியம் பரவியதற்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள் இது. 1953ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி இந்த அமைப்பு ‘மராட்டியத் தலித் சாகித்ய சங்கம்’ எனப் பெயர் மாற்றப்பட்டது. இந்த அமைப்பில் இருந்த அபா சாஹிப் ரன்பைஸ், பாகுசாகிப் அட்சுல் போன்ற முக்கிய எழுத்தாளர்கள் சிறப்பாகப் பங்களித்தனர்.

1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி இந்திய அரசியலில் முக்கிய நாள். நாக்பூர் தீக்ஷா பூமியில் அம்பேத்கர் தலைமையில் லட்சக்கணக்கான மக்கள் தங்களுக்கு அநீதியையும் அவலத்தையும் இழைத்த இந்து மதத்திலிருந்து வெளியேறி பவுத்த மதத்தைத் தழுவுகிறார்கள். இந்த நிகழ்வைத் தம்ம தீக்ஷா என அழைத்த அம்பேத்கர், இதை நாட்டின் ஒவ்வோர் ஊரிலும் நடத்த முடிவெடுத்து மும்பையில் அதே வருடத்தில் டிசம்பர் 17ஆம் தேதியில் நடத்த முன்னேற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். மராட்டியத் தலித் சாகித்ய சங்க எழுத்தாளர்கள் அம்பேத்கரைச் சந்தித்து தம்ம தீக்ஷாவுக்கு அடுத்த நாள் டிசம்பர் 17ஆம் தேதி தலித் இலக்கிய மாநாடுக்கு அவர் தலைமையேற்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். கூடுதலாக மராட்டிய எழுத்தாளர் பி.சி.காம்ப்ளே, மராட்டியக் கவிஞர் கேசவ் ஆத்ரே இருவரையும் இந்த மாநாட்டில் உரையாற்ற அழைக்க வேண்டும் என்ற யோசனையையும் முன்வைத்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக டிசம்பர் 6 ஆம் தேதி அம்பேத்கர் அகால மரணமடைந்தார். இரண்டு முக்கிய நிகழ்வுகள் மறைந்தன / தள்ளிப்போயின. அவருடைய கனவுத் திட்டமான தம்ம தீக்ஷ£வை இந்தியா முழுவதிலும் கொண்டு செல்ல முடியவில்லை. இரண்டாவதாக, மராட்டியத் தலித் இலக்கிய மாநாடும் தள்ளிப்போனது. இரண்டு வருடம் கழித்து 1958ஆம் வருடம் மார்ச் 2ஆம் தேதி மும்பை பெங்காலி அரங்கில் முதல் தலித் இலக்கிய மாநாடு நடைபெற்றது.

அம்பேத்கர் விருப்பப்படி, மராட்டிய எழுத்தாளர் பி.சி.காம்ப்ளேவும் மராட்டியக் கவிஞர் கேசவ் ஆத்ரேவும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில்தான் மற்றொரு மராட்டியக் கவிஞர் பாகு சாத்தே “சேஷ நாகத்தின் மேல் இந்தப் பூகோளம் உருள்கிறது என்ற சனாதான‌ நம்பிக்கையில் உண்மையில்லை. உழைப்பாளிகள், அவதியுறும் தலித் உள்ளங்கைகளில்தான் இந்த பூமி சுற்றுகிறது” என முழங்கினார்.

அரசியல் தளத்தில் தலித் நாளேடுகளும் இதழ்களும் பங்களித்தபோது பண்பாட்டுத் தளத்தில் தலித் இலக்கியம் முக்கியப் பங்கு வகித்தது. மராட்டியத் தலித் இலக்கியம் இந்திய அளவில் முன்னோடியாக இருக்கிறபோது, அந்த வகைமையை இரு பிரிவாகப் பிரிக்கலாம். 1972இல் தலித் பாந்தர் இயக்கம் (Dalit Panther Movement) தொடங்கப்பட்டது. தலித் இலக்கியத்தில் முக்கியப் பங்களித்த பல எழுத்தாளர்கள் இந்த அமைப்போடு தொடர்புடையவர்கள். ஆக, தலித் பாந்தருக்கு முன்னால் (1972க்கு முன்), பாந்தருக்குப் பின் (1970க்குப் பின்) என இரு காலகட்டத்திலும் தலித் இலக்கியம் எழுச்சி பெற்றாலும் பல காத்திரமான படைப்புகள் 1970களுக்குப் பின்னால்தான் வெளிவந்தன.

1970கள் வரை…

சங்கர்ராவ் கரத், தால்வட்கர், அண்ணாபாகு சாத்தே, பாபுராவ் பாகுல் போன்ற எழுத்தாளர்கள் முக்கியமானவர்கள். அண்ணாபாகு சாத்தே மார்க்சியச் சித்தாந்தத் தாக்கத்தில் நாவல்களைப் படைத்தார். 1959இல் வெளியான அவருடைய ‘பக்கிரா’ நாவலின் நாயகன், தலித் மேல் கட்டவிழ்க்கப்படும் அநீதிகளைக் கண்டு கொதித்தெழுந்து சாகசத்தில் ஈடுபட்டு வெற்றி பெறுவதாக முடிகிறது. பாபுராவ் பாகுல் அம்பேத்கரிசம், புத்தமதம், கம்யூனிஸ்ட்டுகளால் ஈர்க்கப்பட்டவர். 1960களில் மராட்டியத் தலித் இலக்கியத்தில் முக்கியப் பங்களித்தவர். அவருடைய மராட்டியச் சிறுகதை தொகுப்பை (மரணம் மலிவானது என்ற பொருள் வரும்படி மராட்டிய மொழியில் வெளியானது) மார்ட்டின் லூதர் கிங்க்கு அர்ப்பணித்துள்ளார். இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளில் முக்கியமானது ‘மரணம் மலிவானது’ என்ற கதைதான். ஒரு புனைவெழுத்தாளரும் கவிஞரும் சந்திக்கிறார்கள். தங்களுக்கேற்ற மொழியும் உருவமும் உள்ளடக்கமும் மராட்டிய இலக்கியத்தில் இருக்கிறதா என்ற விவாதத்தில் ஈடுபடுகிறார்கள். கதை சொல்லியான எழுத்தாளர், தனக்கு நேர்ந்த அனுபவங்களை விவரிக்கிறார். கதை சொல்லி மும்பையின் இருண்ட பிரதேசங்களை விவரிக்கிறார். வறுமை, சாதிக் கொடுமையில் சிக்கித் தவிக்கும் மக்கள், தன் பெண் குழந்தையை விபச்சாரத்திற்குத் தள்ளும் தகப்பன், பிச்சையெடுக்கும் குழந்தைகள், கணவனுக்கு முன்னால் வன்புணர்வுக்கு ஆளாகும் மனைவி எனப் பல அவலங்களை விவரிக்கிறார். கவிஞன் மும்பையின் நவீனத் தோற்றத்தையும் நாகரிக உலகத்தையும் பற்றிக் கவிதை எழுத புதிய உத்தியைக் கையாளும் தேடலில் ஈடுபடும்போது, கதை சொல்லியின் மும்பைப் பரிமாணம் அவனை உலுக்குகிறது. இனிக் கவிதை சாத்தியமில்லை எனத் தீர்மானித்து… ‘இதுதான் மும்பை. மனிதனை மனிதன் சாப்பிடுகிறான். மரணம் மலிவாகிவருகிறது’ என ஒற்றை வரியில் எழுதி முடிப்பதோடு கதை நிறைவு பெறுகிறது.

பாகுல் புனைவுகளில் சாகசம் கிடையாது. சமூக அநீதிகளை வென்றெடுக்கும் நாயகச் செயல்பாடுகள் கிடையாது. எதார்த்தம் மிக அவலமாக இருக்கும்போது அதை விவரிக்க மொழி போதாமையை இந்தச் சிறுகதையில் சுட்டிக்காட்டுகிறார். 50களில் தலித் எழுத்தாளர்களிடமிருந்த ரொமாண்டிசப் பாணியைத் தவிர்த்து, 60களின் எதார்த்த பாணியையும் தவிர்த்து மொழியில் பரிசோதனை முயற்சியில் இயங்கியவர்.

மராட்டிய இலக்கியத்தில் ‘ஓவி’ என்ற உத்தி உண்டு. மராட்டிய‌ ‘வர்காரி’ பக்தி இலக்கியக் காலகட்டத்தில் இந்த உத்தி பிரபலமானது. 13ஆம் நூற்றாண்டில் தியானேஷ்வர், 16ஆம் நூற்றாண்டில் துக்காராம் இந்தப் பாணியை மராட்டிய இலக்கியத்தில் பிரபலமாக்கினார்கள். ஓவி இரு வகைப்படும். ஓவி என்பது வசனக்கவிதை. தாளம் இருக்காது. துக்காராமின் அபங் பக்தி பாடல்களின் வசனத்தைவிடக் கவித்துவத்திற்கு முக்கியம் இருக்கும். மற்றொரு வகை பெண்கள் பாடும் ஓவி. மாவு அரைக்கும்போது, கிணற்றில் நீரெடுக்கும்போது கணவன்களால் தங்களுக்கிழைக்கப்படும் துன்பங்கள், ஆணாதிக்கத்தின் குரூரங்களைப் பாடுவார்கள். ஓவி மராட்டிய நாட்டார் வழக்காற்றியலில் முக்கியமான பாணி.

எஷ்வந்த் மனோகர், 1970களில் முக்கியமான தலித் எழுத்தாளர். மராட்டிய மொழியில் பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்ட‌வர். ‘Chorpurushano’ என்ற கவிதையை ஓவி உத்தியில் எழுதியுள்ளார். Thorpurushano என்ற மராட்டியச் சொல் கணவான்களையும் மேன்மக்களையும் குறிக்கும். முதல் எழுத்தை மட்டும் திருடர்களையும் மோசடிக்காரர்களையும் குறிக்கும் சொல்லாக மாற்றி அபாரமான கவிதையைப் படைத்தார். மிகச் சிக்கலான ஓவி நடையில் எழுதப்பட்ட இந்தக் கவிதை ஆங்கில மொழியாக்கம் கூடச் சாத்தியமில்லை. இந்த நெடிய கவிதை இன்றைய அரசியலுக்கும் பொருந்தும். தேசபக்தி, கடவுள் பக்தி, நாட்டுப்பற்றை முன் வைக்கிறவர்களை மோசடிக்காரர்கள் என விளித்து அதைப் பொருத்தமாகத் தலைப்பிட்டுத் தலித் மக்களின் அவல நிலையை விவரிக்கிறார். அதாவது, மோசடிக் காரர்களை மரியாதையாக அழைப்பது போல் பகடி செய்துள்ளார். 70களில் அர்ஜூன் டாங்ளே, பிரஹலாத் போன்றவர்கள் முக்கியமான கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்கள்.

1970களுக்குப் பின்…

1972இல் துடிப்பான இளைஞர்கள் ஒன்றுகூடி அமெரிக்கக் கறுப்பின மக்களுக்கான கருஞ்சிறுத்தைகள் இயக்கத்தின் தாக்கத்திலும் மார்க்சியச் சித்தாந்தத்திலும் ஈர்க்கப்பட்டுத் தலித் சிறுத்தை இயக்கத்தை மும்பையில் தொடங்கினார்கள். இந்த இயக்கம் அரசியல் செயற்பாடுகளுக்கு மட்டுமன்றி இலக்கியத்திற்கும் முக்கியப் பங்கை வழங்கியுள்ளது. நாம்தியோ தசேல், அர்ஜூன் டாங்ளே, ஜே.வி.பவார், ராஜா தேல் போன்ற முக்கியக் கவிஞர்களால் தொடங்கப்பட்டது இந்த இயக்கம். கவிதையில் தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்த மராட்டிய மொழியை அபாரமாக மாற்றினார்கள்.

இதில் அதி முக்கியமானவர் நாம்தியோ தசேல். மேல்சாதி, குறிப்பாக பிராமண ஆதிக்கத்தை ஆக்ரோஷமாக எதிர்த்தார். இலக்கியத்தில் பிராமண அழகியலை ஒதுக்கி, தலித் வாய்மொழி மரபை இடப்பெயர்ச்சி செய்தார். வழமையான மொழியில் எழுதக் கூடியவரல்ல. வாசிப்பவர்களை வார்த்தைகளால் அறைந்தார். மரபு, கலாச்சாரம், மொழி என அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்தினார். பூனாவின் ஒரு குக்கிராமத்தில் பிறந்த தசேலுக்குத் தகப்பனார் யார் எனத் தெரியாது. பின்னாளில் தன் அன்னை சலுபாயைத் தன் பெயரோடு இணைத்துக்கொண்டு நாம்தியோ சலுபாய் தசேல் என்ற பெயரில் எழுதினார்.

இந்தியத் தலித் இலக்கியத்தில் நாம்தியோ தசலையைத் தவிர்க்கவே முடியாது. மும்பைப் பாலியல் தொழிலாளிகள் வாழும் சிவப்பு விளக்கு பகுதியான காமத்திப்புராவில் பிறந்து வளர்ந்தவர். பாலியல் தொழிலாளிகள், ஓரினச் சேர்க்கையாளர்கள், தரகர்கள், குடிகாரர்கள், போக்கிரிகள், ரவுடிகள், திருநங்கைகள், கஞ்சா வியாபாரிகள், கடத்தல்காரர்கள், பிச்சைக்காரர்கள் மத்தியில் வாழ்ந்தவர். தன்னுடைய 24 வயதில் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டு மராட்டிய இலக்கிய உலகைத் திகைக்க வைத்தார். அந்தத் தொகுப்பின் தலைப்பு ‘கோல்பித்தா’. வட்டவடிவச் சாராயக் கடை என்ற பொருளில் மராட்டிய மொழியில் தலைப்பிட்டார். இந்தத் தொகுப்பு வெளியான சில மாதங்களில் ‘தலித் சிறுத்தைகள்’ என்ற அரசியல் இயக்கத்தைத் தொடங்கினார். சில காலம் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக அமைப்பிலிருந்து விலகினார். பல கட்டுரைகளை எழுதியிருந்தாலும் முதன்மையாக அவர் கவிஞர். தன் வாழ்நாளில் ஒன்பதுக்கும் மேற்பட்ட தொகுப்புகளை எழுதி வெளியிட்டார். ஒவ்வொரு தொகுப்பும் தனித்துவமானது. இந்தியக் கவிதை மரபுக்கு எதிராகத் தசல் தன் கவிதையில் மொழியையும் உள்ளடக்கத்தையும் மாற்றி வாசகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

காமத்திப்புராவில் புழங்கும் நடைமுறை மொழியைத் தன் கவிதையில் பயின்றார். இந்தி, மராத்தி, உருது கலந்த மொழி ‘பாம்பையா’ என அழைக்கப்படுகிறது. இந்த மொழியைக் கவிதையில் கொண்டுவந்தார். அதனால்தான் இவருடைய படைப்புகளின் ஆங்கில மொழியாக்கம் மிகக் கடினமானது. இருந்தபோதிலும் திலிப் சித்ரே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து தசலின் மேதமையை உலகுக்குப் புரியவைத்தார். மேற்கத்திய இலக்கியத்தில் இதேபோல் இருண்ட உலகத்தில் வாழ்ந்து அபாரமான இலக்கியங்களைப் படைத்த ஜெனே போல், இந்தியாவில் தசல் எழுதிய படைப்புகள் பிரமிக்கவைக்கும். தேங்கி நிற்கும் சாக்கடை நீர், மூழ்கி பலியாகும் முதியவர், பாலியல் நோய், பாலியல் தொழிலாளிகளின் படுக்கையறை உத்திகள், ஓரினச் சேர்க்கையாளர்களின் உடல் வேட்கை, வேட்டையாடப்படும் திருநங்கைகளின் உடல் உறுப்புகள், இரண்டாயிரம் வருடங்களாக ஒடுக்கப்பட்ட உடல்கள், பக்தி இலக்கியம், சமஸ்கிருதத்தின் மேட்டிமைத்தனம், கறுப்பு நிறத்தின் மேல் உள்ள ஒவ்வாமை, பாலிவுட் திரைப்படங்களில் காமத்திப்புரா பற்றிய எதிர்மறைச் சித்தரிப்பு, இந்திய அரசியலில் ஏமாற்றப்பட்ட தலித்துகள், இந்து மதத்தில் வஞ்சிக்கப்பட்ட விளிம்பு நிலை மக்கள் எனக் கலவையாக கொலாஜ் பாணியில் ‘பாம்பையா’ மொழியில் எழுதி அலறவைத்தார். தலித் இலக்கியத்தில் மராட்டிய மொழியின் மரபை இவரைப் போல் உடைத்தவர் எவருமில்லை. மற்றொரு கவிதை தொகுப்புக்கு ‘காண்டு பகிச்சா’ எனத் தலைப்பிட்டு அதிரவைத்தார். Ass Fuckers Park என்ற பொருளில் இதற்குத் தலைப்பிட்டார். மரபான வாசகனுக்கு அவருடைய கவிதைகள் புரியாது, ஒவ்வாமையை ஏற்படுத்தும். அவரே ஒரு நேர்காணலில் குறிப்பிட்டது போல், “இரண்டாயிரம் வருடங்களாக சீழ்படிந்த மொழி, கலாச்சாரம், அரசியலால் நாங்கள் ஒடுக்கப் படுகிறோம். நான் பயிலும் மொழி சனாதனிகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்த வேண்டும், உறைக்க வேண்டும் என்பதற்காகத்தான் எங்களுக்கேற்ற மொழியில் எழுதிச் செல்கிறேன்” என்றார். அவர் படைப்புகளை ஆங்கிலத்தில் கொண்டுவந்த அவருடைய சக கவிஞர் திலிப் சித்ரே, தசலின் கவிதை மொழியை Bastard Language என்கிறார்.

மராட்டியத்தில் கைக்காடி இனத்தவர்கள் நாடோடிகள்; குற்றப்பரம்பரை என முத்திரை குத்தப்பட்டவர்கள். இவர்கள் பேசும் மொழியும் கைக்காடி என அழைக்கப்படுகிறது. எழுத்து லிபி இல்லை. தற்போது 25,000 மக்களே இந்த மொழியைப் பேசுகிறார்கள். லக்ஷமண் மானே ‘உபாரா’ (அந்நியன்) என்ற சுய வரலாற்று நூலை அபாரமான நடையில் எழுதினார். கைக்காடி பேச்சு மொழியை எழுத்தில் மராட்டிய மொழிபெயர்ப்பில் கொண்டுவந்து, வழக்கமான மராட்டிய மொழியையும் கதையாடலில் இணைத்துள்ளார். இந்த நூலில் கைக்காடி சிறுவன் ஒருவன் பள்ளிக்குச் செல்கிறான். மராட்டிய மொழி பயிற்றுவிக்கும் பள்ளியில் கைக்காடி மொழி தெரிந்த சிறுவன் திணறுகிறான். அதாவது கைக்காடி இனத்திலிருந்து முதன்முறையாகக் கல்வி கற்கச் செல்லும் சிறுவனுக்கு மொழி பெரிய தடையாக இருக்கிறது. வரலாற்றில் கல்வி மட்டும் மறுக்கப்படவில்லை, ஓர் இனத்தின் மொழி, கலாச்சாரம் என அனைத்தும் விளிம்பிற்குத் தள்ளப்படுவதை இந்த நூலில் மொழியில் விளையாடியுள்ளார்.

தயா பவார் கவிதைகளோடு ‘பலூட்’ என்ற சுயவரலாற்று நூலையும் எழுதினார். மஹர் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஆவணப்படுத்திய முக்கிய நூல். மராட்டிய தலித் சுயவரலாறு நூல்களுக்கு இது முன்னோடியாக இருக்கிறது. சப்கேல், ‘சுரங்’ (வெடிப்பு) என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டு அதிர வைத்தார். வாமன் நிம்பல்கர் தலித் கவிஞர்களின் படைப்புகளைத் தொகுத்து 1973இல் வெளியிட்டார். 70க்குப் பின் இரண்டு முக்கிய எழுத்தாளர்கள் மராட்டியத் தலித் இலக்கியத்தைக் கல்விப் புலன்களுக்கு எடுத்துச் சென்றார்கள். கேஷவ் மேஷ்ராம் மும்பைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி, தலித் கவிஞர்களின் படைப்புகளைத் தொகுத்து மராட்டிய மொழியில் வெளியிட்டார். யஷ்வந்த் மனோகர் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். 1977இல் தன் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். மும்பைப் பல்கலைக்கழகத்தில் மராட்டிய இலக்கியம் கவுன்சிலின் தலைவராகவும் இருந்தார். மராட்டியப் பாடத்திட்டங்களில் தலித் இலக்கியத்தை அறிமுகப் படுத்தியதில் இவர்கள் இருவரும் முக்கியமானவர்கள்.

70களில் எழுச்சிபெற்ற மராட்டியத் தலித் இலக்கிய எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் பொருட்டு மும்பை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு 1973ஆம் வருடம் நவம்பர் 25இல் சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டது.

90களுக்குப் பிறகு…

1993இல் அம்பேத்கர் சாகித்ய பரிஷத் என்ற அமைப்பு மும்பையில் முதன்முறையாக இந்தியத் தலித் இலக்கிய மாநாட்டை நடத்தியது. இதற்குப் பிறகு இந்திய அளவில் தலித் இலக்கியம் முக்கியமாகக் கவனிக்கப்பட்டது மட்டுமன்றிப் பல மொழிகளிலும் தலித் இளைஞர்கள், பெண்கள் உத்வேகத்துடன் எழுதத் தொடங்கினார்கள். இந்த மாநாட்டுக்கு முன்னால் பிராந்திய மொழிகளில் தலித் படைப்புகள் வெளிவந்தாலும் 90களில் எண்ணிக்கையில் பலர் எழுதவந்தது குறிப்பிடத்தக்கது.

மராட்டியத் தலித் எழுத்தாளர்களின் படைப்புகள் 90களில்தான் ஆங்கிலத்தில் வெளிவந்தன. ஜே.வி. பவாரின் கவிதைகள் 1970களிலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டாலும், 1992இல்தான் வெளி வந்தது. அதுவும் தன் சொந்தச் செலவில் வெளியிட்டார். பதிப்பகங்கள் மராட்டியத் தலித் இலக்கியத்திற்கு முக்கியத்துவம் வழங்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த நிலைமை 90களின் பின்பகுதியிலிருந்து 21ஆம் நூற்றாண்டில் மாறியது. தாராளப் பொருளாதாரம், தனியார்மயம், தகவல் தொழிற்நுட்ப வளர்ச்சியில் மராட்டியத் தலித் படைப்புகள் ஆங்கிலத்தில் வெளிவந்தன. 2000 ஆண்டு முதல் 2017 வரை 11 மராட்டியத் தலித் எழுத்தாளர்களின் படைப்புகள் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. ஊர்மிளா பவர், நாம்தியோ தசல், தயா பவர், பாபுராவ் பகுல் போன்ற முக்கிய எழுத்தாளர்களின் படைப்புகள் ஆங்கிலத்தில் வெளியாகி உலகம் முழுவதும் கவனம் பெற்றன. 2010க்குப் பிறகு சமூக வலைத்தளங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மராட்டியம் மட்டுமன்றி பிராந்திய மொழிகளிலும் தலித் எழுத்துகள் கவனம் பெற்றன. திரைப்படங்களிலும் தலித் கலைஞர்களின் பங்களிப்பு எழுச்சி பெற்றன. 2016இல் தலித் எழுத்துகளுக்கு மட்டும், குறிப்பாக மராட்டிய தலித் இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட மராட்டிய கவிஞர் யோகேஷ் மைத்ரேயா Panther’s Paw என்ற பதிப்பகத்தைத் தொடங்கினார். இதுவரை ஆறு தொகுப்பு நூல்களை ஆங்கிலத்தில் அவரே மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்.

90களில் பல தலித் பெண் எழுத்தாளர்கள் எழுச்சி பெற்றார்கள். 90களில் இரண்டு மராட்டியத் தலித் பெண் கவிஞர்களின் படைப்புகள் முக்கியமானவை. மினா கஜ்பய் இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுக் காலமானார். முனைவர் பட்டம் பெற்ற ஜோதி லாங்வரின் கவிதைத் தொகுப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இந்திய அளவில் கவனம் பெற்றன. அவர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட சாதிக் கொடுமைகளைப் பற்றி மட்டும் எழுதாமல் ஒட்டுமொத்தப் பெண்களுக்காகவும் எழுதிச் செல்கிறார்கள். ஊர்மிளா பவார் தன் புனைவுகளில் நவீனத்துவ வாழ்க்கையில் பெண்களின் உளவியலை அலசுகிறார். கவிதாயினி ஹிரா பன்சோட் துணிச்சலாக யசோதரா பற்றி உயர்வாக எழுதி, அவர் கணவர் புத்தரையும் விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறார். அதேபோல், ராமாயணத்திலும் சீதையின் கற்பை ராமன் சந்தேகப்படுவதை விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார். புராணங்களையும் இதிகாசங்களையும் தலித் பெண் எழுத்தாளர்கள் மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறார்கள்.

மராட்டியத் தலித் கலைஞர்களின் இலக்கியப் பங்களிப்புகள் பரவலாகத் தெரியாதது அவலம். சில நூல்கள் மட்டும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. நவீன இலக்கியத்தில் மொழியில் பல பரிசோதனைகளை மேற்கொண்டவர்கள் மராட்டியத் தலித் படைப்பாளிகள்.

கடந்த சில வருடங்களாக மராட்டியத் தலித் எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டுமன்றி பிராந்திய மொழியில் எழுதப்பட்ட படைப்புகளும் ஆங்கில மொழியாக்கத்தில் வெளிவருவது ஆரோக்கியமான போக்காகும். இருந்தபோதிலும், இன்னும் ஆங்கிலத்தில் மட்டுமன்றிப் பிற மொழிகளிலும் தலித் படைப்புகள் வெளிவர வேண்டும். இந்திய அளவில் தலித் இலக்கியம் முக்கியமானது என்றாலும் மராட்டியத் தலித் இலக்கியம் பரிசோதனை முயற்சியிலும் பயின்ற வார்த்தைகளிலும் வாக்கிய அமைப்புகளிலும் தனித்துவமானவை. பொதுச் சமூகத்தை உலுக்கியதில் மராட்டிய தலித் இலக்கியத்திற்கு முக்கியப் பங்குண்டு. மராட்டிய தலித் இலக்கியத்திலிருந்து தமிழ் நவீன இலக்கியம் கற்றுக்கொள்ள பல பாடங்கள் உள்ளன.

உதவிய நூல்கள்:

  1. ‘The History of Dalit Literature’ – J.V.Pawar (One of the founder of Marathi Dalit Panther Movement)
  2. ‘Marathi Literature’ – Veena Deo
  3. ‘Dalit Literature in India’ – Joshil Abraham
  4. ‘Anthology of Dalit Literature’ (Poems) Edited by Mulk Raj Anand and Elenor Zelliot
  5. ‘A Current of Blood’ (Poems of Namdeo Dhasal) translated by Dilip Chitre

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!