நாம்தேவ் தசால் : நீங்காத வலியின் உலகம் – ஷங்கர்ராமசுப்ரமணியன்

சாதி ஒடுக்குமுறை என்னும் வரலாற்றுத் துயரமும் நேசத்துக்குரிய ஆன்மாவைப் பிரிந்து வேகும் தனித்துயரமும் நீங்காத வலியின் சிறிய உலகம் மராட்டிய கவி நாம்தேவ் தசால் உடையது. `மொழியின் அந்தரங்க உறுப்பில் இருக்கும் மேகப்புண் நான்’ என்ற கூற்று நூறு சதவீதம் பொருந்தும் உலகம் அவருடையது. ரணமும் நிணமும் வழியும் விமர்சனக் கருத்துகள் மேவும் சிக்கலும் உக்கிரமுமான படிமங்கள் இவர் எழுப்புபவை என்பதால் மொழிபெயர்ப்பதற்கும் கடினமானவை. அமெரிக்கக் கவிஞர் சார்லஸ் பூக்கோவ்ஸ்கி  பிரதிநிதித்துவம் செய்த விளிம்புநிலை வாழ்க்கையை ஞாபகப்படுத்தும் கவிஞர் என்றாலும் அவரின் கவிதைகளில் உள்ள விடுதலை அம்சமும் மகிழ்ச்சி, அழகு அம்சங்களும் நாம்தேவ் தசாலின் கவிதைகளில் கிடையாது. சாதியக் கட்டமைப்புள்ள இந்தியச் சூழலில் எழுதும் இவரிடம் அவற்றை எதிர்பார்க்கவும் முடியாது. ஏனென்றால் வலி, குரூரம், துயரம், இருள் மண்டிய உலகம் இவருடையது.

மகாராஷ்டிர மாநிலத்தில் புனே நகரத்துக்கு அருகே உள்ள புர் கிராமத்தில் 1949இல் பிறந்தவர். தாயின் ஊர் கனெர்சார். கிராமத் திருவிழாக்களில் நடக்கும் தமாஷாவில் பாடப்படும் லாவணிப் பாடல்களை நன்றாகப் பாடக்கூடியவர் இவரது தாய். நாட்டுப்புறப் பாடல்கள், பஜனைப் பாடல்களின் ஞாபகம் இவரது கவிதைகளில் உள்ளன. இவரது தாத்தா இந்தூர் அரசவையில் ஷெனாய்க் கலைஞராக இருந்தவர்.

1957க்குப் பிறகு புனே மாவட்டத்தில் அம்பேத்கரின் தாக்கத்தால் மகர் மக்கள் பரவலாகப் பௌத்த மதத்தைத் தழுவிய நிலையில், சாதிக்கு ஒதுக்கப்பட்ட குடிமைப் பணிகளை மறுத்து ஆங்காங்கே இசைக்குழுக்களை அமைத்துப் பாடியவேளையில் அந்தப் பாடல்களும் நாம்தேவ் தசாலின் மீது தாக்கத்தைச் செலுத்தியிருக்கின்றன.

சிறுவயதிலேயே கிராமப்புறத்திலிருந்து மானுடச் சுரண்டலின் அத்தனை அழுகிய வடிவங்களையும் பார்க்க இயலும் மும்பையின் சேரிப் பகுதிக்குள் பெற்றோருடன் மறுநடவு செய்யப்பட்ட நாம்தேவ் தசால், மும்பை நிழல் உலகின் கவிஞனும், உதிரிகளின் மீட்பரும், ஏழை மனிதர்களின் போதிசத்வனுமாக ஆனார் என்கிறார் கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான திலீப் சித்ரே.

தண்ணீரும் நிலமும் இவரது கவிதைகளில் தொடர்ந்து இடம்பெறுகின்றன. தலித்தாக இருப்பவன் தண்ணீரைச் சுதந்திரமாகப் பெறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டவன்; தலித் என்பவன் இன்னொரு மண்ணில், தரிசு மண்ணில், யாரும் வேளாண்மை செய்வதற்கு விரும்பாத மண்ணின் விளைபொருள் என்ற உணர்வைச் சிறுவயது கிராம வாழ்க்கையில் பெற்றவர் தசால்.

மும்பை வாழ்க்கையில் தலித் என்பவன் இந்து மதத்தைச் சேர்ந்தவன் மட்டும் அல்ல; இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், புதிய பௌத்தர்கள் என எவராகவும் இருக்கலாம்; அவர்களது வர்க்கமென்பது அவர்கள் எப்படி, எங்கே வாழ்கிறார்கள் என்பதால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டார்.

சிறுவயதில் பிரஜா சமாஜ்வாதி கட்சியில் இருந்த அவர், தனது காதலிக்கு நடந்த சம்பவத்தை முன்னிட்டு மதவாதம், சாதியவாதத்தின் கொடூரத்தை உணர்ந்தார். முற்போக்காகத் தம்மைக் காட்டிக்கொள்பவர்களும் தனிப்

பட்ட ரீதியில் சாதிய, மதவாத உணர்வுள்ளவர்களாக இருப்பதைத் தெரிந்துகொண்டார். ஒரு டாக்சி டிரைவராக, பாலியல் தொழிலாளர்கள், கஞ்சா புகைப்பவர்கள், போதைப்பொருள் வியாபாரிகளின் உலகத்துக்குள் சகஜமாக உலவத்தொடங்கினார். இசை, தளைகளைவிட்டுச் சுதந்திரக் கவிதைகளை எழுதத் தொடங்கினார். சோசலிச அரசியலின் உள்ளீடற்றத் தன்மையை உணர்ந்து கம்யூனிசத்துக்கு வந்தார். அம்பேத்கரின் பார்வைதான் தனது அடிப்படை பார்வை என்றார். நல்லது, கெட்டது என்ற வரையறைகள் அனைத்தையும் முஜ்ரா நடன விடுதிகள் மற்றும் பாலியல் தொழிலாளிகளின் வீடுகளில் கைவிட்டதாகவும் கூறுகிறார்.

1972இல் அமெரிக்காவில் உள்ள பிளாக் பாந்தர் இயக்கத்தின் ஆதர்சம் வாயிலாக தலித் பேந்தர் கட்சியை உருவாக்கினார்.

1,117 கொலைகளை அறிவித்த பெருமாள் கமிஷன்

தண்ணீருக்கு ஓர் அடையாள உணர்வை அளிக்கிறது

கீழ்வெண்மணியின் தீவட்டிச் சூடு தண்ணீரிடம் உள்ளது

………….

தண்ணீர் சித்தார்த்தன் போன்றது

தண்ணீர் அசோக மரம் போன்றது

தண்ணீர் நைட்ரிக் அமிலமும் கூட.

தண்ணீரே தண்ணீரே

பேசாய் தண்ணீரே

உனது நிறம் என்ன

மகனே, உனது கண்களைப் போன்றுள்ளது தண்ணீர்

தண்ணீரே தண்ணீரே

பேசாய் தண்ணீரே, உனது நிறம் என்ன

மகளே, உனது தாகத்தின் நிறத்தில் உள்ளது தண்ணீர்.”

‘தண்ணீர்’ என்ற பெயரில் இவர் எழுதிய கவிதை சமீபத்தில் வேங்கைவயல் கிராமத்தில் நடைபெற்ற கொடூரத்தின் வரலாற்று நினைவுகளை எழுப்புவது. அதன் ஒருபகுதியை மட்டும் தமிழில் மொழிபெயர்க்க முடிந்துள்ளது. தண்ணீருக்கு எப்படி சாதியமுறை கற்பிக்கப்பட்டது என்பதைச் சொல்லும் கவிதை இது.

 

குரூரம்

 

மொழியின் அந்தரங்க உறுப்பில் உள்ள மேகப்புண் நான்

துயரமும் இரக்கமும் ததும்பும்

நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான கண்கள் வழியாகத் தேடி அலையும்

துடியான ஆவி

என்னை உலுக்கியெழுப்பியது

என் உள்ளே வெடித்தெழும் கிளர்ச்சியால் நொறுக்கப்பட்டிருக்கிறேன் நான்

எங்கேயும் நிலவொளி இல்லை

எங்கேயும் நீர் இல்லை

வெறிநோய் கண்ட நரி தனது பற்களால் எனது தசையைக் கிழித்தெடுக்கிறது

விஷம் போன்ற குரூரம் எனது வால் எலும்பிலிருந்து வெளியேறிப் பரவுகிறது

எனது நரக அடையாளத்திலிருந்து என்னை விடுவித்துவிடு

இந்த நட்சத்திரங்களுடன் என்னைக் காதல் கொள்ளவிடு

பூத்து விரியும் வயலட், அடிவானங்களை நோக்கித் தவழத் தொடங்கியுள்ளது

உலர்ந்து வெடித்த முகத்தில் ஒரு சோலை ஊற்றெடுக்கிறது

சுருக்கவே இயலாத யோனியில் சூறாவளி ஒன்று சுழன்றுகொண்டிருக்கிறது

கொடுந்துயரின் கூந்தலைச் சீவ ஆரம்பித்துள்ளது ஒரு பூனை

எனது ரெளத்திரத்துக்கான வெளியை இரவு படைத்து வைத்திருக்கிறது

ஜன்னலின் கண்ணில் ஒரு தெருநாய் நடனமிடத் தொடங்கியுள்ளது

தீக்கோழியின் அலகு குப்பைகளைக் கொத்தி உடைக்கத் தொடங்குகிறது

ஒரு எகிப்திய கேரட், பௌதீக மெய்மையை இப்போதுதான் ருசிக்கத் தொடங்கியுள்ளது

மயானத்திலிருந்து, ஒரு சடலத்தை ஒரு கவிதை எழுப்பிக்கொண்டிருக்கிறது

சுயத்தின் கதவுகள் அறைந்து சாத்தப்படுகின்றன

ஒரு ரத்த ஓடை அவன், அவள், அது என எல்லாச் சுட்டுப் பெயர்களினூடாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது

எனது நாள் இலக்கணத்தின் சுவருக்கப்பால் விழித்தெழுகிறது

படைப்பின் மஞ்சத்தில் கடவுளின் மலம் விழுகிறது

வலியும் ரொட்டியும் ஒரே தந்தூரி அடுப்பில் சுடப்படுகிறது

உடைகள் இழந்தவரின் தழல் புராணிகங்களிலும் நாட்டார் கதைகளிலும் உறைகிறது

சோரத்தின் பாறை உயிர் வேர்களைச் சந்திக்கிறது

சூம்பிய கால்களுடன் ஒரு பெருமூச்சு நின்றுகொண்டிருக்கிறது

நெடிய சூனியத்தைச் சாத்தான் முரசறைந்து அறிவிக்கத் தொடங்கியுள்ளது

ஆசையின் வாயிலில் ஒரு பசும்தளிர் சுழன்றாடத் தொடங்கியுள்ளது

நிராசையின் சடலம் ஒட்டித் தைக்கப்படுகிறது

நித்தியத்தின் சிலையை ஊக்கி எழுப்புகிறது ஒரு பைத்தியக் கனவுரு

கவசத்தை உரிக்கத் தொடங்குகிறது புழுதி

இருளின் தலைப்பாகை அவிழத்தொடங்குகிறது

நீ, உன் கண்களைத் திறக்கிறாய்: இவையெல்லாம் பழைய வார்த்தைகள்

உயரும் ஓதத்தால் நிரம்புகிறது கடற்கழி

பேரலைகள் கரைமுகட்டைத் தொடுகின்றன

இருப்பினும், விஷம் போன்ற குரூரம் எனது வால் எலும்பிலிருந்து வெளியேறிப் பரவுகிறது

அது ஸ்படிகத் தெளிவில் உள்ளது, நர்மதை நதியின் நீரைப்போல.

 

போலீஸ் காவலிலிருந்து ஒரு பருவக் கவிதை

 

கற்றாழையில் நான்காயிரத்து ஐந்நூறு வகைகள் உள்ளன

கற்றாழை வகைகளில் வெவ்வேறு சாதிகள், இனங்கள், பண்பாடுகள், பாணிகள் உண்டு

சில கற்றாழைகள் மயிலின் இறகைப் போல மென்மையாக

நமது இருதயத்தை வெட்டிப் பிளந்து நடுவில் வைத்துக்கொள்ளலாம் போன்றிருக்கும்.

இன்னும் சில கற்றாழைகளோ இலட்சக்கணக்கான முள்களைக் கொண்ட உலகம்.

அதை ஒருவர் தொடாவிட்டால் கூட மனதைக் குத்திவிடும்.

அவை ஆன்மாவைக் காயப்படுத்துகின்றன:

அப்புறம், ரத்தம் விடாமல் வழிகிறது

மூன்றுமுறைகளுக்கு மேல் முழு உலகமும் நனைந்தூறிவிட்டது

ஜெயிலர் மற்றும் இந்தக் கற்றாழை

கற்றாழை மற்றும் இந்த ஜெயிலர்

நான் அவர்களுக்கிடையிலான ஒற்றுமையால் நெகிழ்ந்துவிட்டேன்

சிறைக்கைதிகளுடன் அண்மையால் குற்ற மனப்பான்மை கொண்டவர்களாக

ஜெயிலர்கள் மாறுவதை அடிக்கடிப் பார்த்துள்ளேன்

அவர்கள் மலடாகிவிடுகின்றனர், அவர்கள் இதயத்தில் ஒரு தளிர்கூட முளைவிடும்

பருவம் இல்லை

நீங்கள் சொல்வீர்கள்

கவிஞன் என்று அழைக்கப்படும் இவன்

மூத்த ஜெயலிரை ஒரு கற்றாழையுடன் ஒப்பிடுகிறான் என்று

அதனால்தான் சொல்கிறேன்

கொஞ்சம் கவனியுங்கள் மக்களே

அது அவ்வளவு எளிதானதல்ல.

ஒரு விவகாரத்தின் ஆழம்வரை செல்லும்

நான்

ஒரு கைதி மற்றும் ஒரு கவிஞன்

நிகழ்ச்சிகளையும் கதாபாத்திரங்களையும் விளங்கிக்கொள்வதற்கு

நான் வெறுமனே

எப்படி உங்கள் அதிகாரியையும்

கற்றாழையையும் அருகருகே வைக்க இயலும்?

உங்கள் சிறை அதிகாரியோ குழந்தையைப் போலக் களங்கமற்றவர்

கற்றாழையின் அடர்ந்த காட்டுக்குள் அவரது இதயம் மென்மையாக இருக்கிறது

என்னால் அவரை ஒரு ஜெயிலர் என்று கருதவும் இயலவில்லை

அவரது மனதை

சமுத்திரத்தின் முனகல்கள் தொட்டுவிடும்:

அவரே சமுத்திரமாக ஆகி, முழுமையாகத் தேங்கியும்விட்டவர்

அந்தச் சமுத்திரத்தில் சிறைக்கைதிகள் மனப்படகுகளில்

உலகம் முழுவதும் பயணம் மேற்கொள்கின்றனர்

சிறையின் இருண்ட பாலையில்.

 

ரசவாதம்

 

என்னுடைய

ஆழ்மையத்தைச் சேர்ந்தவள் நீ

உனது தரிசனத்தின் நிழலினூடாகத்

தொட்டுணரும்

களிப்பின் எல்லையை அடைகிறேன்

சைத்ர மாதத்தில் மொக்கவிழும் மலர்

அடியற்ற அவநம்பிக்கையின் ஒரு தொடுகை

வெளியேற்றப்பட்ட எனது உயிர்மூச்சு

நித்தியத்தைச் சுற்றி வட்டமிடுகிறது

நீங்காத எனது வலியின் சின்ன உலகத்தையே

நான் இங்கே படைத்துக் காட்டுகிறேன்.

உன் பரவெளி என்னைப் பற்றியிழுக்கிறது

அதன் மரணமற்ற மழையில்

என் குட்டி ஆன்மா நனைந்தூற.

 

நவயானா பதிப்பகம் வெளியிட்ட ‘A Current of Blood’ ஆங்கில நூலிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது. மராத்தியிலிருந்து மொழிபெயர்ப்பு : திலீப் சித்ரே. விலை ரூ.299. குறிப்பும் மொழிபெயர்ப்பும்: ஷங்கர்ராமசுப்ரமணியன்.

[email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!