“உன்னுள்ளே நானிருக்க என்னுள்ளே நீயிருக்க
உன்னை யறியாமல் உடலிழந்தேன் பூரணமே”
– தாயுமானவர்
1
அந்தப் பார்வை எனக்குள்ளாக எதையோ செய்கிறது. எளிதில் விளக்கிச் சொல்லமுடியாத மயக்க நிலையில் என்னைப் பிசைந்துகொண்டிருக்கிறது. நான் ரப்பரைப்போல வளைந்து நெளிந்திருக்கிறேன். ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்தில் ஊற்றி நிரப்பும் திரவமாகவும் நிரம்பி வழிகிறேன். பிடிப்பில்லாமல் ஒழுகிக்கொண்டிருக்கும் என்னைத் திடமாக்கிய அந்தப் பார்வை, நீல நிறக் கண்களின் பார்வை உள்ளுக்குள் பாய்ந்து வெகுதூரம் இட்டுச் செல்கிறது.
நான் எங்கெங்கோ சென்றுகொண்டிருக்கிறேன். எந்த இடம் என்று சொல்லத் தெரியவில்லை, மிதந்துகொண்டிருப்பதாக உணர்கிறேன். இதுவரையில் அனுபவித்திராத உறைய வைக்கும் பனிப்பொழிவில் அந்தக் கண்கள் மிகவும் வசீகரமான கதகதப்பை வழங்கின.
ஒட்டுமொத்தக் கடலினையும் கண்ணுக்குள் ஊற்றிக்கொண்ட அடர் நீலம், துயரத்தினை உட்கொண்டும் கலங்காமல் சாந்தம் ததும்பும் பார்வை, மீனுக்காகக் காத்திருக்கும் கொக்கின் கழுத்தைப்போல நீண்டு திரண்டிருந்த நாசி என மெய்மை பூண்ட முகத்தினைக் கொண்ட அந்தப் பெண் எதற்கு என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
இதற்கு முன்பாக இந்த இடத்தையும் இந்தப் பெண்ணையும் நான் பார்த்ததில்லை. ஆனாலும் மிகவும் பரிச்சயமான ஓர் உணர்வையே இவை எனக்குக் கொடுத்தன. வெகுநேரமாக அவள் என்னிடம் பேசாமல் என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள், எனக்கும் எதுவும் சொல்லத் தோன்றவில்லை. அவளையே வெறித்துக்கொண்டிருந்தேன்.
எனக்கு ஏன் பேசத்தோன்றவில்லை என்று தெரியவில்லை. அவளாவது பேசியிருக்கலாம்! ஒருவேளை வார்த்தைகளில் அடங்கிவிடும் உணர்வுகளைக் கடந்த நிலையில் இருக்கிறாளோ. இருந்தும் நான் பேச முயற்சி செய்தேன், முடியவில்லை. நான் என் கட்டுப்பாட்டில் இல்லை. ஒரு பிம்பம் போல விழுந்திருந்தேன். அது நான்தானா? அசைவற்றுக் கிடப்பதை இப்போது உணர்கிறேன். கசப்புடன் நாள்பட்ட ஓவியம் உரிந்து விழுவதைப்போல மங்கிக்கொண்டே உதிர்ந்திருந்தேன். நீல நிறம் எங்கும் படர்ந்திருந்தது. கண்ணுக்கு எட்டும் தூரம் வரையில் நீலம் மட்டுமே. மெல்ல மெல்ல நீலம் குறைந்து கறுப்பு வெள்ளையாகத் தெரிந்தது. எல்லோரும் கறுப்பு வெள்ளையில் இருந்தார்கள். ஆனால், அவர்களின் கண்கள் மட்டும் நீல நிறமாக இருந்தன. இரவில் பூனையின் கண்கள் ஒளிர்வதைப்போல அவர்களின் கண்கள் நீலவண்ணத்தில் ஒளிர்ந்திழுத்தன. சுழன்றடித்து வெகுவாகத் தள்ளப்பட்டேன். இப்போது நான் வரிசையில் நின்றிருக்கிறேன். ஒரு கையில் என் மார்பகங்களையும் மறு கையில் பிறப்புறுப்பையும் மறைத்துக்கொண்டு முன்னே நகர்ந்திருந்தேன். எனக்கு முன்பும் பின்பும் இப்படியாகவே கைகளை உடைகளாக்கிக் கொண்டிருந்தார்கள்.
நாங்கள் ஒட்டுமொத்தமாகக் குறுகிய அறைக்குள் அடைக்கப்பட்டோம். இந்த அறையில் குளிரின் நடுக்கமில்லை, நாங்கள் ஒவ்வொருவரின் உடலுடன் ஒட்டிக்கொள்ளும் நிலையில்தான் அந்த அறையில் இடமிருந்தது. ஒவ்வொருவரின் மூச்சுக்காற்றும் உடலின் கதகதப்பும் எங்களைக் குளிரில் இருந்து காப்பாற்றியது. நேரம் ஆகஆக உடலின் கூச்சம் தேய்ந்து இருட்டில் கலந்திருந்தது. தொண்டை தண்ணீருக்காக ஏங்கி வறண்டுவிட்டது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then