அண்ணலின் ஆன்மா: தலித் சுப்பையா – கார்த்திக் ராஜா கருப்புசாமி

டந்த வாரம் அய்யா தலித் சுப்பையா புதுவை JIPMER மருத்துவமனையில் நீரிழிவு நோயின் பாதிப்பினால் இயற்கை எய்தினார். நூற்றுக்கும் மேற்பட்ட அரசியில் விழிப்புணர்வு பாடல்களை இயற்றி, இசையமைத்தவர். கடந்த நாற்பது வருடங்களில் ஆயிரம் மேடைகளுக்கு மேல் பார்த்த மக்களிசைப் பாடகன். சுப்பையா போன்ற காத்திரமான கலைஞனை இயற்கை கூட முழுமையாக வீழ்த்த முடியாது. அண்ணலுடைய அறிவுச்சுடரின் தொடர்கண்ணி அவர். உண்மையின் உறை கல்லாக அம்பேத்கர் உமிழ்ந்த நெருப்பு கனலை அதன் தகிப்பு குறையாமல் தன் வாசிப்பினால் அடைகாத்து இசையால் கடத்தியவர். கவிஞர், பாடகர் சுப்பையா அறவழி நிற்கும் தன் பாடல்களினால் சாகா வரம் பெற்றவர். மண்ணுலகைவிட்டு மறைந்தாலும் அறிவுலகில் அவரின் சமத்துவக் கனவு நிலைத்திருக்கும்.

இந்திய வரலாற்றையும் உலக நாட்டு நடப்புகளையும் தன் உள்ளங்கை ரேகை போல் அறிந்து தெளிந்தவர். சமூக அவலங்களின் பிற்போக்கு கருத்தியல்களை இனங்கண்டு வேரறுப்பவர். பொதுப்புத்தியில் விரவிக்கிடக்கும் மூடத்தனங்களை எதிர்க்க தன் கலையை ஆயுதமாக்கியவர். தெளிந்த கருத்துக்களை எளிய பாடல்களின் வழி மக்கள் வசம் கொண்டு சேர்த்தவர். ஆழமமான தத்துவங்களையும் அரசியல் புதிர்முடுச்சுக்களையும் அதன் சாரம் குறையாமல் தன் இசையில் பண்ணமைத்துப் பாடுபவர். தீராத அறிவு வேட்கையும் சமூகத்தின் மீது தீராக்காதலும் கொண்ட கலைஞனை இழந்து நிற்கிறோம். இருந்தும் அவரின் இசையும் அவர் பயணித்த அறப்பாதையும் வழித்துணையாய் என்றும் இருக்கும்.

புகழ்தரும் போதையால் திசைமாறும் கலைஞர்களுக்கிடையே, “என் கலையை போதையாக பயன்படுத்த மாட்டேன்” எனச் சூளுரைத்தவர். எந்தக் கவர்ச்சிக்கும் விலை போகாமல் தன் பாடல்களை மனிதத்தைத் தாங்கிச் செல்லும் அரணாக – ஆயுதமாக வார்த்தெடுத்தவர்.

அம்பேத்கரைப் பாடிய வாயால் ஐயப்பனைப் பாடமாட்டேன், பெரியாரைப் பாடிய வாயால் பிள்ளையாரைப் பாடமாட்டேன்”

என சனாதனத்திற்குச் சவுக்கடி கொடுத்தவர். பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் புறக்கணிக்கப்பட்ட அம்பேத்கரை தெருமுனைகளிலும் திருமணங்களிலும் ஒலிக்கச் செய்தவர். அண்ணலின் கொள்கைத் தேரை இயன்றவரை தன் இசையின் மூலம் முற்போக்கு திசையில் முன்னகர்த்தியவர்.

அம்பேத்கரிய கருத்தியல், அரசியல் விமர்சனம், வரலாற்று மறுவாசிப்புகள், சமூகநீதி அரசியல் முரண்கள், தீண்டாமை எதிர்ப்பு, ஆணவப் படுகொலைக்குக் கண்டனம், பெண்ணுரிமை, சமத்துவ உணர்வெழுச்சி என பல்வேறு வகையான பாடல்களை எழுதி, பண்ணமைத்து, தன் விடுதலை குரல் கலைக்குழுவினருடன் தமிழகமெங்கும் அரங்கேற்றியுள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் விழிப்புணர்ச்சிக்காகவும் அவர்களிடையே தன்னம்பிக்கையை விதைப்பதற்காகவும் குறைந்தது நூறு பாடல்களாவது எழுதியிருப்பார். சுப்பையாவின் வரிகளில் கழிவிரக்கத்திற்கு இடமே கிடையாது; அவை சாட்டையடி போல சாதிய பொதுப்புத்தியினை சுழன்று தாக்கும் தன்மை கொண்டது.

“எங்களுக்கு பெயர் வைக்க…
உங்களக்கு துணிச்சல் தந்தது யாரடா?
உங்களுக்கு பெயர் வைக்க…
எங்களுக்கு உரிமை உண்டா கூறடா?”

என கேட்டு சாதிய சமூகத்தின் ‘இயல்பாக்கப்பட்ட‘ கருத்தியல் வன்முறைகளைக் கட்டுடைக்கிறார் சுப்பையா. வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பெயர்சூட்டும் அரசியல் தந்திரங்களைத் தோலுரித்துக் காட்டுகிறார்.

சுப்பையாவிற்கும் குப்பையாவிற்கும் இட்டிருந்த மனுதர்ம விலங்குகளைத் தன்னுடைய கருத்தியல் மற்றும் கலை பயணத்தின் வழி அடித்து நொறுக்கியவர். தன் வாழ்க்கையை அம்பேத்கரிய கொள்கைகளுக்கும் மனிதத்திற்கும் அர்ப்பணித்தவர். சுயநலப் நோக்கு இல்லாமலும், தன்னிலை குறித்து சிறிதும் அஞ்சாமலும் சமூக – அரசியல் விமர்சனங்களை அதிகாரத்தின் நெற்றிப் பொட்டில் வைக்கும் நெஞ்சுரம் படைத்தவர். தன் பேனா முனையால் ஆளும் வர்க்கத்தைத் தொடர்ச்சியாக கேள்விக்குட்படுத்தியவர். விளம்பரம், விருதுகளுக்கு செவிசாய்க்காத செந்தமிழ்க் கவிஞர் சுப்பையா, உண்மையை மட்டும் துணைகொண்டு தன் கலைப்பணியையும் களப்பணியையும் ஒருசேர முன்னகர்த்திச் சென்றவர்.

பெரியாரின் பங்காற்றலைத் தொடர்ந்து தன் பாடல்களில் முன்னிறுத்திய சுப்பையா, தமிழ்ச் சமூகத்தின் இழிநிலைக்குப் பெரியாரின் சாதி-மத மறுப்பு கொள்கைகள் ஏற்கப்படாததே காரணம் என்றவர். பெரியார் வழிவந்த திராவிட கட்சிகளும் அதன் தலைவர்களும் பெரியாரின் பாதை மறந்து, சமூக நியதி கொள்கை தவிர்த்துச் செல்லும்போது காட்டமான விமர்சனங்களைத் தயங்காமல் முன் வைத்தவர். பகுத்தறிவின் துணைகொண்டு அதிகாரத்தின் தவறை பொதுவெளியில் பேசுபொருளாக்கும் முதல் குடிமகனாய் வாழ்ந்துள்ளார். தனித்தொகுதியின் மக்கள் பிரதிநிதிகளே திராவிட கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் சூழ்நிலையில் மக்கள் குரலான தலித் சுப்பையா,

பணிந்து போகமாட்டோம் எவனுக்கும் பயந்து வாழமாட்டோம்..
தலித்து என்று சொல்வோம் – எவனுக்கும் தலைவணங்க மாட்டோம்..
அடங்கி வாழ்வது அடிமைத்தனம் அதை
அடித்து நொறுக்குவது தலித்து குணம்

என முழங்கினார்.

கவிஞர்/பாடகர் அறிவுடன் நிகழ்ந்த உரையாடலின்போது ஐயா சுப்பையாவின் பாடலைக் கேட்பது அண்ணலின் புத்தகத்தைப் படிப்பதற்குச் சமம் என்றார். “வெல்ல முடியாதவர் அம்பேத்கர்“, “சிங்கத்தை“, “அறிவே உன் பெயர்தான்“, “அம்பேத்கர் விதைத்த நம்பிக்கை” போன்ற பாடல்களைக் கேட்கிற வாய்ப்பு கிடைத்த போதுதான் கவிஞர் அறிவு சொன்னதன் உள்ளாழத்தை உணர்ந்து வியந்தேன். தலித் சுப்பையாவைப் பற்றிக் கூறுகையில் “எனக்கான வழிகாட்டி. தலித் சுப்பையா சமத்துவத்திற்கான கலைஞனாக வாழ்ந்தார். இன்னும் வாழ்ந்துகொண்டிருப்பார்… சுப்பையா தமிழகத்தின் பாப் மார்லி!” என்றார்.

சமீபமாக 2020இல் கூட நீலம் பண்பாட்டு மையம் கட்டமைத்த ‘மார்கழியில் மக்களிசை’ எனும் இசைத் திருவிழாவில் பங்கேற்று

மோடி என்பதெல்லாம் – வெறும் முகமூடிதானே
வளர்ச்சி என்பதெல்லாம் – வெறும் வார்த்தை ஜாலம்தானே
மோடி மூளை அமெரிக்கா, முதுகெலும்பு அம்பானி
அரசியல் சிக்கன்குனியா, ஆபத்தில் இந்தியா

எனும் பாடலைப் பலத்த கரகோசங்களுக்கிடையே உற்சாகத்தோடு பாடினார். காவி அரசியலின் வன்மத்தைத் தோலுரித்து காட்ட தயங்காதவர். கடந்த 2020 ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்வில், திரு. சுப்பையாவிற்கு ‘மக்களிசை மாமணி’ எனும் விருதை நீலம் பண்பாட்டு மையம் மற்றும் யாழி வழங்கி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

தன் சீரிய சொற்களினால் பாடல் வடித்தவர். அச்சொற்களின் வழியே தன் வாழ்க்கையை வார்த்தவர். சமத்துவக் கனவின் மீது கொண்ட பெருங்காதலால் சாதிய சமூகத்தின் மீது ‘இசைப் போர்’ நிகழ்த்திய சிந்தனை வேந்தர். அவரின் கலைப்படைப்புகளைப் பல பரிமாணங்களில் அணுகலாம். உணர்ச்சிமிகு பகுத்தறிவு பாடல்களாக, மறைக்கப்பட்ட வரலாற்றுப் பதிவுகளாக, விளிம்புநிலை மக்களின் நம்பிக்கையாக, அறத்தின் விழுதுகளாக, சமத்துவத்தின் மந்திரமாக, சாதியெதிர்ப்பின் திமிரலாக, எல்லாவற்றுக்கும் மேல் அண்ணலின் குரலாக!

அம்பேத்கரிய கருத்தியலை நாற்பது வருடங்களாக முழங்கிய ஒற்றை மனிதக் கிடங்கு சுப்பையா. பாடகர் மணிமேகலை மற்றும் இதர விடுதலைகுரல் கலைக் குழுவினரின் துணை கொண்டு பகுத்தறிவின் பாய்ச்சலைத் தமிழக மண்ணெங்கும் நிகழ்த்திக் களமாடியவர். டாக்டர் அம்பேத்கரின் வார்த்தைகளையும் வாழ்க்கையையும் சாரம் குறையாமல் தன் வரிகளின் வழி கடத்தி தமிழினத்திற்கான அறிவுச்சுடராக ஒளிர்ந்தவர்.

சுப்பையா பாடலாசிரியர் மட்டுமல்ல, எழுத்தாளரும் கூட. ‘யுத்தம் துவங்கட்டும்’, ‘பாவம் இந்த பாரத பெண்கள்’, ‘இசைப் போர் 1&2’, ‘தீர்க்கப்படாத கணக்குகள்’, ‘எளிய மாந்தர்களின் அரிய செய்தி’, ‘யோக்கியர்கள் வருகின்றார்கள்’, ‘காலத்தை வென்ற களத்துப் பாடல்கள்’ என பல புத்தகங்களைப் பதிப்பித்துள்ளார்.

இன்றைய தலையங்கங்கள் அவர் கனவையோ மறைவையோ ஏந்தாவிட்டாலும் அவர் விதைத்த விடுதலை விதைகள் நாளை அரச மரங்களாகவும் ஆல மரங்களாகவும் தழைத்து வளரும். அவை சமுத்துவப் பாதைக்கான திசைகாட்டியாக வரும்தலைமுறையினரை வழிநடத்தும்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!