கலைடாஸ்கோப்பின் பன்முகத் தரிசனம் – அன்பாதவன்

அஞ்சலி: விழி.பா.இதயவேந்தன்

இலக்கிய உலகம் முழுவதும் எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தனுக்குப் புகழஞ்சலிகளாய்ச் செலுத்திக்கொண்டிருக்கிறது. நானோ நிலைகுலைந்து அமர்ந்திருக்கிறேன் அமைதியாய்; என்னுள்ளே உணர்வின் கொந்தளிப்பு… ஞாபகப் பரல்களின் சிதறல்…

இன்று எல்லோருக்கும் அவரை  இதயவேந்தனாகத்தான் தெரியும். எனக்கோ அவர் அண்ணாதுரையாய் இருந்த காலத்திலிருந்தே தெரியும். அன்றும், என்றும் அவர் எனக்கு அண்ணாதுரைதான். நினைவுகளைக் குலுக்க கலைடாஸ் கோப்பின் பன்முக தரிசனம்… யார் இந்த விழி.பா.இதயவேந்தன்?

பாவாடை – பாக்கியம் அம்மாள் தம்பதியருக்குத் தலைமகனாகப் பிறந்தபோது பிற்காலத்தில் தமிழ்த் தலித் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகப் பரிணமிப்பாரென அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

சற்றேறக்குறைய 30 நூல்கள்! கதை, கவிதை, கட்டுரை, விமர்சனமென எத்தனை விருதுகள், எத்தனை பரிசுகள்!

விழுப்புரம் காமராஜ் மேல்நிலைப் பள்ளியில், மேல்நிலை வகுப்பில் வெவ்வேறு பிரிவுகளில் படித்த நாங்கள், 1980இல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் வணிகவியல் துறையில் நுழைந்தோம்; அகர வரிசைப்படி அண்ணாதுரை, அன்புசிவம், ஆதவன் – என இணைந்தோம்; இலக்கிய நதிக்குள் இறங்கினோம்!

இதற்கிடையே நண்பர் ரவிகார்த்திக்கேயன் வழியாகப் பேராசிரியர் பா.கல்யாணியின் அறிமுகம் கிடைக்க, நாங்கள் புதிய மனிதர்களானோம்.

வழக்கமான பொதுப்புத்தி பார்வையின்றி எதையும் மார்க்சியப் பார்வையோடு நோக்கினோம்; விமர்சித்தோம்! மனஓசை, சுட்டி, செந்தாரகை இதழ்கள் வாயில் திறக்க எங்களுடைய எழுத்துப் பயணம் தொடங்கியது.

காமராஜ் மேநிலைப் பள்ளி வளாகத்தில், பேரா. கல்யாணி வழிகாட்ட, இலக்கிய அமைப்பொன்றைத் தொடங்க உத்தேசித்தோம்.

பாலு, ஞானசூரியன், அன்புசிவம், அண்ணாதுரை, ரவிகார்த்திகேயன், சொக்கலிங்கம், ரவிக்குமார், செல்வநாதன் ஆகிய இளைஞர்கள் குழுவாகச் சேர்ந்து ‘நெம்புகோல்’ என்கிற இலக்கிய அமைப்பைத் தொடங்கினோம். பேராசிரியர் கல்யாணியின் பரிந்துரையின் அடிப்படையில் எம்முடைய இலக்கிய அமைப்பிற்கு ‘நெம்புகோல்’ என்று பெயரிட்டவர் கவிஞர் பழமலய்.

அந்த அமைப்புதான் பின்னாளில், ‘நெம்புகோல் கலை இலக்கியப் பண்பாட்டு இயக்கம்’ எனப் பரிணமித்தது; நாங்களும் வளர்ந்தோம்.

ஞாயிறுதோறும் சந்திப்பு; படைப்புகளை வாசித்து விமர்சனமேற்றல்; சுவரொட்டிக் கவிதைகள்; மக்கள் கூடும் இடங்களில் கவியரங்கம்; வீதி நாடகம் என ‘நெம்புகோல்’ வழியாக நாங்கள் பயணிக்காத திசைகள் இல்லை.

‘கண்ணீர்ப் பூக்கள்’ தொகுப்பில் கவிஞர் மு.மேத்தா வினவுவார்:

உலகைப் புரட்டும்
நெம்புகோல் கவிதையை
உங்களில் யார்
இயற்றப் போகிறீர்கள்?

நாங்கள் அந்த நெம்புகோல் கவிதைகளை எழுதினோம்! ஞாபகக் கொத்திலிருந்து ஓர் இணுக்குத்தான் இது!

1984இன் மத்தியில் கணையாழி இதழில் இதயவேந்தனின் முதல் சிறுகதையான ‘சங்கடம்’ வெளியானது. நாங்களிருவரும் பொதுப்பணித் துறையில் தற்காலிகப் பணிக்காக அலைந்த கதையைத்தான் அவர் புனைவாக்கியிருந்தார். அக்கதையில் நான் கதாநாயகனானேன்!

1990இல் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு ‘நந்தனார்த் தெரு’ வெளியானது. அந்தத் தலைப்பை வைத்ததற்காக  மிரட்டலுக்கு ஆளானார். அதுகாறும் எப்படியெப்படியோ இருந்த தலித் கதைகளைப் புரட்டிப் போட்டது அத்தொகுப்பு!

“உவ்வே… பீயள்ளுறதையெல்லாமா கதையா எழுதுவாங்க. வாசிக்கையிலேயே குமட்டிவருகிறது. சொகுசான சமூகத்துக்கு” ஆனாலும், மிரட்டல் விமர்சனங்களை எதிர்கொண்டு இன்னும் வேகமாய் எழுதினார்! அடுத்த தலைப்பு ‘வதைபடும் வாழ்வு’ பற்றிக்கொண்டு எரிந்தது தமிழிலக்கியத் தூய்மையும் ஆச்சாரமும்!

அவர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த சமூகச் சூழலும், கல்லூரிப் பருவத்தில் அவருக்குள் ஏற்பட்ட அரசியல், இலக்கியச் சூழலுமே அண்ணாதுரையை – விழி.பா.இதயவேந்தனாக மாற்றியது.

விழுப்புரத்தில் ‘காட்பாடி கேட்’ அருகேயுள்ள ‘புறாக்குட்டை’ எனும் சிறிய பகுதியில் பிறந்து வளர்ந்ததாகத் தன்னுடைய பால்ய காலம் குறித்து அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் ஒடுக்கப்பட்ட  மக்கள் வசிக்கும் பகுதிகளில் பெரிய காலனி, மருதூர் காலனி, சேவியர் தெரு, புறாக்குட்டை போன்றவை முக்கியமானவை.

புறாக்குட்டைப் பகுதி, ஒடுக்கப்பட்டவர்களுள் ஒதுக்கப்பட்ட பகுதி. நாள் முழுதும் வாய்க்கால், மலம், குப்பை, செப்டிக் டேங்க் உடனான நகர, நாற்ற வாழ்க்கை, நகராட்சி அதிகாரிகளின் அலட்சியப் போக்கு, ஊர்ச் சனங்களின் கேவலப் பார்வை, கந்துவட்டிக்காரர்களின் கொடுமை. இதையெல்லாம் கண்டு ஆற்றாமையால் புலம்புவார்.

நாங்கள் அனுபவித்த வறுமை ஒருபுறம் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது… கூடவே எங்கள் மக்களின் துன்பங்கள். அதை வார்த்தைகளால் சொல்லி மாளாது… எத்தனையோ விசயங்கள் என்னுள் அழுத்தமாக விழுந்தன. இவற்றைக் கதையாகவோ நாவலாகவோ எழுதினாலும் ஆறாது. இதயவேந்தனின் அம்மாவுடைய இரண்டு கிராம் தாலியை அடகு வைத்தும் பத்தாமல், கந்துவட்டிக்குக் கடன் வாங்கித் தான் விழுப்புரம் கல்லூரியில் பி.காம் சேர்ந்தார்.

பிறகு தன்னுடைய முயற்சியால், பெயருக்குப் பின்னால் பட்டங்கள் சேரத் தொடங்கின… பா.அண்ணாதுரை M.Com; PGDPM; BGL; MA; M.Phil.

ஒடுக்கப்பட்ட மக்களின் பாதிப்புகளை, பிரச்சனைகளை மையப்படுத்திக் குறிப்பாக, அவர் வளர்ந்த அடித்தட்டு மக்களான நகர சுத்தி தொழிலாளர்களின் (இன்றை தூய்மைப் பணியாளர்கள்) வாழ்வின் அவலங்களைக் கதையின் கருப்பொருளாகக் கொண்டு 1981இல் எழுதத் தொடங்கினார். எழுத்தின் மீது பிடிப்பும் நம்பிக்கையும் ஏற்பட, பல சிற்றிதழ்களைத் தேடிப் படித்தார்; பல இதழ்களில் எழுதினார்; பரிசுகளும் விருதுகளும் சேர்ந்தன.

சோசலிச யதார்த்தவாதப் படைப்புகளை எழுதிக் கொண்டிருந்த நேரத்தில், 1990களில், அண்ணல் அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவையட்டி எழுந்த ‘தலித் இலக்கியம்’ என்ற எழுச்சி, இலக்கியத்தில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது. ஒரு குறுநாவல், சில விமர்சனக் கட்டுரைகள், சில கவிதைகள் ஆகியவை தவிர்த்து அவருடைய பெரும்பான்மையான எழுத்துகள் சிறுகதைகள்தாம்.  தலித்துகளின் படைப்பைத் தலித் மட்டும்தான் எழுத வேண்டுமா? என்றொரு கேள்வி முன்வைக்கப்பட்டபோது அவர் அளித்த பதில்,

“இது ரொம்பவும் பழைய பிரச்சனை. என்னோட கருத்து என்னன்னா, எவர் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், தலித் வாழ்க்கையின் குரூர யதார்த்தத்தைப் புரிந்து எழுதும்போதுதான் படைப்புகள் வெற்றிபெறும். உதாரணம், கவிஞர் இன்குலாப்பின் ‘மனுசங்கடா’ பாடல்!”

தலித் அழகியல் குறித்த அவருடைய சிந்தனை, தமிழிலக்கியத்தில் பெரும்புயலைக் கிளப்பியது.

‘அழகியல் என்பது ஒரு மாயை. தலித்துகளின் வாழ்வியல்தான் அழகியல். இதுகாறும் கற்பிக்கப்பட்ட அழகியலுக்கு நேர் எதிரானது இது. ஒடுக்கப்படும் ஆப்பிரிக்கக் கறுப்பர்களுக்கும் நசுக்கப்படும் இந்தியத் தலித்துக்கும் பிரச்சனை ஒன்றுதான், அது சமூக நிராகரிப்பு. உழைப்பவரிடமிருந்து சந்தன வாசம் வருமென்று எதிர்பார்ப்பது எந்தவிதத்தில் நியாயமென்று புரியவில்லை” என்று தெரிவித்தார்.

அண்மைக்கால நவீன இலக்கியப் போக்கு குறித்த அவருடைய பார்வை தெளிவானது, “அமைப்பியல், பின்நவீனத்துவம் போன்ற நவீன இலக்கியப் பிரதிகளைத் தலித் எழுத்தாளர்களாலும் படைக்க முடியும். ஆனால், படிப்பறிவு இல்லாத அல்லது குறைந்த படிப்பறிவு கொண்ட எம் வாசகத் தளத்துக்கு நான் சொல்ல வேண்டிய விசயங்கள் போய்ச் சேராது” என்று குறிப்பிட்டார்.

விருதுகளை மையப்படுத்தி அவர் எதையும் எழுதியதில்லை. பரிசோ விருதோ கிடைக்கும்போது அங்கீகாரமாய்க் கருதி ஏற்றுக்கொள்வார். எனினும், எந்த விருதுகளும் தலித் மக்களின் வாழ்வை உயர்த்தி விடாது என்பதை உறுதியாக நம்பினார்.

தலித் இயக்கங்களுக்கும் தலித் இலக்கியத்துக்கும் காலத்தில் ஏற்பட்டிருக்கும் உறவுகள் எதுவுமில்லை என்ற இதயவேந்தனுடைய கருத்து பரிசீலனைக்குரியது.  அதேவேளையில், அரசியல் தளத்தில் தலித் அமைப்புகள் ஏற்படுத்தியிருக்கும் வெற்றிகரமான விளைவுகளால் மகிழ்ந்தார். ஆனால், தலித் மக்கள்மீது பல்லாண்டுக் காலமாக அடக்குமுறைகளை ஏவிவரும் ஆதிக்கச் சக்திகளோடு தலித் அமைப்புகள் கைகோத்துக் கொண்டிருப்பது குறித்து வேதனை தெரிவித்தார்.  அரசியல் தளமும் இலக்கியத் தளமும் இணைந்து செயலாற்றுகிறபோது, நமது எதிரிகளை மிகச் சரியாக இனங்கொண்டு தலித் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமென நம்பினார்.

அவரது கதைகள் பெரும்பாலும் யதார்த்தம் நிரம்பிய வட்டார மொழிகளில் பேசும்; பாத்திரங்களோ, கதை மாந்தர்களோ மிக எளிமையானவர்கள்; அரிதாரம் பூசிக்கொள்ளாதவர்கள்; குறிப்பாக அவருடைய கதைகளில் பெண் பாத்திரங்களின் வீர ஆவேசம் தனி ஆய்வுக்கும் விமர்சகர்களின் கவனத்திற்கும் உரியது.

“எந்தவொரு இலக்கியமும் அது சார்ந்த இலக்கு அல்லது லட்சியத்தின் அடிப்படையில் வெளிப்படை யாகவோ படைப்பினூடாகவோ வெளிப்படக் கூடும். அது அவரவரின் அணுகுமுறையைப் பொறுத்து வெவ்வேறு விதமாகவும் பல்வேறு கோணங்களிலும் இருப்பதைக் காணலாம். இலக்கியத்தையும் அதன் கொள்கையையும் அவற்றின் ஊடக அரசியல் பின்புலத்தோடு சேர்த்துப் பார்ப்பதுதான் இலக்கியப் வளர்ச்சிக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்” என்று நம்பினார்; அதன் பொருட்டே செயலாற்றினார். அவருடைய எழுத்துகள் அனைத்திலும் தலித் அரசியல் தீயாகக் கனன்றது.

இலக்கியம் என்பது என்ன? சிலர் செல்வதுபோல மேல்நாட்டு விசயங்களை இறக்குமதி செய்து ‘இதுதான் இலக்கியம்’ என்று அடம் பிடிப்பதா அல்லது வெற்றுக் கற்பனைகளிலேயே பூ, நட்சத்திரங்களின் கனவுகளில் கரைந்து விடுவதா? சிலர் மட்டும்தான் வாழ்க்கையை உற்று நோக்கி, மக்களோடு மக்களாக வாழ்ந்து மனிதச் சமூகத்தினிடையே வைரச் சுரங்கமாய்க் கிடக்கும் கலை இலக்கியப் பொக்கிஷங்களைப் பட்டை தீட்டி எழுத்தாய் வழங்குகின்றனர்.

“பரந்துபட்ட உழைக்கும் தலித் மக்களிடம், அவர்கள் அடிமை நிலையில் இருப்பதையும் அந்நிலையின் ஆழத்தையும் உணர்த்தி அதற்கெதிராகக் கிளர்ந்தெழ வேண்டிய கட்டாயத்தினை நாம் தலித் மொழியில் பேசியாக வேண்டும்” என்ற இதயவேந்தனின்  சிந்தனை இன்றைய சூழலில் மிக முக்கியமானது.

சமூக விமர்சனக் கூர்மையும் மனித உணர்வுகளின் பல்வேறு முகங்களும் அவரது  கதைகளின் பொதுப் பண்பாக இருப்பினும், ஒடுக்கப்பட்ட மக்களின் சுக துக்கங்களைப் பதிவுசெய்து, அவர்களின் மீட்சிக்கான விழிப்புணர்வை, வழிமுறைகளைச் சொல்வதாகவும் பல கதைகள் படைக்கப்பட்டிருப்பது தமிழுக்குச் சிறப்பு. உரையாடல் மூலமாகக் கதைகளை நகர்த்துவது அவருடைய பலம். அவருடைய கதைகளின் பெரும்பான்மை ஆண் பாத்திரங்கள் பொறுப்போடும் போராடும் மனநிலையோடும் படைக்கப்பட்டிருப்பது விமர்சகர்களின் கவனத்துக்குரியது.

எத்தனை ஆண்டுகளாகப் படைப்புகள் சமரசம் செய்துகொள்ளும்? இன்னும் எத்தனை ஆண்டுகள் மேல்தட்டு மக்களின் நலன்களை, வாழ்வை மட்டும் பிரதிபலிக்கும்? ஒடுக்கப்படும் மக்களைப் பற்றிப் பேசாதா, உரத்தக் குரல் கொடுத்துச் சீறி எழாதா? என்ற கேள்விகள் நாளுக்கு நாள் வலுக்கத்தான் செய்கின்றன.

உயர்சாதி, ஆளும் வர்க்கங்களின் கலைப் படைப்புகள் தாங்கள் வர்க்கம் சார்ந்த நகலைப் பிரதிபலிப்பது ஒரு சூழல் எனில் அதற்கெதிராகக் கிளர்ந்தெழும் படைப்புகளும் வெளிவரத்தான் செய்கின்றன.! ஒடுக்கப்பட்ட மக்களின் மீறல் என்பது அரசியல் தளத்திலும் கலை இலக்கியப் பண்பாட்டுத் தளத்திலும் வீரியமாய் வெளிப்பட்டெழுவது காலத்தின் கட்டாயம்.

இத்தகைய எழுச்சியின், வெகு மக்கள் விடுதலையின் குரலாய், உணர்வுகளின் குவியலாய், வாழ்வியல் பதிவாய் உள்ள விழி.பா.இதயவேந்தனின் படைப்புகள், காலம் கடந்தும் அவரது பெயரைச் சொல்லும்!

வாழ்க நீ எம்மான்!

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!