எருமை மறம் – மௌனன் யாத்ரிகா

Image Courtesy: ujjwal.ambafoundation.org

கரியனைச் சந்திக்கும் தோழி
தலைவியின் பிரிவு உணர்த்தி இரங்குகிறாள்.

“தலைவ!
சுண்டிய நீர்நிலையில்
பேருக்கு ஈரமிருக்கும் சகதியில்
சருகலம் நடுங்கும் மீனைப்போல்
தலைவி இருக்கிறாள்;
அவளைக் கண்டு
ஆரத்தழுவி
உன் நெஞ்சுக்கூட்டில் முங்கச் செய்க;
உண்ணும் காமம்
இன்னும் அவள்
எலும்பை மட்டுமே தீண்டவில்லை;
ஒவ்வொரு கணமும்
உடம்பால் அழிகிறாள்;
உயிரின் எடை குறைந்துகொண்டே இருக்கிறது;
ஊருக்கு வடக்கே
ஆந்தைகள் அலறினால்
திக்கென்று இருக்கிறது;
கோடங்கி அடிக்கின்ற
உடுக்கையின் சத்தம்
தூக்கிவாரிப் போடுகிறது;
நற்குறி கூட தீக்குறி போலே
நடுக்கத்தைத் தருகிறது;

தலைவ!
செவ்வரி அழிந்த
அவள் கண்களை
எதிர்கொள்ள இயலவில்லை;
அவள் மட்டுமே ஊரில்
அதிகம் உப்பு சேர்த்து
அன்னத்தண்ணீர் அருந்துகிறாள்;
அருகிலிருக்கும் பொழுதுகளில்
என் நீராகாரத்திலும் கொஞ்சம்
அவள் அழுத கண்ணீர் சிந்தும்போது
அதன் கரிப்பில் உணர்கிறேன்
பெருந்துயரத்தை;

தலைவியின் நிலையறிந்த
கரியனின் தொண்டைக்குழியில்
வறட்சியின் கோழைக் கட்டியது;
அவன் பெருமூச்செறிகிறான்;

ஆவாரம்பூக்களின் மஞ்சள் நிறத்தால்
காடு ஒளிரும் பாதையில்
நடந்து செல்லும் கரியனைக்
கேவி அழும் குயிலின் பாடல் வருத்துகிறது;
காதலின் துன்பியல் காட்சி
அவனுக்கு முன்
பரந்து விரிந்திருக்கும்
நிலப்பரப்பில் ஓடுகிறது;
கானலில் அலையாய்த் தெரியும்
தலைவியின் சாயலைக்
கண்ணுற்றுக் கலங்குகிறான்;
மந்தையில் புலி பாய்ந்ததுபோல்
ஊரில் புகுந்து கொளுத்தியது வெயில்.

பனம்பழம் நாறும் இரவில்
பனியும் நிலவும் கூடியபோது
குளிரும் ஈரப்பொழுதில்
மஞ்சளின் வாசத்தை
நெருங்குகிறான் கரியன்;
நிலத்திற்குள் ஊர்ந்து வந்து
அவன் பாதங்களைச் சுரண்டுகிறது
கொலுசு கால்களின் வெப்பம்;
வீசும் புயலுக்கு
ஒரு மரம் இன்னொரு மரத்தை அணைவதுபோல்
தன்னை அவன்
அணைத்துக்கொள்ள வேண்டும் என்ற
தவிப்போடு தலைவி நெருங்கினாள்;
இருளோடு இருளாய்
நின்றிருந்த கரியன்
அவளை அருகில் உணர்ந்ததும்
செங்காந்தள் மலர்களை ஏந்திக்
கண்களில் ஒற்றிக்கொண்டான்;
நெடும்பிரிவு நேர்ந்ததற்கு
நிமித்தம் சொன்னான்;
மன்னிக்கக் கூறவில்லை; கொல்லென்றான்.

“ஒத்தை மீனாய் எத்தனை நாள்
இந்தச் சகதியிலேயே கிடப்பேன்
என்னை உன் காட்டுச் சுனைக்குக்
கூட்டிக்கொண்டு போய்விடுடா”
என்றாள் தலைவி;

அவள் நெஞ்செலும்பில் ஒட்டிக்கிடந்த மிச்சக் கறியைப்
பொசுக்கியது கரியனின் கண்ணீர்;

“விலங்கைப்போல் மண்டியிட்டு இறைஞ்சுகிறேனடி தங்கம்
இந்தக் காட்டில் ஈரம் குறைகிறது
ஏனென்று தெரியவில்லை;
காடைகள் கதறும் துயரத்திலிருந்துதான்
நீயற்ற தனிமையைப் பாடுகிறேன்”
என்றவன்,
வெடிப்புண்ட தன் பாதங்களைத்
திறந்து காட்டுகிறான்;

“குப்பையில் முளைத்த பூசணி கூட
கொடியேறி கூரை மீது படர்ந்துவிட்டது;
நானோ,
உன் அழுக்குச் சட்டைக்கூட இல்லாமல்
புழுங்கிச் சாகிறேன்” என்கிறாள் தலைவி.

அவளது கண்களில் திரண்ட
உப்புக்கல்லை
முத்தமிட்டு அருந்திய கரியன் உரைக்கிறான்:
“கூரப்புடவைக்கு நூல் சேர்த்துக்கொண்டு
வருகிறேனடி
கோரைப்பாயைப் பின்னி வைத்திரு”

(தொடரும்….)

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!